புதுமைப்பித்தன் – கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும்

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்)


(kalachuvadu@vsnl.com)

காலச்சுவ டின் புதுமைப்பித்தன் திட்டம் தொடர்பாகப் பல எதிர்வினைகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் ஆங்கில நாளிதழ்களிலிருந்து செமி போர்னோ தமிழ் பத்திரிகைகள் வரை இந்த சர்ச்சை நடந்துகொண்டிருக்கிறது. இதற்குக் காலச்சுவ டின் எதிர்வினை திண்ணை யில் வெளிவந்த கோபால் ராஜாராமின் ஒரு பக்கக் கட்டுரையை மறுபிரசுரம் செய்தது மட்டும்தான். இது நீங்கலாக தினமணி கதிரில் ஒரு ஐந்தாறு கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தேன். இத்திட்டத்தின் பதிப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி இதுவரை இந்தப் பிரச்சனை தொடர்பாக எதுவும் பேசவில்லை. இதற்குக் காரணம் அடக்கமும் அல்ல ஆணவமும் அல்ல. அவதூறுகளுக்கு சரியான எதிர்வினை மேலும் சிறப்பாக பணிபுரிவதுதான் என்பது எங்கள் நம்பிக்கை.

‘புதுமைப்பித்தன் கதைகள் ‘ செம்பதிப்பு இதுவரை எந்த நவீன தமிழ் இலக்கியவாதிக்கும் அமையாத வண்ணம் சிறப்பான தொகுதியாக அமைந்துள்ளது. எங்கள் புதுமைப்பித்தன் திட்டத்தின் மறுப்பாளர்கள் பதிப்புக் குழுக் கூட்டத்தில் ‘humanly சாத்தியமா ? ‘ என்றும் ‘Utopian ‘ என்றும் கேள்வி எழுப்பி சந்தேகித்த செயல்திட்டம் இன்று நடைமுறையில் திண்மையாக நம் கையில் உள்ளது. இந்த அவதூறு பிரச்சாரத்தின் காரணி இந்த சாதனைதான். பத்தில் பதினொன்றாக இந்த தொகுதி வந்திருக்குமென்றால் எந்த பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது. மலையாள புத்தகச் சூழலை சுட்டிக்காட்டி தமிழோடு ஒப்பிட்டு குத்திக் காட்டுபவர்கள், தமிழின் சார்பில் இந்த சவாலை ஏற்கும் பணிகளை நாங்கள் மேற்கொள்ளும்போது ஒன்றிணைந்து எங்கள் பணியை சீர்குலைக்கும் கீழறுப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் உண்மையான ஆதங்கம் ‘தமிழ் சூழலின் அவலம் ‘ களையப்பட வேண்டும் என்பது அல்ல. அவலம் இருந்து கொண்டிருக்க வேண்டும். புலம்பும் இன்பம் இவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கவேண்டும்.

திண்ணையில் கடந்த சில மாதங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் புதுமைப்பித்தன் தொடர்பான பதிவுகளை அவ்வப்போது பார்த்து வருகிறேன். ஒரு தீவிர இதழுக்குரிய தன்மைகளோடு திண்ணை வெளிவருவதால் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த இது சரியான களமாக இருக்கும் என்று தோன்றியது. எனவே இந்தப் பிரச்சனை தொடர்பான கேள்விகளை திண்ணையில் எழுப்புமாறு கோபால் ராஜாராம் அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.

‘அன்னை இட்ட தீ ‘ தொகுப்பிற்குப் (புதுமைப்பித்தனின் பிரசுரிக்கப்படாத மற்றும் தொகுக்கப்படாத படைப்புகளின் தொகுப்பு) பதிப்பாசிரியராக இருக்கும்படி நான் ஆ. இரா. வேங்கடாசலபதியை (இனி சலபதி) 1996 இல் கேட்டுக்கொண்டேன். இந்தத் தொகுப்பின் பணி முடியும்போதே அதன் பின்விளைவாகப் ‘புதுமைப்பித்தன் கதைகள் ‘ செம்பதிப்பின் பணியும் ஓரளவு முடிந்துவிட்டிருந்தது. மேற்படி பணியை ஒரு குழுவாக இருந்து செயல்படுத்தலாம் என்று எம். வேதசகாய குமார் (இனி குமார்) குறிப்பிடவும் இல்லை; காலச்சுவடு ஒரு குழு அமைத்து செயல்படும் திட்டத்தை முன் வைத்தபோது அவர் ஏற்கவும் இல்லை.

உண்மையில் குமாருடன் இணைந்து இயங்குவது காலச்சுவடுக்குப் பல விதங்களிலும் வசதியானது. குமார் பல பத்தாண்டுகளாக எங்கள் குடும்ப நண்பர். மிகவும் இக்கட்டான காலகட்டங்களில் துணைநின்றவர். காலச்சுவடு அலுவலகத்திற்கு அருகிலேயே வசிப்பவர். இத்திட்டத்தைத் தொடங்கும்போது சலபதியுடன் இத்தகைய ஆழமான உறவு எதுவும் இருக்கவில்லை. மேலும் சலபதியின் இலக்கிய பார்வை இன்னொரு தரப்பைச் சேர்ந்தது. குமாரின் இலக்கிய பார்வை சுந்தர ராமசாமியின் இலக்கியப் பார்வையின் தாக்கத்தைக் கொண்டது.

இவை எல்லாம் இருந்தும் சலபதியைத் தேர்வு செய்ததற்குக் காரணம் நிச்சயமாகப் பணம் பெற்றுத்தரும் ஆற்றல் அல்ல. இத்தகைய ஆற்றல் எதையும் இதற்கு முன்னர் அவர் வெளிப்படுத்தியதில்லை; இத்திட்டத்தின் போதும் வெளிப்படுத்தவில்லை. பெரும் திட்டங்களை நாங்கள் எங்கள் கனவுகளின் அடிப்படையில் உருவாக்குகிறோம்; கையிருப்பில் இருக்கும் பணத்தின் அடிப்படையில் அல்ல. புதுமைப்பித்தன் திட்டம், தமிழ் இனி 2000 போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்தப் பணிகளுக்கான ஒரு சமூகத் தேவை இருந்தால் உதவி எதிர்பார்த்த இடங்களிலிருந்து வராது போனாலும் எதிர்பாராத இடங்களிலிருந்து வந்து சேரும் என்பது எங்கள் ஆழ்ந்த நம்பிக்கை.

இப்பணிக்குக் குமாரை நான் கருதாததற்கான காரணங்கள் : அவருடைய ஆய்வும் ஆய்வு சார்ந்த பார்வையும் குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு முந்தியது. அதற்குப் பின்னர் அவர் தீவிரமாக இயங்கவில்லை. புதுமைப்பித்தன் படைப்புகளைத் தேடி எடுக்க இந்தியாவின் பல பகுதிகளிலும் சுற்றி அலைய வேண்டியிருக்கும். இதற்கான சூழல் அவருக்கு இருக்கவில்லை. என்னுடைய அனுமானத்தில் முனைப்பும் இருக்கவில்லை.

குமாரின் இலக்கிய விமர்சன அடிப்படையிலான அணுகுமுறை இந்தப் பணிக்கு உகந்ததாக நான் கருதவில்லை. தமிழின் முன்னோடி பதிப்பாசிரியர்களான சி.வை. தாமோதரன் பிள்ளை, உ.வே.சாமிநாத அய்யர் போன்றவர்கள் எல்லாம் இலக்கிய விமர்சகர்கள் அல்லர். புதுமைப்பித்தன் படைப்புகளை எவை முக்கியமாவை எவை முக்கியமற்றவை என்ற அடிப்படையில் குமார் தேடி எடுத்தார். அவருடைய ஆய்வின் அடிப்படை அவருடைய இலக்கியப் பார்வைதான். ஒரு பதிப்பாசிரியருக்குரிய பார்வை அவரிடம் இருக்கவில்லை. சலபதி தன் 30 வயதிற்குள் பல நூல்களைப் பதிப்பித்த அனுபவம் கொண்டிருந்தார். குமார் இதுவரை எந்த நூலையும் பதிப்பித்ததில்லை.

சலபதி திராவிட இயக்க அரசியல் – இலக்கியப் பார்வையைக் கொண்டிருக்கலாம். இது அவருடைய கட்டுரைகளில் வெளிப்படவும் செய்யலாம். ஆனால் புதுமைப்பித்தன் பதிப்புப் பணியில் இதன் தாக்கம் இருப்பதாக யாரும் குற்றம் சாட்ட முடியாது.

இந்தத் திட்டத்திற்குத் தொ.மு.சி.ரகுநாதனின் உதவி கிடைப்பது இன்றியமையாதது என்று நான் கருதினேன். குமார் தன்னுடைய ஆய்வில் தொ.மு.சி.ரகுநாதன்மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து காலச்சுவடில் 1995 இல் ஒரு விவாதத்தையும் அவருடன் நடத்தியிருந்தார். குமாரால் தொ.மு.சியின் உதவியையோ வேறு எந்த ஆய்வாளரின் உதவியையோ பெற்றிருக்க முடியாது. புதுமைப்பித்தன் ஆய்வைப் பொறுத்தவரையில் அவருடைய சுயமதிப்பீட்டில் அவர் ஒரு சுயம்பு. தான் ஒருவரே நேர்மையான புதுமைப்பித்தன் ஆய்வாளர்; பிறர் அனைவருமே மோசடியாளர்கள் என்ற மாயையில் இருப்பவர் அவர். தொ. மு. சி. ரகுநாதனுடன் காலச்சுவ டில் குமார் விவாதம் மேற்கொண்டபோது அதில் வெளிப்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக அவருடைய ஆய்வின் நம்பகத்தன்மையில் எனக்கு ஆழ்ந்த சந்தேகம் ஏற்பட்டது.

1994ஆம் ஆண்டு சென்னையில் சலபதி புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத சில படைப்புகளைக் காலச்சுவடில் வெளியிடுவதற்காக என்னிடம் கொடுத்தார். நாகர்கோவில் வந்து சேர்ந்தவுடன் இவற்றை மிகுந்த ஆர்வத்துடன் குமாரிடம் காட்டினேன். அவருடைய எதிர்வினை ஏற்படுத்திய அதிர்ச்சி இன்றும் நினைவிருக்கிறது. நான் கொடுத்தவற்றை அவரால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. ‘இவை எல்லாம் முக்கியமில்லை. புதுமைப்பித்தனின் எல்லா படைப்புகளையும் நானே கண்டுபிடித்துவிட்டேன். இவை எல்லாம் முக்கியமற்றவை. புதுமைப்பித்தன் என்பதால் எல்லாவற்றையும் பிரசுரிக்கவேண்டியதில்லை. .. ‘ என்றவாறு பேசிக்கொண்டே போனார். இத்தகைய பார்வை கொண்டிருப்பது அவருடைய சுதந்திரம். ஆனால் இது ஒரு பதிப்பாசிரியருக்குரிய பார்வை அல்ல.

இவையெல்லாம் இருந்தும் செய்ய வேண்டிய பணியின் முக்கியத்துவம் கருதியும் நீண்டகால உறவைக் கருதியும் குமாரை அன்னியப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. புதுமைப்பித்தன் படைப்புகளை முழுமையாகத் தொகுக்கும் திட்டத்தில் அவரையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தேன். இதற்காகவே சுந்தர ராமசாமியைத் தொகுப்பாசிரியராக இருக்கும்படி கேட்டுக்கொண்டோம். 19.4.98 அன்று நாங்கள் நடத்திய புதுமைப்பித்தன் படைப்புகள் பதிப்பு ஆலோசனைக் குழுக் கூட்டத்தை அவர்தான் ஒருங்கிணைத்து நடத்தினார். குமாருடன் இன்னும் சில நண்பர்களையும் இணைத்து, சலபதியையும் இணைத்து, ஒரு குழுவை அமைத்து செயல்படுவது பற்றி ஆலோசித்தோம். இத்திட்டத்தைச் சலபதி ஏற்றுக் கொண்டார். ஆனால் குமார் ஏற்கவில்லை. 1998 இன் முற்பகுதியில் காலச்சுவடுக்கும் புதுமைப்பித்தன் குடும்பத்திற்கும் ஒரு உடன்படிக்கை கையெழுத்தானதை அடுத்து சுந்தர ராமசாமியும் நானும் குமாரை அழைத்து சுமார் இரண்டு மணிநேரம் பேசினோம். திட்டத்தில் இணைந்து பணியாற்றவேண்டிய அவசியத்தை அவரிடம் வலியுறுத்தினோம். புதுமைப்பித்தன் கதைகளின் பட்டியலைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கும்படி சு.ரா. அவரை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டார். பல நண்பர்களும் இடையிட்டுப் பேச முயன்றார்கள். குமாரின் நிலைப்பாடு இதுவாக இருந்தது : ‘நான் மட்டுமே போதும். வேறு யாரும் தேவையில்லை. ‘

சு.ரா. வெளிநாடு சென்றார். பிற நண்பர்கள் முழுநேரப் பணியில் ஈடுபட நேர்ந்தது. சலபதி இத்திட்டத்தின் பதிப்பாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

பிற ஆய்வாளர்களின் உதவியைப் பெறுவதிலும் அவர்களை அங்கீகரிப்பதிலும் சலபதிக்கோ எனக்கோ எந்தத் தயக்கமும் இல்லை. ‘அன்னை இட்ட தீ ‘க்குச் சலபதி எழுதிய முன்னுரை பு.பி. தொடர்பாக இதுவரை தமிழில் நடந்திருக்கும் பணிகள் பற்றிய முழுமையான ஒரே பதிவாகும். (இதை திண்ணை.காமில் பிரசுரிக்கும்படி ஆசிரியர் குழுவைக் கேட்டுக்கொள்கிறேன்.) இதில் வேதசகாயகுமாரின் பங்களிப்புப் பற்றி இருமுறை குறிப்பிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் நடந்த புதுமைப்பித்தன் படைப்புகள் பதிப்புக் குழுக் கூட்டத்தில் குமார் மிகக் கடுமையாக முரண்பட்டு நடந்துகொண்டார். தன்னிடம் இருந்த பு.பி. தொடர்பான ஆவணங்களை மழையில் விட்டெறிந்து அழிந்துவிட்டதாகத் தெரிவித்தார். (இக்கூட்டத்தின் பதிவை இத்துடன் இணைத்திருக்கிறேன். இப்பதிவை ஒலிநாடாவுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் பணியை விளக்கு அறக்கட்டளை மற்றும் திண்ணை.காமின் தமிழகத் தொடர்பாளராகச் செயல்பட்டு வரும் வெளி ரெங்கராஜன் அவசியம் ஏற்பட்டால் மேற்கொள்ளலாம் அல்லது வேறு ஒருவரை நடுவராகத் திண்ணை ஆசிரியர் குழு நியமிக்கலாம்.) இக்கூட்டத்திற்கு முன்னரும் பின்னரும் சலபதியைக் குமார் மிகக் கேவலமாக வசைப்பாடித் திரிந்தார். இருப்பினும் அவரது பங்களிப்பை இந்தக் கூட்டம் நடந்து எட்டு மாதங்களுக்குப் பின்னர் வெளிவந்த ‘அன்னை இட்ட தீ ‘யில் அங்கீகரிக்க சலபதி தயங்கவில்லை. குமாரின் ஆய்வின் எந்தப் பிறழ்வையும் அதில் சுட்டிக் காட்டவில்லை. எங்களுடைய பணி அனைவரின் ஒத்துழைப்புடன் செம்பதிப்பை உருவாக்குவதுதான்; பிறருடைய ஆய்வின் குறைபாடுகளை அம்பலப்படுத்துவது அல்ல என்பதில் தெளிவாக இருந்ததோம். ‘புதுமைப்பித்தன் கதைகள் ‘ தொகுதி வெளிவருவதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் குமாரின் ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ நூல் வெளிவந்தது. அதில் அவர் எங்கள் பதிப்புத் திட்டம் பற்றிய பல கடுமையான குற்றச்சாட்டுகளைப் பதிவுச் செய்தார். இந்நூலின் பதிப்பாளரும் சென்னை நண்பர்களும் ஒரு வார காலம் குமாரிடம் இந்தக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என மன்றாடி உள்ளனர். தான் செய்யாத பணியை வேறு எவரும் செய்து முடித்துவிடக் கூடாது என்ற சீரழிக்கும் முனைப்பே அவரிடம் மேலோங்கி விட்டது. இதன் காரணமாகவே ‘புதுமைப்பித்தன் கதைக ‘ளில் எங்கள் பணியை தற்காத்துக் கொள்ளும்முகமாகக் குமாரின் ஆய்வு பற்றி சில விஷயங்களைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எங்கள் பணியைத் துவங்குவதற்கு முன்னால் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளைப் பரிசீலிக்கும் பணியில் பா. மதிவாணன், அதியமான், ராஜ மார்த்தாண்டன், சி.சு.மணி, தொ.மு.சி., மீ.ப.சோமு, சுந்தர ராமசாமி போன்ற பலருடைய ஒத்துழைப்பைச் சலபதி பெற்றுக்கொண்டார்.

நாம் ஈடுபடும் பணியில் நமக்கு முன்னர் ஆய்வில் ஈடுபட்டவர்களை நமது ஆய்வில் உரிய முறையில் குறிப்பிட்டாக வேண்டும் என்பது நியதி. அனுமதி பெற வேண்டுமா ? ஆய்வின் அடிப்படை நோக்கமே சமூகத்திற்கு அது பயன்படுவதுதானே ? இன்று ஒரு கல்வித்துறை இதழில் வெளியாகும் ஒரு கட்டுரையை எடுத்துக்கொண்டால் பல்வேறு ஆய்வுகள் அதில் மேற்கோள் காட்டப்படுகின்றன. இதுதான் அங்கீகாரம்; ஆய்வு அறம். இதற்கு மேல் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை.

இன்று பல வெகுசன இதழ்களை விட காலச்சுவடு படைப்புகளுக்கு அதிக சன்மானம் அளித்துவருகிறது. இலக்கியக் குட்டையில் மீன்பிடிக்க துடித்துக்கொண்டிருக்கும் குமுதம் போன்ற இதழ்கள் இன்றும் ஒரு கவிதைக்கு வெட்கமில்லாமல் ரூ.50ஐ – பணவிடைக்கான கூலியைக் கழித்துக் கொண்டு – அனுப்பி வருகின்றன. நாங்கள் பிறரிடமிருந்து பெறும் உதவிகளுக்கு உரிய சன்மானம் வழங்குவதை ஒரு பணி முறையாகக் கொண்டிருக்கிறோம். அதைபோல் காப்புரிமைத் தொகையையும் சரியாகக் கொடுத்து வருகிறோம்.

இந்தப் பணியை மேற்கொண்ட போது உதவியவர் எவரும் சன்மானம் பற்றி அப்போது பேசவில்லை. இது பற்றிப் பேசும் சூழல் எங்களுக்கும் இருக்கவில்லை. இந்தப் பணியில் எங்களுக்குக் குறிப்பிடத்தக்க முறையில் உதவியவர்களுடன் பின்னர் நூல் விற்பனையிலிருந்து நாங்கள் பெற்ற பயனை பகிர்ந்துகொண்டோம். குமார் ‘நான் ஒத்துழைக்கிறேன். ஆனால் என்னுடைய பணியை இவ்வாறு அங்கீகரிக்க வேண்டும். எனக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது ‘ என்றெல்லாம் தெளிவாக எப்போதுமே பேசியதில்லை. மறைமுகமாக உணர்த்தியதுகூட இல்லை. நான் அவரிடம் வலிந்து சன்மானம் பற்றிப் பேசியிருந்தால் ஆய்வுக்கு விலை பேச முயன்றதாக இப்போது குற்றஞ்சாட்ட முயன்றிருக்கலாம்.

குமார் தனது ஆய்வைப் பற்றிக் குறிப்பிடும்போது பின்பாட்டாக ஒலித்து கொண்டேயிருக்கும் ‘தியாகம் ‘, ‘தேடல் ‘ பற்றி சில வார்த்தைகள். 1970களில் மாணவராகக் குமார் மேற்கொண்ட ஆய்வுப் பணி முக்கியமானது. அப்போது அவருக்கு ஆய்வுக்கான உதவித் தொகை கிடைத்திருக்கும். 1980ஐ ஒட்டி அவர் ஆய்வை முடிக்காமல் கைவிட்டு விட்டார். இதற்கு அடுத்த 10 ஆண்டுகள் அவர் தமிழ் இலக்கியச் சூழலில் இருக்கவில்லை. எதுவும் எழுதவில்லை. ஒரு இலக்கியச் சந்திப்பில்கூடக் கலந்து கொண்டதில்லை.

இந்திய அரசு நியமித்த மெஹ்ரோத்ரா கமிட்டி பரிந்துரையைப் பல்கலைக் கழக மானியக்குழு (UGC) ஏற்றுக் கொண்டதனடிப்படையில் புதிய ஊதிய விகிதத்தை 80களின் இறுதியில் அமல்படுத்த முன்வந்து (G.O. Ms. No.1785, Education (H3) Department dt.5.12. ’88) ஆணையைப் பிறப்பித்தது. இதில் ஆய்வை ஊக்குவிக்கும் பொருட்டு ஆசிரியர்களுக்கு முன்னதாகவே வழங்கப்பெறும் ஆண்டு ஊதிய உயர்வுகள் (Annual increments), பணிமேம்பாடு (Career Advancement) ஆகியன பற்றிக் குறிப்பிடப்பட்டது. இது பற்றி 09.3.1989ஆம் நாளிட்ட கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டது. பின்னர் கல்லூரிக் கல்வி இயக்குநரால் (DCE) வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்தளிக்கப்பட்டன. (DCE ‘s Proceedings RC.No.29687/Ye/90 dt.9.4.1990)

1989 மார்ச்சிலிருந்து கல்லூரி ஆசிரியர்கள் அணி அணியாகப் பி.எச்.டி.க்குப் பதிவு செய்துகொண்டனர். கிடப்பில் போடப்பட்ட ஆய்வுகள் புத்துயிர் பெற்றன. ‘ ‘1980 இல் ஆய்வு முழுமை பெற்றுவிட்ட போதிலும், 1991 இல் கேரளப் பல்கலைக் கழகத்தில் சமர்பிக்கப்பட்டது ‘ ‘ (எம். வேதசகாய குமார்; புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்; பக் – 133 (2000) தமிழினி). UGC வகுத்த ஊதிய உயர்வுப் பட்டியலின்படி குமாருக்கு அவரது அனுபவத்திற்கேற்ப மாதந்திரச் சம்பள உயர்வு மட்டும் ரூ.5700 வரை கிடைத்திருக்கலாம்.

இந்த ஆய்வின்போது அவர் பெற்றுக் கொண்ட உதவித் தொகை, இப்போது பெற்றுக்கொண்டிருக்கும் ஊதிய உயர்வுகள், பதவி உயர்வுகள், பின்னர் கிடைக்க போகும் அதிகப்படியான ஓய்வூதியம் போன்றவற்றைக் கூட்டிப் பார்த்தால் பல லட்சம் பெறும். அரசாங்கப் பணத்தில் செய்து முடிக்கப்பட்ட இந்த ஆய்வின் பயனை எவரும் அடையலாம். இதில் இடையீடு செய்ய அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அவருடைய ஆய்வைப் பயன்படுத்துபவர்கள் அதை அங்கீகரிக்க வேண்டும் என்று மட்டுமே அவர் கோரமுடியும்.

குமாரின் ஆய்வைக் கொஞ்சம் ஆய்வு செய்து பார்க்கலாம். பு.பி.ஆய்வில் அவரது பங்களிப்பு : 1. ஐந்து தொகுக்கப்படாத கதைகளை கண்டெடுத்தது 2. சுமார் 80 பு. பி.கதைகளின் முதல் பிரசுர விபரத்தைத் தொகுத்தது.

அவர் தேடி எடுத்த 5 கதைகளில் ஒன்றை மட்டுமே இப்போது ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. பிற கதைகளை அவர் கண்டெடுத்த இடம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்து வருகிறார். ஒப்பிட்டுப் பார்த்த ஒரு கதையின் பத்திகள் இடம் மாறி இருப்பதற்கு இப்போது அவர் கொல்லிப் பாவை ஆசிரியரைக் குறை கூறுகிறார். இந்தக் கதை பிரசுரமாகி சுமார் பதினாறு ஆண்டுகள் ஆகின்றன. இந்த பதினாறு ஆண்டுகளில் அவர் இதைப் பற்றி குறிப்பிட்டதில்லை. நான் இணைத்து அனுப்பியிருக்கும் பதிப்புக் குழு கூட்டப் பதிவில் தான் நகலெடுத்தவற்றை முழுமையாக நம்ப வேண்டாம் என்றும் அவர் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். அவர் தொகுத்த 80 கதைகள் பற்றிய விபரங்களில் எண்ணற்ற பிழைகள் உள்ளன. எனவே தன்னுடைய ஆய்வு பற்றி குமாரின் மிகையான சுய கணிப்பு பொருத்தமற்றது.

குமாரிடம் நாங்கள் எதிர்பார்த்த உதவிகள் இவை :

1. ஆய்வில் அவர் பயன்படுத்திய பொது மற்றும் தனியார் நூலகங்களின் பட்டியல்; அங்கு அவர் பெற்ற விபரங்கள்.

2. அவரிடமிருந்த மணிக்கொடி போன்ற இதழ்களின் சேகரிப்பு.

3. அவர் தொகுத்த புதுமைப்பித்தன் கதைகளின் பட்டியல்.

குமாரின் பட்டியல் புதுமைப்பித்தன் கதைகளின் மூலப்பிரதிகள் தேடி எடுக்க உதவக் கூடும் என்பதால் நான் அதைப் பதிப்புக்குழு கூட்டத்திலேயே கேட்டேன். அவர் தரவில்லை. பின்னர் பலமுறை அவரிடம் நினைவுபடுத்திக் கேட்டிருக்கிறேன். பின்னர் பேரா. ஜேசுதாஸனை ‘புதுமைப்பித்தன் கதைகள் ‘ அச்சுக்குப் போகும் நிலையில் தொடர்புகொண்டு ஆய்வின் நகலைக் குமார் தர மறுப்பதைக் கூறி அவரிடம் இருக்கும் பிரதியைத் தந்து உதவ முடியுமா என்று கேட்டேன். அவரும் கொடுத்து உதவினார். பட்டியலை மட்டும் ஒளிநகல் எடுத்துக் கொண்டோம். பட்டியலைப் பார்வையிட்ட சலபதி அதில் எங்களுக்குக் கிடைக்காத புதிய தகவல் எதுவும் இல்லை என்பதோடு, பல பொய்யான தகவல்கள் இருப்பதால் அதன் அடிப்படையில் ஆய்வுப் பணிகள் தொடர்வது அபத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார். இந்தப் பட்டியலை நாங்கள் பயன்படுத்தவில்லை என்பதால் குமாரை இது தொடர்பாக அங்கீகரிக்கவில்லை. பிற பங்களிப்புகளுக்காக ‘அன்னை இட்ட தீ ‘யில் அங்கீகரித்தோம். காலச்சுவடில் பு.பி.யின் தொகுக்கப்படாத படைப்புகளைப் பிரசுரித்தபோது அவரை அங்கீகரித்திருக்கிறோம்.

குமாரிடம் எங்களுக்கு அவசியமான சில மணிக்கொடி தொகுதிகள் இருந்தன. சிங்கப்பூரில் இருக்கும் நண்பர் பாண்டியன் சுந்தர ராமசாமியைச் சந்திப்பதற்காக நாகர்கோவில் வந்திருந்தார். குமாரை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தோம். குமாரின் ஆய்வுப் பணியை அறிந்த அவர் சிங்கப்பூரில் இருந்து ஒரு மணிக்கொடித் தொகுதியை தன்னுடைய செலவில் ஒளிநகல் எடுத்து குமாருக்கு அனுப்பிவைத்தார். இந்தத் தொகுதியைக் குமார் எங்களுக்கு தற்காலிகமாக அளிக்க மறுத்தார். இதன் பின்னர் மூலத்தொகுப்பைப் பாண்டியன் எங்களுக்கு அனுப்பிவைத்தார். நாகர்கோவிலில் இருக்கும் எங்கள் குடும்ப நண்பர் டாக்டர் அ.கா.பெருமாளிடமிருந்து ஒரு மணிக்கொடி தொகுதியை வாசிக்கப் பெற்றுச்சென்ற குமார் அதைத் திரும்பக் கொடுக்க மறுத்து பல ஆண்டுகள் பதுக்கி வைத்திருந்தார். இப்போது கட்டாயத்தின் பேரில் ‘புதுமைப்பித்தன் கதைகள் ‘ தொகுப்பு வெளிவந்த பிறகு திருப்பிக் கொடுத்துள்ளார்.

புதுமைப்பித்தன் தொடர்பாக நாங்கள் மேற்கொண்டுள்ள பணிகளைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.

1. செம்பதிப்புத் திட்டம். இது காலச்சுவடு பதிப்பகத்தின் செயல்பாடு. காலச்சுவடு பதிப்பகம் லாப நஷ்டம் பெறக்கூடிய ஒரு நிறுவனம்.

2. புதுமைப்பித்தன் ஆவணத் திட்டம். இது காலச்சுவடு அறக்கட்டளையின் பணி. கலைகளுக்கான இந்திய அறக்கட்டளை (IFA) என்ற நிறுவனம் காலச்சுவடுக்கு அவர்களுடைய செய்திக்குறிப்பை 1980ஆம் ஆண்டு ஜனவரியில் அனுப்பியது. இதன்மூலம் இந்த நிறுவனத்தின் இருப்பு எங்களுக்குத் தெரியவந்தது. அவர்களுக்குப் புதுமைப்பித்தன் ஆவணத் திட்டம் ஒன்றை சலபதியை முதன்மை ஆய்வாளராகக் கொண்டு காலச்சுவடு அறக்கட்டளையின் சார்பில் அனுப்பிவைத்தோம். தொண்டு நிறுவனங்களை அணுகுவது தொடர்பாக சலபதிக்கு இருந்த பெரும் மனத்தடையை நீக்க நான் அவருடன் கடுமையாக விவாதிக்க வேண்டியிருந்தது. எங்கள் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அகில இந்திய அளவில் இந்த நிறுவனம் இலக்கியப் பணிக்காக வழங்கிய முதல் நல்கை இதுதான். புதுமைப்பித்தன் தொடர்பான ஆவணங்கள், இதழ்கள், நூல்கள், புகைப்படங்கள், கடிதங்கள் ஆகியவற்றை நுண்படச் சுருளிலும் கணினி வழி அலகீட்டு முறையிலும் பதிவு செய்வது இதன் நோக்கம். இந்தத் திட்டத்தில் எங்கள் யாருக்கும் எந்த வெகுமதிக்கும் இடமில்லை. இத்திட்டத்தில் இருந்து காலச்சுவடு அறக்கட்டளை இப்போதோ பின்னரோ பொருள் ஈட்டக்கூடாது என்பது ஒரு முன் நிபந்தனையாகும். செலவழிக்கும் தொகைக்கு துல்லியமாகக் கணக்குக் காட்டவேண்டும். மீதம் இருக்கும் தொகையைத் திரும்ப அளிக்கவேண்டும்.

இத்திட்டம் 2001 ஜூனில் முடிவதாக இருந்தது. இப்போது பல புதிய ஆவணங்கள் கிடைத்துள்ள நிலையில் உரிய அனுமதி பெற்று 2001 டிசம்பர் வரை இதை நீடித்துள்ளோம். இத்திட்டம் முடிவடைந்து ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் குறுந்தட்டுகளை எங்களிடம் ஒப்படைத்ததும் ஆராய்ச்சியாளர்கள் காலச்சுவடு அலுவலகத்தில் அவற்றை பார்வையிடலாம். அல்லது குறுந்தட்டிற்கு உரிய தொகை + படியெடுப்பதற்கான தொகை + தபால் செலவு கொடுத்து அவற்றை எங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்கள் கணினியிலே பார்வையிடலாம். ஆவணங்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு தொழில் நடத்திக்கொண்டிருக்கும் ‘ஆராய்ச்சியாளர்கள் ‘ எங்கள் திட்டம் பற்றி பதற்றமடைவது புரிந்துகொள்ளக் கூடியதே.

ஆய்வுகள், ஆய்வுத் தரவுகள் தொடர்பாகத் தனிச்சொத்து மனோபாவம் கொண்டவர்கள் எங்கள் ஆய்வின் மூலம் அவை தமிழின் பொதுச் சொத்தாவதை விரும்பாத நிலையில் ஒவ்வொரு கட்டத்திலும் இடையூறுகளை ஏற்படுத்தி அவதூறுகளைக் குவித்து வருகின்றனர்.

குமாரின் எழுத்துகளிலும் பேச்சுகளிலும் உள்ள சில உள்முரண்களைப் பார்க்கலாம்.

1. அவருடைய புதுமைப்பித்தன் கதைப் பட்டியலை நாங்கள் ‘பயன்படுத்தி ‘க் கொண்டது பற்றி.

அவரது ஆய்வேட்டை சு.ரா.விடம் அவர் படிக்கக் கொடுத்ததும் அது பல நாட்கள் எங்கள் வீட்டில் இருந்ததும் உண்மைதான். அவராக விருப்பப்பட்டுச் செய்த ஒரு காரியத்தை இன்று எங்களுக்கு எதிராகத் திருப்ப முயல்வது சரியல்ல. அந்த ஆய்வேட்டை நானும் படித்திருக்கிறேன். ஆனால் குமார் குறிப்பிடுவதுபோல அது 7 வருடங்கள் இங்கு இருக்கவில்லை. பு.பி.திட்டத்தை நாங்கள் தொடங்கியதை அடுத்து குமார் அதை எடுத்துச் சென்று விட்டார். அந்த ஆய்வேட்டிலுள்ள கதைகளின் பட்டியலை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று நான் கூறுவதின் அடிப்படையில் யாரும் இதை நம்பவேண்டியதில்லை. பதிவு செய்யப்பட்டுள்ள கீழ்க்கண்ட செய்திகளைக் கவனியுங்கள். உண்மை விளங்கும்.

அ. ‘சர்வதேச ஆய்வு நெறிமுறைகளின் படி என் ஆய்வேட்டை அவசியம் அவர் (வேங்கடாசலபதி) பார்த்திருக்கவேண்டும். அதுவே உண்மையான ஆவணம். ‘ (எம். வேதசகாய குமார், சொல் புதிது, ஏப்ரல்-ஜூன் 2001 பக்.24)

ஆ. ‘காலச்சுவடு நிறுவனம் செம்பதிப்பினை உருவாக்கிக் கொண்டிருந்தபோது முதுபெரும் பேரா. ஜேசுதாஸன் அவர்களிடமிருந்து என் ஆய்வேட்டைப் பெற்றுக்கொண்டிருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ‘ (எம். வேதசகாய குமார், சொல் புதிது, ஏப்ரல்-ஜூன் 2001 பக்.24)

இ. பதிப்புக் குழு பதிவில் நான் குமாரிடம் சொல்வது இது.

‘கண்ணன் : காலைல பேசினதுல . . . எந்தெந்தக் கதைகளுக்கு ஒரிஜினல் இல்லைங்கிற லிஸ்ட் இருக்கு. வேதசகாய குமார் இந்த விஷயத்துல உதவ முடியும்ணு நினைக்கிறேன். அவரோட தீஸிஸ்ல கால வரிசைல பெருமளவு கதைகள் குறிப்பிட்டிருக்கார். Appendix ஐ ஜெராக்ஸ் பண்ணிக் கொடுங்க. ஒரிஜினலை trace பண்ணவும் பாட வேறுபாடுகளைக் கண்டுபிடிக்கவும் உபயோகமா இருக்கும். ‘ (பதிப்புக் குழு கூட்டப் பதிவு இணைக்கப்பட்டுள்ளது.)

சு.ரா.விடம் அவரது ஆய்வேட்டைப் படிக்கக் கொடுத்தது பற்றியும் அது நீண்ட நாட்கள் இங்கு இருந்ததைப் பற்றியும் விளக்கமாகக் குறிப்பிட்டு நாங்கள் அதை பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறார் குமார். இது உண்மையானால் சலபதி அந்த ஆய்வேட்டை படித்துப் பார்த்திருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிடுவது ஏன் ? நாங்கள் கேட்கும்போது கொடுக்க மறுத்துவிட்டு இப்போது இந்தக் கேள்வியை எழுப்புவது எந்த விதத்தில் நியாயமானது ? இவருடைய ஆய்வேட்டை நாங்கள் ரகசியமாக பயன்படுத்திக் கொண்டிருந்தால் எதற்காகப் பின்னர் அதைப் பேரா. ஜேசுதாஸனிடம் இருந்து பெறவேண்டும் ? நான் ஏன் பதிப்புக் குழுக் கூட்டத்தில் பட்டியலை ஒளிநகல் எடுத்துத் தரும்படி குமாரிடம் கேட்கவேண்டும் ? பதிப்புக் குழுக் கூட்டத்தில் நாங்கள் சலபதியின் பட்டியலை விநியோகித்தபோது குமார் ஏன் அப்போது இந்தக் கேள்விகளை எழுப்பவில்லை ? மேலும் இந்தக் கூட்டப்பதிவில் குமார் சலபதியின் பட்டியலைப் பார்வையிட்டுவிட்டு தன்னுடைய பட்டியலில் இல்லாத தகவல்கள் அதில் இருப்பதை அங்கீகரிப்பதை வாசகர்கள் கவனிக்கவேண்டும்.

2. தழுவல் பிரச்சனை பற்றி.

குமார் சொல் புதிது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :

‘புதுமைப்பித்தனின் தழுவல்கள் குறித்து க.நா.சு. உள்ளிட்ட விமர்சகர்கள் முன்வைத்த எல்லாக் குற்றச்சாட்டுகளையும் ஒரு செம்பதிப்பாசிரியர் மூலங்களைத் தேடிப்பெற்று, ஒப்பிட்டு, பார்த்திருக்கவேண்டும். ‘ ‘மூலங்கள் கிடைக்கவில்லை ‘ ‘ என்று தொகுப்புரை எழுத, தொகுப்பாசிரியர் எதற்கு ? மெய்ப்பு நோக்காளர் போதுமே! பெரும்பாலான மூலங்களின் பெயர்கள் எனக்குத் தெரியும். தமிழ்நாட்டில் யார் யாருக்குத் தெரியும் என்றும் தெரியும். ‘ (சொல் புதிது, ஏப்ரல் – ஜூன் 2001)

பதிப்புக் குழுக் கூட்டத்தில் தழுவல் பிரச்சனை பற்றிப் பேசியிருப்பதை மேற்படிக் கூற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அது வருமாறு :

‘புதுமைப்பித்தனோட தழுவல் கதைகள் எல்லாமே பெரிய எழுத்தாளர்களோட கதைகள் அல்ல. பாப்புலரா அன்று படிக்கப்பட்டது ஆங்கிலக் கதைகள்தான். பு.பி. அந்த மாதிரியான கதைகளைத்தான் முதலில் எழுதினார் (sic). இந்தக் கதைகளுக்கான மூல ஆங்கிலப் படைப்பைக் கண்டுபிடிப்பது சுலபமான வேலையல்ல. சாதாரணமான ஆங்கில, பிரெஞ்சு எழுத்தாளர்களோட கதைகளைத்தான் மொழிபெயர்த்திருக்கிறாரு. அகிலன் எழுதின (sic) கதையையோ கல்கி எழுதின (sic) கதையையோ நீங்க அவ்வளவு சுலபமாகத் தேடி எடுத்திட முடியாது. க்ரியேட்டிவ் எழுத்தாளரோட கதைதான் நிலைச்சு நிற்கும். அதுவும் போக எந்த நூல் நிலையத்துலேயும் ஆங்கில ஜர்னல்களப் பாதுகாத்து வைக்கிற பழக்கம் இல்ல. எங்க கல்லூரி நூலகத்துலகூட தமிழ் ஜர்னல்தான் பாதுகாத்து வச்சிருக்கோம். கன்னிமாராவில்கூட ஆங்கில ஜர்னல்கள் பாதுகாத்து வைப்பதில்ல. ஆங்கில மூலத்தைக் கண்டுபிடிச்சு தழுவலை உறுதிப்படுத்துவது என்பது முடியாத காரியம். ‘ (பதிப்புக் குழுக் கூட்டப் பதிவிலிருந்து)

தழுவல் கதைகளின் மூலங்கள் பற்றித் தான் அறிந்த விபரங்களைக் குமார் மறைத்து வைத்திருப்பது முறையா ?

3. செம்பதிப்பு முயற்சி பற்றி குமார் பதிப்புக் குழுக் கூட்டத்தில் கூறிய கீழ்க்கண்ட கருத்துக்கள் தனி கவனத்துக்குரியவை.

‘நானும் எங்க பேராசிரியரும் டிஸ்கஸ் பண்ணும்போது இதழ்ல வந்ததைத்தான் மூலமா எடுத்துக்கணும். பத்திரிகை ஆசிரியர் எடிட் பண்ணியிருந்தாலும் பிரச்சனை இல்லை. முதல் எடிஷனைத்தான் (sic) மூலமா எடுத்துக்கணும். தொகுப்பை மூலமா எடுத்துக்கக்கூடாது என்றார். எனக்கும் அந்தக் கருத்துடன் உடன்பாடு இருக்கிறது. தொகுப்பு கொண்டு வரும்போது வேறு சில காரணங்களினால் வேற சில மாற்றங்கள் கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இதழ்லருந்து போறது என்பது நமக்குச் சவாலான ஒரு விஷயமாகத்தான் இருக்கும். இதழ்ல இந்த மாதிரி இருக்கு; தொகுப்புல இன்ன மாற்றம் ஆயிருக்குன்னு அதைக் குறிப்பிட்டு வெளியிடலாம். இது humanly சாத்தியமா என்று நாம் பார்க்கவேண்டும். Utopian மாதிரி போயிடும். ஷேக்ஸ்பியரோட எடிஷன்ல்லாம் அப்டி வந்திருக்குதுன்னு நினைக்கறேன். Western Authors பலபேருக்கு variation உள்ள எடிஷன் கொண்டு வந்திருப்பது மாதிரி புதுமைப்பித்தனுக்கும் கொண்டு வர முடியுமா என்பதைப் பற்றி தீவிரமா யோசிக்கணும். மூலம் எதுங்கறதையும் கொஞ்சம் ஆலோசிச்சு, கவனமாகத்தான் முடிவு செய்யணும். நாலு ஐந்து கதைகளை சாம்பிளுக்கு எடுத்து எது possible மூலமா இருக்கக்கூடும் எது மாற்றப்பட்டிருக்கும் என்று கவனமாகப் பார்த்துத்தான் எடுக்கவேண்டும். ‘ (பதிப்புக் குழுக் கூட்டப் பதிவிலிருந்து.)

4. பதிப்புக் குழுக் கூட்டப் பதிவில் குமார் ‘எனக்கு ஈகோவே கிடையாது ‘ என்று கதைத்திருப்பதை கவனியுங்கள். பின்னர் கூட்டத்தில் நாங்கள் வினியோகித்த புதுமைப்பித்தன் கதைகளின் பிரசுரப் பட்டியலைப் படித்து விட்டு அவர் கூறுவதோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

‘வே.கு.: (மிகுந்த கோபத்தோடு) அந்த லிஸ்ட்ல கடைசியா 3 கதை இருக்கே, சாமாவின் தவறு, நம்பிக்கை, கண்ணன் குழல் இதுக்கு காலம் கிடைக்கவில்லைன்னு போட்டிருக்கீங்க. இந்தக் கதைகள் நான் தேடி எடுத்தவை. இவைகளுக்கு காலம் நான் கொடுத்த காலம் தான். காலம் தெரியாம தேடி எடுத்திருக்க முடியாதே. நிர்விகற்ப சமாதி காலம் தெரியலைன்னு போடலையே நீங்க. உங்களுக்குக் காலம் கிடைச்சிடுச்சா ? எனக்கே காலம் தெரியலை. உங்களுக்கு காலம் தெரிஞ்சிடுச்சா ? ‘ (பதிப்புக் குழுக் கூட்டப் பதிவிலிருந்து.)

இதற்கு இன்னொரு உதாரணம் புதுமைப்பித்தனின் ‘அன்னை இட்ட தீ ‘ என்ற முற்றுப்பெறாத நாவலின் கையெழுத்துப் பிரதி கிட்டிய பின்னர் குமார் கூறுவது அது :

‘புதுமைப்பித்தனின் முடிவுபெறாத நாவலாகச் சொல்லப்படும் ‘அன்னை இட்ட தீ ‘ தொ. மு. சி. ரகுநாதனிடமிருந்து கையெழுத்துப் பிரதியிலிருந்து (sic) கிடைத்ததாக நூல் தொகுப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி குறிப்பிட்டுள்ளார். ‘ ‘ (புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் (2000), தமிழினி, பக்.132) ‘

புதுமைப்பித்தன் கையெழுத்துப் பிரதியை குமார் சந்தேகிப்பதற்குக் காரணம் என்ன ? புதுமைப்பித்தன் ஆய்வாளரான குமார் இதுவரை புதுமைப்பித்தனின் கையெழுத்துப் பிரதி எதையும் கண்டதில்லை!

5. பதிப்புக் குழுக் கூட்டத்தின் கீழ்க்கண்ட இரு பதிவுகள் தனி கவனத்திற்குரியவை.

‘சு.ரா.: குமார் என்ன சொல்றார்னா அவரிடம் புதுமைப்பித்தன் சம்பந்தமா என்னென்ன புஸ்தகங்கள் இருந்ததோ அச்சு வடிவத்திலயும் சரி, குமார் கையெழுத்தா எழுதியிருந்ததையும் அவர் முற்றாக அழித்துவிட்டார். ஆகவே இப்ப நாம் கொண்டு வரப்போற பதிப்புக்கு அவர் தரக்கூடியதாக எதுவுமே அவரிடம் இல்லை. சில புஸ்தகங்கள் நமக்கு தேவைப்படுபவை எந்தெந்த நூல் நிலையத்தில் இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். அந்தக் தகவலை அவர் நமக்கு தரலாம். என்னென்ன விஷயத்தை அவர் அழித்திருக்கிறாரோ அதைத் திரும்பப் பெறுவது சிரமமான காரியமல்ல என்கிறார். அவர் எதையெதை அழித்தாரோ அதை எங்கெங்கே தேடணும்னு நாம் பதிவு செய்துட்டோம்னா நடைமுறைல அந்தக் காரியத்தை நாம பாக்கலாம். ‘ (பதிப்புக் குழுக் கூட்டப் பதிவிலிருந்து.)

‘கி.அ. சச்சிதானந்தன் (குமாருக்கு எதிர்வினையாக) : கால வரிசைப்படி அவரோட படைப்புகளத் தரணுங்கிறதுதான் நோக்கமே தவிர வேறெந்த, மதிப்பீடு சார்ந்த விமர்சனத்துக்கும் இடமேயில்லை. தரம் சார்ந்த விஷயத்தை வாசகன் தான் தீர்மானிச்சுக்கணும். ‘

6. ஐந்து கதைகளுக்குக் குமார் எழுதிக் கொடுத்தப் பாடத்தைப் பற்றி சலபதி இப்போது சந்தேகம் எழுப்பும்போது மறுக்கும் குமார் பதிப்புக் குழுக் கூட்டத்தில் இது பற்றி நேர்மையாகக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்:

‘நான் எழுதி எடுத்த கதைகள் இருக்கே. அதைத் திரும்பவும் original கூட refer பண்ண வேண்டியிருக்கு. ஏன்னா நான் எழுதி எடுத்தபோது mistake விழுந்திருக்க வாய்ப்பிருக்கு. ஒருநாள் கூடுதலா இருந்தா Financial Problem வருமேன்னு அவசர அவசரமா எழுதி எடுத்தேன். Mental tensionப் எழுதும்போது mistake விழுந்திருக்க நிறைய வாய்ப்பிருக்கு. ‘ (பதிப்புக் குழுக் கூட்டப் பதிவிலிருந்து.)

7. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 28.1.99 அன்று புதுமைப்பித்தன் கருத்தரங்கம் நடைபெற்றது. சலபதியும் நானும் கலந்துகொண்டோம். அதில் பேசிய குமார் ‘சாளரம் ‘ சிறுகதை புதுமைப்பித்தன் எழுதியதுதானா என்ற ஒரு மறுபரிசீலனை தனக்கு இருப்பதாகவும் வேறு புறச்சான்று கிடைக்காத வரை இக்கதையை அடுத்து வரும் புதுமைப்பித்தன் கதைகளில் சேர்க்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். இதை அப்போது இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கட்டுரை படித்த ராஜ் கெளதமனிடம் பேசி உறுதிப்படுத்திக் கொண்டேன். அவருடைய பெயரை இந்த மறுப்பில் பயன்படுத்தவும் அனுமதி பெற்றுள்ளேன்.

8. ‘புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ‘ நூலிலும் திண்ணை கட்டுரையிலும் சொல் புதிது கட்டுரையிலும் குமார் காலச்சுவடுமீதும் என்மீதும் பல தனிப்பட்ட முறையிலான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இவ்வாறு ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த விவாதத்தைத் துவங்கிவைத்த குமார் இதற்கான ஏதேனும் ஒரு ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். முதலில் குற்றஞ்சாட்டியவர் என்ற முறையில் அவருக்கு இந்த கடப்பாடு உண்டு. எங்கள் இருவருக்குமே நண்பர்களான நாஞ்சில் நாடன், அ.கா.பெருமாள், நெய்தல் கிருஷ்ணன் ஆகியோரில் யாரேனும் ஒருவரிடமிருந்து அவர் முன்வைக்கும் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டிற்கு ஒப்புதலைப் பெற்றுக் காட்டும்படி வேண்டுகிறேன். இந்தப் பிரச்சனைகளின் பின்னணி இவர்களுக்குத் தெரியும்.

9. குமாரின் சொல் புதிது கட்டுரையின் ‘பின்குறிப்பு 2 ‘ இவ்வாறு உள்ளது.

‘மேற்குறிப்பிட்ட பிரதிகளைப் பெற்று, பரிசீலித்தோம். இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை உறுதி செய்கிறோம். பிரதி வேண்டுவோர் செலவை ஏற்கத் தயாரெனில் எழுதலாம். (ஆசிரியர் குழு). ‘

ஒரு இதழின் ஆசிரியர் குழு வெளியிடும் குறிப்பு ஒரு கட்டுரையின் பின்குறிப்பாக இடம்பெறுவதை இப்போதுதான் முதன் முதலில் காண்கிறேன். மேலும் இந்தக் குறிப்பு சொல் புதிது ஆசிரியரின் ஒப்புதலோ அல்லது ஆசிரியர் குழுவின் ஒப்புதலோ இல்லாமல் வெளியிடப்பட்டது என்று குற்றஞ்சாட்டுகிறேன். சொல் புதிது ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலை குமார் எழுத்து பூர்வமாகப் பெற்று திண்ணை ஆசிரியர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது இந்தக் குறிப்பை மோசடியாக வெளியிட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

10. கலைகளுக்கான இந்திய அறக்கட்டளைக்கும் காலச்சுவடு அறக்கட்டளைக்கும் இடையிலான அனைத்து கணக்கு விபரங்களையும் திட்டத்தின் விபரங்களையும் வெளி ரெங்கராஜன் அல்லது திண்ணை ஆசிரியர் குழு நியமிக்கும் நடுவரின் பார்வைக்கு வைக்க தயாராக இருக்கிறேன்.

11. புதுமைப்பித்தன் படைப்புகளின் உரிமை அவரது ஒரே வாரிசான திருமதி. தினகரி சொக்கலிங்கத்திடம் உள்ளது. ‘புதுமைப்பித்தன் கதைகள் ‘ பதிப்பில் © தினகரி சொக்கலிங்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் படைப்புகளை வெளியிடும் உரிமையை ஒரு உடன்படிக்கை மூலம் முறைப்படி பெற்று அதை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வருகிறோம். புதுமைப்பித்தனின் காப்புரிமையை நாங்கள் வாங்கிவிட்டதாகக் குமார் கூறுவது பொய்.

(கண்ணன் காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர்)

Series Navigation