பெரியபுராணம்- 131- 59. கழற்சிங்க நாயனார் புராணம்

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

பா.சத்தியமோகன்


கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்.

(திருத்தொண்டத்தொகை – 9 )

4094.

இவர்

உலகில் விளங்கிய

தொன்மையான

பல்லவர் குலத்தில் பிறந்தார்

காவல் பொருந்திய மதில்கள் கொண்ட

மூன்று நகரங்களையும் எரித்த

கங்கை கொண்ட நீண்ட சடையார் சிவபெருமானின்

திருவடி மலர்கள் தவிர வேறு எதுவுமே

தன் அறிவினில் குறித்துக் கொள்ளாத இயல்புடையவர்

“கோக்கழற் சிங்கர்” என அழைக்கப்பட்டவர்.

4095.

சோழர்களின் ஒரு பிரிவாகிய காடவர் குலத்தின்

சிங்கம் போன்றவர் –

இந்த கோக்கழற் சிங்கர்;

பொன்னால் ஆன மேருமலையை

வில்லாக்கிக் கொண்ட இறைவர் அருளால்

போரில் சென்று

பகைவரின் முறைகளை அழிப்பார்

வடபுலத்து நாடுகளைக் கவர்ந்து வருவார்

நாட்டினை அறநெறியில் வைத்து

நல்லாட்சி வளர்த்து வந்தார்

4096.

இவ்வுலகில்

அரனார் சிவபெருமான் வீற்றிருக்கும்

கோயில்கள் பலவும் சென்றார்

பிறழாத அன்பினால் தாழ்ந்து வணங்கி

பொருத்தமான மெய்த்தொண்டு செய்தார்

சிவபுரி என அழைக்கும்படி நிலைபெற்ற

“தென்திருவாரூர்” அடைந்தார்.

பிறவி அறுத்து அடிமைக் கொள்ளும்

இறைவரின் கோவிலுள் பணிந்து புகுந்தார்.

4097.

முரசுகளையுடைய படை மன்னர்

ஐவகைப் படைகளோடு

அங்கணர் சிவபெருமானின்

கோவிலின் உள்ளே சென்றார்

புற்றில் இடம் கொண்ட முதல்வரை வணங்கினார்

மணம் மிகு மலர்க்கூந்தல் அணிந்த

உரிமை கொண்ட மெல்லியலார்களுள்

சிறந்த பட்டத்து தேவி

(அங்கணர் – சிவபெருமான்)

4098.

மயிலின் சாயல் கொண்ட பட்டத்து தேவியார்

கோவிலை வலம் வந்தார்

அங்குள்ள பெருமைகளை

தனித்தனியே கண்டு வியந்தார்

தூய

மென்மையான

பள்ளித்தாமம் தொடுக்கும் மண்டபத்தின் பக்கத்தில்

விழுந்து கிடந்தது ஒரு புதிய பூ

அங்கு விழுந்த –

அப்பூவினை எடுத்தார் மோந்தார் பட்டத்துதேவி

4099.

புதுமலரை மோந்தபோது

செருந்துணையார் எனும் புனிதத் தொண்டர்

“இவள் இந்த மலரை

திருமுற்றத்திலிருந்து எடுத்து மோந்து விட்டாள்”

என்று கருதி –

ஓடிச்சென்று கருவி எடுத்து வந்து

தேன் பொருந்திய தாமரை மலரில் அமரும்

இலக்குமி போன்ற அவளது மூக்கினைப் பிடித்து

அறுத்து எறிந்தார் .

4100.

அப்படிச் செய்ததும் குருதி வழிந்தது

மலர் சூடிய கூந்தல் அவிழ்ந்து சோர்ந்தது

சோர்ந்தாள் வீழ்ந்தாள் அரற்றினாள்

தோகை உடைய மயில் போல் நடுங்கி

மண்ணில் சோர்ந்து அயர்ந்தாள்

தேவி புலம்பிய ஒலி கேட்டு

பொன் ஒளியாகிய சிவபெருமானைக் கும்பிட்டுமுடித்த

அரசர் கழற்சிங்கரும்

அங்கு அருகில் வந்தார்.

4101.

மலர்ந்த கற்பக மரத்தின்

வாசம் மிகுந்த

பசிய தளிர் கொண்ட

பூங்கொம்பு ஒன்று

நிலத்தில் வீழ்ந்தது போல நொந்து அழிந்து

அரற்றுகிற தேவியை

வந்து சேர்ந்த மன்னர் கழற்சிங்கர் நோக்கினார்

“இந்த அண்டத்தில் உள்ளோர்களில்

எவர் இந்த வினை செய்தது?

நீ அஞ்சாதே ? ” என்று வினவினார்.

4102.

அந்நிலையில்

அருகில் வந்தார் செருத்துணையார் –

முன்பு நடந்த நிலைமை முழுதும் மொழிந்தார்;

கூறி முடித்ததும் –

மன்னர் அவரை நோக்கி –

“இச்செயலுக்கு உரிய தண்டனை

குற்றத்தின் எவ்வளவு அளவோ

அவ்வளவே அல்லவோ

தரப்பட வேண்டும்?” என்றார்

4103.

தம் இடையில் கட்டியிருந்த

உடைவாளை உருவினார்

“வாசம் கமழும் பூவினை

தொட்டு எடுத்த கைதான்

முதலில் துண்டிக்கப்பட வேண்டும்” என்று

அரசுரிமை பட்டமுடன்

தனது காதலையும் அணிந்த

பெரும்தேவியாகிய

மொட்டு மணம் அவிழ்க்கும் கூந்தல் உடைய

தேவியின் கையை

அணிந்த வளையலோடு துண்டித்து எறிந்தார்.

4104.

ஒப்பற்ற தனித்தேவியின்

செங்கரத்தினை

உடைவாளால் வெட்டிய போது

பெருகிய தொண்டர்கள் ஆர்த்தனர்

“அர அர” எனும் அவ்வொலி

நிலவுலகின் மேல் பொங்கி

வானில் முழங்கும் தேவர்களின்

ஆர்ப்பரிப்போடு பொருந்தியது

தெய்வவாசம் வீசும் கற்பகப்பூமழை

அப்போதே பெய்தது.

4105.

செய்வதற்கு அரிதான

அந்தத் திருத்தொண்டு செய்த

அரசர் கழற்சிங்கர் அளவிலாத காலம்

தன் அரசாட்சியும்

திருத்தொண்டும் தாங்கினார்

திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரிதான

இறைவரின் திருவருள் சிறப்பினாலே

செம்மை தரும் திருவடி நிழலில்

உரிமையான பேரரருள் அடைந்தார்.

4106.

உலகம் விளங்குவதற்காக

உலகம் வாழ்வதற்காக

காதல் மாதேவியின் கையினை வெட்டிய

நீக்கிய

கழற்சிங்கரின் திருவடி தொழுது போற்றி

பொருந்திய பெருமை மிகு அன்பரான

“இடங்கழியார்” எனப் புகழப்படும்

மெய்யருள் திருத்தொண்டரின் செயல் வினையை

சொல்லத் தொடங்கினோம்.

(கழற்சிங்க நாயனார் புராணம் முற்றிற்று)

60. இடங்கழி நாயனார் புராணம்

“மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை

மன்னவனாம் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்”

(திருத்தொண்டத் தொகை – 9 )

4107.

தேன்சுவை கொண்ட

மாமரத்துளிர்களை கோதியபடி

செழுமையான தளிர்களின் அருகில் மறைந்து

பெண் குயில்கள் மகிழும் நாடும் நாடு “கோனாடு” ;

மேலும் மேலும்

அலைகள் கொண்ட பெரும்கடலை

ஆடையாக உடுத்திய நிலமகள் மார்பில்

மகளிரின் தோள்தனங்களில்

சந்தனக்குழம்பினால் எழுதும்

கோலம்போல உள்ளது கோனாடு

( “கோனாடு” என்பது

புதுக்கோட்டையின் அருகில் உள்ளது என்பர் /

4108.

மணம் வீசும் செந்தாமரை மலரில்

தேன் மொய்த்த வண்டுகள்

பருகுவதற்கு இடமானது –

அலைகள் உடைய அந்த நீர் நிலை !

அங்கே –

பெண் பறவையோடு இரை அருந்தி

மோதி வரும் குளிர்வாடைக்காக

குருக்கத்திச் சோலையின் குருகுப்பறவைகள்

மறைந்து உறங்கும் நாடு கோனாடு;

அதன் தலைநகர் “கொடும்பாளூர்”

4109.

அந்நகரில் இருக்கும்

வேளிர் குலத்தில் தோன்றி ஆட்சி செய்து

நிலை பெற்ற

பொன்னம்பலத்தின் அழகிய உச்சியில்

ஒளியுடைய கொங்கு நாடு உள்ளது

அங்கு –

புகழுடைய

பசும் பொன்னால் செய்த

ஒளி உருவத்தின் மேல்

வேய்ந்த பொன் அணிகள் அணிந்த தோளுடன்

ஆதித்த சோழனின் புகழ் மரபில்

குடி முதல்வராக வந்தவர் இடங்கழியார்

4110.

உலகில் புகழ் பெற்ற

பெரிய பெயர் உடையவர் “இடங்கழியார்”

அடங்காத பகைவர்களின்

முப்புரமும் எரித்த இறைவரின்

திருவடித் தொண்டு நெறி தவிர

முடங்கிப் போகும் எந்த நெறியையும்

கனவிலும் கருத மாட்டார் இடங்கழியார்

எந்நாளிலும் தொடர்கிற பெரும் காதலுடன்

தொண்டர்கள் கேட்கும் பணிகளைச் செய்து வந்தார்.

4111.

சைவநெறியானது

வைதிகத்தின் தருமநெறியுடன் தழைப்பதற்காக

நஞ்சு உண்ட திருக்கழுத்து உடைய

சிவபெருமானின் நிலைத்த கோவில்கள் எங்கும்

உண்மை வழிபாடான அர்ச்சனைகளை

சிவ ஆகம விதி மேலும் மேலும் விளங்குமாறு

உண்மை வளரும் வளமுடனும் புகழுடனும்

அரசு செலுத்தி வந்தார் இடங்கழியார்

அக்காலத்தில் –

4112.

