பிறவழிப் பாதைகள் (தேவநேயப்பாவணர், பாரதியார் விருது)

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

கோபால் ராஜாராம்


தேவநேயப் பாவாணரின் 35 புத்தகங்கள் (தேவநேயப் பாவாணர் புத்தகம் என்ற சொல்லை பொத்தகம் என்று வழங்க வேண்டும் என்பார். பொத்தல் இட்டு புத்தகங்கள் உருவக்கப் படுவதால் என்பது அவர் சொல்வேர் ஆய்வு. புஸ்தகம் என்ற சொல்லிலிருந்து புத்தகம் வந்திருக்கலாம் என்று ஒப்புக் கொள்ள அவர் தயாரில்லை.) ஒரு சேர வெளியிடப் பட்டிருக்கின்றன. நல்லது தான், புத்தக வெளியீடு அதுவும் தமிழில் எப்போதுமே நல்ல விஷயம் தான். இவரை மொழி ஞாயிறு என்று பட்டம் சூட்டி அழைப்பதாகவும் அறிகிறேன். எல்லோருக்கும் இப்படி ஏதாவது அர்த்தமில்லாத பட்டங்களைச் சூட்டிவிடுவதன் மூலம் அவர்களை கெளரவிக்கிற ஒரு பழக்கம் நம் தமிழ்நாட்டில் பல்கிப் பெருகியுள்ளது. அதன் அபத்தம் கூட உறைக்காத அளவிற்கு இந்தப் பழக்கம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அம்சமாய் மாறி விட்டது.

தேவநேசன் தேவநேயனாய் மாறினார் என்று அறிகிறேன். நேசமும், நேயமும் ஒன்றே போல் தோன்றினாலும், தமிழ் வழக்கில் நுண்ணிய வேறுபாட்டைக் கொண்டுள்ளது என்று கருதுகிறேன். நேசம் என்பது அன்னியோன்னியத்தையும், சம அளவிலான தன்மையும் கொண்டு விளங்குகிறது.( ‘நேசம் மறக்கவில்லை நெஞ்சம் அந்த நினைவு முகம் மறந்து போச்சே ‘) நேயம் என்பது இன்னமும் பரந்துபட்ட ஒரு தளத்தில் செயல்படுகிறது. (மனித நேயம் , உயிர் நேயம் என்பதான சொற்றொடர்கள்.)

தமிழ்நாட்டின் அரசியல் இயக்கங்கள் ஆய்வுநெறிகளைப் பாதித்து ஏற்படுத்திய சமஸ்கிருத வெறுப்பின் விளைவாக ஏற்பட்ட கோணல்கள் தேவநேயப் பாவாணரின் ஆய்வை பாதித்திருக்காவிடில் அவர் மிகச் சிறந்த ஆய்வாளராய் ஆகியிருக்கக் கூடும். சொல்லாக்கம், வேர்ச்சொல்கள் பற்றியும் தமிழின் சொல்புழக்க வளர்ச்சி பற்றியும் அவர் மிக நல்ல ஆய்வுகளைச் செய்தும் உள்ளார். துரதிர்ஷ்டவசமாக இவருடைய ஆய்வுகளை முறையாகச் சீர்தூக்கிப் பிறழ்வுகளைச் சுட்டிக் காட்டி , நேர்ப்படுத்த வேண்டிய தமிழ் அறிவுலகமும், பல்கலைக் கழக வளாகங்களும் கூட , தேவநேயப் பாவாணரைப் பீடித்திருந்த வெறுப்பு நோயினாலேயே பீடிக்கப்பட்டிருந்தனர். அவர் ஆய்வு முழுக்க தமிழ் எப்படி உலக முதன்மொழி என்று நிரூபிப்பதற்காகச் செலவிட்டிருந்தார். இது ஒரு கருதுகோள் (hypothesis) என்ற அளவில், அது ஒன்றே நிரூபணச் சாத்தியத்தைக் கோரியிருக்க வேண்டும். கவனிக்க வேண்டிய விஷயம்: எல்லா மொழிகளையும் கற்றுத் தேர்ந்து அவற்றின் அமைப்புகளை அலசி ஆய்ந்து அதன் பின்பு ஏற்பட்ட நிரூபணம் அல்ல இது. இது அறிவியல் ரீதியானதே அல்ல. மிக வேடிக்கையான விஷயம் , இப்படிப் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டவர்கள், நிரூபணம் வேண்டி நிற்கும் விஷயங்களை, சார்பற்ற நிலையில் சீர்தூக்கிப் பார்த்து விஞ்ஞான ரீதியாக முடிவுகளை நிறுவ முடியாதவர்கள், தம்மைப் பகுத்தறிவுவாதிகள் என அடையாளம் கண்டு கொண்டது தான்.

மொழி என்பது மனிதக் குழுக்களைப் போலவே, தனிமைப்பட்டு வாழ்பவை அல்ல. மற்ற மொழிகளிலிருந்தும் , மற்றக் கலாசாரங்களிலிருந்தும் பெறப்பட்ட நுணுக்கங்களைத் தனதாக்கிக் கொண்டு உயிர்ப்புடன் வாழ்ந்ததே தமிழின் அழியாமையின் காரணம். சமஸ்கிருதம் போல வெறும் அரசவை மொழியாகவும் அது இல்லை.

மற்ற மொழிகளிலிருந்து தம்முடைய மொழிச் சிறப்புக்கு வார்த்தைகளையும், தொடர்களையும் பெறுவதில் எந்த இழிவும் இல்லை. சொல்லப் போனால் இதுதான் சிறப்பான மொழி வளர்ச்சிக்கு வழி. ஆங்கிலத்தில் ‘ஹாப்சன்-ஜாப்சன் ‘ என்று மற்ற மொழிகளிலிருந்து பெறப்பட்டு ஆங்கிலப்படுத்தப்பட்ட வார்த்தைகளின் பெரிய அகராதியே ஒன்று வெளியிட்டிருக்கிறார்கள். தமிழின் ‘கட்டுமரமும் ‘, ‘மிளகுத்தண்ணி ரசமும் ‘ இதில் இடம் பெற்றுள்ளன.

*********

தமிழக அரசின் பாரதியார் விருது இந்த முறை பெ சு மணி அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன். பாரதி ஆய்விலும் சரி , மற்ற துறை ஆய்விலும் சரி, பல்கலைக் கழகங்களுக்கு வெளியே தான் மிகச் சிறப்பான கொடைகள் கிடைத்துள்ளன என்பதற்கு பெ சு மணி போன்றோரின் ஆய்வு உதாரணாமாய் விளங்குகிறது.

இதன் கூடவே திருஷ்டிப் பரிகாரம் மாதிரி பாரதிதாசன் விருதை மணிமொழி என்பவர் பெற்றிருக்கிறார், அவருடைய சாதனை அதிமுகவின் உறுப்பினர் – இலக்கிய அணியின் செயலர் என்பது தான். கட்சிக்காரர்களுக்குக் கொடுக்கவில்லையென்றால் பரிசு நிறுவுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது ? தி மு க ஆட்சியானாலும், அ தி மு க ஆட்சியானாலும், கட்சி ஆட்களுக்குப் பரிசு தர வேண்டும் என்பது எழுதப் படாத விதி போலும்.

*****

Series Navigation