பயணமும் பண்பாடும் (எனக்குப் பிடித்த கதைகள்-18 -சா.கந்தாசமியின் ‘தேஜ்பூரிலிருந்து.. ‘)

This entry is part [part not set] of 22 in the series 20020707_Issue

பாவண்ணன்


கல்லுாரிக் காலம். கணிதப் பிரிவின் மாணவனாக இருந்தாலும் பெரும்பாலும் நான் தமிழ்த்துறையிலேயே நேரத்தைக் கழித்து வந்தேன். தமிழ்த்துறையில் இருந்த ம.இலெ.தங்கப்பா எங்கள் மனம் கவர்ந்த ஆசிரியர். வாழ்வின் மீதும் இயற்கையின் மீதும் எங்கள் நாட்டம் பெருக முக்கியமான காரணமாக இருந்தவர். ஓய்வு நேரத்தில் தன்னைக் கவர்ந்த பழைய சங்கப் பாடல்களைச் சொல்வார். அவற்றின் பொருளை அவர் எப்போதும் உரையாசிரியர்களின் வரிகளிலிருந்து எடுத்துச் சொல்வதில்லை. தம் வாழ்விலிருந்தே சில சம்பவங்களைச் சொல்லி, அவற்றின் வழியாகப் பாடல்களைத் தொடுவார். எவ்வளவு உயிர்த்துடிப்பான சொற்களாக இருந்தாலும் நம் வாழ்வின் அனுபவத்தோடு ஒட்டாமற்போயின் அவற்றோடு உறவாடுவது சிரமம் என்பார் ஐயா.

ஒரு வெள்ளிக் கிழமை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். கலித்தொகை. அன்று நடத்திய ‘நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன் ‘ என்கிற வரி இன்னும் என் மனத்தில் மிதந்தபடி உள்ளது. உள்ளே தாய். வெளியே காதலன். அவளுக்குள்ளும் உள்ளே ஓர் எண்ணம். வெளியே ஒரு பேச்சு. ஒரு கணத்தில் மனம் எந்த அளவுக்கு நாடகமாடி விடுகிறது என்று வியப்பூறச் சொல்லிக் கொண்டே சென்றார். முடிவில் ‘நாளைய விடுமுறையை எப்படிச் செலவழிக்கப் போகிறீர்கள் ? ‘ என்று பொதுவாகக் கேட்டார். அதற்காகவே காத்திருந்த மாதிரி மதிவாணன் ‘துாக்கம்தான், வேறென்ன ? ‘ என்று உடனே சொன்னான். மற்றொருவன் புதிதாக வந்துள்ள திரைப்படத்தின் பெயரைச் சொன்னான். சத்தம் அடங்கிய பிறகு, ‘திருவக்கரைக்குச் சென்று வரலாமா ? ‘ என்று கேட்டார். ‘எப்படி ஐயா ? ‘ என்றான் மதிவாணன். ‘மிதிவண்டியில்தான் ‘ என்றார் ஐயா. முப்பது கிலோமீட்டர் தொலைவு. அது ஒரு சாகசப் பயணத்துக்கான திட்டத்தைப் போல இருந்தது எங்களுக்கு. உடனே எல்லாரும் தலையாட்டினோம். ‘வருபவர்கள் எல்லாரும் கையை உயர்த்துங்கள் ‘ என்றார். இருபது பேர் கையை உயர்த்தினோம்.

‘திருவக்கரையில் என்ன இருக்கிறது பார்க்க ? ‘ என்று கேட்டான் ஒருவன். ‘பல்லாண்டுக்காலம் மண்ணுக்கடியில் இருந்ததால் கல்லாகிப் போன மரங்களைப் பார்க்கலாம். இன்னும் சில ஆண்டுகள் இருந்திருந்தால் அவை வைரங்களாகவும் மாறியிருக்கலாம். இந்தியாவிலேயே இந்த அதிசயம் திருவக்கரையில்தான் உள்ளது ‘ என்றார் ஐயா. பிறகு, ‘பார்ப்பது முக்கியமல்ல, நாம் எல்லாரும் சேர்ந்து பயணம் செல்கிறோம். அது முக்கியம். அதை மட்டுமா பார்க்கப் போகிறோம் ? வழியில் எத்தனையோ சோலைகள், மரங்கள், கால்வாய்கள், ஏரிகள். எல்லாவற்றையும் பார்க்கலாம் ‘ என்றார்.

இரவு முழுக்கத் துாக்கமின்றி திருவக்கரைப் பயணத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன். அதிகாலையிலேயே எழுந்து மிதிவண் டியைத் துடைத்து எண்ணெய் போட்டுத் தயார்ப் படுத்தினேன். பழைய சோற்றைச் சாப்பிட்டு விட்டு சூரியன் உதித்ததும் ஐயாவின் வீட்டை நோக்கிக் கிளம்பி விட்டேன். அதுதான் எங்கள் சந்திப்புப் புள்ளி என்று ஐயா சொல்லியிருந்தார். நாங்கள் கிளம்ப வேண்டிய நேரம் ஏழுமணி. 12 பேர் மட்டுமே வந்திருந்தனர். கூட கால்மணிநேரம் பார்த்திருந்து விட்டுக் கிளம்பி விட்டோம்.

முதலில் ஊசுட்டேரி என்னும் ஏரியை அடைந்தோம். ஏராளமான கொக்குகள். கூட்டமாக அவை மேலெழுந்து பறப்பது கண்கொள்ளாக் காட்சி. ஒருவன் ‘குளிக்கலாமா ? ‘ என்றான். ஐயா தலையசைத்தார். உடனே எங்கள் படை ஏரிக்குள் இறங்கி விட்டது. மனத்துக்குப் பிடித்த இடங்களிலெல்லாம் நின்று நின்று பார்த்து உல்லாசமாகக் கழித்து விட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம். திருவக்கரைக்குச் சென்றதும் மதிய உணவு. ஐயாவே வீட்டில் தயாரித்துக் கொண்டு வந்தார். பிறகு ஊரைச் சுற்றினோம். அடித்த வெயில் ஒரு பொருட்டாகவே இல்லை. ஆனந்தமாகத் திரிந்தோம். கல்லான மரத்தின் துணுக்கை ஆளுக்கொன்றாக எடுத்து வைத்துக் கொண்டோம். மீண்டும் புதுவைக்குத் திரும்பும் போது இரவு தொடங்கி விட்டது. ஜிப்மர் தொடக்கத்திலேயே இருவர் விடை பெற்றுக் கொண்டனர். பிறகு தட்டாஞ்சாவடி நெருங்கியதும் மேலும் இருவர் விடை பெற்றனர். பாக்கமுடையான்பட்டு வந்ததும் ‘வரட்டுமா ? ‘ என்றபடி நால்வர் பிரிந்தனர். எனக்கு நெஞ்சை அடைப்பது போல இருந்தது. எதையோ இழப்பது போல ஒரு வலி தாக்கியது. ராஜாஜி நகரை அடைந்த போது எஞ்சியிருந்த சிலரும் விடை பெற்றுச் சென்று விட்டனர். நானும் ஐயாவும் தனித்திருந்தோம். யார் விடைபெறுவது என்று குழப்பம். என் முகத்தின் கவிந்திருந்த இருளைப் பார்த்து ஐயா பரிவுடன் விஷயத்தைக் கேட்டார். எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. பயணம் தந்த சந்தோஷத்தையும் பிரிவு தந்த துக்கத்தையும் குழப்பமாகச் சொல்லி முடித்தேன். அதைச் சரியாகப் புரிந்து கொண்டார் ஐயா. ஒரு தேநீர்க்கடையில் நின்று தேநீர் அருந்தியபடி ‘பயணத்தில் நாம் பல காட்சிகளைப் பார்க்கிறோம். பலவற்றைத் தெரிந்து கொள்கிறோம். நம் அனுபவம் பெருகுகிறது. பயணங்கள் கூடக்கூட நம் அனுபவமும் கூடுகிறது. வாழ்க்கையே ஒரு பயணம்தான் ‘ என்று சொன்னார். ‘அப்படியென்றால் இந்தப் பிரிவின் வலி ? ‘ என்று இழுத்தேன் நான். ‘இது தற்காலிகமானதுதான். பிரசவ வலி போல. நாளாக நாளாக மறையும். அனுபவம் ஒன்றே நிலைத்திருக்கும் ‘ என்று சொல்லி என்னைக் கிளம்பச் சொன்னார். வெகுதொலைவு வந்தபிறகு ஒருகணம் திரும்பப் பார்த்த போது ஐயா என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவருக்கும் வலித்திருக்கும் என்று நினைத்தபடி மிதிவண்டியை மிதித்தேன்.

இதற்கப்புறம் பல ஊர்களைச் சுற்றினேன். பல இடங்களில் அலைந்தேன். பல மனிதர்களைச் சந்தித்துப் பிரிந்தேன். எல்லாத் தருணங்களிலும் ஐயாவின் வாசகங்களை மனத்தில் அசைபோட்டேன். சா.கந்தசாமியின் ‘தேஜ்பூரிலிருந்து.. ‘ என்கிற கதையைப் படித்த போதும் இந்த வாசகம் நினைவுக்கு வந்தது. இளமைக் காலத்தில் பலமுறை படித்துச் சந்தோஷப்பட்ட கதை இது.

கதையில் தேஜ்பூரிலிருந்து ஒரு ரயில் கிளம்புகிறது. ராணுவத்தினருக்கான பெட்டியில் ஏராளமான வீரர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இரண்டொருவர் இறங்கிச் செல்கிறார்கள். பயணம் நீளநீள பலரும் இறங்கிச் செல்ல, கதையின் தொடக்கத்தில் நான்கே பேர் மட்டுமே அறிமுகமாகிறார்கள். ஏதோ தாமதத்தால் வண்டி ஒரு ஸ்டேஷனில் நிற்கிறது. நால்வரும் தன் வாழ்வின் இளமைக் காலத்தையும் பெண்களைப் பற்றியும் ராணுவ அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். பேச்சு. பேச்சு. ஓயாத பேச்சு. திருமணத்துக்காகச் செல்கிற ராமன் நாயரை வாழ்த்திப் பரிசளித்து விட்டு வண்டிக்கு மணியடித்ததும் கீழே இறங்கி விடுகிறார்கள். சிலமணிநேரம் தாமதித்த ரயில் மறுபடியும் ஓடத் தொடங்குகிறது.

கந்தசாமியின் எல்லாக் கதைகளுக்கும் உள்ள சிறப்பான அம்சம் அவற்றில் கச்சிதமாகப் பொதிந்திருக்கும் தொனிப்பொருள். அந்தத் தொனி இக்கதையிலும் பொதிந்துள்ளது. வாழ்க்கைப் பயணத்தின் படிமமாகவே தேஜ்பூரிலிருந்து புறப்படும் ரயில் பயணத்தைப் பார்க்கலாம். பலருக்கு வழிவிட்டு, பலரை இறக்கி, பலரை ஏற்றிக் கொண்டு நிற்காமல் பயணம் தொடர்ந்தபடி உள்ளது. மானுடப் பயணமும் இப்படித்தான். அனைவருமே இப்பயணச் சங்கிலியின் கண்ணிகள். அவ்வளவுதான். பிரிவு உண்டு. வலி உண்டு. ஆனால் அவை அனைத்துமே தங்கப்பா சொன்னதைப் போல தற்காலிகமானவை. இறுதியில் மனத்தில் எஞ்சுவது வலி அல்ல. அனுபவம் மட்டுமே. இந்த அனுபவத்தைப் பெறுவதற்காகவே வாழ்கிறோம். இந்த அனுபவத்தையே வாழ்க்கை அனுபவம் என்கிறோம். மண்ணுக்குள் புதைகிற மரங்கள் கனிப்பொருளாக மாறுவது போல மனத்துக்குள் புதைகிற அனுபவங்களே பண்பாட்டின் சாரமாக மாறுகின்றன.

****

அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளின் தொடக்கத்திலும் தமிழ்ச் சிறுகதையுலகில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. முதல் தலைமுறையினரான புதுமைப்பித்தன்,மெளனி, கு.ப.ரா, அழகிரிசாமி ஆகியோரின் எழுத்து முறையிலிருந்தும் இரண்டாம் தலைமுறையினரான சு.ரா., அசோகமித்திரன், ஜெயகாந்தன் ஆகியோரின் எழுத்துமுறையிலிருந்தும் முற்றிலுமாக மாறிய வேறொரு எழுத்துமுறை உருவாகத் தொடங்கிய காலமாக இக்கட்டத்தைக் குறிப்பிடலாம். இக்கட்டத்தின் முக்கியச் சிறுகதையாசிரியர் சா.காந்தசாமி. சாயாவனம் இவரது முக்கிய நாவல். நான்கு எழுத்தாளர்களின் பன்னிரண்டு கதைகள் அடங்கிய தொகுதி ‘கோணல்கள் ‘ என்கிற தலைப்பில் 1968ல் வெளிவந்தது. ‘தேஜ்பூரிலிருந்து ‘ சிறுகதை இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

***

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்