ரா.கிரிதரன்
ஆச்சு. இருந்த கடைசி பெட்டியையும் ஷிப்மெண்டுக்கு அனுப்பியாகிவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியா வந்து சேர்ந்துவிடும். பால்டிமோரிலேயே பதினைந்து வருடங்கள் கழித்து, இரு நாட்களில் இந்தியாவுக்கு பறக்க எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது. அதிகாலை சோம்பல் முறித்து எழுந்து, மாலை சட்டென செய்த முடிவுகிடையாது.திவ்யா, ‘கண்டிப்பா போகணும்.இங்க பயமா இருக்கு.தீபா காலேஜுக்கு போகலாம்னு சொன்னீங்களே’ என விசும்பினாள். பெண்ணுக்கு பதினாறு வயதானவுடன் அம்மா மனது விழித்துக்கொள்கிறது.
தீபாவுக்கு அவ்வளவு விருப்பமில்லைதான் ‘ஐ’ல் கம் பேக் ஃபார் எகனாமிக்ஸ் ஸ்கூல் இன் சிகாகோ. அங்க என்னால கம்ப்யூட்டர் எல்லாம் படிக்க முடியாது.’ ஏதோ அதைப் படிக்கவைக்கவே அம்மா இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டு போவதாய் அவளுக்கு எண்ணம். ஆனாலும் அம்மாவுக்கு டேட்டிங், பாய்ஃபிரண்ட் பற்றிய பயம் இருக்குமென அவளுக்கும் தெரியும். போன பாட் லக் டின்னரில் கூட அஸ்வினின் அம்மாவிடம் தன் அம்மா தூண்டில் போட்டு விஷாலைப் பற்றிக் கேட்டதற்கு, இரண்டு நாள் சண்டை பிடித்திருக்கிறாள்.
அவரவர் விருப்பம் இப்படியிருக்க, எங்களுக்காக அவளும், அவளுக்காக நாங்களும் இந்தியாவுக்கு திரும்புவதே இதிலுள்ள தார்மீக உண்மை.
இன்னும் இரு நாட்கள் இருக்க , ஒரு நாள் குடும்பத்துடனும் ஊர் சுற்றுவது மற்றொரு நாள் நண்பர்கள்,சொந்தங்களின் நெருக்கத்தில் மாறிய சில உறவுகளையும் பார்க்க என வெவ்வேறு திசை செல்வதென ஏற்பாடு. எனக்கு கிழக்கே தெரு முனை முடிவதற்குள் நட்பு வட்டம் தீர்ந்து போக, தீபாவுக்கு படாப்ஸ்கோ நதிதாண்டி அது நீளும். அவள் அம்மா தனியென குழாம் புகுவாள்.
முதல் நாள் – காலையில் கிளம்பி பால்டிமோரின் முக்கியமான இடங்களை காரிலேயே கடப்பதாய் திட்டம். துறைமுகத்துக்கு வந்தபோது இதுவரை பார்த்திராதது போல இருந்தது. எங்களுக்குள்ளே ஒடிய எண்ணங்கள் போல, ஒவ்வொரு கட்டடமும் தனி பாணியில் நின்றுகொண்டிருந்தன. என் அலுவலகத்துக்கு பக்கத்தில் இருந்தாலும் இதுவரை சாவகாசமாய் கரையில் உட்கார்ந்து காபி குடித்ததில்லை. எப்போதும் பதட்டம், ஓட்டம் மிகுந்த நாட்கள்.
பால்டிமோரை விட்டு நிரந்தரமாக செல்லப்போகிறோம் என்ற எண்ணமே பார்த்த சாதாரண இடங்களுக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவத்தைத் தந்தது. உருத்தெரியாமல் போயிருந்தாலும் முதலில் இருந்த வாடகை வீடு திவ்யாவுக்கும் எனக்கும் விசேசமானதுதான். மால்களையும் தாண்டி நாங்கள் வந்த புதிதில் பல சின்ன கடைகள் காணாமல் போனதை ஆச்சர்யமாக கண்டுபிடித்தோம். தீபாவின் முதலில் படித்த பள்ளி, பூங்கா, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வளாகத்தின் ஆர்க்கிடெக்சர் ப்ரில்லியன்ஸ் என எல்லாமே புதிதாக கண்டுபிடித்தோம்.
இந்த ஊரின் அனுபவம் என் வாழ்வின் மூன்று கட்டங்களிலும் மாறிக்கொண்டேயிருக்கிறது. வந்த புதிதில் இருந்த குழப்பம், பயம் பால்டிமோரின் அழகையும் ரசிக்க விடாமல் செய்திருந்தது. இத்தனைக்கும் நான் வந்தது ஒரு இலையுதிர் காலத்தில் – சிகப்பு, ஆரெஞ்சு, மஞ்சலென செழிப்புகளால் கண்கள் பூத்துபோகத்தொடங்கியது.கார் ஓட்டக் கற்றுகொண்டு, வீட்டின் ஓட்டை ஒழுகல்களை நாமே சரிசெய்து, வாரயிருதியில் வீட்டுசுத்தமென்றே கழிந்த மாதங்கள் பல. ஓராயிர இந்திய மொழிகளில் துலு பேசினால் கூட அவர்களை டின்னருக்கு வீட்டுக்கு கூப்பிட்டு , இளித்து நட்பை பேணிய நாட்கள். தீபா வீட்டில் இம்சைகளை ஆரம்பிக்க, ஒரே பிள்ளையை கட்டுப்பாடுடன் வளர்க்க, பிள்ளையுள்ள பலரையும் வம்பாக வீட்டுக்கு அழைக்க வேண்டிய காலகட்டமும் இருந்தது. பாட்லக் டின்னர், மென்ஸ் ஒன்லி, விமன்ஸ் ஒன்லி, பேபி ஷவர் என கூப்பாடு போட்டு எங்கள் நெருக்கத்தை அதிகப்படுத்தினோம். இதில் ஒரு சதவிகிதம் மட்டுமே நமக்காக, மீதமனைத்தும் பிள்ளைகளின் தனிமை விரட்டியே.
இரண்டாம் காலகட்டம் மிக தந்திரமானது.அமெரிக்கா எனும் தூண்டிலில் வலிய போய் மாட்டிக்கொள்ளும் கட்டம். இருப்பிடம், அலுவலகம் என வாழ்வு சகலமும் கால் மேல் கால் போட்டு சிம்மாசனத்தில் உட்காரும். இந்த தூண்டில் தரும் சுகத்தில் வாழ்வை சவுகரியமாக கழித்தேன். இருக்க,பிழைக்க,சுகிக்க என அனுபவிப்பில் நாட்களும் நகர்ந்தது. அமெரிக்கா எனும் கடலின் மூலைகளில் எல்லாம் காரிலேயே பயணம், மூன்று வருடங்களுக்கு ஒருமுறையென இருபது நாள் இந்தியப்பயணம். இந்தியாவில் இறங்கிய சில மணிநேரங்களிலெல்லாம் அலுக்கத் தொடங்கியிருக்கிறது; பல நேரங்களில் முதல் கவளை உணவு சாப்பிட்டவுடன். தீபா மூலம் அமெரிக்காவை , குறிப்பாக பால்டிமோரை , புரிந்த கொண்ட பருவம். அவள் வளர்வதற்கு இணையாக நண்பர்களும் சேரத்தொடங்கினர். அதுவரை வாடகை வீட்டில் இருந்து, சொந்தமாக வீடு வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு, கிரெடிட் கார்ட் நிறுவனங்களின் தாராள கடனும், வீட்டு கடனை நாம் தரும்வரை கண்டுகொள்ளாத வசதிகளும் தள்ளியது. நான் பார்த்து வளர்ந்த பெண் என தீபாவையும் , அமெரிக்காவையும் ஒன்றாக என்னால் சொல்ல முடியும். அமெரிக்காவின் முன்னேற்றத்தையும் என்னுடையதாகவும், இறங்குமுகம் மூன்றாம் கட்டத்திற்கும் தள்ளியது.
சகலமும் அலுத்துப் போக,தீபா பேசும் பாஷை எனக்குப் புரியாமலும், அவளுக்கு என் வியாக்கியாங்கள் பிடிக்காமலும் போகத் தொடங்கிய நாற்பது வயதை எட்டி இருந்த காலகட்டம். நண்பர்கள் ஒன்றுசேரும்போது க்ரீன் கார்ட், சிடிஷென்ஷிப் என்ற கட்டமெல்லாம் தாண்டி –
`இந்தியால எப்படி முன்னேற்றங்கள் வந்திருக்குதெரியுமா`
`ஒரிஸ்ஸா சைடு பூரில வேலை பார்த்தான் சார் என் மச்சினன்.இப்போ அங்க ரெண்டு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் கட்டறான்.கேட்டா கவர்ண்மெட் பணம். ரிலையன்ஸ்ல ப்ராபர்ட்டி ஷாரிங்குன்னு சாதாரணமா சொல்றான்.`
`என் அண்ணன் பையன், இப்போதான் வேலைக்கு சேர்ந்தான். தண்ணிமாதிரி செலவு பண்ணறான் சார். சும்மா வெளிய மாலுக்கு சினிமா, ஹோட்டல்னு சுத்திட்டு 5000 ரூபாய் செலவாச்சுங்கறான்.என் முத மாச சம்பளமே அவ்வளவுதான்னு சொல்றேன்.சிரிக்கறான்.`
இந்தியாவைப் பற்றி அதிகம் பேசத்தொடங்கிய நாட்கள். அமெரிக்காவில் பொருளாதாரம் குறையுதா, வேலையெல்லாம் குறையுது பத்தியெல்லாம் கவலையில்லாமல் ,குஷன் மாதிரி நமக்குதான் இந்தியா இருக்கே. அங்க போகலாம். மினிமம் 15கே வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை ஒவ்வொறு முறையும் நண்பர்களிடம் பேசும்போதெல்லாம் தைரியம் கொடுக்கும். என்ன இருந்தாலும் நம் நாடு இந்தியா இல்லையா. பதினைந்து வருடம் வெளியெ இருந்தாலென்ன?
ஆனாலும் சிலர் இந்தியா போய் திரும்ப வந்த கதைகளும் அலாதிதான். சனிக்கிழமை இரவு நீண்டுகொண்டேயிருக்கும். ஆனால்,யாருமற்ற வெறுமையான ஞாயிறு இரவுகளில் அந்த கதைகள் ஞாபகத்துக்கு வந்துத் தொலைக்கும். படுத்தபடி யோசித்து, லாஜிக்குகளில் எல்லாவித சாத்தியங்களையும் கணக்கு போடும் மனது. பிளான் ஏ, பிளான் பி என பாக் அப் பிளான்களை நினைத்தபடி அலுவலகத்திற்கு காரை ஓட்டிச் சென்ற நாட்கள் பல.
திவ்யாவிற்கு முதலிலேயே இதில் விருப்பமிருந்தது. அவள் அம்மா படுத்தபடுக்கையாக மதுராந்தகத்தில் கிடக்கிறாள்.தீபாவை சமாதானம் செய்யவே பிரயாசனப்படவேண்டியிருந்தது. கல்யாணம், நாட்டு நடப்பு, வாழ்வுமுறை என சால்ஜாப்பு சொல்லமுடியாது. இந்திய செய்திகளைக் காட்டி எங்கள் வாயை அடைத்துவிடுவாள். டேடிங், பாய் ஃபிரண்ட் எனக் கூறினால் தன் சுதந்திரத்தில் கைவைக்காதே என சாட்டையால் அடிப்பாள். எல்லா சமாதங்களுக்கும் இரு பக்கம் உள்ளதுதான், எங்கள் முடிவுபோல. இந்தியா போய் பிடிக்கவில்லையென்றால் அவளை மட்டும் மேல் படிப்புக்காக எகனாமிக்ஸ் ஸ்கூலுக்கு அனுப்ப சத்தியம் செய்த பிறகே ஒத்துக்கொண்டாள். ஒன்று – இன்னும் மூன்று ஆண்டுகளில் அது நடக்கப் போகிறது என்பது, அடுத்து- அவள் பாட்டியின் இக்கட்டான நிலமையைப் பற்றி கொஞ்சமேனும் இரக்க குணம். முதலாவதுக்கே சாத்தியம் அதிகம்.
தீபாவுக்கு தன் நண்பர்களை சந்திக்க வேண்டுமென்பதால், சீக்கிரத்திலேயே வீடு திரும்பிவிட்டோம். அடுத்த நாள் எங்களுக்கு அவ்வளவு வேலை இல்லை. தீபா நண்பர்களைப் பார்க்க வெளியே சென்றுவிட்டு மாலை தான் திரும்புவாள். அதற்குக் பிறகு என் நண்பன் வீட்டில் ஒரு சின்ன செண்ட ஆஃப் பார்ட்டி. பிரியாவிடை கொடுத்து, இன்னும் சில பரிசுகளை வாங்கி, அவற்றை எந்த மூட்டையில் திணிப்பது எனச் சிந்திக்கவேண்டும். சில நண்பர்களுடன் டச் இந்தியா திரும்பிய பின்னும் இருக்குமெனத் தோன்றுகிறது.
பார்ட்டி இனிதே நடந்து கொண்டிருக்கிறது. விஷாலின் அம்மா திவ்யாவுடன் தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறாள். எனக்கு நாளை விமானம் நல்லபடியாகக் கிளம்பி இந்தியா சென்று சேரவேண்டுமே எனபதே மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் கேள்விகளுக்கு மத்தியமாக தலையாட்டி வைக்கிறேன். சிலர் நான் இந்தியா செல்வதை பாராட்டினாலும், அவர்களுக்குள் `இந்தியால இவன் கதை என்ன ஆகுதுன்னு பார்ப்போம்` என்ற ரீதியிலே ஓடிக்கொண்டிருக்கும். இப்படி பறந்தவர்களின் அனுபவத்தை பல முறை கேட்டவனல்லவா. இதோ என் திவ்யா, தீபா, விஷாலின் அம்மா, விஷால் என ஒரு படையே என்னை ஓரம் கட்டுகிறது.
இதில் ஏதாவது ஒன்று இருக்கக் கூடாதென பிரார்த்திக்கிறேன்.
அ. விஷால் சம்மரில் எகனாமிக்ஸ் பிரிலிமினெரி படிக்க ஏதோஒரு ஸ்கூலில் அப்ளை செய்திருக்கிறான். அதில் சேரப் போகிறேன். அதனால் நீங்கள் இப்போது போங்கள். நான் ஆறுமாதத்திற்குப் பிறகு வருகிறேன் என தீபா கூற என் மனைவி ஆதரிக்கப்போகிறாள்.
ஆ. விஷால்- தீபா டேட் பண்ணுகிறார்கள்.இத்தனை நாட்கள் அதை மறைத்திருக்கிறார்கள் என ஒட்டுமொத்தமாக குண்டு வைக்கக்கூடாது.
என்னுடன் சேர்ந்து நீங்களும் பிரார்த்தனை செய்யுங்களேன்.
*
girigopalan@gmail.com
- கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்
- ஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1
- துரோகிக்கு மிகவும் நன்றி
- வாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்
- வேத வனம் விருட்சம்- 43
- ஜாதி மல்லி
- நிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் ! (கட்டுரை : 1)
- சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்
- வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்
- இந்திராபார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா
- ” புறநானூற்றில் கைக்கிளை “
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்
- இஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்
- ஒரு பதிவை முழுமை செய்கிறேன்
- மழை கோலம்
- அலைதலின் பின்னான குற்றச்சாட்டு
- உதிரிகள் நான்கு
- பால்டிமோர் கனவுகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் ?
- ஆரோக்கியத்தின் பாடல்
- குதிரைகள் கடந்து செல்லுதல்
- அடிவானத்திலிருந்து நகரத்திற்கு
- மேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்
- அரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து
- சோறு
- காதலிக்க ஒரு விண்ணப்பம்
- விரியும் வலை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று