பெரியபுராணம் – 22

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

பா. சத்தியமோகன்


11 .மெய்ப் பொருள் நாயனார் புராணம்
467.
சேதிநாட்டின் நீடிய திருக்கோவலூர் ஆண்ட மன்னர்
உமையை ஒரு பாகம் கொண்ட இறை மீது அன்புகொண்டு
வழிவழியாய் வரும் மலாடர் மன்னரான மெய்ப்பொருள் நாயனார்
வேத நன்னெறியில் உண்மைத் திறம் உலகு அறிய
மிக்க அன்பால் ஈசரது அடியார்க்கு ஏவல் செய்வார்.
468.
அரசியல் நெறியில் வந்த அறவழி வழுவாமல் காத்து
மலைபோல் உயர்ந்த தோளால் பகைவரை வென்று மாற்றி
முன்னோர் மொழிந்ததிலிருந்து மாறாது ஒழுகும் நீதியில் சிறந்து
கங்கை நீர் சடையில் பூண்ட இறைவரின் கோலமே சிந்தை செய்பவர்.
469.
உமை ஒரு பாகமாக உடையவர் வெளிப்பட்டு வீற்றிருக்கும் கோயில்களில்
எங்கும் பூசைகள் தவறாமல் நீடித்து நடக்கும்படி
ஏழிசைப்பாடல் ஆடல் என்பவை மிகவும் நிகழுமாறு போற்றி வாழ்பவர்
தங்கள் நாயகர் அன்பு அன்றி வேறு சார்பு இல்லாதவர்.
470.
தம் அரசுரிமையில் தேடிய நெடிய செல்வம் யாவும்
திருத்தில்லையில் அருட்கூத்து ஆடிய பெருமான் அன்பர்க்கே ஆகும்என
விரும்பிய மனத்தோடு நாயன்மார் அடியார் வந்தபோதெல்லாம்
அவர் மகிழ குறைவின்றிச் செல்வம் கொடுத்து வந்தார்.
471.
இவ்வாறு அவர் வாழ்ந்த காலத்தில்
அவருடன் பகை கொண்டு வெல்லும் ஆசையால்
ஒரு மன்னன் போர் மேற்கொண்டு
பொன்னால் ஆன முகபடாம் அணிந்த யானை
போர்க்குதிரை, காலாள் முதலிய யாவும் இழந்து
அவமானம் அடைந்து போனான்.
472.
இப்படி இழந்த மாற்றான்
போரினால் வெல்ல இயலாமல்
மெய்ப் பொருள் நாயனாரின் சைவ நெறி அறிந்து
திருவெண்ணீறு சாத்தும் வேடத்தினால்
வஞ்சத்தில் வெல்ல எண்ணிக் கொண்டு
திருக்கோவலூர் சேர்ந்தான்.
473.
உடலெலாம் விபூதி பூசி
சடைகளை முடித்துக் கட்டிக் கொண்டு
கையிலே படையை மறைத்து வைத்துப்
புத்தகம் போல் கட்டப்பட்ட புத்தகப்பை ஏந்தி
கருமையை உள்ளே கொண்டு
வெளியே ஒளி வீசும் விளக்கை போல
பொய்த்தவ வேடம் கொண்டு புகுந்தான்
முத்தநாதன் எனும் மன்னன்.
474.
சிறந்த தவக்கோலம் பூண்டு வண்கண்மை உடைய அவன்
மாளிகை எங்கிலும் கூந்தலும் காதணியும் உடைய
கொடிகள் எனும் பெண்கள் ஆடக்கண்டான்
ஒளி விளங்கும் வெண்கொடிகள் ஆட இடம் தரும்
சேதி நாட்டு மன்னர் மெய்ப்பெருள் நாயனாரின்
அரண்மனையின் அழகிய திருவாசல் சேர்ந்தான்.
475.