சங்கரனாகிய சிவபெருமானின் அடியவர்களுக்கு

அமுது அளிக்கும் தவமுடைய ஒருவர்

ஒருநாள்

சிவன் அடியவர்க்கு திரு அமுது அளிப்பதற்காக

எங்கும் எந்தச் செயலும் செய்ய இயலாமல்

முட்டுப்பட வேண்டி வந்தபோது –

தட்டுப்பாடுவந்தபோது –

பொங்கி எழுந்த பெரு விருப்பத்தால்

தாம் செய்யும் வினை என்னவென்றே தெரியாமல் –

4113.

நெற்கூடுகள் வரிசையாக உள்ள

காவல்கள் பல உள்ள கொட்டாகரத்தில்-

பண்டங்கள் சேமிக்கும் இடத்தில்

எங்கும் மிகுந்து இருள் நிறைந்த நள்ளிரவில்

மன்னர் இடங்கழியாரின் நெற்களஞ்சியத்தில்

நெல்லினை முகந்து எடுத்தார்

முரசு அறையும் காவலர்கள்

அதனைக்கண்டு பிடித்து

அவரை அரசன் முன் கொண்டு வந்தனர்

4114.

காவலர்கள் பிடித்து வந்த

அந்த நபரைக் கண்டார்

வேலுடைய மன்னர் இடங்கழியார் விசாரித்தார்

மன்னர் வினவியதும் –

“சிவனடியார்களை

நான் அமுது செய்விக்கும் தொழில் முட்டுப்பட்டதால்

அதற்கான பொருள் இல்லாமையால்

இவ்வாறு செய்தேன்” என்று இயம்பினார்

மிகவும் மனம் இரங்கினார் மன்னர்

அவரை விடுவித்து

“இவரன்றோ எனது களஞ்சியம் “என்றார்.

4115.

இடங்கழியாரின் உள்ளம் தன் நிலை அழிந்தது

நிலை குலைந்தது

“நெற்களஞ்சியம் மட்டுமல்ல

குறைவிலாத செல்வக்களஞ்சியம் எல்லாமும்

கொள்ளையாய் முகந்து செல்க

இறைவனடியார் திருடிச் செல்லலாம்

கவர்ந்து கொள்ளலாம் ” என

எல்லாத் திசையிலும்

பறை அறிவிக்கச் செய்தார் இடங்கழியார் ;

தாம் பெற்ற நிதியின்

உண்மையான பயனை பெற்றார்.

4116.,

எண்ணிலாத செல்வக்குவியல்கள்

ஈசனின் அடியார்கள் பெற

நெஞ்சின் உள்ளே நிறைந்த அன்பினால்

கொள்ளையை அனுமதித்தார்

குளிர்ந்த கருணையினால்

நெடுங்காலத்திற்கு

திருநீற்றின் நெறி தழைக்கும்படி

உலகில் அவர் அருள் புரிந்தார்

சிவபெருமானின்

திருவடி நிழல் சேர்ந்தார் இடங்கழி நாயனார்.

4117.

நஞ்சு வளர்வதற்கு இடமான

அழகிய கழுத்துடைய இறைவரின்

வழி வழி வரும் தொண்டு வழிபாட்டில்

பெரும் சிறப்பு அடைந்த

இடங்கழியாரின் திருவடி வணங்கி

மெய் தரும் சிவபெருமானின் நெறி தவிர

வேறெதுவும் மேலென அறியாத

தவம் மிக்க

செருத்துணையார் திருத்தொண்டின்

செயலைச் சொல்வோம்.

(இடங்கழி நாயனார் புராணம் முற்றிற்று)

61. செருத்துணை நாயனார் புராணம்

“மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும்

தஞ்சை மன்னவனாம் செருத்துணை தன்

அடியார்க்கும் அடியேன்”

(திருத்தொண்டத் தொகை – 9 )

4118.

காவிரியின்

தெளிவான அலைகளில் செல்லும்

மதகுகள் யாவும் சேல் மீன்கள் மட்டுமல்ல –

செழுமையான மணிகளையும்

கொழிக்கின்ற நீர் பாயும் நாடு சோழர் நாடு

அங்கே –

மருகல் நாட்டில் உள்ளது தஞ்சாவூர்

அகமும் புறமும்

ஒழுக்கம் தவறாத நெறி உடைய

பண்புடைய பழங்குடி மக்கள் நிறைந்த

செல்வமுடைய பெருமையுடையது தஞ்சாவூர்.

(இப்போது “தஞ்சாவூர்” என வழங்குவது வேறு ஊர்)

4119.

சிறப்புடன் விளங்கும் அந்நகரில்

வேளாளர் குடியின் முதல்வரான

கங்கை அணிந்த

சிவந்த சடையுடைய திருநீற்றர் சிவபெருமான் –

கூற்றுவனின் நெஞ்சில் இடித்தார்

தேன் பொருந்திய

மலர் போன்ற திருவடிகளையே நினைக்கின்ற

உண்மை அன்புடைய சைவர் என

உலகில் விளங்கினார் “செருத்துணையார்”;

திருத்தொண்டின் நெறியில் நின்று வாழ்ந்து வந்தார்.

