பறவைப்பாதம் – அத்தியாயம் இரண்டு

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


2

அது நடைவண்டிதான். நடக்கவே தகராறு குழந்தைக்கு. தத்தக்கா பித்தக்கா என ஒரு போதைத் தள்ளாட்டம். என்றாலும் உள்ளே பொங்கிச்சே உற்சாகக் கடல். மூச்சிறைப்பும் கொந்தளிப்புமாய்… அது தனிக்காலம். தனியுலகம்.

எறும்புக்குத் துளிநீரும் வெள்ளமல்லவா ? நடைவண்டி அல்ல அது… தேரோட்டம் என உணர்ந்த பரபரத்த இளமை வருடங்கள். இப்போது நினைக்க மனதில் தென்றல் தடவுகிறது.

எப்போதும் எதைப் பார்த்தாலும் மிரட்சி காட்டும் பிருந்தா. பயில்வான் கையை மடித்து சதையுப்பலைக் காட்டிய மாதிரி பஃப் வைத்த மேற்சட்டை. எந்த ஆண் பார்த்தாலும் ரெட்டைச் சடையில் ஒரு விலுக் விலுக்கி அதைப் பின்பக்கத்துக்கு மாற்றிக் கொள்வாள். எதிரே ஒருநாள் வந்தாள். அட தனியே வந்தாள்.

இவனுக்கானா பரபரப்பு. மனசு டாக்கடையில் பார்சல் எடுத்துவந்த காபிடம்ளர்போல குட்டிக்கரணமாய்க் கவிழ்ந்து விட்டது. கதாநாயக அந்தஸ்தில் எதாவது பேசத் துடிக்கும் உள்ளம். உடம்பே நடுங்குகிறது. அவள் விலுக்கினாள். ‘பாத்துடி சுளுக்கிக்கப் போறது ‘ என்றான் தைரியமாய். உள்ளமெல்லாம் நுரைத்து வழிகிறது. வெளியே குப்பென வியர்வை.

அவளுக்கு அழுகை வந்தது எதற்கோ. ‘எங்கப்பாகிட்ட சொல்றேன் இரு… ‘ என்றாள் மூச்சுமுட்ட. ‘சொல்லேன் எனக்கு ஒண்ணும் பயமில்லை ‘ என்றான் பயத்துடன்.

‘ஆம்பளைங்ககூடப் பேசப்டாது. சேரப்டாதுன்னு எங்க பாட்டி சொல்லீர்க்கா. வழியை விடுடா ‘.

அவள் அவ்வளவு பேசியதே அவனுக்கு ஆச்சரியம்.

‘ஏன் ? ‘

‘ஆம்பளைங்கல்லாம் கெட்டவங்க. ‘ அவனைத் தாண்டிப் போக முயன்றாள். முடியவில்லை. வழிமறைத்து நின்றிருந்தான்.

‘நான் நல்லவன் ‘ என்றான் நெஞ்சை நிமிர்த்தி.

‘நீ ஆம்பளை இல்லியா ? ‘ என்று கேட்டாள். அவமானமாய் இருந்தது.

‘நீ கெட்டவன் ‘

‘நான் நல்லவன்… ‘

‘அப்ப வழிய விடுடா ‘

சற்று கோபம் வந்தாற்போல ராஜகோபால் ‘அப்ப ஏண்டி நேத்திக்கு என்னைப் பாத்து சிரிச்சே ? ‘ என்று கேட்டான்.

‘நானா… ‘ என்றாள்.

‘ஏய் நீ சிரிக்கலே ? ‘

‘ஞாபகம் இல்ல… ‘

‘நீ சிரிச்சே… ‘ என்றான் முச்சிறைப்புடன். சிரிக்கலையாமே ?… தாளமுடியாதிருந்தது. அவள் சிரித்தாள் என்று பசங்கள் எல்லாரும் கூடி, பொறாமையும், சுவாரஸ்யமுமாய் உசுப்பேற்றி விட்டிருந்தார்கள். பேப்பரில் காத்தாடி செய்து முள்ளில் மாட்டி ஸ்வைங்கென்று – அவனைப் – பறக்க விட்டிருந்தார்கள்.

‘வழியை விடமாட்டேங்கறியே… நீ கெட்டவன். ரெளடி… ‘

குப்பென ஆத்திரம் பொங்கியது. ‘ஏய் ? ‘ என்று கையைத் துாக்கினான்.

அவள் ‘அப்பாட்டச் சொல்றேன்… அவர்ட்டச் சொன்னா உன்னைப் பீஸ் பீஸாக்கிருவார்…. ‘

சட்டென்று வழியை விட்டான். பாவாடை சரசரக்க ஓடுகிறாள் பிருந்தா. அவளது அப்பா முகமே ஒருமாதிரி கடுகடுப்பாய் இருக்கும். அவர் கெட்டவர். சிகெரெட்டெல்லாம் குடிப்பார்.

சொல்லி விடுவாளோ ?… அவள் போனபின் என்னவெல்லாமோ யோசனை. பெண்ணைப் பெற்ற அப்பாக்கள் அத்தனை பேருமே கெட்டவர்களாகவும் வில்லன்களாகவும் தோணும் வயது அது.

அடுத்த ரெண்டாவது நிமிஷம் அவங்கப்பா சைக்கிளில் விர்ரென்று வந்ததைப் பார்த்ததும் ஒண்ணுக்கு நெருக்கி விட்டது.

தாண்டிப் போனது சைக்கிள்.

அவள் அப்பாவிடம் சொல்லவில்லை என்று பின்பு தெரிந்ததும் பசங்கள் திரும்ப ஊய்யென்று கொந்தளித்தார்கள்.

அந்தச் சந்திப்பை திரும்பத் திரும்ப மனம் அசைபோட்டது. ‘உங்க தாத்தா கெட்டவரா ?…ன்னு உங்க பாட்டிட்ட கேளுடி ‘ – ‘உங்கப்பா ஆம்பளைதானே ? அவர் கெட்டவரா ? ‘ டேய் அப்ப பேச வேண்டியதை இப்ப யோசிச்சி என்ன பிரயோஜனம் முட்டாளே… என அடக்கினான் மனதை.

பிருந்தாவின் பாட்டியை தற்செயலாகக் கோவிலில் சந்தித்தான். ஆத்திரமாய் வந்தது. முதுகு கூனிய பாட்டி. ராமாயணக் கூனியா நீ ? ராமாயணத்தில் கூனி. பாரதத்தில் சகுனி… என்ன பேர்ப் பொருத்தமோ ?

தொலைக்காட்சிக்கு யாரோ மெகாசீரியல் கதை கேட்டாப்போல அன்னிக்கே எழுதித் தள்ளிட்டானுங்க. யார்… ராமானந்த சாகரின் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன்!

‘அம்பி… ‘ கூப்பிட்டாள் மெகாசீரியல் கூனி.

‘என்னையா ? ‘ என்று வந்தான். ‘ரோடைத் தாண்டி விட்ரு ‘ என்று கையைப் பிடித்தாள். சரி என்று உதவி செய்தான் ‘நீ ரொம்ப நல்லவன் ‘ என்றாள். ஜில்லென்று ஆகி விட்டது.

‘பிருந்தாவும் நானும் ஒரே கிளாஸ்தான் பாட்டி… ‘

‘பொண்ணா அது ஷனி… வீட்ல ஒருவேலை செய்யாது ‘ என்றாள் பாட்டி.

—-

அந்த பிருந்தா திரண்டு குளித்தாள் என்று வீட்டில் புட்டு தந்தாள் அம்மா. சலித்தெடுத்த மண் போலிருந்தது. திரண்டு குளிக்கறதுன்னா என்ன, தெரியாது. அம்மா மோர் கடைவாள். வெண்ணெய் திரளும். அதை அப்படியே மிதக்க விட்டிருப்பாள் மோரில். வெண்ணெய் திரண்டு குளிக்கிறது… என்கிறாப் போலவா தெரியவில்லை.

‘புட்டு நல்லாருந்தது பிருந்தா, தேங்ஸ் ‘ என்றான் வழிமறித்து.

‘எங்கம்மாட்ட சொல்லுடா… ‘

‘அவளா திரண்டு குளிச்சா ? ‘

சிரித்தாள். ஆ, சிரிக்கிறாள். நண்பர்களிடம் சொல்லணும். இது நிச்சயம் காதல்தான். கிர்ர்ரென்று முள்ளுக் காத்தாடிக்கு உயிர் வந்தது.

‘ஏன் தாவணி போட்டிருக்கே ? ‘ என்று கேட்டான். ‘அது அப்படித்தான் ‘ என்று திரும்பச் சிரிக்கிறாள். என்ன விஷயம் தெரியவில்லை. ஆனால் முன்னைவிட அழகாய் இருந்தாள். அதுக்குக் காரணம் – அவனுக்குத் தெரியும்… அவள்… அவனை… காதலிக்கிறாள்!

‘திரண்டு குளிச்சா தாவணி போடணுமா ? ‘

‘ம் ‘

‘அப்ப எப்ப புடவை கட்டுவீங்க ? ‘

‘தெரியல ‘ என்கிறாள்.

—-

ஆண்களின் பதின்பருவ மாற்றங்கள் வேறு மாதிரியானவை. அவன் சைக்கிள் கற்றுக் கொண்டான். முதல்மோது அவளை மோதினான். அந்த பிருந்தாவை. தண்ணிக் குடமெடுத்து எதிரே வந்தாள். குளித்து முடித்து ஈரத்துண்டில் சுற்றிய கூந்தல். வெறுங் குளியலா திரண்டு குளியலா தெரியவில்லை. அதற்கு ஏன் வீடு வீடாப் போயி புட்டு குடுக்கிறார்கள் தெரியவில்லை. நாட்ல குளிக்கறதை யெல்லாம் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க… அதுகூடப் பரவாயில்லை. வைத்தியோட அக்காவுக்கு சீமந்தம். காது மந்தம் மாதிரி அது ஒரு வைபவம். என்ன விசேஷம்டான்னா… அக்கா குளிக்கலை. அதான் விசேஷம்ன்றான். அவனுக்கே அர்த்தம் தெரியவில்லை. பொம்பளைங்க நினைச்சா விசேஷம்தான் போலுக்கு. குளிச்சாலும் குளிக்காட்டாலும்… என்றெல்லாம் நினைத்தபடி வந்து, அவள்மேலே மோதிப் பொத்தென வீழ்ந்தான். ‘சனியனே… ‘ என்று வீழ்ந்தாள். அவளுக்கு அடி என்று பெரிசாய் இல்லை. அவனுக்குதான் சிராய்ப்பும் வலியும் பின்னியெடுத்தது.

‘ஸாரி ‘ என்று சொல்ல வந்தவன் அவளது தாவணியைப் பார்த்து விட்டு ரொம்ப அறிவாளியாய் ‘ஹாஃப்சாரி ‘ என்றான்.

புதுத்தாவணி அழுக்கான ஆத்திரம். ‘பாத்துப்போடா நாயே… ‘ என்றாள். திடாரென்று சிரிக்கிறாள். திடாரென்று கனைக்கிறாள் கழுதையாட்டம்… லுாசுப்பிறவி. நோகாமல் எழுந்து போனவள் அடிபட்ட அவனைப் பற்றிக் கவலைப்படாமல் திட்டிவிட்டு வேறு போகிறாள்…

அதைவிட ஆத்திரமான விஷயம். ரெண்டு பேரும் ஒரே வகுப்பு. ஒரே வித்தியாசம் அவள் திரண்டு குளித்தவள். அதனால் அந்தஸ்தும் அறிவும் எப்படியோ கூடிவிட்டதாக உணர்கிறாள். எல்லாம் அந்தக் கூனிப்பாட்டியின் சதி. வரட்டும். அடுத்தமுறை சைக்கிளைப் பாட்டிமேல் விடுகிறேன்…

—-

கார்த்திகை மாதம் தெருப்பூராவும் விளக்கு வரிசை. சைக்கிள் விட முடியவில்லை. எந்த விசேஷமென்றாலும் புது உடைகள் அணிந்து விடுகிறார்கள் பெண்கள். அப்போது முகமெல்லாம் சிரிப்பு வந்து விடுகிறது அவர்களுக்கு. ஆண்கள் அதே அழுக்கு பனியனுடன் திரண்டு குளித்த பெண்களுக்கு ஒத்தாசை செய்கிறார்கள். உயரங்களில் இருந்து விளக்கெடுப்பது, சுத்தமாய்த் துடைப்பது, எண்ணெய் விடுவது எல்லாம் இவர்கள். விளக்கை ஏற்ற மாத்திரம் பெண்கள்! ஏன் அப்படி ? தெரியவில்லை.

பிருந்தாவின் புதிய உடையைப் பார்க்க திடுமென்று ஒரு ஆசை. பசங்களானா அவள் நிச்சயம் அவனைக் காதலிப்பதாய்ச் சொல்கிறார்கள்… ரெண்டுங் கெட்டான் நிலை அவனுக்கு. ராத்திரி துாக்கம் போச்சு. தெருவே வெளிச்சச் செடிகளாய் முளைத்துக் கிடந்தது. தீபவரிசை. சில வீடுகளில் மெழுகுவர்த்திகள். மண் சட்டிகள். ஒளிக் கண்காட்சி. எதுக்கு இதெல்லாம் வைக்கிறார்கள். வாசலில் வைத்து விட்டு ஆண்களைக் காவல் போட்டு விட்டு பெண்கள் உள்ளே பொரி சாப்பிடுகிறார்கள்.

விளக்குகளின் அணிவரிசைக்குப் போட்டி போடும் பெண்களின் சிரித்த பல்வரிசை. வீட்டு வாசலில் பிருந்தா இல்லை. ஏமாற்றமாய் இருந்தது. எட்டிப் பார்த்தால்… அவங்கப்பா உட்கார்ந்திருந்தார். குப்பென்று ஆகிவிட்டது. திடாரென்று பிருந்தா சிறிய எண்ணெய்க் கொப்பரையுடன் வெளியே வந்தாள். மலைத்து நின்றான். பெரியாள் தினுசில் புடவை கட்டி – இது பெருந்திரட்சியாய் இருக்கே என பிரமிப்பாய் இருந்தது.

அவனைக் கவனியாமல் சரேலெனத் திரும்பியவள் பாவாடையில் தீ பற்றிக் கொண்டது. அவளுக்கு அது தெரியாது. சட்டென்று பாய்ந்து காலைப் பிடித்து அவளை நிறுத்தி, குனிந்து தீயை ஊதியணைத்தான். எதிர்பார்க்கவேயில்லை அவள்.

பதறிப் போனாள். பளாரென்று விட்டாள் ஒரு அறை – பிறகு விஷயம் புரிந்தது. ‘ஸாரி ‘ என்றாள். ஆ… சிரித்தாள்.

அவள் அப்பாகூட சிரித்தது நல்ல விஷயமாய் உணர்ந்தான். உள்ளே கூப்பிட்டுப் பொரி தந்தார்கள்.

‘நல்லாருக்கா ? ‘

‘எது ? அறையா ‘ என்றான் கன்னத்தைத் தடவிக் கொண்டே. சும்மா சொல்லக் கூடாது, புடவை அவளைப் பென்னம் பெரியவளாய்க் காட்டியது. பார்க்கவே பரவசம். அவள்முன்னே டவுசருடன் நிற்கக் கூசியது. பேன்ட் போட வேண்டும் இனி… மீசை வேண்டும். நல்லாருக்கா ?… என்றாள் அவள். எதைக் கேட்கிறாள் ?… புடவை கட்டியது அழகோ அழகு பிருந்தா.

‘பொறி பறக்க விட்டியே ஒரு அறை. இப்ப சமாதானப் படுத்த இந்தப் பொரியா ? ‘ என்றான்.

‘கவிதை எழுதறா மாதிரி நல்லாப் பேசறே… ‘ என்றாள் பிருந்தா.

எழுதிக் காட்றேண்டி, என வெளியே வந்தான்.

டேய் மாப்ள இது காதல்தான். கவிதை எழுதச் சொல்றாளே ?… உன்னைப் பத்தியே எழுதறேண்டி…

அவன் சிநேகிதர்களில் சேஷாத்ரி வீட்டில் விகடன் கல்கி குமுதம் எல்லாம் வாங்குவார்கள். அதைப் படித்துவிட்டு சேஷாத்ரி கவிதை என்று ஏதோ எழுதி இவனிடம் காட்டுவான். அதைப் பார்க்கவே என்னவோ போலிருக்கும். ‘போடா தமிழய்யா இம்சை போறாதுன்னு நீ வேற… ‘ என்பான். திடாரென்று சேஷாத்ரி அறிவாளியாகவும் குருவாகவும் பட்டது.

மொட்டைக் கவிதை சேஷாத்ரி தருவான் என்பது அப்போது தோணவேயில்லை.

—-

ராஜகோபால் சேஷாத்ரியை எதிர்பார்த்து மனம் படபடக்கக் காத்திருந்தார். மனசில் கவிதைப்புகை. மப்பும் மந்தாரமுமான மழைமூட்டம். பிருந்தாவைப் பற்றி அவர் நேரில் சொல்லியிருக்கலாம்… இத்தனை இரத்தத் துள்ளல், இன்பஹிம்சை, இருந்திருக்காது. அட மனம் சேஷாத்ரியின் நட்பு நாட்களை அசைபோட்டிருக்கும் அப்போது.

அதெல்லாம் சும்மா… பனியில்லாத மார்கழியா, என்கிற மாதிரி, பிருந்தா இல்லாத பள்ளிநாட்களா ?…

எவ்வளவு நல்லவன் அவன்… என் தலையில் குட்டு வைத்துவிட்டு அவன் அழ… அவன் அழக்கூடாது, என்பதில் கவனமாய்… வலியைப் பொறுத்துக்கொண்டு நான் சிரித்த காலங்கள். அவை காணாமல் போயின. அந்த நினைவுகளின் மேலே மழையும் வறட்சியுமாய் பருவங்கள் புரண்டு படுத்து செடியும் கொடியும் காடுமாய்ப் பெருகி விட்டன.

ஸாரி நண்பனே. வா… இன்றைய சந்திப்பில் நான் உன்னிடம், பிருந்தாவைப் பற்றி அல்ல… உன் நலம், உன் குடும்ப நலம் பற்றி விசாரிக்கிறேன்… அதுவே முறை…. மனசு எத்தனை கூவி என்ன ? உள்க்கன்றுக்குட்டி கயிற்றை அறுத்துக்கொண்டு பிருந்தாவிடம் கழுத்தை நீட்டுகிறதே தடவிக் கொடுக்கச் சொல்லி.

சேஷாத்ரியும் பேசிய சில நிமிடங்களில் தன்னைப் பற்றிச் சொல்லாமல், என்னைப் பற்றிக்கூட விசாரிக்காமல், பிருந்தாவைப் பற்றிச் சொன்னான்.

இப்போது எப்படி யிருப்பாள் தெரியவில்லை. அந்தக்கால அழகின் மிச்சங்களைத் தேட வேண்டியிருக்குமா ? அல்லது அவை அழியாத அடையாளங்களாய் ஒட்டியிருக்குமா தெரியவில்லை. சாயம் பூசாமலே அந்த உதட்டுச் சிவப்பு கிறங்கடிக்கும். சாந்துப்பொட்டு வைப்பாள். டவுண்பஸ்ஸில் நிற்கும் பயணிகளுக்கான கைப்பிடி போல ஜடையை மடித்துக் கட்டியிருப்பாள். அத்தனை நீளக் கூந்தலே இந்நாட்களில் அரிதாகி விட்டது. ஒரு கவிஞன் சொன்னான் – அந்தக்காலப் பெண்ணின் கூந்தல் அவிழ்த்துவிட்டால் தரைவரை நீளும். இந்தக்காலப் பெண் கூந்தலோ தரையிலேயே வீழும்… (செளரி!)

காலம் எல்லாரையும் மாற்றி விடுகிறது. அல்லது மாற்றிவிட முயற்சிக்கிறது. இருந்தாலும் என்ன, கனவுகளைத் தொற்றிக் கொண்டு புஃட்போர்டு பயணிகளாய் நாம் வாழ வேண்டியிருக்கிறது. எனக்கு உன் முகமோ… இன்றைய பிருந்தாவோ முக்கியமில்லை. என் பிருந்தா… அந்தக் காலத்திலேயே அவள் என் கனவுரு அல்லவா ? தேவதை அல்லவா ?

‘ஹல்லோ… ‘ என வந்தவரை அடையாளமே முதலில் தெரியவில்லை. ‘நீ மாறவே இல்ல ராஜு… ‘ என்று கைநீட்டினார் சேஷாத்ரி. ‘அதான் ராஜகோபால். அவன் மாறமாட்டான்… ‘ என்று சிரித்தார், சற்று கர்வத்துடன்.

‘பிருந்தாவும் மாறவேயில்லை… அதேமுகம். அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நாந்தான் கண்டுபிடிச்சிப் பேசினேன்… ‘

‘எங்க பார்த்தே ? ‘ என்றார் சிரிப்புடன்.

‘ஆஸ்பத்திரியில் ‘ என்றார் சேஷாத்ரி.

(தொடரும்)

sankarfam@vsnl.net

Series Navigation