பகையே ஆயினும்….

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

பொ.கருணாகரமூர்த்தி


இந்த வீட்டுக்கு ஆறுமாசத்துக்கு முன்னர் குடிவந்திருந்தோம். வரும் போதே எதிர்வீட்டுத் துருக்கிக்காரன் மாடிப்படிகளில் பெரிய பலகை ஒன்றை வைத்து இறைச்சி வெட்டிக்கொண்டிருந்தான்.

தரையெங்கும் திட்டுதிட்டாக இரத்தமும், இறைச்சியும், எலும்புத் துகள்களும் பறந்திருந்தன.

“ஏன் உள்ள வைச்சுத்தான் வெட்டிறதுக்கென்ன…. ?”என்றேன்.

“சுவர் பழுதாகிவிடாதா…. ?” என்று பதில் கேள்வி போட்டான்.

“எல்லாருமே படியில வைச்சுத்தான் இறைச்சி வெட்டுவாங்களோ இங்கே…. ?”என்றேன்.

அவன் ஒரு கருடப்பார்வை பார்க்க…. மனைவி சொன்னாள்: “ அவனோட என்னத்துக்கு வீண் பேச்சு…. துஷ்டனைக் கண்டால் தூரவிலகென்றிருக்கு…. இந்த வீடு எமக்குத்தோதுப்படாது…. வேற வீடு பார்த்துப்போயிடுவம்….”

தளபாடங்களை ஏற்றி இறக்கின என் தேக நோ எடுபடவே இன்னும் மாதமாகும் போல இருந்தது, இந்த வீடு எடுக்கப் பட்ட மாய்ச்சல் ஒன்றும் அவள் அறியாததல்ல.

இருந்தும் ஏதோ நூறுமார்கிற்கு டசின் வீடு கிடைப்பதான பாவனையில் பேசினாள்;….

“முடிஞ்ச வரைக்கும் சமாளிச்சுப்பார்ப்பம்…. அறவே ஏலாமப்போனால் பிறகு பார்ப்பம்….”

“ம்ம்ம்ம்….எல்லாம் உங்களுக்கு பிறகு பார்ப்பந்தான்….”

கழுத்தை நொடித்தாள் பெரிய அம்மாமி மாதிரி!

அடுத்த சனிக்கிழமை முழுவதும் சுவரில் எலெக்றிக் டிறில்லரால் தொளைகள் போட்டுக்கொண்டிருந்தான். சத்தம் நாராசமாய் காதைத்தொளைக்கவும் இளையவள் சாம்பவி (ஆறுமாதம்) பயந்து வீல் என்று அலறினாள்.

இன்றைக்கு வீட்டில் இருக்கமுடியாதென்று தோன்ற….

‘கனகாலமாய் எங்களைத் தங்களிடம்; விசிட் பண்ணுவதேயில்லை’ என்று குறைப்பட்டுக்கொண்டிருந்த நண்பன் ஒருவனுக்குப் போன்பண்ணினேன்.

“உனது நெடுங்காலத்தைய குறை இன்று தீர்க்கப்படுகிறது.”

மனைவி ஓடிவந்து ரிசீவருக்கு மறுபுறமிருந்த காதில் கிசுகிசுத்தாள்.

“சொல்லாமல் கொள்ளாமல் போய் நிக்கப்போறம்…. கறிபுளி இருக்கோவென்றெல்லாம் கேளுங்கோ”

“சாய் கேட்டாலுந்தான்…. இல்லையென்டு ஆரும் சொல்லுவினமே….எதுக்கும் வழியில இறங்கி மீன் வாங்கிக்கொண்டுபோவம்”.

போனோம்.

சனி விடுமுறைநாள் முழுவதாய் நண்பன் குடும்பத்துடன் முடிந்தது.

மறுநாள் ஞாயிறு பிள்ளைகளுக்கு தமிழ்ப்;பள்ளிக்கூடம். மனைவி கூட்டிப்போய்விடுவாள.; நான் வீட்டில் தனியே சாம்பவியைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவளோ தூங்க மறுத்து ஈரத்துவாலையைப் பிழிவதைப்போல் உடம்பை முறுக்கிக் காட்டி என்னைப் பயமுறுத்திக் கொண்டிருந்தாள்.

போதாக்குறைக்கு துருக்கிக்காரன் பாக்கியிருந்த தொளைகளைப் போடத்தொடங்கினான். அந்த டிரில்லரோ நிமிடத்திற்கு 500 தடவைகள் அடித்து அடித்து தொளைபோடும் வகையானது.

சைரன் பிடித்தது போல் சத்தம் வரவும் சாம்பவி மீண்டும் பயந்து அலறினாள்!

நேரே அவனிடம் போனேன்.

“உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா…. குழந்தைதூங்கமுடியாமல் அழுகிறது…. நேற்றுப்பூராவும் வீட்டிலேயே இருக்கமுடியாதபடி பண்ணினாய்…. போதாக்குறைக்கு இன்றைக்கு வேறு ஆரம்பித்துவிட்டாய்! ஓய்வுநாளில் அமைதியைக் கெடுக்கக்கூடாதென்று சட்டமிருக்கு…. தெரியாதா உனக்கு ? “

“சட்டத்திற்கு எனக்கு இன்றைக்கு மட்டிலுந்தான் இதுகள் பண்ண நேரம் கிடைக்குமென்ற சங்கதி தெரியுமா ?”

அதிபுத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு பதில்கேள்விபோட்டான். இனி இவனோடு குஷ்தி போடுவதில்தான் வாழ்வின் பெரும்பகுதி கழியப்போகிறது என்று எண்ணிக்கொண்டேன்.

யார்தான் போன் பண்ணினார்களோ…. சற்று நேரம் கழித்து 2 பொலிஸ்காரர்கள் வந்து அவனை விசாரித்து இரையவேண்டாமென்று எச்சரித்து விட்டுப்போனார்கள்.

பொலீஸ் போனதும் பஸ்ஸர் ஒலித்தது. கண்ணாடியினூடு பார்த்தேன். இறைச்சி வெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு துருக்கி நிற்கிறார்.

என்னிடமும் திரிசூலமொன்று ஒன்றரை மீட்டர் நீளப் பிடியுடன்

( பண்ணைகளில் உருளைக்கிழங்கு கெலிக்கப்பாவிப்பது) கூரிய இலைகளுடன் இருந்தது , அதை எடுத்துக்கதவின் பின்னே தயாராக வைத்துவிட்டு கதவைத்திறந்தேன்.

“பொலிஸிலேயா கொம்பிளெயின் பண்ணிறாய்….பாக்கிஸ்த்தானி…. ? இன்னொரு தரம் பண்ணினேயென்றால்….சொருகிவிடுவேன்….சொருகி..!”

என்றுவிட்டுக்கத்தியின் வாதாரையை செளவுரக்கத்தியைப்போல் உள்ளங்கையில் தடவிக்காட்டினான்.

“என்னட்டும் இருக்கடா ஐட்டம்….”

லபக் எனத்திரிசூலத்தை எடுத்தேன்.

“நீ கத்திசொருகிற ஆளென்றால் நான் உன் குடலையே பிடுங்கி உன் கழுத்திலேயே போட்டுவிடுற டைப்பாக்கும்….” என்றுகொண்டு சூலத்தின் முனையை அவன் வயிற்றில் வைக்கப்போனேன் . மிரண்டுபோனான்….!

“உன்னை பிறகு கவனிக்கிறமாதிரி கவனிக்கிறன்….”

“உப்பிடி எத்தனையோ வீரசிங்கங்களைக் கண்டிருக்கிறன் …. நீ மாறு….!”

தரையில் காலை ஓங்கி உதைத்துவிட்டு வந்தவேகத்திலேயே திரும்பிப்போனான்.

கடைக்குப் போயிருந்த மனைவியிடம் துருக்கி ஆவேசம் பொங்கிக் கெம்பின விஷயம் நான் சொல்லவேயில்லை. சொன்னால் ‘வேற வீடு…. ‘ என்று உடனேயே ஆரம்பித்து விடுவாள்!

அடுத்த நாள் மாலை நான் வேலையால் வந்தும் வராததுமாய் மகன் கிரிதரன் ஓடி வந்து சொன்னான்:

“இன்றைக்கு ஹாஸன்ட பப்பா ஒரு பெரீய்ய்ய ஆடு வாங்கியாந்தவர்….!” (துருக்கிதான்).

“என்னடா உளர்றாய்…. ?”

“ஒன்றும் உளறேல்ல….உம்மை…. வேணுமென்டால் அக்காவையும் கேட்டுப்பாருங்கோ…. ‘

அக்கா ஆர்த்தி உடனே ஓடி வந்து தம்பிக்கு சாட்சிக்கு ஆஜரானாள்.

“ஓமப்பா…. உசிர்ர்ர்ர்…. ஆடு….! இவ்வளவு உயரம்.”

என்று கையை தரையிலிருந்து இரண்டடி உயரத்தில் பிடித்துக்காட்டினாள்.

“அவை ஆடே வாங்கியிட்டினம்…. நீங்களெனக்கு இன்னும் நாயிக்குட்டி வாங்கித்தரேல்லை யென்னா…. ?”

தன் நீண்ட நாள் ஆதங்கத்தை முன்னூற்றிமூன்றாவது தடவையாகக் என்னிடம் கொட்டினான்.

அன்றிரவு முழுவதும் அவர்கள் வீட்டு பாத்றூம் கடாமுடா என்று குருஷேஷ்திரக் களேபரமாயிருந்தது.

மறுநாள் காலை குப்பைக் கொன்ரயினருள் ஆட்டின் மண்டையோடும் , தோலும் , கொம்புகளும் , நகங்களும் கிடந்தன.

ஹவுஸ் வார்டனிடம் புகார் செய்தேன்.

அவனுமோ “நானும் பல தடவைகள் அவனுக்கு எடுத்துச்சொல்லியாயிற்று…. அழிச்சாட்டியம் பிடிச்சபயல் கேட்கிற மாதிரியில்லை…. துருக்கிக்காரன் ஆட்டை உள்ளுக்குக் கொண்டு வர்றதைக்கண்ட இரண்டு உறுதியான சாட்சிகள் இருந்தால் நாங்கள் பொலிசில முறைப்பாடு கொடுக்கலாம்….கொடுப்போமா ? ‘ என்றான்.

மனைவி மீண்டும் தொணதொணக்கத் தொடங்கினாள். ‘ இனிக் குஷ்திபோடிறதே சீவியமாயிருக்கப்போகுது….

பொலிசும் கையுமாகத்திரியத்தான் இனி உங்களுக்கு நேரம் சரியாயிருக்கும்…. பேசாமல் வேற வீடு பாருங்கோப்பா….நல்ல அயலான் அமையிறதுக்கும் கொடுப்பினை இருக்கவேணும்….!” பெருமூச்செறிந்தாள்.

துருக்கிக்கும் ஆடு அடிக்கிறது , புல் தரையில் கிறில்மூட்டி இறைச்சி வாட்டிறதையும் தவிர வேறு வேலையேதும் இருப்பதாகத் தெரியவில்லை. சதாகாலமும் வீட்டிலேயே கிடந்தான்.

ஒரு முறை இரவுநடுச்சாமம் தன் வீட்டிலிருந்த அப்புறப்படுத்த வேண்டியிருந்த ஒரு பழைய அலமாரியையும், ஸெற்றியொன்றையும் எப்படித்தான் நகர்த்தினானோ, நகர்த்திக்கொண்டு போய் கீழே வீட்டின் பிரதான நுழைவாசல் அருகில் வைத்துவிட்டுப் போய் போர்த்துக்கொண்டு படுத்துவிட்டான் (முறைப்படி முனிசிப்பாலிட்டி லாரியை வரவழைத்து அவர்கள் தரும்தேதியில் அவர்களிடத்திலேயே கையளிக்க  7வண்டும், அல்லது அதற்கென்றான இடத்தில் கொண்டுபோய் போடவேண்டும் மீறி அங்கேயிங்கே போட்டால் அபராதம் எல்லாம் உண்டு).

மேற்படி கைங்கரியம் பிதாமகருடையதுதான் என்பதைக் கண்டுபிடிக்க ஹவுஸ்வார்ட்டுக்கும் சிரமமிருக்கவில்லை.

விடிந்ததும் விடியாததுமாய் போய் அவனிடம் சத்தம் போட்டான்!

அவனோ அவைகள் ‘தன்னுடையதேயில்லை…. தான் போடவேயில்லை ‘ என்று சாதித்தான்.

பின்னேரம் முகத்தில் ஆத்திரம் பிரவகிக்க வந்து கதவைத்தட்டினான்.

“என்ன… ?”

“ஹவுஸ்வார்ட்டிடம் என்னைக் காட்டிக்கொடுத்தது நீதானே…. ? ஒரு வெளிநாட்டுக்காரனாய் வேண்டாம் ஒரு இஸ்லாமியச்சகோதரனாய் இப்படி நீ செய்யலாமா…. ?”

“கொஞ்சம் பொறு…. நீ சொல்றபடிக்கு நான் எதையாவது செய்திருந்தால்…. நீ சொல்வது நியாயம் என்றாகும்…. நான்தான் எதுவுமே செய்யவில்லையே….!”

“சும்மா புழுகாத…. முந்திப் பொலிஸ{க்கும் போன் பண்ணின ஆளல்லா நீ….!”

“உன்னட்ட திட்டு வேண்ட வேண்டியிருக்கிறதும் எந்நேரம் பார்….! முந்தி நீ எவ்வளவுதான் சத்தம் போட்டபோதும் நான் சகித்துக் கொண்டேன்…. பொலீஸுக்குப போகவேயில்லை…. இப்பவும் நீ அலமாரியைத்தான் வெளியே போட்டியோ…. ஆட்டுத் தலையைத்தான், போட்டியோ எனக்குக் கவலையில்லை ஹாஜி….!”

என் வார்த்தைகள் எதையுமே நம்பவில்லை என்பதை ‘உர் ‘ ரென்ற அவன் உறங்குட்டான் முகம் காட்டியது.

“இந்த வீடு நமக்குச் சரிப்பட்டு வராதெண்டு இன்னுமாப்பா உங்களுக்குப்புரியேல்லை…. ?”

“புரிஞ்சு போச்செண்டுதான் வையுமன்;…. இப்ப என்னை என்ன செய்யச்சொல்லுறீர்…. ?”

“ஆங்ங்…. ஆனந்தி வீட்ல போய்ப் படுக்கச்சொல்றன்….!”

ஆனந்தி, என் கல்லூரி சகமாணவியொருத்தி. என் இலக்கிய சிநேகிதி. அவ பெயரே இவள் நான் சொல்லித்தெரிந்து கொண்டதுதானஆ;. பாத்திர அறிமுகம் போக அதற்குமேல் மீதிக்கற்பனைகள், இயக்கம் , தயாரிப்பு எல்லாம் இவளது! எனக்கு ஆத்திரமூட்டவென்று எண்ணும்போதெல்லாம் இவள் ஆனந்தி சஹஸ்ரநாமம்; உச்சரிப்பதுண்டு.

சமயங்களில் துருக்கிக்காரனே தேவலை .

எங்களுக்கு வீடு கிடைத்துவிட்டதென்று பார்க்க வந்துவிட்டு

“….பழசுதான் புது வீடென்றில்லை…. கட்டிப் பத்துவருஷமென்டாலும் இருக்கும்…. ஆகப் பெருத்துப்போச்சு…., ஹைசுங் (கணப்புக்கானஎரிபொருள்) காசெல்லே கனக்க வரப்போகுது…., “

“ ஊ-பாணுக்கு(சுரங்கரயில்) இன்னும் கொஞ்சம் கிட்டவெண்டால…. சோக்காயிருக்கும்…. “.

என்றெல்லாம் விமர்சனங்களை அள்ளித் தெளிப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் தவறாது மனைவி துருக்கிக்காரன் பண்ணுகிற நட்டணைகளையும் சொல்லிவைக்க அவர்களும் “இதென்ன எங்கட தேசமே…. விரும்பின இடத்தில வீடுகட்டி குடியிருக்க…. எங்கையும் ஒரு நெகரிவ் பொயின்டும் இருக்கத்தானே செய்யும்” என்று சொல்லி உள்ளூர மகிழ்ந்தனர்.

துருக்கி இப்பொழுதும் வாசலிலோ, லிஃப்டில் கண்டாலோ வழியில் எதிர்ப்பட நேர்ந்தாலோ, ஒரு Guten Tag (வந்தனம்) சொல்வதோ, அல்லது ஒரு மைக்கிறோ மீட்டராவது புன்னகைப்பதோ கிடையாது. பார்வையை வேறெங்காவது திருப்புவான். எதிராளியைக் கண்டுவிட்ட முள்ளம்பன்றியை மாதிரிச் சிலிர்த்துக்கொள்வான்.

வீட்டின் கொம்பவுண்டினுள் சிறுவர்களுக்கான ஒரு விளையாட்டிடம் உண்டு. ஒரு மணற்குழியும் , சறுக்குச்சாய்வும் அங்குண்டு. எங்கள் பிள்ளைகள் அங்கே எப்போதாவது விளையாடப் போனால் நாங்கள் யாராவது கண்காணித்தபடி இருக்க வேணும் அல்லது அடுத்த பத்தாவது நிமிஷத்துள் ஹாஸன், தலையில் மண்ணை அள்ளிக்கொட்டிக் கொட்டிவிட்டானென்றோ அல்லது பாக்கீர் (அவன் பிள்ளைகள்தான்) நிக்கருக்குள் தண்ணீரை வா

‘f7த்துவிட்டானென்றோ திரும்பி வருவார்கள் .

சின்னக்குஞ்சுகளென்றாலும் பெரியவர்களையும் மரியாதை பண்ணத்தெரிந்தே வைத்திருந்தார்கள்;. வழியிலோ , படியிலோ கண்டால் முந்தையரை மறந்துவிடாது நினைவுறுத்தி முகத்தை அஷ்டகோணலாக்கி வலிச்சம் காட்டவோ, முழு நாக்கையும் வெளியே நீட்டி பழிப்புக்காட்டவோ தவறுவதில்லை.

மனைவி சொல்லுவாள: “ விரியனின் குட்டி நாகம்…. அதன் குட்டி நட்டுவக்காலி…. ஆரேனும் எங்கட தமிழ்ப்பிள்ளையளாய் இருந்திருக்கோணும் அதிலேயே துவைச்சுக் காயப்போட்டிருப்பன் ….! “.

“பாவம் அவர்கள்…. குழந்தைகள்! பெரியவர்களே பண்பாட்டு விழுமியங்களை அறியாதவர்களாக இருக்கும்போது குழந்தைகள்தான் என்ன செய்யும்…. ?”

“ஐயோ….ஐயோ….இந்த மனுஷனை வேற வீடு பார்க்கச்சொன்னால்…. விளங்காத மாதிரி என்னென்னவோ எல்லாம் புசத்துதே….! கோத்திரத்தில ஆருக்கும் இந்தமாதிரி மேற்படியான் பிசகியிருந்திருக்கோ என்று ஆராயாமல் அப்பார் அவசரப்பட்டுக் காலைவிட்டிட்டாரே…. ஐயோ ஐயோ ஐயோ!” அடித்துக்கொண்டு புலம்புவாள்.

யானையிடமிருந்தும் தப்பித்துவிடலாம்…. நுளம்பிடம் முடியுமோ…. ?.

இவ்வாறு பரிதவித்துக் கொண்டிருக்குங்காலம்….

ஒரு ஞாயிறு காலை தூக்கமும் விழிப்பும் கலந்த மோனநிலையில் பெட் காஃபிக்கான காதலுடன், கட்டிலிலிருந்தபடியே குலாம் அலிகானின் கஜல் இசையில் கிறங்கியிருக்கிறேன்….

தற்செயலாக முன்னராக எழுந்துவிட்ட கிரிதரனுக்கும் ஆர்த்திக்கும் யார் முதலில் ‘கேம் போயை ‘

விளையாடுவது என்பதில் பெரும் போர் மூண்டது.

இருவரும் கட்டிலில் கட்டிப்பிடித்துப் புரண்டு இழுபறிப்படுகையில் ஆர்த்தி சட்டெனத் தன் பிடியைச் சற்றே தளர்த்தவும் கிரிதரன் நெற்றியில் இடித்துக்கொள்ள நேர்ந்தது. இதனால் கடுஞ்சினமுற்ற தாய் ஓடிவந்து ஆர்த்தியின் முதுகில் ‘பொளாச் ‘ என்று சாத்தினாள். சாத்தலில் துடித்துப்போனவள் விசித்துக் கொண்டு போய் தன் அறைக்குள் ஸோலோவாக ‘வயோலா ‘ வாசிக்க ஆரம்பித்தாள்.

கஜலில் துய்க்க முடியாதபடிக்கு ஆர்த்தியின் நீண்ட ஆலாபனை எரிச்சலூட்டிக்கொண்டிருக்கவும்…. பஸ்ஸர் வேறு ‘கிர் கிர் ‘ என்கிறது.

‘ஆர்த்திக்கண்ணா போய் கதவைத்திறவடா- என்றேன்.

“ங்ங்ங்ங்…. நான் இன்னும் அழுது முடிக்கேல்ல டாடி….!” என்று விட்டு விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள்.

இன்று ஞாயிறு கடிதங்கூட வராதே…. யாரயிருக்கும்…. ?

யோசனையுடன் எழுந்து சாரத்தை இறுக்கிக் கட்டிவிட்டு , ஒரு ஷர்ட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு போய் கதவைத்திறந்தால்….

நான் என்றுமே காணாதபடி ‘டிப் டொப் ‘ கோட் & ஸூட் கெட்டப்பில் துருக்கியும் , ஏற்றாற்போல் மெட்டாக உடுத்திய மனைவியும், பிள்ளைகளுமாக ஸ்ரீசோமாஸ்கந்தக்கோலத்தில் எங்கேயோ தொலைப்பயணம் புறப்பட்டவர்கள்போலக் காட்சிதந்தனர்!

எதுக்கிப்ப இங்க வாறான் கசுமாலம்…. கைமாத்து ஏதும் கேட்கப்போறானோ ?

நான் ஒன்றுமே புரியாதபடிக்கு நெற்றியைச்சுருக்கவும்….

‘நாங்கள் ஊருக்குப் புறப்படுகிறோம்…. அதுதான் ‘குட் பை ‘ சொல்ல வர்றோம்…. ‘என்றபடி கையை நீட்டினான்.

நீண்ட அவன் கைகளைப் பற்றிக் குலுக்கியபடியே கேட்டேன்:

“என்ன Urlaub (விடுமுறையா)பா…. துருக்கிக்கா…. ?” என்றேன்.

“keinen Urlaub aber fuer immer! ‘

( விடுமுறைக்கல்ல…. நிரந்தரமாய்….! ) முகம் ஓடிக்கறுக்கிறது.

“ Oh was (என்ன)!!!!-

‘ Ja…. Kollege எங்கள் அகதி விண்ணப்பம் மூன்றாவது தடவையும் ஜெர்மன் இறுதி நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டு விட்டது…. இனி அப்பீல் எடுக்கமுடியாது…. கிளம்புவதைத்தவிர வேறு மார்க்கமேயில்லை….”.

அவன் குரல் உடைந்து கரகரத்தது.

என் கண்முன்னேயே பாரிய பனிமலை ஒன்று தகர்ந்து தண்ணீராய் ஓடும் அவலம். இதயம் இனம்புரியாத வலியில் துவண்டு புரண்டது.

அவன் மனைவி

“உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால்….எங்களிடமுள்ள சில பொருட்களை உங்களுக்குத் தரலாமென்று விரும்புகிறோம்….”என்றபடி ஒரு பிளாஸ்டிக்பை ஒன்றை மனைவியிடம் நீட்டினாள்.

தயங்கி அவள் என்னைப்பார்க்க “பரவாயில்லை வாங்கும்”என்றேன்.

“Danke” (நன்றி)

என்றபடி வாங்கிக்கொண்டு உள்ளே போனவள் கிரிதரனுக்கு பாடசாலை ஆரம்பிக்கும்போது

பாவிப்பதற்கு வாங்கிய புதியசெற் உடுப்பொன்றை இன்னொரு பிளாஸ்டிக்பையில் வைத்துக் கொண்டுவந்து ஹாஸனிடமும் , ஒரு சொக்கலேட்பாரை பாக்கீரிடமும் தந்தாள்.

மீண்டும் -குட் பை- சொல்லியபடி கைலாகு தந்தான், துருக்கியர் பாணியில் என்னைக் கட்டிப்பிடித்து இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டான்.

எல்லோர் கண்களுமே தளும்பி நின்றன. பகையேயாயினும் பிரிவு இன்னாததுதான்!

அவர்களை பிரிந்து போவதை புள்ளியாகி கண்மறையும் வரையில் எம்வதியும் அறை ஜன்னலால் எட்டிப்பார்த்துக் கொண்டு நின்றோம்.

பின் மனைவி அவர்கள் தந்துவிட்டுப்போன பையை ஆராய்ந்தாள்.

அடியில் கனதியாக இருப்பது உருளைக்கிழங்கும் வெங்காயமுமென்று ஊகத்திலேயே புரிந்தது. மேலே பிரித்தும் பிரியாமலும் சில மா , சீனிப்பக்கெட்டுக்கள், கொஞ்சம் வாட ஆரம்பித்துவிட்ட காய்கறிகள், சூரியகாந்தி சமையல் எண்ணைய்ப் போத்தல்களின் நடுவே வெள்ளியென பளபளத்து நிறுதிட்டமாய் நீட்டிக்கொண்டு நிற்கிறது அவனது கத்தி!

– அம்மா – ( Paris ) ஆனி. 1997

Series Navigation