பத்து கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

பாவண்ணன்1. அதிகாலையின் அமைதியில்

குளிர்பனியில் நடுங்கும் காலையில்
கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென
அங்கங்கே நிற்கின்றன
பேருந்துநிலைய வாகனங்கள்

உச்சியில் ஏறி
காய்கறிக்கூடைகளை அடுக்குகிறார்கள்
கூலிக்காரர்கள்

தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த
வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன
பூமூட்டைகள்

பாலைச் சூடாக்க
அடுப்புப் பற்றவைக்கிறார் தள்ளுவண்டிக்காரர்

திருட்டு ரயிலேறி
பிழைப்பதற்காக நகருக்குள் வந்தவன்
இருட்டைக் கண்டு அஞ்சியபடி
நடுக்கத்தோடு நிலையத்துக்குள் வருகிறான்
ஆற்றின் மடியில் ஊற்றெடுப்பதைப்போல
ஒரே சமயத்தில்
அவன் நெஞ்சில் சுரக்கிறது
நம்பிக்கையும் அச்சமும்
மாற்றுடைகள் கொண்ட தோல்பையை
மார்போடு அணைத்திருக்கின்றன அவன் கைகள்
குளிரில் சிக்கிய புதிய அனுபவத்தால்
நிலைகுலைந்து தடுமாறுகிறான்
அவனது உதடுகள்
மனைவியின் பெயரையோ மகளின் பெயரையோ
மாறிமாறி உச்சரிக்கின்றன
வாகனத்தைத் தேர்ந்தெடுக்கும் வழிபுரியாமல்
எங்கெங்கோ புகுந்துபுகுந்து வருகிறான்

விடாது துரத்தும் நாய்களின் ஊளையால்
கால்சலித்து மனம்சலித்து அமரும் வேளை
முழக்கமிட்டு வருகிறது காவல் வாகனம்
அவன் முதுகில் அறைகிறது ஒரு கை
சந்தேக வழக்குக்காக
வாகனத்துக்குள் இழுத்து வீசுகிறது
மற்றொரு கை

அதிகாலையின் அமைதியில்
கரைந்து மறைகிறது
அச்சம் மிகுந்த அவன் அலறல்


2. ஒரு தண்டனைக் காட்சி

மனப்பாடச் செய்யுள் மறந்துபோனதால்
வகுப்புவாசல் அருகே
முட்டிபோட்டிருக்கிறாள் சிறுமி

ஆறேஆறு வரிகளை
பிழையின்றிச் சொல்லத் தெரியாததை நினைத்து
கூச்சத்தில் கவிழ்கிறது அவள் முகம்
அவமானமும் துக்கமும்
பொங்கிப்பொங்கி நெஞ்சை நிரப்புகின்றன

ஆசிரியைபோல
இரக்கமேயில்லாத கல்நெஞ்சக்காரர்கள்
யாருமே இருக்கமாட்டார்கள் என்று
நினைத்துக்கொள்கிறாள்

அடுத்த பிறவியில்
அவள் ஒரு கழுதையாகவோ, நாயாகவோ பிறந்து
தெருத்தெருவாக அலையவேண்டுமென்று
உள்ளூர சாபமிடுகிறாள்

மனத்தில் படரும் எண்ணங்களை
ஆசிரியை படித்துவிடாதபடி
முகத்தில் சோகத்தைப் புலப்படுத்துகிறாள்

மதிலருகே ஒதுங்கிய அணில்மீது
ஏதோ ஒரு கணத்தில்
பதிகிறது அவள் பார்வை
மறுகணமே மலர்ந்துவிடுகிறது அவள் மனம்
ஒரு பூவைப்போல
ஆட்காட்டிவிரலை அசைத்து
மௌனமாக அதைநோக்கி அழைப்புவிடுக்கிறாள்
கண்களை சிமிட்டி அழகு காட்டுகிறாள்
வகுப்பையும் தண்டனையையும்
முழுக்கமுழுக்க மறந்துபோகிறாள்

ஓர் ஆனந்தத் தீவில்
அணிலும் அவளும் ஓடிப் பிடித்து ஆடுகிறார்கள்
அணிலுக்கு அவள்மீது பிரியம் பிறக்கிறது
கிறீச்சிடவும் தாவவும் சொல்லித் தருகிறது
அவள் உள்ளங்கையைப் புதராக நினைத்து
உடல்மடித்து ஆடிக் களிக்கிறது
தன் உலகத்துக்குப் பொருத்தமானவளென
சிறுமியின்மீது நம்பிக்கைகொள்கிறது அணில்
அணிலைப்போன்ற உயர்வான பிறவி
உலகத்திலேயே இல்லையென்று நம்புகிறாள் சிறுமி
என்னோடு வருவாயா என
ஏறிட்டுப் பார்க்கிறது அணில்
அழைப்புக்குக் காத்திருந்ததுபோல
துள்ளித்துள்ளி ஓடி மறைகிறாள் சிறுமி


3. சந்திப்பு

எனது ஜன்னலுக்கு ¦ளியே
பச்சைப்பசேலென அடர்ந்த தோப்பு
கம்பளம்போல நெளிந்தாடுகிறது
ஏராளமான பறவைகள்
அந்த விரிப்பின்மீது சுதந்திரமாகப் பறக்கின்றன
அவற்றின் குரல் எனக்குக் கேட்கவில்லை
அதன் சிறகடிப்பிலிருந்து
அவை மகிழ்ச்சியாக இருப்பதை அறிகிறேன்

ஒரு தாயின் பரிவுடம் நெருங்கும்
குளிர்ச்சியான காற்று
என்னை ஆழ்ந்த அன்புடன் தழுவுகிறது
பனிக்கட்டியின் ஈரத்தைப்போல
அதன் விரல்நுனிகளில்
சொட்டிக்கொண்டிருக்கிறது ஆனந்தம்

ஒருநொடி அணைத்து விளையாடுகிறது
மறுநொடி எதிர்ப்புறம் நகர்ந்து
இடம்மாறி இடம்மாறி
என்னைப் பார்த்து புன்னகைக்கிறது
அடுத்தமுறை சந்திக்கவந்தால்
அடையாளம் தெரியுமா என்று கேட்கிறது
எனக்காக ஒரு பாடலை
இசையுடன் முணுமுணுக்கிறது
எவ்வளவு அன்பானவன் நீ என்றபடி
என் விரல்களைப் பற்றுகிறது
சுற்றிச்சுற்றி வந்து
ஏராளமான சொற்களை இறைக்கிறது

புத்துணர்ச்சிக்காக
ஒரு தேநீர் வரவழைத்து அருந்துகிறோம்
பொழுதுபோவது தெரியாமல்
எதிரும் புதிருமாக அமர்ந்து
நெடுநேரம் உரையாடுகிறோம்

இரவு கவிந்த வேளையில்
கைகுலுக்கி விடைபெற்றுக்கொள்கிறோம்
அது இனிமையின் விளிம்புக்கும்
நான் வாழ்வின் புழுக்கத்துக்கும்.


4. இலையின் துக்கம்

ஒரு குழந்தையைத் தொடும் ஆசையோடும்
விரல்நீட்டிய கோலத்தோடும்
தாவித்தாவி இறங்குகிறது
கிளையிலிருந்து விடுபட்ட
இலையொன்று

அக்கம்பக்கம் பாராமல்
ஆட்ட மும்முரத்தில் குதிக்கும் குழந்தையை
இலையின் திசையிலிருந்து விலக்கி
இன்னொரு திசைக்கு மாற்றுகிறாள் தாய்

ஏமாற்றத்தின் துக்கம்
நரம்புகளில் வழிய
தரையில் விழுந்து துடிக்கிறது
மனபாரம் மிகுந்த இலை


5. காட்சி

குலுங்கித் திரும்பிய வாகனம்
ஒரே கணத்தில்
அக்காட்சியைக் கடந்துவிட்டது

விழுதுகள் இறங்கிய ஆலமரம்
ஏதோ கிளைகளிலிருந்து இறங்கிய ஊஞ்சல்
நுனிமுடிச்சிட்ட விரிகுழலசைய
அவசரமில்லாமல் ஆடும் இளம்பெண்
பலகையைத் தள்ளிவிடும் சிறுமிகள்
கைதட்டி இசைக்கும் பாடலின் துணுக்கு
கிளைமாறிப் பறக்கும் பறவைகள்
நிழலில் தழைமெல்லும் ஆடுகள்
நெளிந்து நீளும் வாய்க்கால்கள்
கண்களில் படாத காட்சிகள்
இன்னமும் இருக்கக்கூடும்

காணாத சித்திரங்களை
கற்பனையில்
இடம்மாற்றி இடம்மாற்றி நீள்கிறது
இந்தப் பகல் பயணம்


6. கனவுச் சித்திரம்

ஒரு பறவையென உருமாறி
வானத்தில் சிறகசைத்து நீந்தும்
என் சித்திரத்தை
இன்னுமொரு முறை தீட்டிப் பார்க்கிறேன்

பாலென வெளிச்சம் படர்ந்திருக்கிற
ஆகாயத்தின்
எல்லாத் திசைகளிலும் பறக்கிறேன்
ஒரு தடையும் இல்லாத சுதந்திரத்தால்
உயிரும் உள்ளமும் திளைக்கின்றன
இறைக்கப்பட்ட பொம்மைகளைப்போல
மேகங்கள் சிதறிக் கிடக்கின்றன
சிறகுகளால் அவற்றைத் தீண்டும்போது
உருகிவழிவதைப்போன்ற உணர்வில்
உத்வேகம் பலமடங்காகிறது

ஆறுகள் மீதும்
குளங்கள் மீதும்
பறப்பது ஆனந்தமாக இருக்கின்றது
தாழ்வாக இறங்கிவந்து
ஒரேஒரு முறை
தண்ணீரைத் தீண்டிவிட்டுத் தாவும்போது
உடலில் படரும் சிலிர்ப்பு
பித்தேற வைக்கிறது

மலையின் உச்சியில் பறக்கும்போது
மனத்தின் பாடல் பீறிடுகிறது
எதிரொலித்துத் திரும்பும் குரல்
எழுச்சியூட்டுகிறது

தோளுயர்த்தி நிற்கும் மரங்களில்
கால்பதித்து இறங்கும் வேளை
நெருங்கித் தழுவுகிறது காற்று
களைப்பின் உச்சத்தில்
கலைந்துவிடுகிறது சித்திரம்


7. மழையின் துணை

தொடக்கப் புள்ளியும் தெரியவில்லை
போய்ச்சேரும் புள்ளியும் தெரியவில்லை
கரைகளைத் தழுவிக்கொண்டு ஓடுகிறது
காட்டாறு

வெறியின் கர்ஜனையில் வெளிப்படுகிறது
வெல்லமுடியாத வேகம்

கரையில் கால்நீட்டி அமர்ந்த
பாறைமீது நின்று பார்க்கிறேன்

நான்குநாள் முன்புவரைக்கும்
மணல்புழுதியாகக் கிடந்த இடம்
நம்ப முடியாதவகையில் மாறிவிட்டது
அடங்க மறுக்கிற சீற்றத்தோடு
ஆற்றின் வேகம் பெருகியபடி இருக்கிறது
கண்ணுக்கெட்டும் தூரம்வரைக்கும்
கருமேங்கள் நிறைந்திருக்கின்றன
எந்தக் கணமும்
அவை தீண்டப்பட்டு
பொழிவதற்குக் காத்திருக்கின்றன

வெளிச்சம் தன்னை மறைத்துக்கொள்கிறது
சூரியனின் அச்சம்
ஆச்சரியமாக இருக்கிறது

தற்செயலான ஒரு கணத்தில்
விசைபெற்ற கணைபோல இறங்கிய மழை
உடம்பை நனைத்து வழிகிறது
ஒவ்வொரு நீர்முத்தும்
பளிரென மோதி உடைகிறது
கண்களில் மின்னல் கூசும் கணத்தில்
உணரமுடிகிறது
மழையின் இருப்பை
யாரோ துணைக்கு நிற்பதைப்போல


8. உயிர்மை

நிறுத்திவைத்த குழலென
செங்குத்தாக நிமிர்ந்திருக்கும் தொகுப்புவீட்டின்
ஏழாவது மாடியின் சன்னலருகே
காற்றின் இசை பரவத் தொடங்குகிறது

அலைஅலையாய்த் தவழும் இசையில்
அறையே நனைகிறது
அறையின் ஒவ்வொரு புள்ளியிலும்
உயிர்மையின் முளை சுடர்விடுகிறது
எங்கெங்கும் உறைகிறது
இன்பத்தின் ஈரம்
சுவர்கள் கதவுகள் மாடங்கள்
மேசைகள் நாற்காலிகள்
நிலைமறந்து நினைவிழந்து
நெக்குருகி நிற்கின்றன

அந்தரத்தின் யாழ்நரம்புகள் அதிர
வெள்ளமென நிரம்பும் இசைக்கு
விடெ மடியென மாறுகிறது
தாவித்திரிந்த களைப்பில்
வருடலில் குளிர்ந்து
கண்மூடி உறக்கம் கொள்கிறது
காற்று


9. காத்திருத்தல்

கவ்விச் சென்ற குச்சியை
தவறவிடுகிறது காகம்

அச்சத்தில் பதறி
அந்தரத்தில் வட்டமடிக்கிறது
ஒரு விமானத்தைப்போல இறங்குகிறது
அதன் உடல்

எதிர்பாராமல் நேர்கிற நடமாட்டம்
அதற்குப் பீதியை ஊட்டுகிறது
நாலு அடி முன்வைத்து
ஆறு அடி பின்வைத்து
நடுங்கி நடுங்கி விழிக்கிறது
எaதயோ சொல்ல நினைப்பதைப்போல
இரண்டு மூன்று முறை கரைகிறது
போகட்டும் போ என்று
உதறிப் பறக்கவும் நினைக்கிறது
இறுதிப் பார்வை பார்த்தபிறகு
இறகுகளை அடித்துக்கொள்கிறது

அமைதி பரவும்
அதிசயக் கணத்துக்குக் காத்திருந்து
குச்சியைக் கவ்விக்கொண்டு
மீண்டும் பறக்கத் தொடங்குகிறது


10. தடை

பார்க்கவேண்டுமென
ஆசையே எழாதா?

தொலைபேசியின் மறுமுனையில்
பொங்கிப் பாய்கிறது உன்குரல்

முன்பெல்லாம்
கதைசொல்லி சிரிக்கவைத்ததுண்டு
காரணங்களை அடுக்கியதும் ஒருகாலம்
மன்னிப்பை யாசித்ததும்
புன்னகையால் மழுப்பியதும்
கேலி செய்து தப்பித்ததும்
வேறுவேறு காலங்கள்
இன்று உன் கேள்விக்கு
விடைசொல்ல மொழியின்றி
தொலைபேசியைத் துண்டிக்கிறேன்

உன் வேதனையையும்
விருப்பத்தையும்
அறியாத கல்லல்ல நான்
எனக்குத் தெரியும்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
வேட்கையுடன் உன் குரலில் வெடிப்பது
அடக்கமுடியாத ஆவல்

ஒவ்வொரு முறையும்
புறப்பட்டு வரவே திட்டமிடுகிறேன்
அரும்பும் ஒவ்வொரு கனவின் தளிரையும்
நசுக்கிவிடுகின்றன நெருக்கடிகள்

ஒரு ஏற்பாட்டைச் செய்துமுடிப்பதற்குள்
ஒரு திட்டத்தை வகுத்துப் புறப்படும்முன்
ஒரு கனவுக்குத் தகுந்தவனாக மாறும்முன்
எங்கிருந்தோ உருண்டுவந்து விழுகிறது ஒரு தடை

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்