நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

மு. சுந்தரமூர்த்தி


அரசியலும், சினிமாவும் இரண்டற கலந்திருக்கும் மாநிலம் என்ற பிம்பம் தமிழகத்துக்கு மட்டுமே உரிய ஒன்றாக இந்திய-தமிழக அறிவுஜீவிகளால் ஓயாமல் சுட்டிக்காட்டப்பட்டு வந்திருக்கிறது. இந்த போக்கு நாளடைவில் பிற பகுதிகளுக்கும் பரவி, இப்போது இந்தியா முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியாக ஆகிவிட்டபிறகு, ஓய்வு பெற்ற சினிமாக்காரர்கள் அரசியலில் நுழைவது பற்றி யாரும் இப்போது பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. முதன்முறையாக, தமிழகத்தில் ஒரு நடிகரோ, நடிகையோ நேரடியாக போட்டியிடாத இந்த தேர்தலில், பல பெரிய மாநிலங்களில்–இந்தியாவின் ‘கலாச்சார முன்னோடி ‘ என்று கருதப்படும் மேற்கு வங்காளம் உட்பட–நடிகர், நடிகைகள் தேசிய, வட்டாரக் கட்சிகளின் சார்பாக களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் இருபெரும் கட்சிகளின் தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் சினிமாவோடு தொடர்புடையவர்கள் என்றாலும் அவர்கள் இருவரும் முழுநேர அரசியல்வாதிகளாகவே அடையாளம் காணப்படுகிறார்கள். தம் சினிமாப் பிரபலத்தை மட்டுமே நம்பியோ, ரசிகர் மன்றங்களை அடித்தளமாக வைத்தோ அரசியல் செய்ய வேண்டிய நிலையில் இன்று அவர்கள் இல்லை. அதற்காக தமிழக அரசியலில் சினிமாக்காரர்களின் தலையீடு மறைந்துவிட்டது என்பது பொருளில்லை.

சினிமாத்துறையிலிருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெற்றுவிட்ட நடிகர் ரஜனிகாந்த் நேரடி அரசியலிலும் இறங்காமல், ஒரேயடியாக ஒதுங்கியும் இருக்காமல் சிலகாலமாக அடிக்கடி சலசலப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த சலசலப்புகளை பெரும்புயலாக உருப்பெருக்கிக் காட்டும் வேலையை வெகுஜன ஊடகங்கள் தொடர்ந்து செய்துக்கொண்டேயிருக்கின்றன. அவர் தும்மினாலும், இருமினாலும் கூட அது அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கான அறிகுறி என்றபோக்கில் ஆருடங்கள் தாராளமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அது தமிழக அரசியல் போக்கையே தலைகீழாக மாற்றிவிடக்கூடியது என்பது போன்ற புனைவுகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் அவர் யாரை ஆதரிக்கிறார் என்று பாதி உண்மையும், பாதி கற்பனையும் கலந்து ஜோசியம் சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலிலும், அவர் ஆதரிக்கும் கட்சியோ, ஆதரிக்காத கட்சியோ ஏதோ ஒன்று வெற்றி பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும், இந்த ஊடக ஜோசியர்களுக்கு அதெல்லாம் உறைப்பதில்லை. அந்த வகையில் தற்போதைய தேர்தலில் ரஜனிகாந்த் நடத்திக்கொண்டிருக்கும் நிழல் யுத்தமும் தேவைக்கதிமான ஊடக கவனிப்பைப் பெற்று, வேறு முக்கியப் பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறது. இவர் நடத்திவரும் நிழல் யுத்தங்கள்–ஜெயலலிதாவோடு 1996ல் நடத்தியதும், இப்போது ராமதாஸோடு நடத்துவதும்–எந்த ஒரு மக்கள் பிரச்சினையையும் முன்னிறுத்தி நடத்தப்படவில்லை. அவை முழுக்க, முழுக்க அவருடைய ஈகோவை ஜெயலலிதாவும், ராமதாசும் சீண்டிப்பார்த்ததின் எதிர்வினைகளாகவே இருப்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

தமிழகத்திற்கு முதலில் சினிமா வில்லனாக அறிமுகமாகி, பின் எதிர் நாயகனாக, தொடர்ந்து நாயகனாக உருமாறி, இப்போது அதீத நாயகனாக அறியப்படுபவர் நடிகர் ரஜனிகாந்த். இந்த படிப்படியான மாற்றத்தில் அவருடைய நடிப்பாற்றலின் வெளிப்பாடு கீழ் நோக்கி சரிந்து வந்தாலும், வருவாயும், பிரபலமும் படிப்படியாக உயர்ந்துவர, அவர் புகழ் வானைத்தொட்டுவிட்டதாக ஒரு பிரமை கட்டமைக்கப்பட்டுவிட்டது. இப்போது அவரை வானத்தில் உறையும் கடவுளாகவே ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. ஆரம்பகாலத்தில் திரைத்துறையில் காலூன்றுவதில் மிகுந்த சிக்கலை எதிர்கொண்டவர். கைகலப்பில் சிக்கி, நீதிமன்றம், மன நோய் சிகிச்சை, மணமுறிவு என்று அலைக்கழிந்து, அவற்றிலிருந்து மீண்டு தன் தொழிலில், சொந்த வாழ்வில் வெற்றியும், புகழும் அடைந்தவர். பிற்போக்கான படங்களை எடுத்துகொண்டே, ஒரு பக்கம் தனிமனித வழிபாட்டை முன்னிலைப்படுத்தும் ரசிகர் மன்றங்களை ஊக்குவித்தும், இன்னொரு பக்கம் ஆன்மீகத்தேடலிலும் ஈடுபட்டும் வருபவர். கடும் சவால்களை எதிர்கொண்டு வெற்றியடைந்த அவருடைய இந்த பயணத்திற்கு உந்துதலாக அமைந்தது சொந்த வாழ்வில் முன்னேற வேண்டும் என்னும் குறிக்கோளும், கண்மூடித்தனமான ரசிகர்களின் ஆதரவும் மட்டுமே முக்கிய காரணங்களாக இருந்திருக்கும். ஜெயலலிதா முதல்முறை முதலமைச்சராக இருந்தபோது இருவரும் வசிக்கும் போயஸ் தோட்டப் பகுதியில் காவல்துறையின் கெடுபிடி அவருடையை ஈகோவை சீண்டியபோதே அவர் அரசியலில் தலைகாட்ட ஆரம்பித்தார். மற்றபடி அவருக்கோ, அவருடைய பக்தர்களுக்கோ எந்த அரசியல் கொள்கைகளும், சமூக அக்கறைகளும் இருந்திருக்க நியாயமில்லை.

இப்போது ரஜனிகாந்தின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் டாக்டர் ராமதாஸ் தமிழகத்தில் உள்ள ஒரு பிற்பட்ட சமூகத்தில் பிறந்து சுயமுயற்சியின் விளைவாக மருத்துவம் படித்து, முதலில் அரசு மருத்துவராகவும், பின் சொந்தமாக மருத்துவத் தொழிலையும் பார்த்தவர். தான் பிறந்த சமூகம் பிற்பட்ட நிலையிலிருப்பதை கண்டுணர்ந்து, தன் தொழிலை ஓரமாக வைத்துவிட்டு, முதலில் சாதிச்சங்கத்தை ஆரம்பித்து இடஒதுக்கீட்டுக்காக தொடர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டவர். பின் அதை அரசியல் கட்சியாக மாற்றியமைத்து அந்த சமூகத்திற்கு ஓரளவு அரசியல் அதிகாரத்தையும் பெற்றுத் தந்தவர். தன்னுடைய சமூகத்தின் முன்னேற்றத்துக்காக கொள்கையளவில் எத்தகைய சமரசத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார். எந்த கட்சியுடனும் கூட்டுவைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறார். அதனால் உருவாகும் விமர்சனங்களையும், கேலிகளையும் கண்டு கவலைப்படுவதாகத் தெரிவதில்லை. தன் சமூகத்தில் கூட சிலரை பகைத்துக் கொள்ளும் அளவிற்கு, ‘தன் கட்சியில் தான் வைத்ததே சட்டம் ‘ என்ற சர்வாதிகார போக்கையும் கைக்கொள்ளத் தயங்குவதாகத் தெரியவில்லை. தன் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான இன்னொரு முயற்சியாக இப்போது ஒரு கல்வி நிறுவனத்தையும் உருவாக்க முனைந்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக இவரை தமிழ்ச் சமூகத்தின் தலைவர் என்று பார்க்கமுடியாவிட்டாலும், ஒரு பிற்பட்ட சமூகப்பிரிவின் கல்வி, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்துக்காக உழைப்பவர் என்ற அளவிலாவது பார்க்கமுடியும்.

இந்த இரண்டு தனிநபர்களின் பின்னணிகளை வைத்தே அவர்களுக்கிடையில் பிரச்சினை உருவான விதத்தையும், அப்பிரச்சினை இத்தேர்தலில் எப்படி விளையாடுகிறது என்பதையும் அணுகவேண்டும். இது வன்னியர்-வன்னியர் அல்லாதோர், பா.ம.க. சேர்ந்திருக்கும் அணி–எதிரணி என்பது போன்ற சமூக, அரசியல் பிரச்சினையல்ல. அவற்றின் அடிப்படையில் விவாதங்கள் நடந்தாலாவது தமிழ்ச் சமூகத்துக்கும், தமிழக அரசியலுக்கும் ஏதேனும் பலன் இருக்குமென ஆறுதல் அடையலாம். ஆனால் இப்போது தலையெடுத்துள்ள பிரச்சினை வேறுவகையானது. ஒரு சமூகப்பிரிவுக்கு தலைமை தாங்குபரின் அரசியல் வேட்கைக்கும், இன்னொரு தனிமனித ஈகோவுக்கும் இடையிலான பிரச்சினை. பின்தங்கிய சமூகப்பிரிவு ஒன்றின் முன்னேற்றத்துக்கும், ஒரு செல்வந்தரின் பொருள் இழப்பிற்கும் இடையிலான பிரச்சினை. முன்னேறத்துடிக்கும் சாதியைச் சார்ந்த மக்கள் கூட்டத்திற்கும், சுயமுன்னேற்றத்தில் அக்கறையற்று, செல்வம் கொழிக்கும் தனி மனிதரை கண்மூடித்தனமாக வழிபடும் பொறுப்பற்ற கும்பலுக்கும் இடையிலான பிரச்சினை.

ரஜனிகாந்த் ரசிகர் மன்றம் போன்ற தனி நபரை துதிசெய்யும் அமைப்புகளுக்கு எந்த ஒரு சமூக அக்கறையோ, அரசியல் கொள்கைகளோ இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அவற்றுக்கு தம் கனவு நாயகனின் பிம்பத்தைக் கட்டிக்காப்பதே முக்கியம். யாராவது அந்த பிம்பத்தை கீறிப் பார்த்தால் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இத்தகைய அமைப்புகள் அவ்வப்போது செய்யும் ‘சமூக சேவைகளும் ‘ தம் வழிபாட்டு நாயகனின் பிரபலத்தை தக்கவைத்துக்கொள்ளவோ அல்லது எதிர்கால அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் அமைத்துக்கொள்வதற்கான எதிர்பார்ப்போடோ தான் இருக்கும். ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகளால் மக்களுக்கோ, அல்லது குறைந்தபட்சம் அதில் ஈடுபடும் அடிமட்ட ரசிகர்களுக்கோ பெரிதாக பலனும் ஏற்பட வாய்ப்பில்லை. அடிமட்ட ரசிகர்களின் நேரமும், உழைப்பும், பொருளும் வீணாவதைத் தவிர அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் கல்வி, தொழில், பொருளாதார பாதிப்புகளும் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம். இந்த பின்னணியை வைத்து தான் ராமதாஸ் இதை ஒரு பிரச்சினையாக்கியதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த துணிவு ராமதாசுக்கும் முன்போ, பின்போ எந்த பெரிய, சிறிய அரசியல் தலைவருக்கும் வரவில்லை என்பதே நம் நாட்டு அரசியலின் அவலம். தமிழகத்தில் செல்லாக்காசுகளாக இருக்கும், பா.ஜ.க.வின் அரசியல் தரகர் சோ ராமசாமி, ப.சிதம்பரம் போன்ற அறிவுஜீவிகள் ரஜனியை தம் பக்கம் இழுத்து கட்சியை வளர்த்து ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற அதீத நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். தி.மு.க. (கொஞ்சகாலம் த.மா.வும்) போன்ற பெரிய கட்சிகளோ, ஏற்கனவே இருக்கும் கட்சியின் பலத்துக்கு மேலும் வலு சேர்த்து தராசைத் தன் பக்கம் சாய்க்க எந்த பக்கத்திலிருந்து சில்லரை ஓட்டுக்கள் விழுந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறன்றன. அதனால் இவர்கள் யாவரும் ரஜனியின் மனம் கோணும்படி நடந்துக்கொள்ளக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு, ரஜனிகாந்த் ‘பாபா ‘ படம் தயாரிக்க ஆரம்பித்ததிலிருந்து சுமார் ஆறு மாதங்களுக்கு அந்தப் படத்தைப்பற்றியும், ரஜனியின் அரசியல் பிரவேசம் பற்றியும் அதீதமான புனைவுகள் ஊடகங்களை ஆட்கொண்டன. அந்தப் படத்தின் மூலம் ரஜனி தன் அரசியல் திட்டத்தை, புதிய அரசியல் சித்தாந்தத்தை பிரகடனப்படுத்தப் போகிறார் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது. அந்தப் படம் ஏதோ தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய வல்லமை கொண்ட வரலாற்று நிகழ்வாகச் சித்தரிக்கப்பட்டது. வானத்திலிருந்து இறங்கிவரப்போகும் கடவுள் அவதாரத்தின் வருகைக்காக தமிழத்தையே தயார்படுத்துவது போன்ற புனிதப் பணியில் ஊடகங்கள் தம்மை அர்ப்பணித்துக்கொண்டன. முட்டாள்தனமான பாபா திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த ப. சிதம்பரம் அந்தப் படத்தின் மூலம் ரஜனிகாந்த் ஆன்மீகத்தை வளர்ப்பதாக முத்தை உதிர்த்தார். (கட்டிய வேட்டி நலுங்காமல் ‘நாகரிக அரசியல் ‘ நடத்தும் சிதம்பரம் திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளுக்கு மாற்றாக ‘காமரஜர் ஆட்சி ‘யைக் கொண்டுவர தன்னைவிடவும் பாபாவையே பெரிதும் நம்பியிருந்தார்). படத்தின் வடஅமெரிக்க வினியோக உரிமையை தன் மகனுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு, ‘இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழும் பாபா ஆன்மீக நம்பிக்கை கொண்ட ரஜனி போன்றவர்களின் கண்களுக்கே காட்சியளிப்பார் ‘ என்று வியாக்கியனம் வழங்கிய ரஜனியின் அன்பிற்குரிய ஒரு அமெரிக்கச் சாமியார் நூறு ஆண்டுகள் கூட வாழாமல் அடுத்த ஓரிரு நாட்களிலேயெ மண்டையைப் போட்டுவிட்டார்.

இப்படி நாளுக்கு நாள் ஊதிப் பெருக்கப்பட்டு உயர, உயர எழும்பிக்கொண்டிருந்த பலூனில் முதலில் ஓட்டைப் போட்டவர் ராமதாஸ். இரண்டாயிரம் ஆண்டுகளாக இமயமலையில் வாழ்ந்து வரும் ஒரு பாபாவை சந்தித்ததாக ரஜனி விட்ட புருடாவை தர்க்கப்பூர்வமாகக் கிண்டலடித்தும், திரைப்படங்கள் மூலம் அவர் இளைஞர்களுக்குக் கற்றுத்தரும் தீயபழக்கங்களை விமர்சித்தும், தமிழகத்திற்காக ரஜனி செய்த ‘சேவைகளை ‘க் குறித்தும் கேள்விகளெழுப்பிய ராமதாஸ், இளைஞர்கள் ரசிகர் மன்றங்களில் சேர்ந்து பொருளையும், ஆற்றலையும் வீணடிப்பதை கண்டனம் செய்தார். தன் கட்சியினரும், சாதியினரும் எந்த ரசிகர் மன்றங்களிலும் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டார். ராமதாசின் இந்த விமர்சனத்தையும், கட்டளையையும் உள்வாங்கிக்கொண்ட அவரது கட்சியினர் அதீதமாக உணர்ச்சிவசப்பட்டதன் விளைவுகள்–பாபா படப்பெட்டியைக் கடத்தியது, திரையரங்குகளில் நுழைந்து அடித்து நொறுக்கியது போன்ற அராஜகச் செயல்கள். ராமதாசின் விமர்சனத்திற்கு பின்னணியாக இருந்த கோபமும், தர்க்கபூர்வமான கேள்விகளும் நியாயமானதாக இருந்தாலும் அந்த கோபம் கட்சியினரால் வெளிப்படுத்தப்பட்ட விதம் ஜனநாயக மரபை மீறியது.

அபத்தமான கதையோடு, பா.ம.க.வின் எதிர்ப்பும் சேர்ந்துக் கொண்டதால் எதிர்பார்த்தபடி பாபா படம் வெற்றியடையவில்லை. அதுவரை ரஜனியைப் பற்றி மறந்துகூட எதிர்மறையாகப் பேசுவதை தெய்வ நிந்தனையாகக் கருதி அமைதி காத்தவர்கள் ஒவ்வொருவராக லேசாக முனக ஆரம்பித்தார்கள். நம் அறிவுஜீவிகளும், தம் பங்குக்கு பாம்பு செத்தபிறகு அடிக்க ஆரம்பித்தனர். ஆனால் தமிழிலக்கிய உலகின் கலாச்சாரத்திற்கு குந்தகம் வராமலிருக்கும்பொருட்டு பாபாவை விமர்சித்ததைக் காட்டிலும், சக எழுத்தாளரான எஸ். ராமகிருஷ்ணனின் மீது வசை பாடுவதிலேயே குறியாக இருந்தனர் (லத்தீன் அமெரிக்காவின் மாய யதார்த்தவாதத்தில் மனதைப் பறிகொடுத்துவிட்ட ராமகிருஷ்ணன் ‘இரண்டாயிர வயதுடைய பாபாவால் ‘ ஈர்க்கப்பட்டதில் எந்த வியப்பும் இல்லை). ஊடகங்கள் ஊதிவிட்டதை நம்பி பல லட்சங்கள் அள்ளிக் கொட்டிய பட வினியோகஸ்தர்கள் நெருக்க, சூப்பர் ஸ்டார் பணத்தைத் திருப்பித்தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழ் நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்க வந்த ‘இரண்டாயிரம் வருடம் புகழ் ‘ பாபா இப்படியாக அகால மரணமடையை, ஊடகங்கள் கொஞ்ச நாள் சும்மாயிருந்துவிட்டு, ரஜனியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று மீண்டும் ஜோசியம் கணிக்கும் வேலையில் இறங்கின.

அப்போது ஆரம்பித்த ராமதாஸ்-ரஜனியின் யுத்தம் இப்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ராமதாசுக்கு பாடம் புகட்டவேண்டிய நேரம் வந்துவிட்டதாக ரஜனிகாந்தும், அவரது ரசிகர் படையினரும் வரிந்துக் கட்டி நிற்கிறார்கள். நம் ஊடகங்களுக்கு எழுந்துள்ள உற்சாகத்தைக் கேட்கவா வேண்டும் ? 1996ல் ஜெயலலிதாவின் படுதோல்விக்கும், தி.மு.க.-த.மா.க. அணியின் வெற்றிக்கு ரஜனிகாந்த் தான் மூலக்காரணம் என்று நம்பவைத்ததில் ஒரளவு வெற்றிபெற்ற ஊடகங்கள் இப்போதே பா.ம.க.விற்கு சாவுமணியடித்து, அது சார்ந்துள்ள கூட்டணிக்கும் பீதியைக் கிளப்பும் பணியில் மும்முரமாக இறங்கிவிட்டன. கட்சிகளின் கொள்கைகளும், வாக்குறுதிகளும், மக்கள் பிரச்சினைகளும் இந்த வெட்கங்கெட்ட ஊடகங்களுக்கு இரண்டாம்பட்சமாகி ரஜனி தன் முடிவை அறிவிக்கவேண்டும் என்று கெஞ்சி தலையங்கங்கள் தீட்டும் அவலம்.

ஒருபக்கம், வெற்றிபெறவேண்டிய பாபாவை பா.ம.க.வின் செயல்பாடுகள் தான் கெடுத்துவிட்டன, ரஜனிகாந்த் நஷ்டப்பட்டார் என்ற நம்பிக்கை உருவாக்கம். இன்னொரு பக்கம் அந்தப் படத்தை நடித்துத் தயாரித்த ரஜனிகாந்த் அதீத வல்லமைப் படைத்தவர், இப்போது பா.ம.க.வைத் தோற்கடித்துவிடுவார் என்ற பயமுறுத்தல்கள். ஒன்றுக்கொன்று முரணான இரண்டு நம்பிக்கைகள். ரஜனிகாந்தின் பிரபலம் அவ்வளவு பெரியதென்றால், பா.ம.க.வின் எதிர்ப்பை மீறி பாபா வெற்றி பெற்றிருக்கவேண்டும். அல்லது உலகமே எதிர்பார்த்து காத்திருந்த பாபாவை ஒன்றுமில்லாமல் பிசுபிசுக்க வைத்தது பா.ம.க. தான் என்றால் இப்போது ரஜனிகாந்தின் எதிர்ப்பைப் புறந்தள்ளி அவர்கள் வெற்றிபெறவேண்டும். எனக்கென்னமோ இவற்றில் ஒன்றிலுமே உண்மை இருப்பதாகத் தோன்றவில்லை.

பா.ம.க.வுக்கு வடதமிழ் நாட்டில் வன்னியர்களைச் சார்ந்த செல்வாக்கு இருக்கிறது. ஆனால் பாபா படம் தமிழகம் முழுவதையும் தோல்வியைத் தழுவியது. ரஜனியின் படம் என்ற ஒரு காரணம் மட்டுமே பாபா போன்ற அபத்தங்கள் வெற்றிபெற போதாது என்பதால் தான் தோல்வியடைந்திருக்க வேண்டும். ரஜனிக்கு அவரை தெய்வமாகக் கருதும், வாழ்வில் குறிக்கோளற்ற கூட்டம் ஒன்று தமிழகம் முழுவதும் சிதறிக்கிடக்கிறது என்பது உண்மைதான். தம் இஷ்டதெய்வத்திற்காக நேரத்தையும், சக்தியையும் செலவிடவும், ஏன் அடிதடிகளில் சிக்கி இரத்தம் சிந்தவும் தயாராகவும் இருக்கிறது இந்த கூட்டம். அதற்காக ஒரு பலமிக்க அரசியல் கூட்டணியின் வெற்றி-தோல்விகளை நிர்ணயிக்கும் அளவுக்கு இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. அல்லது ஒட்டுமொத்த வாக்காளர்களும் பாபாவின் தோல்விக்காக பரிதாபப்பட்டு, தம் சொந்த பிரச்சினைகளை மறந்து இந்த தேர்தலில் பா.ம.க.வுக்கு எதிராகத் திரளுவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது.

தப்பித்தவறி எல்லா தொகுதிகளில் பா.ம.க. வெற்றிபெற்றுவிட்டால் ஊடகங்கள் ஒன்று அமைதி காக்கும் அல்லது வேறு சப்பைக்கட்டுகளை தேடியெடுக்கும். ஆனால் அக்கட்சி தோல்வியடைந்துவிட்டாலோ அதற்குக் காரணம் ரஜனிதான் என்று கதை கட்டத் தயங்காது. சமயங்களில் உணர்ச்சியடிப்படையில் தமிழக வாக்காளர்கள் ஒரே பக்கம் சாயும் இயல்பு கொண்டவர்கள் தாம். ஆனால் ரஜனியின் ஈகோப் பிரச்சினையும், பண இழப்பும் அப்படியொன்றும் தமிழக மக்களின் உணர்ச்சிகளை ஒட்டு மொத்தமாக வசப்படுத்திவிடும் என்று தோன்றவில்லை. ஆகவே இந்த தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது அனேகமாக களத்திலிருக்கும் மூன்று கூட்டணிகளின் கூட்டு வலிமைகளும் (கட்சிகளின் நிறுவனபலம், பணபலம் முதலியன), மக்கள் பிரச்சினைகளுமாகத் தான் இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.

munirathinam_ayyasamy@yahoo.com

பின் குறிப்பு: இந்த கட்டுரையின் முதல் வரைவை கடந்த வெள்ளிக்கிழமையே எழுதிவிட்டதாலும், ‘ஏப்ரல் 15 ‘ கத்தி தலைக்கு மேலே தொங்கிகொண்டிருப்பதாலும் ரஜனி ‘மனம் திறந்து விட்டதை ‘ப் பற்றி இதில் சேர்த்துக்கொள்ள அவகாசமில்லை. முடிந்தால் அதைப்பற்றி தனியாக வேறொரு சமயத்தில்.

Series Navigation

மு. சுந்தரமூர்த்தி

மு. சுந்தரமூர்த்தி