பரிவிற் பிறந்த இலக்கியம்

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

ம.இலெ.தங்கப்பா


பரிவிற் பிறந்த இலக்கியம்
ம.இலெ.தங்கப்பா

சோவியத்து வெளியீடான ஒரு பாடல்நூலைப் புரட்டிக்கொண்டிருந்தேன். பக்கத்துக்குப் பக்கம் எதிர்எதிர் மூலைகளில் சின்னஞ்சிறு கோட்டுப் படங்கள். ஒரு பூ. ஒரு பூங்கொத்து, ஓர் இலை. ஒரு வண்டு. ஓர் எறும்பு. ஒரு வண்ணத்துப்பூச்சி, ஒரு தவளை. ஒரு சுண்டெலி. ஒரு பூனை. ஒரு பொம்மை. சின்னஞ்சிறிய கோடுகளில் மிக அழகான உயிர்த்துடிப்பான படப்பிடிப்புகள். ஒரு விரல் அகல இடத்தில் அவ்வளவு உயிர்ப்பு நிறைந்த படங்களை அந்த நூலில்தான் பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன். எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத படங்கள். ஓவியரின் கைத்திறமை மட்டும் அங்கில்லை. பொருள்களின்மேல் அவருக்கிருந்த அன்பு அப்படங்களில் ஊடுருவி நின்றது என்பேன்.

அழியும் பொருள்களை அழியாமல் நிலைப்படுத்துகின்றன ஓவியங்கள். அவை கோட்டோவியங்களானாலும் சொல்லோவியங்களானாலும் விளைவு ஒன்றுதான்.

பாவண்ணன் “துங்கபத்திரை” என்ற தம் கட்டுரைநூலின் முன்னுரையில் தேவதேவன் எழுதிய ஒரு பாட்டுவரியைக் குறிப்பிட்டு “மனித குலத்துக்கு இப்படி ஏராளமான ஓவியங்களைத் தீட்டிக் காட்டுவதுதான் வாழ்வில் இலட்சியமோ என்று எண்ணிப் பார்க்கவும் தோன்றுகிறது” என்று கூறியிருப்பதற்கிணங்க அக்கட்டுரைகளில் தாம் பார்த்த மாந்தர்களைப்பற்றியும் காட்சிகளைப்பற்றியும் அழகிய சொல்லோவியங்களைத் தீட்டியுள்ளார். கலைஞன் அல்லது படைப்பாளன் அழிந்துபோகும் வாழ்க்கைக்கூறுகளைத் தன் படைப்புகளின் வாயிலாக அழியாமல் நிலைப்படுத்திச் செல்கின்றான். நிகழ்காலத்தைப் பெயர்தெடுத்து வருங்காலத்துக்கு வழங்குகின்றான். பாவண்ணனிடம் அத்தகைய படைப்பாளனைக் காண்கின்றோம். எழுதுவதற்குப் பொருள் தேடித் திரியும் ஒரு தொழில்முறை எழுத்தாளனாக இல்லாமல் உடனறை மாந்தரை நேசிக்கும் ஒரு மாந்தராக நின்று இக்கட்டுரைகளை வரைந்துள்ளார் பாவண்ணன்.

மாந்தநேயமும் பரிவுணர்ச்சியுமே நூல்முழுதும் பொங்கித் ததும்பி நிற்கின்றன. பரிவிற் பிறந்த இலக்கியம் என்று இதனைக் கூறலாம். வாழ்க்கையில் எவ்விதத்திலும் பங்கேற்காமல் விலகிநின்று செய்திகளைக் கூறிச் செல்பவர்கள் நடுவில் மாந்தர்களோடும நிகழ்வுகளோடும் உள்ளங்கலந்து ஊடுபுகுந்து தமக்கோர் உறவை ஏற்படுத்திக் கொள்கின்றார் பாவண்ணன். அதனால்தான் புதிதாக கட்டப்பட்ட வீடு யாaரோ கட்டியதாக இருந்தாலும் அவர் உள்ளத்தில் அது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இடிக்கப்படும் வீடுகளும் அவர்க்குள் அவலத்தை எழுப்பி அவர் அங்கு நிற்கமுடியாமல் செய்துவிடுகின்றன. வீட்டை விற்றவர் அல்லது விட்டுச் செல்வபரின் மனம் படாத பாடுபட்டுத் துடிக்கும் வலியைத் தாமும் உணர்ந்து துடிப்பது பாவண்ணனால்மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது. இந்த உறவுதான் ஓர் உண்மைக்கலைஞனை நமக்குத் தருகின்றது என்று நினைக்கின்றேன்.

மாந்தர் வாழ்க்கையின் பேரவலம் என்று நான் உணர்வது என்னவென்றால், எல்லாவற்றின் நடுவிலும் இருந்துகொண்டு, எல்லாவற்றின் பயனையும் நுகர்ந்துகொண்டு, எவற்றோடும் உறவில்லாமலேயே வாழ்ந்து மடிந்துபோவதுதான். பயன் நுகர்தலுக்கம் பயன் வழங்குவதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது.

பயன் நுகர்வதற்கு உறவு தேவையில்லை. யாரிடத்தும் எதனிடத்தும் எந்த ஈடுபாடும் கொள்ளாமல் நமக்கு என்ன தேவையோ அதைமட்டுமே எடுத்துக்கொள்ளலாம். இப்படி வாழ்பவன் வாழ்வுடன் பிணைக்கப்படாமலேயே வாழ்ந்து மடிகின்றான். ஆனால் பயன் வழங்குபவன் அப்படி வாழமுடியாது. ஏனெனில் உறவுதான் பயனை வழங்கச் செய்கின்றது. வாழ்க்கையை நேசிக்காதவன் எப்படி வாழ்க்கைக்குப் பயனை வழங்கமுடியும்?

வாழ்க்கையை நேசிப்பவன், வாழ்க்கையோடு ஆழ்ந்த உறவு கொள்பவன்தான் உண்மைக்கலைஞன். படைப்பாளன். உலகைத் தாங்கி நிறுத்தும் உண்மை மாந்தனும் அவனே.

அவ்வையார் தன் பாட்டு ஒன்றில் “சாதி இரண்டொழிய வேறில்லை என்றும் இட்டார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர்” என்றும் கூறுகிறார். வெறும் சாதி வேறுபாட்டைக் கடிய வந்த பாடலைப்போல் இது தோன்றினாலும் மாந்தரைப்பற்றிய மிகப் பேருண்மையை இப்பாடல் எடுத்துரைக்கிறது. மாந்தர் எத்தனை ஆயிரம் பிரிவுகளைக் கொண்டிருந்தாலும் மனநிலைப்படி அவர்களை இரண்டே பிரிவில் அடக்கிவிடலாம். ஒரு பிரிவினர் இடுவோர். மற்றொரு பிரிவினர் இடாதோர். இரண்டும் இரண்டு தனித்தனி மனநிலைகள். வாழ்க்கையின் தனித்தன்மையைத் தீர்மானிப்பவை இவ்விரண்டு மனநிலைகளே. இம்மனநிலைகளின்படி ஒருவன் கொடுப்பவன். மற்றவன் பெறுபவன். பெறுபவனால் உலகுக்குப் பயனில்லை. கொடுப்பவனே உலக மலர்ச்சிக்கு உதவுகிறான். கொடுத்தலினாலேயே மாந்தரோடு மாந்தருக்கு நல்லுறவு அமைகின்றது. உலக மலர்ச்சிக்குப் பயன்படுதலே உண்மைக்கலைஞனின் பணியும் ஆகும்.

எத்தனையோ கலைஞர்கள் இருக்கத்தான் இருக்கிறார்கள். வாழ்க்கையோடு உறவில்லாமல், வாழ்க்கைமீது நேயம் இல்லாமல் தங்கள் அறிவையும் திறமையையும் முதலீடாக்கிப் பெறவேண்டியவற்றைப் பெற்றுக்கொள்பவர் இவர்கள். ஆயினும் கலைஞர் என்ற பெயரால்தான் இவர்களும் அழைக்கப்படுகின்றனர்.

ஒரு செய்பொருளுக்கும் அதன் போலிக்கும் அதிகம் வேறுபாடு இல்லைதான். ஒரு செய்பொருள் அல்லது கருவி தரும் பயனை அதன் போலியும் தருகின்றது. இருந்தாலும் நுண்மை என்று வருகையிலும் நீடித்து நிற்பது என்று வருகையிலும் போலி பின்தங்கிவிடுகிறது.

பெறுபவன் கலைஞன்போல் காட்சி அளித்தாலும் அவன் கலைஞன் ஆகான். தன்னை உருக்கி ஊற்றி வாழ்வுக்கு வழங்குபவே கலைஞன்.

கலைஞன் இப்படி வாழ்பவன் மட்டுமல்லன். மாந்தரையும் இப்படி வாழவைப்பவனே கலைஞன். உலக மலர்ச்சிக்கு அவன் துணைபுரிவது இப்படித்தான்.

பயன் பெறுவதை அல்லது நுகர்வதை முதன்மையாகக் கொண்டிருக்கும் உலகம் அன்பையோ, நல்லுறவையோ மதிப்பதில்லை. உறவற்ற நிலையில் தான் வறட்டுத்தனம் பெருகுகின்றது. வன்முறை உருவாகின்றது. வாழ்க்கை எந்திரத்தனமாகவும் சடங்குகளாகவும் மாறுகின்றது. இதைத் தடுத்து நிறுத்துவதே படைப்பாளனின் பணியாகும். படைப்பாளன் என்பவன் உறவு கொள்பவன்மட்டுமல்லன். மாந்தரிடையே இந்த உறவை உருவாக்குபனாகவும் இருக்கின்றான்.

தலைகீழாக ஓடிக்கொண்டிருக்கும் உலகை இட்டுக்கட்டிச் செய்யும் எந்தச் செயலாலும் நேர்செய்யமுடியாது. அறிவைக்கொண்டும் அறிவியலைக் கொண்டும் தொழில்நுட்பத்தைக்கொண்டும் உலகைத் திருத்தமுடியாது. புரட்சிகளைக் கொண்டும் அமைப்புமாற்றங்களைக் கொண்டும் நாம் கனவு காணும் மலர்ச்சி மிக்க ஒரு குமுகாயத்தை ஒருநாளும் உருவாக்கமுடியாது.

மாந்தன் அன்புடையவனாக, நல்லவனாக இருப்பது ஒன்றுதான் மலர்ச்சிக்கான வழி. பிறர்மீது பரிவு, இரக்கம், ஈடுபாடு, கனிவு நெகிழ்வு அனைத்துமே இருள்நடுவே ஏற்றிவைக்கும் வெளிச்சங்களைப் போன்றவை. தன் படைப்புகளின்வாயிலாக இந்த நெகிழ்வுநிலையை ஏற்படுத்துவதே கலைஞனின் வெற்றி.

பாவண்ணனை இப்படித்தான் நான் பார்க்கின்றேன். எல்லாரோடும் எல்லாவற்றோடும் இனிய உறவு ஏற்படுத்திக்கொள்பவராகவும், படிப்பவர் நெஞ்சில் இந்த உறவை உருவாக்குபவராகவும் பார்க்கின்றேன்.

இலங்கைப் பாவலர் வில்வரத்தினத்தையும் அவர் வாழ்வில் நேர்ந்த பேரவலத்தையும் மறக்கமுடியாத நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கின்றார். கனவுகளை முன்வைத்து முன்னேற்றப் பாதையை நோக்கும் இளைஞர்களையும் தடுமாற்றத்தோடு அவர்களுக்கு வழிவிடும் பெற்றோர்களையும் நிறைக்கல்லைக் கொண்டு நிறுத்துச் சரி தவறு பாராமல் பரிவுக்குரியவர்களாகப் படைத்துக் காட்டி நமக்கும் அவர்கள் மீது பரிவை ஏற்படுத்திவிடுகின்றார்.

துங்கபத்திரை ஆற்றின் காட்சியும் அணையில் நீர் சீறிப் பாயும் அழகும் காட்சியில் மூழ்கி இரண்டற்று நிற்கும் படைப்பாளியின் உள்ளமும் இனிய படப்பிடிப்புகளாகத் திகழ்கின்றன. நாமும் பாவண்ணனுடன் சேர்ந்து ஆற்றின் கரையில் நிற்பதுபேன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. ஆற்றைக் காணவந்த குழந்தைகளிடத்திலும் அழைத்துவந்த ஆசிரியரிடத்திலும் புதைந்துகிடக்கும் இயற்றை உள்ளங்களைக் கண்டுபிடித்து நமக்குத் தருகிறார்.

வறண்டுகிடந்த ஏரியையும் அதற்குள் சென்று விறகு வெட்டிப் பிழைப்பு நடத்தும் பெண்களையும் குறிப்பாக லட்சுமி சின்னம்மாவையும் படைத்துக் காட்டும் உள்ளத்துக்குக் கதை, கட்டுரை என்ற வேறுபாடு இல்லை.

ஒரு காலத்தில் செழுமையாக இருந்த சுற்றுச்சூழலை அழித்துத் தன்னலப் பிடிப்புகளை அதன் மீது நிறுவியிருப்பவர்கள் மீது பாவண்ணனுக்கு ஏற்படும் சினம் படிப்பவர் உள்ளத்திலும் சினத்தை எழுப்புகிறது.

நெருக்கடிமிக்க இன்றைய வாழ்க்கையில் ஆளை இழுத்து மாட்டிவைக்கும் எந்திரச் சுழற்சியில் அகப்பட்டு மாந்தத்தன்மையை இழந்து போகிறவர்களையே மிகுதியாகக் காண்கின்றோம். எழுத்தில் மூழ்கி, விருதுகளுக்கு ஏங்கி மாந்தத்தன்மையை இழந்து போகிறவர்களுக்குத் தமிழ்நாட்டில் பஞ்சமில்லை. அப்படியின்றி தம் மாந்தத் தன்மையையே எழுத்தாக மாற்றிப் படிப்பவர் உள்ளங்களிலும் அம்மாந்தத்தன்மை விழிப்புற்றெழச் செய்வதே பாவண்ணனின் வெற்றி என்று நினைக்கின்றேன்.

இறக்கும்வரை வாழ்வைப் பெருஞ்சுமையாகவே தாங்கிவாழும் எளிய சிற்று\ர்ப் பெண்களை அவலத்துக்குள் மூழ்கவைக்கும் இன்றைய குமுகாய அமைப்பின்மீது நம்மை அறியாமலேயே நாம் சீற்றங்கொள்ள வைக்கிறார் பாவண்ணன்.

நிலக்கடலை விற்கும் முத்துசாமி, அல்சூர் குப்பம்மா, சொர்க்கத்தின் நிறம் என்ற ஈரானியத் திரைப்படத்தில் வரும் முகம்மது என்ற சிறுவனின் தந்தை- இவர்களின் குறைகடந்து இவர்களை நேசிக்காமல் நம்மால் இருக்கமுடியாது.

பொதுவாகக் குமுகாயச் சீர்கேடுகளில் பார்வையைச் செலுத்தும்போது நமக்குச் சீற்றம் மிகுகின்றது. உணர்வுகள் கடுமையாகின்றன. சீர்கேட்டை எதிர்ப்பதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்துகின்றோம். நாளடைவில் வெறுஞ்சீர்திருத்தவாணராக மாறி இயற்கை உணர்வையே இழந்துபோகின்றோம். இத்தகைய நிலைமை எழுத்தாளர் பலருக்கு ஏற்படுகின்றது. ஆயினும் பாவண்ணன் இந்த நிலைமைக்கு ஆளாகாமல் தப்பித்துவிடுகின்றார். அவர்தம் பாட்டுணர்வுதான் அவரைக் கைப்பிடித்துத் தூக்கியிருக்கவேண்டும்.

பாவண்ணன் கட்டுரைகளும் சிறுகதைகளும் மிகுதியாக எழுதினாலும் பாடல் எழுதுவதை விட்டுவிடவில்லை. அடிப்படையில் ஒரு பாவலராகவே காட்சியளிக்கின்றார். இந்தப் பாட்டுணர்வுதான் துங்கபத்திரையையும் அருவி என்னும் அதிசயம், பச்சை நிறத்தில் ஒரு பறவை என்ற கட்டுரைகளையும் தந்துள்ளது. ஆற்றின் அழகில் பாவண்ணன் ஈடுபடுவதைப் பாருங்கள்.

“ஆசையோடும் தாகத்தோடும் காணும்போதெல்லாம் ஆற்றின் புன்னகையால் மனம் நிரம்பித் தளும்பும். உள்ளங்கால்கள் வழியே உடல்முழுக்க ஊர்ந்து படரும் சாரலில் நாம் உருகிவிடுவதுபோலத் தோன்றும். மெல்ல அமிழ்ந்து உட்காரும்போதும் தன் மடியில் ஏற்று அமரவைத்துத் தொட்டுத்தொட்டு நகரும்போதும் எழும் புல்லரிப்பும் பரவசமும் எழுத்தில் வடிக்கமுடியாத பேரனுபவம். எல்லாத் தடைகளையும் உடைத்து அது தன்னோடு நம்மையும் இணைத்துக் கரைத்துக்கொள்ளும் ஆறு வேறு, நாம் வேறு என்கிற எண்ணமே எழுவதில்லை.”

இவ்வாறு காணும் காட்சியில் கரைந்து நிற்கும் பாவண்ணனின் தன்மையே கட்டுரைகளிலும் ஊறிநின்று முன்பு குறிப்பிட்டதுபோல வாழ்க்கையில் பங்குபெறும் தன்மையைக் கட்டுரைகளுக்கு வழங்கியிருக்கின்றது.

அருவி என்னும் அதிசயத்தைக் கண்டு கரைந்து நிற்பதும் பச்சை நிறப் பறவையை மீண்டும் காண்பதற்காக அவர் தவிக்கும் தவிப்பும் ஒரு குழந்தையையே நம் கண்முன் கொணர்ந்து நிறுத்துகின்றன. இயற்கைப் பொருள்களைக் கண்டு வியப்படையும் தன்மை குழந்தைப் பருவத்துக்கு உரியது. வளர்ந்து பெரியவர் ஆகஆக அதை இழக்கத் தொடங்குகிறோம் என்று ஆங்கிலப் பாவலர் வேர்ட்சுவொர்த்து கூறுவார். அவ்வாறு இழந்துபோகாமல் வியப்படையும் தன்மையைக் கடைசிவரை தன்னோடு கொண்டிப்பவன் எவனோ அவனே பாவலனாகின்றான். கதை எழுதினாலும் கட்டுரை எழுதினாலும் அவன் பாவலனே. அலுவல் அழுத்தங்களாலும் பிற உலகியல் சூழல்களாலும் மழுங்கி மரத்துப் போகாமல் எப்போதும் உயிர்ப்போடு இருந்து அவ்வுயிர்ப்பைப் படைப்புகளில் ஏற்றி வழங்கும் இயற்கை உள்ளத்தைப் பாவண்ணனிடம் காண்கின்றோம்.

நம் எழுத்தாளர்கள் பலர் மிகவிரைவில் தம்முடைய வியப்புணர்வையும் பரிவுணர்ச்சியையும் உதறிவிட்டு எழுத்து விற்கும் வணிகராகிவிடுகின்றனர். எதை எழுதினால் விற்கும் என்று தெரிந்துகொண்டு மக்கள் மனத்தை எளிதில் அடிமைப்படுத்தும் கவர்ச்சித்துறைகளோடு தம்மைக் குறுக்கிக்கொள்கின்றனர். இந்த நோயின் முற்றி முதிர்ந்த நிலைதான் இன்றைய தமிழ்த் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் மக்களுக்கு வழங்கவேண்டிய பலதுறைக் கல்வியும் மக்கள் உள்ளத்தில் அண்டை மாந்தர்மீது பரிவை உண்டாக்குவதற்கான வாழ்க்கைச் சூழல்களும் காலங்காலமாக மேல்தட்டுக்காரர்களாலும் கொள்ளை முதலாளிகளாலும் சுரண்டப்பட்டுவரும் ஏழை எளிய மக்களின் அவலம் மிகுந்த வாழ்வும் எவ்வளவோ இருக்க அந்தத் திசையிலேயே பார்வையைச் செலுத்தாமல் மக்கள் கோபமோ குமுகாய அக்கறையோ கடுகளவும் இல்லாமல் காசடிப்பதே குறியாகக் கொண்டு மேல்தட்டுக் கொள்ளைப் பணக்காரரின் கோணல் வாழ்க்கையையே மிகைப்படுத்திக் காட்டியும் நம்ப முடியாத, நடக்கமுடியாத, பொய்யான, செயற்கையான வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் மாந்தரின் கீழ்மை உணர்ச்சிகளையும் கருப்பொருளாகக் கொண்டும் உருவாக்கப்படும் தமிழ்த்திரைப்படங்களும் கதைத்தொடர்களும் இன்று ஊடகங்களையே தம் கைக்குள் சிறைப்படுத்தி வைத்திருக்கின்றனர். படைப்பாளர் கையிலிருந்து கலை வாணிகர் கைக்கு மாறிப்போனதுதான் இதற்கெல்லாம் காரணம். இவற்றுக்கே பழகிப்போய் சதையும் குருதியுமான, வாழ்க்கையின் வார்ப்பு வடிப்புகளான மக்கள் இருப்பதையே நாமும் மறந்துபோகின்றோம். அப்படி மறந்துபோன மக்களை நம் முன் கொண்ர்ந்து நிறுத்துகின்றார் பாவண்ணன். கதைமாந்தர்களைவிட இக்கட்டுரை மாந்தர்கள் இன்னும் உயிர்ப்புடன் உலாவருகின்றனர்.

எரிந்த வீடும் எரியாத நினைவும், புதிய பெற்றோர்கள், வாழ்க்கை என்னும் சுமை, மகிஜா என்றொரு மனிதர், ஆறுதல், பார்வையும் பரிவும் போன்ற கட்டுரைகளில் நமக்கு அறிமுகப்படுத்தப்படும் மாந்தர்களின் அவலம் நிரம்பிய வாழ்க்கை எவ்வளவு உண்மையானது. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு குறும்படமாக ஆக்கப்படுவதற்கான செய்திகளைத் தன்னுள் தாங்கி நிற்கின்றது. நெஞ்சைப் பிணிக்கும் இத்தகைய வாழ்க்கைகளைத் தேடிப் போகாமல் காகிதப் பூக்களைப்போல வெறும் செயற்கை மாந்தர்களை உருவாக்கும் திரைப்படங்கள் வாழ்க்கையினின்று எவ்வளவு தொலைவு விலகி நிற்கின்றன. அவற்றைத் தொலைவில் எறிந்துவிட்டு யாராவது இந்தப் பக்கம் திரும்பமாட்டார்களா என்ற ஏக்கத்தையும் பாவண்ணன் கட்டுரைகள் எனக்குள் ஏற்படுத்துகின்றன.

