நிரப்பிச் செல்லும் வாழ்க்கை அசோகமித்திரனின் “நினைவோடை”

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

பாவண்ணன்


அசோகமித்திரன் நம்மிடையே வாழ்ந்துவரும் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். அவருடைய இருபத்தேழு கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. அசோகமித்திரனின் வாழ்க்கைப்பார்வை கனிவை முக்கியமாகக் கொண்டது. ஆதங்கத்தையும் ஆற்றாமையையும் நெடுக்கிழையும் குறுக்கிழையுமாகக் கொண்டு பின்னப்பட்டது அப்பார்வை. ஒருவித பற்றற்ற குரலோடு முன்வைப்பதுபோலத் தோற்றமளித்தாலும் அதில் தொனிக்கும் ஆற்றாமையின் பின்னால் படர்ந்திருக்கும் ஆழ்ந்த பற்றை நம்மால் உணர்ந்துகொள்ளமுடியும். அவருடைய பார்வையில் சில நூல்கள், சில சம்பவங்கள், சில வரலாற்றுத் தகவல்கள் மதிப்பிடப்படுகின்றன. சில படைப்பாளிகளும் மதிப்பிடப்படுகிறார்கள். அந்த நூல்களும் சம்பவங்களும் வரலாற்றுத்தகவல்களும் நமக்கு ஏற்கனவே தெரிந்தவையாகவே இருந்தாலும்கூட, இவருடைய கோணங்கள் நாம் கவனிக்கத் தவறிய சில அம்சங்களை நம்மோடு பகிர்ந்துகொள்பவையாக இருக்கின்றன.

"காவல் கைதிகள் சிறைமாற்றம்- பிரிட்டிஷார் பாணி" என்ற கட்டுரை ஆங்கிலேயர்கள் கைதிகளை இடம்விட்டு இடம்மாற்றுவதில் கடைப்பிடித்த நடைமுறையைப்பற்றிய ஒரு சித்திரத்தை நமக்கு வழங்கும் நோக்கத்துடன் தொடங்குகிறது. லண்டனில் படித்து, சுதந்திரவேட்கையால் ஆங்கிலேயர்களை எதிர்த்துவிட்டு கப்பலில் தப்பித்துவந்த சாவர்க்கர் மீண்டும் ஆங்கிலேயர்களிடம் அகப்பட்டு அந்தமானில் சிறைவைக்கப்பட்ட சுருக்கமான தகவலோடு தொடங்குகிறது கட்டுரை. பிறகு தளம்மாறி அதே சுதந்திரப்போராட்டத்தின் விளைவாக தமிழகத்தில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட டாக்டர் ராஜனைப்பற்றிய தகவலை விரிவாக முன்வைக்கிறது. மருத்துவத்தை ஒரு மக்கள்தொண்டாக நினைத்துப் பணியாற்றிய முக்கியமான மருத்துவர் ராஜன். பர்மாவில் மருத்துவராக இருந்தவர். தவறுகள் எங்கே நடைபெற்றாலும் தட்டிக் கேட்கிற குணம்கொண்டவர் என்பதால் பர்மிய அரசு அவரை பல இடங்களுக்கு மாற்றிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் அவருக்குத் தரப்படவேண்டிய உயர்வைத் தராமல் மக்கள் தொடர்பும் இல்லாத, மருத்துவமும் தேவைப்படாத ஒரு பதவியில் அமர்த்த பர்மா அரசு முனைந்திருந்தபோது, எல்லாவற்றையும் துறந்து இந்தியா திரும்பிவிட்டார் டாக்டர் ராஜன். அவருடைய மேன்மையான மனப்பான்மையால் ஏழை எளிய நோயாளிகள் நிரம்பப் பயனடைகிறார்கள். அவருடைய சமூகப்பற்று மற்றும் சுதந்திரப்போராட்டத்தின் மீதான நாட்டத்தின் காரணமாக அவர் சாதியிலிருந்து விலக்கிவைக்கப்படுகிறார். சிறைப்படவும் நேரிடுகிறது. பர்மாவில் அவர் அனுபவித்த துன்பங்கள் ஒருவிதமானவை என்றால், இந்தியாவில் அவர் அனுபவித்த துன்பங்கள் வேறு விதமானவை. தன் சிறைஅனுபவங்களை அவர் "நினைவலைகள்" என்ற தலைப்பில் எழுதினார். அது 1947 ஆம் ஆண்டில் கல்கியின் முன்னுரையோடு வெளிவந்தது. ராஜனுடைய சிறைஅனுபவத்தைப்பற்றி இந்த நூலிலிருந்து அசோகமித்திரன் எடுத்து வழங்கும் தகவல்கள் மனத்தை உருக்கும்வண்ணம் உள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, பழைய சிறையிலிருந்து புதிய சிறைக்கு மாற்றப்படுகிறார். பன்னிரண்டு காவல்காரர்கள் ஒரு ரயிலில் மூன்றாம்வகுப்புப் பெட்டியில் அவர்களை அழைத்துச்செல்கிறார்கள். கைதிகள் சிறைமாற்றத்தைப்பற்றிய ஒரு குறிப்புப்போல ஒரு தோற்றத்தைத் தந்தாலும் வரலாற்றை ஊடுருவிப் பார்க்கக்கூடிய சில வாய்ப்புகளை நமக்காக அசோகமித்திரன் உருவாக்கித் தருகிறார் என்றே தோன்றுகிறது. தன் சாதியினரால் வெளியேற்றப்பட்ட நிலைவந்தபோதுகூட, மக்கள்சேவையையும் சுதந்திரவேட்கையையும் உயிர்முச்சாகக் கொண்டு உழைத்தவர் டாக்டர் ராஜன். அப்படிப்பட்ட ஓராயிரம் ராஜன்களின் மகத்தான தியாகங்களின் விளைவாகவே நாம் சுதந்திரக் குடிமக்களாக செயல்படமுடிந்தது. அந்த சுதந்திரத்தை நாம் எப்படிப் பாதுகாத்துவைத்திருக்கிறோம் என்று ஒருகணம் நம்மையே திரும்பிப் பார்க்கவைக்கிறது இந்தச் சித்தரிப்பு. ஒரு சுயவிமர்சனமாக கடந்துபோன அறுபது ஆண்டுகளை மதிப்பிட்டால் நமக்குக் கிடைக்கும் விடை என்ன என்பது முக்கியமான கேள்வி. பொதுத்தொண்டையே வாழ்வின் அடிப்படையாகக்கொண்ட அந்தத் தலைமுறைக்கும், தன்னலத்தையே அடிப்படையாகக்கொண்ட இன்றைய தலைமுறைக்கும் உள்ள வேறுபாடு மேட்டுக்கும் பள்ளத்துக்கும் இடையிலுள்ள வேறுபாட்டுக்கு இணையாகும். அசோகமித்திரனின் இக்கட்டுரைக்குப் பின்னால் கேட்கிற அந்தப் பெருமூச்சு ஒருவித குற்றஉணர்ச்சியைத் தூண்டுகிறது.

அமார்த்திய சென் எழுதிய "ஆர்குமென்டேட்டிவ் இந்தியன்" என்னும் புத்தகத்தைப்பற்றிய கட்டுரையும் பல உள்இழைகளைக் கொண்டது. இந்தியச் சிந்தனைமரபில் விவாதங்களுக்கு முக்கியமான இடமுண்டு. இந்த விவாதத்தன்மை கருத்துகளை வளர்த்தெடுக்க உதவுகிறது. குரு-சீடர்கள் பரம்பரையில் கேட்டலும் விளக்கமளித்தலும் முக்கியப் பங்காற்றியுள்ளன. சென் இந்தியாவின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். விவாதமரபின் தொடர்ச்சியில் நம்பிக்கை வைத்திருப்பவர். பத்தாண்டுகளில் அவர் எழுதிய பதினாறு கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. பேச்சும் பன்முகப்போக்கும், பண்பும் பரிமாற்றமும், கட்சி கட்டிக்கொள்ளலும் எதிர்ப்பும், பகுத்தறிவும் தனித்துவமும் ஆகிய பெருந்தலைப்புகளின் கீழே கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பொதுவாக இந்தியாவுக்கு ஒரு நற்சான்றிதழ் அளிப்பதல்ல, இத்தொகுப்பின் நோக்கம். மாறாக, இந்தியாவின் பல்வேறு தளங்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் அவற்றின் பின்னணியில் நிகழ்ந்த விவாதங்களையும் இணைத்துப்பார்க்க உதவியாக இருப்பதே இதன் நோக்கம். இந்தியாவின் வரலாறு, தத்துவம், இதிகாசங்கள், நடைமுறை மரபு என அனைத்தையும் சென் விரிவான தளத்தில் கணக்கிலெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நூலைப் படிப்பது மிகவும் முக்கியமானதென்றும் இதன் அடிப்படையில் தமிழ்ப்புலம்சார்ந்து சுயமாக ஒரு நூல் எழுதுவதென்றும் ஒரு குறிப்போடு இக்கட்டுரையை முடிக்கிறார் அசோகமித்திரன். இக்குறிப்பே அசோகமித்திரன் தரும் செய்தி. விவாதமரபு தமிழ்ச்சிந்தனைப் பரப்பிலும் இருந்திருக்கிறது. சங்கம் என்னும் களம் பலவிதமான ஆக்கங்கள் முன்வைக்கப்பட்டு நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, மிகச்சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் அமைப்பாகவே செயல்பட்டது. பெருநகரங்களில் சிந்தனையாளர்கள் விவாதம்புரிய பட்டிமண்டபங்கள் இருந்துள்ளன. உரையாடல்கள்வழியாக தௌiவடைவது நீண்டகால மரபாகவே பின்பற்றப்பட்டிருக்கிறது. இன்றைய தேதிக்கு, உரையாடுவதற்கே வாய்ப்பில்லாமல் எல்லா அமைப்புகளும் மூடுண்ட கூடாரங்களாக காட்சியளிக்கின்றன. விவாதங்களுக்கும் இடமில்லை. விமர்சனங்களுக்கும் இடமில்லை. ஒருவரையொருவர் பிறவிஎதிரிகளாகவும் துரோகிகளாகவும் பார்க்கிற நோய்ப்போக்கு ஆழமாக வேரூன்றிவிட்டது. இந்த நிலையை மாற்றாவிடில், தமிழ்ச்சமூகம் உறைநிலைக்குப் போய்விடும். இச்சமூகத்தை உயிர்ப்புள்ள ஒன்றாக மாற்றவேண்டுமென்றால், உரையாடும் சமூகமாக இதை மாற்றவேண்டும். இந்த அக்கறையே அசோகமித்திரன் கட்டுரையில் நுட்பமாக வெளிப்படுகிறது.

விதவைக்கோலம் பூண்ட பெண்களின் நிலைமையைப்பற்றி ஒரு சிறப்பான கட்டுரையும் இத்தொகுப்பில் இருக்கிறது. கட்டுரையின் தலைப்பு "சட்ட வலியுறுத்தல் இல்லாமல் நிகழ்ந்த சமூகமாற்றம்". போர்கள் நிகழ்ந்த காலத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் சித்திரத்தைக் கொடுப்பதிலிருந்து தொடங்குகிறது கட்டுரை. போரைத் தொடர்ந்து பல வீரர்கள் இறந்துபோவதும் ஊரிலிருந்த பெண்கள் விதவைக்கோலம் பூணுவதும் பழகிப் போயிருந்தது. போர்க்காலத்தில் ஊருக்குள் புகுந்து இளம்பெண்கள் தூக்கிச் செல்லப்பட்டார்கள். இக்கொடுமையிலிருந்து தப்பிக்க பல பெண்கள் தீவளர்த்து கூட்டம்கூட்டமாகப் பாய்ந்து உயிர்விட்டார்கள். ஒருமுறை பத்தாயிரம்வரை பெண்கள் உயிர்விட்டதாக வரலாறு உள்ளது. மௌனி, கு.ப.ரா. கல்கி ஆகியோரின் சிறுகதைகளில் இடம்பெற்ற விதவைப் பெண்களின் கோலத்தை பரிவுடன் முன்வைத்து சிறுகச்சிறுக அசோகமித்திரன் கட்டியெழுப்புகிற கேள்வி மிகவும் முக்கியமானது. சத்திரம் சாவடி கட்டுவது, தருமம் செய்வது, பிச்சையிடுவது எனத் தனக்கு நேரிடையாக அறிமுகமோ சம்பந்தமோ இல்லாதோருக்கு உதவி செய்வதைக் கொண்டாடிய பண்பாடு, ஏன் வீட்டிலேயே எந்தவொரு சிறு தேவைக்கும் பிறரையே அண்டிநிற்கவேண்டிய நிலையில் உள்ள விதவைப் பெண்களை இழிவு செய்யத் தயங்கியதில்லை. தானமும் தருமமும் வீட்டில் தொடங்கவேண்டும் என்று ஏன் பல நூற்றாண்டுகளாக நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்பதுதான் அவர் எழுப்பும் கேள்வி.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் தன்வரலாற்று நூலை அசோகமித்திரன் அறிமுகப்படுத்தும் விதம் ஒரு புனைகதைக்குரிய நுட்பத்துடன் உள்ளது. தமிழில் எழுதப்பட்ட உரைநடைநூல்களில் மிக முக்கியமானது நாமக்கல் கவிஞரின் "என் கதை". அந்த நூலிலிருந்து சில பகுதிகளை எடுத்து முன்னும்பின்னுமாகச் சேர்த்து "இப்படியும் நடக்குமா, நடந்தது" என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் அசோகமித்திரன். இராமலிங்கம் அவருடைய பெற்றோருக்கு அருந்தவத்தின் விளைவாகப் பிறந்த பிள்ளை. யாரோ ஒரு பெரியவர் பசிவேளையில் அவருடைய வீட்டை வந்தடைகிறார். அவருடைய தாயார் வந்தவருக்கு உணவளிக்கிறார். பசியாறிய பெரியவர் அவருக்குப் பிறக்கப்போகும் பிள்ளை புத்திமானாகவும் புகழுள்ளவனாகவும் விளங்குவான் என்று ஆசி வழங்கியதோடு என்ன பெயர் வைக்கவேண்டும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார். அப்படியே நடந்துவிடுகிறது. பெற்றோரின் கட்டாயத்துக்காக அவர் முத்தம்மாள் என்பவதைத் திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் அந்தப் பெண்ணின்மீது சிறிதும் அவருக்கு ஈடுபாடு இல்லை. தன்னுடைய விருப்பமின்மையை அவருக்கு பலவித துன்பங்கள் அளிப்பதன்மூலம் தொடர்ந்து தெரிவித்துக்கொண்டே இருக்கிறார். ஒரு நாள் இரவில் காலம்கடந்து வீட்டுக்கு வரநேர்ந்த தருணத்தில் முத்தம்மாள் காத்திருந்து கதவைத் திறந்துவிடுகிறார். அவரைப் புண்படுத்த நினைத்த இராமலிங்கம் அறையில் இருந்த பூச்சரத்தை எடுத்துக் கசக்கித் தூக்கியெறிகிறார். சிறிதும் எதிர்பாராத தருணத்தில் இராமலிங்கத்தை நேருக்குநேர் பார்த்து கலங்கியபடி நான் என்ன தப்பு செய்தேன், ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று கேட்கிறாள். அடிப்படையில் நல்ல சுபாவமுள்ள இராமலிங்கம் முத்தம்மாளின் குரலைக் கேட்டு வெலவெலத்துப் போய்விடுகிறார். அப்போதும் தன் தந்திரத்தைச் செயல்படுத்தும் தீவிரத்தில் மறுநாளே அவரை, அவருடைய தாய்வீட்டுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்கிறார். முத்தம்மாள் கலக்கத்தோடு தன்னிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை, வீட்டைவிட்டுமட்டும் போகச் சொல்லவேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறார். இராமலிங்கத்தின் பிடிவாதம் முற்றிலுமாக நொறுங்கிப் போகிறது. அக்கணமே முத்தம்மாளின் நேசத்துக்கும் நெருக்கத்துக்கும் பாத்திரமாகிறார். அவர் மறைவுவரைக்கும் அந்த நெருக்கத்தில் குறைவில்லை. குழந்தையில்லாத குறை தீரக்க தன் தங்கையைத் திருமணம் செய்துகொள்ளும்படி பலமுறை கேட்டுக்கொள்கிறார் முத்தம்மாள். அதில் நாட்டமில்லாத இராமலிங்கம் மறுமணம் என்கிற பேச்சுக்கே இடமளிக்காதபடி பார்த்துக்கொள்கிறார். ஒருநாள் பேச்சுவாக்கில் கோபம் பொங்க "நீ இருக்க நான் இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்வேன் என்று கனவிலும் நினைக்காதே" என்று சொல்கிறார். ஆனால் முத்தம்மாள் வேறு பேச்செடுத்து மகிழ்ச்சி ததும்பப் பேசி அவர் கோபத்தை மாற்றிவிட்டுத் தூங்கிவிடுகிறார். அடுத்த நாள் காலை யாரும் எதிர்பார்க்காத வகையில் நெஞ்சுவலி வந்து இறந்துபோகிறார். அவர் பிரிவைத் தாங்காத இராமலிங்கம் பல மாதங்கள் பித்துப் பிடித்தவரைப்போல அலைந்துவிட்டு, முத்தம்மாளின் கட்டளையாகவே நினைத்து அவருடைய சகோதரியை மணந்துகொள்கிறார். இப்படியும் நடக்குமா என்று நாம் நினைக்கிற பல செயல்கள் தற்செயலாக நடந்துவிடுகின்றன. தற்செயல்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் ஒருபோதும் குறைவில்லாதது இந்த வாழ்க்கை. இதை உணர்த்துவதற்கு இராமலிங்கம் பிள்ளையின் தன்வரலாற்றை பொருத்தமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் அசோகமித்திரன்.

வைப்புமுறையில் இந்தக் கட்டுரைக்கு அடுத்தபடி வைக்கப்பட்டிருக்கிற "முப்பது வருட பழங்கதை"யில் தன்னுடைய வாழ்வல் நடந்தேறிய சில தற்செயல்களைத் தொகுத்துத் தந்துள்ளார் அசோகமித்திரன். ஒருமுறை சென்னைக்குச் சென்ற அசோகமித்திரனின் வாசன் நடத்திய புத்தகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்கியிருக்கிறார். கையிலிருந்த பணம் போதவில்லை. ஊருக்குச் சென்று அனுப்புங்கள், பரவாயில்லை என்று சொல்லியிருக்கிறார் வாசன். அப்படித் தொடங்கியிருக்கிறது அவருடைய நட்பு. அந்த நட்பின் தொடர்ச்சியாகத்தான் வளர்ந்த பிறகு அவருக்கு வாசன் நடத்திய ஜெமினி ஸ்டுடியோவில் வேலை கிடைக்கிறது.

ஒரு புனைகதையை வாசிக்கும் அனுபவத்துக்கு நிகராகப் பல கட்டுரைகள் அமைந்துள்ளன. இசைநினைவுகள், இரு டாக்டர்கள், அது அந்தக் காலம், கைகாட்டிமரம்- கடிகாரம்- குலாம், விடுதலைக்கு இன்னும் சில நாட்கள் ஆகியவை முக்கியமானவை. பல கட்டுரைகளிலும் பல கதைகளிலும் சின்னச்சின்னச் சித்திரங்களாக அசோகமித்திரனால் தீட்டிக்காட்டப்படும் அவருடைய தந்தையாரின் சித்திரம் எல்லாருடைய நேசத்துக்கும் உரியதாக இருக்கிறது. அவரைப்போலவே தன் அப்பாவை நேசிக்கும் பிள்ளையாகிய க.நா.சு.வைப் பற்றிய நினைவலைகளோடு இத்தொகுப்பு நிறைவெய்துகிறது. நிறைவுப்பகுதியில் உணவு விடுதியில் சுவைத்துச் சாப்பிடும் தன் பழக்கத்தைப்பற்றிய க.நா.சு சொல்லும் சொற்களைக் குறிப்பிடுகிறார் அசோகமித்திரன். அம்மா சிறு வயதிலேயே போய்விட்டாள். நானும் அப்பாவும்தான். ஆதலால் ஓட்டல் சாப்பாடு பழக்கமாகிவிட்டது என்பதுதான் அந்தச் சொற்கள். கிடைக்காததை, வேறொன்றால் இட்டு நிரப்புவதுதான் வாழ்க்கை போலும்.

(நினைவோடை- அசோகமித்திரன். கட்டுரைகள். நர்மதா பதிப்பகம். பாண்டி பஜார், தி.நகர். சென்னை-17. விலை.ரூ60)

*
paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்