நூல் மதிப்புரை – சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

மு. இளநங்கை


மு. இளநங்கை
முனைவர் பட்ட ஆய்வாளர்
சென்னைப் பல்கலைக்கழகம்

மார்க்ஸின் சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் என்ற நூல் இலக்கியங்களைப் புனிதபடுத்தும் போக்கிலிருந்து மாறுபட்டு இலக்கியங்களைக் கேள்விகுள்ளாக்குதல், இலக்கியங்கள் எவ்வாறு மேட்டிமை பார்வையைத் தனக்குள் கிரகித்து கொண்டு விளங்குகின்றன என்பதைப் பட்டவர்த்தனமாக தெளிவுப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதாக அமைந்துள்ளது. சிற்றிலக்கியங்கள் குறித்து இவ்வாறான பார்வையைத் தனக்குள் விதைத்த நூலாக பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் நோக்கு விளங்குகின்றது என்பதையும் பதிவுசெய்துள்ளார். மேலும் கோ.கேசவனின் முன்னுரையோடு வெளிவந்துள்ளது மிகவும் பொருத்தம் என்றே கூறலாம்.

இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்நூலில் சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் பற்றி முதல் பகுதியிலும், பாரதியும் பகவத்கீதையும் என்பது இரண்டாவது பகுதியிலும் விவரிக்கப்பட்டுள்ளன. மார்க்ஸ் அவர்களின் சிற்றிலக்கியப் பார்வை மட்டும் இங்குப் பேசப்படுகிறது.

சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள நூலில் சிற்றிலக்கியங்கள் குறித்த பட்டியலையோ, சிற்றிலக்கியங்கள் எண்ணிக்கையில் உள்ள சிக்கல்களையோ, சிற்றிலக்கியத்தின் வடிவத்தையோ, கலை நுணுக்கத்தையோ விஸ்தாரிக்காமலும் பாட்டியல்கள் கூறும் இலக்கண வரையறைக்குட்பட்டு இவை அமைந்துள்ளனவா போன்ற இலக்கியத்தரம் வாய்ந்த கேள்விகளை முன்வைக்காமல் தனக்கே உரித்தான முறையில் சில விவாதப் புள்ளிகளைத் தொட்டுகாட்டியுள்ளார் மார்க்ஸ்.

காலந்தோறும் இலக்கிய உருவாக்கத்தில் அரசின் பங்களிப்பும் செயல்பாடும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது என்றும் அந்தந்த கால அரசின் கட்டுபாட்டிற்குக் கீழ்தான் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன என்றும் மார்க்ஸ் ஆணிதரமாக நிறுவியுள்ளார். இவ்வாறு இலக்கியம் என்பது அந்தந்த கால அரசியல் நிறுவனத்தோடு தொடர்புகொண்டுள்ள பாங்கை நேர்த்தியாக இந்நூலில் கட்டமைக்கிறார். இலக்கிய உருவாக்கத்தில் அரசின் சார்புநிலை குறித்து விரிவாகப் பதிவுசெய்துள்ளார். இதனை ஒட்டுமொத்த இலக்கியங்களுக்கும் நாம் எதிர்காலத்தில் பொருத்திப் பார்க்க வழிவகுக்கிறது இந்நூல். இந்த நோக்கில் பார்ப்பது இலக்கியங்களை மறுவாசிப்பிற்கு உட்படுத்துவதன் விளைவாகத் தோன்றியது.

காவிய காலத்தில் பேரரசுகளின் கையில் இலக்கியங்கள் புரளுவதையும், சிற்றரசுகள் காலத்தில் சிற்றிலக்கியங்கள் தோற்றம் பெற்றதற்கான காரணங்களை லௌகிக காரணத்துடன் விளக்கியும் கூறுவது குறிப்பிடத்தக்கது. சிற்றிலக்கியங்கள் காலத்தைக் குறித்த அவரது பார்வை பேரரசு காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்களுக்கும் சிற்றரசு காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியங்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளதை நுணுகி ஆராந்துள்ளார். இரண்டு காலக்கட்டத்திலும் தோன்றிய சிற்றிலக்கியங்களைப் பொருண்மை அடிப்படையில் ஆராய்ந்து அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கூர்ந்துநோக்க வேண்டும் என்பதைச் சான்றுகாட்டி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். இவ்வாறு சிற்றிலக்கியங்களின் தன்மையை அது தோன்றிய காலச்சூழலோடு பொருத்திப் பார்ப்பது சமூகவியல் நோக்கிலான இலக்கிய வரலாற்றைக் கட்டமைக்க ஏதுவாகிறது.