அரண்மனை வாயிகள்தோறும் காவலாளர்கள்
முத்தநாதன் சைவக்கோலம் கண்டு விலகி நின்று
எம்மை ஆளுடைய அடியவர் தாமே வந்தார் எழுந்தருள்க என்று
தடை பலதாண்டி இறுதியாய் உள்ள வாயில் காக்கும்
தத்தன் என்பவன் உரைத்தான்:-
சமயம் நோக்கித் தாங்கள் எழுந்தருள வேண்டும்
எம் இறைவர் இப்போது துயில் கொள்கிறார்
476.
தத்தன் கூறும் தடை மொழிகளைக் கேட்ட பின்னும்
யான் மன்னனுக்கு உறுதி கூறப் புகுந்தேன்
நீ தடை செய்யாது நில் எனப் புகுந்து
பொன்னால் ஆகிய கட்டிலில் மன்னன் உறங்க
அழகிய கூந்தலும் மென் சாயலும் உடைய மாதேவி இருக்க
முத்தநாதன் பார்த்தான்.
477.
அங்ஙணம் பார்த்த பின் உள்ளே பக்கத்தில் போகும்போது
அரசி விரைந்து வண்டுகள் உறங்குமிடமான மாலை அணிந்த
மன்னரை எழுப்பிட உணர்ந்த மன்னன்
தேவதேவனான சிவபெருமானின் தொண்டர் வந்தார்
எனத்தலை மீது செங்கை கூப்பிக் கொண்டு எழுந்து
எதிர் நின்று நியதிப்படி வணங்கி நின்று –
478.
மங்கலம் பெருக என் வாழ்வே வந்துசேர்ந்தது எனும்படி
இங்கு தாங்கள் எழுந்தருள என்ன பேறு செய்தேனோ
என்று கூறிடவும்
உங்கள் நாயகரான சிவபெருமான் முன் கூறிய ஆகமநூல்
இம்மண்ணில் எங்கும் இல்லாததொன்றைக் கொண்டு வந்தேன்
என்றான் முத்தநாதன்.
479.
இதை விட பேறு உண்டோ! இறைவர் அருளிய
மாறிலாத ஆகமத்தை வாசித்தருள்க என
மெய்ப்பொருள் நாயனார் கூறவும்
பூமாலை சூடிய தேவியார் இந்த இடம் விட்டு நீங்க வேண்டும்
நானும் நீயும் தனியிடத்திருக்க வேண்டும் என்றதும் மன்னர் –
480.
திருமகளைப் போல அங்கு நின்ற மனைவியைப் பார்க்க
அவர் அந்தப்புரம் விரைந்ததும்
புனைத் தவக்கோலம் கொண்ட முத்தநாதனைத்
தக்க இருக்கையில் அமர்த்தி
தாம் நிலத்தில் அமர்ந்து
இனி அருள் செய்க என இயம்பினார்.
481.
தன்கையிலிருந்த வஞ்சனையாகச் செய்த புத்தகப் பையை
மடி மீது வைத்து அவிழ்ப்பவன் போலச் செய்ததும்
புரிந்து கொண்ட நாயனார் வணங்கும் நேரத்தில்
அக்கட்டினுள் இருந்த உடைவாளை ஓங்கி
தான் முன் நினைத்த கொலையை பரிசே எனச் செய்தான்.
மெய்த்தவ வேடமே மெய்ப்பொருளாகும் என
நாயனாரோ தொழுது வென்றார்.
482.
முத்தநாதன் அறைக்குள் புகுந்தபோதே
மனம் அங்கு வைத்த தத்தன்
மிக விரைந்து அங்கு வந்து கண் பார்த்து
வாளால் வெட்ட முயன்றான்
செங்குருதி பொங்குதலால் சோர்ந்து வீழும்முன்
தம் நீண்ட கையால்
தத்தா இவர் நம்மவர் எனத் தடுத்து வீழ்ந்தார்.
483.
வெட்டப்பட்டு வீழ்ந்த வேந்தன் ஆணையால்
தடுக்கப்பட்ட அடிமையான தத்தன்
தலையால் வணங்கி ஏற்றுக் கொண்டு
வீழும் மெய்ப்பொருள் நாயனாரைத் தாங்கி
யாது நான் செய்தல் வேண்டும் என்றதும்
எம்பிரானின் அடியாரான இவர்
இந்நாட்டைவிட்டு எவரும் தாக்கா வண்ணம்
கொண்டு போய் விடு நீ என்றார்.
484.
அங்கு நடந்தவை எல்லாம் அறிந்த அனைவரும்
எம்மன்னர்க்கு தீங்கு செய்த பொய்த்தவத்தவனைக் கொல்வோம் என
புடை சூழ்ந்தனர்
தத்தன் அவர் எல்லோரையும் தடுத்துத்
தன்னுடன் கொண்டு போனான்
இப்படிப்பட்டவன் உயிருடன் போகப்பெறுவது மன்னவன் ஆணை என்றான்.
485.
அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சி அகன்று நீங்கினர்
சிறந்த வழியில் நகரத்தைக் கடந்து போய்க்
கையில் கூரிய நெடுவாள் ஏந்திக்காவல்செய்து
ஆட்கள் அணுக இயலாக் காட்டில் அக்கொடியவனைச்
சேர்ப்பித்துவிட்டபின் திரும்பி மீண்டான் தத்தன்.
486.
காவல் செய்து கொண்டுபோன
வஞ்ச வேடமுடையான் மீது எதிர்த்தவர் யாவரையும் விலக்கித்
தீது இல்லா நெறியில் கொண்டு விட்ட நற்சொல்லைக் கேட்பதற்கே
சோர்கின்ற ஆவி தாங்கியிருந்த மெய்ப்பொருள் நாயனார் முன் சென்று
அவரது குறிப்பின் வழி நின்றான்.
487.
செய்தவ வேடம் கொண்டவனுக்கு
இடையூறு இல்லாமல் கொண்டு விட்டேன்
என்று கூறி வணங்கிய தத்தனை
இன்று எனக்கு ஐயனான நீ செய்ததுபோல்
எவர்தான் செய்ய இயலும் என்று சொல்லி
நின்றிருக்கும் அவனை
நிறை பெரும் கருணையுடன் நோக்கினார்.
488.
தமக்குப்பின் அரசியல் நடத்த இருக்கும் இளவரசனுக்கும்
தம்மீது கொண்ட காதலால் வருந்தும் தேவிமார்க்கும்
விதியால் பரவப் பெற்ற
விபூதியினிடம் வைத்த அன்பை
சோர்விலாது பாதுகாத்து உய்வீர் என்று கூறிய புரவலர்
அருட்கூத்தாடும் சிவன் திருவடி சிந்தை செய்தார்.
489.
தம்மையே சிந்தை செய்த தொண்டனார்க்கு
உமையின் துணைவரான சிவனார்
அவர் பலநாளும் உள்ளத்தில் எண்ணியவாறே
காட்சி தந்து அருளி
தேவர்க்கும் எட்டாத அருட்கழலின் நீழல் தந்து
இடைவிடாமல் கும்பிடும் பேற்றைத் தந்தார்.
490.
பொய்த்தவத்தவன் தன் உயிர் சிதைத்த போதும்
எம்பிரான் அன்பன் இவன் என்றே
தாம் கொண்ட நன்னெறியைத் தளர்விலாமல் காத்த
சேதிநாட்டு மன்னரான மெய்ப்பொருள் நாயனார் பெருமை
என் ஆற்றலில் உட்பட சிறிது உரைத்தேன்
அவரின் பொன்னடிகள் வணங்கி
அத்துணை கொண்டு விறன் மிண்ட நாயனார்
முன் செய்த திருத் தொண்டின் வரலாறை சொல்லத் துணிகிறேன்.
n மெய்ப்பொருள் நாயனார் புராணம் முற்றிற்று.
–திருவருளால் தொடரும்
—-
cdl_lavi@sancharnet.in

Series Navigation