பெரியபுராணம் – 18 : 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

பா. சத்தியமோகன்


7. தில்லை வாழ் அந்தணர் புராணம்
350.
ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகி
சோதியாய் உணர்வும் ஆவித் தோன்றிய பொருளும் ஆகிப்
பேதம் காண இயலா ஒன்றாகிப் பெண்ணுமாய் ஆணுமாகி
போதித்து நிற்கும் தில்லைப் பொது நடத்திருக்கூத்தே
போற்றி வணங்குகிறேன் போற்றி வணங்குகிறேன்.
351.
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதத் கோலத்தில் நீண்டு அரிய வேதத்தின் உச்சியான
உபநிடத உச்சியில் உணர்கின்ற ஞான ஆகாய உருவமான
தில்லைச் சிற்றம்பலத்தில் நிலைத்து நின்று
கூத்தாடுகின்ற மலர் போன்ற கழலை அணிந்த திருவடியே
போற்றி வணங்குகிறேன் போற்றி வணங்குகிறேன்.
352.
கூத்தரின் கழல் வணங்கி நீ வழிவழி வாழ்ந்து வரும்
தில்லைவாழ் அந்தணர் திறம் சொல்லத் தொடங்குகிறேன்
திருநீற்றினால் நிறைந்த கோலம் கொண்ட கூத்தனாகிய
நிருத்தனுக்குத் தொண்டர்கள்
அவர்கள் எல்லாப் பெருமைக்கும் எல்லை உள்ளவரும் வழிபட்டு வாழ உதாரண ஒழுக்கம் கொண்டவர்கள்
பெருகும் அன்பினால் இறைத்திருவடியே பற்றாகக் கொண்டு
தவம் செய்து வாழ்பவர்கள்.
353.
பெருகிய செல்வத்தில் சிறந்த அழகு மிக்க அணிகளை ஏந்தி
விதிப்படி இறைவன் திருமேனியில் சார்த்தி
மறைகளால் துதித்து தமக்கேற்ற பணி செவ்வனே செய்து
திருக்கோயிலின் உள்ளே அகம் நனையத் தொண்டு செய்வார்.
354.
அறமே பொருளாய்க் கொண்டு தத்துவ வழியில் செல்லும்
அரிய நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் கற்று
உலகம் அருள் பெற்றுவாழ
ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்ற
மூன்று தீயையும் வளர்த்துக் காப்பவர் இவர்கள்
இறையால் ஆட்செய்யப் பெற்ற அருள் செல்வம் மிக்கோரே.
355.
குற்றமிலா மரபில் வந்து இடையறா ஒழுக்கம் பூண்டவர்கள்
ஒதுதல் முதலான ஆறுதொழில்களால் கலிவராமல் காத்தவர்கள்
திருநீறே உறுதியான பயன் தரும் செல்வமென ஒழுகும் எண்ணம் காத்தவர்கள்
சிவன்பால் பெறும் அவர் அன்பே பெரும்பேறு எனும் பெருவாழ்வு உடையவர்கள்.
356.
ஞானம் யோகம் கிரியை சரியை எனும் நான்கும்
குற்றமிலாமல் அறிவதில் திறமை உடையவர்கள்
தானமும் தவமும் வல்லார்கள்
தகுந்ததே சார்வார்கள்
குற்றமென ஒன்றும் அற்றவர்கள்
உலகெலாம் புகழும் மானமும் பொறுமையும் பூண்டு
இல்லற வாழ்வு வாழ்பவர்கள்.
357.
செம்மைத் தன்மையால் ஆணவம் தணிந்த உள்ளத்தால்
அவர்கள் தெய்வத்தன்மை வாய்ந்த வேதியர்கள் ஆயினர்
மூவாயிரம் பேரும் தங்கள் முதல்வனார் இறைவரை
போற்றி வாழ இம்மையைப் பெற்று வாழ்ந்தார்
இனிப் பெற வேறு பேறு எதற்கு எனும் நிலையுடையார்
தாமே தமக்கு நிகர் எனும் நிலைமையால் தலைமை கொண்டார்.
358.
செந்தமிழின் பயனாய் விளைந்த
திருத்தொண்டத்தகை பாடுவதற்கு முன்
அன்று வன்தொண்டர்க்கு ஆணையிட்டு அடியெடுத்துத்தந்த
திருவாரூர் தியாகராயப் பெருமானே தன் திருவாக்கால்
கோர்த்த முதல்பொருள் ஆனவர் இவர்களென்றால்
இன்று இவர் பெருமை எம்மால் இயம்பக் கூடிய எல்லைக்கு உட்பட்டதோ ?
359.
பரந்துபட்ட உலகில் உயர்வுடைய தில்லைவாழ் அந்தணர்கள்
உலகமெல்லாம் புகழ வாழும் வேதியர்கள்
நாள்தோறும் சிற்றம்பல இறை நடனம் பேணிப் போற்றி வாழ்க!
?திருநீலகண்டம் ? எனும் பெயருடன் அன்பால் விளங்கிய
தொண்டர் தவத்தை சொல்லத் தொடங்குவோம்.
– தில்லைவாழ் அந்தணர் புராணம் முற்றிற்று.
360.
வேதியர் வாழும் தில்லைப் பழம்பதியில்
குயவர் குலத்தில் வந்தார் திருநீலகண்டர்
உமையம்மை வீற்ற பாகம் நோக்கி
நிலைத்த சிற்றம்பலத்தில்
ஆதியும் முடிவுமில்லா அற்புதத் தனிக்கூத்தாடும்
இறைவரின் திருவடிகளை எப்போதும் வழிபடும் நலத்தில் மிக்கார்.
361.
பொய் ஒழித்து அறநெறியில் வாழ்வார்
புனல்சடை முடிந்த சிவனின் அன்பர் மெய்யடிக்கே
பணி செய்யும் விருப்பில் நிற்பார்
வையகம் போற்றும் இல்லற வாழ்வைப்புரிந்து வாழ்வார்
சைவ மெய்ச் செல்வத்தின் சார்புதான் பொருள் எனும் தன்மை கொண்டார்.
362.
அளவிலாத பரம்பரையில் தம் மரபு வழியே
மண்பாத்திரங்கள் செய்யும் தொழிலால் உணவு ஆக்கி
வளர் இளம் சந்திரன் சூடிய சிவனடியார் வேண்டும் திருவோட்டினை
அவர்தம் உளம் மகிழ நிறைய அளித்து வாழும் நாளில்
இளமை மேலீட்டால் சிற்றின்பத் துறையில் எளியவர் ஆனார்.
363.
அவர்தம் மனைவியாரும் அருந்ததியை விடவும் கற்புக்குணம் மிக்கார்
உலகங்கள் உய்வதற்கு இறைவர் பொங்கியெழுந்த நஞ்சை உண்ண
அது உள் சென்றுவிடாமல் தடுத்தது நாங்கள் செய்தத்தவப்பேறுதான்
என எண்ணுவார்
இந்த கண்டமன்றோ தாங்கி நிற்கின்றது என்ற எண்ணமே
மேலும் மேலும் கொள்வார்
திருநீலகண்டம் திருநீலகண்டம் என்பார்.
364.
தேன்பொருந்திய தாமரை மலரின் இலக்குமியைவிட
அழகில் சிறந்த திருநீலகண்டரின் மனைவியார்
தன்கணவர் பரத்தையோடு அணைந்து வீடு வர
மானம் பொறாமல் வந்த ஊடலால் இல்லத்தில் அனைத்தும் செய்தார்
மெய்யுறு புணர்ச்சிக்கு இசையவில்லை.
365.
மூண்ட சிக்கலைத் தீர்க்க அன்பான நாயனார்
அணிகள் அணிந்த மென்சாயல் பொற்கொடி போன்ற
மனைவியின் முன் சென்று
வேண்டியதெல்லாம் இரந்து பணிந்து கூறி
மேனியைத் தழுவ முற்பட்டபோது –
?நீவீர் எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்
உமைத் தடுப்பதாக! ? என்றார்.
366.
ஆதியான சிவனது திருநீலகண்டம் மீது கொண்ட ஆர்வம்
பாதிக்காமல் காக்கும் மனைவியின் ஆணை கேட்ட பெரியவர்
பெயர்ந்து விலகி அயலார் போல நோக்கி
?என்னை ? எனச் சொல்லாமல் ?எம்மை ? என்றதனால்
மற்ற மாதரையும் எந்தன் மனதாலும் தீண்ட மாட்டேன் என்றார்.
367.
கற்புமிகு மனைவியாரும் கணவனுக்குரிய எல்லாம்
அழகுறப் பொருந்த அனைத்தும் செய்தார் மேனி தீண்டாமல்
ஒரே வீட்டிலேயே இருவரும் தனித்தனியாய்
மெய்யுறு புணர்ச்சி அற்று அயலவர் அறியாமல் வாழ்ந்தார்.
368.
இளமைத் தன்மை மிகுந்துள்ள இருவரும் மட்டுமே அறிந்து
அளவிலாச் சிறப்பு கொண்ட அந்த ஆணையைப் போற்றி
ஆண்டுகள் பல கழிந்து இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து
தளர்ந்து சாய்ந்தாலும் தம்பிரான் மீது அன்பு சாயவில்லை.
369.
