பணம் தேடுவதில் உள்ள ஆர்வம் குடும்பப்பிணைப்பில் இல்லை!

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

அக்னிப்புத்திரன்


உறவுகள் மனிதனுக்கு மிகவும் முக்கியமானவை. பந்த பாசமே மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அந்தப் பந்தம், அந்தப் பாசம் உருவாகி, மலர்ந்து, மணம் வீசும் அற்புத பூங்காதான் குடும்பம்! பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்றைய பரபரப்பான வாழ்க்கைச்சூழலில் குடும்ப உறவுகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. குடும்பப்பிணைப்பு, குடும்பம் என்பது கணவனும் மனைவியும் தங்களுடைய குழந்தைகளோடும் சுற்றத்தோடும் கூடி வாழும் சமூக அமைப்பின் ஒரு அங்கம் ஆகும். இதில் குடும்பப்பிணைப்பு என்பதோ, குடும்ப உறுப்பினர்களிடையே இருக்க வேண்டிய நெருக்கமான உறவைக் குறிக்கின்றது.

வெறும் கற்களையும் சிமெண்டையும் கொண்டு உருவாக்கப்படும் கட்டடத்தில் குடும்பப் பிணைப்பு என்னும் விலைமதிப்பற்ற மாணிக்கம் பொருத்தப்பட்டு அழகு சேர்க்கும் போதுதான் அது வீடு என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் இன்று பணம் பணம் பணம் என்று பொருள் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்! பணம் என்று வந்துவிட்டால் அதைத் தேடுவதில் உள்ள ஆர்வத்தைக் குடும்பப் பிணைப்பில் காட்ட மறந்து விடுகிறார்கள்.

இன்று கணவனும் மனைவியும் மனம் விட்டுப் பேசிக்கொள்ள முடிகின்றதா ? நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட ஒரு நல்ல குடும்பத்தை தனது குடும்பவிளக்கில் படைத்துக்காட்டினார். வேலை இடத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டு மிகுந்த வருத்தத்துடன் வீடு திரும்புவார் குடும்பத்தலைவர். உடனே மனைவி, ஆறுதல் அளிக்கும் வகையில்,

“நண்புளார் தீமை நாடினும் அதனைப்

பண்புளார் பொறுப்பார்; பகைமை கொள்ளார்!

அத்தான் மறப்பீர்! அகம் நோகாதீர்….”

என்று பதமாக, இதமாகப் பக்குவமாகத் தேறுதல் கூறுவாள் குடும்பத்லைவி!

ஆனால்…இன்று, “அய்யய்யையோ, எனக்கே மண்டையெல்லாம் ஓடுது…எங்க ஆபிஸ்லயே எனக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சனைகள்! நீங்க வேற.. உங்க பிரச்சனைய உங்களோடயே வைத்துக் கொள்ளுங்க”இந்த வசனம்தான் எல்லாக் குடும்பங்களிலும் கேட்கிறது!

பிரச்சனைகளைக் காதுகொடுத்து கேட்கனுமேன்னு, கணவனைப் பார்த்து மனைவி பயந்து ஓடுறதும், மனைவியைப் பார்த்து கணவனும் பயந்து ஓடுறதும்…இவங்க இரண்டு பேரையும் பார்த்துப் பிள்ளைகள் பயந்து ஓடுறதும்…! இப்படி இருக்குங்க இன்றைய குடும்பத்திலே பிணைப்பு! வேலை வேலை வேலை என்று பெரும்பாலானவர்கள் அல்லும் பகலும் அயராது உழைக்கின்றனர். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி ஒரு வேளை உணைவையாவது ஒன்றாகச் சாப்பிட முடிகின்றதா ? முடியவில்லையே! என்ன காரணம் ? இப்போது புதியதாக ஒரு வழக்கம் வந்துருக்குங்க. பிள்ளைகளும் பணம் சம்பாதிக்க கிளம்பிடுறாங்க! விடுமுறை கிடைத்தால் போதும் பிள்ளைகளும் வேலைக்குக் கிளம்பிப் போயிடுறாங்க. குடும்ப உறவுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தக்கூட முடியாத ஒரு அவலநிலை! குடும்ப வாழ்க்கையில், குடும்ப உறுப்பினர்களிடம் கலந்துரையாடும் பயனுள்ள நேரம்(Quality time ) கொஞ்சம் கூட இருப்பது இல்லை!

பாடுபட்டு உழைத்து அழகான பெரிய வீடு வாங்குறாங்க. விலை உயர்ந்த கட்டில் வாங்குறாங்க. நல்ல மெத்தையும் வாங்குறாங்க! ஆனால், கொடுமையைப் பாருங்க! கூடவே தூக்கத்தையும் வாங்குறாங்க! தூக்க மாத்திரை சாப்பிட்டத்தான் ஒருசிலருக்குத் தூக்கமே வருது!

எப்போதும் பொருள் ஈட்டும் சிந்தனையில் ஓயாமல் உழைக்கும் மக்கள், மன உளைச்சலால் பாதிக்கப்படுகிறார்கள்.!

ஒரு புதுக்கவிதை…

காசு, பங்களா, காவலாளி

எடுபிடிக்கு ஏழட்டு ஏவலாளி

எல்லாம் இருந்தும் என்ன ஆச்சி ?

நிம்மதி மட்டும் போயே… போச்சி!

மகிழ்ச்சி என்பது பணத்தால் மட்டும் வருவதில்லை. பணம் வாழ்க்கைக்குத் தேவை. ஆனால், பணமே வாழ்க்கை ஆகிவிடாது. பாசத்தைத் தொலைத்துவிட்டு பணத்தைத் தேடுவது குடும்பப்பிணைப்பை வளர்க்குமா ? வருடத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் வெளியில் அழைத்துச் சென்று, பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் வாங்கிக் கொடுத்துவிட்டால் மட்டும் அன்பு மழை அருவியாய்க் கொட்டோ கொட்டுன்னு கொட்டிடுமா ?

பணம் பகட்டுக்கு உதவலாமே தவிர அது பாசத்தைத் தந்துவிடாது! பிள்ளைகளுக்காகப் பணம் சேர்க்கின்றேன் என்று கூறி பணத்தின் பின்னால் அலைகிறார்கள் பெற்றோர்கள்! பிள்ளைகளோ பாசத்திற்காக ஏங்குகிறார்கள்! இதுதான் இன்றைய உண்மையான நிலை!

“இன்பமோ துன்பமோ இரண்டிலும் இணைந்து

ஏற்றமோ தாழ்வுவோ எதையும் பகிர்ந்து

மாற்றமில்லா மனத்தொடு அகம் மகிழ்ந்து

வாழும் வாழ்வே வளமிகு குடுப்பப்பிணைப்பாகும்”

-அக்னிப்புத்திரன்.

Series Navigation

author

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்

Similar Posts