பதுமை (நாடகம்)

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

ஜெயமோகன்


[அரங்கில் இருள் பரவியிருக்கிறது. ஓசையின்றி வெளிச்ச வட்டம் ஒன்று அரங்கின் சுவர்கள்மீது விழுந்து, நிதானமாக நகர்கிறது. பளபளக்கும் வாட்களும், பட்டாக்கத்திகளும், வேல்களும் சுவர் முழுக்க மாட்டப்பட்டிருக்கின்றன. போர்க்கள ஒலிகள் கேட்க ஆரம்பித்து, மெல்ல வலுக்கின்றன. கதறல்கள், வெறிச் சிரிப்புகள், மரண ஓலங்கள், ஓலம் உச்சத்தை அடையும்போது, ஒளி அரங்கின் நடுவில் நிற்கும் ஆளுயர இரும்புப் பதுமையின் முகத்தில் நிலைக்கிறது. வெறியுடன் சிரிக்கும் இரும்பு முகம். ஒளி பரவ, அரங்கு தெளிவடைகிறது. மூங்கிலால் ஆன சுவர்கள் கொண்ட பாடிவீட்டின் முகப்பறை. பதுமை முழுக்க இரும்பாலானது. அதை ஒருவன் துடைத்துக் கொண்டிருக்கிறான்.

பட்டர் உள்ளிருந்து கையில் ஒரு மூங்கில் கூடையுடன் வருகிறார். பதுமையைத் துடைப்பதை கோபத்துடன் பார்க்கிறார்.]

பட்டர்: எதற்கு இப்போது இந்த வேலை ? ஆயிரம் வேலை மீதி கிடக்கிறது. லாயத்தில் ஆள் இல்லை என்று சக்கரன் வந்து சத்தம் போட்டு விட்டுப் போகிறான்.

வீரன்: (துடைப்பதை நிறுத்திவிட்டு) இது என் கடமை பட்டரே. எனக்கு மாமன்னர் போட்ட உத்தரவு இது.

பட்டர்: மன்னர்தான் வீரமரணம் அடைந்தாயிற்றே. (குரலைத் தாழ்த்தி) எனக்கு இதைப் பார்த்தால் வயிற்றைக் கலக்குகிறது. ஒன்றா, இரண்டா, பதினைந்து வருடமல்லவா இந்தச் சனியனை வைத்து மன்னர் மல்லிட்டுக் கொண்டிருந்தார். (பதுமையை உற்றுப் பார்த்தபடி) இல்லை, இதுதான் மன்னரை ஆட்டி வைத்ததா ? சனி,ஏழரை நாட்டுச் சனி.

வீரன்: (கோபத்துடன்) பட்டரே, உமது நாக்கு அத்து மீறுகிறது. இப்பதுமையைச் சொல்வது மாமன்னரைச் சொல்வதற்குச் சமம்; தெரிந்து கொள்ளுங்கள்.

பட்டர்: ஆமாம் அப்படித்தான் சொல்வேன். எங்கே வேண்டுமானாலும் போய்ச் சொல்லும். (கை நீட்டியபடி) இது என்ன அய்யா, சொந்தச் சகோதரனுக்கு எதிராக துரியோதன மன்னர் கொண்ட வெறுப்பின் தூலமல்லவா இது ? இந்த வெறுப்புதானே அய்யா குருவம்சத்தையே அழித்தது ? செம்மணிக் கிரீடம் வைத்து உலகாண்ட எங்கள் மன்னர் குளக்கரைச் சேற்றில் தொடை பிளந்து, நாயும் நரியும் கடித்திருக்க, ஈயும், எறும்பும் மொய்க்க கிடந்தார். (உடைந்து போய்) இந்தக் கரங்களால் அவருக்கு இளம் வயதில் பணிவிடை செய்திருக்கிறேன். கதை சொல்லித் தூங்க வைத்திருக்கிறேன். நான் சொன்ன கதைகளில் அன்பைப் பற்றிச் சொல்லவில்லை போலும் . . . தர்மத்தைப் பற்றிச் சொல்லவில்லை போலும் . . .

வீரன்: பட்டரே, உமது கண்ணீரை வேறு எங்காவது வைத்துக் கொள்ளும். மாமன்னர் அடைந்தது வீர மரணம். வீரர்களுக்குரிய மரணம்.

பட்டர்: என்னய்யா வீரமரணம் ? அன்னியர்களிடமிருந்து மண்ணைக் காக்கப் போராடி அடைந்த மரணமா ? இல்லை, தர்மத்தை நிலைநாட்ட களத்தில் அடைந்த மரணமா ? சொந்தச் சகோதரன் கையால் அடிபட்டு . . .

வீரன்: (கோபத்துடன்) பட்டரே, அதிகாரம் இல்லாத வீரன் ஆத்மா இல்லாத உடல். அதிகாரமோ வாள் நுனியிலிருந்து வருகிறது. வாள் சத்திரியனின் தெய்வம். (நக்கலாக) தட்சணை உமது தருமம். தர்ப்பை உமது ஆயுதம். அதைச் செய்யும் போம்.

பட்டர்: (மெல்ல அமைதியடைந்து) ஆம். உலக நீதி அதுதான். கொல்கிறார்க, சாகிறார்கள். அவர்கள் வாள் நிழலில்தான் ஞானமும் செல்வமும் வாழ்கின்றன.

வீரன்: (மீண்டும் துடைக்க ஆரம்பித்தபடி) முதியவர் எழுந்து விட்டாரா ?

பட்டர்: எழுவதாவது, தூங்கவே இல்லை. இரவெல்லாம் மஞ்சத்தில் படுத்தபடி புலம்பிக் கொண்டிருந்தார். ஒரு கணம்கூட விழிமூட வில்லை. பிராட்டியாரும்தான். உணவும் அருந்தவில்லை. கொடுமையிலும் கொடுமை இதுதான். புத்ர சோகம்.

வீரன்: நீர் என்ன செய்தீர் ?

பட்டர்: தர்ம நூல்கள் எதையாவது கூறும்படிச் சொன்னார். சுக்ர நீதியைச் சொன்னேன். பித்ருக்களுக்கு சத்ரியன் ஆற்ற வேண்டிய நீர்க்கடன்கள் பற்றிச் சொல்லி வரும்போது அப்படியே உடைந்து பெரும் குரலில் மகனே துரியோதனா . . . உனக்கு நான் இன்று நீர்க்கடன் செய்ய வேண்டியதாயிற்றே என்று வீரிட்டு விட்டார். என் வயிறு குலுங்கி விட்டது. பிறகு, நான் வாய் திறக்கவில்லை. சாதாரண துக்கமா அது ?

வீரன்: கொசுவுக்கும், யானைக்கும் மரணம் ஒன்றுதான். குருக்ஷேத்ரத்தில் நேற்று மாலை முதலே கடலலை போல அழுகையொலி கேட்க ஆரம்பித்து விட்டது. எத்தனை விதவைகள், அனாதையான பெற்றோர்கள், ஆதரவிழந்த குழந்தைகள் . . .

பட்டர்: சொல்லதீர் நாகமரே. நேற்று அவ்வழியே போனேன். என் ஈரலை யாரோ பிடித்துக் கசக்குவது போலிருந்தது. எந்தையே எம்பிரானே, இதைக் காண என்ன பாவம் செய்தேன் என்று மார்பு உடையும்படி விம்மினேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எரிந்தடங்கிய பாழ் சிதைகள். அவற்றின் அருகே அழுது அரற்றும் உறவினர்கள். குருவம்சம் அழிந்து விட்டது நாகமரே. பாரதவர்ஷமே சுடுகாடு ஆகிவிட்டது. அற்ற குளத்துப் பறவைகள் போல மக்கள் தேசாந்தரம் கிளம்புகிறார்கள். இன்று நீர்க்கடனும் முடிந்துவிட்டால் இந்திரப் பிரஸ்தம் காலியாகி விடும். உதிர மணம் தங்கும் இந்த மண்ணில் இனி எப்படி மக்கள் வாழ முடியும் ? அனாதைகளாக அகதிகளாக அவர்கள் தேசங்களெங்கும் அலைவார்கள் . . .

நாகமர்: விதி வெல்ல முடியாதது பட்டரே, (பெருமூச்சுடன்) என மகன் அச்சுதனை நீர் அறிவீரா ?

பட்டர்: அடப்பாவி! (குரல் நடுங்க) அப்படியுமா இப்படி இருக்கிறீர் ?

நாகமர்: (தழுதழுத்த குரலில்) என்ன செய்வது பட்டரே, இது என் கடமை. விடி காலையிலேயே அவனுக்கு நீர்க்கடன் செலுத்தி விட்டேன் (பதுமையைத் துடைக்கிறார்)

(சில கணங்கள் அமைதி. பட்டர் தவிப்புடன் ஏதோ கூற வந்து தவிக்கிறார். கண்ணீரை அடக்குவது போல குனிந்தபடி நாகமர் சிலையைத் துடைக்கிறார்.)

நாகமர்: (திடாரென்ற உரத்த குரலில்) வெள்ளிச் சங்கில் பாலூட்டி உன்னை வளர்த்தேன் என் ராஜாவே, இப்போது சாம்பலும் சேறும் கலங்கிய யமுனை நீரை உனக்குத் தருகிறேன். பித்ருலோகத்தில் உன் மூதாதையருடன் இன்பமாக இரு என் மகனே என்று சொன்னேன் . . . (கண்ணீர் வழிய உதடுகளை கடித்தபடி) என் குழந்தை, என் அச்சுதன் . . .

பட்டர்: மனம் ஆறும் நாகமரே . . .

நாகமன்: விதியின் விளையாட்டு.

பட்டர்: விதியல்ல நாகமரே . . . இதோ இதுதான் எல்லாவற்றிற்கும் காரணம் (கோபத்துடன் பதுமையைச் சுட்டிக்காட்டி) இது பீமனின் சிலை. பதினைந்து வருடம் மன்னர் தன் சகோதரனைக் கொல்ல அவன் சிலையைச் செய்து வைத்து பயிற்சி எடுத்திருக்கிறார். பதினைந்து வருடம் ஒவ்வொரு தினமும் அந்த வெறுப்பு ஏறி ஏறி வந்தது. நாகமரே வென்றது அந்த துவேஷம்தான். எதற்கு இது ? இந்தப் பாரத மண்ணில் ஆள்வதற்கு இடமா இல்லை ? நெல்லும், மணியும், கனியுமாக அள்ளியள்ளி வழங்கும் இந்தப் பசும் பூமி இவர்களுக்கும் இவர்கள் ஏழு தலைமுறைகளுக்கும் விரலசைவின்றியே அமுதூட்ட வல்லவளல்லவா ? நாகமரே, உதிரம் மண்ணுக்கு உரமாவதற்காக படைக்கப்பட்டது அல்ல. அது காதலாக, பாசமாக, கருணையாக சந்ததிதோறும் பரவிச் செல்வதற்காக பிரம்மன் கனிந்தளித்த வரம்.

நாகமன்: பேசி என்ன பயன் ? எல்லாம் முடிந்தது.

பட்டர்: ஆம். எல்லாம் முடியட்டும். இனி இது மட்டும் எதற்கு ? வெறுப்பின் சின்னமாகிய இந்தப் பாழும் பதுமை . . . இதைப் பார்க்கையில் துரியோதன மன்னர் உடல் வியர்க்க, முகம் சிவந்து சீற, வெறிமிக்க கண்களுடன் இதனுடன் சண்டையிடும் காட்சி என் மனதில் எழுகிறது.

நாகமர்: முதியவர் இதைத் தடவிப் பார்த்து அழுதார்.

பட்டர்: (திகைப்புடன்) இதையா ?

நாகமர்: ஆம். இதில் என் மகனின் வியர்வை மணக்கிறது நாகமா என்றார். பிராட்டியாரும் இதைத் தழுவி கண்ணீர் விட்டு அழுதார்.

பட்டர்: (தவிப்புடன்) எம்பிரானே, என்ன கூத்து இது ?

நாகமர்: இதைக் கவனமாகப் பராமரிக்கும்படி ஆணை. துரியோதன மன்னரின் நினைவுச் சின்னம் இது என்றார் அத்துடன் . . .

பட்டர்: அத்துடன் . . . ?

நாகமர்: அதை குருவம்சம் தீர்க்க வேண்டிய கணக்குகளின் மிச்சமாக வைத்திருக்க வேண்டும் என்றார். குருவம்ச சந்ததிகள் இதைத் தங்கள் குலதெய்வமாக வணங்க வேண்டும் என்றார்.

(பதுமையின் முகம் கொடூரமானதாக ஆகிறது. பின்னர் அது இளிப்புடன் திரும்புகிறது.)

பட்டர்: அப்படியா சொன்னார் ? திருதராஷ்ட்ர மன்னரா சொன்னார் ?

நாகமர்: அவரேதான்.

பட்டர்: இது போர் தேவதை. மனிதகுலம் உள்ள வரை இது அழியாது.

நாகமர்: கோபமும் வெறுப்பும் இல்லையேல் போர் இல்லை பட்டரே. போர் இல்லையேல் சத்ரியன் இல்லை.

(வெளியேயிருந்து ஒரு வீரன் வருகிறான்.)

வீரன்: (வணங்கி) வணங்குகிறேன் அமாத்யரே.

பட்டர்: என்ன பதுமரே ?

பத்மர்: பாண்டவர்கள் வருகிறார்கள்.

பட்டர்: (திகைத்து) பாண்டவர்களா ?

பத்மர்: ஆம் ரதத்தை சாத்யகி ஓட்டி வந்தார். பாண்டவர்களும் யாதவ மன்னரும் இறங்கினார்கள். சாத்யகி புரவிகளை அவிழ்த்துக் கொண்ட ஆற்றின் கரையோரமாகப் போனார்.

பட்டர்: அவனும் வருகிறானா, சதிகார யாதவன் ?

பத்மர்: பெரும் பாதையில் நடந்து வருகிறார்கள்.

பட்டர்:இப்போது எதற்கு வருகிறார்கள் ?

நாகமர்: வேறு எதற்கு ? பெரியவரிடம் ஆசி பெறத்தான். மூதாதையர் ஆசியின்றி முடிசூட முடியமா ?

பட்டர்: எனக்கு ஏதும் புரியவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. மன்னரின் இந்த மனநிலையில் . . .

நாகமர்: நம் கடமையைச் செய்வோம். நிர் பெரியவரை எழுப்பி விஷயத்தைக் கூறும். நான் அவர்களை வரவேற்கிறேன்.

(பதுமையை ஓருமாக விலக்கிவிட்டு வெளியே போகிறார். பட்டர் அரங்கின் நடுவிலிருக்கும் வாசல் வழியாக உள் அறைக்குப் போகிறார். அரங்கு காலியாகிறது. இருளடைகிறது.

ஒளி வட்டம் பதுமை முகத்தில் விழுகிறது. அதில் வெறியாவேசம் ததும்புகிறது. பின்னணியில் அழுகைகளும் ஒப்பாரிகளும் கதறல்களும் எழுகின்றன. ஒளி விரிகிறது. அரங்கில் கண்ணனும் பாண்டவர்களும் நுழைகின்றனர். கண்ணன் தலையில் மயிற்பீலி அணிந்து, மஞ்சள் நிற அந்தரீயமும் உத்தரீயமும் அணிந்திருக்கிறார். பாண்டவர் மஞ்சள் நிற உடைகள் அணிந்திருக்கிறார்கள். உயரமான பீமன் புஜங்களில் புஜ கீர்த்தியும், கைகளில் இரும்புக் காப்பும் அணிந்திருக்கிறான்.)

தருமன்: யாதவரே

கண்ணன்: (திரும்பி) சொல்லும் யுதிஷ்ட்டிரரே . .

.

தருமன்: இல்லை, நாம் பிறிதொரு தருணம் வரலாமே . . .

கண்ணன்: (புன்னகைத்து) ஏன் ?

தருமன்: பெரியப்பா நேற்றுதான் வந்திருப்பார்; குருக்ஷேத்ரம் வழியாக.

கண்ணன்: அவர்தான் எதையும் கண்டிருக்க முடியாதே . . .

தருமன்: விளையாடதீர் யாதவரே . . .

கண்ணன்: (தருமனின் தோளைத் தொட்டு) தருமரே களம் வென்றவர் நீர். உமக்கு ஏன் இந்த அச்சம் ?

தருமன்: களத்தில் என்பக்கம் தருமம் இருந்தது.

கண்ணன்: (சிரித்து) இங்கு ?

தருமன்: எனக்குப் புரியவில்லை யாதவரே.

பீமன்: (முன்னகர்ந்து, உரத்த குரலில்) இங்கு வெற்றி உள்ளது அண்ணா. நாம் வெற்றி பெற்றவர்கள். நீ இந்த பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்தி.

கண்ணன்: வாருங்கள். இதுவும் உங்கள் கடமைதான். எந்த விதி உங்களை இதுவரை இட்டு வந்ததோ . . . அதுவே இனியும் உங்களுக்கு வழிகாட்டும்.

தருமன்: என்னால் அன்னை காந்தாரியை எதிர்கொள்ள முடியுமா யாதவரே . . .

கண்ணன்: நீர் மன்னர். உமது கடமையை நீர் செய்தீர்.

தருமன்: இந்தப் பேரழிவா என் கடமை ?

கண்ணன்: யுதிஷ்டிரரே, ஒருவன் தன் எதிரியைக் கொலை செய்தால் அவனை நாம் கொலைகாரன் என்கிறோம். போரில் நூறு பேரைக் கொன்றவனை வீரன் என்கிறோம் ஏன் ?

தருமன்: (சலிப்புடன்) ஏன் ?

கண்ணன்: போர் வீரன் தனக்கெனக் கொல்வதில்லை. அவன் ஒரு பிரதிநிதி. அவனிடம் பல்லாயிரம் மக்களின் தன்மானத்தையும் செல்வத்தையும் காக்கும் பொறுப்பு உள்ளது.

அர்ச்சுனன்: (கோபமாக முன்னகர்ந்து) நிறுத்துங்கள் மாதவரே . . . சற்று முன் என்ன நடந்தது ? பாரதவர்ஷத்தின் மகா சக்ரவர்த்தியை அவர் குடிமக்கள் எதிர்கொண்ட விதத்தைப் பார்த்தீர்களல்லவா ? (குரல் தளர்ந்து) விதவைகளும் முதியவர்களும் அண்ணாமீது பாய்ந்து சாபமிட்டபடி அவர் மேலாடையைக் கிழித்தபோது என் காண்டிபம் தளர்ந்தது. என் கரங்கள் செயலற்றுத் தொங்கின.

அந்தச் சாபங்களை அவர்களுடன் சேர்ந்து என் மனமும் உச்சரிப்பதைக் கேட்டேன் (உரக்க) கண்ணா, உன் மாய்மால பேச்சை நம்பியது என் தவறு.

கண்ணன்: (பெருமூச்சுடன்) சரி, அப்படியானால் திரும்பி விடுவோம்.

(அனைவரும் தயங்கி ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள். தருமன் திரும்பி வாசலை நோக்கி ஓர் அடி எடுத்து வைக்கிறான், நகுலன் சற்று முன்னகர்கிறான்.)

நகுலன்: (தணிந்த குரலில்) அண்ணா . . .

தருமன்: (தயங்கி) சொல் தம்பி.

நகுலன்: நான் கூறுவது அத்துமீறல் என்றால் . . .

தருமன்: நீ விவேகி. எனக்கு வழிநாட்டு தம்பி.

நகுலன்: நாம் நமது பெரியம்மாவையும், பெரியப்பாவையும் சந்திப்பதே முறை. அவர்கள் நம்மை சபிப்பார்கள், அச்சாபம் நம்மை அழிக்கும் என்றால், நாம் தவறு செய்தவர்கள். அழிய வேண்டியவர்கள் என்று தானே பொருள் ? பெற்றோருக்கன்றி வேறு யாருக்கு தண்டிக்கும் உரிமை உள்ளது ?

தருமன்: (நெளிந்து) ஆம். நன்று கூறினாய் தம்பி, யாதவரே, நாம் தம்பி கூறும்படிச் செய்வோம்.

பீமன்: (உரத்த குரலில்) செய்த செயல்களுக்கு குற்ற உணர்வு கொள்பவனுக்கு வாழ்க்கை இல்லை. அவன் தற்கொலை செய்வதே மேல்.

அர்ச்சுனன்: அண்ணா, நீ சற்று வாயை மூடு.

கண்ணன்: பீமன் கூறுவது சரிதான் பார்த்தா. ஒன்றே ஒன்றுதான் நாம் யோசிக்க வேண்டியுள்ளது. நாம் செய்தவற்றை நமது சொந்த கர்வத்தின் பொருட்டோ, புகழாசையின் பொருட்டோ செய்தோமா என்றுதான். சுயநலன் ஒன்றுதான சத்ரியனிடம் எஞ்சும் ஒரே பாவம்.

தருமன்: இது சுயநலமின்றி வேறென்ன ? இந்தப் போர் எதற்காக நடந்தது ? பற்றியெரியும் பெற்ற வயிறுகளுக்கு என்ன பதில் கூற முடியம் நான் ?

கண்ணன்: இன்று வசைபாடும் இதே மக்கள் நாளை நீ நல்லாட்சி தரும்போது உன்னைப் போற்றி கொண்டாடுவார்கள். தருமமே அனைத்தையும்விட மேலானது.

தருமன்: இத்தனை லட்சம் உயிர்களை விடவா ?

கண்ணன்: ஆம், நிச்சயமாக, சென்ற யுகங்களில் நம் மூதாதையர் உதிரம் சொரிந்து உருவாக்கி நமக்களித்தது இத்தருமம். நம் உதிரத்தால் போற்றி அதை நமது குழந்தைகளுக்குத் தர வேண்டும். தருமம் என்றால் நீதி, விடுதலை, தன்மானம் எல்லாம்தான் தருமா . சோற்றுப் புழு என உயிர் தரிப்பதைவிட தர்மத்தின் பொருட்டுச் சாவது மேல். ‘

(உள்ளிருந்து பட்டர் வெளிவந்து, சற்று அலட்சியத்துடன் வணங்குகிறார்.)

பட்டர்: பாண்டவர்களையும் யாதவரையும் அமாத்யன் சாரசபட்டன் வணங்குகிறேன். மாமன்னர் ஓய்வில் இருக்கிறார். தங்கள் வருகையை அறிவித்தேன். சற்று நேரத்தில் உங்களை இந்த அறையில் சந்திப்பதாகச் சொன்னார்.

தருமர்: நாங்கள் பெரியப்பாவை உடனே பார்க்க வேண்டும். அவர் நலம் எப்படி உள்ளது ?

பட்டர்: உங்களை (அழுத்தமாக) இந்த அறையில் — சந்திப்பதாகத் திட்டம்.

கண்ணன்: நன்று. முறைப்படி நடக்கட்டும்.

(பட்டர் வெளியே போகிறார்.)

அர்ச்சுனன்: பாண்டவர்கள் என்கிறான். என்ன திமிர்.

பீமன்: முகப்பு அறையிலா சந்திப்பு ?

கண்ணன்: இருப்பது இரண்டு அறை. (சிரித்து) சயன அறையில் அனுமதிக்க கிழவர் விரும்பவில்லை. இது சம்பிரதாயமான சந்திப்புதான். உறவெல்லாம் இனி இல்லை என்று கூற விரும்புகிறார் போலும்.

பீமன்: நமக்கு உத்திரவிட இவர் யார் ?

தருமன்: தம்பி, பொறு . . .

அர்ச்சுனன்: என்றுமே அவரிடம் அற்பத்தனம் உண்டு.

கண்ணன்: வெற்றி பெற்றவனே பெருந்தன்மையையும், கருணையையும் காட்ட முடியும். ஆம், முதல் தகுதி வெற்றிதான்.

(பட்டர் வருகிறார். பின்னால் இரு வீரர்கள் மூங்கிலால் ஆன ஆசனங்களைச் சுமந்து வருகிறார்கள். அதை சரியாகப் போடுகிறார்கள்.)

பட்டர்: போதிய ஆசனங்கள் இல்லை. மாமன்னர் நீர்க்கடனுக்கு இங்கு வருவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

கண்ணன்: அதனாலென்ன ? தந்தை முன் தனயர் நிற்பதே முறை.

பட்டர்: மன்னிக்க வேண்டும். (உள்ளே போகிறார்.)

(பாண்டவர்கள் அமைதியாக நிற்கிறார்கள். பீமன் கைகளை உரசியபடி நடந்து ஓரமாக நின்றிருந்த பதுமையைப் பார்த்து வியந்து நிற்கிறான்.)

கண்ணன்: உன்னைப் போலவே இருக்கிறது இல்லையா ? (சிரித்து) துரியோதனன் மல்யுத்தம் பழகும் பொருட்டு தயாரித்து வைத்திருந்தது அது. அவனுடன் பொருதிப் பொருதி மெருகேறி விட்டிருக்கிறது.

அர்ச்சுனன்: அண்ணாவைப் போலவே இருக்கிறது.

கண்ணன்: ஆம், துரியோதனனுக்கு பீமன்தான் எதிரி. அவனைக் கொல்வதற்காகவே பதினைந்து வருடம் பயிற்சி செய்தான் (தணிந்த குரலில்) பீமன் தொடை பிளந்து கொன்றது வெறும் ஒரு எதிரியை அல்ல; தன் சொந்த மரணத்தைத்தான்.

பீமன்: எனது உயரம், எனது எடை, என்னுடைய தோள் விரிவு. . . (அதனருகே நின்று அளவு பார்த்தபடி) துரியோதனிடம் அடிவாங்கி தினம்தோறும் தோற்ற பீமன் இது.

(சிரித்தபடி பீமன் பதுமையை ஓங்கிக் குத்துகிறான். பதுமை கிர்ர் என்ற ஒலியுடன் திருப்பிக் குத்துகிறது. பீமன் அதை எதிர்பாராததனால் தடாலென்று கீழே விழுகிறான். பதுமை மல்யுத்தத்திற்கான பாணியில் கை நீட்டி துள்ளி அறை கூவுகிறது. பீமன் கோபத்துடன் எழுந்து கையோங்குகிறான்.)

அர்ச்சுனன்: அண்ணா, அது வெறும் பதுமை.

(பீமன் தளர்ந்து விலகுகிறான். பதுமை துள்ளுகிறது.)

அர்ச்சுன்: சவால் விடுகிறது. தான் வெறும் உலோகம் என்பதையே அது மறந்து விட்டது போலும்.

தருமன்: அது துரியோதனின் பகைமையின் பருவடிவம். அவன் அழிந்தாலும் அந்தப் பகைவெறி அழிவதில்லை.

கண்ணன்: (சிரித்தபடி) ஏன் யுதிஷ்டிரரே இத்தனை ஸ்தூலமாக இல்லாவிட்டாலும் உங்கள் அனைவர் மனங்களிலும் இதே போன்ற பதுமை எதிரிகள் இல்லையா என்ன ?

(பாண்டவர்கள் அனைவரும் திடுக்கிடுகிறார்கள். பதுமை எக்களித்து சிரித்தபடி ஒருமுறை அரங்கை சுற்றி வருகிறது.)

தருமன்: (பெருமூச்சுடன்) என்ன மிச்சம் யாதவரே ?

பீமன்: உதிரக்கறை படியாத வெற்றியே இல்லை அண்ணா.

(பட்டர் வருகிறார்.)

பட்டர்: மாமன்னர் எழுந்தருளுகிறார்.

பீமன்: (இடக்காக) அவர் இப்போது மன்னர் அல்ல.

பட்டர்: (திரும்பிப் பார்த்து, அலட்சியப் படுத்தி) நாகமரே வாரும்.

(நாகமர் வெளியேயிருந்து வருகிறார். இருவரும் உள்ளே போகிறார்கள். திருதராஷ்டிரர் இருவராலும் வழி நடத்தப்பட்டவராக நடந்து வருகிறார். உயரமான உருவம். இரும்பாலான தோள் வளைகளும், புஜ கீர்த்தியும் அணிந்தவர். கண்களை மூடி, மோவாயை தூக்கியபடி மெதுவாக நடக்கிறார்.)

பட்டர்: (உரத்த குரலில்) குருவம்ச பிதாமகர். அஸ்தினாபுரியை மையமாக்கி உலகாளும் மகா சக்கரவர்த்தி, திருதராஷ்ட்ர மகாபாதர் வருகிறார்.

(திருதராஷ்டிரர் இருக்கையைத் தொட்டுப் பார்த்து மெல்ல அமர்கிறார்.)

திருதராஷ்டிரர்: யாதவரே, நீரும் வந்துள்ளீரா ? (கை நீட்டி துழாவுகிறார்.)

கண்ணன்: (கைகளைப் பற்றியபடி) ஆம், குருவம்சாதிபரே.

திருதராஷ்டிரர்: குருவம்சம் அழிந்தது யாதவரே. குல மூத்தார் மட்டும் எஞ்சுகிறோம். அர்த்தமற்ற நடைபிணங்களாக.

(உள்ளே காந்தாரியின் விசும்பல்களும் தொடர்ந்து உரத்த அழுகையும் கேட்கிறது.)

கண்ணன்: மகாதேவியார் உடல்நிலை.

திருதராஷ்டிரர்: மரணம்தான் அவளுக்கு மருந்து.

கண்ணன்: தர்மாதர்மங்களின் போராட்டமும், வெற்றி தோல்வியும் என்றுமுள்ளவை மன்னரே. ஆனால் உதிர உறவும், குல முறையும் ஒருபோதும் மாறுவதில்லை (தயங்கி, தணிந்த குரலில்) வெற்றி வீரர்களை தாங்கள் வாழ்த்த வேண்டும். தந்தையரின் ஆசியின்றி அவர்கள் நாடாள முடியாது.

(பதுமை வெறிகொண்டு கைகளைத் தூக்குகிறது. ஆவேசத்துடன் அரங்கை வட்டமிட்டு, மெதுவாக அமைதியடைந்து நிற்கிறது. திருதராஷ்டிரர் முகத்தில் உணர்ச்சிகள் அலையடித்து அடங்குகின்றன. அவர் நீண்ட பெருமூச்சு விடுகிறார். மெளனமாக இருக்கிறார். பிறகு மீண்டும் பெருமூச்சு விடுகிறார்.)

கண்ணன்: உமது கடமை இது மாமன்னரே.

திருதராஷ்டிரர்: (பெருமூச்சுடன்) ஆம். என் புதல்வர்கள்தாம் அவர்களும், (மீண்டும் மெளனம்) கண்ணா . . . நீ ஞானி, நீயே கூறு. என்ன இது ? எதற்காக இந்தப் பேரழிவு ? இதைப் பார்த்த பிறகும் நான் ஏன் உயிருடனிருக்க வேண்டும் ? அத்தனை பாவியா நான் ?

கண்ணன்: (திடமான குரலில்) தர்மத்தின் பாதை பல சமயம் எளிய மக்களின் சுக துக்கங்களை மீறியது: புரிதலுக்கு அப்பாற்பட்டது. காலத்துடன் மட்டும் உறவாடுவது (தணிந்த குரலில்) நானும் மனிதனே…

திருதராஷ்டிரர்: (விம்மியபடி) என்னால் தாங்க முடியவில்லை கண்ணா . . . (விம்மல்களை அடக்க முயன்று முடியாமல்) மகனே துரியோதனா, உன் தோள்கள் என் கைகளில் இன்னமும் மிஞ்சியிருக்கிறதே . . . என் தெய்வமே . . .

(உரத்த குரலில் கதறியபடி மயங்கி விழுகிறார். பட்டரும், நாகமரும் வந்து பிடித்துக் கொள்கிறார்கள். ஒருவர் தண்ணீர் கொண்டு வருகிறார். யுதிஷ்டிரனும் கண்ணனும் ஆசுவாசப்படுத்துகின்றனர். அர்ச்சுனன் தலை குனிந்து நிற்க, பீமன் பொறுமையிழந்து கைகளை உரசிக் கொள்கிறான். திருதராஷ்டிரர் மெல்ல அமைதியடைந்து விசும்புகிறார்.)

கண்ணன்: (திருதராஷ்டிரரின் தோள்களைத் தொட்டு) விதியை நம்புங்கள் மாமன்னரே. விதி என்றால் பல்லாயிரம் மாந்தரின் ஆசைகளும், கனவுகளும், கோபங்களும் கலந்து ஒன்றாகி ஓடும் பெரும் நீரோட்டம். நம் வாழ்வு அதில் ஒரு சிறு சருகு. நாம் செய்யக்கூடியது அதிகமில்லை. நமது ஆசைகளும் கோபங்களும் தர்மத்தின் விதிகளுக்கு இசைகின்றனவா என்று பார்த்துக் கொள்வது தவிர, ஏனென்றால் விதி தர்மத்துக்குக் கட்டுப்பட்டது.

திருதராஷ்டிரர்: (தழுதழுத்த குரலில்) என் குழந்தை . . . அவன் முரடன்தான், பேராசைக்காரன்தான் . . . வன்மம் நிரம்பியவன்தான் . . . ஆனால் அவன் வீரன். பெருந்தன்மைமிக்கவன். பாரத வர்ஷத்தை அடக்கி ஆண்டவன். என் செல்வமே! எங்கிருக்கிறாய்! என் கண்ணே! (வெறி கொண்டு) கண்ணா, பாவி . . . எல்லாம் உன்னால்தான். நீ செய்த சதிதான் அனைத்திற்கும் காரணம். (ஆவேசத்துடன் எழுந்தபடி) என் குழந்தை சித்ரகூடக் குளக்கரையில், நாயும், நரியும் கிழிக்க, அனாதையாகக் கிடந்தான். கண்ணா, நீயா தர்மத்தைப் பற்றிப் பேசுவது ? என் குழந்தையை தர்மயுத்தத்தில் யார் தோற்கடிக்க முடியும் ? அவனை தொடை மீது அடித்த அந்த தர்ம விரோதி . . . அவன் . . .

(இரு கரங்களையும் ஓங்கி அடிக்கிறார். பெருத்த ஒலி எழுகிறது. பதுமை வெறிகொண்ட பாவனையுடன் கைகளைத் தூக்கி எழுகிறது.)

கண்ணன்: ஆம், தர்மப்பிழைதான். அதர்மத்தை வெல்ல தூய தர்மத்தால் முடிந்தாக வேண்டும். அதுவே தேவர்களின் நியதி. ஆனால் இந்த மண்ணில் எப்போது அது சாத்தியமாகியுள்ளது ? போர் எந்நிலையிலும் தவிர்த்தாக வேண்டிய தீமை. ஆனால், போர் தொடங்கப்பட்ட பிறகு தர்மத்தின் வெற்றி ஒன்றே இழப்புக்களை நியாயப்படுத்தும்.

திருதராஷ்டிரர்: எதை அதர்மம் என்கிறாய் ? என் மகன் சத்ரியன். மண்ணைக் கைப்பற்றி ஆள்வது அவன் தருமம். அதை அவன் செய்ததில் என்ன பிழை ?

கண்ணன்: இல்லை, நிச்சயமாக இல்லை. மண்ணை மீட்க பாண்டவர் போரிட்டதும் அவர்களுடைய தர்மமே. எவர் வெல்கிறார்களோ அவர்களுக்கு உரிமையானது மண் ஆனால் . . . (அழுத்தமாக) திருதராஷ்ட்ரரே, திரெளபதியை சபையில் துகிலுரிந்தது எந்த தருமத்தின் நியதி ?

(திருதராஷ்டிரர் பொறுமையின்றி கைகளை உரசுகிறார்.)

கண்ணன்: மண்ணைப் போரிட்டு அடையலாம். பொன்னைப் போரிட்டு அடையலாம். மானுட குலத்தின் தலைவிதி அந்தப் போரும், அதன் அழிவும். ஆனால், சக மனிதனின் தன்மானத்தைப் பறிக்க எவருக்கும், எந்நிலையிலும் உரிமையில்லை. (உரக்க) அதர்மம் என்பது ஒன்றுதான் மாமன்னரே. பிறருடைய கவுரவத்தை துச்சமெனக் கருதும் ஆணவம் மட்டும்தான் அது. (அமைதியடைந்து, மெளன இடைவெளி விட்டு) நீங்கள் சற்று முன் கேட்டார்களே, ஏனிந்தப் பேரழிவு என்று. அதன் வேர் எங்குள்ளது தெரிகிறதா ?

திருதராஷ்டிரர்: எனக்குப் புரிகிறது கண்ணா . . . எனக்கு எல்லாம் தெரியும். (குரல் உடைந்து) ஆனால், என்னால் என் மகனை . . . யாதவா நீயும் தந்தையல்லவா . . . ?

தருமன்: (பாய்ந்து திருதராஷ்டிரர் காலில் விழுந்து) என்னைச் சபியுங்கள் தந்தையே. நான் பாவி எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான். என்னைச் சாபமிட்டு அழியுங்கள். என் ஆத்மாவாவது நிம்மதி பெறட்டும். (அவர் கால்களை பற்றி உலுக்கியபடி) சாபமிடுங்கள் தந்தையே, சாபமிடுங்கள் . . .

திருதாஷ்டிரர்: (கைகள் மெல்ல உயர்ந்து, தயங்கி, தருமன் தலைமீது படிகின்றன) முழு ஆயுளுடன் இரு! குன்றாத புகழுடன் இரு! குரு வம்சத்தின் புகழ் உன்னால் காலத்தில் நிலை பெறட்டும்! ஓம் அவ்வாறே ஆகுக.

தருமன்: (ஒரு கணம் உறைந்து, பின் ஆவேசத்துடன் அவர் பாதங்களை தலையால் தொட்டு) நான் புனிதமானேன் தந்தையே . . . இன்று புதிதாகப் பிறந்தேன் தந்தையே . . . (எழுகிறான்.)

அர்ச்சுனன்: (கண்களைத் துடைத்தபடி, அவர் பாதங்களைப் பணிந்து) என் கைகளின் உதிரக் கறை உங்கள் ஆசியால் நீங்க வேண்டும் தந்தையே.

திருதாரஷ்டிரர்: (உறுதியான குரலில்) முழு ஆயுளுடன், குன்றாத புயவளமையுடன் இரு! அனைத்து போகங்களுக்கும் அதிபதியாக இரு! ஓம் அவ்வாறே ஆகுக.

(பீமன் தயங்கி நிற்கிறான். கண்ணனைப் பார்க்கிறான். தருமன் அவன் புஜத்தில் கை வைத்து வணங்கும்படி சைகை காட்டுகிறான். பீமன் தயங்கியபடி வந்து, குனிந்து பணிகிறான்.)

பீமன்: (தயங்கியபடி குரலில்) நான் பீமன் வணங்குகிறேன்.

திருதாரஷ்டிரர்: முழு ஆயுளுடன் இரு. எல்லையற்ற வலிமையுடன் செல்வத்துடன் இரு . . . (குரல் தேய, அமைதியடைந்து மெளமாகிறார். கைகளை உரசிக் கொள்கிறார்) ஓம் அவ்வாறே ஆகுக (பதுமை நகர்ந்து அருகே வருகிறது.) வா, குழந்தை. என்னருகே வா. (பீமனை நோக்கிக் கை நீட்டுகிறார்.)

கண்ணன்: தந்தையிடம் செல் பீமா (பீமன் தயங்க.) அவர் உன்னைத் தழுவ விரும்புகிறார்.

(பீமனை ஒரு கையால் பிடித்துத் தள்ளிவிட்டு அந்தப் பதுமையைக் கண்ணன் திருதராஷ்ட்ரனுக்குத் தருகிறான்.)

திருதராஷ்டிரர்: (உரத்த வெறிக்குரலில்) மகனே . . . துரியோதனா . . .

(பதுமையை இறுக அணைக்கிறார். பதுமை உடையும் ஒலி, கம்பிகள் நெரிபடும் ஒலி, திருதராஷ்டிரரின் வெறிகொண்ட ஒலிகள் . . . பாண்டவர் பீதியுடன் பார்த்தபடி விரைந்து நிற்கிறார்கள். பதுமை உடைந்து சரிகிறது. திருதராஷ்டிரர் வாயில் உதிரம் வழிய மஞ்சத்தில் சரிகிறார்.

தருமன்: (பாய்ந்து திருதராஷ்டிரரைப் பற்றி) தந்தையே . . . தந்தையே . . .

(பட்டரும் நாகமரும் ஓடி வருகிறார்கள். திருதராஷ்டிரரைத் தூக்கி ஆசுவாசப்படுத்துகிறார்கள். தண்ணீர் புகட்டுகிறார்கள்.)

அர்ச்சுனர்: (கைகட்டியபடி சிரித்தபடி நிற்கும் கண்ணனைப் பார்த்து) உன் மனம் ஓடும் விதத்தை என்னால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடிவதில்லை கண்ணா . . .

கண்ணன்: (சிரித்தபடி) நான் எங்கும் என்னைக் காண்கிறேன் . . . நானே இவ்வுலகம்.

திருதராஷ்டிரர்: (கண் விழித்து, தளர்ந்த குரலில்) என்ன ஆயிற்று ?

தருமன்: தாங்கள் . . .

(கண்ணன் சைகை காட்டி அவரைத் தடுக்கிறான்.)

கண்ணன்: (உறுதியான குரலில்) மாமன்னரே, பட்டவர்த்தனமாகப் பேசுவதற்கு என்னை மன்னிக்கவும். இதுதான் தருணம். தங்கள் புறக்கண் மட்டுமல்ல. அகக்கண்ணும் குருடுதான். அது பாசத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது. இத்தனை பேரழிவிற்கும் காரணம் உங்கள் குருட்டுத்தன்மையே. துரியோதனன் மீது நீங்கள் கொண்ட முரட்டுப் பாசமே அவனை அதர்மத்தை நோக்கிச் செல்ல வைத்தது. இப்போதாவது யோசியும்.

திருதராஷ்டிரர்: (மூச்சு ஏறியிறங்க) எனக்கு மூச்சுத் திணறுகிறது. (சட்டென்று எழுந்து) பீமன் எங்கே ? என்ன ஆயிற்று பீமனுக்கு ? என் குழந்தை என்ன ஆனான் ?

தருமன்: பீமன் . . . (கண்ணன் தடுக்க, அமைதியாகிறான்.)

திருதராஷ்டிரர்: (படார் என்று மார்பில் ஓங்கி அறைந்து அழுதபடி) பீமா . . . என் குழந்தையே, என் செல்வமே, உன்னை நான் கொன்று விட்டேன். நான் பாவி. நான் பாவி.

(பீமன் முன்னேற, கண்ணன் சைகையால் தடுக்கிறான்.)

கண்ணன்: அதனாலென்ன, அவன் உங்கள் மகனை அதர்மத்தால் கொன்றவன் தானே ? கணக்கு சரியாகப் போயிற்று . . .

திருதராஷ்ட்ரர்: இல்லை யாதவா . . . நான் பீமனை . . . எப்படிச் சொல்வேன் அதை . . . (திடம் பெற்று) பீமன் என் உயிருக்கு இணையானவன். துரியோதனனுக்கு இணையாக அவனை நான் நேசித்தேன். நான் துரியோதனனிடம் காட்டிய பிரியமும், பீமனிடம் காட்டிய வெறுப்பும் ஒரே ஊற்றிலிருந்து பெருகியவை என்று இப்போது உணர்கிறேன். நான் மகாபாவி. மகனைக் கொன்ற நீசன். (கைகளை அகல விரித்து தவிப்புடன் தலையை அசைத்தபடி) யாதவா எப்படி வந்தது அந்த மிருகவெறி எனக்கு ? அந்தக் கணம் வரை அதை நான் உத்தேசிக்க வில்லை. அப்போது . . . ஏதோ நரக சக்தி என்னில் குடியேறி விட்டது. இல்லை, நான் மழுப்பவில்லை. நான் பாவி . . . மானுட வடிவில் வந்த மிருகம் . . . மனமும் இருண்ட கபோதி . . .

பீமன்: (திருதாஷ்டிரர் முன் தளர்ந்தவன் போல மடங்கிச் சரிந்து) தந்தையே, நான் பீமன், சாகவில்லை.

கண்ணன்: நீங்கள் உடைத்தது உங்கள் மகன் உருவாக்கி வைத்திருந்த பீமனின் பதுமையை.

(திருதராஷ்டிரர் முதலில் துணுக்குற்று, பிறகு பீமனை ஆரத்தழுவி, குலுங்கி அழுகிறார். அவனை முத்தமிடுகிறார். தோள்களைத் தடவுகிறார். அவர் உடலும் தலையும் நடுங்குகின்றன.)

பீமன்: என்னை மன்னியுங்கள். தந்தையே (விம்மி கண்ணீர் விடுகிறான்.)

திருதராஷ்ட்ரர்: (பீமன் கைகளைப் பற்றிய படி) பீமா என் மீது உனக்குக் கோபம்தானே ? என்னை நீ வெறுக்கிறாயல்லவா ?

பீமன்: (அவர் கைகளில் முகம் வைத்தபடி) தந்தையே, இந்தக் குருவம்சத்தில் நான் எவர் மீதாவது கலப்பற்ற பிரியம் கொண்டிருக்கிறேன் என்றால் அது உங்கள் மீதுதான். உங்களை ஒருபோதும் என்னால் வெறுக்க முடியாது. (பெருமூச்சுடன் அமைதியடைந்து) தந்தையே, இனி எதையும் மறைக்க விரும்பவில்லை என்றும் உங்களை உள்ளூர வழிபட்டு வருபவன்நான். சிறு வயதில் நீங்கள் உணவு உண்பதை ஓரமாக நின்று பார்த்து வியப்பேன். பெரும் பாறைகளைத் தூக்கி நீங்கள் உடற்பயிற்சி செய்துவிட்டுப் போன பிறகு, அக்கற்களைத் தொட்டபடி அமர்ந்து கனவு கண்டு மகிழ்வேன். ஆயிரம் யானை பலமுள்ளவர் என உங்களைப் பற்றி சூதர் பாடிக் கேட்கையில் உன் உடம்பு சிலிர்க்கும். என் கனவெல்லாம் உங்களைப் போல ஆகிவிட வேண்டும் என்பதுதான். (அமைதிக்குப் பிறகு) தந்தையே, உங்கள் ஸ்பரிசம் என் மனதில் அந்தரங்கமான கனிவொன்றை ஊற வைத்ததை மிக இளம் வயதிலேயே உணர்ந்தேன்.

திருதராஷ்டிரர்: (உணர்ச்சிமிக்க குரலில்) பீமா . . . நீ . . . நீ . . . உண்மையில் . . .

கண்ணன்: (இடையே புகுந்து) சில உண்மைகள் வெளிவருவது பெரும் பாவம்.

திருதராஷ்டிரர்: (பெருமூச்சுடன்) ஆம்.

பீமன்: உங்கள் மகனாக இருந்திருக்கக் கூடாதா என்று எண்ணி, பலவீனமும் நோயாளியுமான பாண்டுவின் மகனாக இருப்பதை எண்ணி, நான் மனம் குமையாத நாள் இல்லை. நான் ஏன் துரியோதனனை வெறுத்தேன் என்று என் மனம் நன்கு அறியும். உங்கள் மைந்தர்கள் ஒவ்வொருவரையும் நான் வெறுத்தேன். அவர்கள் உங்களை தந்தையாகப் பெற்றவர்கள். உங்கள் அணைப்புக்கும் முத்தங்களுக்கும் உரிமையாளர்கள்.

திருதராஷ்டிரர்: என் மனம் உன்னை ஆரத்தழுவாத நாள் இல்லை குழந்தை. உன் வெற்றிகளை கேட்கும் போதெல்லாம் என் மனம் பூரிப்படைந்தது.

பீமன்: தந்தையே, நீங்கள் அப்பதுமையை நொறுக்கிய கணம் நான் இறப்பதை கண்டேன். தூள் தூளாக்கியது என் அகந்தைதான். தந்தையே இனி எனக்கு தடைகளேதும் இல்லை. இனி நான் . . . (அவர் பாதங்களில் சரிந்து) இனி நானே துரியோதனனாக இருக்கிறேன் . . .

திருதராஷ்டிரர்: (பீமனின் தலையை வருடியபடி சிறிது நேரம் பேசாமலிருக்கிறார். பிறகு பெருமூச்சு விட்டபடி தொடர்கிறார்) கடோத்கஜனின் மரணம் உன் மனதை எத்தனை தூரம் வருத்துகிறது என்று நான் அறிவேன். தாங்கிக் கொள் மகனே, இது நம் விதி. (பெருமூச்சு விடுகிறார். பீமன் கைகளால் முகத்தைத் துடைக்கிறான்.) நீ நானேதான். பலசாலி , மூர்க்கன். ஆனால் உன் விதியும் என்னைப் போலவே ஆகிவிட்டதே மகனே. போர் நியாயப்படி கெளரவர்களை வென்ற உனக்குத் தான் அஸ்தினாபுரத்தின் மணிமுடி சொந்தம். ஆனால், நீ அதை சூட முடியாது. உன் மனம் அதனால் தளரக் கூடாது. அதன் பிறகு உனக்கு ஒரு போதும் நிம்மதி இருக்காது. உனது நற்பண்புகளெல்லாம் அந்த வெந்நெருப்பில் பொசுங்கிப் போய்விடும். நீயும் . . . (விம்மி) நீயும் குருடனாகி விடுவாய் . . . உனக்கு அந்த விதி வேண்டாம்.

பீமன் : உத்தரவு தந்தையே . . .

திருதராஷ்டிரர்: இச்சைகளைத் தொடரும் காட்டு மனிதனாக இரு. வன மிருகம்போல உன் ஆத்மா சுதந்திரமாக இருக்கட்டும்.

பீமன்: ஆம். அதுதான் என் வழி.

திருதராஷ்டிரர்: எங்கே சிறுவர்கள் ?

(நகுலனும் சகாதேவனும் வந்து ஆசி பெறுகிறார்கள்.)

திருதராஷ்டிரர்: (எழ முயன்றபடி) பட்டரே, வாரும்.

பட்டர்: (ஓடிவந்து) உத்தரவு.

திருதராஷ்டிரர்: இன்று நீர்க்கடன் முடிந்ததும் நான் வானப்பிரஸ்தம் போக உத்தேசித்திருக்கிறேன். . . ஏற்பாடுகள் செய்யும்.

தருமன்: (அதிர்ச்சியுடன்) தந்தையே, தாங்கள் ஏன் இப்போது இம்முடிவிற்கு வர வேண்டும் ?

திருதராஷ்டிரர்: வானப்பிரஸ்தம் போவது குல தருமம் அல்லவா ?

தருமன்: இந்நிலையில் தாங்கள் எங்களை உதறிவிட்டுப் போவதற்கு என்ன பொருள் ? நாங்கள் என்ன அபச்சாரம் செய்தோம் ?

திருதராஷ்டிரர்: என் மனம் அதற்குத் தயாராகிவிட்டது குழந்தை.

கண்ணன்: தங்களுடைய மனமாற்றத்திற்கு என்ன காரணம் ? அதை அறியாமல் இவர்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் ?

திருதராஷ்டிரர்: (தயங்கி) அதை ஏன் இனி மறைக்க வேண்டும் ? யாதவா, அப்பதுமையை நான் என் மார்போடு தழுவியபோது, ஒரு கணம் என் மனதில் ஓர் எண்ணம் ஓடியது. நான் என்னையே கொல்வதாக (தலைகுனிந்து) ஆம், நொறுங்கியது நான்தான். என் அகக்கண் திறந்து விட்டது (மெளனத்திற்குப் பிறகு, முனகலாக) துரியோதனன் மீது நான் கொண்ட மூர்க்கமான பாசம் கூட ஏதோ உள்ளார்ந்த வெறுப்பை அல்லது பயத்தை மூடிவைப்பதற்கான முயற்சிதான் போலும்.

கண்ணன்: தாங்கள் இங்கு தங்கள் எண்ணங்களை நிறுத்துவது நலம்.

திருதராஷ்டிரர்: (எழுந்து) களைப்பாக உள்ளது. (பட்டரின் தோளைப் பற்றியபடி நடந்து, மூச்சிரைக்க நின்று), பீமா, இப்படி வா.

(பீமன் அவரை அணுகி பிடித்துக் கொள்கிறான். உள் வாசலருகே இருவரும் தோள்களைத் தொட்டபடி நிற்கிறார்கள். உடல்கள் உரையாடுவது போல. முயங்கி ஓங்கி அகன்ற இரு உடல்கள்.)

நகுலன்: இரு மதகஜங்கள் போல . . .

கண்ணன்: (திரும்பிப் பார்த்து புன்னகையுடன்) ஆம். ஒரே உயரம், ஒரே பருமன்.

(திருதராஷ்டிரரும் பீமனும் உள்ளே போகிறார்கள். பாண்டவர் சற்று இலகுவாகிறார்கள்.)

தருமன்: எனக்கு ஒன்று புரியவில்லை கண்ணா . . . அந்தப் பதுமை ஏன பெரியப்பாவிற்கு அவர்தான் என்றுபட்டது ?

கண்ணன்: அதை நாம் பீமனாக எண்ணியது விஷயத்தின் ஒரு பக்கம் மட்டுமே. (புன்னகையுடன் நடந்து பதுமையை நெருங்கி அதைச் சுட்டிக்காட்டி) இதன் அளவுகளை மாமன்னரின் உடலளவுகளுடன் ஒப்பிட்டுப் பார்.

தருமன்: ஆம். (வியப்புடன்) பெரியப்பாவேதான். அப்படியானால் . . .

(பாண்டவர்கள் உறைந்து நிற்கிறார்கள். அங்கு முழுக்க நிறையும் இறுக்கமான மெளனம்.)

அர்ச்சுனன்: அப்படியானால் துரியோதனின் எதிரி உண்மையில் யார் ?

கண்ணன்: (சிரித்தபடி) தந்தைக்கும் மகனுக்குமான உறவு சொர்க்கத்துக்கும் நரகத்திற்குமான உறவு போல. அவ்வளவு பக்கம் அவ்வளவு தூரம். (மேலும் உரக்கச் சிரித்தபடி) யோசிக்காதே. மானுட உறவுகள் யோசித்தால் தீராதவை.

தருமன்: (பதுமையை உற்றுப் பார்த்தபடி) பயங்கரமான பதுமை. எத்தனை உக்கிரம் . . . எத்தனை வெறி! ஏதோ மர்மமான ஊற்றிலிருந்து ஊறி வரம் வெறி.

(சால்வையை சரி செய்தபடி தருமன் வெளியேறுகிறான். தொடர்ந்து பாண்டவர்கள் ஒவ்வொருவராக பதுமையைப் பார்த்தபடி வெளியேறுகிறார்கள். நாகமர் வந்து அமர்ந்து பதுமையை தூக்கி நிறுத்துகிறார். சரி செய்ய ஆரம்பிக்கிறார்.)

பீமன்: (வெளிவந்து) போய்விட்டார்களா ? (பதுமையைப் பார்த்து லயித்து நிற்கிறான்.) என் உடல்! ஆத்மா இல்லாத உடல் . . . (கனத்த நடையுடன் வெளியேறுகிறான்.)

(நாகமர் பதுமையை இறுக்கிறார். அதன் முகத்தில் குரோதம் திரள்கிறது.)

பட்டர் : (வெளிவந்து) என்ன இது ? எதற்கு இந்தச் சனியனை மீண்டும் எழுப்பினீர்.

நாகமர்: (திரும்பாமல்) இதற்கு அழிவே இல்லை பட்டரே. ஆயிரம் உயிர், ஆயிரம் ஆத்மா . . . பல்லாயிரம் பிறவி இதற்கு . . .

(பதுமை நடு அரங்குக்கு நகர்கிறது. அதன் முகத்தில் வெறிமிக்க இளிப்பு பரவுகிறது. விளக்குகள் அணைகின்றன. ஒளிவட்டம் பளபளக்கும் ஆயுதங்கள் வழியாக நகர்கிறது. போரின் ஒலிகள் உரத்து, ஒப்பாரிகளாக மாறி, தணிந்து தேம்பல்களாக ஒலித்து, ஓய்ந்து, விம்மல்கள் மட்டும் ஒலித்து, நிற்கிறது. பதுமையின் முகம் மீது ஒளி நிலைக்கிறது. வெறியுடன் எக்களிக்கும் அதன் முகம் கடைசியாக மறைகிறது. அரங்கு இருளடைகிறது.)

*************************************************

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்