படம்

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

எஸ். அர்ஷியா


கேமராவைக் கையாள்வது எப்படி என்று ஜஹிர்தான் எனக்குச் சொல்லித் தந்தான். அவன் தொழில்முறை போட்டோகிராபர் அல்லன். பம்ப்செட் மோட்டார், கம்ப்ரஷர் மெஷின், ஹோஸ் பைப், கப்ளிங் என்று கனரக இரும்புப் பொருட்களை விற்பவன்.

ஆனால், பூப்போல கையாளக்கூடிய கேமராக்களை அவன் வைத்திருந்தான். யாஷிகா, பென்டெக்ஸ், மமியா, நிகான், லைகா என்று அனைத்துவகைக் கேமராக்களும் அவனிடம் இருந்தன. அதுவேறில்லாமல், ஒவ்வொரு கேமராவுக்கும் தனித்தனியாக நார்மல் லென்ஸ்போக, ஜூம், வைடு என்று தூரத்தை அருகே கொண்டுவரும் லென்ஸ் களும்கூட இருந்தன.

தமிழில் வெளிவரும் அனைத்து முன்னணிப் பத்திரிகைகளிலும் எபபோதாவது பிரசுர மாகும் தரமானக் கட்டுரைகளின் கீழே படங்கள் : ஜஹிர் என்று, அவன் பெயர் வரும். “ஒரு படம் எடுத்தோம்ன்னாய்யா, அது காலத்துக்கும் நம்ம பேரைச் சொல்லணும். சும்மா, நானும் படம் எடுத்தேன்னு எடுக்கக்கூடாது. படத்தைப் பார்க்குறவங்களுக்கு ஆப்ஜெக்ட் பத்துன எல்லாத் தகவல்களையும் தெளிவாச் சொல்ற மாதிரி பிரேம்க்குள்ளே கொண்டு வந்துறணும். அந்தப் படம்தான் காலத்துக்கும் நிக்கும்” என்பான்.

அரசியல் சமூக வார இதழ் ஒன்றுக்கு, தென் மாவட்டச் செய்தியாளர் என்று ரிப்போர்ட் டர் கார்டையும், ஆபிஸில் கொடுத்த ஹாட்ஷாட் வகையறா டப்பா கேமராவையும் வாங்கிக்கொண்டு, அவனைப் போய்ப் பார்த்தபோது, வாழ்த்துகள் சொல்லி, கேமராவை வாங்கிப் பார்த்தான். “என்னய்யா இது? இதவெச்சு நீ எடுக்குற படம், செய்திக்கு சாட்சி மட்டுந்தான்ய்யா சொல்லும். கட்டுரையின் தன்மை, போக்கு, பிரதிபலிப்புனு இந்த கேமராவால எதையும் சாதிக்க முடியாது. இந்தா, இதை வெச்சுக்க” என்று, தனது மமியா கேமராவையும், அதன் உபா¢ப் பொருட்களையும் தூக்கித் தந்துவிட்டான்.

“இத எப்டி ஹேண்டில் பண்றது ஜஹிர்? எனக்கு ஆள தூரநிறுத்தி, ‘டடக்’ன்னு சத்தம் வர்ற மாதிரி பட்டனை மட்டும் அழுத்தத் தொ¢யும்” என்றபோது சிரித்துவிட்டான்.

“வொ¢குட்… தொ¢யாததை தொ¢யாதுன்னு சொன்ன உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சு ருக்கு” என்று கேமராவை பாகம் பாகமாய் விளக்கி, எப்படி படம் பிடிப்பது என்று செய்து காட்டி, அறிவுரைச் சொல்லி, “ஆல் த பெஸ்ட்”டுடன் அனுப்பி வைத்ததும் அவன்தான்.

இந்தப் பத்து ஆண்டுகளில் எனது கட்டுரைகளும், புகைப்படங்களும் வெளிவராத பத்திரிகைகளே இல்லை என்று சொல்லுமளவுக்கு முன்னேற்றம்தான். சில படங்கள் வாசகர்களால் சிலாகித்து எழுதப்படும்போது, எனக்குள் ஜஹிர் வந்து போவான். அவன் சொன்ன வாசகங்களும் வந்து போகும்.

ஸ்டாண்டர்ட் நியூஸ் பத்திரிகை ஆசிரியா¢டம் பேசிக் கொண்டிருந்தபோதுதான் அதைச் சொன்னார். “பெர்லின்ல போட்டோ கான்டெஸ்ட் ஒண்ணு நடக்கப் போகுது. உன் படங்கள்ல சிறப்பான படம்ன்னு நீ எதை நினைக்கிறியோ அதை அனுப்பி வையேன்!” என்று.

என்னால் எந்தப் படத்தையும் இனம் பிரித்து, ‘இது நல்லபடம்… இது, நல்லா இல்லாத படம் ‘ என்று அறுதியிட முடியவில்லை.

அதை அவா¢டம் சொன்னபோது, “ஒரு படைப்பாளியின் நிஜத்தன்மை உன்ட்ட இருக்கு. நீ ஆல்பத்தைக் கொண்டுவந்து கொடு. நான் பாக்குறேன்” என்று சொல்லி விட்டார்.

ஆல்பத்தைக் கொண்டுவந்து கொடுத்தபோது, அசந்து போய்விட்டார். “ஆமாய்யா, நீ சொன்ன மாதிரிதான் இருக்கு. இருந்தாலும் அனாதைச் சிறுவன் படத்தை அனுப்பி வை” என்றார்.

அனுப்பினேன். அதிர்ஷ்டம் அந்தப் படத்தை வளைத்துவிட்டது. உலக அளவில் இரண் டாவது சிறந்த படம் என்று, அது தேர்வானது.

·

என்னிடம் இன்று எல்லாவகை கேமராக்களும், அதன் உபா¢ப் பொருட்களும் இருக்கின் றன. சொல்லப்போனால், போன வாரம் சந்தையில் வெளிவந்த அற்புத ரகம்கூடவும்!

என்றாலும் ஜஹிர் கொடுத்த கேமராவை மிகப் பத்திரமாக வைத்திருக்கிறேன் – ஒரு நண்பனின் அன்பளிப்பாக.

தேசிய அளவிலான ஒரு பிரச்சனைக் கட்டுரைக்கு நெல்லைக்குப் போய்த்திரும்பும் வழியில் மதுரையில் தங்க நேர்ந்தது. என் ஜனன பூமி. உறவினர்கள் நிறைய இருந் தாலும் ஜஹிர் வீட்டில தங்கினேன்.

“பாக்குறேன்ய்யா. உன் படம் ரொம்ப அற்புதமா இருக்கு. பெர்லின் அவார்ட் வாங்குனத பத்திரிகையில பார்த்தப்ப சந்தோஷம் தாங்க முடியல” என்று முதுகில் தட்டினான்.

“எல்லாம் நீ தந்த ஊக்கம் தான்”

“ம்” என்று கண்ணடித்தான்.

என் நிஜ சந்தோஷத்தை அவன் பொய்யில்லாமல் அங்கீகா¢த்ததில், எனக்கும் சந்தோஷந்தான்.

அவன் வீட்டில் அலங்காரத்தைப் பார்த்தேன். விதவிதமாக அவன் மனைவியையும், மகளையும் படம் பிடித்து சுவற்றில் மாட்டியிருந்தான். ஒருபடத்தில்கூட அவன் இல்லை.

அதுபற்றிக் கேட்டேன்

“என்ன பொ¢ய படம்? நம்ம மூஞ்சிக்கு அது ரொம்ப அவசியமாக்கும்?” என்று சிரித் தான்.

“நான் ஒருபடம் எடுத்துக்கிறேன்யா!” என்றபோது, “எதுக்குய்யா வேணாம்” என்றான். சொன்னானே தவிர, நான் படம் எடுத்ததைத் தடுக்கவில்லை.

·

ஊர்வந்து சேர்ந்த ஆறாவது நாள். “சார், உங்களுக்கு ஒருபேக்ஸ் வந்துருக்கு” என்று நீட்டினான், ஆபீஸ் பையன்.

என் பெயருக்கு ஜஹிரின் மனைவி அனுப்பியிருந்தாள்.”உங்கள் நண்பர் திடீரென்று மாரடைப்பால் காலமாகிவிட்டார். அவர் படம் ஒன்று எங்களுக்குத் தேவைப்படுகிறது. அவர் எடுத்துக்கொண்ட படம உங்களிடம் மட்டும்தான் இருக்கிறது. தயவுசெய்து ஒரு பிரதி அனுப்பி வைத்தால், நன்றாக இருக்கும்” என்று கடிதம் முடிந்திருந்தது.

·

arshiyaas@rediffmail.com

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா