பின் சீட்

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

ஜெயந்தி சங்கர்


நான்காவதாக ஒரு பெண்ணைப் ‘பார்க்க ‘ அண்ணாவுக்கு அலுப்பும் சலிப்புமாகயிருந்தது. பேசாமல் வடபழனி கோவிலிலேயே வைத்து பார்த்துவிடுவோம் என்று அவன் ஒரு வாரம் முன்பே யோசனை சொல்லியிருந்தான். பார்வையாலேயே பாராட்டினேன். பழமையில் ஒருகாலும் புதுமையில் ஒருகாலுமாய் இருந்த அம்மா யோசிக்காமல் சட்டென்று சம்மதம் தெரிவித்ததை அப்போது என்னால் கொஞ்சம் நம்பத்தான் முடியவில்லை.

அமெரிக்கன் ‘கான்சலேட் ‘ போகவென்று லீவெடுத்திருந்த அண்ணா, அம்மாஅப்பாவுடன் முதலில் போய்விடுவதென்றும் நான் ஆபீஸிலிருந்து நேராகக் கோவிலுக்குப் போவதென்றும் ஏற்பாடு. நான் தேவையா என்று கேட்டதற்கு, ‘கூடப்பொறந்தவன்னு நீ ஒர்த்தந்தான் இருக்க, நீயும் வராமயா ? ‘ என்று சாமியறையிலிருந்து ஹாலைப்பார்த்து வழக்கமான பதிலைக் கொஞ்சம் வழக்கத்திற்கதிகமான சலிப்போடு சொன்னாள் அம்மா. ‘போனதடவையே நீ வல்லன்னு கணேஷ் கொஞ்சம் டிஸ்ஸப்பாயிண்ட் யிருந்தான் ‘, என்று ஹிண்டுவிலிருந்து கண்களை விலக்காமலே அப்பாவேறு ஒத்தூத, வேறுவழியில்லாமல் சரியென்று சொல்லிவைத்திருந்தேன்.

ப்ராஜெக்ட் வேறு முடியும் நேரம். ஹ்யூஸ்டனில் இருக்கும் பாவிகள் சாவகாசமாகத் தூங்கியெழுந்து தங்கள் ஆபீஸ் நேரத்தில்தான் ‘கான்பரன்ஸிங்க் ‘ வருவோம் என்று சொல்லாமல் சொல்லி எங்கள் கழுத்தை அறுத்தார்கள். உலகின் மறுபகுதியில் வாழும் நாங்கள் என்னவோ உறக்கமேயில்லாமல் பலநாட்கள் கூட உயிர் வாழக்கூடிய ஜந்துக்கள் என்ற நினைப்பு. எல்லாம் தலைக்கனம், வேறு என்ன! ?

திவ்யாவிடம் சமாளித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு ரகசியமாகக் கிளம்பிவிடவேண்டும் என்று நினைத்தபடியே பைக்கை உதைத்தேன்.ஹூம்,. கிளம்புவேனா என்று சண்டித்தனம் செய்தது. குற்றம்கண்டுபிடித்தே பெயர் வாங்கநினைக்கும் ஹ்யூஸ்டன் சுகவாசிகளை நினைத்துக் கோபத்துடன் உதைத்த ஒரே உதையில் கிளம்பிவிட்டது. பின்சீட்டை ஒருதட்டு தட்டிவிட்டு ஏறிக்கொண்டேன். அம்மாவைத் தவிர வேறு எந்தப்பெண்ணையும் பின்சீட்டில் ஏற்றப் பிடித்ததேயில்லை. நண்பர்கள் முதலில் கேலிசெய்து பின் என்குணம் பழகிவிட அதையும் விட்டு விட்டிருந்தனர். என் அனுபவம் அம்மாவுக்கு மட்டும் தெரியுமென்றாலும் அது என்னுள் ஏற்படுத்திய நிரந்தரமான தாக்கமும் பயமும் மட்டும் அவளுக்குத் தெரியவேதெரியாது.

அஜீத்தாகக்கிளம்பி வடிவேலுவாக உள்ளே நுழைந்தவனை திவ்யாதான் ஹலோசொல்லி எதிர்கொண்டாள். சாயங்காலம் சீக்கிரமே கிளம்பவேண்டும் என்று என்னை முந்திக்கொண்டு பர்மிஷன் கேட்டாள். என் நிலையைச் சொன்னதும், ‘வாட் எ கோயின்ஸிடென்ஸ் ? என்னோட கஸினப் பொண்ணுப்பாக்கத் தான் கோவில்ல ஏற்பாடு செஞ்சிருக்காங்க. அது உங்கண்ணா தானா ? ‘

‘ஏன் வேற யாருக்கும் ‘கோவில் ‘ ஐடியா தோணக்கூடாதா என்ன ? ‘

அண்ணாவின் பெயரைச்சொன்னதும் திவ்யாவின் யூகம் சரிதானென்று உறுதியானது. அவளின் பெரியம்மா பெண் தானாம் நாங்கள் அண்ணாவிற்குப்பார்க்கவிருந்த பெண். மெள்ள அவளிடம் பேச்சுக் கொடுத்துப்பார்க்கலாமா என்று நினைப்பதற்குள், ஜேஎம்டா காபினிலிருந்து தலையைநீட்டிக் கூப்பிட்டுவிட்டார். அதன்பிறகு, கண்முன்னே அண்ணாவே வந்து நின்றாலும் சட்டென்று அடையாளம் தெரியாத அளவிற்கு முற்றிலும் அன்றைய மாலையை மறந்து ப்ராஜெக்டையே யோசித்து சுவாசித்தேன். நான்கு மணிக்கு ‘என்னையும் கொஞ்சம் கவனி ‘, என்று வயிறு இரைந்து கெஞ்சியதும்தான் காண்டினுக்குப்போனேன். திரும்பும் போது திவ்யாவுடன் பேசமுடியாதபடி அவள் மும்முரமாய் கம்ப்யூடருடன் ஐக்கியமாகியிருந்தாள்.

சுமார் ஐந்துமணிக்கு திவ்யா வந்தாள், ‘ஒரு குட் நியூஸ், இன்றைய கான்ஃபரன்ஸ் போஸ்போன்ட் ‘, என்றாள்.

‘ ஆர்யூ ஷூர் ? முந்தாநாள் அந்த டோஸ் விட்டானே அங்கேயிருந்து அந்த ஃபெர்நான்டஸ், என்னவோ பெரிய இவனாட்டம். இங்க நாம சும்மா பீஸ்ல கூடி ஒக்காந்து ‘அந்தாக்ஷரி ‘ வெளையாடறாப்ல! ‘–படபடத்தேன்.

‘ கூல் டெளன் கார்த்திக். இன்னிக்கு நெஜமாவே ஹ்யூஸ்டன் பீஸ்ல ‘அந்தாக்ஷரி ‘ தான் போலயிருக்கு.ம்,..ஏதோ ஆபீஸ் பார்ட்டியாம். சாயந்தரம் உன்னோடயே பைக்ல நானும் வந்துடறேனே ‘

‘ஓகே, ஆறுமணிக்குக் கிளம்புவோமா ? ‘

திவ்யா என்கீழ் வேலைக்குச் சேர்ந்து ஒருவருடம் கூட ஆகியிருக்கவில்லை. அதனால்தான் மற்றபெண்களுக்குத் தெரிந்திருந்தது அவளுக்குத் தெரியவில்லையோ. இவளை எப்படிக் கழட்டிவிட,..

000

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் சிங்கப்பூரில் நான்குவருடங்கள் வாழ்ந்தோம். அப்பா ஷிப்யார்டில் ஷிப்ரிப்பேர் மனேஜராகப் பணிபுரிந்தார். பல இனச்சமுதாயமான அந்தச்சிறிய நாட்டில் நட்புகளும் அனுபவங்களும். நண்பர்கள், இன்னமும் கூட மின்மடலில் அவ்வப்போது தொடர்புகொள்வதுண்டு.

தொடக்கநிலை ஆறில் மற்ற பாடங்களில் குறைவதும்கூடுவதுமாய் இருந்த என் மதிப்பெண்கள் தமிழில் மட்டும் நிலையாயிருந்தது. பெரும்பாலும் முதல் மதிப்பெண் என்னுடையாதாகவேயிருந்தது. இருந்தாலும், தமிழ் வகுப்பில் எனக்கு ஒரு போட்டி மெள்ள உருவானது. வேறுபள்ளியிலிருந்து எங்கள் பள்ளிக்கு இரண்டாம் காலாண்டில் வந்திருந்த தீபா முதல் இடத்தைப்பிடித்தாள். அது என்னைப் பாதிக்கவில்லை. னால், அரையாண்டுத்தேர்வில் நானே எதிர்பாராதவிதமாய் ஒரேஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் நான் முதலிடம்! இரண்டாம் இடத்துக்குப் போன தீபா கொதித்தாள். வழக்கம்போல பேப்பரை வைத்துக்கொண்டு சிரியர் திருத்தியதில் ஏதேனும் தவறு இருக்குமா என்று தேடித்தேடிப்பார்த்தாள். ஆனால், அவளால் கண்டுபிடிக்கமுடியவில்லை. தான் முதல் மதிப்பெண் வாங்கவில்லை என்பதை விட அது எனக்குக் கிடைத்ததே அவளை மிகவும் ஆத்திரப்படுத்தியது.

மரத்தடியில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து வீட்டிற்குப் புறப்படும்முன் என் பேப்பரைச்சரிபார்த்தேன். எனக்கு ஒரு கேள்விக்கு மூன்று மதிப்பெண்கள் கொடுக்கப்படவில்லை. ஆசிரியர் தவறுதலாய்க் கொடுக்காமல் விட்டிருந்தார். நண்பனிடம் சொல்லிவிட்டு பேப்பரை எடுத்துக்கொண்டு நான் ஸ்டாஃப் ரூமிற்குக் கிளம்பும் போது நான் பேசியதையெல்லாம் ஒட்டுக்கேட்டபடியிருந்த தீபா சுற்றுமுற்றும் பார்த்தபடி என் வழியில் குறுக்கே வந்துநின்றாள். ‘ஏய் கார்த்திக் நீ இப்ப ஸ்டாஃப் ரூம் போகக்கூடாது. ‘ என்றாள் தோரணையுடன். ‘ஏன், நா போவேன். ஒனக்கென்ன ? ‘, என்று நான் சொல்லிக்கொண்டே முன்னேர முயல, ‘இங்க பாருடா. நீ மட்டும் இப்பப் போனேன்னு வையேன். நீ என்னைய ‘மொலெஸ்ட் ‘ ( molest) பண்ணிட்டன்னு போய் ‘ஃபார்ம் டாச்சர் ‘கிட்ட சொல்லிடுவேன். உன்னோட வாழ்க்கையே அத்தோட க்ளோஸ். ஜாக்ரத ‘, என்று மிரட்டலாகச் சொன்னாள். தூரத்தில் அவள் பார்வை குத்தி நிற்க, பார்த்தால் தமிழாசிரியர் காரில் ஏறிக்கொண்டிருந்தார். அதற்காகவே காத்திருந்தவள் போல ‘நாளைக்கும் நீ மார்க் கேக்கக்கூடாது. கேட்ட ,… ‘, என்றபடி பையை எடுத்துக்கொண்டு பறந்தாள்.

தீபா சொன்னதன் பொருள் எனக்கு அப்போது துளிக்கூடப்புரியவில்லை. நேராக வீட்டிற்குப் போனதும் அம்மாவிடம் நடந்ததை நடந்தபடியே சொன்னேன். அம்மாவுக்கு லேசாகப் புரிந்திருந்ததால், முகத்தில் கவலைக்கோடுகள் விழுந்தன. அப்பாவுடன் மாலையில் பேசும்போது சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு அழுதுவிடும் தொனியில் பேசியது எனக்குக் குழப்பமாக இருந்தது. அப்பாவின் அலாதியான மெளனம் என்னில் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. ‘அந்தப்பொண்ணு போய் டாச்சர்கிட்ட சொன்னா என்னாகும் ? எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. இவன் செஞ்சானா இல்லையான்னு விசாரிக்கறதே கூடப்பெரிய நியூஸாயிடுமே. ஊருவிட்டு ஊருவந்து இதெல்லாம் நமக்குத்தேவையா. பேசாம இவனுக்குஸ்கூல மாத்திடுவோமா ? ‘ அப்பாதான் அம்மாவை சிரமப்பட்டுச் சமாதானப்படுத்தினார். ‘அத்தோட உன் வாழ்க்கையே முடிஞ்சுடும் ‘ என்ற தீபாவின் வார்த்தைகளின் தீவிரத்தை அப்போது செய்தித்தாள்களில் வந்த செய்திகள் உறுதிப்படுத்தின. சிங்கப்பூரின் மற்ற எல்லா இனிய நினைவுகளையும் சேர்த்துக்கட்டிக் காலடியில் போட்டு நசுக்கி அழிக்கக்கூடியதாய் அமைந்துவிட்டிருந்தது என் வரையில் அந்த ஒரே சம்பவம்.

