பூட்டானிலிருந்து யாத்திரிகர்களும், மந்திரவாதிகளும், கோப்பையும்

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

சுப்ரபாரதிமணியன்


திரைப்பட ரசனை என்பது அதன் கருத்து, வடிவம், சொல்லும் தன்மை என்று வெவ்வேறு வகையாய் அறியப்படுகிற பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. நல்ல கதையமைப்பு மட்டுமே சிறந்த படப்பாகி விடுமா. மனதை அள்ளும் ஒவ்வொரு பிரேமும் சில சமயங்களில் அவையே உயர்ந்தவை என்ற எண்ணத்தை தோற்றுவித்து விடும். சில சமயம் சிறுகதையின் முடிவு போல படத்தின் முடிவு ரசனையை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்று விடும். திரைப்படத்தின் ஒவ்வொரு கேமரா பிரேமிலும் நல்ல திரைப்படத்தின் அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு பிரேமைத்தாண்டி இன்னொரு பிரேமிக்குள் நுழைகிற எத்தனத்திலும் அதன் அழகு இருக்கிறது.அதன் ஒழுங்கமைப்போ ஒழுங்கமைப்பு இல்லாதத் தன்மையோ எடிட்டிங் என்ற கோர்வைக்குள் பல ரகசிய இயக்கங்களை உருவாக்குகிறது .அவற்றை உணர வைக்கிறது. உணர்வை அனுபவங்களாக மாற்றிக் கொள்ள முடிகிறது. அந்த அனுபவங்கள் அலைக்கழிந்து தேடுதலாய் அமைந்து விடுகின்றன. ஓர் அனுபவம் அற்புதம் என்று மெய்சிலிர்க்க வைக்கிறது.உடனடிப் பாராட்டும் உணர்வித்தலும் தள்ளிப் போக மனதில் வைத்து மதிப்பீடு செய்து கொள்வதும் அதன் மூலம் மனித ஆன்மத் தேடலைக் கைக்கொள்வதும் பின்பு சாதாரணமாகிப் போகிறது. இந்த சாதாரணம் கவிதைப் படிமமாய் நிற்கிறது சில படங்களில்.

பூட்டான் போன்ற சிறு நாடுகளிலிருந்து வரும் படங்கள் நம் தமிழ் படங்களை முன்னிருத்தி தாழ்வு மனப்பான்மையை உருவாக்குபவை. இளம் தலை முறையிலிருந்து வந்திருக்கிற இயக்குனர் நோர்புவின் படங்கள் நூறு வருட தமிழ் திரைப்படத்தை சில விடயங்களில் கேள்விக்குள்ளாக்குபவை.நிதானமும் அழகும் புதுத்திரைப்பட மொழியும் உயர்ந்த படங்களை உருவாக்கும் சாத்தியங்களை காட்டுகின்றன். நோர்புவின் இந்த நேர்த்தி அழகிற்குக் காரணம் அவரின் முந்தைய ஈடுபாடுகள்தான்.கவிஞர்களும், யோகிகளும் கலந்த குடும்பம் அவருடையது. புத்த மடங்களும் புத்த மதம் சார்ந்த வெவ்வேறு வகையான நிறுவனங்களும் அவரின் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டவை. பத்தொன்பது வயது வரை புத்த பிட்சுவாக இருந்தபோது முதல் திரைப்பட அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். இந்தியாவில் ரெய்மண்ட் ஸ்டெயினர் குழந்தைகள் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது அவரிடம் புகைப்படம் மற்றும் கேமிரா சார்ந்த பால பாடத்தை கற்றார். தொண்ணூறில் பெர்னாடோ பெர்ட்லூசியின் ” லிட்டில் புத்தா”வின் தயாரிப்பு அவருக்குத் தந்த அனுபவங்கள் தனது நாட்டுத் திரைப்படத்தை இயக்கும் உந்துதல்களை அளித்திருக்கிறது. “கப்” என்ற படம் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ” டிராவலர்ஸ் அண்டு மாசிசியன்ஸ் ” என்ற படமும் பூட்டானிலிருந்து வெளியாகியிருக்கிறது.

புத்த மடத்தில் வேலையில் இருக்கும் டான்னப்பிற்கு தினமும் எதிர்பார்க்கும் கடிதங்கள் அங்கிருந்து அவன் இன்னும் வளமையான நாட்டிற்கு செல்லும் கனவுகளைக் கொண்டிருக்கின்றன. மடத்தின் ஒழுங்கு, இயற்கை சூழல் என்பதெல்லாம் அவனை ஆகர்சிப்பதில்லை. அவனின் ஆசை அமெரிக்காவிற்குப் போவது. ஆப்பிள் பொறுக்கும் வேலையாக இருந்தாலும் அதை அமெரிக்காவில் சென்று நிறையப் பணத்தைக் கண்களால் பார்த்து ஆனந்திக்கிற கனவுகள் அவனை அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றன. வரும் ஒரு கடிதத்தை நம்பி கிளம்பி விடுகிறான். அவசர கதிப்பயணம், பேருந்திற்காகக் காத்திருக்கிறான். வந்து சேராத பேருந்திற்காகக் காத்திருப்பவர்கள் அறிமுகமாகிறார்கள். ஆப்பிள் விற்பவன், சாமியார், தாள் தயாரிப்பவனும் அவனது இளம் மகள் சோனமும்.

புத்த சாமியார், டாண்டப்பின் திமிறிக் கொண்டிருக்கும் எண்ணங்களும் அலைபாய்தலும் அறிந்து ஒரு கதை சொல்கிறார். அது இரண்டு சகோதரர்கள் குறித்தது. ஒருவனின் செயலும் எண்ணங்களும் கூர்மையானதாக அமைந்திருக்கின்றன். மந்திரவாதியாகிற எண்ணமும் அவனுக்கிருக்கிறது. அவனின் சகோதரனுக்கு மந்திரத்தில் ஆர்வம் இல்லை. கட்டுக்கடங்காமல் ஓடும் குதைதிரையாய் அடர்ந்தக் காட்டிற்குள் செல்கிறான். ஒரு கிழவனையும் இளம் பெண்ணெருத்தியையும் சந்திக்கிறான். கிழவனைக் கொன்று விடுவது அவசியமாகிறது. விசமூலிகைகளைக் கொடுத்து கொல்ல முயல்கிறான். பிறகு பயந்து அடர்ந்தக் காட்டிலிருந்து வெளிவர முயன்று அலறுகிறான்.

அடர்ந்தக் காட்டின் அழகும் இளமையின் பாலியல் உணர்வுகளும் இளம்பெண்ணை அடைவதற்கான அவனின் போராட்டங்களும் மந்திரவாதியாக விரும்பாதவனின் உலகமாக் மாறி விடுகிறது. ஆனால் மந்திரம் கற்றுக் கொள்ளும் இன்னொரு சகோதரனுக்கு வாழ்க்கை இயல்பாய் இருக்கிறது.

புத்த சாமியார் இக்கதையை பல்வேறு பிரிவுகளாய் சொல்கிறார். பேருந்து கிடைக்காமல் காத்திருக்கும் போதும், லாரி ஒன்றில் ஏறி பயணம் செய்யும் போதும், இரவில் தீ மூட்டி ஏகாந்தத்தை அனுபவிக்கிற போதும், நடந்து கொண்டே பயணப்பாதையைக் கடக்கிற போதும் ஓய்வெடுக்கிற போதும் என்ற வகையில். சோனம் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக் பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாதவள். அவளின் இளமை அழகு அவனை கவருகிறது. புத்த சாமியாரின் கதையும் சோனாவின் அழகும் அவனைக் குழப்பத்திலாழ்த்துகிறது.

மலைப்பகுதியின் அபரிமிதமான அழகும், அதன் இன்னொரு புறமாய் அடர்ந்தக் காட்டின் விசித்திரங்களும் இப்படத்தை வசிகரமாக்குகின்றன. வாழ்ககையின் நிலையில்லாதத தன்மையின் மத்தியில் நிலையான இயற்கை ஆறுதலும், நிம்மதியும் தரும் கணங்களை அனுபவப்படுத்துகிறவை ஒவ்வொரு காட்சியும். ஜென் கவிதைகள் தரும் பூடகமாயும், படிமங்களாயும் இப்படம் அமைந்திருக்கிறது.

நோர்புவின் முதல் படமான ” கப் ” வெளிவந்த போது ஏற்படுத்தின பரபரப்பு இன்னும் அடங்கவில்லை.
பூட்டானிலிருந்து முதல் படம் என்ற அளவில் புத்த மடாலயங்களை மையமாகக் கொண்ட கட்டுடைத்தலாகவும் அமைந்து விட்டிருந்தது. துறவும் தத்துவமும் மட்டுமல்ல குதூகலமும் வாழ்க்கையின் அர்த்தத்தை முழுமையாக்குகிறவை மடாலயங்கள் என்றக் கருத்து சுலபமாக நிலை கொள்ள ஆரம்பித்தது. வணிகமும், சீரழிவும் சாதாரணமாகிப் போன வல்லரசு நாடுகளின் திரைப்படங்களுக்கு சவால் விடுகிற வகையிலும் “கோப்பை” அமைந்திருந்தது.மடாலயங்களோ மத நிறுவனங்களோ நவீன வாழ்க்கையின் பாதிப்புகளை உள்வாங்கிக் கொள்ளாமல் தனித்து இயங்க முடியாது என்பதை சாட்சியாக்கியது.
1998 உலகக் கோப்பைக்கான கால் பந்துப் போட்டி நடந்து கொண்டிருந்த போது உலகம் ஒரு வகை காய்ச்சலால் பீடித்திருந்தது.செய்தித்தள்களும் பொதுவான ரசிகர்களின் பகிர்வில் உலகக் கோப்பை பற்றினச் செய்திகளும் சாதாரணமாகியிருந்த காலம். தர்மச்சாலாவில் இருக்கும் புத்த மடாலாயத்திற்கு இரண்டு திபேத்திய அகதிகள் வந்து சேர்கிறார்கள். இவர்கள உலகக் கோப்பையை தொலைக்காட்சியில் பார்த்து விடுகிற தீர்மானத்துடன் பக்கத்து கிராமத்திற்கு தொலைக்காட்சி பார்க்க செல்கிற செயல்கள் திருப்தியளிக்கவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு வர வைப்புத்தொகை கட்ட சிரமப்பட வேண்டியிருக்கிறது. உலகக்கோப்பை ஜீரம் மற்ற புத்தத் துறவிகளுக்கும் பரவவே மாடாலயத்தின் மரபு ரீதியான சம்பிராதயங்கள் உடைந்து நொறுங்கும் சந்தர்ப்பங்களை மெளனமாக ஏற்றுக் கொள்கிறார்கள்.இந்தியாவின் அருகாமையிலிருந்து இவ்வளவு நேர்த்தியான படம் என்ற அளவிலும் இந்திய திரைப்படத்திற்கான சவாலாகவும், வெற்றுத் தூண்கள் நொறுங்கும் சந்தர்ப்பங்களை வெளிக்காட்டுகிற தருணங்களாகவும் பூட்டானின் படங்களின் வருகை அமைந்திருக்கிறது.


சுப்ரபாரதிமணியன்
srimukhi@sancharnet.in

Series Navigation