பாவண்ணனின் இரண்டு நுால்கள்

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

வளவ.துரையன்


1. எட்டுத் திசையெங்கும் தேடி

(கட்டுரைத் தொகுதி, அகரம் வெளியீடு, தஞ்சாவூர்)

அண்மையில் விழுப்புரத்தில் கவிஞர் பழமலய்யுடன் பேசிக்கொண்டிருந்தபோது ‘பாவண்ணன் இப்போதெல்லாம் மனிதநேயம், அன்பு போன்ற அறவியலைத்தான் எல்லாப் படைப்புகளிலும்- -குறிப்பாக தினமணிக் கட்டுரைகளில்- வலியுறுத்துகிறார் ‘ என்றார். அப்போது அருகிலிருந்த தீம்தரிகிட ஆசிரியர் ஞாநி ‘அறவியலின் அடிப்படைகளின்றி எதுவும் இல்லையே, பாவண்ணன் எழுதுவது சரிதான் ‘ என்றார். அதற்கு அடுத்த நாளே, இந்தத் தினமணிக் கட்டுரைகளின் தொகுப்பைப் படிக்க நேர்ந்தது ஒரு தற்செயலான ஒற்றுமை.

இக்கட்டுரைகள் எல்லாமே தனிமனித வாழ்க்கையில் அறம்பிறழ்ந்த தருணங்களையும் அவற்றின் விளைவுகளையும் கவலையுடன் முன்வைக்கின்றன. அவருடைய இயங்குமுறையை கடிதோச்சி மெல்ல எறிக வகையின்பாற்பட்டது என்று சொல்லத் தோன்றுகிறது. ‘ஓங்கி வாதிடுவது என் இயல்பில் இல்லை ‘ என்று அவரே தன் முன்னுரையில் கூறுவது குறிப்பிடத்தக்கது. மொழிபெயர்ப்புப் படைப்புகளைப்பற்றிக் கவலைப்படாத மொழியை மென்மையாக ‘அலட்சியமும் மேம்போக்கான மனமும் கொண்டது ‘ என்று கூறிச் செல்கிறார். குழந்தைகளிடம் நெருங்கிப் பழகாத பெற்றோர்களைத் ‘துரதிருஷ்டசாலிகள் ‘ என்றுதான் அவரால் எழுத முடிகிறது. ஏரிகளைத் துார்த்துப் பேருந்துநிலையங்கள் அமைப்பவர்களை ‘ஞானவான்கள் ‘ என்ற அளவில் கிண்டல் செய்து சாடுகிறார்.

பாவண்ணன் கவலைகள் பெரும்பாலும் இக்காலக் குழந்தைகள் வாழும் சூழல், அவர்களின் எதிர்காலம் பற்றியே சுழல்கின்றன. அதனால்தான் குழந்தைகளின் அன்பு, நட்பு, உணவு, கனவு எனப் பல கட்டுரைகள் பேசுகின்றன. கணிப்பொறிகளையும் தொலைக்காட்சிகளையும் தவிர வேறு உலகமே தெரியாத இளைஞர்களைப்பற்றி அவர் எண்ணித் துன்பப்படுவதைப் பார்க்க முடிகிறது.

நவீன எழுத்தாளர்கள் சமூகப் பொதுநிகழ்வுகள் குறித்துக் கவலைப்படுவதில்லை என்று உரைப்பவர்கள் இத்தொகுப்பைக் கட்டாயம் படிக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை, பாலுணர்வுச் சண்டல்கள், இரத்த தானத்தின் அவசியம், சுற்றுப்புறச் சூழல் மாசடைதல்,காடுகள் வெட்டப்படுதல், விரும்பி ஓய்வுபெற்றோர் படும் பாடு, குழந்தைத் தொழிலாளர்கள் நிலைமை, காவல்துறையின் வன்முறை, படித்தவர்களின் பேராசையும் அக்கறையின்மையும், பெண்கள் மறுமணம், செல்பேசித் தொல்லைகள் என்று நாள்தோறும் நாம் கண்டு கேட்டு உய்த்துணரும் அனுபவங்களையே கவலையுடன் பதிவு செய்துள்ளார்.

எளிமையான நடை, சிறு சொற்றொடர்கள், ஆகியவற்றோடு ஆங்காங்கே தக்க உவமைகளுடன் அவர் கருத்தை விளக்க முற்படுகிறார். படிக்கும்போதே மனத்தில் உடனடியாக இக்கட்டுரைகளுக்காக ஓர் இடம் உருவாகிவிடுவதற்கு இதுவும் ஒரு காரணம். மென்பொருள் இளைஞர்களைப் பால்மாடுகளுக்கு உவமை கூறுவதையும் மண்ஜாடிக்குள் குரோட்டன் செடிகளாக மலைகள் மாறிப்போயின என்று சொல்வதையும் தலைவர்கள் மொழியைத் தொண்டர்கள் பறக்கும் வார்த்தைக் கம்பளமாகக் குறிப்பிடுவதையும் சில எடுத்துக்காட்டுகள். செல்பேசி வைத்திருப்பவர்களைச் செல்லாளர்கள் என்று குறிப்பிடுவது புதிய சொல்லாட்சி.

‘படைப்பூக்கமும் போட்டியுணர்வும் ‘ கட்டுரை தொடங்கிய புள்ளியிலிருந்து திசைமாறி பொறாமையால் போட்டி என்று உருவெடுத்துவிட்டது. ‘கிராமத்து இளம்பிஞ்சுகள் ‘ கட்டுரை படப்பிடிப்போடு நின்றுவிடுகிறது. ‘திசைதிரும்பும் கோபம் ‘ மையமே வலியுறுத்தப்படவில்லை. தாய்மொழியின் இடத்தைப் பிடிக்க நினைக்கும் மொழியின்மீது கோபப்பட்டால்தானே வழிபிறக்கும் ?

கட்டுரைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துகிறவையாயினும் எழுதிய நாளைக் குறித்திருந்தால் எதிர்காலத்துக்கு உதவியாக இருக்கும் . கட்டுரைகள் குறித்து வந்த கடிதங்கள் ஒன்றிரண்டைச் சேர்த்திருக்கலாம்.

கதைபோல் தொடங்கி ஆற்றொழுக்காகச் சென்று கதைபோலவே முடிவதால் கட்டுரைகள் படிக்க ஆர்வ்முட்டுகின்றன. கவிஞராக எழுத வந்த பாவண்ணன் சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என்னும் தளங்களில் அழுத்தமாகக் காலுான்றியிருப்பதைப்போல சிறந்த கட்டுரையாளராகவும் மிளிர்கிறார் என்பதில் ஐயமில்லை.

நேர்த்தியான தாளில், தெளிவான அச்சமைப்பில் அழகான கட்டமைப்பில் வெளியிட்டுள்ள அகரத்துக்குப் பாராட்டுகள்.

2. எனக்குப் பிடித்த கதைகள்

(கட்டுரைத் தொகுதி, காலச்சுவடு வெளியீடு, நாகர்கோயில்)

திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் பெரும்பாலும் ஓர் அமைப்பு முறை கச்சிதமாகப் பொருந்தியிருக்கும். ஏதேனும் ஒரு திவ்ய தேசத்தைப் பாட முனையும்போது பாசுரத்தின் முதல்பதியில் திருமாலின் அவதாரச்செயல் ஒன்று கூறப்படும். பிற்பகுதியில் அத்தலத்தின் அழகு மிளிரும் இயற்கைக் காட்சிகள் விரித்துரைக்கப்படும். அதைப்போன்ற ஓர் அமைப்புமுறையுடன் இத்தொகுதியில் பாவண்ணன் தனக்குப் பிடித்த சிறுகதைகளைப்பற்றி இளம்வாசகர்களை முன்வைத்துப் பேசுகிறார். முதலில் தன் வாழ்விலிருந்து ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிற வகையில் எல்லாக் கட்டுரைகளும் தொடங்குகின்றன. பிறகு அவ்வனுபவத்தின் சாரம் தனக்கு நினைவூட்டும் சிறுகதையைப் பற்றிய குறிப்புகள் சுருக்கமாக முன்வைக்கப்படுகின்றன. பிறகு சுரங்கத்தின் ஆழம் காணமுடியாத இடத்தில் காணக்கிடைக்கும் தங்கக்கற்களைப்போல அச்சிறுகதையில் அடங்கியிருக்கும் அழகியல் குறிப்புகள், குறியீடுகள், படிமங்கள், மூலவாக்கியங்கள் என அனைத்தும் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கப்படுகின்றன. பிறகு அவற்றுக்கும் கதைக்கும் வாழ்வுக்கும் உள்ள தொடர்புகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன. கதைகளைப் புரிந்துகொள்வது என்பது பாவண்ணனுக்கு வாழ்வைப் புரிந்துகொள்வதாகவே உள்ளது. அவர் தன் வாழ்வனுபவத்திலிருந்து எடுத்துரைக்கும் சம்பவங்களே தனிக்கதைகளுக்குரிய கூறுகளோடு உள்ளன.

சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக்குஞ்சு ‘ சிறுகதையை அறிமுகப்படுத்தும்போது கட்டுரையாளர் சிறுவயதில் ஓணான் பிடித்ததும் மரத்தின் மீதேறி காக்கை முட்டைகளை எடுத்துவந்ததையும் வாயில்லாத ஜீவனுடைய பாவம் பொல்லாதது என்று பெரியப்பா கூறும் வார்த்தையும் பதிவு செய்யப்பட்டுள்ளது அழகான சிறுவர் கதையாக உள்ளது.

27 தமிழ்மொழிக் கதைகளும் 23 பிறமொழிக்கதைகளும் இத்தொகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நவீன இலக்கியவாதிகள் பலரையும் ஈர்க்காத சுஜாதா, அகிலன் ஆகியோரின் சிறுகதைகளும் பாவண்ணனை ஈர்த்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒரு படைப்பாளியின் ஒரு சிறுகதையைப்பற்றிக் கூறும்போது அக்கதைக்கு இணையான வேறு படைப்பாளிகளின் சிறுகதையையும் நினைவுபடுத்திக் கூறுவது பாராட்டுக்கு உரியது. புதிய வாசகன் படிக்கவேண்டிய திசைகளைப்பற்றி விரிவாகக் கூறுகிறார் பாவண்ணன். உடலை விற்கவந்த பெண் கொடுத்த பணத்தைப் பறிமுதல் செய்துகொண்டு ஓடும் அப்புக்குட்டனைப் படிக்கும்போது (ஆ.மாதவனுடைய பறிமுதல்) அவருக்குப் புதுமைப்பித்தனுடைய பொன்னகரத்து அம்மாளு நினைவுக்கு வருகிறாள். இதுபோலவே ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பல் ‘ கதைக்கு முன்னால் தல்ஸ்தோயின் அன்னா கரினினா நாவல்தளம் மின்னலிடுவதையும் சொல்லவேண்டும். வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ சிறுகதையில் வரும் கணவன் ஒருவன் வேறொருத்தியின் நினைவில் திளைத்தபடி தன் மனைவியுடன் வாழ்கிறான். உடனே பாவண்ணனுக்கு அதே வண்ணநிலவன் எழுதிய ‘அயோத்தி ‘ சிறுகதையில் அத்தானை மனத்துக்குள் நினைத்தபடி கையாலாகாத கணவனுடன் வாழும் ஒரு மனைவியின் சித்திரம் தோன்றவதும் அவருடைய வாசிப்பனுபவத்தின் சான்றாக விளங்குகிறது. தல்ஸ்தோயின் ‘மோகினி ‘ கதையைக் கூறவரும் பாவண்ணன் அதே எழுத்தாளருடைய ஆறடி நிலம் மற்றும் கடவுள் வருகை ஆகிய கதைகளைக் கூறாமல் போகமுடியவில்லை.

பயணங்களில் விருப்பமுள்ள பாவண்ணன் தன்னுடைய பயணம் என்னும் சிறுகதைக்காகவே கதா விருதைப் பெற்றவர். அவர் சுட்டிக்காட்டும் பிச்சமூர்த்தியின் ‘தாய் ‘ சிறுகதையும் சா.கந்தசாமியின் ‘தேஜ்பூரிலிருந்து.. ‘ சிறுகதையும் மிக அழகாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மாஸ்தியின் ‘மஸூமத்தி ‘ முக்கியமான சிறுகதை. அதில் உள்ள புராணக்குறிப்பும் பாழடைந்த குளத்தைப் பாரதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் படிமமும் மனத்தில் படிவதோடு ‘வாழ்ந்து கெட்டவர்களின் வீட்டை வாங்கும்போது அவர்களின் ரகசியப் புலம்பல் கேட்கும் ‘ என்னும் தொனியில் எழுதப்பட்ட மகுடேஸ்வரனின் கவிதையும் நினைவுக்கு வருகிறது.

குழந்தை ஒரு பொருளைக் கேட்பது அப்பொருள் தேவை என்பதால் அன்று. தன் கோரிக்கைக்குப் பிறர் எப்படி எதிர்வினை புரிகிறார்கள் என்று அறிவதற்காகத்தான் என்று மனம் சார்ந்த ஒரு கருத்தை முல்க்ராஜ் ஆனந்தின் ‘குழந்தைமனம் ‘ கதையைக் கூறிய பாவண்ணன் விளக்குகிறார்.

பொதுவாகவே தற்காலக் குழந்தைகளைப்பற்றி அதிகமாகக் கவலைப்படும் பாவண்ணன் அகிலனின் ‘காசுமரம் ‘ கதையில் வரும் காவேரி சிறுமியையும் அந்தோன் செகாவின் ‘வான்கா ‘ சிறுகதையில் வான்காவையும் காட்டி இளமையில் வறுமை எவ்வளவு கொடிது என் பதையும் குழந்தைத் தொழிலாளரின் அல்லல்களையும் காட்டுகிறார்.

தமிழகத்தின் அளவுக்கு மீறிய திரைப்பட மோகம் சுந்தர ராமசாமியின் ‘பள்ளம் ‘ கதையின் மூலமும் அரசு ஊழியரின் பொறுப்பற்ற தன்மை பூமணியின் ‘பொறுப்பு ‘ கதையின் மூலமும் மக்களின் கனவுநிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் சாமியார்களை சார்வாகனின் ‘கனவுக்கதை ‘ மூலமும் காட்டும் பாவண்ணன் தன் சொற்களாகவும் பல கருத்துகளைக் கூற வாய்ப்பேற்படுத்திக்கொள்கிறார்.

பிரேம்சந்தின் ‘தோம்புத்துணி ‘ சிறுகதையைக் கூறியபின் ஆணுக்கொரு நிதி, பெண்ணுக்கொரு நீதி என்று ஏன் பிரித்து வகுக் கப்பட்டது ? என்று அவர் கோபமாகக் கேள்வி கேட்கிறார். குலாப்தாஸ் புரோக்கரின் ‘வண்டிக்காரன் ‘ கதையின் முடிவில் பாவண்ணன் தன் குரலாக காலுக்குப் பொருந்தும் செருப்பு பொருந்தாத செருப்பு என்று பெண்களை வகைப்படுத்தும் சமூகம் அதே உதாரணங்களால் ஆண்களை வகைப்படுத்திப் பார்ப்பதில்லை என்று வேதனைப் படுகிறார்.

‘குருபீடம் ‘ கதையை அறிமுகம் செய்யக் காட்டப்படும் கபடி ஆட்டத்தில் வரும் பயிற்சியில்லாத நோஞ்சான் குமாரசாமி வெற்றி பெறுவது யதார்த்தமாக இல்லை. ஓடிய கால்கள் கதைக்காக வரும் சம்பவத்தின் தன்னால் ஒன்றுமே செய்ய இயலாத நிலையில் உள்ள காத்தவராயன் பண்ணையார் குளிக்க இருக்கும் சுடுநீரில் சிறுநீர் பெய்து கோபத்தை வெளிப்படுத்துகிறான் இதை எல்லாவகையிலும் வலிமைகொண்ட போலீஸ்காரர்கள் தப்பி ஓட முயன்ற கைதியை அடித்துக் கோபத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியுடன் எப்படி ஒப்பிட முடியும் என்பது கேள்வியாக நிற்கிறது.

காலச்சுவடு இப்புத்தகத்தை மிகுந்த கவனத்துடன் கொண்டுவந்திருப்பதைப் பாராட்ட வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரின் படமும் அதற்குக் கீழே அவரைப்பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ள விதம் வாசிப்பவர்களை ஈர்க்கிறது. மேலும் கூறப்பட்டுள்ள கதை எத்தொகுப்பில் உள்ளபூ அது எந்த ஆண்டில் வெளிவந்தது ? மொழிபெயர்ப்பாளர் பெயர் விவரங்கள், பதிப்பக விவரங்கள் என்னும் செய்திகளும் மிகுந்த உழைப்புகொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. ஸாதனா கர் என்னும் வங்க மொழி எழுத்தாளரின் படம் மட்டும் தான் இல்லை.

ஒரு சிறுகதையும் சமகால வரலாற்றுச் சம்பவமும் அருகருகே இணைத்து வைக்கப்படுவதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டிய மையத்தை நோக்கி வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. எல்லாக் கதைகளிலும் நம் கவனம் குவிய வேண்டிய புள்ளி அந்த மையக் கரு மட்டுமே என்று பாவண்ணன் கூறுவது இந்த நுாலை வாசிக்கும் வாசகர்களுக்குப் பெிரிதும் உதவியாக இருக்கும்.

—-

jayashriraguram@yahoo.co.in

Series Navigation

வளவ.துரையன்

வளவ.துரையன்