பூச்சாண்டி இதழ் – சாருநிவேதிதாவிற்கு கோபால் ராஜாரமின் பதில் குறித்து

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

ஆனந்த கணேஷ், வை


இந்த வாரத் திண்ணையில் (April 2, 2009) கோபால் ராஜாரமின் ”திண்ணைப் பேச்சு : அன்புள்ள சாரு நிவேதிதா” கட்டுரை கண்டேன்.

படிக்க படிக்க சந்தோஷம் பெருகுகிறது.

திண்ணை இதழின்மேல் சாருநிவேதிதா வீசி எறியும் குப்பைக் கூளங்களைக் காணும்போதெல்லாம் நெஞ்சம் கொதித்த விடுதலை விரும்பிகளுக்கு இந்தக் கட்டுரை ஆறுதல் அளிக்கிறது.

சாருவின் இந்த சாக்கடை பூசும் வேலை குறித்து திண்ணைக்கே எழுத என் விரல் துடித்தது. இருப்பினும், திண்ணை தன்னுடைய கையாட்களை வைத்து சாருவிடம் பேசுவதுபோல் அது திரிக்கப்பட்டுத் திண்ணையின் நேர்மைத் திறத்திற்குக் அபவாதம் வந்துவிடுமோ என்ற தயக்கத்தில்தான் எதுவும் எழுதாமல் கோபத்தில் கொதித்துக்கொண்டு இருந்தேன்.

கோபால் ராஜாராம் பதிலளித்தமைக்கு நன்றி. அவர்தான் பதிலளிக்க வேண்டும்.

மற்ற எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும், படைப்புகளையும் கட்டுடைப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சாரு நிவேதிதாவினால், தன்னுடைய பிம்பம் (அதாவது, சுய விளம்பரம்) உடைபடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாமல், சேறுவீசி திருப்திப்பட்டுக் கொள்ளுகிறார்.

திண்ணை இதழை “இந்துத்துவ இதழ்” என்று ஒரு முத்திரை குத்திவிடுவதன்மூலமாகவே அழித்துவிட நினைக்கிறார் சாரு. அப்படி ஒரு முத்திரை பெறுவது முன்பெல்லாம் ஒரு தனிமனிதரை அல்லது அமைப்பைச் சமூகத்தில் இருந்து பகிஷ்கரித்துவிடும் நிலைக்குக் கொண்டு செல்லும் மிக அபாயகரமான ஆயுதமாக இருந்தது. ஆனால், இப்போது தமிழர்கள் மத்தியில் அது ஒரு கெட்ட வார்த்தை இல்லை.

“பூச்சாண்டி வருகிறது பூச்சாண்டி வருகிறது, கதவைச் சாத்து !!” என்று மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு அலுத்துப் போய் பூச்சாண்டியைப் பற்றி அறியும் ஆர்வம் ஏற்பட்டு விட்டது. பல கதவுகள் இப்போது மூடப்படுவதில்லை. பூச்சாண்டி அறிவிப்புச் செய்பவர்கள்கூட வாசற் கதவுகளைச் சாத்திவிட்டு, சன்னல் கதவுகளை ஒருக்களித்துத் திறந்து வைத்திருக்கிறார்கள்.

இந்துத்துவம் என்பது கம்யூனிசம் போலும், காந்தியவாதம் போலும், இஸ்லாமியம் போலும், எவாஞ்சலிக்கம் போலும், திராவிட இயக்கம் போலும் மற்றொரு சமூக-அரசியல்-பொருளாதார தத்துவம் என்று தமிழ் மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள். இந்துத்துவம் என்பது மற்ற அரசியல் நிலைப்பாடுகள் போலவே நிறை குறைகள் உள்ள ஒரு அரசியல் தத்துவம் என்ற தெளிவும் அவர்களுக்கு இருக்கிறது.

மாறிவிட்ட இந்தச் சூழலைப் புரிந்துகொள்ளாமல் மொன்னையாகிப்போன ஒரு ஆயுதத்தை சாரு நிவேதிதா ப்ரயோகித்திருக்கிறார். திண்ணையை “பூச்சாண்டி இதழ்” என்று எழுதி வருகிறார். வருத்தம் ஏற்படுகிறது.

ஏனெனில், நிகழ்கால உண்மைகளை, மாற்றங்களை உணராமல் உயிரற்ற பாசிச இலக்கியத்தின் வெற்றுத் தொடர்ச்சியாகவே சாருவின் வாழ்வும் இலக்கியமும் வீணாகிக்கொண்டிருக்கின்றன. உயிருள்ள மனிதர்களின் உயிரோட்டமான வாழ்க்கையின் பலதளங்களை அவரது படைப்புகள் தொடமுடியாமல், உயிரற்ற மனிதர்களின் இடுப்புக்குக் கீழே அவை தவிக்கின்ற நிலைக்கும் இதுதான் காரணம்.

சாருவின் படைப்புகளில் சில எனக்குப் பிடிக்கும். பல எனக்குப் பிடிக்காதவை. இந்த இரண்டு எதிரிடை நிலைகளும் என் ஒருவனுடைய நிலைப்பாடாக இருக்க முடிகிறது, அதை என்னால் வெளிப்படையாகச் சொல்லவும் முடிகிறது; விவாதிக்கவும், மாற்றிக்கொள்ளவும், திருத்திக்கொள்ளவும் நான் அனுமதிக்கப்படுகிறேன் என்பது மனித சுதந்திரத்தின் அடையாளம்.

திண்ணை இதழில் மட்டும்தான் இங்கனம் அனைத்துவித கருத்துக்களும் இடம் பெறுகின்றன. இஸ்லாம் என்பது அரக்கமார்க்கம் என்று ஒருவர் எழுதினால், மற்றொருவர் இஸ்லாம் அமைதிமார்க்கம் என்று எழுதுகிறார். ஒருவர் கிருத்துவத்தினால் எழுந்த நன்மைகளை எழுதினால், மற்றொருவர் தீமைகளை எழுதுகிறார். கம்யூனிசம் குறித்தும், கேப்பிட்டலிசம் குறித்தும் எதிரிடையான கருத்துக்களை நாம் திண்ணையில் மட்டுமே காண முடியும். இந்த எதிரிடைப் பார்வைகள் தவிர்த்து தங்களுடைய சொந்தக் கோணங்களில் ஒரு விஷயத்தை எழுதவும் திண்ணை இடம் அளிக்கிறது. இதைப் போன்ற இலக்கியத்திற்கான ஒரு திறந்த வெளி, சுதந்திர இந்தியாவில் இதுவரை எங்கும் ஏற்பட்டதே இல்லை. வெற்றிகரமாக இயங்கியதுமில்லை. இத்தகைய திறந்த வெளி மனித வளர்ச்சிக்கு, மனிதப் பரிமாணங்களின் பரிணாமத்திற்கு மிக அவசியம்.

ஏனெனில், மனித வாழ்க்கையானது புரிந்துகொள்ளுதலைத் தொடர்ந்து செய்து வருகிறது. இங்கனம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுவதற்கு ஒரு கட்டற்ற திறந்த வெளி தேவை. விவாதங்களும், உரையாடல்களும் புரிதலைச் செம்மைப் படுத்துகின்றன. இது ஒரு தொடர் நிகழ்வு. தடையுறாமல் நிகழ வேண்டியது.

இப்படிப்பட்ட ஒரு திறந்த மனப்பான்மையுடன் இயங்கும் திண்ணையை இந்துத்துவ குழு என்று சொல்லுவதன்மூலம் சாரு இந்துத்துவத்திற்கு நல்ல பெயரைத் தந்துவிடுகிறார். ஆனால், அவருக்கு அது புரிகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை வேண்டும் என்றே செய்கிறாரோ?

நாளைக்கே மங்களூர் மாவீரன் முத்தாலிக்கின் தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக அவர் அறிவிக்கப்பட்டால் அது எனக்கு அதிர்ச்சி தராது. இருவருக்கும் பப்கள் (அதாவது, வெளிநாட்டுச் சாராயங்கள் விற்கப்படும் இடங்கள்) பிடித்தமான நிலப்பகுதிகள். மேலும், முத்தாலிக்கின் ”ம்யூட்டண்ட்-இந்துத்துவ”த்திற்கும், சாருவின் ”மார்க்கஸிய-போலி செக்யூலரிச-திராவிட புரட்சிக்கார” உணர்வுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. இவை இரண்டுமே நல்ல நோக்கங்களை முன்வைத்துப் பரப்பப்படுகின்றன. ஆனால், இறுகிப்போன கருத்துக்களை மனிதர்களின்மேல் திணித்து உயிரற்ற நடைபிணங்களை மட்டுமே இவற்றால் உருவாக்க முடியும்.

ம்யூட்டண்ட்-இந்துத்துவமும், சாரு பின்பற்றும் ”மார்க்கஸிய-போலி செக்யூலரிச-திராவிட புரட்சிக்கார” உணர்வும் ஒரு ஊடகம் சார்புடன் மட்டுமே இயங்கவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றன. சார்பற்ற ஊடகங்களை, பற்றற்ற நிலைப்பாடுகளை அவற்றால் சகித்துக்கொள்ள முடியாது. இது சாருநிவேதிதாவினுடைய பிரச்சினை மட்டுமல்ல. இந்தியா முழுவதும் பரவியுள்ள பாசிச மனப்பான்மையின் வெளிப்பாடுதான் சாருவின் இந்த நிலைப்பாடு.

கோபால் ராஜாராமின் இந்தக் கடிதத்தைக் கண்டித்து சாரு நிவேதிதா ஒரு கட்டுரை எழுதித் திண்ணைக்கு அனுப்பினால் அதைத் திண்ணை வெளியிடும். ஆனால், சாருநிவேதிதாவின் இணைய தளத்தில் நாம் இரண்டு விஷயங்களை மட்டும்தான் காண முடியும். வியாபார நிறுவனங்களின் விளம்பரங்கள், சாருநிவேதிதாவின் விளம்பரங்கள்.

சாருநிவேதிதாவிற்கு திண்ணை போன்ற ஒரு கட்டற்ற இலக்கிய வெளி கசப்பைத் தருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஆனந்தத்துடன்,
ஆனந்த கணேஷ், வை.

பின்னறிவிப்பு: இக்கடிதத்தை சாருவிற்கும் Cc செய்துள்ளேன். Cc செய்வது அவருக்குப் பிடிக்கும்.

Series Navigation

ஆனந்த கணேஷ், வை

ஆனந்த கணேஷ், வை