புத்தகப் பார்வை : மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் – முனைவர் மு. இளங்கோவன்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

ஜெயானந்தன்


மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் என்ற புத்தகத்தை முனைவர் மு.இளங்கோவன் , சரித்திர சான்றுகளூடன் படைத்துள்ளார்.

தமிழகத்தின் மீது பல்வேறு பிரிவினர் படை எடுத்துள்ளனர், ஆனால் மராட்டிய மன்னர்கள் தமிழக மன்னர்களின் அழைப்பின் பேரில் இங்கு வந்து, போரிட்டு வெற்றி கொண்டு,அதன்மூலம் இங்கு (கிபி 1676 – கிபி 1855) கிட்டத்தட்ட 180 ண்டுகள் சிறப்புற ஆட்சி புரிந்த வரலாற்றை முனைவர் இளங்கோவன் இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

இப்புத்தகம், ஆசிரியரிiன் மாணவ முயற்சி என்று சொன்னாலும், ஒரு வரலாற்று பார்வை இதில் பரவிக்கிடப்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும், ஒரு வரலாற்று நூல் எழுதுவது என்பது எளிதான காரியமல்ல; அதற்கான சான்றுகளையும், மூல நூல்களையும் தேடிச் செல்வது என்பது பெரிய புதையலை தேடிச் செல்வது போன்ற செயலாகும்.

இப்புத்தகம், மூன்று இயல்களாய் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இயலில், மராட்டியர்கள் தமிழகத்தில் காலூன்றியமை, அவர்களின் ஆட்சி முறை, சமயப்பணி , சமுதாயப்பணி முதலியவைப்பற்றி பேசுகின்றது.

இராண்டாம் இயல், மராட்டியர் கால தமிழ் இலக்கிங்களையும், அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் புலவர்களைப் பற்றியும் விளக்குகின்றது.

மூன்றாம் இயல், மராட்டியர்களின் ஓவியங்கள், செப்பேடுகள், கட்டட கலை, மருத்துவம் பற்றியெல்லாம் பேசுகின்றது.

மராட்டியர்களின் ஆட்சியில், இந்து, மூஸ்லீம், கிருத்துவர் அனைவரையும் சமமாக நடத்தினர். மனாராட் என்ற கட்டட கலை சிறப்பாக பேசப்படுகின்றது. லாவணி என்ற இசை வடிவத்தை தமிழுக்கு தந்த பெருமையும் மராட்டியர்களுக்கு உண்டு. தோற்பாவை கூத்தினையும் இவர்கள் தந்திருக்க வாய்ப்புண்டு என்றும் கூறுகின்றனர்.

மராட்டியர்கள், நாடகக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். ஆகவே தான், இவர்கள் காலத்தில், நிறைய நாடக நூல்கள் தோன்றின என ஆசிரியர் கூறுகின்றார்.

மராட்டிய மொழியில் கையாளப்பட்ட “அப்ங்” என்ற வடிவமே, தமிழ் நாட்டில் கதாகாலட்சேபமாகத் உருவெடுத்தது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இரண்டாம் சரபோசியின் காலத்தில் சரசுவதி மகால் என்ற புகழ் பெற்ற நூலகம் அமைக்கப்பட்டது. இது உலக அளவில் இன்றும் பேசப்படுகின்றது.

மராட்டிய மன்னர்கள் திறமையான பல தமிழ் புலவர்களை ஆதரித்து, அரசவை புலவர்களாகவும் வைத்து காப்பாற்றி வந்துள்ளனர்.

மராட்டியர் ஆட்சியில் தமிழ், தெலுங்கு, மராட்டி, சமற்கிருதம், அரபி முதலிய மொழிகள் வழக்கில் இருந்துள்ளன.

தமிழில் ஐம்பத்தைந்து மராட்டிய மொழி சொற்கள் கலந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்களின் கருத்து. மேலும், ஆசிரியருடைய பார்வையில் கில்லாடி, சிட்டி, சீட்டி, தலித் முதலான வார்த்தை களும் அங்கிருந்துதான் வந்துள்ளதாக கூறுகின்றார்.

முனைவை இளங்கோவன் இப்புத்தகத்தில் து¨ணைனொற் பட்டியல், பின்னினைப்புகள் பட்டியல் ஒன்றினையும் சேர்த்துள்ளார். இவை, ராச்சியாளர்களுக்கு மேலும் பயன்படும்.

முனைவர் மு. இளங்கோவன் முறையாக தழிழ் படித்தவர். முதுகலை முடித்து முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேறியவர். தற்போது புதுவை பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றார். (மின்னஞ்சல்; muelangovan@yahoo.co.in )

இப்புத்தகம், மராட்டியகளைப் பற்றி கூறினாலும், அதன் மூலம் தமிழகத்திற்கும், தமிழுக்கும் கிடைத்த நன்மைகளைப்பற்றியே அதிகம் பேசுகின்றது. தமிழ் கலாச்சாரத்தை எவ்விதத்திலும் மராட்டியகள் ஆட்சி பாதிக்கவில்லை. ஆனால், வரலாற்றுப் பக்கங்களில் வடதிசை படையெடுப் பெல்லாம் பொன்னையும், பெண்களையும், பொருளையும் கொள்ளையடித்து சென்றதாகத்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மராட்டியர்கள் இங்கு கொள்ளையடிக்க வரவில்லை; தமிழ் மன்னர்களுக்கு உதவத்தான் வந்ததாக ஆசிரியர் கூறுகின்றார். மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாசி இந்து சாம்ராஜ்யத்தை நிறுவ, தென்னக நட்பும், தரவும், பின்னாலில் மிகவும் உதவியாக இருந்தாக வராலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மராட்டியர்களைப்பற்றி மேலும்மேலும் அறிய, இப்புத்தகம் நம்மை இருகரம் நீட்டி அழைத்து செல்லுகின்றது.


jayans_ranee@yahoo.com

(புத்தகப் பார்வை பகுதியில் நூல்கள் அறிமுகம்/மதிப்புரைக்காக நூல் அனுப்ப விரும்புவோர் ஜெயானந்தன், 44 ராமநாதன் தெரு, அயனாவரம், சென்ன 600 023 என்ற முகவரிக்கு அனுப்பித் தரலாம். – திண்ணை குழு)

Series Navigation