புறநகர் காண்டா வாளிகளின் கதைகள்

This entry is part [part not set] of 34 in the series 20080424_Issue

கே.பாலமுருகன்



நகர் பிரக்ஞை 1
சுங்கைப்பட்டாணி பட்டணம் அந்த வெயில் பொழுதின் கனமான பேரிரைச்சலுக்கு நடுவே மனித இயக்கங்களோடு சுழன்று கொண்டிருந்தது. சாலையில் இறங்கி வெயில் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. கோயில் பக்கத்தில் ஒரு மரம் நேற்றிலிருந்து அதிகமான இலைகளை உதிர்த்து, அந்த இடங்களை அசுத்தபடுத்தியிருக்க வேண்டும். அப்படிதான் அந்தப் பக்கம் நடந்து போகிறவர்கள் பிதற்றிக் கொண்டார்கள். கோயிலையொட்டி ஒரு பழைய பன்றி அறுப்பு கொட்டகை. எப்பொழுதும் ஒர் அருவருப்பான நெடி.
“ யேன் பாட்டி, இந்தப் பக்கமா போனாதனே நீ இருந்த எஸடேட் வரும்?”
“ எத சொல்றா? அந்தா அங்க தெரியுதே அந்த ரோடா?”
“ஆமாம், அங்கதான், தாத்தா முன்ன அடிகடி சொல்வாரு இந்தப் பக்கம் நடந்து போறப்பலாம்?”
“இருந்துச்சு. . . இப்ப எங்க, படுபாவிங்க அதான் எல்லாத்தையும் வெரட்டி அடிச்சி. . ஒன்னுமே இல்லாம போச்சே. . அந்தக் கித்தா காடு நெனப்பாவே இருக்குடி”
“யேன் பாட்டி ஒரு பெரிய கொட்டாய் மாதிரி அங்க இருக்குமாமே, உண்மையாவா? அது வீடு இல்லையாம்?”
“ எது சொல்ற? அந்தத் தோட்டத்துக்கு வெளில இருக்குனு சொல்லுவாங்களே, அதா?”
“ஆமா ஆமா அதான். என்னா கொட்டாய் பாட்டி?”
“அது பெரிய கதைடி, நாங்களாம் அந்தக் காலத்துலேயே அந்த இடத்துக்குப் போகவே பயப்புடுவோம். . தூரத்துல நிண்டுகிட்டே அந்த கொட்டாய் பத்தி என்னனமோ கற்பன பண்ணிக்குவோம்”
“சொல்லு பாட்டி. யார் கொட்டாய் அது?”
நகர் பிரக்ஞை 2
சாப்பாட்டுக் கடையிலிருந்து ஒரு கிழவி ஊதிவத்திகளைச் சுமந்து கொண்டு வெயிலில் கறுத்து போன முகத்துடன் அவர்களைக் கடந்து கொண்டிருக்கிறாள். மஞ்சள் புடவையுடன் நெத்தியில் அகலமான பொட்டு. அவளை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. புடவையின் தளர்வு நன்றாகத் தெரிந்தது.
“ அது ஆம குத்துக் கிழவனோட கொட்டாய்”
“ஆம குத்துக் கிழவனா? யார் பாட்டி அவன்?”
“ அவன் மட்டும்தான் அங்க தனியா இருந்தான், அந்தக் கொட்டாய்ல ரொம்ப நாளு, தரையில ஓடறதலாம் கம்பிலே குத்தி குத்தி, வீட்டுல அடுப்பல போட்டு வேக வச்சு சாப்பிடுவானாம்”
“ஆமையையும் சாப்டுவானா? ஐயோ”
“ஆமாம் அப்படித்தான் நினைக்கறேன், ஆமையோட ஓட்டைலாம் அவன் வீட்டுப் பின்னால ஒரு குழியில நாங்க சின்ன பிள்ளையா இருக்கறப்பா பார்த்துருக்கோம்,”
“அவன் என்னா வேலை பாட்டி செஞ்சான்?”
“ அவனோட வேலையே காண்டா கம்பு செஞ்சு விக்கறதுதான்”
“காண்டா கம்பா? அப்படினா?”

நகர் பிரக்ஞை 3
இப்பொழுது பட்டணச் சாக்கடை ஓரமாக ஒரு பைத்தியக்காரப் பெண் கால்களை வசதியாகச் சாக்கடையின் விளிம்பில் வைத்துக் கொண்டு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தாள். பாவாடை முழுவதும் ஏதோ குப்பை தொட்டியில் உருண்டு புரண்டியது போன்ற அடையாளங்கள்.
“ காண்டா கம்பு தெரியாதா? அதான் நம்ப வீட்டுப் பின்னால கிடக்குதே பாதி ஒடஞ்சி போன பழைய கம்பு, அதுதான் முன்ன காண்டா கம்பு”
“அதுல என்னா செய்வீங்க பாட்டி?”
“அதுலதான் பால் வாளிய மாட்டிகிட்டு மரத்துலேந்து ஆளக்கரைக்கும் பால் கொட்டாய்க்கும் தூக்கிகிட்டு வருவோம்”
“ஆளக்கரையா?”
“எங்க தோட்டத்துக்கு போனா, ஒவ்வொரு தீம்பாருக்கு எடையிலே ஒரு பால் கொட்டாய் ஒளிஞ்சிருக்கும்டி. . அப்பறம் ஆத்தாங்கர பக்கம் போனா ஒரு ஆளக்கர இருக்கும். . பால் நிறுக்கற இடம், முன்ன அங்கதான் பாலைலாம் தொட்டில ஊத்தி வைப்போம், உறை கட்டுவோம், அப்பறம் அதெல்லாம் இல்லாம போச்சு”
“அங்கதான் இப்ப கோசமா இருக்கே பாட்டி?. . தாத்தா சொன்னாரு”
“இப்பதாண்டி, முன்னலாம் ஆளுங்க இருந்தாங்க, வெள்ளக்காரன் இருந்தப்பா ரொம்ப சந்தோஷமா வேல செஞ்சிகிட்டு காசுலாம் அதிகம் பாக்கலாம்”
“அப்பறம் என்னாச்சு பாட்டி?”
“அப்பறம் என்னா, நம்ப ஆளுங்க பண்ணாத அட்டங்காசமா, வெள்ளக்காரன் போனோனே நம்ப ஆளுங்க கொஞ்சம் நாளு என்னனமோ திட்டம்லாம் கொண்டாந்து என்னனமோ செஞ்சாங்க, அப்பதான் இந்தப் பையனுங்க இல்லாத அட்டுழியலாம் பண்ணிட்டு, மண்ண வாறி போட்டுகிட்டானுங்க, கடைசியா இந்தத் தோட்டம் இப்ப சீனன் கையில இருக்குடி”
“அப்பனா முன்ன நிறைய பேரு இருந்தாங்களா?”
“ஒவ்வொரு லயத்து 10 வீட்லயும் நம்ப ஆளுங்கதான், அப்பறம் வீடுலாம் இடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க, பாவி பையனுங்க”
“அப்பனா தாத்தாவோட கூட்டாளிங்களாம் இப்ப இல்லைனு சொல்லுவியே, அது?”
நகர் பிரக்ஞை 4
தள்ளு வண்டியைக் கொண்டு வந்து அதை வியாபாரத்திற்காகத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான் ஒரு சீனன். கரும்பு தண்ணீர் விநியோகம்தான். வெயிலுக்கு ஏற்ற வியாபாரம். அவனுடன் உதவிக்கு ஒரு சின்ன பையன். 11 வயதுதான் இருக்கும். இருவரும் கசங்கி போன வெள்ளைச் சட்டை அணிந்திருந்தார்கள்.
“தாத்தாவோட கூட்டாளி அந்த சரவண சாமியாருலாம். . எல்லாம் எங்க பாட்டி?”
“யாரும் இல்ல, அந்தக் காலத்துலே எல்லாரும் டவுனுக்கு ஓடி போயிட்டானுங்க, இவனுங்க தொல்ல தாங்க முடியாம, ஒன்னும் இல்ல, இந்த டவுனுல கூட சில பேரு இருக்கறதா கேள்வி பட்டுருக்கேன். . எப்பயாவது பாப்பேனு ஒரு நம்பிக்க இருக்குடி. . அந்த மொதலாளிங்க பண்ணாத கூத்தா? நம்ப ஆளுங்கல தூக்கிட்டு சியாம்லேந்து ஆளக் கூட்டிட்டு வர ஆரம்பிச்ச போதுதான், நம்பிக்கையே இல்லாம போச்சு, எத்தன பேரு அழுது புரண்டு ஜாமான்லாம் தூக்கிகிட்டு எங்கெங்கோ போனானுங்க, என்னா ஆச்சோ”
ஒரு பெரிய பானையை எடுத்து தள்ளு வண்டியின் மேசையில் கிடத்திக் கொண்டிருந்தான் அந்தப் பையன். இன்னும் சிறிது நேரத்தில் அந்தப் பானையில் ஐஸ்கட்டிகளையும் கரும்பு சாரையும் ஊற்ற போகிறான் அந்த வியாபாரி. நீண்ட மௌனத்தில் ஆழ்ந்து போய், அந்தத் தள்ளு வண்டியின் அருகாமையில் நின்று கொண்டிருந்த அந்தப் பையனின் முகத்தில் ஏதோ ஒர் எதிர்பார்ப்பு. மூக்கு சிவந்திருந்தது.
“அப்பனா அந்த ஆம குத்து கிழவன்?, காண்டா கம்ப செஞ்சிதான் காசு சேப்பானா?”
“ ஆமாம், அவனோட வேலயே அதான், பாதி நேரம், குப்ப தொட்டிலையும் காட்டுலயும் அலைஞ்சிகிட்டு இருப்பான், கம்பி கட்டைலாம் பொறுக்கிட்டு போய் சொந்தமா செஞ்சு எங்ககிட்டலாம் விப்பான், அதோட சரி அவனோட ஒறவு. . . மத்தபடி அவன் போக்குலாம் எங்களுக்குப் பிடிக்காது, கொஞ்ச காலத்துல அவனும் செத்துப் போயிட்டான்”
“ நீ பார்த்துருக்கியா, அவன் காண்டா கம்பு செய்யறத?”
“ அதான் தெரியுமே, மூங்கிலோ, இல்லனா கட்டைல ரெண்டு பக்கம் ஓட்டை போட்டுட்டு, அந்தக் கம்பியை நல்லா சூட்டுல காச்சிட்டு, உள்ள உட்டு எடுப்பான், அப்பறம், கம்பியை வளைச்சிருவான் மேலயும் கீழயும், அதுலதான் வாளிய தொங்கவிட வசதியா இருக்கும், அப்பறம் மூங்கில உழியிலே நல்லா செதுக்கிட்டுதான் மத்த வேலைலாம், அதை பார்க்கறப்பே அவ்ள நல்லா இருக்கும்”
“அப்ப அந்தக் காண்டா கம்பு எவ்ள பாட்டி?”
“ 3 வெள்ளிக்குதான் விப்பான், அப்பலாம் அதுலாம் எங்களுக்கு உசந்த காசுடி, அவனுக்கும் அதான் பொழப்பு”
“யேன் பாட்டி நீ சொல்லுவியே அந்த லயம், அந்த வீடுலாம் யேன் பாட்டி இடிஞ்சி போச்சு?”
“யாரும் இல்லனா இப்படிதான் ஆயிடும், வீடுனா மனுசாலு இருக்கனும்டி, இல்லனா பூதம் உள்ள போய்டும், நான் சொன்னேன்ல அவனுங்களாம் ஓடி போனப் பொறவுதான் இந்த வீடுலாம் இப்படி போச்சு, மொதலாளிங்க இடிச்சி தள்ளிட்டுனானுங்க . . . அவனுங்க மனசுலயும் பூதம் போச்சுடி”
“அது என்னா பூதம் பாட்டி?”
“எங்க அண்ணன் சொல்லும். . முச்சந்திகள காவ காக்கற பூதமா. . அது மனசுல போன பெறகுதான் மனுசாளுங்க இப்படி மிருகம் மாதிரி நடந்துக்குவாங்களாம். . அதான் எங்களலாம் வெரட்டி அடிக்காத கொறையா. . என்னனமோ நடந்து போச்சுடி”
“அங்கதான் பாதி இடம் அழிஞ்சிறுச்சே. . இனி என்னா பாட்டி இருக்கு?”
“இங்க மட்டும் இல்லடி, கெடால பல எஸ்டேட் இப்ப கல்லு வீடு, புது ரோடுனு மாறி போச்சு, சில எஸ்டேட் அடையாளமே இல்லாம பேச்சு, அதுக்காக எதுமே இல்லாம போயிடுமா? எங்க எஸ்டேட் அழிஞ்சி போயிருக்கலாம்டி.. அங்க வாழ்ந்து பொழங்கன மனுசாளுங்க இப்ப எங்க போனாலும் ஏதாவது ஒரு மூலையில பாக்கலாம்டி. . இன்னமும் அவங்கலாம் இருக்காங்க. . இருப்பாங்க”
நகர் பிரக்ஞை 5
இப்பொழுது ஒரு அம்மா மினி சைக்கிளைத் தள்ளிக் கொண்டே கடை வரிசைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார். அவர் அணிந்திருந்த கைலி வெயிலில் பட்டு மேலும் வெளுத்துப் போயிருந்தது. சைக்கிளை நிறுத்திவிட்டு அடகுக் கடையின் வாசல் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவர்தான். பிறகு அங்கிருந்து வெளியேறி ஒரு செலவு பொருள் விற்பனை செய்யும் கடையில் நுழைந்து கொண்டிருந்தார்.
“என்னா பாட்டி, அந்த ஆம குத்துக் கிழவன மறக்க முடியலயா?”
“ ஆமாம்டி அப்படிதான்னு வச்சுக்கியேன், எஸ்டேட்ல என்னாதான் பெருசா மாத்தத்தை கொண்டாந்தாலும், இல்ல எஸ்டேட்ல வாழ்ந்து பழகிட்டு டவுனுக்கு போனாலும், மனசு மட்டும் என்னிக்கும் மாறாது தெரியுமா?”
“இப்பதான் வருசம் இத்தினியாச்சே? இன்னும் என்னா பாட்டி எஸ்டேட்?”
“எத்தன வருசம் ஆனாளும் எங்க நெனப்புக்கு வயசாகுது, அந்த ஆளகரைக்கும் வயசாகாது, அந்தா தெரிதே அந்த இடிஞ்சி போன லயத்து வீட்டுக்கும் வயசாகாதுடி”
“எங்க பாட்டி தெரிது. . எல்லாம் கடயும் ரெஸ்தோரான்தானே இருக்கு?”
“ஒனக்கு தெரிலடி. . எனக்கு தெரிது. . அதோ பாரு மாரிமுத்தும் அவன் புள்ளயும் ஆளக்கரைலேந்து வூட்டுக்கு போயிகிட்டு இருக்கானுங்க”
“ஒனக்கு என்னா பைத்தியமா? ஒளறிகிட்டு இருக்க?”
“ஆமாம்டி நாங்களாம் பைத்தியம்தான். . காலா காலமா அங்குட்டும் இங்குட்டும் அலைஞ்சே வாழ்க்கைல பாதிய தொலைச்சிட்டோம். . மீதிய தோ இந்த டவுன்ல தொலைச்சிகிட்டு இருக்கோம்டி”
“ ஒன் கண்ணுக்கு அந்த லயத்து வீடுலாம் தெரிதா பாட்டி?”
