பெரியபுராணம்- 95 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

பா.சத்தியமோகன்2672.

அவ்வாறு சமணர்கள் கூறியதும்

நோய் நீங்கப் பெற்ற பாண்டியன் அவர்களைப் பார்த்து –

கன்றிப்போய்

என் உடல் முழுதும் வெப்புநோய் உள்ளாகியபோது

அங்கு ஒரு சிறிதும் நோயைத் தீர்க்காது தோற்றீர்கள்

ஆதலால் இனி உங்களிடம் வாது செய்ய என்ன இருக்கிறது” எனக்கூறினான்

உடனே மன்னனுக்கு முன்னும்பின்னுமாகச் சென்றார்கள்

அணுகி நின்று

சில்லிவாயர்களாகிய அவர்கள் சொல்லியதாவது:-

(சில்லிவாயர்- ஓட்டைவாயர்)

2673.

“நீங்கள் வாது செய்ய என்ன இருக்கிறது ? ” என்பதை

தோல்வியுற்ற உமக்கு வாதிட ஒன்றுமில்லை என்பதை

தம்மை

“என்ன வாதம்?” என வினவியதாகக் பொருள்கொண்டார்கள்

“ஓட்டைக் கையில் கொண்டு

அறிவால் சூழ்ந்து நிலை பெறுகின்ற

தத்தமது சமய உண்மைப் பொருளை

கருத்தினை எழுதி

வெப்பமான நெருப்பில் இட்டால்

வேகாமல் இருப்பதுவே வெற்றியாகும்” என்றனர் அவர்கள்.

2674.

என்று சமணர் உரைத்தபோது

அதற்கு மன்னன் விடையளிக்கும் முன்

ஞானசம்பந்தர் சொன்னார் :

“நீங்கள் கூறிய வழி நன்று!

தீயில் வேகாத ஏடுதான்

உண்மையான பொருட்கருத்து உடையது எனக் கூறுவீரானால்

வலிய ஒற்றைக்கை உடைய

யானை கொண்ட மன்னன் முன்பு

அவ்வாறே வாதம் செய்வோம்

முடிவு செய்வோம் வாருங்கள்” .

2675.

அப்படியே ஏற்று சமணர்களும் வந்தபோது

ஒப்பில்லாத உண்மையும் புகழும் மிக்க

சீகாழித் தலைவரின் உரையால்

சொல்வதற்கரிய வன்மையுடைய மன்னவனும்

திருந்தும் அரச சபை முன்பு

“வெம்மையுடைய தீயை அமைப்பீராக” என அதற்காக

பணிமக்களை அனுப்பினான்.

2676.

ஏவப்பட்ட மாந்தரும்

விறகை வெட்டி உடனே அடுக்கினர்

தீ அமைத்தனர்

எழுந்தது புகை –

சிகை போல !

பிறகு

எழுந்த புகை மாறி

வெம்மையான தீக்கடவுள் அதில் படர் ஒளிகாட்ட

ஆய்கின்ற முத்தமிழ் வல்லுநரான பிள்ளையாரும்

அந்தத் தீயினுக்கு அருகே நெருங்கி வந்து-

( சிகை – கூந்தல் )

2677.

சிவந்த கண்கள் உடைய காளையூர்தி உடைய

சிவபெருமானே உண்மைப்பொருள் என்று

உலகம் அறிய உபதேசிகின்ற

பொங்கும் இசையுடன் கூடிய திருப்பதிகங்களை எழுதிய

நல்ல திருமுறைச் சுவடியைத் துதித்தார்

“எங்கள் நாதனே பரம்பொருள்” எனத் தொழுதார்

உள்ளங்கையால் எடுத்து

திருமுடி ( தலைமேல் ) மேற்கொண்ட பின்பு

அதன் காப்பு நாண் அவிழ்த்தார்.

( காப்பு நாண் – கயிறு )

2678.

வணங்கும் மெய்ப்பொருள் தரும் திருமுறையை

தாமே

திருநீறு பொருந்திய

வன்மையுடைய கையினால் மறித்து எடுத்தபோது-

நான்கு பெரிய தோள்களையுடைய

இறைவர் எழுந்தருளிய

திருநள்ளாற்றினைப் போற்றிய அந்தப்பதிகம் நேர்பட வந்தது

அதனுள்

“போகமார்த்த பூண் முலையாள்” எனத்தொடங்கும்

திருப்பதிகம் எழுந்தது.

2679.

அத்திருப்பதிகத்தினை விரும்பி மேற்கொண்டு

இருண்ட

வெம்மையான

நஞ்சுபொருந்திய கண்டத்தை உடைய

திருநள்ளாற்று இறைவரை வணங்கினார்

மெய்மை பொருந்திய

நல்ல திரு ஏட்டினை

திருமறையிலிருந்து கழற்றி

மெய் மகிழ்ந்து

ஞானசம்பந்தர் கையில் வைத்துக் கொண்டார்.

2680.

“நன்மையில் செலுத்துகின்ற

மெய்யான பதிகத்தால் போற்றும் நாதனே!

என்னை ஆளாக உடைய ஈசனது நாமமே

எப்போதும் என்றும் நிலைபெறும் பொருளாம் எனக் காட்டும்படி

இது

தீயில் வேகாது இருப்பதாகுக” என்று

“தளிர் இள வளர் ஒளி” எனத் தொடங்கும் பதிகம்பாடி-

2681.

செந்தாமரைமலரின் அக இதழை விடவும்

மிகச்சிறந்த நிறம் கொண்ட கையில்

ஏட்டினை எடுத்தார்

பாண்டியனின் அவையினர் காணும்படி

ஆடையில்லாத அரையை உடைய சமணர்களின்

சிந்தை வெந்து அழியுமாறு

உலகம் உய்யுமாறு

சீகாழி வேந்தர் மகிழ்வுடன் தீயினில் இட்டார்.

(திருநள்ளாற்றுப் பதிகம் “தளர் இளவளர் ஒளி” எனத் தொடங்குவதாகும்)

2682.

தீயில் இட்ட ஏட்டினில் எழுதப்பட்ட

திருநள்ளாற்றுப் பதிகம் செந்தமிழ்பதிகம்

மணம் வீசும் கூந்தலையும்

அழகிய கொங்கைகளையும் உடைய

மலைமகளான உமையை

ஒரு பாகத்தில் உடைய

அட்டமூர்த்தியான சிவபெருமானையே

பொருளாகக் கொண்டதால் —

பொருந்திக் கிடந்த தீயிடையே வேகாமல்

பச்சையாய் விளங்கியது அந்தத்திருமுறை

2683.

மயக்கம் கொண்ட நஞ்சுடைய அமணர்களும்

தம் சமய உண்மைப் பொருளை எழுதிய ஏட்டை

“இது வேகாமல் எஞ்சியிருக்குமோ!இல்லையோ”

எனக்கவலையுற்று

நையும் நெஞ்சுடன்

நடுங்கியபடியே

தம் கையிலிருந்த ஏட்டினைக்

காய்கின்ற தீயினில் இட்டார்.

2684.

அச்சம் கொண்ட உள்ளமிருந்தாலும்

அதனால் அறிவு ஏதும் பெறாத சமணர்கள்

வெஞ்சுடர்ப் பெருந்தீயில் இட்ட ஏடானது —

தீ நடுவே பஞ்சு அழிவதைப்போல அழிவது கண்டு

அச்சத்தினால் நெஞ்சு சோர்ந்த பின்பும்

மயில் பீலிக்கற்றையை

கையிலிருந்து விடாதவராக நின்றனர்.

2685.

ஞான அமுது உண்டவரான சம்பந்தர்

பெருமையுடைய மன்னவரின் அவை முன்பு

வளர்ந்த செந்தீயில் இட்ட ஏடு

குறிப்பிட்ட நாழிகை கடந்தும்

அழிவுபெறாமல் இருந்தது கண்டனர்

முன்னைவிட பசுமையான தன்மையும்

புதிய தன்மையும் இருக்கக் கண்டனர்

யாவரும் வியப்புற்று

தீயிலிருந்து எடுத்தனர்.

2686.

அவ்விதம் எடுத்த ஏட்டினை

அவையின் முன்பாகக் காட்டி

முன்பிரித்து எடுத்த முறையிலேயே

மீளவும் சுவடியில் கோத்ததும்

பாண்டியன் அதிசயித்தான்

கற்றையாய் மயிற்பீலி உடைய கையைக் கொண்ட

சமணரை நோக்கிக் கடுத்து (சினந்து)

“நீவீர் தீயில் இட்ட ஏட்டினைக் காட்டுங்கள்” என்றார்.

2687.

சமணர்கள் தாம் இட்ட ஏட்டைத்

தீயிலிருந்து எடுக்கச் சென்றபோது

பெருகிய தீ சுட்டதால்-

வெந்து

பக்கம் நகர்ந்து

சென்றதைக் கண்ட மன்னன்

கொண்டு தரப்படும் நீரினால் தீயை அணைத்தான்

கருகிய சாம்பலும் கரியும் தவிர

சமணர்கள் வேறு எதனைக் காண்பார்?

2688.

இனி என்ன செய்வது என்று திகைப்புடன்

அந்த அமணர்கள் அங்கே திரண்ட சாம்பலைக்

கையினால் பிசைந்தும் தூற்றியும் பார்ப்பதைக் கண்ட மன்னன்

புன் சிரிப்புடன்

“இன்னும் ஏட்டை அரித்துப் பாருங்கள்

பொய்மை நெறியைத் துணையாகக் கொண்டு

அதனை மெய்யாக்கப் புகுந்த நீங்கள்

அகன்று செல்லுங்கள்” என்றான்.

2689.

“வெப்பு நோயான தீயிலிருந்து சம்பந்தப்பெருமானால்

நான் விடுதலைபெற்று உய்திட

நீங்கள் அப்பொழுதே தோற்றுவிட்டீர்கள்

ஆதலால் அதன் வழியே

இப்போது தீயில் இட்ட ஏடு

நிலை பெறாமல் ஒழிந்ததைக்கண்டும்

வல்லமை மிக்கவர்களே!

நீங்கள் தோற்கவில்லை போலும்!” என்றான்.

2690.

தென்னவன் இகழ்ச்சியாக

புன்னகையோடு செப்பிய மாற்றங்களைத் தெளிந்து கொள்ளாமல்

சொன்ன சொல்லை அப்படியே புரிந்து கொண்டு

தொடர்ந்து வாதம் செய்தனர் இப்படியாக:-

“முன்பு இரண்டு முறை செய்தோம்

மூன்று முறையில் ஒரு முறையேனும் வெற்றி அடைவோம்

ஆதலால் உண்மைத்திறம்

இனியும் ஒரு முறை சோதித்துக் காண்போம்”

2691.

ஒருமுறைக்கு இருமுறை தோற்றபிறகும்

ஆசை நீங்காதஅவர்கள் சொல்லைக் கேட்ட மன்னவன்

“இந்த மாற்றத்தால் ஆவதென்ன?” என மறுத்தான்

அதன்பின்

திருநீற்றின் அழகு விளங்கும் திருமேனி உடைய

நிறைந்த புகழ் உடைய சீகாழித் தலைவர்

“இனி செய்யக் கூடிய வேறு வாதம் யாது?” என வினவ

அப்போட்டியை ஏற்றார்

பிறகு கூறினார்:-

2692.

“நிலையான மெய்ப் பொருளின் உண்மை

நிலைபெறும் தன்மையுடன் தொகுக்கப்பட்டு

ஏட்டில் பொருந்தி எழுதப்பட்ட

அந்த ஏடுகளை

நாங்களும் நீவீரும்

ஓடும் ஆற்றில் இடுவோம்

நீருடன் ஓடாமல் அந்த இடத்தைப் பற்றி தங்குவது எதுவோ

அதுவே நல்ல பொருளை உடையதாகும்!”

2693.

என்று சமணரான கீழானவர் கூற

மென்மேலும் பெருகும் சிறப்புடைய புகலிவேந்தர்

“நல்லது! அதுவே செய்வோம்!” என அருள் செய்தார்

வெற்றியுடைய வேல் ஏந்திய அமைச்சர் குலச்சிறையார்

” இந்த வாதத்திலும் தோற்பவர்

அதன்பின் செய்வது இது” என

இப்போதே சபதம் செய்ய வேண்டும் என்றார்.

2694.

அங்கு

அவர் உரைத்ததைக் கேட்டு நின்ற அமணர்கள்

அந்த அமைச்சர் மீது கோபம் பொங்கியதால்

பொறாமை எனும் தீய குணம் மிகுந்ததால்

தங்கள் வாய் சோர்ந்து நின்றனர்

“இந்த வாதத்திலும் தோற்றோமெனில்

இம்மன்னனே எங்களை

கொடிய கழுவில் ஏற்றுவானாக” என்று

தாமே கூற்¢னர்.

2695.

சமணர்கள் அவ்விதமாக சொன்ன வார்த்தையைக் கேட்டதும்

பாண்டிய மன்னன்

“நீங்கள் சினம் மிகுதியால் உரைத்துவிட்டீர்கள்

உங்கள் செய்கையும் மறந்தீர்” என்று சொன்னான்

பின்

“உண்மை பற்றிய பொருளை உட்கொண்ட உமது ஓலைகளை

நீவீர் படரும் வைகை ஆற்றில்

அழகு பொருந்த விடுவதற்குச் செல்க” என்று கூற —

2696.

ஞானசம்பந்தப் பிள்ளையார்

பசும் பொன்னால் ஆன

பீடத்திலிருந்து எழுந்து வெளியில் வந்து

தெளிந்த நீர்மையுடைய

முத்து வரிசைகளையுடைய

சிவிகை மேல் ஏறிச் சென்றார்

வள்ளலாரான அவரைத்தொடர்ந்து –

மன்னன் குதிரை மீது ஏறிச் சென்றான்

உண்மையை உள்ளவாறு அறிய

ஆற்றல் இல்லாத சமணர்களோ

தம் உணர்வினில் ஏறிச் சென்றனர்.

2697.

தென்னவனாகிய பாண்டியன்

வெப்புநோய் நீங்கி

செழுமையான அரண்மனையிலிருந்து புறப்பட்டு

தம் பின்னே பொருந்த சம்பந்தர் வந்த போது

பெருகும் செல்வம் நிலையாக நிறைந்த

மதுரை எனும் பழமை வாய்ந்த தலத்தின் தெருவில் வந்தருளுகின்ற

அவரைக் கண்டு வெவ்வேறு விதமான

சொற்களைச் சொன்னார்கள்.

2698.

“பாண்டியன் கொண்ட வெப்புநோய் நீக்கி அருளிய ஞானசம்பந்தர்

இந்த நாயனார்தான் ! பாருங்கள்!” என்பார்கள்

“பால் மணம் கமழும்

குதலைச் சொல் எழும்

பவளம் போன்ற வாயுடைய இப்பிள்ளையார்

சிறப்புடைய தென்னவனின் நாடு வாழ

இங்கு வந்து சேர்ந்தார் “என்பார்கள்.

2699.

“தீயை முன்வைத்து செய்த வாதத்தில்

நம் சமணகுருமார் தோற்றது இவரிடம்தான்” என்பார்கள்

“புரிந்த சடையுடைய அண்ணல் சிவபெருமானின்

திருநீறே மெய்ப்பொருளாவதைக் கண்டோம்” என்பார்கள்

“பெருகும் ஒளியுடைய

முத்து நிறைந்த பசுபொன் சிவிகையில்

பிள்ளையார் வருகின்ற அழகுதான் என்னே!” என்பார்கள்

“இக்காட்சியைக் கண்டு கண்கள் வாழ்ந்தன!” என்பார்கள்.

2700.

“இந்த

சமணகுருமார்கள் இயல்பால் தீமையே உண்டானது” என்பார்கள்

“திருவாலவாய் எழுந்தருளிய இறைவனே முழுமுதற் கடவுள்”என்பார்கள்

“மூன்று கண்களுடைய

பழமையான சிவபெருமானை அறிவதே ஞானம்”

என்பார்கள்.

“வேதமும் திருநீறுமே எங்கும் நிறைந்து பரவிடும்” என்பார்கள்.

2701.

“சமண அடிகளின் முகங்கள் எல்லாம் வாடின பாரீர்” என்பார்

“கொடிய வஞ்சனைகள் யாவும் குலைந்துவிட்டன போலும்!” என்பார்

கூர்மையான வேல் கொண்ட மாறன்

சமண அடிகள் மேல் வைத்திருந்த பற்று

மாறிவிட்ட வண்ணம்தான் என்னே! என்பார்

“கொடிய சமணமான இருள் முடிந்தது” என்பார்.

2702.

“நெருப்பு வாதத்தில் தோற்றவர்கள்

தீ ( அனல்) வாதத்தில் வெல்வார்கள்” என்பார்

“இரும்பு மனம் கொண்டவர்கள் கூட இப்பிள்ளையார்க்கு

எதிரே நிற்க வல்லவரோ” என்பார்

“நுட்பம் இல்லாமல்

பருப்பொருளை மட்டுமே உணர்ந்த அந்த சமணர்கள்

பட இருக்கும் முடிவினைப் பாருங்கள்” என்பார்

“கொம்புகள் போல் கூர்மையான கழுமரங்களை

மந்திரி குலச்சிறையார் செய்துள்ளார்” என்பார்.

–இறையருளால் தொடரும்.
———————————————————————————————————-
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்