4120.

இத்தகைய அன்பர் திருவாரூரில்

ஆழித்தேர் வல்லுநரான இறைவரின் கோவிலுள்

ஞானமுனிவரும் ; தேவர்களும்

நெருங்கி வாழ்கின்ற நன்மை பொருந்திய முற்றத்தில்

பெருமையுடைய திருப்பணிகள் செய்தார்

உரிய காலங்களில் வழிபட்டு வணங்கி

கூனல் இளவெண்பிறை முடியார்

சிவபெருமானின் திருத்தொண்டினைச்

சிறப்பாக செய்து வந்த நாளில் –

4121.

உலகில் –

ஆட்சிசெய்து வந்த

பல்லவமன்னர் கோச்சிங்கரின்

பட்டத்து அரசி பெருந்தேவி –

“உரிமை ராணி

பூ மண்டபத்தின் பக்கத்தில்

விலகிக் கிடந்த ஒரு மலரை எடுத்து மோந்ததற்காக

உள்ளம் பொறுக்கமுடியாத அச்சிவத்தொண்டர்

ஒளிவிடும் கூரிய வாயுடைய வாள் எடுத்து

வேகமுடன் வந்து சேர்ந்து —

4122.

விரைந்து வந்தார்

அவளது

கூரிய மென்கூந்த்ல் பிடித்து இழுத்து

நிலத்தில் வீழ்த்தி

அழகிய மூக்கைப்பற்றிஇழுத்து

“ இறைவரின் சிவந்த சடைமுடியில் அணிகிற

திருப்பூ மண்டப மலரை

மோந்திடும் மூக்கைத் தண்டிப்பேன்” என்று

வாளால் நறுக்கினார் ஒப்பிலாத தனித்தொண்டர்

4123.

திருத்தொண்டை

உலகம் அறியச்செய்த

வலிமையுடைய

ஆண்சிங்கம் போன்ற செருத்துணையார்

தொடுக்கப்பட்ட மாலை போன்ற

கொன்றை மலர் சூடிய இறைவரின்

அடிமைத்தொண்டினை

கடல் சூழ்ந்த உலகில் விளங்கச்செய்து

அதனால்

உயிர்கள் உலகில் உய்யச்செய்தார்

பொன்னம்பலத்தில் எடுத்த திருவடி நிழலை அடைந்தார்

இறவாத இன்பம் எய்தினார்

4124.

சிவந்த கண் உடைய

காளையூர்தி உடைய இறைவரின்

திருமுற்றத்தில் வீழ்ந்த

பள்ளித்தாமத்திற்கு உரிய மலரை மோந்ததற்கு

மன்னரது பட்டத்து அரசியின் மூக்கினை அரிந்த

செருத்துணையாரின் திருவடிகள் துதித்து

எங்கும் விளங்கும் “ புகழ்த்துணையாரின்”

உரிமைமிகு அடிமைத்திறத்தை

எடுத்து இயம்புவோம்

( செருத்துணையார் நாயனார் புராணம் முற்றிற்று )

62. புகழ்த்துணையார் நாயனார் புராணம்

“ புடை சூழ்ந்த புலியதள் மேல் அரவாட ஆடி

பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கு அடியேன்”

_ ( திருத்தொண்டத்தொகை –
9 )

4125.

“ செருவிலிப்புத்தூர்” எனும் பதியில் வாழும்

சிவ வேதியர் குலத்தில் தோன்றியவர்

அரிய –

மலை வில்லாளி சிவபெருமானுக்கு

அகத்தடிமை தொண்டு செய்வதில் நிகரிலாதவர்

உலகில் பரவி ஓங்கும்

ஒப்பிலாப் புகழ் நீண்ட

“புகழ்த்துணையார்” எனும் பெயர் உடையவர்

( அகத்தடிமை :

இறைவரின் திருமேனி தீண்டி,

நீராட்டுதல் முதலியன செய்பவர் )

4126.

தன் தலைவனை தவத்தாலே வழிபட்டார்

தத்துவத்தினால் வழிபட்டார்

அத்தகைய காலத்தில் –

பொங்கும்கடல் சூழ்ந்த உலகில்

பஞ்சம் சூழ்ந்தது

உணவு கிட்டாத பசி வந்தது

அப்படிப்பட்ட சூழலிலும்

“ எம் இறைவன் சிவபெருமானை

நான் விடமாட்டேன்” என இரவும் பகலும்

பல மலர்கள் கொண்டும்

குளிர் நீர் கொண்டும்

அர்ச்சிப்பவர் ஆனார்

4127.

திருமாலுக்கும் நான்முகனுக்கும்

தேட அரிதான சிவபெருமானை

நீராட்டும்போது

திருமஞ்சனம் செய்துவிடும்போது

மிகுந்த பசிப்பிணியால் வருந்தினார்

தளர்வு அடைந்து

அழகு நிறைந்த

நீர் நிறைந்த குடத்தைச் சுமக்க முடியாமல்

நஞ்சு அணிந்த கழுத்து உடைய

சிவபெருமானின் முடிமீது வீழ்த்தி

தளர்ந்து போனார்

4128.

சங்கரன் அருளால்

ஓர் துயில் வந்து அவரை அடைந்தது

அங்கணனாகிய நெற்றிக்கண்ணான்

கனவு நிலையில் அருள் செய்தார் இப்படி :-

“ அருந்தும் உணவு மங்கிவிட்ட

பஞ்ச காலம் முடியும் வரை

நாம்

நாள்தோறும் இங்கு உனக்கு

ஒரு காசு வைப்போம்”

இடர் நீங்கி எழுந்தார் நாயனார்

4129.

காளையூர்தியில்

விரும்பி எழுந்தருளும் சிவ பெருமான்

பீடத்திற்குக் கீழே ஒரு பொற்காசு இட்டார்;

அளித்தார்

அதைக் கண்ட அன்பர்

அதனை கையில் எடுத்துக் கொண்டார்

வாட்டும் மிகப்பெரிய பசியிருப்பினும்

உடல் வாடினாலும் மகிழ்ந்தார்

பேருணர்வாகிய

முழுமையான உணர்வு நிரம்பியது

முகம் மலர்ந்த களிப்பு கொண்டார்

4130.

அந்த நாள் போலவே எந்நாளும்

இறைவர் அளித்த காசினைக்கொண்டு

சங்கடம் உண்டாக்கிய

பஞ்சத்தினால் ஏற்பட்ட

துன்பமுடைய பசி நீங்கிய பின்

ஒளி உடைய செஞ்சடையாராகிய சிவபெருமானுக்கு

உண்மைத்தொழிலான

அகத்தடிமை தொழிலை

முக மலர்ச்சியுடன் அடைந்து மகிழ்ந்தார்

வானவர் தொழும்படியாக

புனிதரான சிவபெருமானின்

திருவடி நிழல் சேர்ந்தார்

4131.

பந்து சேரும் மென்விரல்கள் கொண்ட

உமையம்மையின் பாகத்தார் சிவபெருமானின்

திருப்பாதத்தை வந்து சேர்கிற

மனத்துணை பெற்ற

புகழ்த்துணையாரின் திருவடிகளை வாழ்த்தி

சந்தனக்கலவை அணிந்த

அழகிய தோள்கள் உடைய

ஒப்பிலாத தனி வீரரும்

தலைவருமான

மணம் கமழும் மாலை சூடிய

கோட்புலியாரின் செயலை இனி உரைப்போம்

(புகழ்த்துணை நாயனார் புராணம் முற்றிற்று)

63. கோட்புலி நாயனார் புராணம்

“அடல் சூழ்ந்த வேனம்பி கோட்புலிக்கும் அடியேன்”

(திருத்தொண்டத் தொகை- 9 )

4132.

நன்மை பெருகும் சோழநாட்டில்

திருநாட்டியத்தான் குடியில்

வேளாளர் குலப்புகழ் ஓங்கும்படி பிறந்தார்

“கோட்புலியார்” எனும் பெயர் உடையவர்

சோழமன்னரின் ஆட்சிப் புகழ்க்காலத்தில்

படைத்தலைவராய் இருந்தார்

பகை மன்னரின் நாட்டுடன் போர் செய்து

துன்பம் விளைவித்து

புகழ் விளைவிப்பார்.

4133.

மன்னரிடம் செய்து வந்த தொழிலால்

பெற்றிடும் சிறந்த செல்வங்களை எல்லாம்

பிறை மதி சூடிய பிஞ்ஞகரின் கோயில்கள்தோறும்

திரு அமுது படைப்பதற்காக

செந்நெல்லினை

மலைச்சிகரம் போல குவிப்பார்

இத்தொண்டினைப்

பலகாலமாக செய்து வரும் காலத்தில் —

4134.

மன்னரின் ஏவலால்

வலிய

பகைவர்களின் போர்க்களத்திற்கு

செல்ல நேர்ந்தது அப்போது

அந்த நாயனார் –

பாம்பையே அணிகலனாக அணிந்த சிவபெருமானுக்கு

அமுது படைப்பதற்காக

தாம் திரும்பி வரும் வரையில்

தேவைப்படுமளவு நெல்மலையை வாங்கினார்

கூடுதல் பணம் கட்டிவிட்டு பயணம் புறப்பட்டார்

4135.

பயணம் புறப்படும்போது

தம் சுற்றத்தவர்களாகிய எல்லோரையும்

தனித்தனியே அழைத்து அவர் சொல்லியதாவது:-

“என் தந்தையாகிய சிவபெருமானுக்கு

அமுது படிக்காக

இறைவனுக்கு அமுது படைப்பதற்காக

இந்நெல் சேர்ந்துள்ளது ;

இதனை அழிக்க சிந்தையால் நினைத்தாலும்

அவர்மேல் “திருவிரையாக்கலி” என்று உரைத்தார்

“சிவபெருமான் மீது ஆணை” என்றார்

அகன்றார்.

4136.

கோட்புலி நாயனார் அங்கிருந்து போனபின்

சிலநாளில் பஞ்சகாலம் வந்தது;

அறிவுறுத்தப்பட்ட அந்த சுற்றத்தினரும் உறவினரும்

“உணவின்றி இறப்பதை விட

காளைக்கொடி உடைய இறைவரின்

அமுதுக்குரிய படியான நெல்லினை

எடுத்துக் கொண்டாவது பிழைத்து விடலாம்” என்றனர்

குற்றம் தீர்ப்பதற்கு

பின்நாளில் கொடுத்து விடலாம் என்றும்

நெற்கூடுகளை குலைத்து அழித்தனர்.

