பாரதி தரிசனம்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

கற்பக விநாயகம்


****

கரிசல் சீமையில் உதித்த குறிப்பிடத்தகுந்த ஆட்களில் ஒருவரான பாரதியார் முதன்முதலில் எனக்கு அறிமுகமானது ‘ஓடி விளையாடு பாப்பா ‘ பாடல் மூலம்தான். அதில் சின்னஞ்சிறு குழந்தைக்கே கூட ‘சாதிகள் இல்லையடி பாப்பா ‘ என்று அழகாய்ச் சொல்லி இருப்பார் அவர்.

பின்னாளில் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலும், பின் அவரின் கவிதை, கட்டுரை, சிறுகதை நூல்களிலும் மனதைப் பறிகொடுத்த காலமும் இருந்தது. அவரின் சொல்லிலும் செயலிலும் முற்போக்கைத் தரிசித்தபடி இருந்தேன்.

சில ஆண்டுகளுக்கு முன், ராம கோபாலன் போன்ற இந்து மத வெறி பரப்பும் ஆட்களும், ‘பாரதியின் பாடல்களைப் படித்த பிறகே தாம் ஆர் எஸ் எஸ் இல் சேர்ந்ததாக ‘ச் சொன்னார்கள். திருவல்லிக்கேணி பாரதியார் வீட்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்கள் நடத்திய பாரதி விழாவில் புகுந்து, ராம கோபாலனின் ஆட்களான இந்து முன்னணியினர் தாக்குதல் தொடுத்தபோதுதான், எனக்கு சில சந்தேகங்கள் தோன்றின.

உண்மையில் பாரதி யார் ?

வே.மதிமாறன் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் ‘தலித் முரசு ‘ பத்திரிக்கையில் ‘பாரதி ய ஜனதா பார்ட்டி ‘ எனும் தொடரை எழுதத் தொடங்கினார். அத்தொடர், எனக்குள் இருந்த பாரதி பற்றிய பிம்பத்தை மாற்றி அமைத்து விட்டது.

அது வரை ‘பாரதி நாம சங்கேர்த்தனம்! கோவிந்தா! கோவிந்தா! ‘ எனப் பஜனை பாடிக்கொண்டிருந்த சி பி ஐ / சி பி எம் / தேசியம் / அழகியலை மட்டும் எழுதிச் செல்லும் ‘அக மன உழைச்சல் ‘ கவிஞர்கள் / இந்து தேசியவாதிகள் எவரிடம் இருந்தும் அத்தொடருக்கோ / அத்தொடர் நூலான பிறகோ ‘உருப்படியான ‘ மறுப்பு எதுவும் வரவே இல்லை. எல்லா பாரதி பக்தர்களும் ‘கள்ள மவுனம் ‘ அனுசரித்தார்கள்.

சமீபத்தில் வாலாஜா வல்லவன் எனும் எழுத்தாளர் ‘திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதி ‘ எனும் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நூல் இதுவரை நடந்த பாரதி ஆய்வுகளிலேயே ஆகச் சிறந்ததாய் ஆதாரங்களுடனும், பாரதியின் சம கால வரலாற்று அறிவுடனும் எழுதப்பட்டுள்ளது. அந்நூல் பாரதியின் பன்முக ஆளுமைகள் பலவற்றையும் ஆழ ஆராய்கின்றது. எனது இந்தக் கட்டுரையில் உள்ள பல ஆதாரங்கள் வாலாஜா வல்லவனின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

‘பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் ‘ என்று மற்றும் ஓர் பாரதி ஆய்வு நூல் (எழுதியவர்கள்: வே.மதிமாறன் & மருதய்யன்) தற்போது வெளிவந்துள்ளது. அந்நூலில் இருந்தும் சில ஆதாரங்களை இக்கட்டுரையில் எடுத்தாண்டுள்ளேன்.

****

பாரதி பற்றிய புனிதச் சித்திரம் எல்லோர் மனதிலும் பள்ளிப்பருவத்தில் இருந்து மகாகவி என்றும் தேசியக் கவி என்றும் ஏற்றப்பட்டுள்ளது.

கல்கி, வ.ரா. காலத்தில் பாரதி மகா கவியா ? தேசியக்கவியா ? எனும் மயிர் பிளக்கும் வாதத்தில் இறங்கியுள்ளனர்.

அவரை விமர்சனம் செய்வதையே நிறையப்பேரால் நினைத்துக்கூடப் பார்க்க முடிந்ததில்லை. கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமியிடம் சொன்னாராம்- ‘பாரதி,கம்பன் ஆகியோரைப் பழித்துப் பேசுபவர் வீட்டில் கை நனைக்க மாட்டேன் ‘.

ஜீவாவால் கண்மூடித்தனமாய் பாரதி பஜனை ஆரம்பித்து வைக்கப்பட்டு அம்மரபு இன்று வரை தொடர்கிறது சிபிஐ சிபிஎம் அணியில்.

கம்யூனிஸ்ட்களும், இந்துத்துவவாதிகளும், காந்தியவாதிகளும் சேர்ந்து மாரடித்ததால் பாரதி பற்றிய புனிதர் பிம்பம் நம் சமூகத்தில் வலுவாக வேரூன்றி உள்ளது.

****

அவர் வளர்த்த முறுக்கு மீசைக்குக் கூட ஒரு முற்போக்கு இமேஜை, வெண்ணெய் வெட்டி சிப்பாய்கள் உருவாக்கி இருந்தனர்.

பிராமணர்கள் பொதுவாய் முகம் முழுக்க மயிர் நீக்கல் வழக்கமாய் இருக்க, அதை மீறி பாரதியார் வீரத்தின் அடையாளமாய் மீசை வளர்த்தார் எனும் முற்போக்கு வாதம் இது.

விசயம் என்ன என்றால் அது சுவாரசியமானது. பாரதியே அவரின் கட்டுரை ஒன்றில் சொல்கிறார். காசியில் தன் அத்தை வீட்டில் இருந்து கொண்டு, ஜய நாராயண கலாசாலை எனும் பள்ளியில் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்த காலத்தில், தினமும் முகம் மழிப்பாராம். அவருடன் இருந்த பள்ளித் தோழர்களுக்கு இது விநோதமாய் இருந்துள்ளது. வட இந்திய பிராமண நண்பர் ஒருவர் கேட்டே விட்டாராம் ‘உங்க வீட்டிலே தினமும் யாராவது இறந்து விடுகிறார்களா ? ‘ என்று. பாரதிக்கு விளங்கவில்லை. நண்பர் விளக்கினாராம். பிராமணர்கள், தம் வீட்டில் இழவு விழுந்தால் மட்டுமே முகம் மழிப்பர் என்றாராம். பாரதியும், அன்றிலிருந்து மழிப்பதை விட்டு விட்டு, அசல் ஆரிய வர்த்தப் பிராமணராக மாறியதுதான் இந்த மீசை விவகாரம். (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம்)

****

பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உடன்கட்டை ஏறுதலை எதிர்த்து சமூக சீர்திருத்தவாதிகள் குரல் கொடுத்துள்ளனர். ஆங்கில அரசும் இதைத் தடுக்கச் சட்டம் போட்டுள்ளது. ஆனால் நம் பாரதியோ ‘சதி ‘யை ஆதரித்து 1910 பிப்ரவரியில் ‘கர்ம யோகி ‘ இதழில் எழுதுகிறார் – ‘ நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரீகளே மஹா ஸ்திரீகளாவார்கள் ‘.

பெண் விடுதலையை என்னமாய்ப் பொளந்து கட்டியிருக்காரு. எரித்துப் போட்டு ஆவி ‘விட்டு விடுதலையாகி ‘ சிட்டுக்குருவி போலப் பறத்தலையே ஒரு வேளை பெண்ணின் விடுதலை என்றிருப்பாரோ தெரியவில்லை!

சரி கிடக்கட்டும் இது ரொம்பப் பழசான விஷயம்.. இப்போல்லாம் அப்படி இருக்க மாட்டாங்க இந்துக்கள் என்று நினைத்தால் அந்த நினைப்பிலும் மண்ணைப் போட்டு விட்டது..அக்டோபர் 28, 1987ல் ஜெய்ப்பூரில் ‘தர்ம ரக்ஷ சமிதி ‘ என்ற அமைப்பின் தலைமையில் மாபெரும் ‘சதி ஆதரவு ஊர்வலம்.

(அதே 1987ல் செப்டெம்பர் 4ல் ராஜஸ்தானில் தியோலாரா கிராமத்தில் ரூப் கன்வர், தனது கணவனின் பிணத்துடன் உயிருடன் வைத்து எரிக்கப்பட்டார்).

சரி.. தர்ம ரக்ஷ சமிதி என்பது எங்கோ இருக்கும் ராஜஸ்தான் காரங்களோடதுதானே என ஆறுதலும் பட முடியவில்லை. ஏன் எனில், இதே அமைப்பின் தமிழகப் பிரிவிற்கும் ஆட்கள் இருந்தாங்க..பத்மா சுப்பிரமணியம் எனும் நாட்டியப் பேரொளியும், சங்கராச்சாரியாரும்தான் அவர்கள். அந்த சதி ஊர்வலத்தில் ரூப்கன்வரை, சீதை, அனுசூயா போன்ற சதி மாதாக்களோடு ஒப்பிட்டும், சதியை ஆதரித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த சதி ஆதரவு அமைப்புக்கே மூல வேர், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவரான ஆச்சாரிய தர்மேந்திராதான்.

தற்போதைய ராஜஸ்தான் முதல்வரின் அம்மா, விஜயராஜே சிந்தியா (இவர் பி ஜே பி யில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்) ‘உடன்கட்டை ஏறுவது கற்புடைய பெண்டிரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது ‘ என்று சொன்னார். எம் ஜி ஆர் இறந்தபோது ஜெயலலிதாவும் தனது உடன்கட்டை ஆசையை வெளிப்படுத்தியவர்தான்.

இந்து மதத்தின் பிற்போக்கு சக்திகள் எல்லாம் ஒன்றிணையும் இடமான ‘சதி ‘ பஜனையில் பாரதியும் சேர்கிறார்.

****

பாரதி, தன் சுய சாதி அபிமானமும், அதன் மேன்மை சரிவதால் மனம் நொந்தும் இருந்தவர்தான், என்பதை அவர் எழுத்துக்கள் பல சாட்சியாய் உள்ளன.

1910ல் தமது சுயசரிதையில் தன் தந்தையைப் பற்றி எழுதுகிறார் ‘பார்ப்பனக்குலம் கெட்டழிவு எய்திய பாழடைந்த கலியுகம் ஆதலால் வேர்ப்பப் பொருள் செய்வதொன்றையே மேன்மை கொண்ட தொழில் எனக்கண்டனன் ‘.

பார்ப்பனர்கள் உடல் வியர்க்க வேலை செய்யக்கூடாது என மனுதர்மம் சொல்லி இருக்கிறது. ஆனால் தந்தையோ உடல் வேர்க்க வேலை செய்ய நேர்ந்ததே என நொந்து கொள்ளும் சாதியபிமானம் குறிப்பிடத்தக்கது.

‘கண்ணன் என் தந்தை ‘ பாடலில் ‘நாலு குலங்கள் அமைத்தான்- அதை நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர் ‘ என்று நான்கு வர்ணங்கள் சிதைவதை ரொம்ப வருத்தப்பட்டு எழுதுகிறார்.

‘கடல் மேல் வருணாசிரமப் பாலம் ‘ என்ற கட்டுரையில் பாரதி ‘குலத்தளவே ஆகுமாம் குணம் ‘ என்பதோடு ‘அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்ளுகிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை ‘ என்று அவர் சொல்லும் இடத்தில்தான் குலக்கல்வி கொண்டு வந்த ராஜகோபாலாச்சாரியும், அதனை ஆதரித்து எழுதும் ம.ம.வும் ஒன்றிணைகிறார்கள்.

டாக்டர் டி எம் நாயர் 1917ல் சென்னை ஸ்பர்டேங்க் இல் (சேத்துப்பட்டில் உள்ள குளக்கரை) நடைபெற்ற பஞ்சமர் மாநாட்டில் பார்ப்பனர்களைக் கடுமையாய் விமர்சனம் செய்து பேசினார். பாரதிக்குக் கோபம் கொப்பளித்தது. ‘சென்னைப் பட்டிணத்தில் நாயர், கக்ஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம் ‘, ‘என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக்கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும்வரை சென்னைப்பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! ‘ எனக் கோபத்தில் புலம்புகிறார்.

****

பாரதியார், பிரிட்டிஷ் போலீசாரின் கைதில் இருந்து தப்பிட பாண்டிச்சேரிக்குப் போய் நீண்ட காலம் இருந்து விட்டு மீண்டும் சென்னை மாகாணத்துள் திரும்பும் வேளையில் திருப்பாதிரிப்புலியூரில் வைத்துக் கைது செய்யப்பட்டுக் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாரதியார், ‘தமக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பெல்லாம் கிடையாதென்றும், சென்னை மாகாணத்துக்குள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்கப் போவதாயும், ஆங்கிலேயப் பேரரசர் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்தித்து ‘ ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு கடலூர் சிறையின் 25 நாட்களை எண்ணியபடியே விடுதலை வாங்கித் தர உதவியவர்களில், சர் சி பி ராமசாமி அய்யர் முன்னணியில் இருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக அறியப்படும் பாரதி, சரணடைந்த நபர், ஆங்கிலேயருக்குப் பெரிய அளவில் விசுவாசம் கொண்டு அவ்விசுவாசத்திற்காக ‘சர் ‘ பட்டம் வாங்கியவர் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.(அய்யரின் மற்ற செய்திகள் எனது பிற கட்டுரைகளில் பதிவாயுள்ளன. (1) கல்பாத்தித் தெருக்களில் பஞ்சமர் நடக்கக்கூடாது எனும் செயலை ஆதரித்தமை 2) கே. ஆர். நாராயணனுக்கு அரசு வேலை கிடைக்க விடாமல் செய்த தந்திரங்கள்)

****

இன்று பாரதம் முழுக்க ஒரே பண்பாடு என்பதை லட்சியமாகக் கொண்டு, பெரும்பான்மை மக்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்க முனையும் ஆர் எஸ் எஸ் ஸிற்கு முன்னோட்டமாக, தலித் பண்பாட்டை அழிக்கும் முயற்சியில் பாரதி, ‘எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, அவன் மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்தும்படி செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டுக் காயத்ரி மந்திரம் கற்பித்துக் கொடுத்து விட வேண்டும் ‘ என்று சொல்லி இருக்கிறார்.

இதே மாதிரியான வேலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் தற்போது இறங்கி இருப்பதை புதுவை சரவணன் எனும் இந்துத்துவவாதி திண்ணையில் அனைவருக்கும் சமஸ்கிருதம் கற்றுத்தருவதாகவும், புதிதாய் 20000 பேர் சம்ஸ்கிருதத்தில் பேசுவதாகவும் சொல்லி இருந்தார்.

பாரதி சொன்ன ‘பூணூல் புரச்சி ‘யும் இப்படித்தான். மேல் சாதிக்காரனிடம் உதை வாங்க, பூணூல் மாட்டினால் என்ன ? மாட்டாட்டி என்ன ?

தலித் மக்கள் மதம் மாறிவிடக்கூடாது என்பதில் குறியாய் ‘அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள்! மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டைச் செட்டியார்களே! இந்த விசயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள்! ‘ என்று தலித்களுக்கு ‘விபூதி ‘ நாமம் சாத்த அலையாய் அலைந்திருகிறார் பாரதி. மதத்தை மாற்றிக்கொள்ளாமல் இருக்க லஞ்சம் கொடுத்தாவது சரிக்கட்ட யோசனை சொல்லி இருக்கிறார். இயற்கை சதி செய்து விட்டதால் 1921லேயே இறந்து விட்டார். அவர் சென்று ஐக்கியமாக வேண்டிய ஆர் எஸ் எஸ் ஆரம்பிக்க இன்னும் 4 ஆண்டுகள் இருந்தன.

அதே நேரத்தில், மாட்டுக்கறி தின்பதால் தலித்கள் ஒதுக்கப்பட்டதை நியாயம் என்றும் சொல்லி இருக்கிறார் பாரதி. ‘ஹிந்துக்கள் புராதன கால முதலாகவே கோ மாமிசத்தை வர்ஜனம் செய்து விட்டார்கள்.ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பதைக்கண்டு ஜாதிப்பொதுமை அப்பகுதியைத் தாழ்வாகக் கருதுகிறது. இது முற்றிலும் நியாயம் ‘ (ஆதாரம்:- சோசலிசக்கருத்துகளும்,பாரதியும், கோ.கேசவன்)

****

பாரதி ‘சந்திரிகையின் கதை ‘ யில் மனு நீதியை ஆதாரம் காட்டி, பார்ப்பனர்கள் எந்த சாதியில் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்று எழுதி உள்ளார். ஆனால் பார்ப்பனப் பெண்களைப் பிற சாதியில் திருமணம் செய்விக்கப் பாரதி எதிர்ப்பாகவே இருந்துள்ளார் என்பதைப் பின்வரும் சான்று மூலம் அறியலாம். (மனு தர்மமும் அதைத்தானே சொன்னது. பிராமண ஆண் எந்த வர்ணத்துப் பெண்ணுடனும் உறவு கொள்ளலாம். ஆனால் பிராமணப் பெண்ணுக்கு இது பொருந்தாது)

‘பாரதி கடையத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் பாரதியும், நாராயணப்பிள்ளையும் கலப்புத்திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். திடாரென்று நாராயணப்பிள்ளை, பாரதி நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால்தான் என்ன ? என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்விக்க வேண்டியது. அதன் பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம் ‘ என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப்பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி, ‘விடுவிடு ‘ என்று தம் வீடு போய்ச்சேர்ந்தார். அப்போது காலை 11 மணி இருக்கும்.

நாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கவும் ஊரார் பயப்படுவார்கள்.மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தம் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம்,லாபம் இரண்டையும் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார்.

வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம் ‘ உன் போன்ற மானங்கெட்டவர்களின் செய்கையால்தானே நாராயணப்பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று ‘ என்று சொல்லி, அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்து விட்டார். அர்ச்சகர் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப்பிள்ளைக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி, பாரதியின் மைத்துனர் அப்பாதுரையை வரச்சொன்னார். பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியைக் கடயத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக் கட்டிவிடப் போவதாக எச்சரித்தார் நாராயணப்பிள்ளை.

பாரதி வீட்டில் ஒரே குழப்பம்.கலக்கம்.முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத்தீர்மானித்தார்கள்.விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2.30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை

முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள். இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது. ‘ (சித்திர பாரதி, ரா.அ.பத்மநாபன்,பக்கம் 164)

பாரதி சொன்ன ‘சாதிகள் இல்லையடி பாப்பா ‘ வெறும் பாட்டு மட்டும்தானா ?

****

நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட பிறகு தமிழ் நாட்டில் அக்கட்சியில் மட்டுமன்றி காங்கிரசுக் கட்சியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முழக்கம் சமூக நீதிக்காக முன் வைக்கப்பட்ட சூழல் அது. சமூக நீதியை விரும்பும் அனைவரும் பெரியார் முதல் வ.உ.சி. வரை ஒரே குரலில் ஒலித்தபோது, பாரதியார் 1921 சனவரி 19ல் சுதேசமித்திரனில் ‘ வகுப்புவாரிப்பிரதி நிதித்துவம் முறையை ஒழித்துவிட வேண்டும். அது வெறும் சதி, ஏமாற்றென்பது ருஸூவாய் விட்டது.பிராமணரல்லாதாருக்குத் தனியாக ஸ்தானங்கள் ஏற்படுத்தியது புத்தியில்லாத குழந்தை விளையாட்டனறி மற்றில்லை ‘ எழுதியுள்ளார்.

பாரதி வகுப்புரிமையை எதிர்த்த காரணம் அது பார்ப்பனர்களுக்குப் பாதகமாக இருந்தது என்பதால்தான். பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்த காலத்தில் வகுப்புரிமையை எதிர்த்ததாகச் சிலர் சொல்வது தவறு. இதை எழுதும் முன்பே கடலூர் ஜெயிலில் கவர்னருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டு, தீவிர வருணாசிரம ஆதரவாளராக விளங்கினார்.

ஆனால் இவரை விட மிகத்தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான வ.உ.சி. 1920லேயே வகுப்புரிமையை ஆதரித்து திருநெல்வேலி காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்தார். அது வருமாறு: ‘இந்த மாநிலத்தில் நிலவும் தற்போதைய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு பொது வேலைகளிலும், கெளரவ உத்தியோகங்களிலும் பிராமணர், பிராமணரல்லாத சமூகங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் ‘ (இந்து 25/6/1920)

****

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது 13/4/1919ல். அந்நேரத்தில் பாரதி ஆங்கில ஆட்சிக்கு மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, ஆங்கில அரசின் விருப்பப்படி கடயத்தில் வசித்து வந்தார். (மன்னிப்புக் கடிதம் கொடுத்து ஏகாதிபத்தியத்திடம் சரணடைவதில் பாரதியும், வீர சாவர்க்கருக்கு சளைத்தவரல்லர்).

‘நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திரமும் இன்றி வஞ்சனை செய்வாரடி ‘ என காங்கிரசு மிதவாதிகளைச் சாடிய பாரதி, இப்படுகொலை நடந்தபோது ‘அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டு ‘ கடையம் ஊரில் பேனாவுக்கு மையில்லாமல் இருந்த கதை என்ன ?

ஆனால் வ.உ.சி. இக்கொலையை வன்மையாகக் கண்டித்துள்ளார். அன்னிபெசண்ட் இதை ஆதரித்து ‘செங்கல்லால் அடித்தவர்களை, இரும்புக்குண்டால் அடித்தார்கள். இதிலென்ன தவறு ? ‘ எனறு கேட்டவர். இவ்வாறு கேட்ட அன்னிபெசண்டின் ஹோம்ரூல் இயக்கம், பார்ப்பனர் நலனுக்கு ஆதரவாய் இருக்கவே, பாரதியும் திலகரும் இவ்வியக்கத்தினை ஆதரித்தனர். ஆனால் வ.உ.சி.தான் இந்த அம்மாள், ஆங்கிலேயரின் கையாள் என்பதைப்புரிந்து கொண்டு, அவரை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதி உள்ளார்.

****

காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தை சத்திய மூர்த்தி அய்யர் எதிர்த்தார். சட்டசபையைப் புறக்கணித்தல் எனும் இந்த ஒத்துழையாமையைப் பாரதியும் எதிர்த்து ‘பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லை ‘ என எழுதிய அதே காலகட்டத்தில்தான், பெரியார் காங்கிரசில் சேருகிறார். அவர் ஈரோடு நகரசபைத் தலைவர் பதவியைத் துறந்தார். நீதிமன்றத்தினைப் புறக்கணித்த காரணத்தால், வியாபாரத்தில் அவருக்கு வந்து சேர வேண்டிய ரூ50,000 (1919ல் இது மிகப்பெரும் தொகை)ஐ இழந்தார். வக்கீல் சேலம் விஜயராகவாச்சாரியார் ‘வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக்கொடும். நான் இனாமாகவே வாதாடிப் பணத்தை வசூலித்துத்தருகிறேன் ‘ என்று பெரியாரிடம் சொன்னபோது பெரியார் சொன்னது ‘அது நெறியற்ற செயல் ‘.

பாரதியின் ஒத்துழையாமை எதிர்ப்பைப் பிரதிபலித்த இந்து பத்திரிக்கை தெளிவாய் அதன் சாதி நலனை விளக்கி எழுதியது ‘கல்வி, நீதிமன்றம், சட்ட மன்றம் ஆகியவற்றைப் புறக்கணித்தால் அதிகாரம் பார்ப்பனரல்லாதோர் கைக்குப் போய் விடும் ‘.

****

பாரதியிடம் கம்யூனிசத்தைத் தொட்டுத் தடவி உச்சி மோந்து கொண்டாடும் சிபிஐ, சிபிஎம் அணியினருக்கு, அவர் உண்மையிலேயே ரஷ்யாவில் நடந்த 1917 பிப்ரவரி புரட்சியைத்தான் பாடினார் என்பதும், லெனினின் 1917 அக்டோபர் புரட்சியைப் பாடவில்லை என்பதும் தெரியாதா என்ன ?

லெனின் தலைமையில் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்து, நிலங்கள் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டபோது, ‘இந்த முறைமை பலாத்காரங்களின் மூலமாக உலகில் பரவி வருவது எனக்கு ஸம்மதமில்லை ‘ என்று பாரதி கண்டித்ததோடு லெனினைத் திட்டி ‘கொலையாலும், கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத்தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன் ‘ என்கிறார். புரட்சித்தலைவர் லெனினை மூடன் என்று சொன்னால்தான் என்ன ? நமக்குத்தான் சீட்டுத் தர நம்ம ஊரின் புரட்சித்தலைவர் இருக்கிறாரே என்று இந்தப் பஜனை மண்டலிகள் சமாதானம் அடைந்திருக்கலாம்.

‘உழுபவனுக்கே நிலம் சொந்தம் ‘, என இயக்கம் நடத்தியவர்களுக்கு பாரதி 1921ல், சென்னை மாகாண நிலப்பிரபுக்களுக்கு அரசு நிலத்தீர்வையைக் கூட்டியவுடனே ‘இது லெனினுடைய கொள்கையில்தான் போய் முடியும், பூஸ்திதிகளை (நிலங்களை) எல்லாம் பறித்துக்கொண்டு உடையவரைத் தெருவில் விட வேண்டும் என்ற கொள்கை ‘ என்று எழுதியது தெரியாதா என்ன ?

****

பாரதி எழுதுகிறார் ‘திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாபதி யொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல், யாதொரு சண்டையுமின்றி, தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான் ‘.

ஆனால், உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததாய் வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை. மாறாக திப்பு, பார்ப்பனர்களை ஆதரித்த செய்திதான் கிடைத்துள்ளது.

திப்புவின் ஆட்சியில் அரசுப்பணியில் இருந்த பார்ப்பனர்கள், தவறு செய்தால் கூட அவர்களைத் தண்டிக்கும் உரிமையை திப்பு ஏற்காமல், அவ்வுரிமையை சிருங்கேரி சங்கராச்சாரியிடமே ஒப்படைத்துள்ளான்.

1791ல் திப்பு சிருங்கேரி மடத்துக்கு எழுதிய கடிதம் இதோ:

‘There are more than 45 to 50 thousand Brahmins in our service. It is wondered if the Government alone is bestowed with Judiciary powers of handling their cases and punishing them for offene like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras. ‘

இன்னும் ஒரு படி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்க சாஸ்தரா சண்டி ஜெபம் நடத்த, திப்பு சங்கராச்சாரியைக் கேட்டுக்கொண்டான். ஓராயிரம் பார்ப்பனர்கள்,40 நாட்கள் ஜெபம் செய்தனர். முழுச்செலவையும் திப்பு ஏற்றுக்கொண்டான்.

பாரதிக்கு இஸ்லாமியர் மீது இருந்த வெறுப்பின் அடையாளமே மேற்கண்ட அவதூறு எழுத்து.

இவ்வெறுப்பின் உச்சத்தை ‘சிவாஜி தன் சைனியத்துக்குக் கூறியது ‘ பாடலில் பரக்கக் காணலாம்.

****

கிறிஸ்தவ மதத்தை அவதூறு செய்வதில் பாரதி, ம.ம.வுக்கெல்லாம் தாத்தாவாக விளங்கினார்.

‘சாதிக்கொடுமையில் இருந்து விட்டால் போதும் சாமி ‘ என்று தலித்கள் வேதக்கோவிலுக்கு ஓடிக் கொண்டிருந்தது, பாரதியால் ஜீரணிக்கவே முடியாமல் இருந்துள்ளது. பேனாவைத் தூக்கி ‘ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தொல்லைப்படுவேயன்றி அழிந்து போய் விட மாட்டோம். ஹிந்துக்களுக்குள் இன்னும் வறுமை மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை ‘ என்று சாதிக்கொடுமையை ஜாக்கி வைத்துத் தூக்கிப் பிடித்து, ‘இப்போது நம்முடைய தேசத்தில் இருக்கும் தாழ்ந்த ஜாதியார்களை யெல்லாம் கிறிஸ்துவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் நம்முடைய குடியைக் கெடுக்கும் கோடாலியாக இருக்கும் ‘ என்று எழுதுவது, மகாகவி பாரதியார்.

சில நண்பர்கள் நினைக்கக்கூடும், அவர் ஆரம்பத்தில் நல்ல முற்போக்காத்தான் இருந்தார். பாண்டிச்சேரி போய் வ.வே.சு. அய்யர் சகவாசத்தினாலே இப்படிக் கெட்டுப் போயுட்டார் என்பர். (வ.வே.சு. அய்யர் சேரன்மாதேவியில் நடத்திய தனிப்பந்தி ஆசிரம விவகாரத்தை என்னுடைய ‘வரலாற்றை எழுதுவதை முன் வைத்து ‘ கட்டுரையில் காண்க). இருக்கலாம். முன்னிலும் தீவிர இந்துத்துவவாதியாய் அய்யரின் சகவாசம் மாற்றியிருக்கலாம். பாண்டிச்சேரி போகும் முன்பும் பாரதியிடம் பிற்போக்குத்தனம் குடி இருந்தது என்பதை 18/8/1906 இல் அவர் ‘இந்தியா ‘ பத்திரிக்கையில் ‘மிசன் பள்ளிகளை விலக்கி வைத்தல் ‘ எனும் கட்டுரை தெளிவாக்குகின்றது.

அதில் அவர் ‘கிறித்தவ மிசன் பள்ளிகளில் படிப்பவர்கள், இந்து மதக் கடவுள்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மாட்டார்கள்- அதனால் அவர்களுக்கு தேசபக்தி வராது. அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறி விடுவார்கள் ‘ என்று எழுதி உள்ளார்.

1909ல் இஸ்லாமியர்கள் தேசபக்தி அற்றவர்கள் எனும் பொருள்பட கார்ட்டூன் போட்டுள்ளார்.

****

வேதத்தையும், சமஸ்கிருதத்தையும் தூக்கிப்பிடித்த பாரதியிடம் இருந்து ‘அவர் ஏன் வள்ளலாரைப் பற்றி ‘ எழுதவில்லை என்பதோ, கால்டுவெல்/ஜி.யூ.போப் பற்றியோ, மனோன்மணீயம் சுந்தரனாரைப் பற்றியோ ஏன் எழுதவில்லை என்பதோ புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

ஆனால் சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என எழுதிய மாக்ஸ்முல்லரைப் பாரதி எழுதியதும் ஆச்சரியமில்லாத ஒன்றுதான்.

****

ஆ.ரா.வேங்கடாசலபதி தொகுத்த ‘விஜயா ‘ கட்டுரைகள் நூலில் கண்ட செய்தி, பாரதியின் சாதிச்சங்க ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றது.

பாரதி மறைவதற்கு 4 மாதங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் ஒரு பிராமண சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டது பற்றிய ஒரு விரிவான பதிவு ‘சுதேசமித்திரனிலிருந்து ‘ மறுபதிப்பிடப்பட்டுள்ளது. எம்.கே. ஆச்சாரியாரின் பேச்சும், கூட்டத் தீர்மானங்களும் மட்டுமே சுதேச மித்திரனில் விரிவாகப் பதியப் பெற்றிருக்கின்றன. ‘ஆரம்பத்தில் வெகுசிலரே வந்திருப்பினும், பின்னிட்டு ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி கர்ஜிக்க ஆரம்பித்தவுடனே 200 பேருக்குமேல் கூடிவிட்டார்கள் ‘ என்றும், கடைசியில் ‘ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி பொதுவாக பிராமணரல்லாதார் இயக்கத்தின் அஸ்திவாரக் கொள்கையையும், போலி வாதங்களையும் நிர்த்தூளியாக்கியபின் சபை கலைந்தது.

பரம வைதீகரும், தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவை எதிர்த்தவரும், குழந்தைத்திருமணத்தைத் தீவிரமாய் ஆதரித்து இயக்கம் கண்டவரும், வர்ணாசிரம தர்மத்தின் பாதுகாவலராகச் செயல்பட்டவருமாகிய எம்.கே. ஆச்சாரியாவுடன், பாரதியார் மேடையைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

****

பாரதியார், நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ‘வேதத்தைத் தவறாக உச்சரிப்பவனை விட, ஒழுங்காகச் சிரைப்பவன் மேல் என்று கூறு ‘ என்று சொல்லி உள்ளார். இதில் முடி திருத்தும் செயலைத் தாழ்வாக, ஆதிக்க சாதித்திமிரோடு ஏளனப்படுத்திப் பார்க்கும் போக்கு கவனிக்கத்தக்கது.

இதையெல்லாம் சொல்லும்போது அப்பாவியாய், அவர் தலித் ஒருவருக்குப் பூணூல் அணிவித்தாரே எனும் கேள்வி எவருக்குமே தோன்றும். இதில் கூட தன் ஆதிக்க சாதி அடையாளத்தை (பூணூல்) விட்டுக்கொடுக்க மறுக்கும் மனப்பான்மை தெரிவது கண்கூடு.

இதே லாஜிக்கில் தான் மரக்கறி உணவு உண்ணும் சாதி இந்துக்கள் தம் உணவுக் கலாச்சாரத்தை மாட்டுக்கறி/ பன்றிக்கறி உண்பவர்கள் மேல் திணிப்பதும், கிராம தேவதைகளைக் கெடா வெட்டி வணங்கும் பூசாரிகளுக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் செயலும் நடக்கிறது.

****

பாரதியின் ஊரில் இருந்து 20 கிமீக்குள் வாழ்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளை எதிர்த்துப் போரிட்ட கட்ட பொம்மனைப் பற்றி அவர் ஒன்றும் எழுதவில்லை. இதற்கு ஆய்வாளர் ஆ.ரா.வேங்கடாசலபதி தரும் காரணம் பொருத்தமாய் உள்ளது. கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்ப ஜமீன்தாரின் சந்ததிக்கு பாரதி நண்பராய் இருந்ததும், கடைசிக் காலத்தில் அந்த ஜமீனுக்கு முதுகு சொரிந்து சீட்டுக்கவி எழுதுவதற்கும் இடைஞ்சலாய் இல்லாமல் இருக்க, கட்டபொம்மனைப் பற்றி எழுதுவதை அவர் தவிர்த்திருந்திருக்கலாம் என சலபதி சொல்கிறார். அவரும் ‘சில வேடிக்கை மனிதர்களைப் போல்தான் ‘ வீழ்ந்திருக்கிறார்.

****

கரிசல் வட்டாரத்தில் பிறந்த கட்டபொம்மன்,ஊமைத்துரை,சுந்தரலிங்கம்,தானாபதிப்பிள்ளை,வ.உ.சி,பாரதி ஆகியோர்கள் ஒரு வசதிக்காக அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பை வைத்து ஒப்பிடலாம்.

கட்டபொம்மன்,ஊமைத்துரை,சுந்தரலிங்கம் போரில் கொல்லப்படும் வரை தீவிரமாய் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்தவர்கள். தானாபதிப்பிள்ளை, நாகலாபுரத்தில் கம்பெனியால் தூக்கில் கொல்லப்பட்டார். அவர் மாண்டபிறகும் கம்பெனிக்கு அவர் மேல் இருந்த வெறுப்பு குறையவில்லை என்பதற்கு, இறந்த பிள்ளையின் தலையை வெட்டி, பாஞ்சாலங்குறிச்சிக்குக் கம்பெனியார் அனுப்பி வைத்தது சான்றாகும். வெள்ளையனை விரட்ட, பஞ்சாலைத் தொழிலாளிகளைத்திரட்டி வேலை நிறுத்தமும், போட்டியாய் கப்பல் போக்குவரத்தும் நடத்திய சிதம்பரம் பிள்ளைக்குக் கடுங்காவல் தந்தது வெள்ளை அரசு. உள்ளங்கைத் தோல் உரிந்து ரத்தம் சொட்ட, சணல் கயிறு திரித்தவர் வ.உ.சி., கோவைச் சிறையில்.

வ.உ.சி.யின் மீதான நெல்லைச் சதி வழக்கில், அவருக்கு ஆதரவாய் சாட்சி சொல்வதாய் வாக்களித்திருந்த பாரதி, வாய்தா அன்றைக்கு எங்கு சென்றார் என்பது இன்னமும் புரிபடாத மவுனம். சென்னை எக்மோரில் ரயில் ஏறியவர், தஞ்சாவூர் வரை சென்றிருக்கிறார். அதன் பிறகு ஆள் காணவில்லை என்கிறது சி.ஐ.டி. ரிப்போர்ட்.

கவர்னருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதும்போது கூட தன் சுய சாதி அபிமானத்தை விட்டுக்கொடுக்காமல், பாரதி ‘என்னைப் போன்ற (பிராமண) குலத்தில் பிறந்த மனிதனுக்கு சிறைவாசம் எத்தனை கடினமானது ‘, என எழுதி உள்ளார்.

நீதிக்கட்சிக் காரர்களை, ‘வெள்ளையனை ஆதரிக்கும் தேசத்துரோகிகள் ‘ என்று சொன்ன பாரதி, 1920ல் தனது படைப்புகளைப் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கினார். அதனை ஆதரிக்கக் கோரி நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் ‘என் மீது அரசாங்கம் விதித்திருந்த தடைகள் யாவும் நீக்கப்பட்டு விட்டன. ஆதலால், அரசாங்க அதிகாரிகளையும் கூட எனக்குக் கடன் கொடுக்குமாறு தாங்கள் கேட்கலாம் ‘ எனக் குறிப்பிட்டுத் தம் ஏகாதிபத்திய சமரச நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளார்.

நண்பர்கள் உதவவில்லை.

****

பாரதிகிட்டே ஒன்னுமே நல்ல விசயம் கிடையாதா என்று சிலர் கேட்கலாம்.

1) பெண்களை, வயசுக்கு வந்த பிறகே கல்யாணம் செய்து கொடுக்கணும் என்று தன் குலத்தவருக்கு போதித்தார். அவர் இதைச் சொல்லும் சூழலில்கூட உழைக்கும் மக்களிடையே வயசுக்கு வராத பெண்ணைக் கல்யாணம் செய்தல் வழக்கத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.

2) கார்ட்டூன் படங்களை தமிழ்ப் பத்திரிக்கையில் அறிமுகம் செய்தார். அதுவும் கூட அவரது பிற்போக்கு இந்து தேசியத்திற்குதான் உதவியது.

3) கவிதையை எளிய தமிழில் எழுதினார். அது எதற்குப் பயன்பட்டது ? புதிய மொந்தை, பழைய புளித்த கள்ளைத்தானே ஊற்றப் பயன்பட்டது!

4) இஸ்லாமியர் ஒருவரின் கடையிலே டா குடித்தார்.

****

vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்

பாரதி தரிசனம்

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

ஜடாயு


இனியொரு விதி
செய்த
பிரமன் – அதை
எந்த நாளும் காக்கச்
சொன்ன திருமால்
ஜகத்தினை அழிக்கப்
புறப்பட்ட ஜடாதரன்
பகைவனுக்கருளும் நன்னெஞ்சம்
வேண்டிப்
பாடிய புத்தன்
ஒளிவளரும் தமிழ் வாணி88
செம்மைத் தொழில் புரிந்தசெல்வத் திருமகள்
காலனைச் சிறு புல்லென மதித்துக்
காலால் மிதிக்கத் துடித்த
காளி

பெண்மை வாழ்கவென்று கூத்திட்ட
பெருமகன்
ஆதலினால் காதல் செய்வீர்
என்று
அறைகூவி அழைத்த அன்புத்தூதுவன்
சாதிகள் இல்லையடி பாப்பா
என்று
சத்தியம் செய்த சமத்துவத் தந்தை

வேடிக்கை மனிதரைப் போலே வீழ
விரும்பாத வேதாந்தி
நிலைகெட்ட மனிதரை நினத்து நெஞ்சு பொறுக்காமல்
நிம்மதி கெட்ட நிஜப் புரட்சிக்காரன்
வீர சுதந்திரம் வேண்டி
வெகுண்டெழுந்த வேங்கை
வையத்தலைமை எனக்கருள்வாய்
எனக் கேட்ட
வல்லரசாதிக்கவாதி

வானம் வசப்படும்
என்று நம்பிய வருங்கால மனிதன்
காணி நிலம் வேண்டும்
தொடங்கி
கனவு மெய்ப்பட வேண்டும்
வரையில்
கற்பனைகளில் மிதந்த கனவு சாதனையாளன்
வாதனை பொறுக்கவில்லை
எனக் கதறிய
வாழ்க்கைப் போராளி
எத்தனை கோடி இன்பம்
என்று
எண்ணிப் பார்த்து மெய்சிலிர்த்த
காந்த யோகி
பார்மீது நான் சாகாதிருப்பேன் கண்டார்
என்றவனை
அன்று
பைத்தியக்காரன் என்று
பார்த்துச் சிரித்த மக்கள் கூட்டத்தின் வழித் தோன்றல்களை
இன்றும்
பைத்தியமாக அடித்துக் கொண்டிருக்கும்
அழியாக் கவிதைகளை அள்ளித் தந்துவிட்டுப் போன
அமரகவி

***
(C) ஜடாயு (jataayu@hotmailcom)

Series Navigation

ஜடாயு

ஜடாயு