இங்ஙனம் ஒழுகி வந்த நாளில் எரிகின்ற தளிர்போல் நீண்ட
ஒளிவீசும் சடைகொண்ட இறைவன்
நன்னெறி இதுதான் என உலகினர் விரும்பி உய்வதற்காக
அந்நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவயோகி என மாறி –
370.
தகட்டு வடிவில் நூலால் நெய்து கோவணமும் சார்த்தி
அழிவிலா ஒளி வீசும் மலர்ந்த மேனிமேல்
தோளிலும் மார்பிலும் துவள்கின்ற பூணூலுடன்
திருநீற்றின் ஒளி வளர்கின்ற முக்கீற்று விளங்கு நெற்றியும்-
371.
தம்நெடிய சடையை தொங்காமல் தூறாய் உள்ள மயிரால் மறைத்து
ஒளிவீசும் கதிர் ஒத்த புன்முறுவல் வெண்ணிலவையும் மேம்படுத்த
பிச்சை இடும் பாத்திரம் ஏந்திய கையராய் நடந்து வந்து
நீலகண்டரின் இல்லம் சேர்ந்தார்.
372.
கண்ணால் கண்டதுமே விரும்பினார் தவச்சிவயோகநாதரை
காதலுற கண்ணுற நோக்கினார் நீலகண்ட நாயனார்
புண்ணியத் தொண்டராம் இவர் எனக் கருதி போற்றினார்
எண்ணத்தால் துதித்து எதிர்கொண்டு வணங்கினார் வந்தவரை.
373.
பிறைவளரும் சடைமுடி பிரானை
சிவபெருமானின் தொண்டரென்றுக் கருதிக் கொண்டு
வீட்டுக்குள் அழைத்து பேருவகை அடைந்து
முறைப்படி வழிபட்டு இயற்றினார் பூசைகள்
நிறைந்த விருப்போடு செய்து நின்றதும் –
374.
?எம்பெருமான்! யான் செய்ய வேண்டிய பணி எது ? ? என்றார் –
மணம் கமழும் மலர்ச்சடை வள்ளலின் தொண்டரான குயவனார்.
தேவர்களின் தலைவனான சிவயோகி கூறினார் :-
?நம்பியே ! இவ்வோடு உன்பால் வைத்து நீ தருக நாம் வேண்டும் போது ?
375.
?இந்த ஓடு
தனக்குச் சமமாக பிற இல்லாதது
தன்னிடம் உள்ள யாவற்றையும் தூய்மை செய்வது
பொன்னைவிட மணியைவிட போற்றிக் காக்க வேண்டியது இத்தகையது!
இதை வாங்குவாயாக ? எனச் சொல்லி –
376.
தொன்றுதொட்டு குயவர்குல வழியில் தோன்றிய
மிகச் சிறப்புடைய தொண்டனார் வணங்கி வாங்கிக் கொண்டு
தன் வீட்டின் தனி இடத்தில் காவலுடைய இடத்தில்
நலமாக வைத்து வந்து இறையை அடைந்தார்.
377.
வைத்தபின் துறவியராய் வந்த இறைவர் மறையவரானார்
நின்று பணி கேட்ட தொண்டரான குயவரும்
அவருடன் போய் விடைதந்து வீட்டிற்கு மீண்டார்
அம்பலம் சென்றார் இறைவர்.
378.
பலநாட்கள் கழிந்த பின்பு இறைவன்
தாம்முன் தந்து வைத்த அழகிய திருவோடு தன்னை
அது இருந்த இடம்விட்டு அகலப்போக்கி
சிவநெறி காத்து வாழும் குயவரிடம் விளங்கிய உண்மைத் தன்மையை
உலகிற்குக் காட்ட முன்பு போல் அவர் மனைக்கு வந்தார்.
379.
இறைவர் வந்தபின் தொண்டனாரும் எதிர் கொண்டு வழிபாடு செய்து
அடியேனை எண்ணி இங்கெழுந்து அருளியது எங்கள் தவம் என நிற்க
முன் நாளில் உன்னிடம் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு தருக என்றார்
எல்லாம் தானே வைத்தது தானே வாங்க வல்ல இறைவன் –
380.
என அவர் விரைந்து கூற பெரிய தவத்தவர் தந்த ஓட்டை
எடுத்து வர விரைந்து சென்றார். புகுந்தார். காணவில்லை.
திகைத்து நோக்கி நின்று அவர் தம்மையே கேட்டார்
தேடியும் காணார். மாயையை ஒன்றும் அறியார்.
உரைக்க ஒன்றும் வார்த்தையில்லாமல் வீட்டினுட்பகுதியில் நின்றார்.

திருவருளால் தொடரும்
—-
cdl_lavi@sancharnet.in

Series Navigation