4137.

மன்னவனுக்காக

கோட்புலியார் போர்முனையில் வெற்றி பெற்றார்

அந்த அரசனிடமே நல்நிதிக்குவியல் பெற்றார்

நாட்டியத்தான் குடித்தலைவரான கோட்புலியார்

அந்நகரத்தில்

தம் சுற்றர்த்தார் செய்த பிழை அறிந்தார்

“அவர்கள் அனைவரையும் கொல்வேன்

உயிர் போக்குவேன்!” எனத் துணிவு கொண்டு –

4138.

தம்மை எதிர்கொண்டு வரவேற்ற சுற்றத்தாருக்கு

இனிய வார்த்தை பலகூறி

சந்திரன் தங்குமளவு ஒளியும் அழகும் உடைய

தனது மாளிகையை அடைந்தார்

அந்நகரில் உள்ள சுற்றத்தினர் யாவரையும்

பசுமையான துகில் மற்றும்

நல்லநிதி அளிப்பதற்காக அழைமின்கள்”

என உரைத்தார்.

4139.

உறவினர்கள் எல்லோரும் வந்தனர்

மாளிகையுள் புகுந்தனர்

சங்கநிதி பதும நிதி எனப்படும்

இரு வகைப்பட்ட நிதியும் தருபவர் போலக் காட்டி

நல்லவரான கோட்புலியார்

தனது பெயரை உடைய காவலன்

முன் வாயிலை காவல் காத்திடச்செய்தார்

“இறைவரின் வலிமையான ஆணையையும் மறுத்து

திரு அமுதத்துக்கான நெல்லினை

அழித்து உண்ட உறவினரையெல்லாம்

கொல்லாமல் விடுவேனா” எனக் கனன்றார்

எரியும் சினத்துடன் கொலை புரிந்தார்.

4140.

தந்தையார்

தாயார்

உடன் பிறந்தவர்கள்

தாரங்கள்

பந்தம் உடைய சுற்றத்தினர்

அந்த ஊரில் உள்ள அடிமைகள்

இவர்கள் அனைவரை மட்டுமல்ல

எம் தந்தையான இறைவரின்

திருப்படிக்குரிய அமுதை உண்ணலாமென என எண்ணி

அவர்களுடன்

அங்கு கூட்டு இருந்தவர் உள்பட

தீய வினைகள் அழிக்கும் நாயனார் –

வாள் கொண்டு துண்டுதுண்டாக்கினார்

4141.

அதன் பின் –

அங்கு

ஒரே ஒரு பிள்ளை பிழைத்திருந்தது

அதனைக்காட்டி –

“ இப்பிள்ளை அச்சோறு உண்ணவில்லை

இவன் இந்தக்குடிக்கே ஒரே ஒரு வாரிசு

குடிக்கொரு பிள்ளை

அதனால்

வெட்டாமல் அருள வேண்டும்” என்று சொல்ல –

“ இப்பிள்ளை உண்ணவில்லை எனினும்

அந்நெல்லை உண்டவளின்

முலைப்பால் உண்டது”

என அப்பிள்ளையையும் –

எடுத்தெறிந்து

மின்னும் நல் கூரிய வாளால்

இரண்டு துண்டாக்கி விழுமாறு செய்தார்

4142.

அன்பர் முன்

அந்நிலையே சிவபெருமான் வெளிப்பட்டார்

“ உனது கைவாளால் அறுக்கப்பட்டு

துண்டமாக்கப்பட்டதால்

உன் சுற்றத்தினர் யாவரும்

தேவர் உலகைவிட மேலான உலகம் புகட்டும்

புகழ் மிக்கவனே

நீ-இந்நிலையிலேயே நம்முன் அணைக” என

ஆணையிட்டு ஆட்கொண்டார்

4143.

தந்தையும் தாயுமாய்

ஆருயிரும் அமிர்தமுமாய் ஆகிய

முத்தனான முதல்வனின் திருவடியை அடைந்து

சுற்றத்தினரின் பாசத்தினை அறுத்த

கொத்தான மாலைகளையுடைய

கோட்புலியார் திருவடி வணங்கி

அடியார்கள் கூட்டத்தில் ஒருவரான

“பத்தராய்ப்பணிபவரின்” இயல்பை இனி

இயம்புவோம்

4144. சுந்தரமூர்த்தி நாயனார் துதி

ஒன்றுக்கும்பொருளாகாத என்மனதில் மட்டுமின்றி

பெருக்கெடுத்த காவிரிநதி கிழியுமாறு

வழிபிளந்து சென்று அருளிய

திருநாவலூர் தலைவரான

சுந்தரமூர்த்தி நாயனாரின் திருவடிமலர்கள்

எப்போதும்

என் தலைமீதும் மலர்கிறதே !

இப்பேறு பெற

யான் முன்பு செய்த பெரும்தவம்தான் எதுவோ!

( கோட்புலி நாயனார் புராணம் முற்றிற்று )

11. பத்தராய்ப் பணிவார் சருக்கம்

64. பத்தராய்ப்பணிவார் புராணம்

“ பத்தராய் பணிவார்கள் எல்லோருக்கும் அடியேன் “

( திருத்தொண்டத்தொகை – 9 )

4145.

ஈசருக்கு அன்பராக எவர் ஒருவரைக்கண்டாலும்

கூசி அஞ்சிடுவார்

அவரது உள்ளம் குதுகுதுக்கும்

கொண்டாடத்துவங்கிவிடுவார்

மனம் மகிழ்வுற்று ஆசையுடன்

தாய்ப்பசுவின்பின்

கன்று செல்வதுபோல சேர்வார்

அவர்களிடம் பேசுபவை யாவும்

இனிய சொல்லாகவே இருக்கும்

4146.

கேடில்லாத அன்பினால்

சம்புவாகிய சிவபெருமானை

எங்கேனும்

எவரேனும்

அர்ச்சிப்பதைக்கண்டால் மனம் மகிழ்வார்

சத்தான பாவனையாலும்

அருள் நோக்கினாலும்

பலரும் காணும்படி பயன் பெற்றார்

விவரிக்க முடியாத அன்பின் திறத்தால்

மேலானவர்க்கும் மேலானவராக இருந்தார்

4147.

இறைவரையும் ; அவர் அடியாரையும்

தாங்கவியலாத காதலுடன்

பொங்கிவரும் உவகையுடன்

மகிழ்வுடன் விரும்பி இரசிப்பார்

தாமரை மலரின் மேலுள்ள நான்முகன்

பாம்பணை மீதுள்ள திருமால்

ஆகிய இருவராலும் அடைய இயலாத

திருவடிகளைச் சார்ந்திட வேண்டும் என்கிற

தவம் உடையவராக இருந்தார்.

4148.

“இந்த உடம்பினால் செய்யும் செயல்கள்

எவையாக இருந்தாலும்

அவை

காளைக்கொடி உயர்த்திய பெருமானின்

பாதாரவிந்தத்திற்கு

திருவடி தாமரைக்கு

சேரும் தகுதி பெறுக” எனும் அன்போடு

செவியில் வெண்நிற குழை அணிந்த சிவபெருமானுக்கு

பணி செய்கிறவர்கள் எவருமே

பிறவிதரும் கருக்குழியில்

மீண்டும் புகமாட்டார்கள்

பிறவிக்கடலில் விழமாட்டார்கள்

அவர்களின் புகழுக்கு

இவ்வுலகமும் ஈடல்ல

4149.

சிவபெருமானாகிய சங்கரனைக் குறித்த கதைகளையே

கேட்கும் தன்மை உடையவர் ஆகிறவர்கள் அனைவரும்

அங்கணன் ஆகிய சிவபெருமானை விரும்பி

பிறர் அறியா நிலையில்

சிவபெருமான் மீது செய்யும் அன்பினால்

கங்கை ஆறும்

பிறைச்சந்திரனையும்

கொன்றை மலரையும்

விரும்பி அணியும் திருமுடியுடைய சிவபெருமானின்

செங்கமல மலர்ப்பாதம் சேர்வதற்கு

உரியவர் ஆகிவிடுகிறார்கள்.

4150.

ஈசனையே பணிந்து ஈசனிடம் உருகி

இன்பம் மிகுந்து களிப்பு பெற்று

பேசிய வாய் தழுதழுத்து

தாரை தாரையாய் கண்ணீர்

மார்பில் உள்ள திருநீற்றை அழித்து

அருவிபோல் வழிந்து உடல் நடுங்குகிற

மெய்க்குணம் மிக்க பக்தர்களுக்கு

கூசும் மயிர் புளகமுறும்; சிலிர்த்திடும்

4151.

நின்றாலும் அமர்ந்தாலும்

படுத்துக் கிடந்தாலும்

ஏதேனும் மென்றாலும் உறங்கினாலும்

விழித்தாலும் இமைத்தாலும்

திரு அம்பலத்தில் ஆடும் மலர்ப்பாதம்

ஒரு போதும் மறக்காத தன்மையுடன்

குன்றாத உணர்வுடையாத அவர்கள்

திருத்தொண்டர் எனப்படும்

குணமே மிக்கவர்கள்.

4152.

சங்கரனுக்கு ஆளாகும்

தவத்தினை உலகுக்குக் காட்டினார்

அதனால் தமது குற்றம் நீங்கிய பயனைப் பெற்றார்

உலகை விளங்கச் செய்யும் பெருமை உடையவர் ஆகிய

அங்கணராகிய சிவபெருமானை

திருவாரூர் ஆளும் இறைவனை

திருப்பாதம் வணங்கி

மேலும் மேலும் பொங்கி எழும் சித்தமுடன்

பத்தராய்ப் போற்றி வந்தார்

(பத்தராய்ப் பணிவார் புராணம் முற்றிற்று)

65.பரமனையே பாடுவார் புராணம்

(பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்”

(திருத்தொண்டத் தொகை- 10 )

4153.

அசுரர்களின் மூன்று புரங்களும் எரித்தானை

பாம்புகள் அணிந்தவனை

ஞானம் முதிர்ந்த நிலையில் ஒரு பொருள் ஆனானை

அனைத்து உலகமும் ஆகியவனை

உடலின் கருவியாலும்

கரணங்களாலும் காணப்பட முடியாதவர் எனினும்

கண் நிறைய நிறைந்தவனை

அப்படிப்பட்ட பரமனையே பாடுகிறவர் பெருமையைப்

போற்றிப் பாடுவோம்.

4154.

தென்தமிழ் மட்டுமல்ல வடமொழி மட்டுமல்ல

பிறநாட்டின் மொழிகள் மட்டுமல்ல

இன்னும் வரப்போகும் எம்மொழியானாலும்

மன்றில் நடம் புரியும் வள்ளலையே

அம்பலம் ஆடும் கூத்தனையே

உயர்ந்த பொருளாக

மனம் ஒன்றிப் பொருந்திய மெய் உணர்வுடன்

உள் உருகிப் பாடுகிறவர்கள்தான்

“பரமனையேபாடுவார்” .

(பரமனையே பாடுவார் புராணம் முற்றிற்று)

66. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்

4155.

நான்முகன் உள்ளிட்ட

காரணக் கடவுளர் ஐவர்க்கும் உரிய

ஐந்து தாமரைப் பாதங்கள் கடந்துமேல்சென்றார்;

பூரணமாய்

மெய்யான பரம்சோதியாய் பொலிந்து

நாதாந்தத்தில் உள்ளம் செலுத்தி

சிவம் அடைந்த சித்தம் கொண்டார்;

ஒப்பில்லாத அம்பலத்துள் விளங்கும்

வேதகாரணரான கூத்தரின்

திருவடித் தொண்டின் வழியில் நின்றார்

அவரை அடைந்தார்.

(சித்தத்தை சிவன்பாலே வைத்தார் புராணம் முற்றிற்று)

67. திருவாரூர்ப் பிறந்தார் புராணம்

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்

(திருத்தொண்டத் தொகை -10 )

4156.

அருவமாகி உருவமாகி

அனைத்துமாய் விளங்கும் பிரான் ஆகி

மணம் நிறைந்த குழல் உமையாள் கணவனுமாகி

சிவபெருமான் மகிழ்ந்து அருள்கிற

திருவாரூரில் பிறந்தவர்களின் திருத்தொண்டை

தெரிந்து உணரும்படி உரைத்திட

சிறியேனுக்கு

ஒரு வாய் போதுமோ !

சிறியேனால் உரைக்கவும் இயலுமோ!

4157.

மிகச்சிறப்புடைய திருவாரூர் பிறந்தார் நாயனார்

திருக்கயிலை சிவபெருமானின் கணங்களே ஆவார்

ஆதலால் –

செருக்குடன் எழும் ஐம்பொறிகளையும் அடக்கி

இறைவரின் திருவடிகளை ஒன்றுபட்டு வணங்கி

ஒருமைப்பட்ட நெஞ்சு கொண்டவர்களுக்கு

உயர்நெறி வசப்படும்.

(திருவாரூர்ப் பிறந்தார் புராணம் முற்றும்)

68. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்

“முப்போதும் திருமேனி தீண்டுவோர்க்கு அடியேன்”

(திருத்தொண்டத் தொகை- 10 )

4158.

எப்போதும் இனிய பிரான் சிவபெருமான்

அவன் இனிய திருவருள் அதிகரிப்பதால்

அதனைக் கொண்டு

சிவ ஆகம ஞான நெறிப்படி வழுவாமல்

தவறாமல்

அந்தந்த காலம்தோறும்

ஆர்வமிகுந்த அன்புடையவராக

மூன்று காலத்திலும் அர்ச்சிப்பார்கள் –

ஆதி சைவராகிய முனிவர்கள்.

4159.

ஆராய்ந்து தெரிந்து கொண்டால்

உணர்ந்து கொண்டால்

கடந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம்

எனப்படும் மூன்று காலத்தின் வழிவழியாக

சிவனது அகம் விரும்பிய தொண்டில்

வழிபாட்டு அர்ச்சனைகள்

சிவவேதியர்களுக்கே உரியன ஆகும்

அத்தகைய பெருந்தகையாளர் குலப்பெருமை

எம்மால் புகழப்படும் தன்மையில் அடங்கிடுமோ!

4160.

நாராயணனும் நான்முகனும்

அறிய இயலாத தலைவனை;

எம்பெருமானை;

ஞானமயமான வேதங்களின் உட்பொருள்கள்

அனைத்துமான அண்ணலை;

மூன்று சந்தியாகாலங்களிலும்

அன்பு காரணமாக வழிபடும் சிவனடியாரின்

தாமரைத் திருவடிகளை வணங்குகிறேன்;

உள்ளம் கசிந்து –

என் சிந்தை –

முழுமையும் நிறைவும் அடைந்தமையால்

முழுதும் திருநீறு பூசி வாழும் தூயவரின் செயலை

அறிந்தவாறு சொல்லப் புகுவேன்.

(முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் முற்றிற்று)

–இறையருளால் தொடரும்


Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்