பாரதி காலப் பெண்ணியம்

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

முனைவர் மு. பழனியப்பன்இந்திய விடுதலை என்னும் காலக்கட்டம் ஒரு குறிப்பிடத்தகுந்த காலக்கட்டம் ஆகும். ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் அந்நியர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அதனை முற்றிலும் மறுத்து இந்தியர்களே இந்தியர்களை ஆளும் சூழலில் இந்தக் காலக்கட்டம் குறிப்பிடத் தகுந்ததாகின்றது. புதிய இந்தியாவின் விடியல் என்பதாக இந்த விடுதலை அமைந்தது.

புதிய இந்தியாவை நிர்மாணிப்பதில் பலர் பங்கு கொண்டனர். குறிப்பாக இதழாசிரியர்கள், அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் என்ற பல தரப்பினர் விடுதலையை எண்ணித் தம் செயல்களை ஆற்றினர். புதிய இந்தியாவை அவரவர்கள் அவரவர்கள் கோணத்தில் வடிவமைக்க முயன்றனர்.

பாரதியின் வாழ்நாள் காலம் என்பது விடுதலைக்கு முந்தைய நிலையிலேயே முடிவு பெற்று விடுகிறது. பாரதி இக்காலகட்டத்தில் இதழ் ஆசிரியரராக, சமுதாயக் கவிஞராக, அரசியல்வாதியாக விளங்கினார். வரப்போகிற விடுதலைக்கு முன்னறிவிப்புகளை பாரதியார் தம் எழுத்துகளின் மூலம் வெளியிட்டார். வரப்போகிற வலிமையான இந்தியாவை வரவேற்றhர். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே சுதந்திரப் பள்ளுவைப் பாடினார். பாரதி நோக்கில் ஒரு ஒப்பில்லாத சமுதாயமாக விடுதலை பெற்ற இந்திய சமுதாயம் விளங்கியது. எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என்ற உன்னதத் தன்மையைப் பாரதியார் தன் விடுதலைக் கனவாகக் கண்டார்.

அவரது கவிதைகளில் உணர்ச்சிகள் மேலோணுங்கி இருந்தன. இதழ்ப்பணிகளில் உண்மைகளை மக்களுக்குச் சொல்லும் ஆர்வம் இருந்தது. அரசியலில் அவர் தீவிரவாதிகள் பக்கம் இருந்தார்.

1882 முதல் 1921 வரை ஆண்டு பாரதியின் காலம் நிகழ்ந்துள்ளது. இக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் முகிழ்க்கத்
தொடங்கியது. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலைகவிழத்தொடங்கினர். அடிமை நிலையில் இருந்த பெண்கள் வெளிவரத் தொடங்கினர்.” இந்து ஸ்திரீ ஏறக்குறைய அடிமை நிலையில் இருக்கிறாள். நம்முடைய வீடுகளில்
அறைக்குள் அடைத்து வைப்பது கிடையாது. அறைக்குள்ளேதான் இருந்தால் என்ன? குடி கெட்டுப் போச்சுது அடிமையைத் தண்ணீர் கொண்டுவரத் தெருவில் விட்டால்தான் என்னட? அதுவும் கூடாதென்று கதவைப் பூட்டிக் கைதியாக வைத்திருந்தால்தான் என்ன?. . . நம்முடைய ஸ்திரீகள் அடிமைகள். அதில் சந்தேகம் இல்லை.” (பெ. தூரன்,பாரதி தமிழ் வசனத் திரட்டு,ப. 79. )

கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டு தாமுதல் என்றனர் அன்றே
அடியொடந்த வழக்கத்தைக் கொன்றே
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர். நம் தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர் துணிவுற்றே(பாரதியார் கவிதைகள்,ப. 415. )

என்ற பாரதியின் கருத்துகள் இந்தியாவில் விடுதலைக்குச் சற்று முந்தைய காலப் பெண்களின் அடிமை நிலையைத் தெற்றென விளக்குவதாகும்.

பெண்களை ஒரு மனித உயிரினமாகக் கூட பாரதியாரின் காலத்தில் கருதச் சமூகம் இடம் தரவில்லை என்பது இன்னும் கொடுமையான செய்தியாகும். ஸ்தீரிகளுக்கு ஜீவன் உண்டு. மனம் உண்டு. புத்தியுண்டு. ஐந்து புலன்கள் உண்டு. அவர்கள்
செத்த யந்திரங்கள் அல்லர். உயிருள்ள செடி கொடிகளைப் போலவுமல்லர். சாதாரணமாக ஆண் மாதிரியாகவே தான். புறவுறுப்புகளில் மாறுதல். ஆத்மா ஒரே மாதிரி.(பெ. தூரன்,பாரதி தமிழ் வசனத் திரட்டு,ப. 83.) என்ற பகுதி பெண்களை ஒரு மனித் உயிரியாக ஏற்கக் கோரும் பகுதியாகும்.

ஆணுக்குச் சமமான உரிமைகளைப் பெண் பெறவிரும்பும் காலக்கட்டமாக பாரதியின் காலக்கட்டம் இருந்துள்ளது.

கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்

கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்தி
காட்சி கெடுத்திடலாமோ
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதமை அற்றிடும் காணீர்

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி

இந்தப் பகுதிகள் சரிசம நிலை குறித்தமைவன. பெண்களின் கற்புக்கு ஈடாக ஆண்களும் கற்பு நிலையில் சமத் தகுதி பெறவேண்டும் என்பது பெண்ணைக் காட்டி ஆணுக்குச் சொல்லும் சம நிலை பாரதி காலத்தில் வலியுறுத்தப் பெற்றுள்ளது.

அறிவு, இல்லறம் ஆகியவற்றில் ஆண் பெற்றுள்ள மதிப்பு மிக்க நிலைக்கு ஈடான சமநிலையைப் பெண் பெறவேண்டும் என்பது அக்காலத்தில் இருந்த கருத்து ஆகும். அறிவு, மனம், இல்லறம் ஆகியவற்றில் சமநிலை பெறவிரும்பும் பெண் உடலளலவில்
ஆணுக்கு அடங்கியே நிற்கவேண்டிய காலகட்டமாக பாரதியின் காலக்கட்டம் இருந்துள்ளது என்பது இவற்றில் இருந்து பெறப்படுகிற மற்றொரு செய்தியாகும்.

பாரதி கற்பு குறித்துத் தன் உரைநடைப் பகுதிகளில் அதிகமாகச் சிந்தித்துள்ளார். ஸ்திரீகள் பதிவிரதைகளாக இருக்க வேண்டும் என்று
எல்லோரும் விரும்புகிறhர்கள். அதிலே கடினம் என்னவென்றால் ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில் ஒவ்வொருவனும் தன் மனைவி பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதிவிரத்யத்திலே காட்டுவதில்லை.

. . . ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படிப் பதிவிரதைகளாக இருக்க முடியும் கற்பனைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லட்சம் ஐனங்கள். ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள், ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். அதில் நாற்பத்தையாயிரம் ஆண்கள் பர ஸ்திரீகளை இச்சிப்பதாக வைத்துக் கொள்வோம். அதிலிருந்து குறைந்த பட்சம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பர
புருக்ஷர்களின் இச்சைக்கிடமாக வேண்டும். இந்தக் கட்டத்தில் இருபதினாயிரம் புருக்ஷர்கள் தம் இச்சையை ஓரளவு நிறைவேற்றுவதாக வைத்துக் கொள்வோம். எனவே குறைந்த பட்சம் இருபதினாயிரம் ஸ்திரீகள் விபச்சாரிகளாக
இருக்கவேண்டியது அவசியமாகிறது(பெ. தூரன்-பாரதி தமிழ் வசனத் திரட்டு,ப.94. )என்ற கணக்கு ஆண் விபச்சாரத்தினால் ஏற்படும் பெண்களின் நலமின்மையைச் சுட்டிக்காட்டுவதாகும். அக்காலப் பெண்கள் கேட்ட விடுதலை அல்லது பாரதி விரும்பிய பெண் விடுதலை என்பது ஓழுக்கம் மிக்க விடுதலை என்பதில் ஐயமில்லை. அந்த விடுதலைக்குள் சுதந்திரமான இயக்கம் பெண்களுக்கு
ஏற்படவேண்டும் என்ற எண்ணம் அக்காலத்தில் நிலவியது.

அடிமைத் தேசணங்களில் கூட ஆண் மக்களில் பெரும்பாலோர் அதாவது ரகஸிய போலீஸ் உபத்திரவத்திற்கு இடம் வைத்துக் கொண்டவர் தவிர மற்றவர்கள் தம் இக்ஷடப் படி எந்த ஊருக்கு வேண்டுமானாலும் போகலாம். எங்கும் சஞ்சரிக்கலாம்.தனியாக
சஞ்சாரம் பண்ணக் கூடாது என்ற நியதி கிடையாது. ஆனால் பெண் தனியே சஞ்சரிக்க வழியில்லாத தேசங்களும் உள்ளன. அவற்றில் நமது தேசத்தில் பெரும்பகுதி உட்பட்டிருப்பதைப் பற்றி மிகவும் விசனப் படுகிறேன்.(மேலது. 94)

பெண்ணின் விடுதலை மிக்க இயக்கத் தேவை பற்றிய விழைவு இதனுள் சுட்டப் பெற்றுள்ளது.

இவற்றில் இருந்து சில முடிவுகளுக்கு வரமுடிகின்றது. பாரதியின் காலக்கட்டத்தில் அடிமை நிலையில் பெண் இருந்துள்ளாள். அவள் வேண்டிய நேரத்தில் வேண்டிய இடத்திற்குச் செல்ல இயலாதவாளாக வீட்டுக்குள்ளே கட்டுப்பட்டிருந்தாள். அவளுக்குக் கற்பு என்பது மிகப் பெரிய எல்லைக் கோடாக இருந்துள்ளது. அதனை அவள் எக்காலத்திலும் மீற இயலாது. மீறக் கூடாது. ஆனால் ஆண்கள் மீறலாம். தன் பெண்களை மட்டும் மீறவிடாமல் காத்துக் கொள்ளலாம். அறிவிலும், இல்லற நடைமுறைகளிலும் அவள் இரண்டாம் நிலையில் இருந்துள்ளாள் என்பன போன்ற செய்திகள் பாரதிகாலத்துப் பெண்களின் நிலையாக இருந்துள்ளது.

இத்தகைய கட்டுப்பாட்டு நிலையைப் பாரதி கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளார். அவரின் குரல் ஆழமாக பதிவைப் பெற்றுள்ளது. கவிதைகளிலும் கட்டுரைகளிலும் விடுதலை மிக்க புதுமைப் பெண்ணை அவர் வரவேற்றுள்ளார். இவ்வரவேற்பு முன்னேற்றமற்ற நிலையில் இருந்து முன்னேற்ற மிக்க நிலைக்குப் பெண்களை அழைத்துச் செல்வதாக இருந்தது.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோணங்கி வையம் தழைக்குமாம்
பூணு நலத் தோடிணங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்
நாணம் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ

இந்த வரவேற்பு பாடல் பெண்கள் கைக் கொண்டு நடக்கவேண்டிய கொள்கைகளை எடுத்துரைக்கின்றது.

பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான ஆரம்பப் படிகள் எவையென்றhல்

1. பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.
2. அவர்களுக்கு இக்ஷட மில்லாத புருமக்ஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.
3. விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருமக்ஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும்.அதன் பொருட்டு அவளை அவமானப் படுத்தக் கூடாது.
4. பிதுரார்ஜியத்தில் பெண் குழந்தைகளுக்குச் சமபாகம் கொடுக்க வேண்டும்.
5. புருமூன் இறந்தபின்பு ஸ்திரீ மறுபடி விவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.
6. விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்தீரிகள் யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்க வேண்டும்.
7. பெண்கள் கணவனைத் தவிர வேறு புருக்ஷர்களுடன் பேசக் கூடாதென்றும் பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிடவேண்டும்.
8. பெண்களுக்கு ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
9. தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெறவிரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.
10. . . . சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.(பெ.தூரன்,பாரதி தமிழ் வசனத் திரட்டு-பக் 95-96)

என்ற பாரதியின் அடிப்படை பெண் விடுதலைக் கூறுகளில் பல இன்னமும் எட்டப் படவில்லை அல்லது நடைமுறைக்கு வரவில்லை என்பது மிகப் பெரிய சோகமே.

விடுதலைக்கு முந்தைய இந்தியப் பெண்களின் நிலை நாட்டு விடுதலை பெற்றாலும் சமூக விடுதலையை நோக்கிப் பயணிக்கும் பெண்களின் நிலை ஆகியவற்றின் தக்க சான்றுகளாகப் பாரதியின் படைப்புகள் விளங்குகின்றன. பாரதி காலக்கட்டம்
பெண்விடுதலையின் முக்கியமான தொடக்கக் காலக்கட்டம் என்பதில் ஐயமில்லை.

பாரதியின் பெண் குறித்த சிந்தனைகள் அவரது படைப்பு மாந்தர்களிடத்திலும் எதிரொலித்துள்ளது. சந்திரகையின் கதையில் இடம் பெற்றுள்ள பின்வரும் பகுதி அதற்கு ஒரு சான்றhகும்.

விசாலாட்சி, விசாலாட்சி, நான் இரண்டு நிமிடங்களுக்கு மேல் உயிருடன் இருக்கமாட்டேன். என் பிராணன் போகுமுன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே. முதாலவது நீ விவாகம் செய்து கொள். விதாவ விவாகம் செய்யத் தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடிய வேண்டிய அவசியம் இல்லை. ஆதலால் நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுய நல சாத்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு
தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அணு;கு கைம்பெண் விவாகத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாக நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப் படு. இரண்டாவது நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்குச் சந்திரிகை என்று பெயர் வை.(பெ.தூரன்,பாரதி தமிழ் வசனத் திரட்டுபக் 184-185)என்றாள்.

இப்பகுதியில் பெண்களுக்கான விதாவ விவாகம் பற்றிய செய்திகளும் அதனைச் செய்து கொள்ள அக்காலத்தில் இருந்த வாய்ப்புகளும் காட்டப் பெற்றுள்ளன.

இவ்வாறு பாரதியின் காலக் கட்டம் பெண் விடுதலை முகிழ்த்த கால கட்டமாக விளணங்குகிறது. இந்தத் தொடக்கம் இன்னும் பல தூரம் செல்லவேண்டியுள்ளது. ஆனால் தொடக்கத்தைக் கடக்கவே இன்னும் நூற்றாண்டுகள் ஆகலாம் என்ற நிலையில்
தமிழகப் பெண்ணியம் நிற்கிறது என்பது சிந்தனைக்குரிய ஒன்றாகும்.

முடிவுகள்
பாரதிகால பெண்ணியம் என்பது பாரதி வாழ்ந்த காலத்தில் பெண்களுக்கு இருந்து அரசியல், சமூக நிலை குறித்து அமைவதாகும்.

அக்காலக்கட்டத்தில் பெண்கள் அடிமை நிலையில் இருந்தனர்.

அடிமை நிலையில் இருந்து அவர்கள் மாற கல்வியில் ஏற்றம், அறிவினில் ஏற்றம், கற்பினில் திடம், இல்லறத்தில் சமஉரிமை ஆகியன தரப்பெற வேண்டும் என்ற எண்ணம் அக்காலக்கட்டத்தில் நிலவியது.

” பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற பாரதி வரிகள் மெய்ப்பட்டுவிட்டன என்ற போதிலும் பாரதி கண்ட பெண் விடுதலைக் கருத்துகள் முழுமை பட நிறைவேறவில்லை என்பது சோகமான உண்மை.


பயன் கொண்ட நூல்கள்

தூரன்.பெ. பாரதி தமிழ் வசனத் திரட்டு, நேமூனல் புக் டிரஸ்ட் புதுதில்லி, 1978.

பாரதியார், பாரதியார் கவிதைகள், தென்றல் நிலையம், சிதம்பரம், 2006


விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை

M.Palaniappan
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்