பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

ஜோதிர்லதா கிரிஜா


(21.4.2004 துக்ளக் இதழில் வந்த கட்டுரையோடு தொடர்புடையது.)

மேற்கத்திய நாடுகளில் மட்டுமின்றி பல கிழக்கு நாடுகளிலும் விவாகரத்துக் கலாச்சாரப் புயல் வீசி வீடுகளையும் சமுதாயங்களையும், நாடுகளையும் சின்னாபின்னப் படுத்துகிறது. இந்தக் காலகட்டத்தில் நம் நாட்டில் மட்டும் குடும்ப அமைப்பு, விவாக வாழ்க்கை எப்படிச் செம்மையாக இருக்கமுடிகிறது ? – இதுபற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்த திரு குருமூர்த்தி அவர்களுக்கு ஒன்று புரிகிறதாம். அதாவது, சுருக்கமாய்ச் சொன்னால், பல்வேறு ஜாதி சமயங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெண்களின் பங்கு , கலாச்சாரம் இவற்றில் வித்தியாசம் இல்லையாம். சமய வேற்றுமைகளைக் கடந்து இந்தியாவில் ஓர் ஒற்றுமை நிலவுகிறதாம். அதனால்தான் விவாகரத்துப் புயல் நம் நாட்டில் பரவவில்லையாம். நம் சிந்தனைக்கு எட்டியவரை, இது சரியான முடிவாகத் தோன்றவில்லை. நம் சிந்தனையின் விளைவு வேறு மாதிரியாக உள்ளது. அதாவது –

கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ – இங்கு வாழும் பிற மதத்தவர்களில் பெரும்பாலோர் ஒரு கால கட்டத்தில் அடிப்படையில் (oriiginally) இந்துக்களாக இருந்தவர்களே! பரம்பரைத்தனமான எண்ணங்கள், கொள்கைகள், இயல்புகள், போதிக்கப்பட்டுத் திணிக்கப்பட்ட கருத்துகள் என்பவையாய்ச் சில இயல்புகள் இந்துக்களிடம் – அதிலும் பெண்களிடம் அதிக அளவில் – அதிக உரையேற்றலின் விளைவாக – உள்ளன. குருமூர்த்தி போற்றிப் புகழும் இந்திய (அல்லது இந்துக்) கலாச்சார இயல்புகள் நம் பெண்களின் (ஆண்களுடையவும்தான்) இரத்தத்தில் ஊறியுள்ளதால், அவர்கள் மதம் மாறினாலும் மனம் மாறாதவர்களாக உள்ளனர் என்பதே அது. பரம்பரை பரம்பரையாக விதைக்கப்படும் இயல்புகளும் எண்ணங்களும் மனிதர்களின் வழித் தோன்றல்களின் இயல்புகளாகவும் உடம்போடு ஊறிய பிறவித் தன்மைகளாகவும் உறைந்து விடுகின்றன என்பது விஞ்ஞான விதி! (ஆராய்ச்சி மூலம் இந்த விஞ்ஞான விதியைச் சில ஆண்டுகளுக்கு முன்னால் உலகறியச் செய்தவர்கள் ரஷ்ய விஞ்ஞானிகள்.) மதம் மாறுவதால் மட்டும் மனிதர்களிடம் என்ன பெரிய ரசாயன மாற்றம் வந்துவிடப் போகிறது ? மாறுபவை அவர்களுடைய நடை, உடை, பாவனைகளும் கடவுளும்தானே ? மற்றபடி, பெண்களை உணர்வுகளோ உணர்ச்சிகளோ அறிவோ சிந்தனையோ இருக்கக்கூடாத வெறும் ஜடங்களாய்க் கருதும் ஆண்களின் திரேதாயுகக் கருத்தும், பரம்பரைத்தனமான பதிபக்தியால் மட்டுமின்றி வேறு வழியின்மையாலும் கொடுமைகளுக்கு எதிராய்க் குரல் எழுப்பாத பெண்களின் – குருமூர்த்தி போற்றிப் புகழும் – கலாச்சாரமும் மிகப் பெரிய அளவில் (படித்த ஆண், பெண்களிடையேயும்) அப்படியேதானே இருக்கும் ? எனவே எம் மதத்தினராயினும் இந்தியாவில் நம் குடும்ப அமைப்புக் குலையாமல் இருப்பதற்கு இது தான் மிக முக்கியமான காரணமாகும். குருமூர்த்தி அவர்களே! இந்த விதமாகவும் சற்றே யோசித்துப் பாருங்கள்.

“குடும்பங்களில் ஆணைவிடவும் பெண்ணே அதிகப் பொறுப்பேற்கிறாள். காரணம் பெண் என்றாலே பொறுப்புத்தான். பெண்மையில் தாய்மை பிரிக்க முடியாமல் இருப்பதால் பெண்மையின் தியாக உணர்வும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் இயற்கையாக இருக்கிறது” என்கிறீர்கள். மிகவும் நன்றி, குருமூர்த்தி அவர்களே! ஆனால், பெண்ணை இப்படி (பாதி உண்மையாகவும், பாதி போலியாகவும்) புகழ்ந்து புகழ்ந்தே அவளை மூளைச் சலவை செய்து ஏமாளியாக்கிவிட்டார்கள் ஆண்கள் என்பதே நமது குற்றச்சாட்டு. இப்படிப் புகழ்ந்து காரியசாதனை செய்வது ஒரு தந்திரம் (cunningness). துஷ்டப் பிள்ளையை அடக்கத் துப்பு இல்லாத பெற்றோர் சாதுப் பிள்ளையைப் புகழ்ந்து புகழ்ந்து குடும்பத்தில் சமாதானம் நிலவச் செய்வதற்கு ஒப்பான தந்திரம் இது. இது ஒரு வகையில் நல்ல விளைவை உண்டாக்கும் தானென்றாலும், அது யாருடைய இழப்பில் ? (At whose cost, Mr. Gurumurthy ?) பெண்ணின் நல்லியல்புகளைப் போற்றிப் புகழ்பதோடு ஆணின் பொறுப்பு முடிந்துவிட்டதா ? அவற்றுக்கான மரியாதையை அவன் காட்ட வேண்டாமா ? அவளை அன்பாக நடத்த வேண்டாமா ? அவன் அதைச் செய்யத் தவறியதன் விளைவுதானே இன்று “தலை விரித்து ஆடுகின்ற” பெண்ணுரிமை இயக்கம் ? விவாகரத்து மனப் போக்கு ? “பெண் என்றாலே பொறுப்பு” என்கிறீர்கள். இப்படிச் சொல்லிச் சொல்லியே ஆண்களைப் பொறுப்பற்றவர்களாக நம் முன்னோர்கள் (ஆண்கள்) ஆக்கிவிட்டார்கள் . நீங்களும் உங்களை யறியாமல் அதே கபட நாடக சூத்திரதாரி யாகாதீர்கள் குருமூர்த்தி அவர்களே! இத்தகைய வஞ்சகமான புகழ்ச்சி மூலம் கோழைகளாகவும், அசடுகளாகவும், சுயமான சிந்தனை யற்றவர்களாகவும், செயலற்றவர்களாகவும் ஆகிவிடும் பெண்கள் சுமந்து பெறும் பிள்ளைகள் (ஆண்கள் உட்பட) எவ்வாறு வீரர்களாகவும், சிந்தனைத் திறன் உள்ளவர்களாகவும் இருக்க முடியும் ? இந்தப் பெண்களின் வயிற்றில் பிறக்கும் ஆண்களும் பத்தாம் பசலிச் சிந்தனை யுள்ளவர்களாய்த்தான் பிறப்பார்கள்! இது மனித குலத்துக்கு நல்லதுதானா ?

“தமிழ்நாட்டில் ‘கடவுள் இல்லை. கடவுளை நம்புகிறவன் முட்டாள்’ என்று பேசிவந்த திராவிட இயக்கமாக இருக்கட்டும், தீமிதி போன்ற சமயப் பழக்கங்களையும், குங்குமம் இட்டுக்கொள்ளும் வழக்கங்களையும் இழிவு செய்யும் கருணாநிதி போன்ற தலைவர்களாக இருக்கட்டும் – அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களையோ, தங்களுடைய மனைவி மக்களையோ குங்குமம் இட்டுக்கொள்ளாமல் இருக்கச் செய்ய முடியவில்லை. கோவிலுக்குப் போகாமல் தடுக்க முடியவில்லை” என்று அங்கலாய்க்கும் குருமூர்த்தி தமது அடிமனத்து ஆணாதிக்கப் போக்கையே தம்மையும் மீறி அப்பட்டமாய் வெளிப்படுத்துகிறார்! இவர் என்ன சொல்ல வருகிறார் ? தன் மனைவி, மற்றும் குடும்பத்திலுள்ள எல்லாப் பெண்கள் மீதும் தம் கருத்தைத் திணிப்பவர்கள்தான் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள் என்று இவர் கருதுவதாய்த்தானே அர்த்தமாகிறது! அப்படியானால், ஆண்கள் தங்கள் கருத்துகளைப் பெண்கள் மீது திணிக்க உரிமை பெற்றவர்கள் என்று இவர் கருதுகிறாரா ? தம் குடும்பப் பெண்களின் நம்பிக்கைகளுக்குக் கருணாநிதி அவர்கள் தரும் மரியாதை யல்லவா இது ? மகாத்மா காந்தியின் மகன்களில் ஒருவர் குடிகாரராக இருந்தார். நமக்குத் தெரியும். அவர் குடிக்காமல் தடுக்க முடியாத காந்தியடிகளுக்கு மது விலக்கை ஆதரிக்க உரிமை இல்லை என்பீர்களா! ‘கணவன் நாத்திகனாக இருந்தாலும், பெண்கள் தங்கள் பாரம்பரிய ஆத்திகத்தைத் துறப்பதில்லை’ என்று சொல்லியிருந்தீர்களானால் நாம் இப்படிச் சொல்ல மாட்டோம். ஆனால், ‘கருணாநிதி போன்ற தலைவர்களால் தடுக்க முடியவில்லை’ என்னும் வாசகம்தான் உங்களைக் காட்டிக்கொடுக்கிறது.

“எப்படி திராவிட வாதத்தை அவர்கள் ஜீரணம் செய்து தங்களுடைய – பெண்மைக்கே உரித்தான – சமய, கலாச்சார அம்சங்களைக் காப்பாற்றினார்களோ, அப்படியே மேற்கத்திய நாட்டின் கலாச்சாரத்திலிருந்து குடும்பங்களையும் கணவன்மார்களையும் காப்பாற்றி வருகின்றனர்” என்று கூறும் குருமூர்த்தி அது எவ்வாறு நேர்கிறது என்பதைத் தெளிவுபடுத்தாமல் வெறும் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடுகிறார். ஒரு பெண் தன் சமயம் சார்ந்த சடங்குகளையோ பழக்க வழக்கங்களையோ கைவிடாதிருப்பதன் மூலம் மேற்கத்தியக் கலாச்சாரச் சீரழிவிலிருந்து எவ்வாறு குடும்பங்களையும், கணவன்மார்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற முடியும், அந்தக் காத்தல் என்பது எப்படி, எதனால் நிகழ்க்ிறது என்பதெல்லாம் நம் அறிவுக்கு எட்டவில்லை. விளக்குங்கள், குருமூர்த்தி அவர்களே!

உங்களுடைய தேசபக்தியும், சமயப் பற்றும் உங்கள் கட்டுரைகளில் தெற்றெனத் தெரிகின்றன. கொஞ்சம் மனிதாபிமானமும் கொண்டு – அதாவது பெண்களும் மனிதர்களே என்பதை ஒப்புக்கொண்டு – சும்மா அவர்களுக்கு “உன்னைப்போல உண்டா” என்று ஐஸ் வைத்துக் குளிர்வித்து ஏமாற்றாமல், ஆண்களுக்கும் அறிவுரை சொல்லுவீர்களானால் மட்டுமே எம்மைப் போன்ற பெண்கள் நீங்கள் நடுநின்று சிந்திப்பவர் என்பதை ஒப்புக்கொள்ளுவார்கள். ‘உங்களுடைய ஒப்புதல் யாருக்கு வேண்டும் இங்கே ?’ என்பது உங்கள் கருத்தானால், இப்படியே எழுதிக்கொண்டிருங்கள். நாமும் இப்படியே எழுதிக்கொண்டிருக்கிறோம். ஆக, இருதரப்பினரும் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவதில்தான் இது முடியும்!

இந்தக் காலத்துப் படித்த பெண்ணைக் கவர ஓர் ஆணுக்குப் பரிவான – நியாயமான – சிந்தனை வேண்டும். கொஞ்சமாவது “பெண் மனம்” வேண்டும். துன்பப்படும் பெண்ணின் நிலையில் தன்னை வைத்துப் பார்த்து அவளது நியாயத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வேண்டும். காந்திஜிக்கு அடுத்த படியாக ஈ.வே.ரா. பெரியாரிடமும், ராஜாஜியிடமும் அந்தப் பெண்மனம் கணிசமாய் இருந்தது. பெண்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால் ஆண்களின் ஆண்மை அழிய வேண்டும் என்று வெடிக்கிற அளவுக்குப் பெரியார் பெண் பரிவாளராக இருந்தார். (ஆதாரம் – “பெண் ஏன் அடிமையானாள் ?” என்னும் அவரது புத்தகம்.) அந்த அளவுக்கு நாம் போகவில்லை. போகவும் மாட்டோம். பெரியார் சொன்னது ரொமபவும் அதிகப்படியானது!

ஆனால், ராஜாஜி தமது ராமாயணத்தின் பின்னுரையில் “சீதையின் துயரம் இன்னும் நம் பெண்களில் தொடர்கிறது. அது முடியவில்லை” எனும் ரீதியில் எழுதியுள்ளார். குருமூர்த்தி அவர்கள் இதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.

jothigirija@vsnl.net / jothigirija@hotmail.com

. . . .

Series Navigation