“கண்ணுலேந்து மறையிலடி. . அதான் இன்னும் அப்படியே இருக்கு”
“அந்த லயத்து வீட்டுலலாம் யாராரு இருந்தா பாட்டி. . ஞாபகம் இருக்கா?”
நகர் பிரக்ஞை 6
பட்டணக் கோவில் தேங்காய்களை ஒரு கிழவன் சேகரித்துக் கொண்டிருக்கிறான். காலை பூசைக்குப் பிறகுதான் இந்தக் கிழவனுக்கு அங்கு வேலை. சிதறி கிடக்கும் தேங்காய்கள் அந்தக் கிழவன் கொண்டு வந்திருந்த வெள்ள¨ச் சாக்குக்குள் போய் கொண்டிருக்கும். பிறகு அதே சாக்குக்குள் அலுமினியம் டின்களைச் சேகரிப்பதற்காக கடை தெருக்களில் நடந்து கொண்டிருக்கிறான்.
“ மேட்டு லயத்துல மொத வீடு, ஐயா குஞ்சியோட வீடு, பக்கத்துல போர்மேன் லெச்சுமனன் வீடு, அதுக்கும் பக்கத்துல நல்லம்மா வீடு, அப்பறம், அந்த நாலாவது வீடு பங்காரு தாத்தா வீடு, அவன் வீடு பக்கத்துல கிராணியோட சொந்தக்காரன் பையன் கொஞ்ச நாள் வந்து தங்கனான், அவனோட வீடுதான். மத்த வீடுலாம் முன்னயே இல்லாம போச்சுடி. . அந்த மேட்டு லயத்துல. . அப்பறம் கீழ் லயத்துல எங்க வீடுலாம் இருந்துச்சி”
“பங்காரா? அவரு யார் பாட்டி, அந்தக் கொலக்காரக் குடும்பமா?”
“அடச்சி வாய மூடு, பெரிய பேச்சுலாம் பேசிட்டு. அவரு வீதி, என்னா பண்றது. நல்லாதான் இடம் அறிஞ்சி சாமர்த்தியமா வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு”
“ நம்ப தாத்தாதான் பங்காரு கொலகாரன் குடும்பம்னு சொன்னாரு பாட்டி. . யாரையோ அடிச்சி சாவடிச்சிட்டாங்களாம்?”
“ நன்றி கெட்ட பையனுங்க, யார் யார்க்கோ என்னனமோலாம் செஞ்சிறுக்காரு, அவரு இங்கேந்து போகும் போது, ஒரு வயசு 65 இருக்கும்டி, பாவம். . . குடும்பத்தோட”
“பாவம். . குடும்பத்தோட? என்ன பட்டி சொல்லு?”
“உனக்கு யேண்டி அந்தக் கதலாம், அவரு அம்மா செத்தப்ப, அப்படி கதறி கதறி அழுதாரு, பாவம் பொண்டாட்டியோட அவரும் இந்தக் காட்டுலதான் ஏ புளோக்லயும் ஈ புளோக்லயும் மரம் வெட்டிகிட்டு அவரு பாட்டுக்குச் சிவனேனு கிடன்தாரு, அப்பறம் ஒரு நா வீட்டுல யாரையும் கானம். . எங்கயோ போயிட்டானுங்க.. அப்பறம் கொல பழினு. . என்னனமோ ஆச்சு”
“செம்பன மரம்லாம் நட்டுகிட்டே இருக்கானுங்களே, தாத்தா சொல்லுவாரு. . யென் பாட்டி அப்பனா கித்தா மரம்லாம் வேணாமா?”
சுங்கைப்பட்டாணியின் பழைய யூ.டி.சி பேருந்து அவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தின் கண்ணாடி ஜன்னலில் தலையை வெளியே நீட்டிக் கொண்டு சிலர். ஒரு சிறுமி அம்மாவின் பிடியிலிருந்து விலகி, ஜன்னுலுக்கு வெளியில் தலையை நீட்டிக் கொண்டு கைத்தட்டி சிரிக்கிறாள். யாரைப் பார்த்தோ? நகர மனிதர்களையா?
“இருந்ததே கொஞ்சம்தாண்டி, அதையும் எடுக்க ஆரம்பிச்சோன எதுமே இல்லாம போச்சு, வெறும் செம்பன தோட்டம்தாண்டி. . .பாட்டி செத்து போன பெறகு. . இனி நீ அங்க போய் தேடினாலும் இந்தப் பாட்டியோட நெனப்பு கூட இருக்காதுடி, அப்ப உனக்கு தெரியும் அந்த நெனப்போட மதிப்பு. . . எங்க மனசுலேந்து இந்த எஸ்டேட்டோ. . எஸ்டேட் ஜனங்களோ. . அவங்க பட்ட கஸ்டமோ. . சோத்துக்காக மேட்டுலயும் காட்டுலயும் தீம்பர்லயும் நாங்க பட்டபாடு, என்னிக்குமே அழியாதுடி. . எது அழிஞ்சாலும் இந்த எஸ்டேட் மனுசாளுங்களோட நெனப்பு இருக்கே நெனப்பு. . அது மட்டும் அழியாதுடி. . இந்த மாதிரி எத்தனயோ தோட்டலேந்து போன என்ன மாதிரி பாட்டிங்களும் மனுசாளுங்களும் ஒலகத்துல ஏதோ ஒரு பட்டணத்துல இன்னமும் வாழ்ந்துகிட்டுதான் இருப்பாங்கடி. . எனக்கு நம்பிக்க இருக்கு. . நாங்க என்னிக்குமே தொலைய மாட்டோம். . எங்க பால் கொட்டாயும் எப்பவுமே தொலையாது. . எங்களோட ஒவ்வொருத்தர் உயிருலயும் இந்த நெனப்புதாண்டி இருக்கும்”
இப்படி ஏன் இந்தத் தோட்டங்களில் மட்டும் இத்தனை அபூர்வமான நினைவுகள் நிறைந்து கிடக்கின்றன? அழிந்து போன ரப்பர் காடுகளில் எதிரொலிக்கும் அந்தச் சத்தங்கள் யார் விட்டுச் என்ற நினைவின் நிழல்கள்? அந்த லயத்து வீடுகளின் உடைந்து கிடக்கும் பச்சை வர்ணப் பலகைகளில் பதிந்திருக்கும் சில மனிதர்களின் கைரேகைகள் கூட நினைவுகளைதான் சுமந்து கொண்டிருக்கிறது என்கிறார்களே. . தொலைந்து போன முகங்கள் எந்தப் பட்டணத்தில் திரிந்து கொண்டிருக்கிறதோ நினைவுகளோடு.. .
நகர் பிரக்ஞை 7
இப்பொழுது அந்தப் பாட்டி நம்பர் கடையின் நெரிசலில் சிக்கிக் கொண்டு தடுமாறி கடையிலிருந்து சாலையின் விளிம்பில் மயங்கி வீழ்ந்து கொண்டிருக்கிறார். கூட்டம் அவரைக் கவனியாது, நான்கு நம்பர்களின் விசித்திரமான முடிவுகளில் தங்களைத் தொலைத்துக் கொண்டிருந்தார்கள். அவருடைய பேத்தி வேகமாக ஓடுகிறாள், பாட்டியின் மனதிலிருந்து பட்டணச் சாக்கடைக்கு வழிந்து ஓடிக் கொண்டிருக்கும் தோட்ட நினைவுகளையும் பால் கொட்டாய்களையும் பிடிப்பதற்கு. . .
“என்னிக்குமே அழியாதுடி.. எங்க நெனப்பு. .”


கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation