புதுக்கவிதைகளில் தாய்மை

This entry is part [part not set] of 23 in the series 20100606_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை,
E.Mail. Malar.sethu@gmail.com
உலகில் உன்னதாமான உறவு , பெருமை தரக்கூடிய உறவு, அன்னை என்ற உறவேயாகும். ஆயிரம் உறவுகளில் கிடைக்காத பெருமை அன்னை என்ற உறவில்தான் ஒரு மனிதனுக்குக் கிடைக்கிறது. “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்“, “தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை“, என அன்று முதல் இன்று வரையிலும் கவிஞர்கள் தாயின் சீர்மையைப் பாடிக் கொண்டே இருக்கின்றனர். தாய்மையின் சிறப்பை பாடாத கவிஞர்களோ, போற்றாத மகான்களோ, இலக்கியங்களோ என எவையும் இல்லை எனலாம். அவ்வகையில் புதுக்கவிதைகளிலும் அன்னை பற்றிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
தாயின் நினைவுகள்
ஒருவர் இல்லாதபோதுதான் அவரைப் பற்றிய உண்மைகள் புலனாகும். அவரின் அருமையும் நமக்குத் தெரியும்.“வெயிலின் அருமை நிழலில் தெரியும்“ என்பதற்கேற்ப அதுவரை தேவையற்றது எனக் கருதிய நாம் அவரைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு, அவரைப் பற்றி நினைத்துக் கொண்டே இருப்போம். அன்னை இருந்தபோது அவரது அருமை அறியாத ஒருவனது அன்னைபற்றிய நினைவு, குழம்பை உண்ணும்போது வருகிறது. அன்னையின் நினைவுடன் அவர் வைத்த குழம்பும் நினைக்கப்படும் நிலையை,
‘‘எளியது தான்
என்றாலும் அம்மா வைக்கும் குழம்பு
உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பது“
(பழமலய், சனங்களின் கதை, ப.,50)
என்ற கவிதை தெளிவுறுத்துகிறது. இக்கவிதையில் தாயின்மேல் பாசம் வைத்த மகனின் உள்ளத்தை நாம் காணலாம். குழம்பின் சுவை நாவோடு நீங்காது உயிரோடு சேர்ந்திருக்கிறது என்று கவிஞர் குறிப்பிடுவது சிறப்பிற்குரியது.
ஒருவன் வளர்ந்த பின்னும் அவனது மனதில் சின்னஞ்சிறு வயதில் தன்னைப் பாலுட்டிச் சீராட்டி வளர்த்த தாயின் நினைப்பு நீங்காது இடம்பெற்றிருக்கும். தாயின் நினைவு வரும்போதெல்லாம், அவள் தன்னைக் கவனித்த கவனிப்பு மகனின் மனதில் எழுகிறது. இத்தகைய உணர்வினை,
‘‘தலைவாரி, பவுடர்பூசி கன்னத்ல் திருஷ்டியாய்
வைத்த சாந்துப் பொட்டுமாய் குழந்தையின் முகம் திருத்தி
பசியாற முலை சூப்பக் கொடுக்கும் விலக்கிய் மாராப்போடு
புன்னகைத்த அம்மாவின் பாச நெகிழ்வை
எழுத முடிந்த்தா ஒரு வரியிலேனும் கடிதம்“
(ஆசு, என்றொரு மௌனம், ப.,74)
எனக் கவிஞர் ஆசு நன்கு புலப்படுத்தியுள்ளார். பணிநிமித்தமாகப் பிள்ளைகள் வெளியூரில் தாயின் பாசநினைவுகளுடன் இருந்தாலும் தாய்க்கு ஒரு கடிதம் எழுதாமையை இக்கவிதை எடுத்துரைக்கிறது.
அன்னையின் உணர்வுகள்
அன்னையின் சிறப்பு அளவிடற்கரியது. ஒருவனுக்குச் “சொர்க்கம் என்பது தாயின் காலடியில் தான் உள்ளது“ என்று நபிபெருமானார் மொழிந்து அன்னையின் மேன்மையை உலகிற்கு உணர்த்தினார். அத்தகைய பெருமைக்குரிய அன்னை எப்போதும் தனது குழந்தைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாள். அவளது குழந்தைகள் அவளைப் பற்றி நினைக்காதபோதும் அவளது எண்ணங்கள் அவர்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கும். இத்தகைய தாயின் நிலையை,
‘‘ரயிலேறிப் போன மகனை
கடிதங்களில் எதிர்பார்த்து நசுங்கிய
தூணாய் இன்னும் திண்ணையில் அம்மா“
(பழநிபாரதி, வெளிநடப்பு, ப.,15)
எனக் கவிதையில் பழநிபாரதி வெளிப்படுத்துகிறார்.
எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் தன்னை வளர்த்து ஆளாக்கிய தாயின் சிறப்பினை,
‘‘எழுதப் படிக்கவே
தெரியாத நீ எழுதிய
ஒரே கவிதை
நான்“ (சோலைஇசைக்குயில், தேசியக் கொடியின் கிழிசல்கள், ப.,1)
எனப் பெருமையுடன் பிள்ளைகள் மொழிவதுபோன்று கவிஞர் சோலைக்குயிலின் கவிதை அமைந்துள்ளது.
தாயே ஒரு குழந்தைக்கு முதல் ஆசான். அவளே தன் குழந்தைகளுக்கு உலகில் உள்ள அனைத்தையும் அறியச் செய்கிறாள். கல்லூரியில் கல்வி பயின்றாலும் தாயிடம் முதன்முதலில் கற்ற கல்வியே குழந்தைகளுக்கு என்றும் உதவுகிறது. இதனை,
‘‘ஊர்ப்பேச்சை ஒதுக்கித்தள்ள
எதையும் தாங்கும் இதயம் கொள்ள
அம்மா உன்னிடம் தான் கற்றேன்“
(அன்பாதவன், செம்பழுப்பாய்ச் சூரியன், ப.,85)
எனக் கவிஞர் அன்பாதவன் எடுத்துரைக்கிறார். ஊரார் பேசும் வீணான பேச்சுக்களை பொருட்படுத்தாதே, எதையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும் என்ற தாயின் அறிவுரை மகனின் வாழ்க்கையில் என்றும் உதவும் ஊன்றுகோலாகத் திகழ்கிறது என்பதை கவிஞர் சுட்டுவது குறிப்பிடத்தக்கது.
தாயானவள் துன்பத்தைப் பொருத்துக்கொண்டு தன் குழந்தைகளுக்கு இன்பத்தைக் கொடுக்கிறாள். குழந்தைகளின் எதிர்காலம் வளமுடன் அமைய வேண்டும் என்பதற்காக எத்தகைய துன்பம் வந்தாலும் அதனைத் தாங்கிக் கொள்கிறாள். குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயின் தியாகத்தை,
‘‘நாம் ஒரு கிரீடம் சுமக்க
இவள் எத்தனை
சிலுவை சுமக்கிறாள்“ (வல்லம் தாஜீபால், மார்கழிவீதி, ப.,1)
என்ற புதுக்கவிதை எடுத்துக்காட்டுகிறது.
அன்னையானவள் தான் துன்புற்றாலும் அது பிள்ளைகளுக்குத் தெரியக் கூடாது என்று நினைக்கும் உன்னத உள்ளம் படைத்தவள். ஏனெனில் அதனைப் பார்த்து குழந்தைகள் மனவருத்தம் அடைவார்கள் என்று கருதி தனது துன்பத்தை மறைத்துக் கொண்டு வாழ்பவள். குழந்தைகளின் நல்வாழ்விற்காக அனைத்தும் செய்பவள் என்பதை,
‘‘சோகப் பருந்தின்
நிழலும் என்மேல் விழாமல்
சிறகால் உயிர்காத்த
வாய்மைத் தாய்மையே
எல்லாமும் செய்தவள் நீ
எங்கள் வாழ்வு தவறாதிருக்க“
(அன்பாதவன், செம்பழுப்பாய் சூரியன், ப.,58)
என்ற கவிதையில் கவிஞர் அன்பாதவன் குறிப்பிடுகிறார். தனது துன்பங்களை உள்ளடக்கிக் கொண்டு தனது குழந்தைகளை வாழ்க்கையில் முன்னேற வைக்கும் தாயின் பண்பு மிக உயர்வானது. அத்தாயின் உயர்ந்த உள்ளத்தை,
‘‘அழுதும் கரை சேர்த்தாய் அம்மா
என் கவிதைக்கேனும்
வாய்க்கக் கூடுமோ
உனக்கான ஒரு புன்னகை“ (ஆசு, என்றொரு மௌனம், பக்., 64-65)
எனக் கவிஞர் ஆசு படைத்துக் காட்டுகிறார். இக்கவிதையில் தாய்க்காக வருந்தும் மகனின் உள்ளத்தையும் கவிஞர் படைத்துக்காட்டியிருப்பது நோக்கத்தக்கதாகும்.
தாயின் பெருமையினை உணர்ந்த மகன் ஒருவன்
‘‘மறுபிறப்பு என்று உண்டாயின் தாயே
அதில் நீ நானாகவும்
நான் நீயாகவும்
பிறக்க வேண்டும்“ (வேர்கள், ப.,15)
என்று கூறுவதாகக் கவிஞர் துரைப்பாண்டியன் குறிப்பிடுகிறார். தாய் தனக்குக் குழந்தையாகப் பிறந்து அவள்தன்னைக் கவனித்த்தைப் போன்று தான் அவளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மகனின் நல்லுணர்வை இதில் கவிஞர் எடுத்துரைக்கின்றார்.
இவ்வாறு புதுக்கவிதைகளானது தாய்மையின் சிறப்பை எடுத்துக்கூறும் சிறந்த கலைவடிவமாகத் திகழ்கிறது. தாய்மையைப் போற்றும் தமிழ்ப் பண்பாடு இக்கவிதைகளில் சிறந்து நிற்பது போற்றுதற்குரியதாக அமைந்தள்ளது.

Series Navigation