பித்தனின் உடையாத இரவுகள்

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

கே.பாலமுருகன்


‘பித்தர்களின் இரவுகள் பாடும் கவிதை’
பாதைகள்தோறும்
படுத்துக் கிடக்கும்
எங்களின் இரவைப் பற்றி எழுதுங்கள்
பித்தர்களின் இரவுகள்
என்றுமே உடைந்ததில்லை
என்பதை
நகர சாமான்யர்கள்
உணர்ந்ததில்லை

தள்ளு வண்டிக்காரன்
அந்த இடத்தை ‘சென்ட்ரல் ஸ்குவேர்’ என்று சொல்வார்கள். அதனையொட்டியிருக்கும் சாலையைப் பற்றி இரவு முழுக்க பேசிக் கொண்டே இருக்கலாம். சாலை தண்டவாளப் பாதையைக் கடந்து பன்றி பாலம்வரை நீண்டு பெரிய சாலைக்கு வந்ததும் முடிவடைந்துவிடும். இதற்கிடையில் பயணப்படுவது என்பது நீங்காத ஓர் இரவைத் தரிசித்துவிட்டுப் போகும் நரக பாதசாரிகளுக்கு ஒப்பாகும். இருந்தபோதும் தினசரி கடமையாகவே சிலர் பயணப்படுகிறார்கள். லெபாய்மான் கமபத்திலிருந்து பட்டணத்திற்குள் நுழைய ஓரே பாதை இந்தப் பித்தர்களின் பாதைதான்.
ஒரு தள்ளு வண்டிக்காரன் சொல்லித்தான் இது பித்தர்களின் பாதை என்று எனக்குத் தெரியும். வாடகை வீடு தேடி லெபாய்மான் கம்பம் பெர்சத்து பூங்கா குடியிருப்பில் அலைந்து கொண்டிருந்தபோது இரவு அடர்ந்தவிட்ட சமயம் எங்கு போவது என்று தெரியாமல் நின்றிருந்த பதற்றமான ஓர் இரவில்தான் அந்தத் தள்ளு வண்டிக்காரனைச் சந்தித்தேன். முதலில் அவனைப் பற்றி அவதானித்தாக வேண்டும். நாசி லெமாக் பொட்டலங்களை மடித்து மலை போல் வண்டியில் குவித்துத் தடுமாறிக் கொண்டே தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தான். வட்டமான முகம், தட்டையான மூக்கு, வெளிரி போன தோள், கைகளில் திட்டு திட்டாக சிவந்த அடையாளங்கள். தோள் நோயாக இருக்கலாம்.
“அப்பா மாச்சாம்? அபா பூவாட்?”
அவன் பேசிய மலாய்மொழி அரைகுறையாக எச்சில் நிரம்பி சிறிது தூரம்வரை வந்து பிறகு உடைந்தது. விளங்கவில்லை என்று தலையசைத்தேன். ஏதோ கெட்ட வார்த்தையில் அவனுக்குள்ளே சீன மொழியில் உச்சரித்துக் கொண்டு தள்ளு வண்டியிலிருந்து இறங்கினான். அவனது உடல் உள்ளியாக நீண்டு வளர்ந்திருந்தது. நாசி லெமாக் உணவின் வாசம் பரவி வந்து கிரங்கடித்ததில் பசியை உணர்ந்தேன்.
“சாரி ரூமா”
வாடகைக்கு வீடு தேடுகிறேன் என்றதும் மீண்டும் கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு வலுக்கையைச் சொறிந்தான். அவன் அணிந்திருந்த பனியனில் கறி குழம்பு தெறித்து வியர்வையில் நனைந்து கலர்பூலாகத் தெரிந்தது. அவ்வப்போது பனியனை உடலிலிருந்து இழுத்து, உள்ளே காற்றை ஊதிக் கொண்டான்.
“மரிலா. . சனா அடா ரூமா, டெக்காட் ஜம்பாத்தான்”
பன்றி பாலத்திற்குப் பிறகுள்ள கம்பத்தில் வீடு இருப்பதாகச் சொன்னான். அவனுடனே நடந்தேன். அவனுடைய தள்ளு வண்டியில் லெங்கோங் லைச்சி பானங்கள் பாலித்தின் பெட்டியில் வைத்து கலக்கப்பட்டு ஒரு குடுவையும் அதற்குள்ளே திணிக்கப்பட்டு இருந்தன. பானத்தை அள்ளி பாலித்தினில் ஊற்ற அது உதவும். தள்ளு வண்டி பாதை நெடுக கடமுடக் கடமுடக் என்றவாறே முணுமுணுத்துக் கொண்டிருந்தது. பன்றி பாலத்தை இரவில் தரிசித்தது கிடையாது. 20 வருடங்களாக அந்தப் பாலத்தையொட்டிய தூரம் சீனர்கள் பன்றி அறுப்பு கொட்டகையை வைத்திருந்தார்கள். சுப்ரமணிய தேவஸ்தானமும் அங்குதான் இருந்ததால் நிலப் பிரச்சனை தெய்வீகத்தன மறுகட்டமைப்பு நிலவரங்களில் சிக்கி 15 ஆண்டுகள் இழுப்பரியில் கிடந்தது. ஏனோ பிறகு அந்தப் பாலம் சுப்ரமணிய தேவஸ்த்தான பாலம் என்றழைக்காமல் பன்றி பாலம் என்றே தாராளமாக அடையாளப்படுத்தப்பட்டது. இப்பொழுது அந்தப் பன்றி கொட்டகை அகற்றப்பட்டுவிட்டது. காலியான இடிந்த கொட்டகையின் இடம் தேவஸ்த்தானத்தின் பின்வாசலாக மாற்றப்பட்டு 8 மாதங்கள் ஆகியிருக்கும்.
பாலத்தில் ஏறியதும் கீழேயுள்ள ஆற்றிலிருந்து ஏதோ ஒன்று நெளிந்து ஓடியது. அந்தத் தள்ளு வண்டிக்காரன் மிகவும் கவனமாக வண்டியை முன்னகர்த்தினான். பாலத்திற்கு அப்பாலிலுள்ள தெரு விளக்கின் வெளிச்சத்தைத் தவிர வெறொன்றுமில்லாத அந்தப் பன்றி பாலத்தின் பீதியை சகித்துக் கொள்ள முடியாமல் அந்தச் சீனனின் தள்ளு வண்டியைப் பலமாகப் பற்றிக் கொண்டேன். ஏதாவது ஒரு பிடிமானம் கிடைத்தால் போதும் என்றிருந்தது. பன்றி பாலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் மட்டும்தான் போக முடியும். அந்த அளவிற்கு நெருக்கமான இடைவெளியில் நானும் சீனனின் தள்ளு வண்டியும் மட்டுமே நகர முடிந்தது. எதிரிலிருந்து எந்த வாகனமும் வரவில்லை.
“சினி அடா ஹந்து தாவு?”
இந்த இடத்தில் சேட்டைகள் இருக்கிறது, தெரியுமா என்று அவன் கேட்டதும் மனதிற்குள்ளிருந்து ஒரு பெரிய அலறலை உணர்ந்தேன். ஏதும் பேசாமல் பன்றி பாலம் முடிவடையும்வரை அமைதியாக வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மீண்டும் அவனே தொடர்ந்தான்.
“பன்யாக் ஓராங் புனோ டீரிலா சினி”
அவன் சொல்வதைப் போல இந்தப் பன்றி பாலத்தில் நிறைய பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற தற்கொலைகளை நான் செய்தியில் பார்த்திருக்கிறேன். உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. யார் யாரோ ஆற்றின் அடிவாரத்திலிருந்து முக்கி எழுந்து பார்ப்பது போல கேட்டது. ஆற்றின் முணுமுணுப்பு காதுக்குச் சமீபத்தில் ஒலித்தது.
பன்றி பாலத்தைக் கடந்ததும், அந்த சீனன் வண்டியை நிறுத்துவிட்டு தெருவிளக்கினோரமாக இருக்கும் மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டான். சிறுநீர் ஊற்று மண்ணில் பட்டு சின்ன ஒலியை எழுப்பியது. கடகடவென்று அது வழிந்தோடும் ஓசையில் எனக்குக் கொஞ்சமாக குமட்டல் வந்தது. அடக்கிக் கொண்டேன். பிறகு அங்கிருந்து எழுந்து வந்து பாக்கெட்டில் வைத்திருந்த ‘ரோக்குத் தாளை’ எடுத்து பற்ற வைத்துக் கொண்டு என்னைப் பார்த்தான். ரோக்கு தாளில் இருக்கக்கூடிய புகையிலை போதையை அளிக்கக்கூடியவை என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததால் அதைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. புகையை உள்ளே இழுத்து மேலே வானத்தைப் பார்த்து ஊதியபோது அவன் அந்தப் போதையை தின்று துப்பியது போல இருந்தது. தலையை ஆட்டிக் கொண்டே கல்யான மண்டபம் ஒன்றின் முன் வந்து வண்டியை நிறுத்தினான். மண்டபம் அகால இருளில் மூழ்கியிருந்தது. தூரத்தில் பெரிய சாலையில் வாகனங்கள் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்தன.
“சிக்கிட் ஜாம்லா. . சயா நாக் business சினி. . யூ பெகி டெங்கன் சயா புன்ய கவான்”
அது அவன் வியாபாரம் செய்யக்கூடிய இடம் என்பதைக் கூறிவிட்டு நண்பர் ஒருவர் வரும்வரை என்னைக் காத்திருக்கச் சொன்னான். தெரியாமல் இங்கு வந்து சிக்கிக் கொண்டதைப் போல மனதில் பட்டது. வண்டியின் அருகில் நின்று கொண்டிருந்தேன். சுற்றிலும் சீக்கிரத்தில் அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவிற்கு இருள் சுருள் சுருளாகத் திரண்டிருந்தது. தள்ளு வண்டிக்காரன் நிதானமிழந்தவன் போல தடுமாற்றத்தினூடே மீண்டும் ரோக்குத் தா¨ளை ஆயாசமாகப் புகைத்துக் கொண்டே வயிற்றைத் தடவினான்.
மண்டபத்திற்கு எதிரில் ஒரு சீனச் சாப்பாட்டுக் கடை சாத்தப்பட்டு முன் விளக்கு மட்டும் எரியவிடப்பட்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் நன்றாகச் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒன்று நெளிவதைப் போல இருந்தது. உற்றுக் கவனித்தப் போதுதான் அங்கு யாரோ நிர்வாணமாகப் படுத்து கிடப்பதைப் பார்த்தேன். அந்த உருவம் கண்டிப்பாக ஒர் ஆணினுடையது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆண் குறி தளர்வாக தரையில் தொங்கிக் கிடக்க அவனது வலது கை அதன் மீது கிடந்தது. முடி அடர்ந்து வளர்ந்திருக்க கால்கள் இரண்டையும் விரித்துக் கொண்டு மல்லாந்து வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான்.
சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண்களுக்கு அந்த உருவம் மட்டும்தான் தெரிந்தது. கண்களில் ஏதோ அண்டுவது போல பார்வை ரொம்பவும் குறுகி வந்தது. கண்களை அகலமாகத் திறந்து மீண்டும் அந்த இடத்தைப் பார்த்தேன். அந்த நிர்வாண ஆசாமியின் உடலுக்குள்ளிருந்து வெளிச்ச சுருள் ஒன்று கிளம்பி காற்றில் அலைய தொடங்கியதைப் பார்த்தேன். அருகிலுள்ள சீனனுக்கு அதைப் பற்றி அக்கறையில்லாததைப் போல நாசி லெமாக் பொட்டலங்களைச் சரி செய்து கொண்டிருந்தான். எனக்கருகில் எல்லாமே இருண்டு கொண்டிருந்தது. சீனன் மூத்திரம் பெய்த மரம் அங்கிருந்து அகன்று வேர்கள் தொங்க சாலைக்கு வந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். தலை சுற்றியது. அந்த வெளிச்ச சுருள் என் தலைக்கு மேல் சுழன்றபடியே இருந்தது. தலை கிறுகிறுத்தது.

நிர்வாணப் பித்தனின் இரவு பாடல்
புணரப்பட்டு
தூக்கியெறிந்தார்கள்
எனது இரவை
ஆண் குறியைப் போல
தளர்ந்திருந்தும்
எனது கனவுகள்
இரவுகளில்
பாதுகாக்கப்படுகின்றனவோ?

அந்த அடர் இருளில் காந்திமதி கொடுத்த 2 வெள்ளியை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் எப்பொழுதும் காந்திமதி இப்படித்தான் 2 வெள்ளியோ மூன்று வெள்ளியோ கொடுத்துவிட்டுப் போவாள். எப்பொழுதாவது அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றால், அன்று எனக்கு 20 வெள்ளிவரை கிடைக்கும். ஆ போங் கடையில் பசை வாங்கலாமா அல்லது ரோக்குப் புகையிலை வாங்கிக் கொள்ளலாமா அல்லது சியாங் மருந்து கடையில் கா போத்தை வாங்கிக் கொள்ளலாமா? ஒரே குழப்பமாக இருந்தது.
பன்றி பாலத்தைக் கடந்து பெரிய சாலைக்குள் நுழைந்தபோது முதலில் பட்டது சியாங் மருந்து கடைதான். அந்தக் கடையில் கா போத்தை யாருக்கும் தெரியாமல் இரகசியமாக விற்கப்படுகிறது. அந்தப் போத்தலின் வடிவத்தையும் அதன் மேல் ஒட்டப்பட்டிருக்கும் கலர் அட்டையை நினைத்தாலே நாக்கிலிருந்து வானிர் ஒழுகி கழுத்தில் இறங்குகிறது. முதலில் அந்தக் கடையோரமாகப் போய் நிற்க வேண்டும். அங்கு ஏற்கனவே 2-3 பித்தர்கள் தள்ளாடிக் கொண்டே காத்திருப்பார்கள். அனேகமாக அது 3வது போத்தலாக இருக்கலாம். அவர்கள் நின்றிருக்கும் சாயலிலேயே அதனைக் கண்டு கொள்ளலாம். பக்கத்தில் போனதும் ஏதாவது கெட்ட வார்த்தைகள் கேட்குமானால் அவர்கள் அடுத்த ரவுண்டுக்காகக் காத்திருந்து வெறுப்படைந்து போயிருக்கிறார்கள் என்று அர்த்தம். அதில் ஒருவன் எப்பொழுதும் சட்டை அணிந்திருக்கமாட்டான், மற்றொருவன் உள்ளாடை அணியாமல் இருப்பான். சண்டை முற்றிவிட்டால் சிலுவாரை அவிழ்த்து சாலையில் போவோர் வருவோரிடமெல்லாம் காட்டிக் கொண்டு நிற்பான்.
கடையின் வாசலின் போய் நின்றதும் அப்போய் கிழவன் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருப்பது தெரியும். கதவைத் தட்டினால் போதும். அவன் தெரிந்து கொள்வான். அடுத்து 15 நிமிடங்களில் பழைய சீன நாளிதழில் அதைச் சுற்றி மறைவாக வந்து கொடுத்துவிட்டுப் போவான். சில சமயங்களில் அவனுடைய மகனை அனுப்பிவிடுவான். அன்றும் அதே போல செய்துவிட்டு பக்கத்தில் நின்றிருந்த வடிவேலுவைப் பார்த்தேன். பாதி மயக்கத்தில் இருந்தான். என்னை ஏதோ மாதிரி பார்த்துக் கொண்டு இழித்தான்.
“என்னா கா போத்தையா? கையில ஏதாவது இருக்கா? 1.50 கெடைக்குமா?”
“செருப்பாலெ அடி! கெளம்பு எடத்தெ விட்டு! ஓசிலெ குடிக்கற நாயே”
வாயில் வந்தபடி அவனை ஏசிவிட்டேன். இன்னும் ஏதேதோ கெட்ட வாரத்தையில் துப்ப வேண்டும் போல இருந்தது. அவனுக்குப் பக்கத்திலிருந்த ஆசாமி நிமிர்ந்து நின்று வடிவேலுவை அணைத்துக் கொண்டான்.
“நீ இரு மச்சான். . நாளைக்கு நான் தரேன். . கண்ட தாயோளிக்கிட்ட நீ யேன் கேக்கறே”
“போங்கடா பிச்சக்கார பையலுங்களா”
கா போத்தல் வந்தது. கடையின் வாசலில் ஓரமாக அமர்ந்து கொண்டு போத்தலைத் திறந்து குடித்ததும் ஏதோ தெம்பு வந்து உடலில் ஏறிக் கொண்டது. அவர்கள் இருவரும் நல்ல உறக்கத்தில் தொலைந்திருந்தார்கள். கெட்ட வார்த்தையில் முனகிக் கொண்டே எழுந்து நின்று கொண்டேன். அவர்களை நோக்கி நகரும்போது தலை கிறுகிறுத்தது. வடிவேலுவின் தலையை ஓங்கி மிதித்தது மட்டும்தான் ஞாபகம்.
சாலைகள் இரண்டாகப் பிளக்க வானம் மல்லாந்து புரண்டிருந்தது. மேகக்கூட்டங்களில் பறந்து கொண்டிருந்தேன். அப்போய் கிழவன் கடையில் வெள்ளம் ஏறி போத்தல்கள் சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. வெள்ளை பறவை ஒன்று மரங்களைப் பிடுங்கி கொண்டு பறக்கிறது. காந்திமதி பாவாடையைக் கழற்றிவிட்டு உள்ளாடையுடன் நிற்கிறாள். பன்றி பாலத்தின் நுனியில் ஏறிக் கொண்டு யாரோ இருவர் புணர்ந்து கொண்டிருக்கிறார்கள். வேடியப்பன் சாமி ஆற்றிலிருந்து வெளியே குதிக்கிறார் அவரைப் பின் தொடர்ந்து பன்றிகளும் வெளி வருகின்றன. மூக்கிலிருந்து இரத்தம் வடிகிறது. யாரோ கை முட்டியில் முகத்தை இடிக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு புரள்கிறேன். வாயில் மலங்கள் நுழைகின்றன. பிறகு ஒரு சாக்கடையில் பெண்ணின் பிணத்தை அள்ளுகிறார்கள். என் கையைப் பிடித்து சாலையில் வீசுகிறார்கள். உருண்டு கொண்டு போய் விழும் என் தலையில் ஒரு பூனை சிக்கிக் கொள்கிறது. பூனையுடன் போராடுகிறேன்.
காலையில் விழிக்கும்போது கா போத்தலின் போதை இலேசாக தனிந்திருக்கும். எங்கே இருக்கிறேன்? கண்டிப்பாக பன்றி பாலத்தையொட்டிய தூரத்தில்தான். முச்சந்தி மரத்தின் அடியில் விழுந்து கிடந்தேன். பக்கத்தில் யாரோ மொத்தமாகக் கட்டி குப்பையை வீசியிருந்தார்கள். அதிலிருந்து கிளம்பிய நாற்றம் மூக்கு துவாரங்களில் புகுந்து எரிச்சலை ஏற்படுத்தியது. அங்குள்ள சீனக் கடைகளில் எல்லாரும் அரக்கப் பறக்க இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஏதாவது மிச்சம் மீதி கிடைக்கும். வழக்கம்போல கடையோரமாகப் போய் நின்று கொண்டேன். சீனக் குச்சியில் சாப்பாடுகளை அள்ளி வாயில் திணித்துக் கொண்டிருந்ததைப் பார்க்கும்போது வயிறு சத்தம் போட்டது. பசி மயக்கத்தில் அப்படியே சுருண்டு விழுந்துவிடத் தோன்றியது.
சின் பாட் என்பவன் மட்டும்தான் எனக்கான ஒரே நண்பன். இல்லை எனது கடவுள் என்றே சொல்லலாம். அவன் மட்டும்தான் கெட்ட வார்த்தையில் காரி உமிழ்வதோடு ஏதாவது சாப்பாடும் போட்டுக் கொடுப்பான். என் அம்மாவின் கற்பு முதல் என் மாமாவின் பிட்டம்வரை அவனது கெட்ட வார்த்தைகளில் நான் தவிழ்ந்திருந்துவிட்டு வெக்கம் கெட்டவன் போல தலையைச் சொரிந்து கொண்டே அவன் கொடுக்கும் கொய்த்தியோ அல்லது மீ சூப்பை அள்ளி வாயில் போட்டுக் கொள்வேன். அடுத்து என்ன செய்யலாம் என்று ரோக்குத் தாலை இழுத்துக் கொண்டே சிந்திக்க காலையில் சாப்பிடக்கூடிய இந்த சாப்பாடு தெம்பாக இருக்கும். அதனால் சின் பாட் என்பவனின் கருணை மழையில் நனைய தயாராகவே இருந்தேன். அவன் என்ன சொல்லித் திட்டினாலும் அவனுக்கு வாலாட்ட வேண்டும் போல இருக்கிறது.
“குடிகார நாயெ!” “அஞ்சிங் மபோ!”
அவனைப் பொருத்தவரை நான் காலையில் சோற்றுக்கு ஏங்கும் குடிகார நாய். அப்படித்தான் பலர் என்னைத் திட்டியிருக்கிறார்கள். என் அம்மா எங்கோ ஓடிப் போனவள்தான் அதன் பிறகு எனக்கென்று யாரும் இல்லாதபோது யாராவது என்னைத் திட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் பரபரப்பான சாமான்யர்களின் வாயிலிருந்து வரும் நடுத்தர வார்த்தைகளை விட சக போதை பித்தர்களின் அட்டங்காசமான வார்த்தையில் முழ்கினால்தான் அன்றைய பொழுது அடங்கும். சிரித்துக் கொண்டும் கோபப்பட்டுக் கொண்டும் காந்திமதியைத் தவிர வேறு யாருக்கும் பயனில்லாதவனாகச் சுற்றி திரிகிறேன். காலை விடிந்ததும் எனக்கென்று எந்தக் கவலைகளும் இருப்பதில்லை. 17 வயதுவரை படித்துவிட்டு பிறகு சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல சுய அழிப்பு செய்து கொண்டவன் நான். போதைப் பொருள் பிரச்சனையில் சிறையிலிருந்துவிட்டு பிறகு 5 வருடம் மறுவாழ்வு மையத்தில் சரிக்கப்பட்ட முடியுடன் அலைந்திருந்துவிட்டு வெளியே வந்ததும் பழயை குருடியின் பாவாடைக்குள் புகுந்து கொண்டதுமாக என் வாழ்க்கை பன்றி பாலம் மாதிரி ஆகிவிட்டது. படித்த படிப்பு எப்பொழுதாவது கிண்டலுக்காக உதவும். சில சமயங்களில் ஆங்கிலம் பேசும்போது தள்ளு வண்டிக்காரன் பதிலுக்கு “fuck you” என்று நக்கலாகக் கத்துவான்.
அவனுக்குத் தெரிந்த ஆங்கிலமும் கெட்ட வார்த்தைகள்தான். ஏனோ தெரியவில்லை. வீடில்லாமல் இருப்பதைவிட உலகத்தில் வேறு சுகம் இல்லை போல. கிடைத்த இடத்தில் நல்ல நேரம் கெட்ட நேரம் பாராமல் தூக்கத்தைப் பற்றிச் சிரமப்படாமல் பரவசக் கழிப்பில் போதையின் உச்சக்கட்டத்தில் பறக்கலாம். நான்கு சுவருக்கு மத்தியில் அட்டவணை வாழ்க்கையில் இதெல்லாம் கிடைக்குமா? “பண்ணாடெ பையலே! குடிக்கார நாயே!” இப்படிப்பட்ட கிளுகிளுப்பான வார்த்தைகள் நாகரிக வாழ்வில் கிடைக்குமா? மதிய வெயிலில் கௌரவத்திற்காகவும் நாகரிகக் கட்டமைப்பிற்காகவும் கோட் சூட் பிறகு அசிங்கமான டை ஒன்றை இறுக்கிக் கட்டிக் கொண்டு போகும் சிலரைப் பார்க்கும்போது அவர்கள் மீது மூத்திரம் பேய வேண்டும் போல இருக்கும். அந்த நேரத்தில்தான் முட்டிக் கொண்டு நிற்கும். அதை தவிர வேறு பரிகாரம் தெரியவில்லை.
“அடப்பாவிகளா! இந்தச் சூட்டுலெ இப்படியாடா இருக்கறது. . அவுத்து போட்டுக்கிட்டு நில்லுங்களண்டா” என்று அவர்களைப் பார்த்துக் கத்தியிருக்கிறேன். ஒரு சிலர் முகத்தில் குத்தியிருக்கிறார்கள், மற்றும் சிலர் ஆண் குறியைப் பார்த்து எட்டி உதைத்திருக்கிறார்கள். இந்த உலகத்தில் குடிக்காரனுக்கு ஏதாவது நேர்ந்தால் மட்டும்தான் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். நான் குடியில் பேசியது அல்லது நான் போதையில் இருந்தபோது எனக்கு நடந்த அபிஷேகங்கள் மறுநாள் காலையில் எழுந்ததும் எதுவுமே ஞாபகத்தில் இருக்காது. ஆஹா! ஆஹா! இது எவ்வளவு பெரிய வரம்? அவமானங்களை மறக்க முடியாமல் எத்தனை பேர் நிகழ்காலத்தைத் தொலைத்து நடை பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? பேசாமல் எல்லாரும் என்னைப் போல குடிக்காரர்களாக மாறிவிட்டால் இன்று வீட்டுப் பிரச்சனைகளெல்லாம் அகன்று பூமியில் நிர்வாண போதனைகள் நிரம்பிவிடும். கட்டுப்பாடில்லாமல் அலைந்து திரியலாம். கெட்ட வார்த்தைகளைத் தேசிய அடையாளமாக மாற்றிக் கொண்டு தினமும் காலையில் கொடி ஏற்றி சலாம் வைத்து கா போத்தல்களை வணங்கலாம். ஆஹா! போதைக்கான பஞ்சம் மறைந்துவிடும்.
“னாக் மக்கான்லா. . அஞ்சிங் மபோக்”
சின் பாட் கருணையோ கருணை. பழைய தட்டில் பல நாகரிக நாய்கள் சாப்பிட்ட மிச்சத்தையெல்லாம் ஒன்றாக குவித்து எனக்குக் கொடுத்தான். கடையின் பின்புறத்தில் அமர்ந்து கொண்டு உறிஞ்சினேன். வயிறு நிறைந்ததும் மனதில் திட்டிக் கொண்டே சின் பாட்டிடம் தட்டைக் கொடுத்துவிட்டு குடிக்கார பாணியிலேயே சலாம் வைத்தேன். பிறகு ஏதாவது தமிழ்ப் பாட்டைச் சத்தமாகப் பாடிக் கொண்டே நகரத்தில் நுழைந்தேன். அப்படிப் பாடினால்தான் நான் நாகரிகமற்றவன் என்று தெரியும். முக்கியமாகக் குடிக்காரர்களின் நடை பாவனை செயல்கள் எப்பொழுதும் இந்த நகரத்தில் கவனிக்கப்படும். ஆதலால் அவ்வப்போது யாரிடமாவது கிண்டலடித்துச் சிரித்துக் கொண்டே கிறுக்கனைப் போல ஓடிக் காட்டுவேன். சில சமயங்களில் திடீரென்று சாலையில் நின்றுவிட்டு மேலே பார்த்து தலையைச் சொரிந்து கொண்டு மீண்டும் நடப்பேன். சில சமயங்களில் எங்காவது சீனக் கடைகளின் வாசலில் கால்களை அகல பரப்பி போதையில் இருப்பதைப் போன்று காட்டிக் கொள்வேன். இப்படியெல்லாம் செய்தால்தான் நான் மிகச் சிறந்த நகர குடிக்காரன். அல்லது பித்தன்.
“அண்ணே! பசிக்குது. . 2 வெள்ளி இருந்தா கொடுங்கண்ணே. . பசி தாங்க முடிலே”
“அக்கா பசிக்குதுக்கா.. சாப்டு ரெண்டு நாளாவதுக்கா”
“சார். . 2 வெள்ளி இருந்தா கிடைக்குமா. . நாளைக்கு இதே எடத்துக்கு வந்திங்கனா கொடுத்துருவேன்”
மதிய வெயில் தலைக்கு ஏறிவிட்டால் இப்படித்தான் என் வார்த்தைகளும் சுபாவமும் மாறிவிடும். சாய்ங்கால போதைக்காக பிச்சையெடுக்க வேண்டுமே. தமிழ் நாட்டு நடிகரையெல்லாம் மிஞ்சிவிடக்கூடிய நடிப்பாற்றல் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ? பலர் ஏமாந்து 2 வெள்ளியைக் கேட்டால் 3 வெள்ளியாகக் கொடுத்துவிட்டுப் போவார்கள். முக்கியமாகப் பேருந்து நிலையங்களில்தான் நல்ல வேட்டை. அவசரமாகப் பேருந்தில் ஏற முற்படுபவர்களாகப் பார்த்து நச்சரிப்பது போல செய்வேன்.
“இந்தா வாங்கி தொலை” 1 வெள்ளியோ 50 காசையோ தூக்கி எறிவார்கள். லபக் என்று பிடித்துக் கொண்டு அடுத்த பேருந்திற்கு நடையைக் கட்டுவேன். சிலர் என்னுடன் வா உனக்குச் சாப்பாடு வாங்கித் தருகிறேன் என்று என்னை ஏமாற்றப் பார்ப்பார்கள். யாருக்கு வேண்டும் அவன் சாப்பாடு? வேண்டாம் என்று மறுத்துவிட்டு என்னிடம் ஏமாறுபவர்களை மட்டுமே தேடி அலைவேன். போயும் போயும் ஒரு மூன்றாம்தர குடிக்காரனிடம் ஏமாறுபவர்களுக்கு வெட்கம் என்பதே கிடையாது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? வசதியான பரபரப்பு வாழ்க்கை. இதில் நகர நியாயங்கள் பற்றி கவலைப்பட அவர்களுக்கு என்ன இருக்கிறது.
எப்படியோ பணம் கிடைத்துவிடும். எனக்கான தேவை வெறும் கா போத்தலிலுள்ள போதை மட்டுமே என்பதால் பணம் கிடைப்பதில் சிரமம் இருக்காதுதான். உலக நாயகன் போல திறமையாகப் பாசாங்கு காட்டி நடித்தால் மட்டும் போதும். அடுத்த நடை மருந்து கடைதான். கதவைத் தட்டிய பிறகு அதே வாசல் அதே வடிவேலு அதே கெட்ட வார்த்தைகள்.
என்னுடைய இரவுகள் எப்பொழுதுமே மிகவும் அழகாக நேர்த்தியில்லாமல் கட்டுபாடில்லாமல் எதையோ நோக்கிப் பறந்து கொண்டே இருக்கின்றன. கா போத்தல் உள்ளே இறங்கியவுடன் எனக்கான இரவை நான் எப்பொழுதும் கொண்டாடிக் கொண்டே இருக்கிறேன். அந்தத் தள்ளாடும் இரவை வேறு யாரும் அனுபவிக்க முடியாது. மரங்கள் பறப்பதைப் பற்றி யாரவாது கனவு கண்டிருப்பார்களா? வெள்ளை கொக்கின் நீண்ட மூக்கில் அமர்ந்து கொண்டு சவாரி செய்திருப்பார்களா? மேகங்களுக்கிடையில் மிதந்திருப்பார்களா? பிச்சைக்காரர்கள். அவர்களிடம் அன்றாட பிரச்சனைகளின் நெருக்கடிகள் தவிர வேறெதுவும் கிடையாது.
சீன சாப்பாட்டு கடையின் ஓரமாக வழக்கம்போல வந்து படுத்துக் கொண்டேன். மிதப்பது போல இருந்தது. எப்பொழுதும் என்னுடைய இரவில் நான் தெளிவாக இருந்ததில்லை. என் கனவுகள் இந்த நகரத்திப் போல அல்ல. யாராலும் காண முடியாத ஓர் உலகத்தை ஓர் இரவை நான் எனக்குள் வைத்திருக்கிறேன். என் உலகத்தில் மனிதர்கள் பறக்கலாம் மிதக்கலாம் கண்டங்கள் தாண்டலாம், தண்ணீரில் நடக்கலாம். அது ஒரு போதை சாகச உலகம்.
தூரத்திலிருந்து யாரோ சிலர் என்னை நெருங்கி வந்து சுற்றி நிற்பது மங்கலாகத் தெரிகிறது. அவர்களுடன் காந்திமதியும் நிற்கிறாள். போதையில் அமிழ்ந்தவாறே அவர்களின் உரையாடல்கள் என் காதுகளில் நுழைந்தன.
“இவனதானே நீ கூட்டியாந்து வச்சுக்குவே. .”
“குடிக்கார நாய்க்கூட படுக்க வெக்கமா இல்லெ?”
“எவ்ள கீழ்த்தரமான வேல இது?”
பிறகு யாரோ ஒருவன் என் தலையில் ஓங்கி மிதித்தான். பாவி பையல்! என் மேகங்கள் சிதைந்து கீழே உதிர்ந்தன. பறந்து கொண்டிருந்த என்னைக் கீழே தள்ளிவிட்டான். மற்றொருவன் என் மார்பில் எதையோ கொண்டு குத்தினான். என் இரவுகள் உடைந்து வழிந்தன. பார்வை மங்கியது. போதை வாயிலிருந்து ஊற்றியது. கண்கள் சொறுகியது. ஆகக் கடைசியாக எவனோ என் ஆண் குறியில் ஓங்கி உதைத்தான். என் வெள்ளைக் கொக்கின் மூக்கு இரண்டாய் பிளந்தது. சிறகொடிந்து பூமியில் விழுந்தேன்.

நிர்வாணப் பித்தனின் உடையாத இரவின் பாடல்
இன்னும்
மிச்சமிருக்கின்றன
அந்த இரவுகள்
எனக்கான இரவைப் பற்றி
யாருக்கும் தெரியாது
வெள்ளைக் கொக்குகள் போல
மேகங்கள்

தலைச் சுற்றி கீழே விழுந்திருந்தேன். வானம் அகன்று விரிந்திருந்தது. தள்ளு வண்டிக்காரன் முகத்தில் தண்ணீரைத் தெளித்ததும் மெதுவாக எழுந்தேன். அந்தச் சீன சாப்பாட்டுக் கடையில் இப்பொழுது கூட்டம் அதிகமாக இருந்தது. எல்லோரும் பரப்பரப்பாக இருந்தார்கள்.
“சனா இத்து அஞ்சிங் மபோ சுடா மத்திலா”
அந்தக் குடிகார நாய் இறந்துவிட்டான் என்று தள்ளு வண்டிக்காரன் கெட்ட வார்த்தையிலேயே சொன்னான். சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். என் கைகளைப் பிடித்துப் பார்த்துக் கொண்டேன். முகத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். வாயிலிருந்து கா போத்தலின் வாசம் அடிப்பது போல பட்டது. தள்ளு வண்டிக்காரன் சந்தேகமாகப் பார்த்தான். என் உடலுக்குள்ளிருந்து அந்த வெளிச்ச சுருள் வானத்தை நோக்கிப் பறந்தது. வேறு யாரும் அதைப் பார்க்கவில்லை. வெள்ளைக் கொக்கு போல இருந்தது. சாமான்ய மனிதர்களின் கூட்டம் பெருகியதும் தள்ளு வண்டிக்காரனிடம் சொல்லாமலேயே அங்கிருந்து கிளம்பி தள்ளாடியவாறே நடந்து கொண்டிருந்தேன். தூரத்தில் யாரோ இரவைப் பற்றி பாடுவது போல கேட்டது. நகரமே போதையில் மூழ்கியிருந்தது.
-முடிவு-
நன்றி: உயிரெழுத்து டிசம்பர் 2008

ஆக்கம் : கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation