பழையத் துறவியும் ஜானி வாக்கரும் !

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா


காட்சி – 1 பக்தி

தென்னாடுடைய சிவனே போற்றி ! தமிழ்க் குடிமகன்கள் பல பேரும் ‘சிவா’ ஸ் ரீகல் விஸ்கியைத் தொட்டு கும்பிட்டு தங்கள் கச்சேரியை ஆரம்பிப்பார்கள். படித்த, படிக்காத அனைவருக்கும் இந்தக் குடி மேலே அப்படி ஒரு ஆசை. தொட்டுக் கும்பிட்டு கச்சேரியை ஆரம்பிப்பதில் அப்படி ஒரு சந்தோஷம். வாழ்க்கையில் முயன்றும் காணப் போகாத ஆண்டவனுக்குப் பதிலாக தங்களுக்குத் தரிசனம் அளித்து, அள்ளிக் “கரை”யேற்றும் போதை வஸ்துக்களைக் கண்டால் அப்படி ஒரு இன்பம் அனைவருக்கும் !

ஆண்களைப் பொறுத்த வரையில் பெண்களும், குடியும் ஒரு இன்ப லாகிரி. மற்றும் வஸ்து. அதே மாதிரி பெண்கள் என்றால் பக்தியும் முளைத்து விடும். பெண்களைப் பார்த்தவுடன் கோவில்களில் கூட்டம் போடும் காளையரைப் பார்த்ததிலையா ? சர்ச்சுக்களுக்கு திடாரென்று கூட்டம் அதிகமாகி, போவதில்லையா ? அங்கு தான் “நல்லவர்கள்” வாழ்க்கைத் துணைவியாகி விடுகின்றனர் ?. அதற்கப்பாலே பெண்களைப் பார்த்து (மனைவியத் தான் !) கன்னத்தில் போட்டுக் கொள்வதில்லையா ?.

கவலையை மறக்க சாமி முன்னால் கண் மூடி, மெய் மறந்து நிற்பதில்லையா ? அது போல் மனக் கவலை மறந்து, கண் மூடியும் மூடாமலும், அறிந்தும் அறியாமலும் மெய் மறந்து குடிகாரர்கள் கிடப்பதை, விழுந்து புரள்வதை, உளறுவதைப் பார்த்ததில்லையா ?. பக்தி பரவச நிலைக்கும், போதைக்கும் சில வித்தியாசங்கள் தான் மூளையின் “செல்” களுக்கிடையே ! நம்ம ஆட்களுக்கு (நம்மைப் போன்று குடிக்கும் மனிதர்களுக்கு) கொஞ்சம் கஷ்டமிருந்தால் போதும் சமாளிக்க முடியாமால் சாமிகிட்டேயே அல்லது ஜானி வாக்கர் கிட்டேயோ ஓடி விடுவர். காசு இல்லையென்றால் சீனியர் ஜானி வாக்கர் ( பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித நாகரிகத்தில் இருந்து வரும் கள், சோம பானத்தைத் தான் சொல்கின்றேன்.) இருக்கவே இருக்கிறார்.

காட்சி – 2 – வீரம்

பெண்களாவது இளமைத் தாண்டிய பின்பால் ஆணைக் கிளர்ச்சியடைய நிறைய போராடணும். ஆண்களும் தான் வயதான மனைவிகளைக் ஆசை காட்டி மாள வேண்டியிருக்கிறது !. சிவாஜி சார், அழகாக ஐம்பதிலும் ஆசை வரும் என்று சுலபத்தில் மேக்கப் போட்டு பாடியிருக்கிறார் வேறே ! ஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடமும் கஷ்டப்பட்டு போராட வேண்டியிருக்கின்றது.

ஆனால் குடி இருக்கிறதே ! சுலபமாகத் தளர்ச்சியடைந்தக் கிழவனையும் போட்டு ஆடவைக்க வைத்து விடும். குடிப்பதற்கு வீரம் விடைத்துக் கொண்டு எழுந்து விடும். குடித்த பிறகு வாந்தி, ரத்தம், குடல் வெந்து போவது, போன்றப் போர்க்கள் காட்சிகளை நாம் கண்டதுண்டு. அசோகர் மாதிரி குடிப் போர்க்களத்தை ஒரு முறைப் பார்த்தால் அப்புறம் புத்தம் சரணம் கச்சாமி ! ( நான் போகிறேன்) என்று ஒதுங்க வேண்டியது தான்.

போரில் ரணம் பார்த்தாலும் நாம் மற வீரர் இல்லையா ?

மருத்துவர் சொல்லிற்கேற்ப வெறும் இலை, தளை, கிளைச் சாப்பிடும்படி செய்வது, தலையில் வீட்டுக்காரியிடம் குட்டு வாங்குவது போன்ற பல இம்சைகள் பின்னால் இருந்தாலும் குடிக்க உட்காரும் போது அதெல்லாம் மனதில் வராது. ஆசிட் ஆக இருந்தாலும், ரப்பர், கெரசின் ஆக இருந்தாலும் வயிற்றில் போனால் “போதை” வருமா ? அது முக்யம். கள்ளச் சாராயம் குடித்து கண் போனால் என்ன ? வயிறு இருக்கிறதே ! போட்டு தள்ளுவோம் !

இவ்வளவு நம் உடம்பைப் பாடு படுத்தினாலும், அதைத் தொட்டுக் கும்பிட்டு “மதுரை வீரன்” போன்று வீரமாக ஆரம்பிப்பது “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தும் முன் தோன்றிய மூத்த தமிழ் மூதாதையர்” ஆரம்பித்து வைத்த ஒரு தொன்று தொட்டு இருக்கும் வழக்கம். வீரம் இங்கு தானே சிறகு விட்டு முளைக்குது ?

“பார்த்து ரொம்ப நாளாச்சு இல்ல ? அப்றம் என்னாச்சுடா . . . ? அவன் என்ன ஆனான் ? பின்னாலிலே “சேது” மாதிரி சுற்றீக்கின்னு இருந்தானே . . . “ என்று வார்த்தைகளை இப்படி அப்படி சுழற்றிப் போட்டு, முந்திரியை லாகவமாக வாயில் போட்டு ஒரு “பெக்” சரக்கை உள்ளே ஏற்றித் தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஒரு வால் முறுக்கேறிய போர்க் குதிரை போன்று காட்சி தரும் “குடி மனிதர்களை” எனக்கு நிரம்பப் பிடிக்கும்.

வீரருக்குண்டான குணம் மேலதிகாரிகள் சொல்வதை உடனே கேட்பது. நமக்கு குடி வாங்கித் தரும் “உழைக்கும்” மேலதிகாரி என்ன சொன்னாலும் கேட்க தயார் !. வீரர் மாதிரி “சல்யூட் !”. என்ன வேண்டுமென்றாலும் பேசி “கம்பெனி” கொடுக்கலாம்.

“என்ன போட்டாலும் நான் வண்டியைப் பிடித்தா “ஸ்டெடி!” “ என்ற வார்த்தைகளைக் கேட்டிருப்பீர்கள். வளைந்து நெளிந்து போகும் மலைப் பாதைகளில் “நான் ஸ்டெடி” என்று நேராகப் பிடித்தால் கொண்டை பின் வளைவுகளில் சுவர்களைப் பிய்த்துக் கொண்டு அதல பாதாளத்திற்கு விரையும் வீர மறப் பண்பு நம்மவருக்கே (குடிகாரர்) உள்ளத் தனிப் பண்பு !

காட்சி – 3 சபை அரங்கம்

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், திண்டாட்டம் இருக்கும் இடத்தில் சபை முக்கியமல்லவா ?

நடுநாயகமாக டேபிளில் அந்தப் பாட்டில் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும். அருகே நன்குத் துடைக்கப் பெற்றிருக்கும் கிளாஸ் டம்ளர்கள். அருகே இதயத்தைக் கொலஸ்டிரால் (கொழுப்பு) மூலம் கெடுக்கப் பார்க்கும் சிப்ஸ், வறுத்த கோழி, முந்திரி, அவித்த முட்டை சனியன்கள்.

இதே “செட்டப்” பை காசு இருக்கும் விகிதத்தில் ஐந்து ஸ்டார் ே ?ாட்டலிலிருந்து, கிராமத்தில் வயலில் மேட்டுக் கரை வரை மாற்றி அமைக்கலாம். “பிராண்டு” வேறாகும். திண்பண்டங்கள் வேறாகும். அவ்வளவு தான். சமத்துவ, சன்மார்க்க, சத்திய சங்கங்கள் உள்ள ஒரே சமுதாயம் “குடி”மகன்கள் சமுதாயம் தான். பீடி, கியூபா சிகர், கோல்டு ஃபிளேக், 555 என்று அளவு தான் வேறு. சாராயம், பனைக் கள், டாஸ்மாக் சாராயம், ஒல்டு மாங்க் ரம், விஸ்கி – ஜானி வாக்கர் ரெட், பிளாக் லேபிள் வகையறாக்கள் தான் மாறும். பேசுவதும் ஒரே ரகம் தான்.

வெள்ளையாக இருந்தால் என்ன, கறுப்பாக இருந்தால் என்ன, மாநிறமாக இருந்தால் என்ன அனுபவித்தால் தலையில் புகுந்து நம்மை ஆகாயத்தில் மிதக்க விட வேண்டும். (நான் குடியைத் தான் சொன்னேன், சார் !).

போர்க்களங்களைப் போன்றே, அரங்கம் அம்சமாக இருக்க வேண்டும். அமைதியாய் இருக்க வேண்டும் என்பான் ஒருவன். இசை அதிர வேண்டுமென்பான் இன்னொருவன். குடும்பப் பாங்காய் புளிக் குழம்பு போட்டு தலை இலை வாழை போட்டு, காரைக்குடிச் சமையலுடன் குடி வேண்டும் என்பான் ஒருவன். இல்லை, பின்னால் ஜாஸ் இசையுடன், வயிற்றை வருடும் சுவையுடன், மெலிதான வெப்பமான உணவு வேண்டும் என்பான் மற்றொருவன். இப்படி ஆடுங்களங்களைத் தேந்தெடுப்பதில் மன்னர்கள் அரங்கக் “குடி” யோன்கள் !

காட்சி – 4 காரம், சாரம் மற்றும் சொற்போர்

வேர்க்கடலை, சிக்கன் 65, முந்திரி, நாசோஸ், டொஸிட்டோஸ் ( சோளத்தை வைத்து பண்ணப்படுபவை ), சிக்கன் தந்தூரி போன்றவை நாக்கிற்கு.

ஆனால் இதனினும் சிறந்தது காரசாரமான சொற்போர்.