இவர் சிற்றிலக்கியங்கள் குறித்து பேசுவதற்கு முன் வரலாற்று பின்புலத்தைச் சுட்டிகாட்டி அதன் அடிப்படையில் சிற்றிலக்கியங்கள் தோற்றம் பெற்ற நிலையையும் விளக்குகிறார். சிற்றிலக்கியங்கள் பல இருந்த போதிலும் பரணி, உலா, கலம்பகம், பள்ளு, குறவஞ்சி இவற்றைப் மட்டும் பற்றி பேச காரணம். இவை சிறந்து விளங்குவன என்பதால் மட்டுமா இல்லை சிறந்து விளங்கும் இலக்கியங்களைக் கொண்டு மட்டும் தனது கருத்துகளை நிறுவும் போது தான் அதற்கான சமூகத்தோடு அந்த இலக்கிய வகைமை பரிச்சயப்பட்ட ஒன்றாக இருப்பது தனது கருத்தை வலுசேர்ப்பதற்குப் பயன்படும் விதத்தில் அமையும் என்று எண்ணினார் போலும். பிரபலமடையாத சிற்றிலக்கிய வகைகள் குறித்து இதே கருத்தாடலை முன் வைத்திருந்தால் அதனால் ஒரு பயனுமில்லை. இது போன்ற காரணங்களுக்குத் தான் அந்த இலக்கிய வகைமை வழக்கிழந்து போனது என்ற பதிலைத் தமிழ் இலக்கியச் சூழல் கையில் வைத்துகொண்டிருக்கும்.

இலக்கியங்களை அதிகார வர்க்கம் கைகொண்டைதையும், மேட்டிமை சமூகப் போக்கு இலக்கியங்களில் இழையோடுவதையும் பற்றி பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் பார்வை என்ற நூலில் தோலுரித்து காட்டிய கோ. கேசவனின் பார்வையோடு தனது பயணத்தைத் தொடங்கியதாக அ. மார்க்ஸ் குறிப்பிட்ட போதிலும் தனது இந்நூலிற்கு அவரின் முன்னுரையோடு வெளிவந்த போதிலும் பள்ளு இலக்கியம் நூலில் அவரின் சில முடிவுகளிலுள்ள போதாமையைச் சுட்டிகாட்டியுள்ளார். அவருடைய கருத்துகளில் சில இடங்களில் முரண்படுவதையும் அதற்கான காரணங்களையும் அடுக்குகிறார். இவ்வாறு தனது பார்வையை விஸ்தாரப்படுத்துவதன் மூலம் தமிழ் இலக்கியத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்தி செல்கிறார்.

பள்ளு இலக்கியம் சமூகவியல் பார்வை என்ற நூலில் இந்து சமூகத்துடன் கலாச்சார ரீதியில் ஏமாற்றி ஒன்றிணைக்கும் முயற்சியில் பள்ளு இலக்கியம் பாடப்பட்டது என்ற கோ.கேசவனின் கூற்றை உடைத்தெறியும் விதத்தில் மார்க்ஸ் தனது கருத்துகளை வலுவாகப் பதிவு செய்கிறார். அந்தக் காலத்தில் கடற்கரைப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்வில் மதமாற்றம் பல நிகழ்ந்துள்ள போதிலும் அங்கு இதுபோன்ற இலக்கியங்கள் தோற்றம் கொள்ளவில்லை என்ற கேள்வியை எழுப்பி மதமாற்றத்திற்கு எதிராக இலக்கியம் படைப்பதை ஒரு முக்கிய நிலைப்பாடாக ஆளும் வர்க்கம் கொள்ளவில்லை என்பதை நமக்குப் புலப்படுத்துவது மட்டுமின்றி கோ.கேசவனின் தன் நூலில் பள்ளு இலக்கியங்கள் பாடப்பட்ட சூழல் குறித்த புரிதலின்றி இவ்வாறு பேசியுள்ளார் என்பதைச் சுட்டிகாட்டுகிறார். மேலும் பள்ளு இலக்கியங்கள் பாடப்பட்டதை வரலாற்று பின்புலத்தோடும், அன்றைய சமூகச் சூழலோடும் பொருத்திகாட்டி ஆளும் வர்க்கத்தின் பம்பாத்து வேலையாகவே மார்க்ஸ் இதனைக் எடுத்துகொள்வது சரியான வாதமாகக் கொள்ளலாம்.

பள்ளு இலக்கியம் எந்த வர்க்கத்தின் நலன்காக்க எழுந்த இலக்கியம் என்கிற கேள்வியை முன்வைப்பதோடு பள்ளு, குறவஞ்சி போன்றவை அரசிற்கு ஆதரவான கருத்துகளை ஒடுக்கப்பட்டோர் மத்தியில் பிரச்சாரம் செய்யும் ஆளும் வர்க்க இலக்கியங்களாக விளங்குவதனை அகச்சான்றுகளைக் கொண்டு நிறுவுகிறார். சிற்றிலக்கியங்கள் தோன்றிய காலச் சூழலோடு பொருத்தி பார்த்தும் சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் பகரும் பாட்டியல் நூல்களின் வருணபாகுபாடு தன்மையையும் இலக்கண இலக்கிய நிலைகளில் இருந்து குறிப்பிட்டு காட்டுவதன் மூலம் அந்தக் காலத்தில் இருந்த மேட்டிமை சமூக போக்கிற்கு இலக்கியங்களே ஆதாரமாக விளங்குவதனை சுட்டிகாட்டுகிறார்.

மக்கள் இலக்கியங்கள் என்றழைக்கப்படும் பள்ளு, குறவஞ்சி இலக்கியத்தில் அவர்களின் வாழ்வியலைப் பதிவுசெய்வதும் அவர்களுடைய வடிவத்தைக் கொண்டும் இயற்றப்பட்ட அளவில் மட்டுமே அவை மக்கள் இலக்கியங்கள் என்ற நிலையில் கொள்ளவது பொருத்தமற்ற செயல்பாடாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஒரு காலத்தில் நிலவிய சிற்பம், ஓவியம், நடனம், இலக்கியம் போன்ற அனைத்துக் கலைகளையும் ஒப்பிட்டு ஆராய வேண்டும் என்ற நவீன ஆராய்ச்சியை உள்வாங்கி கொண்டு சிற்றரசுகள் காலத்தில் தோன்றிய சிற்றிலக்கியத்தை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார். மேலும் அணி, செய்யுள் அலங்காரங்கள் கோயில் அலங்காரங்களோடு எவ்வாறு தொடர்புறுகின்றன என்பதை விவரிக்கும் போக்கும் தமிழ் ஆய்வுலகம் பல புதிய பரிமாணங்கள் பெற வழி செய்யும் விதத்தில் அமைகிறது.

சாதி இறுக்கத்தின் உச்சத்தை இலக்கிய இலக்கணங்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதைப் பாட்டியல் இலக்கண நூல்கள் பகரும் பொருத்தவிலக்கணத்தின் மூலமும் விவரிக்கிறார். மேலும் வெண்பாட்டியல் சூத்திரர் இயல்பாகச் சிலவற்றை குறிப்பிடுவதை நோக்கினால் வர்க்கச் சுரண்டலைக் காக்க வருண வேறுபாடுகள் வழியாக இலக்கணம் கூறும் தன்மையை அவதானிக்க முடிகிறது. உழவுத்தொழிலை வைசியர், சூத்திரர் என்ற இரு பிரிவினரும் மேற்கொண்ட போதிலும் முறையே மூன்றாம், நான்காம் வருணமாகக் குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்காட்டி செய்யும் தொழில்களில் சமூக அந்தஸ்து மட்டுமே வருணவேறுபாடுகளுக்குக் காரணமாகாது என்று கூறி அங்கு நிலம் என்ற உற்பத்தி சாதனம் சூத்திரருக்கு உரிமையற்ற நிலையிலே அவர்கள் தாழ்த்தப்பட்ட வருணத்தவராக ஆக்கப்பட்ட சூழலை விவரித்துள்ளார்.

குற்றாலக்குறவஞ்சியில் இரண்டு விதமான காதலைப் பதிவுசெய்யும் ஆசிரியர் மேட்டிமை காதலை புனிதப்படுத்தியும், சிங்கன் சிங்கி காதலுறவைக் கொச்சப்படுத்தியும் விவரிக்கும் இடத்தைச் சுட்டிகாட்டி கடுமையாகச் சாடுகிறார். இவற்றை எவ்வாறு மக்கள் இலக்கியங்களாகக் காட்சிபடுத்தினர் என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. மேலும் பள்ளு இலக்கியம் குறித்து ந.வீ.செயராமன் கூறிய மேற்கோள் ஆண்டான் அடிமை வேறுபாடின்றிக் கலந்துரையாடும் சமநீதி நிலவும் பண்பட்ட சமுதாயத்தைப் பள்ளு இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டிகின்றன. இத்தகைய வம்புகளைப் பள்ளன் பண்ணைகாரனின் மனைவியிடம் செய்வதற்கு சாத்தியம் உண்டா என்ற கேள்வியை முன்வைத்திருப்பதன் மூலம் உண்மை விளங்குகிறது

குறுநில மன்னர்களும், நிலப்பிரபுக்களும் மதாச்சாரியர்களும் பாடிய இவ்வகை இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் கேட்கும் வாய்ப்பில்லை என்று கூறுவதோடு நின்றுவிடாமல் அந்த காலத்தில் சமூக அநீதிகளை எதிர்த்து குரல் கொடுத்தவர்களாகச் சித்தர்களையும், கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையையும் காட்சிபடுத்துகிறார். இருப்பினும் சமூகத்தில் நிலவிய இப்போக்கை களைவதற்கான வழியைப் பற்றி அவர்களின் இலக்கியத்தில் எந்தப் பதிவும் இல்லை என்பதையும் சுட்டிகாட்டுகிறார். இவ்வாறு இலக்கியங்களின் பின்புலத்தையும் அரசியல் சார்போடு நின்று செயல்படும் தன்மையையும் விளக்கியுள்ள நிலையில் இந்நூல் கவனித்திற்குரிய ஒரு நூலாக விளங்குவதில் வியப்பமொன்றுமில்லை.

Series Navigation