பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப்பூராடனார்

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

மு.இளங்கோவன் புதுச்சேரி,இந்தியா


தமிழ்மொழி தொன்மையான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டுள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை.சங்க நூல்கள்(இலக்கியம்,இலக்கணம்), அறநூல்கள், பக்தி நூல்கள்,காப்பியங்கள்,சிற்றிலக்கியங்கள்,உரையாளர்களின் உரைகள்,அகராதி நூல்கள், நாட்டுப்புறவியல் நூல்கள்,மொழிபெயர்ப்பு நூல்கள்,கலைக்களஞ்சிய நூல்கள்,படைப்பு நூல்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் என்று பல துறையாகப் பல்கிக் கிடக்கும் தமிழ்ப் பரப்பு முழுமைக்கும் பங்களிப்பு செய்தவர்கள் ஒரு சிலராகவே இருப்பார்கள்.

சிலர் சொல்லாராய்ச்சித் துறையில் மட்டும் ஈடுபட்டுத் தம் பேரறிவு கொண்டு உண்மையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.சிலர் இலக்கண நூல்களை மட்டும் நுண்ணிதின் ஆய்ந்து அறிஞர்களாக விளங்குவார்கள்.சிலர் பக்திப் பனுவல்களில் ஈடுபட்டு மெய்யுணர்ந்து மேன்மை பெறுவது உண்டு.சிலர் மொழிபெயர்ப்பு நூல்கள் வழியாகத் தமிழுக்கு ஆக்கம் தேடியிருப்பார்கள்.சிலர் நாட்டுப்புற மக்களின் பண்பாட்டை அறிவதில் தம் வாழ்நாள் ஆய்வைச் செலவிட்டிருப்பார்கள்.சுருங்கச்சொன்னால் சிலர் இயலிலும்,சிலர் இசையிலும்,சிலர் நாடகத்திலும்.இன்னும் சிலர் இப்பகுப்பில் அடங்காத பிற துறைகளிலும் தம் கால் பதித்து அறிஞர்களால் பாராட்டப்படுவது உண்டு.

மேற்குறித்த பல துறைகளிலும் சிறப்பாகப் பணிபுரிந்து இன்னும் முற்றாகத் தமிழகத்தாரால் அறியப்படாமல் இருக்கும் அறிஞர்களுள் இலங்கையில் பிறந்து இன்று கனடாவில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார்(பிறப்பு 13.12.1928) அவர்களின் படைப்புகளை யான் பதினேழாண்டுகளாக நன்கு அறிவேன். எண்பத்திரண்டு அகவையிலும் அடக்கமும் அமைதியும் கொண்டு தமிழுக்கு உழைப்பதைத் தம் கடமையாகக் கொண்டு இவர் இயங்குகிறார்.பதிப்புத்துறையில் இவருக்கு மிகப்பெரிய பட்டறிவு உண்டு என்பதாலும்,தாமே அச்சுக்கூடம் வைத்திருப்பதாலும் தமிழுக்கு ஆக்கமான நூல்களை எழுதி உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார்.தம் நூல்களைத் தமிழ் வழங்கும் உலகப் பல்கலைக்கழகம் சிலவற்றிற்கு அன்பளிப்பாக வழங்குவதைக் கடமையாகக்கொண்டவர்.கனடாவில் இவர்களின் அச்சகம் சிறப்புடன் செயல்படுகிறது.நூல்களும்,இதழ்களும் குறிப்பிடத்தகும் தரத்துடன் வெளிவருகின்றன்றன.

ஈழத்துப்பூராடனாரின் படைப்புகள் கண்டு உலகமே வியக்கும்படியாக இவர் தம் தமிழ்ப்படைப்புகள் உள்ளன.இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிப்பாளையம் என்னும் ஊரில் வாழ்ந்த சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மை அம்மாவுக்கும் மகனாகப் பிறந்த ஈழத்துப்பூராடனாரின் இயற்பெயர் க.தா.செல்வராசகோபால் என்பதாகும். தமிழ், ஆங்கிலம்,சிங்கள மொழிகளில் நல்ல புலமை பெற்றவர்.இவரும் இவர் துணைவியார் வியற்றிசு பசுபதி அம்மாவும் ஆசிரியர்களாக இலங்கையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்.இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு(1983 அளவில்) இவர்கள் கனடாவில் குடியேறியுள்ளனர்.

ஈழத்துப்பூராடனாரின் நூல்கள் பலவும் பலவகையில் தொகுத்தும் வகுத்தும் ஆராயத்தக்க பெருமைக்கு உரியன.ஒவ்வொரு படைப்புகளும் துறைவாரியாகவும் ஒட்டுமொத்தமாகவும் ஆய்வு செய்வதற்குரியன. இவரின் சிறப்பு காட்ட ஓரிரு நூல்களை இங்கு அறிமுகம் செய்ய நினைக்கிறேன்.முன்பே இவர் பற்றி எழுதியுள்ளேன்.

அண்மையில் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப் பேராசிரியரும் உலகின் மிகச்சிறந்த அகராதியியல் அறிஞருமாகிய வ.செயதேவன் அவர்கள் அறிஞர் ஈழத்துப்பூராடனாரின் நீரர நிகண்டு என்னும் அரிய நூல் பற்றிய வியந்து விரிவாக உரையாற்றினார்.இருபதாம் நூற்றாண்டு நிகண்டு நூல்களுள் நீரர நிகண்டுக்கு ஒரு சிறந்த இடம் உண்டு என்பது வ.செயதேவனாரின் புகழ்மொழியாகும்.அத்தகு நிகண்டு நூல் இருபதாம் நூற்றாண்டில் படைத்த பெருமைக்கு உரியவர் நம் ஈழத்துப்பூராடனார்.நிகண்டு நூல் படித்தவரிடம் வெகுண்டு பேசக்கூடாது என்பார்கள்.படைத்தவரைப் பற்றி என்னென்பது?

ஈழத்துப்பூராடனார் செய்யுள் நடையில் இந்த நிகண்டு நூலைப் படைக்க அவர் மனைவியார் விளக்கவுரை தந்துள்ளார்.மட்டக்களப்பில் பயிலப்பட்டுவரும் சொற்கள் மற்றப் பகுதியில் இருப்பவர்களுக்குப் புதியதாக இருப்பதுடன் மட்டக்களப்பில் இருப்பவர்களுக்கே பல தடுமாற்றங்களை உண்டு பண்ணுவதை உணர்ந்து ஆசிரியர் இந்த நூலை இயற்றியுள்ளார்.ஈழத்துப்பூராடனார் அவர்கள் 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை,

1.உயர்திணைப் பெயர் மஞ்சரி(11 செய்யுள்)
2.அஃறிணைப் பெயர் மஞ்சரி(12 செய்யுள்கள்)
3.தொழிற்பெயர் மஞ்சரி(26 செய்யுள்கள்)
4.இடப்பெயர் மஞ்சரி(9 செய்யுள்கள்)
5.கலாசாரச் சொல் மஞ்சரி(23 செய்யுள்)

என ஐந்து வகையாகப் பகுத்துத் தமிழுக்கு அணிசெய்யும் அழகிய நூலைத் தந்துள்ள இவர் பணியை எவ்வளவு போற்றினாலும் தகும்.வழக்கில் பொருள் விளங்காத சொற்களை நிலைப்படுத்தி விளக்கம் தந்துள்ளமை போற்றுதலுக்கு உரிய ஒரு செயலாகும். மட்டக்களப்பு மக்கள் நாளும் பயன்படுத்தும் சொற்கள் இந்த நூலில் உள்ளன.1984 இல் முதல்பதிப்பும்(48 பக்கம்),இரண்டாம் பதிப்பு 1987 இலும் வெளிவந்தது.மட்டக்களப்பிற்கு மாட்சி தரும் பாடும் மீன் என்னும் நீரர மகளிரின் பெயரில் இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்புச் சொல்வெட்டு என்னும் நூலில் அறிஞர் ஈழத்துப்பூராடனார் மட்டக்களப்பில் வழங்கும் சொற்கள் சில சங்க நூல்களில் வழங்குவதைச் சிறப்பாக ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.அவ்வகையில் கிளை,கல்லை வைத்தல்,தூளியில் வைத்தல், முல்லைக்காரன், குடிதை,கடுக்கன், வண்ணக்கர், கட்டாடி,கட்டாடியார்,பரிகாரி-பரிகாரியாள்,கலத்திற் போடல்,கால் மாறுதல்,பரத்தை என்னும் பன்னிரு சொற்களும் மட்டக்களப்புப் பகுதியில் எவ்வாறு வழக்கில் இருக்கின்றன என்று ஆராய்ந்துள்ளார்.

"இலங்கை மட்டக்களப்புப் பிரதேச வழக்குச் சொற்கள்-சொற்றொடர்களின் அகராதி" என்னும் ஈழத்துப்பூராடனாரின் மற்றொரு சொல்லாய்வுக்கு உரிய நூலும் குறிப்பிடத் தகுந்ததே ஆகும்.மட்டக்களப்பு மக்களின் பேச்சு வழக்கில் இருந்த அரிய சொற்களைத் தொகுத்து வழங்கியுள்ள பணியை இன்றைய இலங்கை மக்களின் இடப்பெயர்வுச்சூழலில் எண்ணிப்பார்க்கும்பொழுது ஒரு மிகப்பெரிய வரலாற்று அழிவிலிருந்து தமிழ்ச்சொற்களை மீட்ட பெருமைக்கு உரியவராக அறிஞர் ஈழத்துப்பூராடனார் நமக்கு விளங்குகிறார்.1984 இல் வெளிவந்த 60 பக்க நூலாக இது விளங்குகிறது.பாழடைந்த மண்டபங்கள் போலும் பெருநோயினுக்கு ஆட்பட்ட ஊர்போலும் ஆள்அரவமற்றுக் காட்சி தரும் இன்றைய இலங்கையில் தமிழர் வரலாறு துடைத்தழிக்கப்படுவதற்கு முன் இத்தகு நூல் வெளிவந்துள்ளமை வரலாற்றில் நினைக்கத் தகுந்த ஒன்றாகும்.

இலங்கை மட்டக்களப்பு மக்களின் நாட்டுப்புறக் கலைகள்,பழக்க வழக்கம் பண்பாடு உணர்த்தும் வகையில் பல நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார்.மட்டக்களப்பின் மகிழ்வுப்புதையல்கள், கிழக்கிலங்கை மக்களின் எழுதா இலக்கியங்கள்,வயல் இலக்கியம்,ஊஞ்சல் இலக்கியம்,வசந்தன்கூத்து ஒரு நோக்கு,மட்டக்களப்பு மாநில உபகதைகள் போன்ற நூல்கள் இவரின் நாட்டுப்புறவியல் துறைக்குரிய பங்களிப்பாக விளங்குகின்றன.

நாடகத் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் வகையில் பல நூல்களை ஈழத்துப்பூராடனார் வழங்கியுள்ளார். அவற்றுள் கூத்தர் வெண்பா,கூத்தர் விருத்தம்,கூத்தர் குறள்,கூத்தர் அகவல்,மட்டக்களப்பு மாநில இருபாங்குக் கூத்துகளை விளக்கும் வகையில் இவர் தந்துள்ள கிழக்கு ஈழமரபுவழி இருபாங்கு கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு,கூத்துக்கலைத் திரவியம்,வடமோடி கூத்து இலக்கணமும் மணிமேகலைக் காவியக் கூத்து இலக்கியமும்,கனடாவில் கூத்துக்கலையை வளர்த்த கல்கிதாசன், தென்மோடி இலக்கணமும் சிலப்பதிகாரம் கூத்திலக்கியமும்,கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை,இரு பாங்குக் கூத்துக்கலைஞன் எசு.ஈ.கணபதி பிள்ளை அவர்களின் கலையும் பணியும், மூனாக்கானா வளப்படுத்திய இருபாங்குக் கூத்துக்கலை என்னும் நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நாடகத் தமிழுக்கு ஆக்கம் சேர்ப்பனவாகும்.

