புன்னகையின் ஒளி ததும்பும் கதைகள்

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

க. மோகனரங்கன்



1

நான் கல்லூரியில் படிக்கும்போது ஆங்கில துணைப் பாடத்தில் ஆர். கே. நாராயணின் கதை ஒன்று இருந்தது. ‘தம்பியின் பள்ளியாத்திரை’ என்ற அக்கதையின் மையப் பாத்திரமான தம்பி மிகவும் துடிப்பான சிறுவன். அவனுடைய குறும்பு எல்லை மீறும்போது வீட்டிலுள்ளவர்கள் அவனைப் பயமுறுத்துவதற்காக சொல்லுவது “சரி! இனியும் இவனை வீட்டில் வைத்திருக்க முடியாது. பள்ளிக்கூடத்திலே சேர்த்திடவேண்டியதுதான்.” இதைக் கேட்டவுடனே பயந்து போகும் தம்பி சில நாட்களுக்கு அடங்கின பிள்ளையாகிவிடுவான். ஒரு நாள் மேசைமீது பாட்டி மறந்து வைத்துவிட்ட மூக்குக் கண்ணாடியைத் தள்ளி விழச் செய்துவிடுகிறான். சில்லு சில்லாக உடைந்து போன கண்ணாடியைக் கண்ட கோபத்தில் அப்பா உத்தரவிடுகிறார், “நாளையிலிருந்து தம்பி பள்ளிக்கு போகட்டும்!”
மறுநாள் அவன் கதறக்கதற பள்ளியில் கொண்டு விடப்படுகிறான். பாதியிலேயே எழுந்துபோய் அவனுடைய அண்ணனுடன் அவன் வகுப்பில் அமர்ந்துகொள்கிறான். தான் விரும்பாவிட்டாலும் இனி தொடர்ந்து பள்ளிக்குச் சென்றுதான் ஆகவேண்டும் என்பது சிலநாட்களிலேயே தம்பிக்கு ஒருவாறு புரிந்துவிடுகிறது. முரண்டு பிடிக்காமல் ஏற்றுக்கொள்கிறான். தம்பியையும், அவனது அண்ணனையும் பள்ளிக்குக் கொண்டுவிட ஒரு வேலைக்காரனும் வீட்டில் உண்டு. வீட்டைவிட்டு படியிறங்கியதுமே தம்பி, மற்ற இருவரையும் பார்த்து தீர்மானமாகக் கூறுவான் “ரெண்டு பேரும் எனக்குப் பின்னாடிதான் நடந்து வரணும்!” வழியில் வேலிப் புதரில் தலையாட்டும் ஓணானைப் பார்த்தவுடன் தம்பி நின்றுவிடுவான். அண்ணனுக்கும் வேலைக்காரனுக்கும் வேறு வழி கிடையாது. அவர்களும் நின்றுதான் ஆகவேண்டும். வேலிக்குள் ஓணான் மறைந்த பிறகுதான் தம்பி திரும்பவும் நடக்கத் தொடங்குவான். காலில் தட்டுப்படும் ஒரு கூழாங்கல்லைக் கண்டவுடன் மறுபடியும் நின்றுவிடுவான். குனிந்து கையில் வைத்து நிதானமாக ஆராய்வான். பிடித்திருந்தால் கால் சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்வான். இல்லாவிட்டால் வீசியெறிந்துவிட்டு நடப்பான். இதுபோலவே வழியில் எதிர்ப்படும் குதிரை வண்டி, தெருநாய், தாடிக்காரத் தாத்தா போன்ற இன்ன பிற அதிசயங்களையெல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு இவர்கள் ஊர்வலம் பள்ளியை அடையும்போது பலசமயங்களில் இறைவணக்கக் கூட்டம் முடிந்து வகுப்புகள் தொடங்கிவிட்டிருக்கும். கடைசியாக, கால அட்டவணை, வகுப்பு இடைவேளை முதலிய நியமங்கள் எல்லாம் தம்பிக்குப் பழக்கமாகி விடுமுறை தினமான சனிக்கிழமையிலும் பள்ளிக்குப் புறப்பட அவன் ஆயத்தமாவதுடன் கதை முடியும்.
ஆபிதீன் கதைகளை ஒருசேரப் படித்தவுடன் எனக்கு மேற்சொன்ன ‘தம்பியின் பள்ளி யாத்திரைதான்’ பளிச்சென்று நினைவுக்கு வந்தது. நம் கவனத்தை ஈர்த்து நிறுத்தும் ஒரு சுவாரஸ்யமான வாக்கியத்துடன் கதையைச் சொல்லத் தொடங்கும் ஆபிதீனுக்கு பலசமயங்களில் தன் கதை அடைய வேண்டிய இலக்கு என்று தனியாக எதுவுமில்லை. அப்படியே இருந்தாலும் அதற்கு பெரிய முக்கியத்துவம் ஏதும் கிடையாது. தொடக்கத்திற்கும் முடிவிற்கும் இடையிலான மொழிவழி நடைப்பயணமே ஆபிதீன் கதைகளின் சிறப்பு. அப்பயணத்திற்கிடையில் அவர் காட்டும் நானாவித காட்சிகளின் தொகுப்பே கதைப் பரப்பாகிறது.

2

ஆபிதீன் கதைகளுக்கு சம்பிரதாயமான இலக்கணங்கள் எதுவும் பொருந்தாது. ஏதோ ஒரு விஷயத்தை முன்னிட்டு நம்மிடம் பேசத்தொடங்கி, சொல்ல வந்ததைவிட்டு விலகி வழியில் எங்கு வேண்டுமானாலும் சுற்றியலைந்துவிட்டு கடைசியாக அவ்விஷயத்தைத் தொட்டு முடிகின்றனவாக இவருடைய கதைகள் அமைந்துள்ளன. ஒரு தேர்ந்த கதாகாலட்சேபக்காரனின் வாய் ஜாலமும், சுவாரஸ்யமும், தகவல் செறிவும் கொண்டது ஆபிதீனின் கதைமொழி. முஸ்லிம் பண்பாட்டுச் சூழலின் பின்புலத்தில், நாகூரின் ஸ்தல மகாமித்யத்துடனும், அதன் பேச்சு வழக்குகளுடனும் விரியும் இக்கதைகளின் பிரதானமான அம்சங்கள் என்று இரண்டினை முன்னிலைப்படுத்திச் சுட்டலாம். ஒன்று பக்கத்துக்கு பக்கம், வரிக்குவரி பொங்கி வழியும் அபரிமிதமான நகையுணர்வு. மற்றது, பாலியல் சார்ந்த கதையாடல்களை இடக்கரடக்கல் ஏதுமின்றி, சமூகவழக்கில் பேசப்படும் அதே தொனியில் எழுதிச்செல்வது. இவ்விரண்டு அம்சங்கள் காரணமாக இவருடைய கதைப் பிரதிகள் மட்டற்ற வாசிப்பு இன்பம் நல்குவனவாக அமைந்துள்ளன. அதே சமயத்தில் இவருடைய கதைகளைத் தொடர்ந்து வாசிக்கும்போது நெருடலாகபட்ட இன்னொரு விஷயமும் உண்டு. அது இவருடைய கதைகளில் வெளிப்படும் இறை மற்றும் சமய நம்பிக்கை குறித்த வற்புறுத்தும் தொனி. ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில் மதம் மற்றும் இறைவனின் இடம் என்னவாக, எவ்வளவாக இருக்கிறது? இதைத் தீர்மானிப்பது யார்? சம்பந்தப்பட்ட தனி மனிதனா இல்லை அவனைச் சுற்றியுள்ள சமூகமா? இதற்கெல்லாம் திட்டவட்டமான, பொதுவான, சரியான பதில் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
தேசம், மொழி, மதம், இனம், ஜாதி, நிறம் இவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளால், இப்புவியின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதோ ஒரு பிரிவினர் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் பலவகையிலும், நெருக்கடிக்குள்ளாகும் தமது பண்பாட்டு, கலாசார மரபுகளைத் தக்கவைத்துக்கொள்வதில் தீவிர முனைப்புடையோராக இருப்பது உளவியல் ரீதியிலான இயல்பு. இம் முனைப்பையே அவர்களுக்கெதிரான வெறுப்பாகவும், அச்சமாகவும் மாற்றிவிடுவதில் பெரும்பான்மையைச் சேர்ந்த அடிப்படைவாத சக்திகள் வெற்றிபெறும் தருணங்களிலேயே பெரும் கலவரமும் அழிவும் நிகழ்ந்தேறுகின்றன.
இதற்கான ஒரே மாற்று, தம்மிலிருந்து வேறுபடும் பிற அடையாளங்களைக் கொண்டவர்களின் இருப்பை, எல்லா வகைகளிலும் மனப்பூர்வமாக அங்கீகரிக்கவேண்டும். அவர்களுடைய தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் மதிக்கக்கூடிய ஒன்றாக ஒரு சமூகத்தின் நெறிமுறைகள் அமைய வேண்டும். இத்தகைய பண்பாட்டு, கலாசார புரிதல்களுக்கு கலை, இலக்கியங்கள் பலவிதத்திலும் ஆரோக்கியமான பங்களிப்பை நல்கவியலும்.
ஆபிதீனின் இத்தொகுப்பில் ஆங்காங்கே அவர் குறிப்பிடும் பல்வேறு குரான் ஆயத்துகள், ஹதீஸ்கள் மூலமாக, இஸ்லாமிய பண்பாட்டின் வரலாற்று அடிப்படைகள், அவற்றின் நடைமுறை சம்பிரதாயங்கள் போன்றவற்றை நெருக்கமாக அறிந்துகொள்ளமுடிகிறது. இலக்கிய ரீதியாகப் பார்த்தாலும் தமிழ் புனைகதைகளில் முஸ்லிம் பண்பாடு பற்றிய நுணுக்கமான பதிவுகள் வெகு சொற்பமே. ஆபிதீனின் இக்கதைகள் பேரளவிற்கு அக்குறையை நிவர்த்தி செய்வனவாக உள்ளன.
‘பொருள் வயின் பிரிவு’ பற்றிய சித்திரங்கள் சங்கம் தொட்டே நமக்கு அறிமுகமானவைதான். ஆபிதீனின் கதைகளிலும் ‘சபர்’ எனப்படும், உதர நிமித்தம் பொருள்தேடி அரபு நாடுகளில் இரண்டாம் தர பிரஜைகளாக கிடந்துழலும் தலைவன்கள் வருகிறார்கள். வளைகுடா யுத்தத்தின்போது பயந்துபோய், தம்முடைய தனிமைத் துயர் ஆற்றாது புலம்பி தொலைபேசும் தலைவனுக்கு, கைவளைகள் இறுக்க, கண்ணீர் துளியும் உகுக்காது திட சித்தத்துடன் தலைவி மறுமொழி பகர்கிறாள் “ஊருக்கு வந்துருங்க மச்சான். அல்லா இருக்கிறான் நமக்கு” என்ற அதே மூச்சில், “ஆனா இங்கே நீங்க வந்துட்டா நம்ம புள்ளங்கெ கதி?” என்றும் வினவுகிறாள். கசப்பை, அவலத்தை ஒரு கைத்த புன்னகையின் உதவியோடு கடக்கவும், கரைக்கவும் முயலும் ரசவாதம் ஆபிதீன் கதைகளில் வெகு இயல்பாக நடந்தேறுகிறது. எவ்வளவு மங்கலானதாக இருப்பினும் அப்புன்னகையின் ஒளி இவருடைய கதைகளுக்குத் தருகிற வசீகரம் பிரகாசமானது.

3

இத்தொகுப்பிலேயே மிக நீண்ட கதை, கதை துவங்கிய சில பத்திகளுக்குள்ளாகவே இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிந்தாலும் முடிவு வரையிலும் அதன் சுவாரஸ்யம் குறைவுபடுவதேயில்லை. ஒரு பெரிய தேசமாகட்டும், பிரமாண்டமான கட்டடமாகட்டும், எளிய மனிதனாகட்டும் அவற்றின் எழுச்சியை அல்ல வீழ்ச்சியைத்தான் நம் அடிமனம் உள்ளூர விரும்புகிறது என்பது குரூரமான உண்மையாகும். அதை இக்கதை தனக்கே உரிய விதத்தில் சித்தரித்திருக்கிறது. ‘இசுலாமியக் கதை எழுத இனிய குறிப்புகள்’, ‘நாங்கோர்’ என்ற இருகதைகளும் வடிவரீதியாக மாறுபட்ட முயற்சிகள் என்பதற்கு மேல் சிறப்பாக குறிப்பிட ஏதுமில்லை. ‘ஹே! சைத்தான்’ என்ற கதை ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பகடி செய்யும் விதமாக எழுதப்பட்ட கதை. அதில் வைக்கப்படும் விமர்சனங்கள் மேலோட்டமாகவும், தென்படும் நகையுணர்வு வலிந்து பெறப்பட்டவையாகவும் தோன்றுகிறது. ‘பச்சை மணிக்கிளியே!’ போன்ற நுட்பமும், குறிப்பமைதியும் கொண்ட கதையைத் தந்தவர்தான் ‘ஹே! சைத்தான்’ என்ற கதையையும் எழுதினார் என்பது ஆச்சரியம் தருவது. ‘வாழைப்பழம்,’ ‘தினம் ஒரு பூண்டு’ இரண்டினையும் ஆபிதீனின் கதைசொல்லும் திறன் முழுவதும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும் கதைகள் என்று சொல்லலாம். இக்கதைகளில் உறவுகளுக்கிடையிலான பரஸ்பர முரண்பாடுகள், வெறுப்பு, கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடான சுய பச்சாதாபம் ஆகியவை கோணலாக்கப்பட்டு நகையுணர்வாக மாற்றப்பட்டிருக்கும் விதம் அபாரமானது. தன் கதைகளைச் சொல்வதற்கென்று தனக்கேயுரிய ஒரு தனித்த மொழியையும், தமிழ் புனைகதைகளில் அதிகமும் பேசப்படாத ஒரு களனையும் கொண்டிருப்பது ஆபிதீனின் பலம். அதீதமாகப் பயன்படுத்தப்படும் சில இடங்களில் இம்மொழியும், பின்னணியுமே பலவீனமாக மாறிவிடுவதை அவர் கவனிக்கவேண்டும்.

உயிர்த்தலம் – சிறுகதைகள்
ஆசிரியர் – ஆபிதீன்
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
# 102, பி. எம். ஜி காம்ப்ளக்ஸ்,
தெற்கு உஸ்மான் சாலை,
தி. நகர் – சென்னை -17.
பக்கம்: 256 விலை: ரூ. 130.
தொலைபேசி: 044-24329283

ஆகஸ்ட் 2008 வார்த்தை இதழில் வெளியான புத்தக விமர்சனம்.

Series Navigation