ந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

நா. இரா குழலினி


வெளியீடு மருதா பதிப்பகம், 226 பாரதி சாலை ராயப்பேட்டை சென்னை,

பக்கம் 190 விலை ரூ.90/-

உங்களால் எப்போதேனும் ஒரு தாய்மையின் பரவசத்துடன் யாரையேனும் அணுக முடியுமா ? தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது குழந்தையின் குழல் நீவி வெற்று விரல்களால் அதன் மயிர் கோதி சிடுக்கெடுத்து சற்றும் இறுக்கமற்ற குரலில் எவ்வித பாசாங்குகளுமின்றி குழந்தையின் மகோன்னதங்களைஸ் பற்றி அருகிலிருக்கும் யாருக்கும் கேட்காமல் கிசுகிசுப்பாய்ப் பேச முடியுமா ? அது பால் குடிக்கையில் முன்பற்களால் முலை கடிக்க சிறு அதட்டலோ அன்றி முன் விரல்களால் சுண்டலோ போன்று உங்களால் கண்டிக்க முடியுமா ? ஒரு குழந்தையின் தூக்க நேர முணுமுணுப்பை விழித்திருந்து ரசிப்பது போல எவ்வித முன்முடிவும் முன்நிபந்தனையுமின்றி உங்களால் ஒரு பிரதியை அணுக முடியுமா ? அது புத்தர் கூறும் மைத்ரி நிலை. ஒரு தாயைப் போல அன்பும் பரவசமும் ததும்பித் தளும்பும் கொண்டாட்டச் சூழல்.

விமர்சனம் என்றவுடன் ஒரு தேர்ந்த வைத்தியனின் அறுவைக் கத்தியைக் கையிலெடுத்துக் கொண்டு பிணவறைக் கீறலுக்குக் கிளம்பும் மருத்துவர்கள் போல நடந்து கொள்ளும் நபர்கள் இருக்கும் இன்றைய தமிழ்ச் சூழலில், தாய்மையின் பரவசங்களுடன் ஒரு பிரதியை அணுகும் திரு. ந. முருகேசபாண்டியனின் விமர்சனங்கள் தனிக் கவனம் கோருபவை. பல்வேறு பிரதிகளின் மீதான விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பை நீங்கள் அணுகும் போது அந்தக் குறிப்பிட்ட பிரதிகளின் வாசிப்பை அந்தக் கட்டுரைகள் ஒரு முன் நிபந்தனையாக முன் வைக்கும். ஆனால் முருகேச பாண்டியனின் விமர்சனங்கள் வாசகரின் கையைப் பிடித்து பிரதிக்குள் அந்த வாசகரை (இரு பால் பொதுச் சொல்லாகவே பயன்படுத்துகிறேன்) ஆற்றுப்படுத்துவதை முன்வைக்கின்றன.

நவீன சமூகத்தின் இறுக்கம் ஏற்படுத்தும் அயற்சியும் வெம்மையும் ஒரு தனி மனிதத் தன்னிலையில் கிளைத்து வெடிப்புறும் போது நவீன இலக்கியம் பிரக்ஞையும் பிரக்ஞை தாண்டிய நினைவிலி மனத்தின் வெளிப்பாடாகவும் பதிவு பெறுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பிரதியும் தன்னளவில் தனித்துவம் வாய்ந்தவையாகவும் செயலூக்கம் மிக்கவையாகவும் மாறுகின்றன. எனவே ஒரு படைப்பை படைப்பாளியின், சாதிய சமூகக் கலாச்சாரப் பொருளாதாரப் பின்புலத்தினடியில் அணுகும் போக்கினைத் தவிர்த்து, ஒவ்வொரு பிரதியையும் முன்னிபந்தனைகளும் முன்முடிவுகளும் அற்று அணுகும் வாசிப்பனுபவத்தை கட்டுரையாள˜ முன்வைக்கிறார். 55 வெவ்வேறு புத்தகங்களின் மீதான விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூல் 55 விதமான வாசிப்பனுபங்களை காட்சிப்படுத்துகிறது.

நவீனத்துவத்திற்குப் பின் கவிதை தேவதேவனை முன்வைத்து என்கிற இருபதாவது கட்டுரையும் விஷ்ணுபுரம் நூலுக்கான நாற்பத்தேழாவது கட்டுரையும் திரு ஜெயமோகன் அவர்களின் வெவ்வேறு நூல்களின் மீதான விமர்சனங்கள் என்ற போதும் ஒவ்வொன்றும் தனித்தனியான பிரதிகளின் மீதான விமர்சனமேயன்றி படைப்பாளியின் பின்புலங்கள் குறித்தவையல்ல என்பதை நாம் வாசிப்பின் வாயிலாக அவதானிக்க முடியும்.

நவீன இலக்கியப் போக்கில் ஒவ்வொரு படைப்பாளியின் படைப்பும் தீவிர நகர்வுத் தன்மையுடன் விளங்குகின்றன. குறைந்த பட்சமான கைவிளக்கின் துணையின்றி யாரும் மூலைகளில் படிந்திருக்கும் பாசிகளையும் நீர் கோர்த்த உத்திரங்களையும் பரவசமூட்டும் சுவரோவியங்களையும் வெளிச்சம் பட்டுப் பளபளக்கும் நீர்த்தாரைகளையும் மூத்திர நெடியடிக்கும் பாதைகளையும் இனங்கண்டு கொள்ள முடியாது. ஒரு விமர்சகர் தமது சொந்த வாசிப்பனுபவத்தின் வாயிலாக எந்தவொரு படைப்ையும் கீறிச் செல்லும் போது துலங்கும் வெளிச்சக் கீற்றுகள் வாசகருக்கு படைப்பினுள் புதுப்புதுக் காட்சியமைப்புகளின் சாத்தியங்களைஜ் தோற்றுவிக்கின்றன.

நான் கடந்து வராத நான்கைந்து நூல்களின் மீதான விமர்சனங்களை தொகுப்பினுள் வாசிக்க நேரும் போது தயக்கத்துடனே அவற்றை அணுக நேர்ந்தது. ஆனால் அந்த நூல்களின் மீதான ஒரு வெளிக் கோட்டோவியப் பார்வையை அந்த விமர்சனக் கட்டுரைகள் எனக்குத் தந்தன. தமிழ்ச் சூழலில் இவை போன்ற விமர்சன முறைகள் ஆறுதலளிப்பவை.

நூலெங்கும் பக்கத்திற்குப் பக்கம் தென்படும் எழுத்துப் பிழைகள் அயற்சியை ஏற்படுத்துகின்றன. நூலாசிரியர் தன்னுடைய முன்னுரையில் பிழைதிருத்தியமைக்காக நன்றி தெரிவிக்கும் அவரின் பால்யகால நண்பர் திரு ந, ஜீவா தன்னளவில் வருந்த வேண்டிய விசயம் இது (என்ன கோபமோ தெரியவில்லை). நாற்பத்தி ஐந்தாவது கட்டுரையான பசித்த தலைமுறை முதல் ஐம்பதாவது கட்டுரையான ஊர்மணம் வரையிலான கட்டுரைகள் வெளியான வருடம் தவிர்த்த வேறு தகவல்களை கொண்டிருக்கவில்லை. அவை வெளியான மாதம் மற்றும் இதழின் பெயர் போன்றவை குறித்த தகவல்கள் இல்லை. ஒரு வேளை அவை வெளியாகாதவை எனில் அவை குறித்த தரவுகள் இல்லாததால் ஒரு வெறுமை தோன்றுகின்றது.

நூலாசிரியர் தொழில் முறையில் நூலகராக இருப்பதாலோ என்னவோ தொடர் வாசிப்பின் அனுபவம் விமர்சனங்களில் தெறிக்கின்றது. மொழியின் சாத்தியங்களை நீட்டித்தும் வளைத்தும் இழுத்தும் புரட்டியுமாக எடுத்துச் செல்லும் போக்கு அவரை புனைவிலக்கியங்களைஸ் படைக்கும் சாத்தியமுள்ளவராகவே காட்டுகிறது. அவருடைய மொழியாளுமையின் விழைவாக, விரைவில் அவர் புனைவிலக்கியப் படைப்பாளராக மாறுவதற்கான சாத்தியங்கள் அவரின் படைப்பில் உள்ளது.

நூலின் பின்னட்டையில் குறிப்பிட்டுள்ளபடி எழுபதுகளின் இறுதியில் ‘தேடல் ‘ இதழ் மூலம் சிறுபத்திரிக்கை உலகிற்கு அறிமுகமான இவரின் ஏனைய படைப்புகளையும் தொகுத்தல் இன்றைய சூழலில் முக்கியம் வாய்ந்தது.

மருதா பதிப்பகத்தின் இந்த நூல் தமிழ்ச் சூழலில் ஆசிரியரின் முதற்கட்டுரை வெளியான 1994 முதல் இன்றைக்கான நிலை வரை தமிழ் கூறு படைப்புலகின் மீதான ஒரு பறவைப் பார்வையை வாசகருக்கு வழங்குகிறது. ஒரு விமர்சன நூலுக்குரிய அற்புதமான அட்டை வடிவமைப்பையும் தாளினையும் அச்சு நேர்த்தியையும் தேர்ந்தெடுத்த மருதா பதிப்பகம் உள் வடிவமைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பிரதிகளின் ஊடே பயணம் என்ற தலைப்பு ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் மொழி மாற்றம் செய்தது போன்று தோன்றுகிறது அடுத்தடுத்த பதிப்புகளில் இவை போன்ற சிறு சிறு பிழைகள் நீக்கப்பட்டு செழுமைப்படுத்தப்படும் என்று நம்புவதால் நமக்கொன்றும் இழப்பு இல்லை. தேர்ந்த வாசிப்பனுபத்தையும், மொழி ஆளுமையையும், தமிழ் படைப்புச் சூழலின் உள், வெளி நீட்சிகளையும் வாசித்தறிய வேண்டிய படைப்பாளிகளுக்கும் வாசகருக்குமான தேர்வு நூல்களில் இதுவும் ஒன்று என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அன்புடன்

நா. இரா குழலினி

புத்தகம் பேசுது அக்டோபர் 2004

kuzhalini@rediffmail.com

Series Navigation

நா.இரா. குழலினி

நா.இரா. குழலினி