கலை வாழ்க்கை ஒருபுறம் இருக்கட்டும், நடைமுறை வாழ்க்கையிலும் ஏழை எளிய மக்கள் புறந்தள்ளப்படுகின்றனர். வாழ்க்கை முழுமையையும் மேல்தட்டுக்காரரே அடைத்துக்கொள்கின்றனர். வாய்ப்பு வசதிகளை அவர்களே பெறுகின்றனர். நாட்டின் செழுமையாக இடங்களிலெல்லாம் அவர்களுக்குத்தான் சொந்தம். அரசு வழங்கும் சலுகைகள், வரிவிலக்குகள் உயர்மட்டப் பெரும்பதவிகள் அவர்களுக்குத்தான் சொந்தம். அவர்கள் மண்ணின் மக்களைப் புறந்தள்ளிவிட்டு தங்கள் சொகுசு வாழ்க்கையை நிலைநிறுத்திக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதொரு சூழல் இன்று உருவாகியுள்ளது. அரசியல் காரர்களும் அவர்கள் திறந்து வைக்கும் சிறப்புப் பொருளியல் மண்டலக்கொள்ளையரும் எளிய மக்களை வெளிப்படையாக உதறி எறியத் தொடங்கிவிட்டனர். தாராளமயம், விரிந்த உலகப் பார்வை, தொழில்வளர்ச்சி நாகரிகம் என்ற பெயர்களில் புதிய முதலாளிகள் புதிய முறைகளில் மக்களைச் சுரண்டுகின்றனர். இந்நிலையை மிக ஆழமாக உள்வாங்கிக் கொண்டுள்ளார் பாவண்ணன். இப்படி புதிததாக உருவாகியுள்ள வகுப்பைச் சேர்ந்தவர்கள்தாம் பார்வையும் பரிவும் என்ற கட்டுரையில் வரும் இரண்டு பெரியவர்கள் ஒருவர் பிச்சைக்காரரைத் திட்டி விரட்டுவதே தொழிலாகக் கொண்டவர். மற்றொருவர் குடிசைவாழ் தொழிலாளர்கள் நாகரிகக் குடியிருப்புக்குள் உதவிகேட்டுக்கூட வராமல் தடுத்தவர்.

படித்தவர் கும்பலும் தொழில்நாகரிகமும் வளரவளர ஏழைஎளிய மக்களின் வாழ்வுரிமையே பறிபோகின்றது. சொந்த மண்ணிலேயே அவர்கள் கூலிக்காரர்களாக கையேந்தி நிற்கின்றனர். நகரங்களை ஒட்டி அமைந்த சிற்று\ர்களுக்குள்ளும் அவற்றின் புறப்பகுதிகளிலும் புதிய பணக்காரர்கள் புகுந்துகொள்கின்றனர். தோப்புகளையும் திறந்த வெளிகளையும் மக்களுக்கே உரியவையாக இருந்த புறம்போக்கு நிலங்களையும் வீட்டுமனைகளாக்கி விற்கும் நிலை ஏற்ப்ட பின், காலங்காலமாக அத்தோப்புகளையும் திறந்தவெளிகளையும் தாங்கள் ஒதுங்கப் பயன்படுத்திக்கொண்டிருந்த குடிசை வாழ்மக்களுக்கு இன்று வீட்டைய,ம் தெருக்களையும் தவிரக் காலாற நடப்பதற்குக் கூட இடமில்லாமல் போய்விட்டது.

எங்கள் குடியிருப்பு உருவாகிக்கொண்டிருந்த தருணத்தில் காலையில் எழுந்து பார்த்தால் தெருக்களின் இரண்டு ஓரங்களிலும் திறந்தவெளிக் கழிப்பறைகளாகக் காட்சியளிக்கும். அருகிலிருந்த குப்பத்து மக்களின் வேலை அது. குடியிருப்போர் சங்கம் அமைத்து, இதைத் தடுத்து நிறுத்த நகராட்சிக்கு விண்ணப்பம் விடுக்க என் கையெழுத்தைக் கேட்டபொழுது நான் மறுத்துவிட்டேன். “குப்பத்து மக்கள் எந்தத் தப்பும் செய்யவில்லை. நாம்தாம் அவர்கள் காலங்காலமாக புழங்கிவந்த இடங்களைக் கைப்பற்றிக்கொண்டு அவர்கள் ஒதுங்க இடமில்லாமல் செய்துவிட்டோம். நமக்குக் கழிப்பறை வசதி உள்ளது. அவர்கள் எங்கே போவார்கள்?” என்றேன். சங்கத்தினர் என்னோடு புலந்துகொண்போய்விட்டார்கள்.

இன்று இந்திய நாடு முழுவதும் வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரால் மிகப்பெரிய சுரண்டல் நடக்கின்றது. ஏழை மக்களின் சிறு தொழில்களும் வாழ்விடங்களும் பணக்காரர்களால் பறித்துக்கொள்ளப்படுகின்றன. காந்தியடிகள் உப்புப்போராட்டம் நடத்தி ஏழைமக்களிடம் கொடுத்த உப்பு இன்று அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு டாட்டாவின் கையில் கொடுக்கப்பட்டிருப்பது போன்ற பெருங்கொடுமை உலகில் ஏதும் இருக்குமா?

இந்தச் சிக்கலை நன்கு புரிந்துகொண்டிருப்பவர் பாவண்ணன். பார்வையும் பரிவும் என்ற கட்டுரையில் ஏழை எளிய மக்களின் வாழ்வுரிமையையும் அதுபற்றிக் கவலைப்படாமல் தங்கள் மேம்பாட்டிலேயே கவனம் செலுத்தும் புதிய இனத்தையும் எதிர்எதிர் நிறுத்துகின்றார். மனச்சான்றுள்ள மக்களை எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய சிக்கல் இது. இதை நாம் எதிர்கொள்வது எப்படி? தாராளமயமாதல் என்று விட்டுவிடுவதா? அல்லது மண்ணின் மக்களாகிய ஏழைகளுடைய உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதா?

அப்பாவி எளியவர்களைப் பற்றிய பார்வையில் நமக்குள் ஒரு மாற்றம் நிகழ்வது இந்தக் காலத்தின் முக்கியத் தேவை என்று தோன்றுகிறது. ஏழைகளும் எளியவர்களும் எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே போகிற இன்றைய தாராளமய உலகத்தில் மனித குலத்துக்கே இத்தகு பரிவு மிகுந்த பார்வை தேவையாக உயள்ளது என்று கட்டுரையைப் பாவண்ணன் நிறைவு செய்கின்றார்.

பாவண்ணனின் மொத்த வடிவமும் இந்தப் பரிவுதான். இந்தப் பரிவு இல்லை என்றால் பாவண்ணன் இல்லை.

மாந்தர்பால் இரக்கத்தை, அன்பை, பரிவை, ஈகையைத் தட்டி எழுப்புவற்காகத்தான் இலக்கியம். வெறும் எழுத்தாளர்களால் அல்ல, பாவண்ணனைப்போன்ற பரிவுமிக்க, இயற்கையன்பும் குழந்தை உள்ளமும் படைத்த ஒவ்வொரு நொடியும் வாழ்வோடு உறவுகொள்கின்ற ஒருவராலேயே இத்தகைய இலக்கியத்தைப் படைக்கமுடியும். பாவண்ணன் காட்டும் இவ்வழியில் மற்ற எழுத்தாளரும் முன்வருவாராயின் எவ்வளவு நன்றாயிருக்கும்.

( 11.05.08 அன்று வளவனூரில் நடைபெற்ற “பாவண்ணனின் மூன்று புதிய நூல்கள்” ஆய்வுரை நிகழ்ச்சியில் நிகழ்த்திய சிற்றுரையின் விரிவான எழுத்து வடிவம் )

கணினியேற்றம் : ஜெயஸ்ரீ
jayashriraguram@yahoo.co.in

Series Navigation

ம.இலெ.தங்கப்பா

ம.இலெ.தங்கப்பா