பாயடி பாரதமே! பாய் !

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

பசுபதி


காட்டிலுறு சட்டமொன்றே காக்கும்உனைச் சந்தையில்;
வேட்டைக் களமிறங்கி வென்றுவா! — போட்டிபல
ஆயினும் வாணிகத்தில் ‘ஆசியா வேங்கை’யெனப்
பாயடி பாரதமே! பாய்.

விந்தைநீர் உன்றன் வியர்வையைப் பாய்ச்சிடின்
சந்தைவனம் தந்திடும் சாதனைகள் ! — மந்திரமோ
மாயமோ இன்றிவீழ் மாங்கனிகள் அள்ளிடப்
பாயடி பாரதமே! பாய்.

கணையில் சிறந்தது காகுத்தன் அம்பு;
திணைகளில் ஆறே சிறப்பாம் — இணையத்தில்
மேயடி! வையவலை யில்வாய்ப்பு மீன்பிடிக்கப்
பாயடி பாரதமே! பாய்.

எண்பூஜ்யம் கண்டெடுத்த இந்நாட்டில் இன்றைய
மென்பொருள் தேர்ச்சி வியப்பிலையே? — உன்முயற்சி
சேயின் தவழல்தான் ! சீறிப் பிறதுறையில்
பாயடி பாரதமே! பாய்.

தோளாண்மை அன்று, தொழில்தகவல் நுட்பத்தில்
தாளாண்மை தான்வெற்றி தந்திடும்! — நாளைய
நாயகி நீயடி!பன் னாட்டுத் தொழிலரங்கில்
பாயடி பாரதமே! பாய்.

~*~o0O0o~*~
s.pasupathy@yahoo.ca

Series Navigation

பசுபதி

பசுபதி