பார்சலோனா -3

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


இதழ் விரித்த தாமரைபோல மோன் ஜுயிக் (Mont Juic) மலையிலிருந்து தரிசனம் கொடுக்கிறது. அதிகாலையில் கிழக்கில் சூரியன் உதிக்கும் முன்பாக பார்க்க வேண்டுமென்றார்கள். நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து புறப்பட்டு, எங்கள் தினசரியின் தொடக்கமெனத் தீர்மானித்திருந்த லெ ரம்பலாவின் முன் வாசலில் (பிளாஸ் தெ லா கட்டலோனியா) கால்வைத்தபோது காலை ஏழுமணி. கடந்த வாரத்தில் எழுதியிருந்ததுபோல, லெ ரம்பலா கட்டலோனியரின் காதலர் தினமான Sant Jordiக்குத் தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தது. புத்தகக் கடைகாரர்களும், பூக்கடைகாரர்களும் நகரசபை ஊழியர்களிடம் உரத்த குரலில் வாதிட்டுக்கொண்டிருந்தார்கள், அநேகமாக கட்டலான் மொழியில் இருக்கலாம். வீதிக்கலைஞர்கள், தங்கள் முகத்துக்கு கண்ணாடி பார்த்து வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தார்கள். பச்சை, சிகப்பு, நீலமென்று முகத்திற்கு வண்ணம் பூசிக்கொள்வதையும், புருவம் தீட்டிக்கொள்வதையும் பார்க்க, எங்கள் பக்கத்தில் கூத்து கலைஞர்கள் ஒப்பனை செய்துகொள்வது போலவிருந்தது; கேரளா பக்கம் கதகளி கலைஞர்கள்கூட, கண்ணிரப்பையை மடித்தும் அகல விரித்தும், நொடிக்கொருமுறை உதடுகளை மடித்தும் பிரித்தும், தலையைத் திருப்பியும் அரிதாரம் பூச பார்த்ததுண்டு. முகத்துக்கு வண்ணம் தீட்டும்போதே இவர்களுக்குள் அந்த இன்னொரு ஜீவன் உட்கார்ந்துகொண்டிருக்கவேண்டும். அரிதார இடைவெளியில் தெரியும் கண்களில் மனித நடமாட்டத்தைக் குறித்த பிரக்ஞையில்லை. உல்லாசப்பயணிகளை அழைத்து அவர்கள் முகங்களைக் கேலிச்சித்திரமாக தீட்டுகிற ஓவியர்களும் அன்றைய தினத்துக்கான தங்கள் இடத்தை ஒதுக்குவதற்கான முயற்சிகளிலிருந்தார்கள்.

லா பிளாஸா எஸ்பானியா (La Placa Espania) என்ற இடத்திலிருந்து சுரங்க ரயில் அல்லது பேருந்து எடுத்து மோன் ஜுயிக் (Mont Juic) செல்லலாம். எனது குடும்பத்தில் பெரும்பான்மையோர் சுரங்க ரயில் பிடித்து, பின்னர் கேபிள் கார் பயணித்து மேலே செல்லலாமென விரும்ப அதன்படி செய்தோம். அங்கிருந்து கேபிள்-கார் புறப்படும் இடத்திற்கு சுரங்க ரயிலில் செல்ல பத்து நிமிடம் பிடிக்கிறது, பிறகு கேபிள்-காரில் ஒரு பத்து நிமிட பயணம், ஆக இருபது நிமிடப்பயணத்தில் மலையில் இருந்தோம். மலை என்றால், கல்லும் முள்ளும் காட்டுச்செடிகளும், புதர்களும் மண்டிய மலை என்கிற கற்பனையை தவிர்க்கவும், மோன் ஜுயிக் பூக்களும், செடிகளும், மரங்களும் போர்த்திய மலை. நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் தாவர இயல் பூங்கா இருக்கிறது, அரிதான மரங்கள் தாவரங்களை பராமரித்து வருகிறார்கள். மலைக்குச்செல்ல நன்கு பராமரிக்கப்பட்ட சாலை வசதியும், நடைபாதையுங்கூட இருக்கின்றன. இரண்டு கி.மீட்டர் தூரம் வனம்போன்று அடர்ந்திருந்த மரங்களுக்கிடையிலும், செடிகொடிகளுக்கிடையிலும், இடைக்கிடை அமைந்துள்ள பூங்காக்களில் சிறிது நேரம் விரும்பினால் ஓய்வெடுத்துவிட்டு, அவ்வப்போது கூட்டங் கூட்டமாக பெரும்பாலும் ஐரோப்பிய மொழிகளில் உரையாடிக்கொண்டு புன்னகைத்தபடி கடந்து செல்லும் உல்லாசப்பயணிகளை ரசித்தபடி மெல்ல மலைக்கு ஏறிச்செல்லலாம் அல்லது இறங்கலாம். நாங்கள் இறங்குவதற்கு நடைபாதையை உபயோகித்தோம்.

மோன் ஜுயிக் மலையிலிருந்து பார்க்க கிழக்கே மத்தியதரைகடல் தன் மீது படிந்த வெயிலை கரைக்கு அனுப்பிக்கொண்டிருந்தது, தொய்வின்றி அலைகளை முன்தள்ளும் ஆர்பாட்டமற்ற கடல். மூன்று திசைகளிலும் நவீனமும், பழமையும் கட்டுண்டு நிற்பதுபோல கட்டிடங்களுடன் பார்சலோனா..பார்சலோனா..பார்சலோனா. மலையில் உச்சியிலிருக்கும் அரண் முக்கியமானது. 1640ல் கட்டப்பட்டது என்கிறார்கள். இதன் உபயோகம் குறிப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், அதன் பின்னர் ஸ்பெயின் வரலாற்றில் மிக மோசமான கொடுங்கோலன் எனச் சித்தரிக்கபட்ட பிரான்சிஸ்கோ •பிரான்கோ காலத்திலும் எதிரிகளை சிறைவைக்கவும், விசாரணை என்றபெயரில் அவர்களைத் துன்புறுத்தவும் இக்கோட்டை உதவியிருக்கிறது.அரணின் முன்னும் பின்னும் மேல் தளத்திலும் விரும்பிய திசையில் நடந்து நகரின் பரப்பைக் கண்களால் அளக்கலாம். நகரின் பாதுகாப்புக்கு மோன் ஜுயிக் உதவியிருக்கிறது, குறிப்பாக கடல் வழியாக வரும் எதிரிகளைக் கண்காணிப்பதற்கு. இதற்கென்றே காவற்கோபுரங்களை மேல் தளத்தில் கடலைப் பார்க்கின்ற வகையில் அமைத்திருக்கின்றார்கள். தற்போது ஸ்பெயின் ராணுவம் அதனுள்ளே அருங்காட்சியகமொன்றை நடத்திவருகிறது. மோன் ஜுயிக் என்றால் யூதர் மலை என்று பொருளாம், இடைக்காலத்தில் மலை அடிவாரத்தில் யூதர்கள் அதிகம் வசித்ததால் உண்டான காரணப் பெயர் என்றார்கள்.

மோன் ஜுயிக் போகிறவர்கள் 1992ம் ஆண்டு பார்சலோனாவில் நடந்து முடிந்த 25வது ஒலிம்பிக் விளையாட்டுக்கான திடல்களையும், விடுதிகளையும் பார்க்க நேரிடலாம். பிரதான பந்தயக்களத்தை 1929ம் ஆண்டில் நடந்த உலக கண்காட்சிக்காக ஏற்படுத்தியிருந்தார்கள். பின்னர் 1936ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டிலும் அதனைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கட்டிடக்கலையிலும், ஊடகத்துறையிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கேற்ப 1992ம் ஆண்டு மாற்றி அமைத்திருக்கிறார்கள். பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இருபத்தைந்தாவது ஒலிம்பிக் விளையாட்டிற்கு ஆதரவு நல்கிய பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை இன்றுவரை அகற்றாமல் வைத்திருக்கிறார்கள். பார்சலோனா நகர நிர்வாகம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அதற்கான தொகையைப் பெற்று விடுவார்களென்றே நினைக்கிறேன். மோன் ஜுயிக் பார்க்கவருகிறகளுக்கு, அம்மலையில் அமைக்கபட்டுள்ள ஒலிம்பிக் திடலும், அதுசார்ந்த மண்டபங்களும், காட்சிக்கூடங்களும் தவிர்க்கமுடியாதவை. மோன் ஜுயிக்கிலுள்ள கட்டாயம் பார்க்கவேண்டிய மற்றுமொரு இடம்: Le Palau Nacional. இம்மாளிகையை ஓவியங்கள், சித்திரங்கள், சிற்பங்கள், சுதைவேலைபாடுகளுக்கானதொரு பொதுவான அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார்கள். எனவே இவ்விடத்திற்கு MNAC என்றும் பெயருண்டு. பாரீஸிலுள்ள லூவ்ரு போலநாள் கணக்கில் நின்று நிதானமாக பார்க்கவேண்டிய இடம். பதினோறாம் நூற்றாண்டு தொடக்கம் இன்றுவரை ஓவியத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை புரிந்துகொள்ள உதவும் அற்புதமான காட்சிக்கூடம். ஓவியத்தைப்பற்றிய ஓரளவு குறைந்த ஞானத்துடனாவது உள்ளே சென்றிருந்தால் பலனிருந்திருக்குமென்று நினைக்கிறேன், எந்திரத்தனமாகத்தான் ரசிக்க முடிந்தது.
(தொடரும்)

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா