புதிய மாதவிக்கு கால்டுவெல் பற்றி

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

அரவிந்தன் நீலகண்டன்


புதிய மாதவி,

கால்டுவெல் குறித்து ஒரு நூல் எழுதிக்கொண்டிருப்பதால் சில விசயங்களை இப்போது இங்கே வாதிக்கவில்லை. நீங்கள் மேற்கோள் காட்டிய ஜேம்ஸ் மாசேயின் வார்த்தைகள் வழக்கமான பிராம்மண வெறுப்பு வரலாற்றுப்பார்வை மட்டுமே. இதனை முழுமையாக ஆராயலாம்.

வேதங்களை எழுதியது பிராம்மணர்கள் மட்டுமே அல்ல. வேதங்களை ஓதுவதும் கல்வியறிவும் ஒன்றல்ல. வேதங்களை ஓத கேட்க உரிமை மறுக்கப்பட்டதென்பது வேதங்களை கற்க உரிமை மறுக்கப்பட்டதற்கோ அல்லது பொதுவான கல்வியறிவை -சமஸ்கிருத மொழியறிவு உட்பட- பெறுவதற்கு உரிமை மறுக்கப்பட்டதென்பதற்கோ ஆதாரமல்ல. மாறாக அத்தகைய கல்வியறிவு அனைத்து மக்களிடமும் பரவலாக இருந்தது என்பதே 1856-க்கு அதாவது மெக்காலே கல்வி முறை புகுத்தப்படுவதற்கு முந்தைய நிலை.

சமுதாய வேறுபாடுகளை மிசிநரி-காலனிய கல்வி முறை அதிகரித்தது என்பதே உண்மை. கீழே இருக்கும் மேற்கோள் ஒரு அமெரிக்க பேராசிரியர் ஆப்பிரிக்காவில் நிகழ்த்திய பேருரையிலிருந்து:

19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பிரிட்டிஷ் உயர் கல்வி முறையானது மேலடுக்கு மக்களுக்கு உரியதாகவே இருந்தது. அதுவும் பெரும்பாலும் பிறப்படிப்படையில் மேலடுக்கில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமே உரியதாக அமைந்திருந்தது. ஆக்ஸ்போர்டிலும் காம்ப்ரிட்ஜிலும் நுழைவது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட விஷயமாக அமைந்திருந்தது. ஆங்கிலிக்கன் சபை உறுப்பினர்களாகவும் பெரும்பாலும் மேல்சாதி பிரபுத்துவ குடும்பங்களைச் சார்ந்த ஆண்மக்களாகவும், மேல்-நடுத்தர வகுப்போராக இருப்போர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்&.ஆப்பிரிக்கக் காலனிய நாடுகளில் தொடங்கப்பட்ட மிஷினரி கல்விசாலைகளில் பிரான்ஸிலும் பிரிட்டனிலும் வழக்கில் இருந்த இதே மேல்சாதி கல்விமுறையே அமுல்படுத்தப்பட்டது (Clark Kerr, The Great Transformation in Higher Education, 1960-1980, SUNY Press, 1991,பக்.8)

இங்கு நான் மேற்கோளை வேண்டுமென்றே மேல்சாதி என்றே மொழி பெயர்த்திருக்கிறேன். ஏனென்றால் அங்கே பிறப்படிப்படையிலான மேல்தட்டு மக்களே உயர்கல்விசாலைகளுக்கு செல்ல முடிந்தது.

மனு ஸ்மிருதியின் சட்டதிட்டங்களே ஏதோ இங்கே நிலவிய கறாரான சட்டம் என்பதே அடிப்படையில் தவறானது. இன்னும் சொன்னால் ஈயம் காய்ச்சி ஊற்றுவதும் நாக்குவெட்டுவதும் குறித்த ஸ்மிருதி மேற்கோள்கள் எப்போதிலிருந்து பொது புத்தியில் நுழைந்தது என்பதை அவதானித்தால் விஷயம் தெளிவாகும்.

அடுத்ததாக பிராம்மணர்கள் பிராம்மணர்கள் என்கிறோம். அவர்கள் யார்? வெளியிலிருந்து வந்தவர்களா? ஆரியர்களா? மரபணுவியலும் அகழ்வாராய்ச்சியும் அந்த கருதுகோளை இல்லையென மறுத்துவிட்ட நிலையில் பிராம்மணர்கள் என்பவர் யார் என கேள்விக்கு சமூகவியல் என்ன பதிலைச் சொல்லும்? அவர்கள் எங்கிருந்து தோன்றியிருக்க இயலும்? நிச்சயமாக அந்தந்த பிராந்தியங்களின் சமூகக் குழுக்களிலிருந்துதான். அந்த சமூகக் குழுக்கள் அதற்கு முன்னால் என்னவாக இருந்தார்கள்? வரலாற்றில் ஆதாரங்கள் நிரம்பிக்கிடக்கின்றன. சித்பவன் பிராம்மணர்கள் மீனவசமுதாயங்களிலிருந்து உருவானவர்கள் என்பதை சமூகவியலாளர் ஐராவதி கார்வே நிறுவுகிறார். தோத்தாத்ரி எப்படி ஸ்ரீ ராமானுஜர் பல்வேறு சாதிகளிலிருந்து அய்யங்கார்களை உருவாக்கினார் என சொல்கிறார். ஆனால் இன்றைக்கு சித்பவன் பிராம்மணர்களும் அய்யங்கார்களும் கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்கள் இங்கே காலனியாதிக்க ஊடுருவிகளாக உள்ளே நுழைந்தவர்கள் என திராவிட இயக்கத்தவர்கள் சொல்கிறார்கள். அடிக்கடி ஈவெராவியர்கள் சொல்லும் ஒரு வசனம் உண்டு. “எங்கள் அய்யா அவர் சொன்ன வார்த்தைகளையே ஆராய சொன்னவர் அப்படியே ஏற்றுக்கொள்ள சொன்னவர் அல்ல” என்று. அப்படி சொல்பவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி ஒன்றுண்டு “உங்கள் அய்யா சொன்னவற்றில் நவீன அறிவியலும் அறிதலும் நிராகரித்தவற்றை நிராகரித்து நீங்கள் எப்படி அதை முன்னெடுத்துச் சென்றிருக்கிறீர்கள்?” என. ஆரிய-திராவிட சட்டகத்தை எடுத்துவிட்டால் அதன் பின்னால் நீங்கள் சாதியத்தை அதன் வளர்ச்சியை அதன் செயல்பாட்டை அதனை எதிர்கொள்ள வேண்டிய முறைகளை எப்படி தீர்மானிப்பீர்கள்? சாதியம் என்பதற்கும் காலனிய சமூக-பொருளாதார காரணிகளுக்குமான உறவுகள் குறித்து உங்கள் நிலைபாடென்ன?

இறுதியாக தாழ்த்தப்பட்ட சாதியினரை மேலுயர்த்த முயற்சித்த இந்திய அமைப்புகளுக்கு பிரிட்டிஷார் எதிர்ப்பு தெரிவித்தனர், தடைகளை உருவாக்கினர். போட்டியாக விளங்கினர், அதே நேரத்தில் அவர்களின் கல்வி அமைப்புக்கள் குறித்து கல்வி ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் டூலி சொல்கிறார்: “the new public schools became a vehicle to promote caste privilege rather than a vehicle for improvement of all. Again it would seem that the indigenous system had unnoticed strengths in promoting education of all, including the lowest castes.” (ஜேம்ஸ் டூலி, The beautiful tree: a personal journey into how the world’s poorest people are educating themselves, 2009, பக்.232)

எப்படி இந்திய கல்விமுறை பிரிட்டிஷ் பாட்டாளி மக்களுக்கு கல்வி அளித்தது என்பதையும் அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் மேற்கத்திய சாதியம் எப்படி இந்தியாவின் சமுதாய பார்வைகளை மாற்றி பிளவுகளை அதிகரித்து கல்வியின்மையை உருவாக்கியது என்பதையும் விளக்கமாக கூற முயற்சித்திருக்கிறேன். உங்கள் பார்வைக்கு: இங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு

இங்கிலாந்து ஏழைகளுக்குக் கல்விக்கண் திறந்த இந்துப் பண்பாடு

(என் கட்டுரை குறித்த அவதானிப்புக்கு நன்றி. தீபாவளிக்கு உங்கள் குருவாக அலங்கரிக்கப்பட்ட ஈவெரா குறித்த தங்கள் கட்டுரை விரும்பி படித்தவற்றுள் ஒன்று.)

Series Navigation