மொழி பெயர்ப்பு வகையில் நம் ஈழத்துப் பூராடானார் அவர்கள் தம் பன்மொழி அறிவுகொண்டு பல நூல்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளார். கிரேக்க நாட்டின் ஆதி கவிஞரான ஓமரின் இலியட்,ஒடிசி காப்பியங்களைத் தமிழில் பாட்டுவடிவில் மொழிபெயர்த்துள்ளார்.மேலும் கிரேக்க நாடகங்கள் பலவற்றையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.இதுவரை கிரேக்க நூல்கள் தமிழுக்கு அறிமுகம் இல்லாத சூழலில் நம் ஈழத்துப்பூராடனாரின் பணிகள் போற்றத் தகுந்தன.

இலங்கையில் பிறந்து கல்விப் பணியாற்றி ஓய்வாக வாழ்க்கை வாழ வேண்டிய சூழலில் இனப்போராட்டம் காரணமாக இடம்பெயர்ந்தாலும் தம் தமிழாய்வுக்கு விடை தராத ஈழத்துப்பூராடனாரின் கிரேக்க இலக்கிய மொழிபெயர்ப்புகள் இங்குத் தனித்துச் சுட்டத்தக்கன.

ஈழத்துப்பூராடனாரின் கிரேக்க காவிய மொழிபெயர்ப்பு

அறிஞர் ஈழத்துப்பூராடனார் கிரேக்கமொழியில் ஓமர் எழுதிய ஒடிசி,இலியட்டு காவியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளமை போற்றத்தகுந்த பணியாகும்.கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்திற்குச் சென்றதை மூலமாகக் கொண்டு நம் ஈழத்துப்பூராடனார் தமிழில் செய்யுளில் தந்துள்ளார்.தமிழ்போல் உயரிய மொழியான கிரேக்க மொழி பாவியங்கள் அந்தமொழியின் இலக்கியச் செழுமையை உணர்த்துவதுடன் கிரேக்க மக்களின் கடல் பயண அறிவு,இசையறிவு,நாடக அறிவு என யாவற்றையும் காட்டும் ஆவணமாக உள்ளது.

2089(8355 பாடலடிகள்) செய்யுள் விருத்தங்களால் அமைந்தது ஈழத்துப்பூராடனாரின் ஒடிசி மொழிபயர்ப்பு நூலாகும்.ஈழத்துப் பூராடனார் தம் ஒடிசி மொழிபெயர்ப்பு பற்றி பின்வரும் சில குறிப்புகளைத் தம் நூலுள் வழங்கியுள்ளார்.

"1.இதனை நான் செய்யுள் விருத்தங்களாலேயே செய்துள்ளேன்.ஆனால் சொல்லப்படும் பொருட்களுக்கு ஏற்பப் பகுத்தபோது செய்யுள்களின் வரிகளின் தொடர்புக்காக இடைக்கிடையே விருத்தங்களின் அடிகள் பிரிந்துள்ளன….

2.ஹோமர் இதனை நாடக வடிவில் அமைத்தார்.நாடகத் தமிழிற்கு இம்முறை ஒத்துவரவில்லை.ஆதலால் இந்த விதிக்குச் சற்று விலகியுள்ளேன்.

3.கருத்துகளையுங் கற்பனைகளையும் அப்படியே எடுத்துக் கையாண்டுள்ளேன்.அதைவிட ஆங்காங்கு எனது சொந்தக் கற்பனைகளைத் தமிழ் மரபுக்கு ஏற்பப் புகுத்தியுள்ளேன்.

