பாவேந்தரின் பதறல்கள்!

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

நாக.இளங்கோவன்


தமிழ் என்பதைத் தவிர நெஞ்சத்தில் மற்றோர்

குறிக்கோளுக்கு இடம் தரா நெஞ்சினர் பாவேந்தர்.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளான

ஏப்ரல் 21க்கும், பிறந்தநாளான ஏப்ரல் 29க்கும் இடைப்பட்ட

நாள்களில் ஒன்றேனும் தமிழ் உள்ளங்களை பாரதிதாசனை

நினைவு கூர வைத்துவிடும். இந்த வருடம் அவரின் நினைவு

வந்தபொழுது இன்றைய தமிழ், தமிழர் நிலையை 1950களோடு

ஒட்டிப் பார்க்க வைத்தது.

1950களை எண்ணும்போது பாவலரேறு பெருஞ்சித்திரனார்

என்ற அந்த மாசு மறுவற்ற தமிழ் வெள்ளத்தையும்

எண்ணிப் பார்க்க வைத்தது.

அவரை எண்ணிப் பார்க்கையிலே, அவருக்கு முந்தைய ஆயிரத்தி

சொச்சம் ஆண்டுகளுக்கு முன் (7,8,9 ஆம் நூற்றாண்டுகளில்)

தமிழ் வளர்த்த பலரையும் குறிப்பாக தேவார மூவரையும், அவர்கள்

காலத்துக்கும் முற்பட்டவர் என்று சொல்லப்படுகிற மாணிக்க

வாசகப் பெருமானையும் எண்ணிப் பார்க்க வைத்தது.

அப்பர் பெருமான் இறைவனை எண்ணி, இறையே

உனக்குப் பிடித்த நீராட்டு, மலர் அருச்சனை,

தூபம்(ஒளி/தீபம்) இவற்றை நான் செய்ய தவறியதேயில்லை;

அது மட்டுமல்ல நீ உகக்கும் தமிழிசைப் பாடலை ஆக்கவும்

பாடவும் தவறியதேயில்லை – இப்படியான எனக்கு என் வயிற்றில்

ஏற்பட்டிருக்கும் சூலை நோயை நீ போக்கியருள வேண்டும்

என்று உருகிப் பாடுவார்.

‘சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்

தமிழோடு இசைப் பாடல் மறந்தறியேன்…. ‘

அப்பர் பெருமான், நீர் என்பதற்கு சலம் என்ற சொல்லை

பிற மொழிக் கலப்பில்லாமல் பேணியிருப்பதுவும்,

இறைவனுக்கு ஏற்றவை பிடித்தவை

சலம், பூ, தீபம் மற்றும் தமிழ் என்று மிக இயல்பாகச்

சொல்கிறார். அது மட்டுமல்ல, தமிழ்ப் பா ஆக்கி

அதனை இறைவனிடம் பாடி தன் குறைகளையும்

போக்கிக் கொள்கிறார்.

மறைஞான ஞானமுனி சம்பந்தரும், சுந்தரரும்

இறைவனை தமிழ்ப்பாக்களால் பாடி இன்பம்

அடைவது மட்டுமல்லாமல், தாம் பயன் அடைவது

மட்டுமல்லாமல், இந்தப் பதிகத்தை ஓதுபவர்களுக்கும்

அவர்கள் பெற்ற பயன் விளையும் என்று ஆணை யிட்டுச்

சொல்லியிருக்கிறார்கள்.

‘காழி ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன பத்து இவை

வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே ‘

‘தானுறும் கோளும் நாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே ‘

– சம்பந்தர்

தான் பெற்ற இன்பம் மற்றோருக்கும் கிடைக்கச்

செய்வது மட்டுமல்லாமல், சுந்தர மூர்த்தி நாயனாருக்குத்

தனிச் சிறப்பே இருக்கிறது. சிவபெருமானைக் கெஞ்சுவார்,

அவரிடம் உருகுவார், நெகிழ்வார், நன்றிசொல்வார்; திடாரென்று

பிடித்து ஏசுவார், மிரட்டுவார், கடிவார், இழிவாகவும்

பேசுவார்.

‘திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில்

திருமேனி வருந்தவே வலைக்கின்றேன், நாளைக்

கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா.. ‘

என்று சொல்லும் துணிவு சுந்தரருக்கு மட்டுமே வரும்.

இறைவனோடு அவர் காட்டாத குணங்களே கிடையாது.

இறைவனை என்ன திட்டினாலும், இறைவனும் அதைக் கேட்டுக்

கொண்டு இவர் கேட்பதையெல்லாம் கொடுத்தும் விடுவார்;

அவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் என்று சிவநெறியாளர்கள்

சொல்வார்கள்.

இறந்து சாம்பராகிப் போன பெண்ணை (பூம்பாவாய்) பிழைக்க

வைத்தவர் என்று சம்பந்தரை (மயிலையில்) சிவநெறியாளர்கள்

சொல்லிப் பெருமைப்படுவார்கள். (மட்டிட்ட புன்னையங்கானல்…)

இந்த மூவர் பெருமக்களும் ஆக்கியவை அனைத்துமே

தூய தமிழ்ப் பாக்கள். ஒன்றா இரண்டா ? ஆயிரக்கணக்கான

பாடல்கள். அவற்றை சிவபெருமானும் அப்படியே

ஏற்றுக் கொண்டார்.

அதேபோலத்தான், நாம் வாழும் காலத்தில் நம் முன் வாழ்ந்து

மறைந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். தமிழகத்தில் ஆரவாரக்

கவிதைகளையும், திரைப் பாடல்களையும் இயற்றும் எல்லாக்

கவிஞர்களையும் நமக்குத் தெரியும்.

20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர் யார் என்று கேட்டால்

கண்ணதாசன், வைரமுத்து, பட்டுக்கோட்டையார் போன்ற

கவிஞர்களை பலரும், பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்களை

சிலரும் சொல்லக் கூடும். ஆனால் விரல் விட்டு எண்ணிவிடலாமோ

என்றளவில்தான் பவலரேறு என்ற ஒப்பற்ற பாவாணரை

தமிழகம் நினைவில் கொண்டிருக்கிறது. இவரின் தமிழ்ப்பாக்களில்

புற/அக நானூறின் செறிவும் சிந்தனையும் விரவிக் கிடக்கும்.

அப்படிப் பட்ட பாவலரேறு தம் மகள் கடுஞ் சுர நோயால்

பாதிக்கப் பட்டுக் கிடந்தபோது, சரியான மருத்துவம் அளிக்க

முடியாததோர் வறுமை நிலையில் விடிய விடிய தமிழ் அன்னையை எண்ணி

நைந்து, உருகி பா இயற்றிப் பாட (தமிழ்த்தாய் அறுபது),

ஓரிரு நாள்களில் நோய் முற்றும் நீங்கி அவரின் மகள் சாவினின்று மீண்டது.

‘ஞொள்கினைப் பெயரின்று! ஞாயிறுப் போந்து திங்கள்

நள்ளிர வோட்ட வாடும் வகையெனப் பண்டு சூழ்ந்த

தெள்புகழ் அஃகி ஈண்டுத் தண்ணொளி வந்த தெல்லாம்

வள்ளன்மை யில்லா வுன்றன் வகையென எண்ணிக் காப்பாய்! ‘

‘சாவாத எழிலே! வாழ்ந்து சலிக்காத தாயே! துன்பம்

மேவாத ஒலியே! எம்போல் மின்னாத தமிழர்க் கெல்லாம்

ஆவாத பொருளே! நீண்ட ஆழிசூழ் மண்ணில் என்னைக்

காவாத முதலே! பாவாற் கசிகின்றேன்; கனிவா யம்மா! ‘

(கனிச்சாறு – 3 – தமிழ்த்தாய் அறுபது – பெருஞ்சித்திரனார்)

தேவார மூவர்கள் சிவபெருமானை வேண்டிப் பாடினார்கள் என்றால்,

பாவலரேறு தமிழன்னையை வேண்டினார். மூவர்களையும்

பாவலரேறையும் ஒப்பிடுவது நமது நோக்கல்ல – ஆனால் ஒரு

ஒற்றுமை என்ன வெனில் இவர்கள் யாவரின் வேண்டு பொருள்

வேறாயிருப்பினும் வேண்டிய வழி தமிழ். அதனை இறைவனும்

ஏற்றுக் கொண்டான்; தமிழன்னையையே இறைவியாகக் கொள்ள

பெருஞ்சித்திரனாரின் பாவை இறைவியும் ஏற்றுக் கொண்டார்.

அத்தகைச் சிறப்பும், தமிழும் கொண்ட பெருஞ்சித்திரனார்

1950களிலே பதறினார் தமிழின் நிலை கண்டு. எதற்காகவென்றால்,

தற்போதைய ஆண்டுகளிலே, தமிழகத்திலே ஆட்சி அதிகாரத்தில்

இருக்கின்றோர் தமிழகத்தின் சட்ட மன்றத்திலே தமிழ் மொழி

காக்கும் முயற்சியில் ஈடுபடுவோரை எப்படி நையாண்டி

செய்கிறார்களோ, ‘சைக்கிளுக்குத் ‘ தமிழ் தெரியுமா ?

வேட்டி கட்டினீர்களா ? என்றெல்லாம் கேட்டு எள்ளி நகையாடி

விளையாட்டுக் காண்பிக்கிறார்களோ அதேபோல 1950 களில்

சட்ட மன்றத்திலே, கங்கு கரையின்றி அக்காலத்தில்

புழங்கிய வடமொழிச் சொற்களில் சில சொல்லி

‘இந்தச் சொல்லுக்குத் தமிழ் இருக்கா ?

இந்த எழுத்துக்குத் தமிழ் இருக்கா ? ‘ என்றெல்லாம்

தமிழைக் காக்க எழுந்தோரையெல்லாம்

கேட்டு நகையடித்தார்கள். அது மட்டுமல்ல,

மொழியாராய்ச்சியிலும் குளறுபடி.

அப்போது பதறினார் பாவலரேறு!

‘பழிவாங்கிக் கொண்டார் இந்நாட்டை ஆள்வார்!

பைந்தமிழ்க்குத் தீங்கு செய்தார்; நஞ்சைச் சேர்த்தார்!

விழியற்ற அறுவர் போய் யானை கண்ட

வினைதவிர வேறென்ன ? உணர்வீர் நன்றே!….

மகிழ்ச்சி எனும் சொல்லிருக்க ‘சந்தோசம் ‘ ஏன் ?

மக்களரசு இருக்க ‘சனநாயகம் ‘ ஏன் ?

புகழ்ச்சி பெறும் ‘புத்தகம் ‘ இருக்க ‘புசுத்தகம் ‘ ஏன் ?

இகழ்ச்சி தரும் ‘அட்சரம் ‘ ஏன் ‘எழுத்து ‘ இருக்க ?

‘இழிமலடி ‘ வெறுவயிறி வடவர் மூளி

புகழ்ச்சி பெறும் மங்கைக்குத் தருமாம் பிள்ளை;

பைந்தமிழ்த் தாய்க் காணையிட்டு நிற்பீர் மக்காள்! ‘

(கனிச்சாறு-16)

50 ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழியால் வாடிய

தமிழை செழிக்கச் செய்ய பாவலரேறு போன்றோரும்

பாவேந்தர் போன்றோரும் ஆற்றிய பணிகள் ஏராளம்.

தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும், வணிகம், நுட்பம்,

கலைகள் போன்ற பல்துறைகளிலும் தமிழ் மறுமலர்ச்சி

அடைய வேண்டும் என்று அவர்கள் ஆற்றிய பணிகள்

அளவிடற்கரியது.

ஆயினும், 50 ஆண்டுகள் கழித்து இன்றைய நிலையை

நோக்கினால், இன்றும் அந்த முயற்சிகள்

முழுமையடையாததோடு, மேலும் சீர் கெட்டுக்

கிடப்பதைத்தான் காண முடிகிறது.

இன்றும் அன்றைப் போலவே, ஆங்கிலச் சொல் கலப்பைப்

பற்றி சட்ட மன்றம் நகையாடுகிறது. எங்கு நோக்கினும்

வணிகப் பலகைகள், கல்வி, கலை, நுட்பம், இல்லம்

எல்லாவற்றிலும் தமிழ் முழுமையாக இல்லவே இல்லை.

50 ஆண்டுகள் கடந்த பின்னரும், வடமொழிக்

கலப்பும் வடசொல் புழக்கமும் பெருமளவு குறையவில்லை.

அதோடு சேர்ந்து ஆங்கிலமும் தமிழை மிதித்துக் கொண்டிருக்கும்

இக்கால கட்டம் நேர்மையாக சிந்திப்போரை பதறத்தான்

வைத்திருக்கிறது.

ஏனிந்த நிலை ? பாரதிதாசனின்

பதறல்களும் சாடல்களும் இவை:

‘வாணிகர்க்கும் தமிழென்றால் வெறுப்புண்டோ ? அரசியல்சீர்

வாய்க்கப் பெற்றோர்

ஆணிகர்த்த பேடிகளோ ? அரும்புலவர் ஊமைகளோ ?

இல்ல றத்தை

பேணுமற்ற யாவருமே உணர்வற்றுப் போனாரோ ?

பெருவாழ் வுக்கோர்

ஏணிபெற்றும் ஏறாத தமிழர் உயிர் வாழ்வதிலும்

இறத்தல் நன்றே.

மிகுகோயில் அறத்தலைவர், அறநிலையக் காப்பாளர்

விழாவெ டுப்போர்

தகுமாறு மணம்புரிவோர் கல்விதரும் கணக்காயர்

தம்மா ணாக்கர்

நகுமாறு நந்தமிழை நலிவுசெய்யும் தீயர்களோ ?

நல்வாழ்வுக்கோர்

புகும்ஆறு புறக்கணித்தும் தமிழர் உயிர் வாழ்வதினும்

இறத்தல் நன்றே.

மகிழ்ச்சிசெய வருங்கூத்தர் மாத்தமிழை மாய்ப்பதுண்டோ ?

வாய்ப்பாட் டாளர்,

இகழ்ச்சியுற நடப்பதுண்டோ ? இசைப்பாடல் ஆக்குபவர்

இழிவேன் ஏற்றார் ?

நகச்சிலசொற் பொழிவாளர் நாணற்றுப் போயினரோ ?

வாழ்வுக் கான

புகழ்ச்சியினைப் போக்கடித்தும் தமிழ்ருயிர் வாழ்வதினும்

இறத்தல் நன்றே.

கூற்றமென வாழ்வதுவோ தமிழுக்கே ஏடெழுதும்

கூட்டம் ? தீமை

மாற்றவரும் அச்சகத்தார் வகைமறந்து போனாரோ ?

சொல்லாக் கத்தார்

தூற்றுமொழி ஏன்சுமந்தார் ? துண்டறிக்கையாளருமோ

தீயர் ? வாழ்வில்

ஏற்றமூற எண்ணாத தமிழருயிர் வாழ்வதினும்

இறத்தல் நன்றே. ‘

–தமிழியக்கம் – பாரதிதாசன்

பாவேந்தர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின்

ஒவ்வொரு துறையினரையும் வினவுகிறார், சாடுகிறார்

சாபமும் விடுகிறார்; பாவேந்தர் வாழ்க என்று கூறிவிட்டு

அவர் கடிந்துரைத்த அத்தனை பாதகங்களையும்

தொடர்து கொண்டுதான் இருக்கிறார்கள் தமிழர்கள்.

வணிகம், அரசியல், இல்லம், அச்சகம், ஏடுகள், மிடையங்கள்,

பட்டிமன்ற, சொற்பொழிவாளர்கள், அறநிலையங்கள், புலவர்கள்

எல்லோரிடமும் இன்று நாம் காணும் குறைகளை அன்றே

கண்டவர்கள் பாவேந்தர் உள்பட பல பேர்கள்.

ஆயினும் எல்லோரும் ‘தமிழ் வாழ்க ‘ என்று

சொல்லிவிட்டு, அந்தச் சொற்களைத் தவிர

அத்தனையையும் பிறமொழிகளில் புழங்குகிறோம்.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தினைக் கூட

‘Wish you a happy Tamil New Year ‘ என்று

கூறி கோமாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

துறைதோறும் ஊழல், ஒழுக்கமின்மை மற்றும் தமிழின்மை

என்ற நிலையில் தமிழர்களின் வாழ்வு நிச்சயம்

கேள்விக் குறிதான் என்பதில் அய்யமில்லை.

எது செய்யக் கூடாதோ அதை செய்வதில் வல்லவர்கள்

தமிழர்கள். அண்மையில் இவர்களின் இடக்கு முடக்கு

என்னவென்றால் கணினி உலகில், தமிழ் எழுத்துரு,

மற்றும் குறியீட்டு குளறுபடிகள்.

தமிழர்களுக்கு தமிழும் ஒழுங்காகத் தெரியாது!

அதோடு கணினியையும் ஒழுங்காகத் தெரியாது

என்று சொல்லுமளவுக்கு இவர்கள் நடந்து

கொண்டிருக்கிறார்கள்.

காட்டுமிராண்டித் தனமாக இவர்கள்

குறியீட்டுக் குறைகளை புறம் தள்ளிவிட்டு,

இருப்பதே போதும் என்று குறைச் சிந்தனையால் வறட்டு

வீராப்பும் பெருமையும் பேசித் திரிகிறார்கள் இன்றைய

தமிழ்க் கணினிச் சொவ்வறையாளர்கள்.

தமிழகத்திற்கு மத்திய அரசிலே சரியான பங்கில்லை,

அதுவும் கணினி தொடர்பான அடிப்படை விசயங்களில்

தமிழ்க் குறியீட்டிற்காக குரல் கொடுக்க ஆளில்லை

என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள்,

இன்று நடுவண் அரசிலே பலம் பொருந்திய அமைச்சராக

அதுவும் கணினித் துறையைக் கையில் வைத்திருக்கும்

தமிழர் ஒருவர் அமைச்சர் இருக்கையிலே கூட,

எதிர்காலம் பற்றிய செறிவான சிந்தனையைச்

செய்யாமல், நுனிப்புல் மேய்ந்து விட்டு

தமிழ்க் குறியீட்டை கோட்டை விட்டு, பின் ஏப்பம் விட்டு

இருக்கும் தமிழர்களைத்தான் ‘ஏணிபெற்றும் ஏறாத தமிழர் ‘

என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறினார் போலும்!

பாவேந்தர் பாரதிதாசன் அன்று பாடினதும் பதறியதும்,

இன்றும் பாடலாகவும் பதறலாகவுமே நிலைத்து

வருங்காலத்துக்கும் பொருந்தி விடுமோ என்ற

அய்யம் இருக்கவே செய்கிறது.

தேவார மூவர்கள், பாவலரேறு, பாரதிதாசன்

போன்ற எவ்வளவோ பேர்கள் தமிழுக்கு

மறுமலர்ச்சியைக் கொடுத்தும் ‘ஏணிபெற்றும்

ஏறாத தமிழர்களை ‘ என்ன சொல்ல ?

பாவேந்தர் தெளிவாகத்தான் அவர் பாட்டில்

சொல்லியிருக்கிறார்.

அவர் சொன்னது போல் ஏன் என்னால் சொல்ல முடியவில்லை ?

என்ற சிந்தனையோடே, ‘பித்த உலகினர் பெருந்துறைப் பரப்பினுள்

மத்த களிரென்னும் அவாவிடை…. ‘ என்ற மாணிக்கவாசகரின்

சொல்லையும் எண்ணிப் பார்க்கிறேன்.

‘பித்த உலகினர் பெருந்துறைப் பரப்பினுள்

மத்த களிரென்னும் அவாவிடை…. ‘ பிழைக்காது தமிழ்

என்ற ஏக்கத்துடன் பாரதிதாசனை நினைவு கூர்கிறேன்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

20-ஏப்ரல்-2005

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்