அம்மா அடுத்தநாள் ஸ்கூலுக்குப்போகவேண்டாம் என்று சொல்லிவிட்டு யோசித்தபடியேயிருந்தாள். பிறகு, ‘கார்த்திக், இந்த மார்க்ஸ் போட்டியெல்லாம் வேண்டாண்டா கண்ணா. அந்த தீபா சண்ட போட்டாலும் நீ சரிக்குச்சரி சண்ட போடாத. ஸ்கூல்ல தனியா எங்கயும் போகாத. ஸ்கூல் விட்டதும் நேர ஆத்துக்கு வந்துடு. ‘, என்று வரிசையாக அப்போதுதான் முதல்முறையாகப் பள்ளிக்கூடம் போகும் குழந்தைக்குச் சொல்வது போல சொன்னாள். ‘அம்மா, எனக்குக் கிடைக்கவேண்டிய மார்க்ஸ நா எப்பிடிம்மா கேக்காம இருக்கறது ? ‘, என்று நான் கேட்டதற்கும் அம்மா, ‘பரவால்ல, விட்டுடு. மிட் இயர் எக்ஸாம்ஸ் தானே ‘, என்றதும் தான் எனக்கு எரிச்சல் மண்டியது.

‘போம்மா, எப்பிடிம்மா விடறது ? ‘

‘கார்த்திக்! சொல்றதக்கேளு. தீபா வேற ஏதும் சொன்னா எங்கிட்டச் சொல்லு. நா அவம்மாகிட்டப் பார்த்துப் பேச ட்ரை பண்றேன், இல்ல ஸ்கூல் பிரின்ஸிபால் கிட்ட வேணாலும் பேசலாம் ‘, கண்டிப்போடுதன் பெரிய விழிகளைஉருட்டிச் சொல்லிவிட்டுத் தன் வேலையைப்பார்க்கப் போய்விட்டாள் அம்மா.

ஐந்து வயது மூத்தவனான அண்ணாவிடம்தான் ஓரளவிற்காவது அந்தப்பதத்திற்குப் பொருள் கிடைத்தது. ‘சில ‘கர்ள்ஸ் ‘ எப்பிடின்னா, ரொம்ப ஃப்ரெண்டிலியா நாம தொட்டுப் பேசினாக்கூட ஈஸிய எடுத்துப்பாங்க, ‘பாய்ஸ் ‘குள்ள நாம பழகறமாதிரி. ஆனா, சிலது இருக்கும். தானே தொட்டுத்தொட்டுப்பேசிட்டு, அப்படியே ப்ளேட்டத் திருப்பிபோட்டுடும். இந்த தீபா ரெண்டாவது டைப். கொஞ்சம் டேஞ்சரஸ் தான். சொல்லப்போனா பொண்ணுங்களால ஆபத்துதான். நீ அவளப் பகைச்சிக்காத. அவ்ளோதான். என்ன ? ‘ என்று சொன்னதும், ஏதோ ‘ஸ்ப்ரிசம் ‘ சம்பந்தமான விஷயம் என்ற அளவில் புரிந்தது. ஆனால், அம்மா பட்டபாட்டைப் பார்த்துத்தான் அது கெட்டபெயர் வாங்கிக் கொடுக்கக்கூடிய ஆபத்தான விஷயமும்கூட என்று அறியப்பெற்றேன். அன்றிலிருந்து எத்தனை நட்புடன் பழகினாலும் பெண்களும் அவர்களது எண்ணங்களும் ஆபத்தானதாக இருக்கும் என்றும், என்னுடைய கணினி வல்லுனனாகும் லட்சியத்துக்கு அது இடையூறாக அமையுமென்றும் மனதில் விழுந்துவிட்டிருந்தது. என் உள்மனம் விடாமல் எச்சரித்தபடியேயிருந்தது.

அந்தச்சம்பவத்திற்குப்பிறகு நான் தீபாவை மிரட்சியுடன் பார்க்கவாரம்பித்தேன். அவளைநேருக்கு நேர் சந்திப்பதைத்தவிர்த்தேன். தீபாவுடைய சிநேகிதிகளோடுகூட என்னால் இயல்பாகப்பேச முடியவில்லை. தீபாவைப்பார்க்க நேரும்போதெல்லாம் அம்மாவும் அண்ணாவும் சொன்னவை உள்ளே எதிரொலித்தன. அன்று வரை வகுப்புத்தோழிகளாய் இருந்த அத்தனை பெண்களும் என்னுள் நம்பத்தகாத கிராதகிகளாயினர். அன்றிலிருந்து அம்மாமட்டுமே நான் நம்பும் பெண்ணாகிப்போனாள்.

அதற்குப்பிறகு, இரண்டுவருடங்களிலேயே இந்தியா திரும்பினோம். கோவையில் ஒன்பது முதல் ப்ளஸ் டூ வரை முடித்து அண்ணாமலையில் என்ஞினீரிங் முடித்து இரண்டு வருடமாய் கைநிறைய சம்பாத்யம் கொடுக்கும் வேலையில். என்னைச்சுற்றியிருக்கும் பெண்களிடம் தேவையென்றால் மட்டுமே பேசுவது என்று பழகியிருந்தேன். ஆனால், நான் யாரையும் பைக்கில் ஏற்றுவதில்லை என்பதால் ஆபீஸில் வேலைபார்க்கும் பெண்களிடையே நான் பயங்கரகர்வி. என் காதுபடவே, ‘ அதுவா ‘ஹேண்ட் ஷேக் ‘ பண்ணவே மேலயும் கீழயும் பாக்கும். தான் ரொம்ப ‘ஹேண்ட்சம் ‘னு ஒரே கர்வம். பின்சீட்டை பொண்டாட்டிக்குன்னு ரிஸர்வ் பண்ணிவச்சிருக்கு ‘, என்று பெண்கள் கூட்டம் சிரித்துக் கிண்டலடிக்கும்.

ooo

ஆறுமணிக்கு திவ்யா வந்ததும், இருவரும் கிளம்பினோம். எப்படிக்கழட்டிவிடுவது என்று யோசித்தபடியே அவளுடன் படிகளில் இறங்கினேன். பைக்கின் அருகில் சென்றதுமே உதைப்பதுபோலப் பாவனை செய்துவிட்டு, ‘வண்டி காலையிலேயே டிரபிள் பண்ணித்து . நாம பேசாம ஆட்டோவுல போயிடுவோம் திவ்யா ‘, என்றுகூறிக் கொண்டே அவளைப்பேசவே விடாமல் ரோட்டை நோக்கிநடந்தேன். ஒடுங்கி ஓரத்தில் அமர்ந்து ஆட்டோவில் செல்லும்போது, ‘ம்,. உன்னோட கஸின் எப்படி ? ‘, என்று பேச்சை ஆரம்பித்தேன். முகத்தில் பறந்த முடியைச்சரிசெய்துகொண்டே, ‘ம்,. ரொம்ப நல்ல டைப். திறமைசாலி. பார்க்கவும் படுஸ்மார்ட். தொடர்ந்து மூணு வருஷமா கம்பனியோட பெஸ்ட் எம்ப்ளாயி அவார்ட் வாங்கியிருக்கா. மூணு மாசத்துக்கு ஒருதடவ ப்ளட் டொனேட் பண்ணிடுவா, யோகா க்ளாஸ் நடத்தறா வீக்கெண்ட்ல.பழகறதுக்கு இனிமையானவள் ‘,என்று அடுக்கியதை எதிர்புறம் சாலையையே பார்த்தபடி கேட்டேன்.

பூ, பழம் ஆகிய கலவை மணத்துடன் கோவில். தென்பழனியில் இருக்கும் பாலையும் பழத்தையும் வடபழனியில் ஸ்பீக்கரில் பாட்டிலேயே அறிவித்தார் பெங்களூர் ரமணியம்மாள். வாசலிலேயே அப்பா தனியாக நின்றார். ‘அப்பா, இது திவ்யா. என்னோட கலீக் ‘, என்று அறிமுகம் செய்துமுடிக்குமுன் திவ்யாவைப் பார்த்துச் சிரிப்பாலேயே ‘ஹலோ ‘ சொல்லிவிட்டு, ‘டேய், ஏண்டா இவ்வளவு லேட் ? மா, ஒம்பைக் எங்க ? எல்லாரும் காபி சாப்பிட சரவணபவன் போயிருக்கா. ஒன்னக்கூட்டிண்டு போகத்தான் நான் இங்க நிக்கறேன். வா,வா போவோம் ‘, என்று இழுத்துக்கொண்டு நடந்தார். பின்னாலே திவ்யா ஓட்டநடையாகத் தொடர்ந்தாள்.

அம்மா வாயெல்லாம் பல்லாகப் பேசிக்கொண்டிருந்தது தூரத்திலிருந்தே தெரிந்தது. அம்மாவின் வலதுபுறமிருந்த பெண், ‘ஹாய் திவ்யா ‘, என்று கூவினாள். சில மேசைகளைக்கடந்து சென்றோம். ‘ கார்த்திக், இதுதான் என்னோட கஸின், தீபா. ‘,என்றாள் திவ்யா என்னைத்திரும்பிப் பார்த்து.

தீபா! அதுவும் அதே தீபா! சில தடவைமட்டுமே பார்த்த அம்மாவிற்கு அந்த மேடிட்ட நெற்றியும் வலது காதருகில் இருந்த மிளகளவு மச்சமும் மறந்துபோனதோ. தினந்தோறும் கொஞ்சம் மிரட்சியுடனேயே பார்த்து வந்த எனக்கு ஞாபகம் இருந்தஅளவிற்கு அம்மாவிற்கு நினைவிருக்க வழியில்லை. ஒருவேளை, நினைவு வந்துமேகூட அம்மா பொருட்படுத்தவில்லையா. அவளிடமிருந்த ஒரே மாறுதல் முன்பைவிடக்கூடிய அவளது உயரம். ஆனால், பத்து வருடத்தில் மீசை, ஓர் அடி கூடுதல் உயரம், நிறம் என்று என்னிடமேற்பட்டிருந்த மாற்றங்கள் மிகஅதிகம். தீபாவுக்குத் துளியும் அடையாளம் தெரியவில்லை. இல்லை, முற்றிலும் என்னைப்பற்றி மறந்திருப்பாளோ !

அண்ணா என்னிடம் வந்தான். என்னை மெதுவாகத் தனியே தள்ளிக்கொண்டு போனான். அம்மாவைப்போலவே அவன் முகத்திலும் மகிழ்ச்சி அப்பட்டமாய் அப்பியிருந்தது. ‘டேய் கார்த்திக், எங்களுக்கெல்லாம் ஓகே. நீயும் ஒபினியன் சொல்லிட்டான்னா,.. ‘என்றபடி குழப்பத்தில் இருந்த என் முகத்தைப்பார்த்தான். தீபாவின் பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்த அப்பாவும் கிட்டேவந்து, ‘கணேஷ், அவாளும் சிங்கப்பூர்ல இருந்திருக்காடா. அதுவும் நாம இருந்த அதே பீரியட்ல ‘,என்றார் பூரிப்புடன். அதே பள்ளிக்கூடம் என்று அவர்கள் சொல்லவில்லையா அப்பா ? குழப்பத்தில் யார் பேசுவதும் சரியாகக் காதில் விழவில்லை. நிலைமையைக் கிரகித்துக்கொள்ளவே முடியாமல் முகங்களை வெறித்தேன்.

மன்னியாக வீட்டிற்குள் வந்தால் இவள் என்னைத் தன் போட்டியாகவும் எதிரியாகவும் நினைப்பாளோ ! அதுகூடப் பரவாயில்லையே. எதிலும் ஜெயிக்கவேண்டுமென்ற வெறியில் அபாண்டங்கள் சொல்லிக் குடும்பத்தை ரெண்டாக்கினால். ஏனோ உடனடியாக பெண்வீட்டாரிடம் சம்மதம் சொல்லிவிடக்கூடாது என்று தோன்றியது. ‘அப்பா, அம்மாவக்கூப்டுங்கோ. நாம கெளம்பலாம். ரெண்டு நாள்ள பதில் சொல்றோம்னு சொல்லிட்டுக்கிளம்புங்கோ. போலாம் ‘, உணர்ச்சியை மறைத்துக்கொண்டு எல்லோரையும் கிளப்பினேன். ‘ஏண்டா கார்த்திக் ? ‘ என்ற அம்மாவை அலட்சியப்படுத்திவிட்டு, ‘திவ்யா, ஒன்னோட கொஞ்சம் பேசணும், வா பேசாம பீஸுக்கே போயிடுவோம். ‘ என் முகத்தில் இருந்த குழப்பத்தையும் தீவிரத்தையும் பார்த்ததுமே பேசாமல் என் பின்னால் வந்தாள்.

000

ஆட்டோவில் ஏறிப்போகும் போது நான் ஏதும் பேசுவேன் என்று நினைத்து அவ்வப்போது என் முகத்தையே பார்த்தபடியே திவ்யா பயணித்ததை என்னால் உணரமுடிந்தது. நான் வழக்கம்போல் ஓடிக்கொண்டிருந்த சாலையின் மறுபுறம் வெறித்தேன்.

வீட்டில் எல்லோருக்கும் அதுவும் அண்ணாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னசெய்ய ? ஒன்றுமேபுரியவில்லை. ஆட்டோவிலிருந்து இறங்கி ஆளரவமற்ற மரத்தடியில் நின்று பேச ஆரம்பித்தேன். ‘திவ்யா, தீபாவோட காரெக்டர் பத்திசொல்லு. ஜெயிக்கணும்னா என்னவேணாப் பண்ணுவாளோ ? எதுக்குக்கேக்கறேன்னா, எங்கண்ணா ரொம்ப ரொம்ப நல்லவன். அவனுக்கு வரப்போறவ நல்லவளா இருக்கணும்னு நெனக்கறேன் ‘, என்றேன். ‘ உன்னோடகேள்வியே புரியல்ல. தீபா ரொம்ப நல்லவ. அவ ஆபீஸ்கே போய் நீ விஜாரிச்சுக்கலாம். அவ வெற்றியமட்டும் நெனச்சிருந்தா இப்போ ரெண்டு டெஸிக்னேஷன் மேல இருந்திருக்கணும் தெரியுமா. ஆனா, அவ ஆபீஸ்ல ஒரு சீனியர்,..ம்,… எங்கப்பா வயசிருக்கும், அவருக்குத் தான் ப்ரமோஷன் வரணும்னு கேட்டுண்டு இவ ப்ரமோஷன விட்டுக்கொடுத்திருக்கா போன வருஷம். இது என்னத்தவிர யாருக்குமே தெரியாது ‘, என்று சொன்னாள்.

நான் அறிந்திருந்த தீபாவைப்பற்றி முழுவதும் சொன்னேன், என்னுடைய பைக் பின்சீட் விவகாரத்தைமட்டும் கவனமாக மறைத்து. பொறுமையாக ஆனால், கொஞ்சம் ஆச்சரியத்துடன் துப்பட்டாவின் நுனியை விரலால் சேஷ்டை செய்தபடியே கேட்டாள். ‘கார்த்திக், உங்கண்ணாக்கு நிச்சயம் வேற பொண்ணு கெடைக்கும். அதேபோல தீபாவுக்கும். இப்ப அதுபெரிய விஷயமாத் தோணல்ல எனக்கு. பன்னண்டு வருஷத்துக்கு முன்னால் நடந்த அந்த சம்பவத்தை தீபாவுக்கு நினைவு படுத்தினாதான் உண்டு. ஏன்னா, அவ மறந்திருப்பா. கேட்டாலும் சிரிச்சுட்டு விட்டுடுவா. அத சீரியஸா சொல்லியே இருக்கமாட்டா அவ. உனக்குதான் அப்ப ஒண்ணும் புரியவேயில்லன்னு சொல்றியே. உன்னோட பேசின ஒங்கண்ணாவும் ஒங்கம்மாவும் உன் மனசுல பயம் மட்டுமே வரும்படி பேசியிருக்கா. இதப்பத்தி உனக்கு சரியா யாரும் சொல்லல்லன்னு நா நெனக்கறேன், ‘ என்று லெக்சரடித்தவளைத் தடுத்து, ‘லுக் திவ்யா,தீபாவப்பத்தி நாம பேசறோம் ‘, என்றே கடுப்புடன்.

‘ம்,. மா,மா. தீபாவப்பத்தியே பேசலாம். ஆனா, இப்ப ஒனக்குத் தான் காமாலைக் கண்ணோன்னு,…வெரி சாரி கார்த்திக், பட் சொல்லாம இருக்கமுடியல்ல. சின்னவயசுல என்னென்னவோ பேசறோம். எல்லாமே நாலே வருஷத்துல கொழந்தத்தனமா நமக்கே படறதாயில்ல ? இதே தீபா சின்னவயசுல எங்க மாமாவைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னா. அவகிட்ட இப்பச் சொன்னாச் சிரிக்கறா. சின்ன வயசுல நீகூட ஓணான் அடிச்சிருப்ப, இப்ப ஒன்ன ‘சாடிஸ்ட் ‘னு முடிவு பண்ணிடலாமா ? ம் ? தீபா தன்ன எல்லாரும் கவனிக்கணும், தான் எப்பவும் நம்பர் ஒன்னா இருக்கணும்னு ஒருகட்டத்துல நெனைச்சா. உண்மைதான். ஆனா, இப்ப அவள மாதிரி ஒரு மனமுதிர்ச்சியுடையவளப் பாக்கறதே அபூர்வம். ஒனக்கு பயம் அதிகமாக அப்ப நீங்க இருந்த சூழல் கூடக் காரணமாயிருந்திருக்கலாம். நெறைய நியூஸ்பேப்பர்ல ‘மொலெஸ்டேஷன் ‘ பத்தின செய்திகள் வந்ததுன்னு சொல்றியே அதான். சின்னவயசுல சொல்லப்படற செய்தி மனசுல தப்பாக்கூட பதிஞ்சுடும்னுதான் நான் சொல்ல வரேன். நீ யார்கிட்டயாவது மனசத்தெறந்து பேசியிருக்கியா ? ‘

பதிலை எதிர்பார்த்து அவள் கேட்கவில்லையென்றாலும் நான் இல்லையென்று தலையாட்டினேன். என்னை யோசிக்கவிட்டுவிட்டு ‘கேட் ‘ தாண்டித் தெரிந்த சாலையில் பார்வையைச் செலுத்தியிருந்தாள் திவ்யா. நான் மண்தரையையே வெறித்துப் பார்த்தபடியிருந்தேன். அறைகுறையாயிருந்த மாலைவெயில் முழுவதும் மறைந்து இருள் சூழ்ந்தது.

திடாரென்று திவ்யாவின் செல்பேசி சிணுங்கியது. ‘தீபாதான். ஒன்னோட பேசணுமாம் ‘, என்று வலுக்கட்டாயமாக என் கையில் திணித்தாள். ஹலோவென்று சொல்லிவிட்டு தீபா பேசுவதைக்கேட்க ஆரம்பித்தேன். ‘ ஹலோ, கார்த்திக் ! எனக்கு உன்ன அடையாளமே தெரியல்ல. இப்பதான் ஒங்கப்பா சொன்னதும்தான் நாம க்ளாஸ்மேட்ஸ்னே புரிஞ்சுது. ஹெள இன்ட்ரெஸ்டிங்க் ! என்னால நம்பவே முடியல்ல. ஹெள நைஸ்! நாம ஒரு நாள் ஒக்காந்து பேசணும் கார்த்திக் பழைய கதையெல்லாம்.,…. ‘, கல்யாணப்பேச்சைத்தவிர்த்துவிட்டு உற்சாகமாக ஏதேதோ பேசிக்கொண்டே போனாள். நான் ‘உம் ‘ மட்டும் கொட்டிக்கொண்டேயிருந்தேன். போனைத் துண்டித்ததும் தீபாவின் குரலையும் சொற்களையும் அசைபோட்டேன். அதில் கபடின் சுவடைத் தேடிதேடித் தோற்றேன்.

தேவைக்கதிகமாக பயந்து எதிர்மறையாகவே யோசித்து வந்திருந்திருக்கிறேன் என்ற உண்மை முகத்தில் முதல்முறையாக அறைந்தது. தீபாவின் திருமணம் கூடிவரவேண்டும் என்ற அக்கறை இருந்தாலும்கூட அதை முதன்மைப்படுத்தாமல் எதார்த்தை எனக்குப் புரியவைத்திருந்த திவ்யா எனக்குத் தன்னையறியாமலேயே பெரும் உதவி செய்திருந்தாள். எனக்குள் கொணர்ந்திருந்த மாற்றத்தை அறியாமல் நிச்சலமாய் பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். ‘ம்,..திவ்யா, வா போகலாம். சொல்லு, ஒன்ன எங்க ட்ராப் பண்ணட்டும் ? ‘, என்றபடியே பைக்கையடைந்து உதைத்துக் கிளப்பிய என் முகத்தையே திவ்யா தன் புருவத்தையுயர்த்திக் குறும்புடன்றாஅழமாகப் பார்த்தாள்.

நன்றி : கல்கி வாரயிதழ் – 13/03/05

sankari01sg@yahoo.com

—-

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்