“மவனே தீர்த்துடுவேன் . . .

ரொம்ப டார்ச்சர் குடுக்கறான் மச்சி “

. . . மீண்டும் ஒரு “மடக்” மற்றும் காரக் கடலை !

(எந்த மொழியிலாவது ஒரு கெட்ட வார்த்தை !)

. . .மவனே. எவன் கிட்ட மோதறான் . . . அவனுக்குக் வைச்சிருக்கேன் ! “

. . . மீண்டும் ஒரு “மடக்” மற்றும் காரமான முந்திரி !

“எங்க தலைவரைப் பற்றியா பேசறே . . . ! “

பாதி பேர் குடிக்கிறதை விட்டு விட்டு சிப்ஸ், உருளக்கிழங்கு, போண்டா போன்று திண்பண்டங்கள் அரங்கத்தில் அதிகம் காலியாவதற்கு காரணமாக இருப்பர். நன்கு குடிப்பவர் திண்பண்டங்கள் மீது கை வைக்க மாட்டார். ஆனால் முதன் முதலாகக் குடிப்பவன் பாருங்கள் ! காரக்கடலையை ஒரே அள்ளு அள்ளுவான் ! பாதி பீர் காலியாவதற்கு முன் அடுத்த “பிளேட்” கொண்டு வந்து வைக்க வேண்டும். மதியம் சாப்பிடவில்லையோ என்னவோ ?

பல்வேறுவகையில் உடல் பருமன் அதிகரிக்க தங்களால் ஆனதை அனைவரும் தின்று உடலைக் கொலை செய்ய ஆரம்பிப்பார்கள். தொந்தி மெதுவாகத் தலை தூக்க ஆரம்பிக்கும். அனைவருக்கும் இப்படி தான் தொந்தி வருகிறது. கீழே படித்துப் பாருங்கள், தொந்திக்கும் குடிப்பதற்கும் இருக்கும் உறவினை.

வயலில் இறங்கி வேலை செய்து, ரோடில் “தார்” போட்டு பாரு ! உனக்குத் தெரியும் !

“மடக்”

““இன்னிக்கி கால் வலித்து ரிக்க்ஷா இழுத்திருக்கேன்”

“மடக்”

“இன்னைக்கி பிராஜெக்ட் டெட் லைனினால் செம வேலை. பெண்டு கழன்று விட்டது . . . “

“ஒரு பெக்”

“ ?ாப்பி பர்த்த்டே “

“சியர்ஸ்” .

“அவனை ஒரு வழியா ஏமாற்றி பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டேன் . . .”

“சியர்ஸ்”

“இன்னிக்கி பாஸ் ஆகிட்டேன் !”

“சியர்ஸ்”

அடுத்த வருடம் செத்துப் போவதைப் போல வயிறு ஒடுங்கி, கைகள் நடுங்கக் குடிப்பவர்கள் கையில் ஒரு “தம்”, மற்றும் கண்ணாடிக் குவளையோடு ஒடுங்கிக் குடித்தனம் செய்வார்கள் (டம்ளர் தான் சார் ! சும்மா தமிழில் எழுதிப் பார்த்தேன் !). கேட்டால்

“மனைவியுடன் குடித்தனம் பண்ணி பத்து வருடங்கள் ஆய்விட்டது. அவள் போய் சேர்ந்தவுடன் . . . மீண்டும் இரு “மடக்” !”.

இதையே அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் செய்து உலகில் அனைத்து “பார்”களைப் பற்றியும் போட்டு பாருங்கள் ! எந்த நாட்டிலும் ஒருத்தன் இன்னொருத்தனைப் போட்டுத் தள்ள “பார்” தான் சிறந்தது. அதிலும் பாரினும் சிறந்தது நம் ‘பார”த நாடு !

மொழியிலும் வித்தியாசமே இருக்காது. 2000 வருடங்கள் முன்னால செந்தமிழில் பேசியிருந்தால் கூட “தலையைக் கொய்ய வேண்டும்! என்று ஆர்பரித்திருந்தால் வியப்பில்லை.

காட்சி 4 – கண்ணீர்

$1000 டாலர் கோர்ட் சூட் போட்ட அமெரிக்க வியாபாரியும், வியட்நாமில் சட்டையில்லாமல் வயல்களில் வேலை பார்க்கும் குடியானவன் இருவரும்

“என்னை அவள் ஏமாற்றிவிட்டாள் . . . “ என்று ஒரே மாதிரி தண்ணி போட்டு பெண்ணால் ஏமாற்றப்பட்டால் விசும்புவார்கள். புலம்புவார்கள்.

“அவளை நம்பக்கூடாதுடா . . .”

“என்னை விட்டு வேறு ஒருவளுடன் அவன் போறான் . . . இதுவே அவனுக்கு கடைசி வாழ்நாள் ! “

பழந்தமிழகத்தில் கோவலனின் புண்யத்தால் நிறைய ஆண்பாலார் பெண்பாலாரை ஏமாற்றியிருக்க வேண்டும். அதற்காகப் பெண்கள் குடித்து ஒப்பாரி வைப்பார்களா என்று தெரியவில்லை. மாதவி கண்ணில் தெரிய கண்ணகியை ஏமாற்றம் செய்ய திட்டம் போட்ட கோவலர்கள் வளர்ந்த நாடு ( நம்ம தாத்தாக்கள் தான் !)

“மச்சி ! பிராஜக்ட் ஊத்திக்கிச்சுடா !” என்று சென்னையிலும் “டூட் ! மை பிராடக்ட் வாஸ் ய பெயிலியர்” என்று வாஷிங்டனிலும் ஒரே மாதிரி புலம்பக் கேட்டிருக்கிறேன்.

“நம்ம ராஜா மற்றும் அந்தப் பாளையத்துக்காரரின் பட்டாளத்தை இறக்கியிருந்தால் நம்மளைப் பிடிக்க முடியாது” என்று பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வீரர்கள் குடித்து விட்டு அலம்பலிட்டிருக்கலாம்.

“படுபாவி ! இன்கம்டாக்ஸ் ரெய்டில் அனைத்தையும் அள்ளிக்கிட்டு போய்ட்டானே !” இம்மாதிரி கண்ணீர் பார்ட்டிகளுக்கு “தண்ணீர்” தான் தாக சாந்தி !

காட்சி 5 – துறவியும் நட்பும்

அனைத்து இடத்திலும் ஒரு பீட்டரோ, ஜானோ, குமாரோ, முத்துவோ பார் டெண்டராக வந்து நமக்கு கருணை மனம் படைத்த வள்ளலாராகக் காட்சியளிப்பார்கள். பார் டெண்டரை நாம் ஓல்டு மாங்க் ரம் (Old Monk ஒரு வகை ரம்) மீது வைத்துள்ள பிரியத்தால் இனி “துறவி” என்றே அழைப்போம்.

“ஆமாம் ! சார் ! கவலைப்படாதீங்க சார் ! இன்னிக்கு போனால் நாளை வேறு பிராண்டு மாத்திக்கலாம் சார்” என்று “பொடி” வைத்து பேசுவார்கள். அந்த சமயத்தில் “புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக ? தோழா ஏழைகள் நமக்காக ! “ என்று அத் துறவிகளை நோக்கிப் பாடத் தோன்றும். அவர்களிடம் நமது உள்மனது ரகசியங்களை கொட்டி வைப்போம். அவர்களே நம் மனதைச் சுத்தப்படுத்தும் ஆத்மாக்கள். ஆறுதலாக நமக்குப் புண்படாமல், நாசூக்காக நம்மிடம் நடந்து கொண்டு, மேலும் பலவகைத் தண்ணீர் வகையறாக்களை நம்மிடம் தலையில் கட்டி மேலும் நம்மைக் குடிக்கப் பயிலவைக்கும் உத்தம ஆத்மாக்கள் இத் துறவிகள்.

கட்டிய மனைவியிடம் ஒரு வாரத்தில் மொத்தமே

1) “ம்ம்ம் . . . “

2) “போய்ட்டு வரேன் “

3) “இன்னும் கொஞ்சம் . . . “

4) அப்புறம்

5) மற்றும் சில முனகல்களோடு

சிக்கனமாகப் பேசியிருப்போம்.

ஆனால் இத் துறவிகளுடன் வார்த்தைகளால் மனதைக் “கொட்டி விட்டு” உள்ளத்து அழுக்குகளைத் திறந்து காட்டி “மெய்” ஞானிகளாகக் காட்டிக் கொள்வோம். மனைவியிடம் ஆறு வருடங்கள் பேசுவதை ஒரே நாளில் பேச்சில் கொட்டும் திறமையும் அப்போது வரும்.

இதில் துறவிகளுடன் தத்துவம் பேசும் வேடிக்கை பைத்தியக்கார “சேது”க்களும் உண்டு. “அப்பவே ‘அவன்’ சொன்னான் . . . “ என்று யாராவது மனித மகாத்மாக்களைப் பற்றி சொல்லி தம் இழிநிலையை உலகிற்கு பைத்தியக்காரச் “சேதுக்கள்” உணர்த்துவார்கள்.

இங்கே “அவன்” என்ற இடத்தில் சாக்ரடாஸ், கிருஸ்து, புத்தன், காந்தி, அப்பா, தலைவர், மற்ற நல்ல சாதுக்களில் பெயர்களை நிரப்பிக் கொள்ளவும். அப்படிச் சொல்லிவிட்டு அம் மனிதர்களையும் செல்லமாக ஒரு மாதிரி வசை பாடுவார்கள். “அவன் கெடுத்தது தாண்டா . . .நமக்கு இந்த நிலை” என்று.

“கண்ணதாசன் சொன்னான் பாரு ! . . . (கெட்ட வார்த்தை) . . . “,

“மகாபாரதத்தில் கிருஷ்ணன் சொன்னான் பாரு ! . . . (கெட்ட வார்த்தை) . . . “, பைபிளில் ஜீசஸ் சொன்னான் பாரு ! . . . (கெட்ட வார்த்தை) . . . “. என்று சொல்லிவிட்டு தங்கள் தர்மாத்மார்த்த தூய எண்ணங்களை அள்ளித் தெளிப்பார்கள்.

“டக்கென்று, என்ன சொல்லு ! எனக்குப் பிடித்த கடவுள் கிருஷ்ணன் தான். என்ன கேர்ள் பிரண்ட்ஸ். எத்தனை மனைவிகள். ?” என்றூ சிலாகிக்கவும் செய்வார்கள்.

துறவியோ கண்களில் மரியாதையுடன் தனக்குத் தெரிந்த நியாயத்தை அள்ளி தெளித்து பெரிய மனிதர்களோடுத் தன்னையும் உயர்த்திக் கொள்வான்.

“ஆமா சார் கரீக்டாகச் சொன்னீர்கள். . .” என்று குடிகாரர்களிடம் ஜால்ரா அடிப்பான். பிறகு “பவ்யமாக” பணிவாக வந்து கேட்பான். “வேறு என்ன வேணும் சார் ?”. பதிலுக்கு “இன்னொரு ஜானி வாக்கர் “ என்றூ சொல்லும் வரை நம்மை விட மாட்டார் துறவி.

துறவியிடமே “உனக்குத் தெரிந்த ‘பொண்ணு’ ஏதேனும் இருக்கா ?” என்ற ஆர்வக் கோளாறினால் சிலர் கேட்கலாம். குடிகாரர் பெண்ணாக இருந்துவிட்டால் “உனக்குத் தெரிந்த “ஆணு” ஏதேனும் இருக்கா ?” என்றும் கேள்விகள் கேட்கலாம்.

“இங்கே இல்லை சார் !பம்பாயில் இந்த மாதிரி இருக்கு சார் !” என்று ஒரு வேளைத் துறவிகள் சமாளிக்கலாம். இல்லை, பளிச்சென்று “இருக்கு சார் ! துட்டு ஆகும்” என்று தலையைச் சொறியலாம்.

குடிப்பார்ட்டி “வெயிட்” ஆக இருந்தால் “சார் ! புதுசா ஒரு அயிட்டம் வந்திருக்கு. டேஸ்ட் பண்றீங்களா “ என்பான் நமது துறவி. ‘அயிட்டம்’ என்பது இங்கு இடத்திற்கும், காலத்திற்கும், தேசத்திற்கும் ஏற்ப வேறுபடும்.

“யாரயும் நம்பக் கூடாதுடா ! “ என்று குடிமகன் பொதுவாகக் கூறினால், துறவி “கரெக்ட் சார் ! மனிதர்களை நம்புவது முட்டாள் தான் “ என்று ஒத்துக் கொள்வார்.

நம்மைப் போன்றே சிந்திக்கிறானே என்று “எப்படி என்னை மாதிரியே சொல்றே . . . ?” என்று வியந்து மனது திறக்கப்பட . . .

மேலும் பல விஷயங்களைப் குடிமகன்கள் புட்டு புட்டு விளக்குவார்கள்.

அவ்வப்போது துறவியும் “ நான் ஒன்னு சொல்றேன் சார் . . . “ என்று நாட்டு நடப்பை விளாசுவான்.

எல்லாம் டிப்ஸுக்காக என்று தெரிந்தும் ஏமாறுவதில் நாம் கில்லாடிகள்.

சகஜமாக நம்முடன் கைகோர்த்து வரும் நண்பனாகத் தெரியும் துறவியிடம் நமக்கு டிப்ஸ் வைக்கும்போது நட்பு அதிகம் பீறிட்டு 20-25% “பில்” தொகையில் “டிப்ஸாக “ வைப்போம்.

நமக்குத் தெரியாமல் துரோகம் பண்ணுபவர்களை விட பேச டிப்ஸ் கேக்கும் துறவியே எவ்வளவோ தேவலை என்று தோன்றும்.

காட்சி 6 – லேபிளும் முகவரியும்

ரெட் லேபிள், பிளாக் லேபிள், வைட் லேபிள் என்று விதம் விதமான வகையிலான

ஜானி வாக்கர்கள்களைக் (புகழ் பெற்ற விஸ்கியின் பெயர்) கண்டு மயங்காதப் பெருங்குடி (சென்னையில் பழைய மகாபலிபுரத்தில் இருக்கும் புற நகர் இல்லை!) மக்கள் யாருமில்லை. VAT 69 என்று போட்டு பழைய படத்தில் நம்பியார், அசோகன் பக்கத்தில் “பாட்டில்கள்” அடுக்கப்பட்டிருக்கும். குறைந்த ஆடைகள் உடுத்திய பெண்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் அருகே இருப்பார்கள். அப்போதே VAT 69 மீது ஒரு கண். இப்போது HAYWARDS 5000, 2000, Black Label, COBRA, Kahjurahoo, Golden Eagle என்று “தக தக” லேபிள்களில் வரும் குடி பாட்டில்களைக் கண்டால் ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது. பக்கத்தில் குட்டிகள் இருக்கின்றனவா என்று தேடினால் AIDS 06 வருமென்று பயம் பிறக்கிறது.

எதுக்கு வம்பு ? சும்மா, பார்த்து விட்டு வெறும் மங்களகரமான “கல்யாணி” பீரை அடித்துவிட்டு சமர்த்தாக நடந்து விடலாம்.

லேபிள் என்ன லேபிள் ? புதிய மொந்தையில் பழைய கள்ளு கேள்விப் பட்டதில்லையா ?. வைன் (திராட்சை ரசம்) கூட 50, 100 வருடங்கள் வைத்துக் குடிப்பார்களாமே ?.. பழசாக, பழசாக விற்க லேபிள்கள் தேவைப்படுகின்றன.

பள்ளியில் புத்தகங்களுக்கு அட்டை போட்டு, லேபிள் ஒட்ட மிகவும் பிடிக்குமாதலால் வயாதானவுடன் இவ்விதமான லேபிள்கள் பிகவும் பிடிக்கின்றது. அதிலும் சில விஸ்கி பாட்டில்களின் வெளியே கலரில் சிறு ஆடை அணிந்த பெண்களின் படங்கள் லேபிள்களாக ஒட்டப் பட்டிருக்கும்.

எதற்கும் லேபிள், முகவரி மிகவும் தேவையாயிருக்கின்றது. அழகிலாத பெண்கள் இருந்தாலும் அருகே சென்றுக் குசலம் விசாரித்து போன் நம்பர் என்ன என்று . . . வினவுவார்கள். (கேட்பார்கள் ! கொஞ்சம் “சுருதி” ஏறுவதால் மிகவும் சுத்தத் தமிழுக்குத் தாவிவிடுகின்றேன்). அழகானப் பெண்ணிடம் போன் நம்பர் வாங்கமுடியாவிட்டால் அவள் பெயரில் மேலும் குடித்து விட்டு பாத்ரூம் தட்டுத் தடுமாறி போய்விட்டு எங்கெல்லாமோ முட்டி மோதிவிட்டு மீண்டும் “பூத்”துக்குள்ளே வந்து விழுவர்.

ஒரு சினிமா படத்தில் ஒரு நடிகர் அழகான ஒரு பெண்ணிடம் போய் போன் நம்பர் கேட்பார். அவள் மிகவும் முரண்டு பண்ணவே, அவள் வாயில் துப்பாக்கி வைத்து மிரட்டி நம்பர் கேட்பார். போன் நம்பரை வாங்கிக் கொண்டு “ஸ்டைலாக” தம் பிற நண்பரிடம் வந்து பந்தாவாக “நான் போய் கேட்டேன், அவள் சிரித்துக் கொண்டே கொடுத்தாள் . . .” என்று பொய் சொல்லி டபாய்ப்பார். முக்கால்வாசி கன்னத்தில் அடி தான் வாங்குவார்கள். அதை மறைத்து அடி வாங்கியக் கன்னங்களைத் தடவிக் கொண்டு மேலும் ஒரு ‘பெக்” . . .

காட்சி 7 – குயில், மயில்

பிறகு யாருடனாவது ஆட வேண்டும் போல இருக்கும். ஆடுவதற்கு எதற்கு முகவரி ? குயிலுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டுமா ? மயிலுக்கு ஆடச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா ?. (ரொம்பத் தமிழ் படம் சிறு வயது முதலே பார்த்து வந்ததால் வந்த வினை . . . இப்படி பட்ட வசனங்கள் அள்ளித் தெளிக்க வேண்டியிருக்கின்றது )

குயில்களான பெண்கள் குடிக்கும் போது “கல கல” விற்குப் பஞ்சம் இருக்காது. எதற்கு சிரிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் மயில் போன்று சிரிப்பார்கள். இந்த ஆண்கள் எதற்கு இப்படி அதிரச் சிரிக்கிறார்கள். ? ஜோக்கில்லாமல் சிரிக்க இவர்களால் மட்டும் தான் முடியும். சிங்கமாய் நினைத்துக் கழுதையாய் கனைப்பவர்கள் அதிகம். சொந்தக் கதைகள், அடுத்தவர்கள் கதை, மனக்குறைகள் என்று மனதை அழுத்தவிழும்.

“உம்” மென்று மூஞ்சியை வைத்திக் கொண்டு “மொடாக்” குடியர்கள் ஆண்களிலும், பெண்களிலும் உண்டு. பிராண்டு தான் வித்தியாசப் படும். “கல கல” வென்று பேசும் பெண்ணிருந்தால் நேரமும் ஓடும். கூட்டமும் இருக்கும். சரக்கும் நன்றாக விற்பனையாகும். “இது தான் சாக்கு என்று நம்முடன் குடிக்கிறாளே, அப்ப அவள் அனைத்திற்கும் தயார் என்று தைரியமுடன் (குடித்ததால் வந்த தைரியம் தான்!) பெண் மீது அத்து மீறி கை பட்டால் “பளார் . . .” என்ற குயில் சப்தம் கேட்கும்.

மயிலிறகைப் போன்று கன்னத்தைத் தடவும் சத்தமும் கேட்கும். கடைக்காரருக்கு எப்போதும் சந்தோஷம் தான். இன்னும் கொஞ்சம் அடி வாங்கியவன் “ஆர்டர்” பண்ணுவானில்லையா ?. “யானை படுத்தாலும் குதிரை மட்டம்” என்ற விழுந்து, விழுந்து குடித்து தொந்தியோடு தடாலென்று விழும் சத்தம் கேட்டு பலபேர் மயில் போன்றுத் தோகை விரித்து ஆடலாம்.

தமிழகத்தில் தான் உலகத்திலேயே அனைவரும் தனித் தனியாகக் குடிக்கிறார்கள். அந்தக் குடிசையில் பெண்கள். இக்குடிசையில் ஆண்கள். சேர்ந்துக் குடிக்க கூட உரிமையில்லையா ? ஆனால் வெள்ளைக் காரி பக்கத்தில் வைத்துக் குடிக்கலாம். தப்பில்லை. அவள் கெட்டுப் போனவள் தானே ?.

எம்டிவி அதிர எந்த நாடாயிருந்தாலும் போதையில் நடனமாடும் மின் பிம்பங்களில் எண்ணங்களைத் தொலைத்து மனச் சலனங்களோடு ஆட ஆண்களிடம் ஐக்கியம் ஆகும் பெண்களும், பெண்களிடம் ஐக்கியம் ஆகும் ஆண்களும் அதிகம்.

உடலோடு உடல் உராய நடனமாடி,

காது அதிர இசையை அதிர வைத்து

“ஆட்டமாடி பாட்டு பாடி . . . “

“ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது . . . “

கட் ! சென்சார் !

“மாதவிப் பெண் மயிலாள் தோகை விரித்தாள் “ என்று நமக்கு மாதவி தானே வேண்டும். கண்ணகியை ஆடவிடுவோமா ?. நம்மூர் கோவலருக்குப் பழக்கமில்லாவிட்டால் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொஞ்சம் “பெர்மிட்” வாங்கி விட்டு அருகே இருக்கும் பெங்களூரில் பாடி, நடனம் ஆடலாம்.

சேர்ந்து ஆட ஆண், பெண் துணை இருந்துவிட்டால் போதும். லயித்து ஆடலாம். “ஆடவரெல்லாம் ஆடவரலாம் . . .” என்று கண்ணதாசன் அனுபவித்து பாடியிருக்கிறான் போலும். லத்தீன் இசைக்கு பார்களில் நடனமாடாமலேயே இருக்க முடியாது. நம்ம பறை இசையிலும், சென்னைக் “கானா” பாட்டுக்களுக்கும் ஆட்டம் போடாமலே இருக்க முடியாது. அனுபவித்துப் பாருங்கள் !. கூச்சமில்லாமல் ஆடவேண்டும். கூச்சமிருந்தால ஒரு “பெக்”. பிறகு, “ஆடுவதென்பது பிறப்புரிமை !” என்று திலகர் போன்று முழக்கமிடுவீர்கள் !. (எந்த இடத்தில் திலகர் போன்ற தலைவர்களின் பேரை இழுப்பது ? மன்னிக்கவும். “சுதந்திரம் என்பது பிறப்புரிமை” என்று முழங்கிய அவரே என் தலைவர்!).

குத்து ஆட்டம் போடப் பிறப்புரிமைத் தேவையில்லை.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மனங்கள் லயிக்க “ஆட்டம்” போட வேண்டியது தான் !

காட்சி 7 – குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு !

குடிச்சொற்கள் காற்றில் பறப்பதுண்டு. பறக்க காரணம் மனதில் இருந்தால் தானே ! மனது ஒன்று நினைக்க நாக்கு சுழன்று மற்றொன்று நினைவு வெளிப்படும். “காற்றினிலே ஒரு கீதம் . . . “’ ஏனோ எம்.எஸ். சுப்புலக்சுமியின் அந்தப் பாடல் ஞாபகம் வருகின்றது. கீதம் எங்கேயோ கலந்து மடிய அழகான கண்ணாடிக் குவளைகளில் மிதக்கும் ஐஸ் கட்டிகளோடு மனது அமிழ, வார்த்தைகள் காணாமல் போகும் தருணங்கள் பல.

வீட்டில் மனைவி டார்ச்சர் கொடுத்தால் சிவாஜி வசந்த மாளிகையில் பாடியது போன்று “நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம் !” என்று கர்ணக் கடூரக் குரலில் பாடுவார்கள் (டி.எம்.எஸ். ஐச் சொல்லவில்லை !). பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த குடிமகன்கள் எதிலும் சளைக்க மாட்டார்கள்.

நண்பர்களோடு சேர்ந்து குடிக்கும் போது வேறு மாதிரி வியாக்யானங்கள், கூச்சல்கள், சண்டைகள், சச்சரவுகள் (எல்லாம் சட்டசபையில் வரும் நிகழ்ச்சிகளை வர்ணிப்பது போன்று இருந்தால் என் தப்பில்லை !) வரும். 99% ஒன்றுக்கும் உதவாத சச்சரவுகள் தான்.

காலரை இழுப்பது நம்மில் பலருக்கு கோபத்தில் பிடித்தமான ஒன்று.

“மவனே ! ஓங்கி விட்டேன் பாரு !” என்று சவடாலில் ஆரம்பிக்கும். நண்பர்களிடத்தில் நாம் தரும் டிப்ஸ், காலரைப் பிடிப்பது தான். “எங்க தலை(வரை)யைப் பற்றியா சொல்லறே . . . “ என்று மற்றவன் தலையைப் பிய்ப்பான். அடுத்த நாளே “வாடா காபி சாப்பிடலாம் “ என்று அன்போடு அழைப்பான்.

இதைத்தான் அன்றே “திருவள்ளுவர் சொன்னார் . . .” என்று திடாரென்று சண்டைக்கிடையில் ஆரம்பித்தாலும் ஆரம்பிப்போம்.

“அவன் கிடக்கிறான் . . . ஒரு . . . “. என்று ஒரு நண்பன் மேதாவி தன்னை உயர்த்திக் கொள்ளும். திருவள்ளுவரைக் கூட ஏக வசனத்தில் திட்டும்.

“என்னவெல்லாம் எழுதினான் . . . ஏதோ “துப்பாக்கி துப்பாக்கி துப்பாக்கி” என்று ஆறு தடவை சொல்லி மழை” என்றானே ! அவனைப் பற்றி ஏன் நினைக்க வேண்டும் இப்போது ?” என்று உளறினாலும் ஆச்சரியம் இல்லை.

அடுத்த நாளே “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று மற்றவருக்குப் போதித்தாலும் போதிக்கலாம்.

கள்ளுண்ணாமைப் பற்றி என்னவெல்லாம் சொன்னார் என் ஐயன் ?. கண்கள் சுற்ற . . .

போதை அதிகமானதால் . . . எ . ழு . து . வ . தை இத்துடன் நிறுத்திக் கொள்கி . . .றே .. .ன் ! ரொம்பத் தமிழைப் பற்றி யோசித்தால் இப்படி தூக்கம் வரும் போல !

அதிகாலை.

இலங்கை வானொலியில் “பொங்கும் பூம்புனல் …” !

“மலர்கள் நனைந்தன பனியாலே “ என்று பி.சுசீலா பாடுவதைக் கேட்டு எழுந்திருக்க ஆரம்பித்தேன்.

நேற்று கடினமாகச் ( ?) சிந்தித்து அப்படி என்ன எழுதினேன் . . . ஞாபகம் இல்லை !

குடிகாரன் எழுத்து ! விடிஞ்சாலே போச்சு !

காட்சி 8 – பக்தி ! ஜனவரி 1 பகல் !

2006 ஜனவரி 1.

இது காட்சி 1 அல்ல. அதில் காணப்படும் பக்தி வேறு.

இப்ப வேறு.

நன்றாகக் குளித்து, நெற்றியில் விபூதி வைத்து, சாம்பிராணி, ஊதுவத்திக் கொளுத்தி (அப்ப தானே வாசனைகளெல்லாம் மறையும் !)

அப்பா ! ஜானி வாக்கரே ! வினைத் தீர்ப்பவரே!

குடியில் இருக்கும் எதிர்விளைவைக் கண்டும் காணாமல் குதூகூலத்துடன் குடித்துத் துள்ளித் திரியும் இளம் வயது மாணவர்கள் முதல் தொண்டு கிழவன், கிழவி வரை எவ்வளவு பேர் ?.

நேற்று டிசம்பர் 31 ந்தேதி மட்டும் கங்கை நதி யளவு உலகம் முழுவதும் குடித்திருக்கிறார்கள். எவ்வளவு உழைப்பினால் வந்த பணம் விரையம். ?. சாராயம் விற்பவனுக்கு கொண்டாட்டம். அப்ப தான் அந்தப் பணத்தில் அவன் கல்லூரிகள் கட்டலாம். அதில் சேர்ந்து படித்து, உழைத்து மீண்டும் குடிக்கலாம். ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ! வாழ்ந்து காண்பித்த கண்ணதாசன் வாழ்க !

கங்கையைச் சுத்தம் பண்ணினால் போதாது. நாங்கள் அனைவரையும் வெந்த குடல்களில் “பினாயில்” விட்டுக் கழுவும் வரைக் குடித்திருக்கிறோம். காபி குடித்தாலும் மெதுவாக விஸ்கி வாசனை வாயில் வந்து மற்றவரை மெலிதாகத் தாக்கி விட்டு நம்மிடையே மீண்டும் வரும்.

சீக்கிரம் நாங்களெலாம் எங்கள் உடம்பைக் கெடுத்துக் கொண்டால் தான் உலகை விட்டுச் சீக்கிரம் போக முடியும். நாம போனால் நம்ம வேலை, இடம், வீடு காலி. மற்றவர்களுக்கு ஜாலி.

இடம் காலியானால் இந்திய, சீனா அரசாங்கங்கள் முதற்கொண்டு அனைவரும் சந்தோஷப்படுவர்.! எனவே ஒரு பொது நோக்கத்தில் குடிக்கும் நாங்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, வீரம், விவேகம், பணம், மனம், வீடு அனைத்தையும் விட்டு விட்டு சொல்கிறோம் ! வெகு சீக்கிரம் மேலும் குடித்து விட்டு உன் (ஜானி வாக்கரின்) பாதங்களைக் காண விழைகிறோம் !

எவ்வளவு தோப்புக்கரணங்கள் போட்டாலும், சபதங்கள் எடுத்துக் கொண்டாலும் உன்னைக் காண்பதற்காகத் தான் இவ்வளவு சீக்கிரம் வீரத்துடன் மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்தனைப் போன்று எங்கள் முயற்சியில் சற்றும் தளராமல் மனதில் தொங்கும் வேதாளத்தைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வருகின்றோம்.

“பார்” கண்ணாடிக் கதவுகளை, “கள் கிடைக்குமிடம்” என்றூ போர்டு போட்ட குடிசைத் தட்டுக்களைத் தள்ளி உள்ளேத் துள்ளிக் குதித்து உற்சாகமாய் நுழைகிறோம். அங்கு கதவைத் திறந்தால் . . .

நம் பழையத் துறவியும், ஜானிவாக்கரும் சிரித்த வண்ணம் வரவேற்கின்றனர்!

மாண்புமிகு குடிமக்களே !

வருக ! வருக !

புது வருடத்தில் உங்கள் வரவு நல்வரவு ஆகுக !

வெகு சீக்கிரம் ராமச்சந்திரா மருத்துவமனையிலோ, மெட்ராஸ் மெடிக்கல் மெஷினிலோ நோயாளியாகப் போகும் உங்களுக்கு எங்கள் நல் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன். சியர்ஸ் !

kkvshyam@yahoo.com

Series Navigation

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா