நூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

அறிவிப்பு


இணைய நூலகங்களின் வருகை உலகின் எந்த மூலையில் உள்ளோரும் உடனடியாகத் தாம் விரும்பும் நூல்களை வாசிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழ்ச்சூழலில் முன்னெடுக்கப்படும் இணைய நூலகங்களில் மிகப் பெரியது நூலகத் திட்டமாகும். (www.noolaham.net) ஈழத்தின் 1650க்கும் அதிகமான நூல்களும் இதழ்களும் நூலகத் திட்டத்தினரால் இணையத்தில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.

இத்திட்டம் பெருமளவு தன்னார்வலர்களின் முயற்சியால் அனைத்துத் தமிழருக்கும் பயன்படும்வண்ணம் வேகமாக வளர்ந்து வருகிறது. தகவல்களைத் தேடவும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அறிவை விருத்தியாக்கவும் ஏற்றவகையில் கூட்டுச் செயற்பாடு பல பரிமாணங்களில் முன்னெடுக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களுடன் இந்தியர்களும் இத்திட்டத்தில் பங்களித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

2007 இல் முன்னெடுக்கப்பட்டு நிலுவையில் இருந்த மின்னூலாக்கற் செயற்றிட்டங்களின் அடைவுகளில் பெரும்பாலானவை இணையமேற்றப்பட்ட நிலையில் தினமும் குறைந்தது ஒரு மின்னூலை வெளியிடும் முயற்சியில் நூலகத் திட்டம் ஈடுபட்டுள்ளது.

2005 இல் நூறு மின்னூல்களையும் 2006 இல் 250 மின்னூல்களையும் நூலகத் திட்டம் வெளியிட்டிருந்தது. 2006 இறுதியில் மின்வருடி (scan) மின்னூல்களை வெளியிடும் முயற்சி தொடங்கியது. இம்முயற்சி 2007 இல் பெரும் எடுப்பில் தொடர்ந்தது. சுமார் 1200 மின்னூல்கள் 2007 இல் உருவாக்கப்பட்டன. நூலகத் திட்ட ஒழுங்கில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டதால் 2008 இல் முதல் நான்கு மாதங்கள் புதிய செயற்றிட்டங்கள் தொடங்கப்படாமலிருந்தன.

2007 இறுதியில் வலைத்தளம் மீடியாவிக்கியில் இயங்கத் தொடங்கியது. அத்துடன் மின்னூல் வெளியீட்டு ஒழுங்கிலும் முழுமையான மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய செயற்றிட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மின்னூல் இணையமேற்றப்படுகிறது. தொழிலாளர் நாளான மே முதலாம் திகதியிலிருந்து இச்செயற்றிட்டம் நடைபெறுகிறது.

www.noolaham.net என்ற முகவரியில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வெளியிடப்படும் மின்னூல்களையும் ஏற்கனவே வெளியாகியுள்ள 1650 க்கும் மேற்பட்ட ஈழத்து நூல்களையும் இதழ்களையும் பார்வையிடலாம்.

noolaham@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு