புதிய அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

மேமன்கவி


ஓவ்வொரு படைப்பாளியும் தனது சூழலால் பாதிக்கப்பட்டே தனது படைப்புகளை முன்வைக்கிறான். சூழலின் பாதிப்பிலிருந்து தப்பி எழுதுதல் – அல்லது படைத்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. உலகின் சிறந்த படைப்புக்கள் என பார்க்குமிடத்து அப்படைப்புகளை படைத்த படைப்பாளிகள் தமது சூழலால் பாதிக்கப்பட்ட அப்படைப்புகளை படைத்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். சூழலால் பாதிக்கப்படாத கலை, இலக்கியம் என்பது நிச்சயமாக தயாரிக்கப்பட்ட படைப்புகளே என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

இன்று ஈழத்தில் படைக்கப்படும் பெரும்பான்மையான கலை, இலக்கியப் படைப்புகள் படைப்போர்கள் இன்றைய நமது தேசம் கொண்டிருக்கும் சூழலால் பாதிக்கப்பட்டுத்தான் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படைப்புக்களை படைக்கின்ற படைப்பாளிகள் முதிர்ச்சி அடைந்த படைப்பாளிகளாக இருப்பினும் சரி புதிய தலைமுறையைச் சார்ந்த படைப்பாளிகளாக இருப்பினும் சரி இன்றைய நமது தேசச் சூழல் என்பது சகல இன, மதம் மற்றும் பிரதேசம் சார்ந்த மக்களைப் பாதித்துத்தான் இருக்கிறது. அத்தகைய நிலையில் அந்த மக்கள் சமூகத்திலிருந்து வரும் கலை இலக்கியப் படைப்புகளில் அந்தச் சூழலின் பாதிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

இதன் காரணமாகத்தான் ஈழத்து கலை, இலக்கியப் படைப்புகளில் இயல்பாகவே ஒரு பொதுத்தன்மை வெளிப்படுகிறது (ஆங்கிலம், தமிழ், சிங்களம் என மும்மொழிகளிலும் படைக்கப்படும் படைப்புகளுக்கும் இக்கூற்றுப் பொருந்தும்)

ஆனாலும், இப்பொதுத் தன்மையினூடாக இனரீதியாகவும், மத ரீதியாகவும் மற்றும் பிரதேச ரீதியாகவும் படைக்கப்படும் கலை, இலக்கியப் படைப்புக்களில் அந்தந்த இனம், மதம், பிரதேசம் பிரத்தியேகமாக கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் அப்படைப்புக்கள் பேசுகின்றன என்பதையும் நாம் மறுதலிக்க முடியாது.

இந்தச் சிந்தனைகளின் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ என்னும் தொகுதியினை நாம் நோக்கவேண்டியிருக்கிறது.

90 களி;ல் தனது கவிதைப் பயணத்தைத் தொடங்கிய துவாரகனின் இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகளை ஒருசேரப் பயிலுகின்றபொழுது, அவர் வாழுகின்ற சூழலையும், அந்தச் சூழலில் அவர் எதிர் கொள்கின்ற பிரச்சினைகளையும், அப்பிரச்சினைகளால் அவரது அந்தச் சூழலில் உள்ளாகும் சிதைவுகளையும் நாம் இவரது கவிதைகள் வழியாக எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

இந்தப் பிரச்சினைகள், அவை கொண்டுவரும் சிதைவுகள் என்பது ஒரு சமூகத்தைச் சார்ந்த மக்கள் கூட்டத்தை அவலப்படுத்துகின்ற, அழிக்கின்ற நிலையினைப் பார்க்கின்ற அதேவேளை@ அந்த சமூகக் கூட்டத்தின் பிரதிநிதியாக தன் இருப்பை உறுதி செய்கின்ற ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது சூழலுக்கும் இடையிலான அந்நியத்தை, தூரத்தை, இழப்பை எவ்வாறு உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உணரக்கூடியதாக இருக்கிறது.

குறிப்பாக, ‘கிராமம்’ எனும் கட்டமைப்பின் சூழலிலிருந்து போர் எனும் அரக்கனின் கொடூர கரங்கள் ஒரு சமூகத்தைச் சிதைத்து, தான் சார்ந்த மண்ணிலிருந்து அந்நியமாகிப் போகும் அவலத்திற்கு ஆளாக்கும் நிலையினை -அச்சமூகத்தில் படைப்பு மனோநிலை கொண்ட ஒருவர் எதிர்கொள்கின்ற பொழுது, மேல் எழவேண்டிய போராட்ட குணத்தைத் தாண்டியும், மீறியும், சுயசிதைவை தன் இருப்பினூடாக எதிர்கொள்கின்ற ஒரு மனிதனின் உள் மனக்குரல்களாக துவாரகனின் கவிதைகள் பதிவாகி இருக்கின்றன.

தன் மண்ணுடனான தனது உறவை வெறுமனே நிலத்துடன் உரிமையை தக்கவைக்கும் நிலைக்கு அப்பால், அந்த மண்ணின் இயற்கையுடன் சார்ந்த பிணைப்பில் உறுத்திக் கொள்ளும் மனோநிலைதான் அடிச்சரடாக இயங்கும் ஒரு இருப்பு நிலைக்குத் தன்னை நகர்த்திக் கொள்ளும் அவசியம் தவிர்க்க முடியாத நிலை உருவாகும் என்பதனை துவாரகனின் கவிதைகள் சித்திரிக்கின்றன.

இவர் இழக்கின்ற ‘கிராமம்’ அல்லது தன் மண் சார்ந்த இழப்புக்களை இவர் வெளியாளாக நின்று உரைக்காமல், அந்தச் சூழலின் உள் இருந்து எடுத்துரைக்கின்றார். அவ்வாறாக@ இவர், இவருக்கும் மண்ணுக்குமான உறவையும் சரி, அம்மண் சந்திக்கும் சிதைவையும் சரி சக மனிதர்களின் அசைவாக்கங்களுடன் அல்லது அம்மண்ணைச் சார்ந்த ஊர்வன, நடப்பன, பறப்பன என்ற வகையான ஜீவராசிகளுடன் தொடர்படுத்திக் காண்கின்ற மனோபாவம் இவரது கணிசமான படைப்புக்களில் மேலோங்கி நிற்கிறது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் வௌ;வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு இருப்பினும் ஒட்டுமொத்தமாகப் பயிலுகின்ற பொழுதுதான் தெரிகிறது. இவரது பெரும்பாலான படைப்புக்களில் உருவகமாகவோ, குறியீடாகவோ அல்லது நேரடியாகவோ அந்த ஜீவராசிகள் இடம்பிடித்துக் கொள்கின்றன.

ஆடுகள், மைனாக்கள், குருவிகள் (அவையிலும் பல வகைகள்) அணில்கள், சிலந்திகள், பூச்சிகள், காகங்கள் பாம்புகள் (அவையிலும் சில வகைகள்) அட்டைகள், வண்ணத்துப் பூச்சிகள், எறும்புகள், நாய்கள், எலிகள், பல்லிகள், கழுகுகள் அறணைகள், மாடுகள் (அவையிலும் சில வகைகள்)

இப்படியாக இந்த ஜீவராசிகளை அவரது மண்ணின் சிதைவையும் தம் மண்ணில் எதிர்கொள்ளும் தன்மையை சித்திரிக்கின்ற நிலைகளில் அவை தவறாமல் இடம்பிடித்து விடுகின்றன. அத்தோடு பல கவிதைகள் அவை பிரதான பாத்திரங்களையும் வகிக்கின்றன. அந்த வகையில்

தூக்கணாங்குருவிக்கூடு
முதுகுமுறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள்
வண்ணத்துப்பூச்சிகளின் உரையாடல்
காட்டெருமை
எலியும் அறணையும் கரிக்குருவியும்
வெள்ளெலிகளுடன் வாழ்தல்
நாய்குரைப்பு
குப்பை மேட்டிலிருந்து இலையான் விரட்டும் சொறிநாய் பற்றிய சித்திரம்
கோழி இறகும் காகங்களும்

போன்ற கவிதைகளை உதாரணங்களாக குறிப்பிடலாம்.

இப்படியாக இந்த ஜீவராசிகளை தன் மண்ணின் தன் இருப்பின் சிதைவை சித்திரிக்கின்ற அனுபவ வெளி;ப்பாடுகளில் தவறாமல் இடம்பிடித்துக் கொள்கின்றன.

அதேவேளை சக மனிதர்களுடனான உறவில் ஏற்படும் விரிசலை, அவலத்தை, தூரத்தை, போலித்தனத்தை சித்திரிக்க வரும்பொழுதுகூட அந்த ஜீவராசிகளையே உருவகங்களாக கையாள்வதுகூட அவரது பாணிகளில் இன்னொன்றாக இருக்கிறது.

மனிதர்களையிட்ட கவிதையான ‘தலைகள்’ எனும் கவிதையில் –

‘இந்தத் தலைகள்

எப்பொழுதும்

என்னை விரட்டிக் கொண்டிருக்கின்றன’

எனத் தொடரும் அக்கவிதையில் ஓரிடத்தில்,

‘தளர்ந்து இறுகி

தனியே வந்து விழும்

உறுப்புக்கள் ஒவ்வொன்றும்

என் கைப்பைக்குள்

பத்திரமாக இருக்கின்றன

தனியே வெட்டி எடுக்கப்பட்ட

ஒரு ஆட்டின் தலைபோலவே’

என அக்கவிதையை நகர்த்துகிறார். ‘குருட்டு வெளிச்சமும் ஊமை நாடகமும்’ எனும் கவிதையில்

‘சிற்றெறும்பு கலைந்தாற்போல்

சிந்தனைகள் சிதறும்’

என இடையில் பேசுகிறார்.

‘துயர் கவிந்த பொழுதுகளோடு

அலைகிறேன்

கூட்டத்திலிருந்து தவறிய

தனியன் ஆடுபோல்.

இருப்பது, புசிப்பது, படிப்பது

எப்படி முடியும்?

மனிதர்கள் தவிர்ந்த

நீண்ட பொழுதுகளில்

நாய்களும் எலிகளும் குரங்குகளுமே

அதிகமும் சந்திக்கின்றன’

இப்படியாக இத்தகைய பல உதாரணங்கள் இவரது கவிதைகளில் விரவிக் கிடக்கின்றன. இவரது இத்தகைய முறைமை என்பது இவர் கையாளும் ஓர் உத்தி என்று என்னால் சொல்ல முடியவில்லை. மாறாக இந்த நிலைக்கு காரணம் போர், அகதி வாழ்வு, இடப்பெயர்வு. இப்படியான அவலநிலைகள் இவர் சார்ந்த சமூகத்தினை துண்டம் துண்டமாக உடைத்து போட்டுள்ளது. அதன் காரணமாக சக மனிதர்களால் நிறைந்த இடங்கள் வெறுமையாக இருக்கின்றன. இப்பொழுது மிஞ்சுவது அந்த ஜீவராசிகள்தான்.

இக்கூற்றினை நிரூபிக்கும் வகையில் ‘மனிதர்கள் இல்லாத பொழுதுகள்’, ‘நானும் நானும்’ போன்ற கவிதைகள் அமைந்துள்ளன.

இப்பொழுது இவரது உறவுகளும் உரையாடல்களும் அந்த ஜீவராசிகளுடன்தான்.

இப்பொழுது இன்னொரு நிலையும் தோன்றுகிறது. அந்த ஜீவராசிகளில் சிலவற்றை கொன்று தின்றது போக, போர்@ மனிதம் இறந்த நிலை. இப்பொழுது மனித இறைச்சி உண்ணும் நிலைக்கு பரிந்துரை செய்யும் அவலத்திற்கு இவர் ஆளாகிறார். ‘பல் நா சுவையறியாது’ எனும் கவிதை மூலம்.

இவ்வாறாக முன்வைக்கப்படும் துவாரகனின் கவிதைகள் மறுவாசிப்புகளுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில், தமிழ்ப் படைப்புலகில் ஏற்கனவே பரிச்சயமாகிப் போன உருவகக் கதைகளின் போக்குகளுக்கு (மனிதர்களாக அல்லாதவை கதாபாத்திரங்களாக இடம்பெறுதல் என மாதிரியான) இணங்க அவரது கவிதைகள் உருவகக் கவிதைகளாகவோ, அசாதாரண நிலையிலான இருப்பு, அந்த ஜீவராசிகளில் ஒன்றாகத் தானே மாறிவிடுவது (வெள்ளெலிகளுடன் வாழ்தல் எனும் கவிதையில்) போன்ற வெளிப்பாடுகளின் காரணமாக சர்ரியலிஸம் மற்றும் மேஜிக்கல் ரியலிஸம் போன்ற போக்குகளை மனங்கொண்ட படைப்புகளாகவோ, அல்லது மண் இழப்பின் ஏக்கங்களைப் பற்றி பேசுவதனாலோ பின் காலனித்துவ படைப்புக்களாகவோ அடையாளப்படுத்தக்கூடிய சாத்தியங்களை துவாரகனின் கவிதைகள் அதிக அளவில் கொண்டிருக்கின்றன என்பதை அந்த மறுவாசிப்புகள் பேசக்கூடும்.

எனது வாசிப்பில் துவாரகனின் கவிதைகளைப் பொறுத்தவரை கவிதையை எடுத்துரைப்பதில் ஒரே வகையான தொனியினை கையாண்டிருக்கும் சலிப்புத் தன்மைக்கு அப்பாலும், அவர் காட்டி நிற்கும் அனுபவங்கள் போர் எனும் அரக்கனின் கொடூர கரங்களின் நீட்டல்கள் என்பது ஒரு சமூகத்தை எப்படிச் சிதைக்கிறது என்பதையும், அந்த சமூகத்தின் ஓர் அங்கமாக இருக்கும் தனிமனிதன் எத்தகைய சுய சிதைவுக்கு ஆளாகிறான் என்பதையும் பதிவு செய்கின்ற படைப்புகளாக நம்முன் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பதிவுகளை முன்வைக்க அவர் துணை சேர்த்திருக்கும் உருவகங்களுக்காகவும், படிமங்களுக்காகவும், குறியீடுகளுக்காகவும் தேர்த்தெடுக்கும் உலகத்தின் (ஜீவராசிகள்) காரணமாக, துவாரகனின் கவிதைகள் நமது சூழலைக் கொண்டு புதிய அனுபவங்களாக நமக்கு அமைகின்றன. இந்த வகையில் துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ எனும் இத்தொகுப்பு கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு தொகுப்பாகும்.

பிற்குறிப்பு :-

1992 ஆம் ஆண்டு ‘விடிவு’ எனும் கவிதையினை மல்லிகைக்குத் தந்ததன் மூலம் தனது கவிதைப் பயணத்தை ஆரம்பித்ததாகக் கூறியிருக்கும் துவாரகன் மல்லிகைக்கு நன்றி கூறியிருப்பது அவரது நன்றி மறவாமையைக் காட்டுகிறது. ஆனால், அக்கவிதை இத்தொகுதியில் சேர்க்காமல் விட்டது, அவர் அளவில் அக்கவிதையின் தரத்தில் அவருக்கு சந்தேகம் இருந்திருக்கலாம் போல் தோன்றுகிறது. இதுபோல் பல ஆரம்பகாலக் கவிதைகளை அவர் தவிர்த்திருப்பார் போல் தெரிகிறது. ஒரு படைப்பாளி தனது நூலுக்கான படைப்புகளை தேர்வு செய்யும் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்பது எனது கருத்து. ஆனாலும், அக்கவிதையும் இத்தொகுப்பில் சேர்த்திருந்தால் அவரது வளர்ச்சியினை நாம் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்திருக்கும்.

நன்றி :- மல்லிகை, ஒக்டோபர் 2008

Series Navigation