நிலாவில் குதித்து உலாவிய பூலோக வாகனங்கள்

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

சி. ஜெயபாரதன், கனடா


சந்திர தளத்தில் விந்தை புரிந்த வாகனங்கள்

அண்ட வெளிப் பயணத்தில் முதன் முதல் சந்திர தளத்தைத் தொட்டது, ரஷ்யாவின் மனிதர் அற்ற செயற்கைக் கோள் லூனா 2 [Luna 2]. அது 1959 செப்டம்பர் 12 ஆம் தேதி ஏவப் பட்டு, 36 மணி நேரம் கழித்து, சந்திரனில் வந்திறங்கியது. மனிதர் இதுவரை எந்தக் கருவி மூலமும் பார்த்திட முடியாத வெண்ணிலவின் பின்னழகை முதலில் படமெடுத்தது, ரஷ்யா 1959 அக்டோபர் 4 ஆம் தேதியில் ஏவிய, லூனா 3 [Luna 3]. அதுபோல் பூகோள மாந்தருக்கு வெண்ணிலவின் முன்னழகை நெருங்கிய நிலையில் முழுமையாகத் தெளிவாக முதலில் படமெடுத்தது, அமெரிக்கா 1964 ஜூலை 28 இல் ஏவிய விண்கோள், ரேஞ்சர் 7. அது சந்திர தளத்தில் மோதுவதற்கு முன் சுமார் 1120 மைல் உயரத்திலிருந்து, 1000 அடி வரை நெருங்கி 4316 படங்களைப் பிடித்துப் பூமிக்கு அனுப்பியது.

1966 ஜனவரி 31 ஆம் தேதி ரஷ்யாவின் லூனா 9 [Luna 9] முதன் முதல் மெத்தடியிட்டு இறங்கியது [Soft Landing]. அதை அடுத்து அமெரிக்கா மே 30 இல் தனது சர்வேயர் 1 [Surveyor 1] விண்கோளை ஏவி, சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கி 11,150 நெருக்கப் படங்களை எடுத்து அனுப்பியது. 1967 இல் சர்வேயர் 3 நிலவின் மண் மாதிரிகளைத் தானாகச் சோதித்து, முடிவுகளைப் பூமிக்கு அனுப்பியது. அதற்குப் பிறகு சர்வேயர் 5 முதன் முதல் ‘ஆல்ஃபாத் துகள் சிதைவுப் பொறி நுணுக்கத்தில் ‘ [Alpha Particle Scattering Technique], நிலா மண்ணை ரசாயன முறையில் ஆய்வு செய்து முடிவுகளைப் பூமிக்கு அனுப்பியது. 1966-1967 ஆண்டில் மட்டும் ‘சந்திர வீதிக்கோள் ‘ [Lunar Orbiter] ஐந்தை ஏவி நிலவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படம் எடுத்து, அடுத்து அமெரிக்கா சந்திரனில் மனிதரை இறக்கத் தகுதியான தளங்களைத் தேர்ந்தெடுத்தது.

அடுத்து ரஷ்யா அனுப்பிய இரண்டு மனிதரற்ற சுயமாய் இயங்கும் லூனா 16 & 17 புரிந்த நூதன விந்தைச் செயல்கள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவை. 1970 செப்டம்பர் 12 இல் லூனா 16 சந்திர தளத்தில் இறங்கியதும், முதன் முதல் ஓர் உறைக் கலன் [Sealed Container] 113 கிராம் மண்ணை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீண்டு ரஷ்யா வந்தடைந்தது. அடுத்த விந்தை, 1970 நவம்பர் 10 இல் ஏவப்பட்ட லூனா 17 முதன் முதல் தானாய் இயங்கும் ‘லூனோகோடு 1 ‘ [LunoKhod 1] என்னும் நிலா வண்டியைச் சந்திர தளத்தில் ஊர்ந்திட விட்டு தகவலைச் சேகரித்துப் பூமிக்கு அனுப்பியது. வண்டியின் நடுவே உள்ள தொட்டியில் இயங்கும் மின்னியல் கருவிகள் யாவும் சீராய் அமைக்கப் பட்டு, 15 psi பூவாயு அழுத்தமுடன் [1 Earth Atmosphere] உறையிடப் [Sealed] பட்டிருந்தது. நிலா வண்டி பூமியிலிருந்து முடுக்கப் பட்டுச் சூரிய மின்சக்திப் பாட்ரியில் [Solar Batteries] இயங்கி, தொலைக் காட்சிக் காமிரா ஒன்றை ஏற்றிக் கொண்டு, 11 மாதங்கள் 6.5 மைல் உலா வந்து சந்திர மண்டலத்தைத் தள ஆய்வு செய்து விஞ்ஞானச் சோதனை முடிவுகளையும், 20 ஆயிரம் படங்களையும் அனுப்பியது. மறுபடியும் 1972-76 இல் லூனா 20, 21, 24 ஏவப்பட்டு லூனோகோடு [LunoKhod 2] வண்டிகள் நிலாவில் உலாவி இதே விஞ்ஞான வினைகளைத் திரும்பவும் செய்து காட்டியன. இந்த வண்டிகள் யாவும் மின்சக்திப் பாட்ரிகள் [Battery] தீய்ந்து போனதால் முடமாகிப் பின்னால் நின்று போயின.

அபொல்லோ 15 [Apollo 15] ஏவிய அமெரிக்க வாகனம் பல மில்லியன் டாலர் செலவில் செய்யப் பட்டது. விண்கோள் பயணம் செய்யும் போது மேற்சட்டம் முழுவதையும் மடித்து வைத்துக் கொள்ளலாம். வாகனம் சந்திரனில் இறங்கியதும் விரித்து ஊர்ந்திடச் செய்யலாம். 50 மைல் தூரம் ஓடுமளவு மின்சக்தித் திறம் உள்ள பாட்ரிகள் [Batteries] நான்கு சக்கரங்கள் மேல் வைக்கப் பட்டிருந்தன. வாகனத்தின் பூமி எடை 420 பவுண்டு [நிலா எடை 70 பவுண்டு]. பூமியின் ஈர்ப்பு விசை, நிலவின் ஈர்ப்பு விசையை விட ஆறு மடங்கு பெருக்கம்: 420/6 =70. நிலவின் மண், பாறை மற்ற மாதிரிகளைச் சேகரித்து வைக்கப் போதிய இடவசதி கொண்டது. சுயமாய்ப் படமெடுக்கும் காமிரா, வண்டி போகும் இடமெல்லாம் படங்களைப் பதிவு செய்து கொள்ளும். பணி முடிந்தபின், விலை மிகுந்த அந்த வாகனம் சந்திர மண்டலத்திலே விடப் பட்டது. அண்ட வெளி யாத்திரையில், சந்திர மண்டலத்தில் அனாதையாக விடப் பட்ட வாகனங்கள், ரஷ்யாவின் லுனொகோடு வண்டிகள் இரண்டு, அமெரிக்காவின் அபொல்லோப் பயணத்தில் விடப் பட்ட வண்டிகள் மூன்று. நிலவில் வாயு மண்டலம் ஏதுவும் இல்லாததால், வண்டிகளில் துருப்பிடிப்ப தில்லை. பின்னால் அங்கு போகும் விண்வெளி விமானிகள், புது பாட்ரிகளைப் பூட்டிக் கொண்டால், வாகனங்களை மறுபடியும் ஓட்டலாம்.

அபொல்லோ திட்டங்கள் 11 முதல் 17 வரை [அபொல்லோ 13 இடையிலே முடங்கி போனது] நிறைவேறி சந்திர மண்ணில் இதுவரை நடமாடிய அமெரிக்க விண்வெளித் தீரர்கள் பனிரெண்டு பேர். அவர்கள் சந்திர தளத்தில் ஆறு இடங்களில் விஞ்ஞானச் சாதனங்களை நிலைநாட்டித், தகவல்கள் தானாய்ப் பூமிக்கு வர ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பூமிக்கும் நிலவுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள்.

முதன் முதல் சந்திரனின் விட்டத்தை 2300 மைல் என்று 5% துள்ளியத்தில் கணக்கிட்டவர், 1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கிரேக்க மாவீரர் அலெக்ஸாண்டரிடம் பணி புரிந்த வானியல் மேதை, டாலமி [Ptolemy]. பூமியிலிருந்து உள்ள தூரத்தை 233,686 மைல் என்று 2% துள்ளியமாய் கணித்தார். நவீன லேஸர் தொலையளப்பு [Laser Telemetry] முறையில் 1969 இல் செய்த அபொல்லோ சந்திர பயணத்தில் பூமியிலிருந்து பெருஆரம் [Apogee] 252,828 மைல், குறுஆரம் [Perigee] 221,566 மைல் என்று அறியப் பட்டது. அதாவது இடைநிலைத் தூரம் [Mean Distance] 237197 மைல். சந்திரனின் விட்டம் 2085 மைல்.

தீக்கனல் கிரகங்களான புதன் [-170 to +390 C], வெள்ளி [-450 to +480 C] போல் சூரியனுக்கு நெருங்கி இல்லாது, குளிர்க் கோளங்களான செவ்வாய் [-128 to +24 C], வியாழன் [-140 C], சனி [-160 C] கிரகங்கள் போல சூரியனை விட்டு அதிக தூரம் விலகாமலும் இடையே நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit] சுற்றி வந்து, மித மிஞ்சிய தட்ப வெப்ப நிலை ஏற்படாதபடி பூமி [-88 to +48 C] உஷ்ண எல்லைக்குள் இயங்கி வருகிறது.

புவி ஈர்ப்பு வளர்வேகத்தின் அளவு [Gravitational Acceleration] வினாடிக்கு 32 அடி/வினாடி [32 feet per second square]. நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு [5.3 feet per second square]. நமது பூகோளம் 78% நைட்ரஜன் வாயு, 21% பிராண வாயு கலந்த பிரமாண்டமான வாயு மண்டலம் சூழ்ந்த ஓர் கூண்டுக் குள்ளே பாதுகாப்பாய் மூடி வைக்கப் பட்டுள்ளது. சூரிய வெப்பம் மிகவும் தாக்காதபடி, அந்தக் கவசம் பூமியைக் காத்து வருகிறது. அண்ட கோளங்கள் வீசி எறியும் விண்துணுக்குகள் [Meteors] கூண்டை ஊடுருவி நுழையும் போது, உராய்வுக் கனலில் [Frictional Heat] எரிந்து சாம்பலாகி விடுகின்றன. அந்தக் கூண்டு வாயுக்கள் தப்பி ஓடி விடாதபடி, பூமியின் மாபெரும் ஈர்ப்பு சக்தி அவற்றைத் தன் மையம் நோக்கி இழுத்து அணைத்துக் கொள்கிறது. ஆனால் பளுவற்ற நிலாவின் வலுவற்ற ஈர்ப்பு சக்தியால், பூமியைப் போன்று வாயு மண்டலத்தைத் தன் வசம் கவர்ந்து வைத்துக் கொள்ள முடியவில்லை.

சந்திர மண்டலத்தில் பூமியில் இருப்பது போன்று 67% சமுத்திர நீர் கிடையாது. 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன்பு பூமியிலிருந்து, பெயர்ந்து தனிக் கோளமானதாக நிலவு கருதப் படுகிறது. சந்திர மண்டலத்தின் தட்ப, வெப்ப உஷ்ணம் பகலில் +117 டிகிரி C, இரவில் -171 டிகிரி C. சந்திரன் வெட்ட வெளியான ஓர் மாபெரும் முடத்துவ [Inert] மயானக் கண்டம். ஆயிரக் கணக்கான எரிமலைகள் பொங்கி எழுந்து அக்கினிக் குழப்புகளைக் கக்கிச் சாம்பல் குழிகளை உண்டாக்கிப் பின்பு குளிர்ந்து போயின. போதிய ஈர்ப்பு சக்தி இல்லாததால், எரிமலைக் குழம்பு வாயுக்களை, சந்திரன் கவர்ந்து இழுத்துக் கொள்ள இயல வில்லை. நீர் எந்தக் காலத்திலும் நிலவில் இருந்ததில்லை. வாயுச் சூழ்நிலை எதுவும் இல்லாததாலும், நீர்த்தூசி [Moisture] எதுவுமற்ற உச்சக் காய்வு நிலையில் [Extreme Dry Condition] இருப்பதாலும், நிலவில் எவ்வித மேகக் கூட்டம் எப்போதும் தென்படு வதில்லை. ஆகவே நிலாவை நாம் எப்போது பார்த்தாலும் தெளிவாகத் தெரிகிறது.

பூமியைக் குவிமையமாய் [Focus] வைத்து, பெருஆரம் [Apogee] 252,828 மைல், குறுஆரம் [Perigee] 221,566 மைல் தூரத்தில், நிலவு நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit] வலம் வருகிறது. நீண்ட பெருஆர தூரத்தில் பவனி வருகையில், பூமியில் பார்ப்பவர்களுக்கு முழுமதி சிறியதாகத் தெரிகிறது. நெருங்கிய குறுஆர தூரத்தில் செல்லும் போது, முழுமதி பூமியில் இருப்பவர்களுக்குப் பெரியதாகத் தெரிகிறது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் ஆகிறது. அதுபோல் சந்திரனில் ஒரு பகல், ஓர் இரவைக் காண வேண்டு மானால் 27.3 பூமி நாட்கள் ஒருவர் தங்க நேரிடும். அதாவது நிலாவில் சூரிய ஒளி தெரியும் பகல் 13.5 நாட்கள். சூரிய ஒளி தென்படாத இரவு 13.5 நாட்கள். சந்திரன் பூமியைச் ஒரு தரம் சுற்றும் காலமும் அதே 27.3 நாட்கள்தான். பூமியின் அருகே வலம் வரும் சந்திரனால்தான் கடல் மட்டம் ஏறி இறங்கி, உச்ச அலையடிப்பு [High Tide], நீச்ச அலையடிப்பு [Low Tide] ஒவ்வொரு சந்திர மாதத்திலும் இருமுறை [சுமார் 27 நாட்கள்] ஏற்படுகின்றன.

நிலவு பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி, பூமிக்கு ஒரு முகம் காட்டியே, பூமியைச் சுற்றி வரும் பூமியின் ஓர் இயற்கைக் கோளம். பூமியும், நிலவும் இணைந்து 365.265 நாட்களுக்கு ஒரு முறைச் சூரியனைச் சுற்றி வருகின்றன. சந்திரனில் பூமிபோல் வட துருவம், தென் துருவம் கொண்ட காந்த மண்டலம் கிடையாது. ஆனால் அங்குமிங்கும் தரையில் கிடக்கும் உலோகக் கற்கள் சில காந்த சக்தி கொண்டிருந்தன.

சந்திர மண், பாறை மாதிரிகள் சோதிப்பு.

சந்திர சாம்பல் தூசியைப் 15 மடங்கு பெரிது படுத்தி ஆய்ந்து பார்த்ததில், ரத்தினக் [Gems] கற்கள் போல் மின்னும் கண்ணாடி உருண்டைகள் பல காணப் பட்டன. அந்த சாம்பல் தூசியினால் உயிர் இனத்துக்கு எந்தவிதத் தீங்கும் இல்லை. மண் மாதிரிகளில் பூர்வீக ஜந்துக்களின் பதிவுகளோ [Fossil Life] அல்லது வாழும் ஜீவன்களின் தடமோ எதுவும் தெரியவில்லை. கரிக் கூட்டகப் பொருட்களின் [Organic Materials – Carbon Compounds] அம்சங்கள் எதுவும் மாதிரிகளில் தென்பட வில்லை.

உயிரியல் விஞ்ஞானிகள் [Biologists] கிருமிகள் தீண்டாத எலிகளை, பொடியாக்கிய சந்திர தூசித் திரவத்தை ஊசியின் மூலம் நுழைவித்த போது, எலிகளுக்கு எந்தவித நோய்களும் உண்டாக வில்லை. கதிரியக்கப் பொட்டாசியம் [Radioactive Potassium] ஆர்கான் வாயுவாக [Argon Gas] மாறும் காலத்தைச் சோதித்ததில், சந்திர தள மண் மாதிரிகள் சந்திரன் தோன்றிய போதே [3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்] உண்டான கால அளவைக் காட்டியது. சூரிய மண்டலக் கிரகங்கள் யாவும் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய தாகக் கணக்கிடப் பட்டுள்ளது.

சந்திர தளமெங்கும் சிதைந்த கரடு முரடான கண்ணாடிச் சில்கள் [Fragments], பாசி வடிவில் உருண்டு நீலம், சிவப்பு, மஞ்சள், ஊதா, பழுப்பு நிறங்களில் கண்ணைப் பறித்தன. மாதிரிப் பாறைக் கற்கள் யாவும் மிகவும் காய்ந்து என்றுமே நீரில்லாத காய்வு நிலவைக் [Dry Moon] காட்டிக் கொடுத்தது. பூமியில் உள்ள பசால்ட் [Basalt] போன்ற தாது [Mineral] ஆக்ஸிஜன், சிலிகான், இரும்பு, கால்சியம், டிடேனியம், அலுமினியம், மாக்னீசியம் மூலகங்கள் [Elements] கொண்டு, அபொல்லோ 11 இறங்கிய ‘அமைதித் தளத்தில் ‘ [Tranquility Base] காணப் பட்டது.

பூகோளக் கடலில் நிலவின் நகர்ச்சியால் உச்ச, நீச்ச அலையடிப்புகள்

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் பூமியின் கடல் மட்ட எழுச்சிக்கும், தாழ்ச்சிக்கும் சந்திரனே காரணம் என்று உலக மக்கள் அறிந்திருந்தனர். அமாவாசை பெளர்ணமி தினங்களில் கடலில் உச்ச அலையடிப்பும் [High Tide], நிலவின் கால், முக்கால் போக்குகளில் [Quarter, Three-Quarter Phases] நீச்ச அலையடிப்பும் [Low Tide] நிகழ்வது, பல தடவைப் பார்த்துப் பழகிப் போன கடல் காட்சிகள். ஐஸக் நியூட்டன் அண்ட கோளங்களின் ஈர்ப்பு விசைகளை [Gravitational Force] எடுத்துக் காட்டிப் பிரபஞ்சத்தை விளக்கினார்.

ஈர்ப்பு என்பது அண்ட கோளங்களின் கவர்ச்சி விசை. அந்தக் கவர்ச்சி விசை அண்ட கோளங்களின் பளுவையும், இடைவெளித் தூரத்தையும் சார்ந்தது. பூமி சூரியனை விட்டு விலகி ஓடி விடாமல் என்றும் தடுப்பது, இரவியின் கவர்ச்சி விசை. அது போன்று பூமியை விட்டு நிலவு ஓடாமல் தடை செய்வது, பூமியின் ஈர்ப்பு விசை.

அண்டத்தின் அடுத்த விசை, அதன் சுழற்சியால் விளையும் சுழல்வீச்சு விசை [Centrifugal Force]. அண்டம் மையத்தை நோக்கி இழுக்கும் கவர்ச்சி விசையைச் சமப்படுத்துவது, அதன் சுழல் வீச்சு விசை. அண்டங்களின் விசைகள் சமப்பாடு எய்வதுபோல் தோன்றினாலும், தமது வீதிகளை [Orbits] மாற்றாது ஒன்றை ஒன்று சுற்றி வந்தாலும், அவற்றின் தனித்தனி துகள்கள் [Particles] நிறைவு [Equilibrium] நிலையில் இருக்க மாட்டா. சூரிய, சந்திர மண்டலங்களுக்கு அருகே பூமி நகரும் போது, மேல்தளத் துகள்களில் இழுப்பு விசை [Pull] மிகையாகிறது. திடப் பண்டத்தின் இழுப்பு திரவத்தின் இழுப்பை விட 2.5 மடங்கு அதிகம். பூமியின் நில மண்டலம் திரட்சியானது [Solid]. ஆனால் நீர் மண்டலம் இழுப்பியல்வு [Elasticity] கொண்டது. சந்திரன் தன் ஈர்ப்பு விசையால் இழுக்கும் போதுதான் கடல் நீர் சவ்வு ரப்பர் போல் இழுபட்டு, கடல் மட்டம் ஏறுகிறது.

ஐஸக் நியூட்டன் தன் உதாரணத்துக்குப் பூமி முழுதும் சீரான மட்டமுள்ள [Uniform Layer] நீர்க் கவசம் உள்ளதாகக் கற்பனித்துக் கொண்டார். நிலவுக்கு நெருங்கிய நீர் மண்டலத்தில் ஈர்ப்பு விசை மிகுவதால் உச்சமான நீர் இழுப்பும், நிலவுக்கு எதிரே உள்ள நீர் மண்டலத்தில் சுழல் வீச்சு மிகுவதால் குன்றிய நீர் இழுப்பும் நிகழ்கிறது. உச்ச இழுப்பு இடத்தில் நீர் மட்டம் எழுந்து குவிகிறது. நேர் எதிர்த் திக்கில் நீர் மட்டம் குறைந்துபோய் குழியாகிறது.

சூரியன் நிலவை விட 25 மில்லியன் மடங்கு மிகுந்த பளுவும், பூமிக்கு 93 மில்லியன் மைல் தொலைவிலும் இருப்பதால், சூரிய ஈர்ப்பு விசை நிலவு ஈர்ப்பு விசையில் பாதி அளவே பெறுகிறது. ஆகவே கடல் மட்ட ஏற்ற இறக்கத்தில் சூரிய ஈர்ப்பு விசையின் பங்கு மிகவும் குன்றியது. ஆனால் அமாவாசை பெளர்ணமி நாட்களில் சந்திரன், பூமி, சூரியன் மூன்றும் ஒரு நேர் கோட்டில் வரும் போது, சூரிய, சந்திர ஈர்ப்பு விசைகள் இணைந்து கூடுதலாகி, மிக்க உச்ச நிலை அலையடிப்பு உண்டாகிறது. அவ்வாறு மிக்க உச்ச அலையடிப்புகள் மார்ச் மாதம் 21 ஆம் தேதி, செப்டம்பர் 21 ஆம் தேதிகளில் சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரு நேர் கோட்டில் அமையும் போது நிகழ்கின்றன. சூரியன் பூமி, சந்திரன் இரண்டுக்கும் செங்குத்தாக இருக்கும் போது [நிலவின் கால் அல்லது முக்கால் போக்கின் போது], சூரிய ஈர்ப்பு சந்திர ஈர்ப்புக்கு எதிர்ப்பாகி, அலையடிப்பு நீச்ச மடைகிறது.

மற்ற உலகங்களில் எங்காவது பூமிபோல் உயிரனங்கள் உண்டா ?

சூரிய மண்டலத்தைச் சுற்றி வரும் கிரகங்களில், பூமியில் மட்டுமே புல், பூண்டு, மரம், செடி, கொடி, புழு, பூச்சி, விலங்கு, மனித உயிரினங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக இதுவரை விஞ்ஞான அடிப்படையில் நாம் அறிந்திருக்கிறோம். மற்ற உலகங்களில் எங்காவது இதுபோல் உயிரனங்கள் உண்டா என்பது மனிதனின் ஆறாத வேட்கையாய் இருந்து கொண்டு, அவனை விடாமுயற்சியில் தேடும் பணியில் தள்ளி இருக்கிறது.

******************************

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா