புலம் பெயர் வாழ்வு 10 – மதம் ?

This entry is part [part not set] of 39 in the series 20060512_Issue

இளைய அப்துல்லாஹ்லண்டனில் அண்மையில் எனது நண்பர் ஒருவரின் திருமண வீட்டு;க்கு சென்றிருந்தேன். என்னும் பகுதியில் வீட்டில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சொல்லி செய்யப்பட்ட எளிமையான திருமண விருந்து. அவர் கவலையாக இருந்தார். விசாரித்த பொழுது சொன்னார். “மூத்தக்கா டென்மார்க்கில் இருந்து வரவில்லை” ஏன்? “அவ மதம் மாறிட்டா. மாறின மதக்காரர் மிகக் கடுமையாக அனுஷ்டிக்கிறவை. தோடு, சங்கிலி போடமாட்டினம். வெறுங்காதும் கழுத்துமாகத்;தான் திரிவினம். ஆசைப்படமாட்டினம். கலியாணங்காட்சிகளுக்கு போகமாட்டினம். அப்படியான சாப்பிட்டுவீடுகளிலை கலந்து கொள்ளமாட்டினம். அது சொந்தக்காரராக இருந்தாலும் சரிதான். இரத்தச்சொந்தம் பார்க்க மாட்டினம். வானத்தில் இருந்து தேவ ஒளியை தரிசிக்கினமாம். என்னோடு மிகவும் பாசமான மூத்தக்கா. ஊரிலை இருக்கும் போதும் இங்கை வந்தாப்பிறகும் தம்பீ… தம்பீ… என்று உருகி பாசமா இருந்தவா. எல்லா ஒட்டுறவும் இல்லாமல் போச்சுது…” கண்கலங்கிவிட்டார் நண்பர்.
பாசம் அவரை அழவைத்தது. மதம் பற்றிய அக்கறை தமிழர்கள் மத்தியில் மனப்பூர்வமாக ஆழமாக வேரூன்றாமையே மத மாற்றத்திற்கும் பிறழ்வுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. பல மதக்குழுக்களின் தொடர்ச்சியான அணுகுமுறையின் காரணமாக மற்றும் தொடர்கவனிப்பின் காரணமாக பல நூறு இந்துக்கள் கிறிஸ்தவமதத்துக்கு செல்கிறார்கள். இது ஐரோப்பாவில் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இந்து மதம் தொடர்பான தன்நிலை அக்கறையை கோவில்கள் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தாமல், மக்கள் பற்றிய அக்கறை இல்லாமல் இருப்பதும் ஐரோப்பாவில் பல இலங்கை இந்துக்கள் மதம் மாறுவதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றன.
வெறும் பணம் சேர்க்கும் அக்கறையோடு மட்டும் இருக்கும் ஆலயங்கள், இந்து மதத்தைக் காப்பாற்றும், பேணும் எந்தத் திட்டங்களையும் கொண்டிருக்கவில்லை. பல நூறு சம்பவங்கள் எங்கள் கண்களுக்கு முன்னாலேயே நடக்கின்றன. தமிழர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றமையும் பணத்திற்கு கஷ்டப்படுகிற தன்மையையும் மிக அவதானமாக இனங்காணும் அமைப்புகள் தமது நுணுக்கமான வலைப்பின்னலூடாக தமிழர்களை மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு இயங்கும் குறித்த அமைப்பு ஒன்று தமிழர்களால் அறியப்பட்ட அமைப்பு, புலம் பெயர்நாடுகளில் கஷ்டப்படுகிற தமிழர்களை இனங்கண்டு தொடர்ச்சியாக அவர்களின் வீடுகளுக்குப் போய்ச் சந்திப்பதன் மூலம் இயேசுவிடம் அழைத்துச் செல்வதாக வாக்குத்தத்தம் செய்து பணம் தேவையெனில் அதனையும் கொடுத்து நாசூக்காக தமது திட்டமிட்ட கருமங்களையாற்றி வருகின்றது. பலரும் இந்த வலையில் விழுந்து விடுகின்றார்கள்.
மதம் என்பது ஒவ்வொருவரினதும் சொந்த விருப்பம். அதனைக் கேட்பதற்குயார் இவர்கள்? என்ற தனிமனித சுதந்திரகேள்விகளுக்கு அப்பால் சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் ஏற்படும் பிறழ்வுகளுக்கும் நெருக்குதல்களுக்கும் சமூகம் மாட்டுப்படும் ஒரு பேரபாயம் இருக்கிறது.
ஜேர்மனியில் வெற்றிலைக் கேணியைச் சேர்ந்த ஒரு இளைஞனும் அதே இடத்தைச் சேர்ந்த யுவதியும் திருமணம் முடித்து இரண்டு பெண் குழந்தைகளுக்கு பெற்றோராக இருந்த போது…
புலம்பெயர் நாட்டில் வீடு, வீட்டுவாடகை, செலவு சித்தாயங்கள் மிகவும் அதிகமாக இருக்கும் ஒரு சூழ்நிலை அழுத்தும்போது சிலரால் மீள முடியாத பணக்கஷ்டம் ஏற்படும் பொழுது தாங்க முடியாமல் தவித்துப் போய் விடுவார்கள். அப்படி எத்தனையோ அகதிகளைக் கண்டிருக்கிறோம்.
அப்படி ஒரு பணக் கஷ்டத்தினை நீக்க வந்த அமைப்பு ஒன்று மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியது. அவர்களும் வேறுவழியின்றி மதம் மாறிவிட்டனர். பணம் கிடைத்தது சிறிது காலம் கூட்டங்கள். ஆராதனைகள் என்று வாழ்வு கழிந்து போனது. பென்ஸ்காரிலும் படாடோப வீடுகளிலும் வாழும் நல்ல குரல் வளமுள்ள கோட் சூட் போட்ட தமிழ் பாதிரியார் ஒருவர் இவர்களை வழிநடத்துவார். தேவ அருள் அவர்கள் மூலமாகவே வருவதாகவும் அவர்கள் சொற்படியே நடக்க வேண்டும் என்றும் வலியுத்துவார்கள்.
பிரசாரத்துக்கு இந்தப் பெண்வேறொரு ஆணுடன் இணைத்து அனுப்பப்பட்டபோது தான் குடும்பத்தில் பிரச்சினை எழுந்தது. கணவன் போகவேண்டாம் என்று சொல்ல மனைவி மதத்தில் ஊறித் திளைத்துவிட்டவளாக மாறிவிட்டாள்.
மனைவியோ செக்கும் சிவலிங்கமும் ஒன்றாகவே தெரியும் ஆத்மார்த்த நிலைக்குச் சென்றுவிட்டார். மனித அற்பனாக கணவனைக் கண்டார். கணவனுக்கான பணிவிடை செய்வதை நிறுத்தி தேவனுடைய பிரசாரப்பணிகளுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்.
விரக்கியடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டான். சபை கைவிட்ட நிலையில் மனைவி பைத்தியமாகி ஒரு மூலையில் வீட்டில் வெறித்த பார்வையினளாய் இருக்கிறார். கண்டேன். பிள்ளைகள் அநாதைகளாக….
இந்துமதம் மீதான நம்பிக்கையீனம் இந்துக்களிடையே அதிகரித்து வருகிறது. இளையசமுதாயத்தினர் மத்தியில் அவர்களுக்கு புரியும் மொழியில் ஆத்மீகம் சொல்லப்படுவதில்லை.
“தேவாரத்தைப் பாடமாக்கு..” என்றுவிட்டு பெரியவர்கள் தங்கள் தங்கள் வேலையில் ஈடுபட்டு விடுகிறார்கள். குழந்தைகளுக்கான தெளிவான ஒரு சமய பாடப்புத்தகங்களோ விளக்கங்களோ இல்லை. அடுத்த தலைமுறை கலாசாரத்தை மதத்தை விட்டு ஓடப்போகிறதே என்ற கவலையும் ஏக்கமும் கொண்டோர் அதனை விளக்குவதற்கான எந்தக் கரிசனையும் இல்லாமல் இருக்கின்றனர்.
எனக்குத் தெரிந்த ஒரு பிரபல நடிகரின் குடும்பத்தில் இந்த மத மாற்றத்தால் ஏற்பட்ட ஒரு உயிரிழப்பைப் பார்த்து அதிந்து போனேன்.
கணவனுக்கு சுகவீனம்… கொடூரமான வருத்தம். தனியறைக்குள் கணவனைப் ப+ட்டி வைத்துவிட்டு யாரையும் மனைவி பார்க்க அனுமதிக்காமல் “செபம்” மட்டும் செய்து குணமாக்க முடியும். “தேவன்” குணமாக்குவார் என்று சொல்லி “செபம்” பண்ணிக்கொண்டிருக்க 41 ஆவது நாள் கணவன் மருந்து கொடுக்கப்படாமல் அநியாயமாகச் செத்துப்போனான்.
ஆத்மீக பலம் பற்றிய கேள்விகளுக்கு அப்பால் எமது கலாசாரம் மற்றும் உயிர்கள் மீதான அதீத துணிச்சலால் வரும் அசட்டுத் தனத்தை இந்த புதிய மதங்கள் தோற்றுவிப்பதால் எத்தனையோ பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எத்தனையோ பேர் நோய் வந்து மருந்து உட்கொள்ளாமல் செத்துப்போகிறார்கள்.
இது ஒரு வகையில் இந்து மதம், மற்றும் தமிழர்கள் மீதான அடர்ந்தேறு முறைதான். இதனை இப்படியே தொடரவிடுவோமானால் புலம்பெயர் சூழலில் ஒரு மத மற்ற பைத்தியக்காரத் தமிழர்களையே எம்மால் மிச்சமாகப் பார்க்க கூடியதாக இருக்கும்.
இளைஞர்கள் மதம் தொடர்பான எந்த அக்கறையும் இல்லாமல் தம் மனம் போன போக்கில் நடந்து கொள்கிறார்கள். அடுத்த சமுதாயம் இந்து சமயத்தைத் தெரியாமல் வாழப் பழகிக் கொண்டுவிட்டது. அது ஒரு மதமற்ற சமுதாயமாகவே இருக்கப் போகிறது. அதனை யாராலும் தடுத்து விட முடியாது. இதற்கான எந்தச் செயற்பாட்டிலும் ஈடுபடாமல் வெறும் கூட்டங்களாலும் மாநாடுகளாலும் எந்தச் சாதனையையும் இந்து அமைப்புக்கள் செய்யப் போவதில்லை.
அடுத்து, இந்து சமய வழிபாட்டு முறைகள் மீதான இலகுபடுத்தல் அல்லது இளைஞர்களை மத அனுட்டானங்கள் மீதான ஆர்வத்தைத் தூண்டுதல் நடைபெறுவதில்லை.
“எனக்கு கோவிலுக்கு போக முடியாது ~காபெட|;ஒரே மணம்” என்று ஒரு வாலிபன் சொல்லி அசூசைப்பட்டான். கோவில்கள் சுத்தம் பேணும் விசயத்தில் எந்தவித அக்கறையையும் செலுத்துவதில்லை என்ற குறைபாடு லண்டனில் உள்ள பல கோவில்களில் இருக்கிறது. எல்லா நேரமும் சுத்தமாக இருந்து பழகியவர்கள் இளைஞர்கள். சுத்தமில்லாத கோவில்களுக்கு வரவிருப்பப்படுகிறார்களி ல்லை.
சமய வகுப்புகளில் “தோடுடைய செவியன் விடையேறியோன்…” சொல்லிக் கொடுப்பதே பெரிய விடயம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றர்.
சேரும் ஆயிரக்கணக்கான யுரோக்கள் அல்லது பவுண்களை பணவசதி குறைந்தவர்கள் நோயாளிகளை, அவர்கள் இனங்காண முதல் சைவ சமய அமைப்புகள் இனங்கண்டு உதவி செய்வது கடமையாகும். அப்பொழுது பணத்துக்காக அதன் கஷ்டத்துக்காக இந்து மதத்தை விட்டு மாறும் இலங்கையரை கொஞ்சமாவது காப்பாற்ற முடியும்.
இப்பொழுது இந்தப் பிரச்சினை எத்தனையோ சந்தோஷமாய் இருந்த குடும்பங்களை, உறவுகளைப் பிரித்து வைத்திருக்கிறது. இப்படி சுகதுக்கங்களில் கலந்து கொள்ளாதவர்களுடைய குடும்பங்கள் இலங்கையில் இருக்கும் அவர்களது உறவினர்களையும் பிளவுபடுத்துகிறது.
தமிழர்கள் இனம், சாதி, இடம், பிரதேசம் என்று பிளவுபட்டும் போய் இப்பொழுது முளைக்கும் மத மாற்றத்தால் புலம்பெயர் நாடுகளிலும் அதன் தொடர்ச்சியாக இலங்கையிலும் பாரிய குடும்ப பிளவுகளைப் பார்க்கிறோம்.
கூட்டுக்குடும்பமாய் வாழந்த எமது உறவு முறைகள் இதன் தொடர்ச்சியாய் சின்னாபின்னப்பட்டுப் போய் வருவதனை நேரில் காண்கின்றோம்.
இப்பொழுது எனது நண்பரின் அக்காவுக்கு அவரது குடும்பத்துக்குமான உறவு அறுபட்ட நிலையில் உள்ளது. லண்டனிலும் இலங்கையிலும்….
பிள்ளைகள் தாய் தந்தையரின் சொற்களைக் கேட்கத் தயாராக இல்லை. மதம் மாறிய அல்லது புதிய மதத்தில் சேர்ந்த அம்மாவும் அப்பாவும் தேவ அழைப்பினை மேற்கொள்ளச் செல்ல, பிள்ளைகள் எதுவுமறியாது மன நிம்மதியாக பியர் காடின்களை நோக்கிப் போகின்றர்.
ஆகவே, இந்து சமயக் காவலர்கள் இது தொடர்பான அக்கறை கொள்ளாவிடில், அடுத்த எமது தமிழ்த் தலைமுறை மதமற்ற ஒரு தலைமுறையாக வளருவதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டி வரும்.

இளைய அப்துல்லாஹ்

anasnawas@yahoo.com

Series Navigation

author

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்

Similar Posts