நுால் அறிமுகம் : ‘எ ன் று ம் இ ரு ப் பே ன் ‘ -மகாகவி பாரதியார் வாழ்க்கை -கவிதைநாடகம் :ஆசிரியர் – சேதுபதி

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

எஸ் ஷங்கர நாராயணன்


‘எ ன் று ம் இ ரு ப் பே ன் ‘ -மகாகவி பாரதியார் வாழ்க்கை -கவிதைநாடகம் :ஆசிரியர் – சேதுபதி

168 பக்கங்கள் விலை இந்திய ரூபாய் நாற்பது

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் ப எண் 24 கிருஷ்ணா தெரு பாண்டிபஜார் தி.நகர் சென்னை 600 017

—-

சேதுபதி தமிழ் விரிவுரையாளராகக் கல்லுாரிப் பணி செய்கிறவர். மகாகவியிடம் தம் மீளாக்காதலை வெளிப்படுத்த பாரதி வாழ்க்கையின் பகுதிகளைக் காவியமாக்க முன்வந்திருக்கிறார். மிகுந்த ஈர்ப்பும் பரவசமும் கொண்டு இக்காவியப் புனைவு நிகழ்ந்திருக்கிறது. கவிதைநாடகத்துக்கு அத்தகைய ஈடுபாடு நல்லம்சமே.

ஒரு சமீபத்திய வாழ்க்கை இதன் பாடுபொருள். இதன் பாத்திரங்கள் நமக்கு முன்னறிமுகம் உள்ளவர்கள். அப்பாத்திரங்கள் பற்றி -அரவிந்தர். வ.ரா. பாரதிதாசன். வ.வே.சு.ஐயர். – நமக்கு முன்மதிப்பீடுகள் இருக்கின்றன. காவியத்தில் பாரதியுணர்வு உச்சம் பெறச் செய்கிற படைப்பாவேசத்தில் பிற பாத்திரங்கள் பொலிவுகுறைவுபடாமல் சுடரைக் காப்பாற்ற மகா கவனம் வேண்டித்தான் இருக்கிறது. அந்த சவால் இப்படைப்பில் உணரப்பட்டதா என்ற கேள்வி வாசிக்கிறவனுக்கு எழும். பேராசை பிடித்த வாசகன் அவன்.

இப்படைப்பில் அடுத்த சவால், வாழ்வின் தொடர்ச்சியாக இதை அமைப்பதும் அதற்கேற்ற உணர்வுக் கட்டமைப்பை சீரானஅளவில் கதையில் விரவச்செய்வதும். இது கற்பனைப் படைப்பு அல்ல. அதன் மூலம் பாரதியின் ஞான, மற்றும் குணாம்ச வளர்ச்சி நிலையை அடையாளங் காட்ட வேண்டியதும் கட்டாயம். வெறும் சம்பவ அடுக்குகள் செய்தியறிக்கையாகவே தாமே அமைய முடியும்… அவை எத்தனை பரவச நிலையில் வெளிப்பட்டாலுங் கூட ?

படைப்பாளிக்கு சில முக்கியக் கருத்துகள் சமுதாயத்தையிட்டு இருக்கின்றன. பாரதியே முக்கியப் படைப்பாளி. இக்காவியம் அவரது மையத்தில் அவரது கருத்துத் தளத்தை எட்டித் தொடுகிறதா, அல்லது நுாலாசிரியரைக் கவர்ந்த அளவில் /இருவரும் ஒத்துப்போகிற/ தளங்களில் மாத்திரம் சஞ்சரிக்கிறதா என்கிற விவாதமும் ருசிகரமானதே. குள்ளச்சாமி என்கிற பாத்திரமும், (அவர் தாயுமானவர் பாடலையொட்டிப் பேசுகிறதாகப் புனைவு அமைகிறது) வேணுமுதலி என்ற பாத்திரமும் மாறி மாறி கருத்துமோதல் நிகழ்த்துகிற கட்டத்தில் பாரதி மெளனமாகவே இருப்பதாகக் காட்டப் படுகிறது. இந்தப் பகுதியை எப்படிப் புரிந்துகொள்வது என்பது வாசகனின் குழப்பமே அல்லவா ?

இத்தளத்தையொட்டி நுாலாசிரியருக்கு இன்னொரு கவனந்தாண்டலும் இருக்கிறது. பாரதிகாலம் தாண்டி தற்காலத்தில் அதைப் பகிர்ந்து கொள்கிற நிலையில், சொல்லாட்சிகள் மாறுகின்றதை அக்கறைப் படுதல் நலம். பாண்டிச்சேரி குயவன் நெல்லைச்சீமை பாஷை பேசுவது, சுரேந்திரநாத் ஆர்யாவை தெலுங்கில் ‘அபூர்வமாய்ப் ‘ பிரசங்கம் செய்வார் என பாரதி அறிமுகப் படுத்துவது, (He delivers an excellent speech /or/ He speakes very rarely ?) – வ.வே.சு.ஐயர் ‘ ‘துண்டுப் பிரசுரங்கள் ‘வன்முறை ‘பரப்பும் ‘ ‘ (தேசபக்தி வன்முறைதானா ?) எனப் பேசுவது, என்றெல்லாமான வார்த்தையாடல்களை மன்னிக்கலாம்.

அலைகளுக்குதான் துதிக்கையாடல் என உவமை சமைப்பர். மழையைச் சொல்கிறார். ஒட்டவில்லை. பாரதியின் நெகிழ்ந்த மனநிலையை, குருவிகளுக்கு தானியமெறிந்து தான் மெலிந்ததைக் காட்சியாக்குகிறார். செல்லம்மாவும் தங்கை யதுகிரியுமாய் அதைப் பேசிக் கொள்வதைவிட பாரதிபக்கமிருந்து காட்சியமைத்தால்தானே அவரது மனநிலை வாசகருக்குப் பொலிவுபெறும். பிச்சைகாரனுக்குப் பட்டெடுத்து நீட்டியதை விளக்க வந்தவர், கட்டிய வேட்டியைக் கழற்றித் தந்ததாக எழுதியிருக்க வேண்டியதில்லை அல்லவா ? சற்று உணர்ச்சிவசப் பட்டுவிட்டார் சேதுபதி.

பாரதி வாழ்வின் நிகழ்ச்சிகளைப் பெரும்பகுதி புதுவையிலேயே அமைத்திருக்கிறார். சம்பவங்கள் அனைத்துக்கும் புதுவைத் தளம் பொருந்திப் போனதா என்பதும் அறியத் தக்கது. பெண்ணுரிமை பற்றிப் பாடிய பாரதி என்று பிறரும் மற்றவரும் அவரை வார்த்தையால் போற்றுகின்றனர் என்றாலும் அவரது பெண்ணுரிமைச் சிந்தனைகள் நாடகத்தில் விளக்கியுரைக்க தளம்-அமையப் பெறவில்லை. அரவிந்தர் போன்று பாரதியை பாதித்த பெரும் பாத்திரங்கள் முடங்கிப் போய் நண்பர் 1 நண்பர் 2 என்று பேரிடாத பாத்திரங்கள் பெரும்பங்கு – கதை நகர்த்த – வகிக்கின்றன.

வையம் தழைக்க வந்த மாமழை பாரதி, என்கிற லகரியுடன் காவியம் அக்நி, இந்திரன், வாயு… என பாரதியை சிறப்பறிமுகம் செய்கின்றதை ரசிக்க முடிகிறது. பாரதி மரணத்தில் அவர்கள் பூமிக்கு வந்து அவனது இறுதிச் சடங்குகளில் பங்கேற்பது காவியஉச்சம். அழகு. நுாலாசிரியரின் மனக்கலக்கமும், அதையும் மீறிய பாரதிவரிகளின் எழுச்சியை உணர்வெனக் கலத்தலும் மறக்க முடியாத பேரனுபவம்தான். காவியநாடக நல்-உத்தி அது. ‘ ‘அவனை அழைக்க ஐராவதத்தையா திருவல்லிக்கேணி கோவிலில் நிறுத்தினீர் ? ‘ ‘ என்கிறான் அக்நி.

பாரதி

திருவல்லிக்கேணி-யானை சுவைத்த

தமிழ்க்கரும்பு

– என்பார் வாலி.

பாரதி உதவியாளராக தண்ணீர், தேநீர்க் குவளைகள் சுமந்துவருகிறவன் குவளைக்கண்ணன்.

புதுவையில் இருந்து ‘விடைபெறுகிறேன் ‘ என கண்ணில் உணர்வொழுக விடைபெறுகிறான் பாரதி. அரவிந்தர் போன்ற முக்கியப் பாத்திரங்கள் அதில் நினைவுகூறப் படவில்லை. பாரதியே எழுதிய பாடல்களும் படைப்பில் இடம் பெற்றுள்ள நிலையில், பாரதியின் பாடல்களை தனியச்சு எழுத்தில் புலப்படுத்தி யிருக்க வேண்டும்.

பாரதி வாழ்க்கை தெரிந்த ஒருவருக்கு, சுதந்திரப் போராட்டப் பின்னணி ஞானங் கொண்டவர்க்கு நுால் அதிக வாசிப்பு-இன்பம் அளிக்கும். அல்லாத பட்சம், காந்தியை வந்து பார்த்துவிட்டு விருட்டென்று கிளம்பிச் செல்லும் பாரதி பாத்திரம் நுாலாசிரியன் உள்ளக் கிடக்கைக்கு மாறான மதிப்கபுளைத் தந்துவிடும் அல்லவா ?

பாரதியை உணர்ச்சிப் பிழம்பென முன்வைக்க முயல்கிறது இந்நாடகம். பாரதிவாழ்க்கை அல்ல, பாரதி உணர்வுகள் சார்ந்த அலையெழுப்புதல் நிகழ்ந்திருக்கிறது. அழகான நடை சேதுபதியுடையது. அழகுதமிழ். வசீகர வார்த்தையாடல்கள். ‘கண்ணன்போல சுதந்திரமும் சிறையில் பிறப்பதுவோ ? ‘ என்ற கட்டங்கள் ஆசிரியர் மனமொன்றிய படைப்புத் திறனை அடையாளப் படுத்தும். சேதுபதியின் வெற்றிகரமான படைப்பாகவே இதைக் கொள்ள முடிகிறது. அந்த வெற்றியில் பாதி, ஆமாம் பாரதியுடையது என்றபோதிலுங் கூட!

சேதுபதி தம் நிறைகளைத் தொடருவார். வாழ்த்துக்கள்.

– எஸ். ஷங்கரநாராயணன் –

—-

from the desk of

storysankar@rediffmail.com

s shankaranarayanan old no 2/82 second block

mugappair west chennai 600 037

ph/res 26258289 26521944

Series Navigation