பெரியபுராணம் – 107 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

பா.சத்தியமோகன்


3044.

உலக வாழ்வின் ஊழியிலும்

அழியாது வளரும் சீகாழியின் அருகில் அணைந்தார்

வரி வண்டுகள் சூழும் மலர்களாலும்

தீப தூபங்களாலும் வழிபட்டுத் தொழுதார்

பிறகு

“சீகாழி நகர் சேர்மின்” என இறுதிச்சீர்கள் அமைந்த

மகுடம் போன்ற திருப்பதிகத்தை

ஏழிசையுடன் பாடி

எழில் மிகு அந்த முதிய நகருள் புகுந்தார்.

(அணைதல்- நெருங்குதல்)

3045.

வானினும் உயர்ந்த திருத்தோணியில் வீற்றிருக்கும்

சிவபெருமானின் திருவடிகள் நினைந்தார்

அன்பின் மேன்மை எண்ணினார்

நீண்ட நிலைகளுடைய கோபுரம் அணைந்தார்

நேரில் இறைஞ்சினார்

உள்ளே புகுந்தார்

ஒளி விளங்கும் பெருங்கோயிலை வலமாக வந்து

அதன் முன் தொழுதார்.

3046.

பிரம்மபுரீசர் திருமுன்பு வணங்கினார்

அவரது திருவருளின் முழுநோக்கமும் பெற முடிந்தது

திருத்தோணியின் மலை மீது ஏறி

பொன்மலை எனும் இமயமலை அரசனின் மகளான

பெரியநாயகி அம்மையுடன் வீற்றிருக்கும் தோணியப்பரைத்

தலை மீது கூப்பிய கைகளுடன்

நிலம் பொருந்த விழுந்து திளைத்து

பெருவாழ்வு எய்தினார்

மனம் களிக்க வணங்குவாராகி-

3047.

போற்றிப் பரவுகின்ற திருப்பதிகங்கள் பலவும்

பண் (இசை) பொருந்துமாறு பாடினார்

பொருந்திய கண்ணீர் அருவி வெள்ளத்தில்

குளித்துத் தோய்ந்தார்

அரவம் அணிந்தார் அருள் பெருகப் பெற்று

வெளியே வந்து

அன்பர்களுடன்

சிரபுரத்துப் பெருந்தகையார்ஞானசம்பந்தர்

திருமாளிகையுள் சேர்ந்தார்.

(அரவணிந்த- பாம்பு அணிந்த சிவனார்)

3048.

சம்பந்தப் பெருமான் மாளிகையின் உள் புகுந்தார்

காணவரும் அந்தணர்கட்கு அருள் புரிந்தார்

தம் திருவடி பணியும் சுற்றத்தார்க்கு

தகுதிக்கு ஏற்றபடி

தலையணி செய்தார்

விலை தந்தார்

தம்மை ஆளும் இறைவரின் அடியாருடனே

விரும்பி எழுந்தருளியிருந்தார்

நீளவரும் பேரின்பம்

மேலும் மிகப்பெருகுமாறு நிகழும் நாளில்-

3049.

சீகாழி நாட்டின் தலைவரான ஞானசம்பந்தப்பிரானின்-

திருவடிக்கழல் வணங்கி

மகிழ்ச்சி எய்த எண்ணி

கடலை விடவும் மிகப்பெருகும் ஆசையுடன்

திருமுருக நாயனாரும்

வாழ்வுதரும் திருநீலநக்க நாயனாரும் மற்றவர்களும்

தம்மைச் சூழ்ந்த பெரிய சுற்றத்துடன் வந்து

திருத்தோணிபுரத்தை வணங்கியபடியே

சம்பந்தப் பெருமானிடம் வந்தனர்.

3050.

வந்தவர்களை எதிர்கொண்டு மனம் மகிழ்ந்தார்

சண்பையர் அரசரான ஞானசம்பந்தர்!

அளவிலாத சிறப்புடைய அந்த அடியார்கள்

அவரோடும் இனிதாக அமர்ந்து

அழகின் நிலைக்களமான பெரியநாயகி அம்மையாருடன்

திருத்தோணியில் வீற்றிருந்த தோணியப்பரான சிவபெருமானை

செந்தமிழின் பந்தத்தால்

பல திருப்பதிகங்களும் பாடி-

3051.

பெருமகிழ்ச்சியுடன் இவ்வாறு செல்லும்போது

பெரும்தவம் செய்து ஞானசம்பந்தரைப் பெற்றெடுத்த

மறையவர் சிவபாத இருதயரும் சுற்றத்தினரும் கூடினர்

முத்திச் செல்வம் வளர ஏதுவான ஞானத்தலைவரான ஞானசம்பந்தர்

“திருமணம் செய்து அருள்வதற்கு பருவம் இது” என எண்ணி

அதனை அறிவிக்க

அவரை அடைந்தனர்.

3052.

உலகியல் நிலையில்

வைதிக ஒழுக்கத்தை

ஞானபோனகராகிய ஞானசம்பந்தருக்கு ஊட்டுவதற்கு மனம் கொண்டு

குற்றமிலாத வேத நெறிச்சடங்குகள் கூடிய

வேள்விகளைச் செய்வதற்கு உரிமை பெற

“கன்னியைத் திருமணம் புரிய வேண்டும்” என

விண்ணப்பம் செய்தனர்.

3053.

அவர்கள் கூறிய மொழி கேட்டார்

மாதவத்தின் கொழுந்து போன்ற ஞானசம்பந்தர்.

சுற்றங்கள் பொருந்திய

பெரும்பாசத் தொடர்ச்சியை விட்டு நீங்கிய

நிலைமை உடையவராகி

காளைக்கொடி உயர்த்திய

சிவபெருமானின் திருவடி ஞானமான

உயர்ந்த சிவஞானம் பெற்றதினால்

இசையவில்லை ஞானசம்பந்தர்

“நீங்கள் கூறுவது பொருந்தியதாயினும்

கூடாத ஒன்றாகும்”

என மொழிந்து அருளினார்

3054.

அருந்தவம் புரியும் மறையோர்களாகிய அவர்கள்

பிறகும் கைகூப்பித் தொழுது

அறிவித்ததாவது:-

“மிகப்பெரிய மண்ணுலகில் வைதீக வழக்கினை

நீவீர் உயர்த்தினீர்

ஆதலினால்

அவ்வழி வரும் முறையினால்

அந்தணர்க்குரிய ஆறு தொழில்களுடன் கூடிய

வைதீகமான பெருநெறியில் ஒழுகும் திருமணத்தைச் செய்தருள

திருவுள்ளம் செய்வீராக”

3055.

வேதங்கள் வாழ்வதற்கும்

அந்தணர்களின் வைதீக வாய்மை ஒழுக்கம் பெருகும் துறை வாழ்வதற்கும்

அந்தச் சுற்றத்தார்களுக்கு அருள் செய்து

ஞானசம்பந்தர் திருமணத்திற்கு உடன்பட்டார்

ஒத்துக்கொண்டார்

பிறைச்சந்திரன் வாழும் திருமுடியில்

பெரும்புலனாகிய கங்கையுடன்

பாம்பு அணிந்த

கறை வாழும் நீலகண்டரான சிவபெருமானை வணங்கினர் சுற்றத்தார்.

3056.

திருஞானசம்பந்தர் இவ்விதம் திருவுள்ளம் செய்ததும்

வாய்மை தரும் மறையவர்களும்

தந்தையான சிவபாத இருதயரும்

தாங்க இயலாத பெருவாழ்வு பெற்றவர் போல் ஆகினர்

இ·து பிஞ்ஞகனார் அருளே ஆகும் என

உள்ளம் உருகினர்

இன்பமுறும் உள்ள மகிழ்ச்சி எய்தி —

(பிஞ்ஞகன் – சிவபெருமான்)

3057.

குற்றமிலாத மறையவர் மரபு பொருந்தியதால்

குலம் இசைந்ததால்

இறைவரின் திருப்பெருமணநல்லூரில் வாழும்

நம்பாண்டர் நம்பி பெற்ற திருமகளாரை

சீகாழி நாடுடைய பிரான் கைப்பிடிக்க

அவரது பெருந்தன்மை பொருந்தும் என எண்ணினர்.

3058.

திருஞானசம்பந்தர்

சிறப்பு பெருகும் திருமணம் செய்து கொள்ளும் பெருவாழ்வு குறித்து

திருத்தொண்டர்களும் அந்தணர்களும் மிகவும் மகிழ்ந்து

பெரும் சுற்றமும் மகிழ்ச்சி மிகப்பெற்று

மரங்கள் நிறைந்த குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த

திருப்பெருமணநல்லூர் சேர்ந்தார் தந்தையார்.

3059.

மிகுந்த திருத்தொண்டர்களும் அந்தணர்களும் உடன் செல்ல

எல்லாத் திக்குகளிலும் புகழ் பெற்ற

திருப்பெருமணநல்லூர் சென்று எய்தினார்

தகுந்த புகழுடைய நம்பாண்டார் நம்பிகளும்

அது கேட்டு அறிந்து

செக்கர் வான் போன்று சிவந்த முடிச்சடையரான சிவபெருமானின்

திருப்பாதம் தொழுது எழுபவாராய் —

3060.

ஒப்பிலா பெருமகிழ்ச்சி ஓங்கி எழும் உள்ளத்தால்

நன்னீர் நிறைந்த குடமும் விளக்கும் வைத்து

வீதியெல்லாம் அழகு அதிகரிக்கச் செய்து

சொல்ல அரிய ஆர்வம் மிகும் சுற்றத்தாருடன் சென்று

“எப்பொருளும் நான் அடைந்தவன் ஆனேன்” எனத் தொழுது

அவர்களை வரவேற்றார்.

3061.

நம்பாண்டர் நம்பி எதிர்கொண்டார்

மணிமாடம் அழைத்துச் சென்று இன்பமுற்றார்

மதுரமொழிகள் பலவும் மொழிந்தார் வரனுக்கு

முறையாய் சிறப்பு அளித்து

நான்முகனை விடவும் மேலான சிவபாத இருதயரும்

முதிர்ந்த உணர்வுடைய திருத்தொண்டர்களும்

சண்பைநகர் மறையவர்களும்

தாங்கள் வந்த திறத்தை மொழிய-

3062.

ஞான அமுது உண்ட ஞானபோகம் புரிந்த

நல்லதவத்தின் ஒழுக்கத்தால்

ஊனமில்லா ஒழுக்கமும் சீலமும் உடைய உமது மகளை

“மணம் பேச வந்துள்ளோம்” என எடுத்துச் சொல்லிய அந்தணர்களிடம்

“இது தங்களது அருளே என் தகுதி அன்று” என

வான் அளவு நிறைந்த பெருமகிழ்ச்சியுடன்

சிவபாத இருதயரை நோக்கிக் கூறினார் நம்பாண்டார்நம்பி.

3063.

“உமது பெருந்தவத்தினால்

உலகங்கள் அனைத்தும் பெற்றெடுத்த உமையம்மையின்

திருமுலைப்பாலில் குழைத்த சிவஞான அமுது உண்டருளிய பிள்ளையாருக்கு

எம் குலக்கொழுந்தை

யாம் உய்யும் பொருட்டு

திருமணத்திற்கு தருகின்றோம் வாருங்கள்”

என உரை செய்தார்

மனம் மகிழ்ந்து அவர்களை

சீகாழிக்கு செல்லுமாறு அனுப்பினார்.

3064.

மிகமகிழ்ச்சியால் நம்பாண்டாரின் இசைவு பெற்ற

சிவபாத இருதயர் முதலியவர்கள் மீண்டும் போய்

மேகம் உலவும் மலர்சோலைகள் சூழ்ந்த

கழுமலநகர் வந்தடைந்து

சிறப்பு பொருந்திய ஞானசம்பந்தரிடம்

நம்பாண்டாரின் சம்மதம் பற்றி விரிவாகச் சொல்லி

உலகம் விளங்கும் திருமணத்தின் பகுதிகளைத் தொடங்கலாயினர்.

(கழுமலநகர்- சீகாழி)

3065.

திருமணம் செய்வதற்கான

கலியாணத் திருநாளையும்

விளங்கும் சிறப்புடன் கூடிய ஓரையையும்

கணித மங்கல நூல் உணர்ந்த சான்றோர் வகுத்துத்தர

பெருகும் மணநாள் ஓலையைப்

பெருகும் சிறப்புடன்

மணமகள் வீட்டாருக்கும் சுற்றத்தினர்க்கும் அனுப்பினர்

அருள் புரிந்த நல்லநாளில் –

பாலிகைகளில் அழகிய முளையை விதைத்தார்கள்.

3066.

செல்வம் மலிந்த திருப்புகலியின்

செழித்த திருவீதிகளில் எங்கும்

நிறைகுடங்களும்

விளக்குகளும்

மகரதோரணங்களும்

வரிசையாய் அமைத்து

அளவுபடாத ஒளியுடைய முத்துமாலைகள் எங்கும் தொங்கவிட்டு

மிக்க பெருந்திரு ஓங்கும்படி

அழகு சிறக்க அலங்கரித்தனர்.

3067.

அரிய தவத்தினரும் அந்தணர்களும்

அயலில் உள்ளவர்களும் கூடி

திருமணநாள் ஓலையை

எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்

புகழுடைய நம்பாண்டார்

அச்சிறப்பை

முறையாக ஏற்றுக்கொண்டு

முன் தொடர்பினால் வரும் தவத்தின் பயனால்

தன் மகளை

பிள்ளையாருக்கு மணமகளாகத் தந்தார்

திருமணச் செயல்களைச் செய்யத் தொடங்கினார்.

3068.

நிலைத்த புகழுடைய சுற்றத்தார் அனைவரும்

சீகாழியில் வந்து கூடினர்

திருமணமாகிய நல்நிலைமை பெறும் நாளுக்கு

ஏழு நாட்களுக்கு முன்

நல்ல நாளிலே

பல

அழகிய மங்கல முரசும் வாத்தியங்களும் நிறைந்து ஒலித்தன

பொன் இட்ட அழகிய பாலிகைகளின் மீது

தூய முளையை நிறைத்துத் தெளித்தார்கள்.

3069.

வான் வரை உயர்ந்த மாடங்களையும்

செல்வம் மிகும் மண்டபங்களையும்

பெரிய நிலைகள் உடைய மாளிகைகளையும்

ஒப்பிலாத அழகு பெறுமாறு அலங்கரித்து

காட்சி பொருந்தும் ஓவியத்தை விடவும் அழகு மிகுமாறு எழுதி

ஒளியுடைய அழகிய மணிகள் பதித்த

முதல் கடை வாயினில்

மங்கலக் கோலங்கள் புனைந்தனர்.

3070.

உயர்ந்த நிலையுடைய தோரணங்கள்

நீண்ட வீதிகள் தோறும் வரிசையாய் அமைத்தனர்

பக்கங்களில்

பசிய கொடி மாலைகளும் மணிமாலைகளும்

இடை இடையே அமைத்தனர்

ஒளியுடைய திண்ணைகளை

செழுமையுடைய சுண்ணச் சாந்தினால் மெழுகினர்

பெருமை விளங்கும்

மணி முத்துக்கள் நிறைந்த பெரும்பந்தல்கள் பலவும் அமைத்தனர்.

3071.

திருமணச்செயல்களுள்

முளை பூரித்த நாள் தொடங்கி

அதன் பிறகு வரும் நாட்களிலெல்லாம்

வீதிகள்தோறும் முற்றங்கள் தோறும்

நீண்ட முன் வாயில்தோறும்

விளக்கம் செய்யும் மணி விளக்குகளும்

வாசமுடைய தூய நீர் நிறைந்த பொன் குடங்களும்

நெருங்கிய ஒளியுடைய மாலைகளும் தூபங்களும்

நெருக்கமாக அமைத்தனர்.

3072.

எங்கெங்கிலும் உள்ள மெய்யான திருத்தொண்டர்களும்

அந்தணர்களும் மற்றவர்களும்

மங்கலம் நீள்கின்ற மணவினை நாள் கேட்டு

மிக மகிழ்வெய்தினர்

நாள்தோறும் பக்திச்செல்வம் பெருகும்

திருப்புகலியான சீகாழியில்

அவ்விதமாக நெருங்கி வந்து சேர்ந்தவர்கள் அனைவருக்கும்

பெரிய சிறப்பு மிகவும் அளித்தனர்.

3073.

மங்கலம் பொருந்திய வாத்தியங்களின் நாதம்

வீதிதோறும் நின்று ஒலித்தது

பொங்கிய நான்கு மறைகளின் ஓசையோ

கடல் ஓசையை விட மிக அதிகமானது

தங்கும் நறுமணம் உள்ள

அகில் துண்டங்களின் செழும் புகையுடன்

செந்தீயுடன் மணமாய் மணம் பெருகியது.

3074.

எட்டுத்திசையில் உள்ளவர்களும்

அங்கங்கு உள்ள வளப்பொருட்களோடு நெருங்கினர்

பண்டங்கள் நிறைய சேமிக்கும் சாலைகளூம்

பல்வேறு விதமாக விளங்கியது

மிக்க பெருநிதியின் குவியல்கள் மலைபோல மலிந்தது

உணவுத் தொழில்களிலிருந்து எழும் ஓசை

இடையறாத ஒலியாய்ப் பெருக-

–இறையருளால் தொடரும்

Series Navigation