4.அநேகமான கிரேக்கப் பெயர்களைத் தவிர்த்து முக்கியமான பாத்திரங்களின் பெயரை மாத்திரம் எடுத்தாண்டுள்ளேன்…

11.இது ஒரு மொழிபெயர்ப்பு அல்ல.ஒரு தமிழாக்கம்.எனவே இவ்வாக்கத்தில் வரிக்கு வரி சமதையான சொல்லாட்சி இல்லாவிட்டாலும் கருத்தாட்சிக்கரைவு இல்லாத கட்டுக்குள் ஒடுக்கப்பட்டுள்ளது.

12.கிரேக்கப் பெயர்களைக் கதைத் தொடர்புக்காக ஆங்காங்கு கையாண்டுள்ளோம்.ஏனைய இடங்களில் மன்னன்,இளவரசன்,இராணி என்ற பொதுப் பெயரிட்டே வழங்கப்பட்டுள்ளது.மாறுவேடத்தில் ஞானத் தேவதையோ அல்லது பிறரோ வருமிடங்களில் அவர்களின் பாற்பெயர் கொண்டே குறிப்பிடப்பட்டுள்ளது." பக்கம்13,14)

ஓடிசு என்னும் வீரனைப் புகழ்ந்து பாட தெமட்டகொல் என்ற பாடகன் அழைக்கப்படான்.அவன் ஆமையோட்டுடன் எருமைக் கொம்பை இணைத்து அமைத்த பனிரெண்டு நரம்புள்ள வாத்தியக் கருவியை மீட்டி கவிபுனைந்து பாடினான் என்னும் குறிப்பைப் படிக்கும்பொழுது நமக்குப் பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் இயல்பாக நினைவுக்கு வருகின்றன.சிலம்பின் கானல்வரியும் கண்முன் நிற்கின்றது.

"போரிடு எருதின் கொம்பிற் பொன்னிற ஆமையோட்டு
தாரிய குடமுந் தண்டும் தகைபெறு நரம்புஞ் சேர்ந்த
சீரிய யாழின் ஓசை செகமெலாம் பரவுமாறு
பாரினில் ஓடி சென்னும் பலவான் திறாயின் போரில்
ஆற்றிய தீரமெல்லாம் அசைமிகு சொல்லென் வண்ணந்
தீற்றிய சித்திர மாகத் தெளிவுற வரைந்து காட்ட
காற்றெனும் பெண்ணா ளஃதை க் காதெனும் கிண்ணத் தூற்ற
மாற்றெதுஞ் செய்யா ராகி மக்கள் மகிழுவுற் றாரே"(ஒடிசி,பக்கம் 132)

என்று தமிழாக்கம் என்று கூற முடியாதபடி இயல்பான தமிழ் நடையில் வரைந்துள்ள பாங்கு எண்ணி மகிழ வேண்டியுள்ளது.

ஒடிசி காப்பியம் கிரேக்க மக்களின் வாய்மொழிக்கதைகளைக் கேட்டு ஓமரால் கி.மு.4ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டதாக குறிப்புகள் கிடைக்கின்றன.சாவாத பாடல்களைத் தந்த தமிழ்ப்புலவர்களின் தெளிவான வரலாறுகள் கிடைக்காமல் போனதுபோல் ஓமரின் வரலாறும் நமக்குத் தெளிவாகக் கிடைக்க வில்லை.இதனையெல்லாம் அறிஞர் ஈழத்துப் பூராடனார் தம் படைப்பில் குறித்துக்காட்டியுள்ளார்.
கிரேக்க நாட்டுக் காப்பியமாதலின் அதனை விளங்கிக்கொள்ள நமக்கு உதவியாக ஈழத்துப்பூராடனார் பலவகையான படங்கள்,ஓவியங்கள்,முன்னுரைகள்,குறிப்புகள்,விளக்கங்கள்,கப்பல் அமைப்பு,கப்பல் பயணத்தைக் குறிக்கும் வரைபடம்,கதைச்சுருக்கம் யாவற்றையும் வழங்கிப் படிக்க விரும்புபவர்களைப் படைப்புடன் நெருங்கி உறவாட வைக்கின்றார்.

ஈழத்துப்பூரடானார் இலியட் என்ற ஓமரின் காப்பியத்தை 1990 இல் தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.11100 பாடல்வரிகளில் இந்த நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுளது.கிரேக்கமொழி,ஓமரின் காப்பியங்கள் பற்றி ஈழத்துப் பூராடனார் பின்வரும் குறிப்புகளைத் தந்துள்ளார்.

"கிரேக்க மொழி தமிழைப் போன்று செம்மொழி இலக்கியம் படைத்த ஒரு பண்டைய மொழி.இதில் உள்ள மகாகாவியங்களில் ஹோமர் மகாகவியின் ஒடிஸ்சியும் இலியட்டும் மிகவும் பழமையுஞ் சிறப்பும் வாய்ந்தவை. இதன் கிளைக் கதைகளாகவே ஆதிக் கிரேக்கத்தின் பிந்திய இலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவை அநேகமாக நாடக வடிவிலேயே அமைந்துள்ளன.கப்பற் பயணங்களிற் தேர்ந்தவராய் கிரேக்கர் முதலிடம் வகுத்ததுபோல் நாடக அரங்குகளை அமைப்பதிலும் நடத்துவதிலும் அவர்கள் தலையா சிறப்புற்றிருந்தனர்.எனவே நாடக இலக்கியங்கள் அங்கு நிலைபெற்று வளரலாயிற்று"(இலியட் பக்கம் 8)

இலியட் காப்பியம் பற்றி ஈழத்துப் பூராடனார் முன்னுரையில்

"இலியட் ஒரு முழுப் போர்க்காவியம்.அகியர்கள் அல்லது ஆர்க்கோசர் என அழைக்கப்படும் கிரேக்க நாட்டவர்களுக்கும் இலியர்கள் அல்லது திறஜானர் எனப்படும் திறாயர்களுக்கும் இடையில் தொடர்ந்து பத்து வருட காலமாக நிகழ்ந்து ஒரு போரின் வரலாற்றை இலியட் காவியம் எடுத்துக் கூறுகின்றது.இலியட் நாட்டில் நடந்த போராதலால் இலியட் எனும் பெயரை இக்காவியம் பெற்றது"என்று நூலின் பெயர்க்காரணத்தை ஆசிரியர் விளக்குகிறார்(இலியட்,பக்கம் lviii)

இலியட் காப்பியத்தின் கதையில் இடம்பெறும் பல கிளைக்கதைகள்தான் பினபு எழுந்த கிரைக்க நாடகங்களுக்கு உதவியாக இருந்தன.

ஒவ்வொரு காவியத்திற்கும் அடிப்படையாக ஒரு பெண் இருப்பதுபோல்(இராமயணத்தில் சீதை இருப்பது போல்) இலியட் காவியத்தில் ஹெலன் என்னும் பெண் காரணமாக இருக்கின்றாள்.இவள் கிரேக்க நாட்டை அண்டுவந்த வீரன் அகாமெமேனோன் தம்பியின் மனைவி.அங்கு விருந்தாளியாக வந்திருந்த இலிய நாட்டு இளவரசன் அவளை மயக்கிக் கவர்ந்து செல்கிறான்.இது ஒரு கௌரவப் பிரச்சினையாகி விடுகின்றது. இதனால் அவளை மீட்டு வருவதற்காகக் கிரேக்கர்கள் படை எடுத்துச் சென்று போர் செய்கின்றார்கள்.

"இருபத்தினாலு அங்கங்கள் உள்ளதாகப் பத்து வருடங்கள் நடைபெற்ற இப்போர் நிகழ்வுகளைக் ஹோமர் செய்யுள் நடையில் எடுத்துக்கூறியுள்ளார்."பண்டைகாலத்தில் எழுதப்பட்ட நம் புறநானூறு தனித்தனியான போர்க்களக்காட்சிகளை விளக்குவதுபோல் பத்தாண்டுகள் நடைபெற்ற கிரேக்க போர் குறித்து எழுந்த கிரேக்க இலக்கியமும்,சங்கச்செவ்வியல் இலக்கியங்களும் காலத்தால் ஒரே பொருண்மையில் படைக்கப்பட்டுள்ளதை இங்கு இணைத்து எண்ணிப்பார்க்கவேண்டும்.

பண்டைக்காலத்தில் கூத்தும் நாடகமும் செழித்திருந்ததைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.99 வகையான கூத்துகளை எடுத்துக்காட்டும் சிலப்பதிகார உரையாசிரியர் அடியாக்குநல்லார் தமிழகத்தின் செழித்த கூத்து மரபுகளை நமக்கு நினைவூட்டியுள்ளது போல் கிரேக்கர்களின் நாடக,இசையறிவு யாவும் கிரேக்கமொழியில் இருந்துள்ளதை ஈழத்துப் பூராடனார் தமிழுக்கு வழங்கியுள்ள தமிழாக்கத்தின் வழியாக அறியமுடிகிறது.

அண்மைக்காலமாக ஈழத்துப்பூராடனார் ஐங்குறுநூற்று அரங்கம்,சூளாமணித் தெளிவு,கல்லாடம் கற்போம் சொல்லாடுவோம்,நைடதம் யாருக்கும் ஒரு ஔடதம் ஆய்வுக்கண்ணோட்டம்,சீவகசிந்தாமணி ஆய்வுச் சிந்தனைகள்,பெருங்கதை ஆய்வுநோக்கு, உள்ளிட்ட நூல்கள் பற்றிய ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழழகி காப்பியம் என்னும் பெயரில் தமிழ்நூல்களின் வரலாற்றைப் பன்னிரண்டாயிரம் செய்யுள்களாக ஒன்பது காண்டங்களாக(2070 பக்கங்களில்) உருவாக்கியுள்ளார்.தமிழ்மொழியின் தோற்றம்,அதன் சிறப்பு உணர்த்தும் நூலாக இது உள்ளது.

இலங்கை வரலாறு கூறும் பல நூல்களும்,உலகளவில் தமிழ்ப்பணிகள் பற்றிய நூலும் வரைந்துள்ளார்.

தமிழ் கணிப்பொறித்துறையில் இவர் குடும்பத்தார் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளனர்.இவர்கள் வெளியிட்ட பெத்லகேம் கலம்பகம் என்ற நூலே தமிழில் கணிப்பொறியில் அச்சான முதல்நூலாக விளங்குகிறது.

ஈழத்துப்ப்பூராடனார் தமிழ்த் திரைப்படக்களஞ்சியம் அறுபது தொகுதிகளாக உருவாக்கியுள்ளார்.

ஈழத்து தமிழறிஞர்கள் பற்றியும் அவர்கள் எழுதிய நூல்கள் பற்றியும் மிகச்சிறந்த நூல்களைத் தந்துள்ள மூத்த தமிழறிஞரான ஈழத்துப்பூராடனார் போன்ற அயல்நாட்டில் வாழும் தமிழறிஞர்களை வரும் செம்மொழி மாநாட்டில் சிறப்பிப்பதன் வழியாக அவர்களின் வாழ்நாள் பணியைப் போற்றிய சிறப்பை நாம் பெறுவோம்.

இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியும் பதிப்பித்தும் தமிழ்ப்பணியாற்றிவரும் ஈழத்துப்பூராடனாரைப் போற்றுவோம்!அவர் நெஞ்சம் நிறைந்த வாழ்த்தினைப் பெறுவோம்!!

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
மின்னஞ்சல் muelangovan@gmail.com
வலைப்பூ: http://muelangovan.blogspot.com/

Series Navigation