காஞ்சனா தாமோதரன்
ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக அமெரிக்க பாரதீய வித்யா பவனும் இந்தியச் சாகித்ய அகாதெமியும் சேர்ந்து ஓர் இந்திய இலக்கியக் கருத்தரங்கை நியூயார்க்கில் ஏற்பாடு செய்திருந்தன. ‘மரபும் நவீனத்துவமும் அப்பாலும். ‘ செப்டெம்பர் 25, 26, 27. மன்ஹாட்டன் சென்டர்.
ஐ.நா. சபைக் கூட்டத்துக்காக, புஷ் உள்படப் பல தேசத்துத் தலைவர்களும் நியூயார்க்கில் குழுமியிருந்த நாட்கள் அவை. ஐ.நா. கட்டடம் நிற்கும் அந்த மன்ஹாட்டன் பகுதியில் பாதுகாப்பு பொதுவாகவே வலுப்படுத்தப்பட்டிருந்தது. சில தெருக்களைப் போக்குவரத்துக்கு மூடி விட்டதால் அளவுக்கதிகமான நெரிசல். லகுவார்டியா விமான நிலையத்திலிருந்து மன்ஹாட்டன் போய்ச் சேர வழமையான முப்பது நிமிடங்களுக்குப் பதில் ஒன்றரை மணிநேரமாயிற்று.
இலக்கியக் கருத்தரங்குக்காக மன்ஹாட்டன் சென்டர் கட்டடத்துக்குப் போனால், அதைச் சுற்றியும் பல்வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள். ஒட்டியிருந்த நடைபாதையையும் வீதியின் ஒரு பிரிவையும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி காவல்துறையினர் அடைப்புகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். சென்டரின் இரு வாயில்களிலும் எஃப்.பி.ஐ. அதிகாரிகள். பெயர் பொறித்த அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டும்தான் முதலில் உள்ளே நுழைய முடியும்; ஸ்கேனர் பரிசோதனைகள் உண்டு. எல்லாரையும் நடைபாதையில் வரிசையாகக் காத்திருக்க வைத்தார்கள். ஏனென்று கேட்டேன். மீடியாக்காரர்களையும் அவர்களது கேமரா முதலியவற்றையும் இரண்டு மணி நேரமாய்ச் சோதனையிட்டுக் கொண்டிருக்கிறோம் இப்போது முடிந்து விடுமென்றார் நட்பான எஃப்.பி.ஐ. வாயில்காப்போன். மேடையில் அமரப் போகும் அனைவருக்கும் கெடுபிடிகள் இன்னும் அதிகம்–என் ஜாதகத்தையும் இன்ன பிறவற்றையும் முன்கூட்டியே வாங்கி அலசி, நான் பயங்கரவாதி இல்லை என்று எஃப்.பி.ஐ. உறுதிப்படுத்திக் கொண்டது. அரங்கத்தின் கீழ்த்தளத்தில் மட்டுமே பார்வையாளர்கள் இருக்க முடிந்தது. மேடையிலிருந்து தலையை நிமிர்த்திப் பார்த்தால், அரங்கத்தைச் சுற்றியிருக்கும் ‘ப ‘ வடிவ மேல்மாடம் முழுதும் சம இடைவெளிகளில் நட்டு வைத்த எஃப்.பி.ஐ.க்காரர்கள்….
இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இலக்கியக் கருத்தரங்கைத் துவக்கி வைக்கவிருக்கிறார். ஓர் அயல்தேசத் தலைவருக்குத் தர வேண்டிய முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளே இவை.
இந்தியப் பிரதமர் வாஜ்பாய் விழாவைத் துவக்குமுன், அரங்கத்தில் பார்வையாளராய் அமர்ந்திருந்த முன்னாள் இந்தியப் பிரதமரும் எழுத்தாளருமான பி.வி.நரசிம்ம ராவ் மேடைக்கு அழைக்கப்பட்டார். இந்தியப் பிரதமர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, ஜனதா அரசில் வாஜ்பாய் அமைச்சராய் இருக்கையில் அமெரிக்காவின் இந்தியத் தூதராகவும் தற்போது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் டான் எமரிட்டஸ் ஆகவும் உள்ள கோஹன், ஹெச்.எஸ்.பி.சி. வங்கித் தலைவர் யூசுஃப் முதலியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
பிறகு, உருதுப் பண்டிதரும் எழுத்தாளருமான கோபிசந்த் நரங்கின் தலைமையில் கவியரங்கம் துவங்கியது. (இவர், மற்றும் மலையாளக் கவிஞர்-சாகித்திய அகாதெமிச் செயலர் கே.சச்சிதானந்தன், தெலுங்குக் கவிஞர் ஜெயப்பிரபா, தமிழ்க் கவிஞர்-தமிழகச் சாகித்ய அகாதெமி ஒருங்கிணைப்பாளர் ஆர்.பாலச்சந்திரன், கன்னடப் பன்முகக் கலைஞர் சந்திரசேகர் கம்பார் உள்பட, வந்திருந்த பலரும் முனைவர் பட்டம் பெற்றவர்கள்; படிப்பானுபவம், படைப்பானுபவத்துடன் கூடவே இந்திய+அயல் பல்கலைக்கழக உயர்பதவி அனுபவமும் உள்ளவர்கள்; பல விருதுகளும் கெளரவப் பட்டங்களும் வாங்கியவர்கள்; ஆனால், பேச்சிலும் பழக்கத்திலும் ‘பந்தா ‘ அற்றவர்களாய் இருக்கிறார்கள். எளிமை வேண்டி நான் இங்கு அவர்கள் பட்டங்களைக் காற்றில் விடுகிறேன். மன்னிக்கவும்.)
கவியரங்கக் கவிதைகள் அந்தந்த இந்திய மொழியிலும் ஆங்கில மொழியாக்கத்திலும் வாசிக்கப்பட்டன. முதல் கவிதை வாசித்தது கர்னாடகத்தின் வைதேகி என்கிற ஜானகி ஸ்ரீநிவாசமூர்த்தி; வாசித்து முடித்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவர் என்னை முதலில் வாசிக்கக் கூப்பிடுவார்கள் என்று தெரியாதே, நன்றாய் வாசித்தேனா என்று கேட்ட எளிய குழந்தைத்தனம் எனக்குப் பிடித்திருந்தது. கே.சச்சிதானந்தன் ‘கொண்டையை நீயே வைத்துக் கொள் கோழியை எனக்குத் தந்து விடு ‘ என்ற ரீதியிலான ஒரு சுவையான கோழிக் கவிதையை இசைப்பாடல் போலவே வாசித்தார்; மலையாள மொழியின் இயல்பான ராகத் தொனியுடன் அவர் ஒப்பிக்கும் ராகமும் சேர்ந்து அரங்கில் மண்வாசனை மணத்தது. குல்ஸாரின் குரலே கவிதையாகி ஹிந்தியும் உருதுவும் மிருதுவாய் ஏறியிறங்கின. கன்னடக் கவிதை வாசித்த சந்திரசேகர் கம்பார், நாட்டாரியல், நாடகம், கதை, கவிதை, திரைப்படம், பல்கலைக்கழகப் பதவி என்று பல்வேறு துறைகளிலும் தடம் பதித்தவர்; தலித் கலைஞர் என்றும் அறியப்படுகிறார். தான் வாசிக்கப் போவது கவிதை அல்ல என்று சொன்ன டோக்ரி (காஷ்மீர்) எழுத்தாளரான பத்மா சச்தேவ் கணீரென்ற குரலில் பாடினார். பஷீர் பாதர் என்கிற சையத் முகம்மது பஷீர் கஜல்கள் பற்றி விளக்கி விட்டுப் பாட்டில் உருக்கினார். ஜெயப்பிரபா வாசித்த தெலுங்குக் கவிதைகளில் ஒன்றை பி.வி.நரசிம்ம ராவ் மொழியாக்கம் செய்து கொடுத்திருந்தார். அவையின் வேண்டுகோளை ஏற்று, இந்தியப் பிரதமர் தன் நினைவிலிருந்து ஒரு ஹிந்திக் கவிதை சொன்னார்; சொன்ன விதமும் தொனியும் சரளமான பேச்சாளர் இவர் என்று உணர்த்தின. போர்க்களத்தில் கூடுகட்டி ஆயுதக்கிடங்கில் முட்டையிட விரும்பும் அமைதிப்புறாவை இந்தியாவிலிருந்து யு.எஸ்.ஸுக்குக் கொணருவது பற்றியும், கடலிலே முதலாளித் துளி/அடிமைத் துளி இல்லாதது பற்றியும் பேசிய வைரமுத்து கவிதைகள், மனித இனத்தையும் வையத்தையும் வாழ்த்தி நிறைந்தன. ஆங்கில மொழியாக்கங்களை வாசிக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டிருந்தது.
Vairamuththu, Gulzar, Bala, Kanchana, Fan from Chicago
பார்வையாளர்களில் பெரும்பகுதியினர் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், அல்லது ஹிந்தி அறிந்தவர்கள். தென்னிந்தியர்கள் மிக மிகக் குறைவு. (நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் யார் யாருக்குத் தகவல் தெரிவித்தார்கள் என்பது தெரியவில்லை.) என் ஆங்கிலக் கவிதை வாசிப்பை ரசித்ததாய்ச் சொன்ன வட இந்தியப் பெண்கள் கூட்டம் இதையும் சொல்லிப் போயிற்று: ‘சமஸ்கிருதம் கலந்த பிற மொழிகளைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் தாய்மொழியைப் புரிந்து கொள்ள இயலவில்லை. உங்கள் மொழிக் கவிஞரின் வாசிப்புத் தீவிரமும் உற்சாகமும் புரிந்தன. ‘
தமிழக ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின்னான பாடத்திட்டத்துடன் வளர்ந்த எனக்குத் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே முழுமையாகத் தெரியும். ஆனாலும், அறியாத பிற மொழிக் கவிதைகளின் உணர்வுச் சாரம் ஓரளவு என்னை வந்து சேர்ந்தது உண்மை. கவிஞர்கள் வாசித்த (வாசித்த, பாடிய, அபிநயித்த) விதம் அப்படி. அயல்மொழி வாசிப்புக்கே இவ்வளவு வலிமையெனில், தாய்மொழி இலக்கியம் உணர்வுடன் உரத்துச் சொல்லப்பட்டால் எப்படி இருக்கும். மொழியையும் வடிவத்தையும் தனிமையில் தீட்டித் தீட்டிக் கூரான எழுத்தைக் கண்ணால் தடவி மெளனமாய் வாசிக்கும் நாம் எல்லோரும் எதையோ இழக்கிறோமோ ? ஒலியின் அடிப்படையில் உருவான மொழிக் கலாச்சாரங்களில் எழுத்திலக்கியம் என்பது முழுமையானதாய் இருக்க முடியுமா ?
Vaidehi (Kannada), Jayaprabha (Telugu), Bala (Tamil),
P.V.Narasimha Rao,
Kanchana, M.T.Vasudevan Nair (Malayalam), Nirmal Kanti Bhattacharjee
(Bengali)
அன்று கேட்ட இந்திய மொழி ஒலிகளையும் புதிய அறிமுகங்களையும் அசைபோட்டு முடித்த பின்னிரவில்தான் அன்றைய ‘நியூயார்க் டைம்ஸ் ‘ நாளிதழைப் பிரித்தேன். எட்வர்ட் செய்த்தின் மரணச் செய்தி நீண்ட கட்டுரையாக வெளிவந்திருந்தது. நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியர். எழுத்தாளர். ஜெரூஸலத்தில் பிறந்து இளம்பதின்ம வயதில் யு.எஸ்.ஸுக்குப் புலம் பெயர்ந்தவர். ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும் தேர்ச்சி பெற்றவர். (கிறிஸ்தவ மதத்தின் எப்பிஸ்கோப்பேலியப் பிரிவைச் சார்ந்தவர்.) ‘நியூயார்க் டைம் ‘ஸிலும் அமெரிக்க இடதுசாரிப் பத்திரிகையான ‘நேஷனி ‘லும் கட்டுரைகள் எழுதி வந்தவர். பாலஸ்தீனிய மக்களின் உரிமைக்காக யு.எஸ்.ஸில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்; பாலஸ்தீனமும் இஸ்ரேலும் தனித்தனி நாடுகளாக அன்றி, இரு பிரிவு கொண்ட ஒரு தேசமாவதே யதார்த்தமென்று நினைத்தவர். அமெரிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகள் ஆகியோரின் கொள்கைகளைச் சமநிலையுடன் விமரிசனம் செய்யும் அறவியல் உணர்வுள்ளவர். என் பார்வையில், தன் சிந்தனையைப் பரப்பி வலுவாக்க, அமெரிக்க அரசியல் சாசனம் வழங்கும் தனிமனிதப் பேச்சுரிமையையும் எழுத்துரிமையையும் திறமையுடன் பயன்படுத்திய அறிஞர்.
எட்வர்ட் செய்த்தின் எழுத்தும் கருத்தும் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல; ஆனால், அவர் குரலில் தொனிக்கும் அடிப்படை மனசாட்சி மதிக்கப்பட வேண்டியது. இவரது ‘கலாச்சாரமும் ஏகாதிபத்தியமும் ‘ என்னும் புத்தகத்தில் ‘கேள்விகள் எழுப்புவதை முக்கியக் குறிக்கோளாகக் கொள்ளாது, கவனத்தைத் திருப்ப முயற்சிக்காது, நடக்கும் சாம்ராஜ்யத்தை அப்படியே வைத்திருக்க ‘ உதவிய பிரிட்டிஷ் புனைவிலக்கியவாதிகள் பற்றி இவர் கேள்விகளை எழுப்புகிறார். அழகியல்ரீதியாகப் புனைவிலக்கியவாதிகளாக அங்கீகரிக்கப்பட்ட ஜேன் ஆஸ்டின், ஈ.எம்.ஃபார்ஸ்டர், ஜோஸஃப் கான்ராட், கிப்ளிங் முதலிய பல பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் மேற்சொன்ன குற்றம் செய்தவர்கள் என்கிறார். இது ஒரு நுட்பமான, சமூகவியல்-அரசியல்ரீதியான இலக்கிய விமரிசனப் பார்வை. நுண்தளப் புனைவுகளிலிருந்து அகல்தளப் புனைவுகள் வரை இத்தகைய அளவுகோலை வைத்து எடைபோட்டால், இன்றைய உலக இலக்கியத்தில் எத்தனை விழுக்காடு மிஞ்சும் என்ற கேள்வியுடன் தூங்கிப் போனேன்.
அடுத்த நாளைய கருத்தரங்கில், கே.சச்சிதானந்தன் மட்டுறுத்துனராக, ‘இந்திய இலக்கியம்–ஒற்றுமை, வேறுபாடு, சரித்திரம் ‘ என்ற பொது அமர்வு முதலில் நடைபெற்றது. இந்தப் பொது அமர்வு ஆங்கிலத்தில் நடக்குமென்ற அறிவிப்பை நம்பி அங்கு போனால், சில எழுத்தாளர்கள் ஹிந்தியில் மட்டுமே பேசி ஏமாற்றி விட்டார்கள். ஒருவருக்கு ஆங்கிலம் தெரியாமலிருப்பது குறை அல்ல. ஒருவர் தன் தாய்மொழியில் பேச விரும்புவது குறையே அல்ல. ஆனால், ஆங்கிலம் தெரிந்தும், இது ஆங்கில அமர்வு என்பது தெரிந்தும், அவையினரில் சிலர் ஹிந்தி அறியாதோரெனத் தெரிந்தும், ‘ராஷ்ட்ர பாஷையில்தான் பேசுவேன், பரபாஷையில் பேசேன் ‘ என்கிற பிடிவாதம் (அடிப்படைவாதம் ?) சற்றே நெருடியது. மட்டுறுத்துனர் கே.சச்சிதானந்தன் தனது முதிர்ந்த சபைநாகரீகத்துடன் ‘ராஷ்ட்ர பாஷா ‘ உரைகளை ஆங்கில மொழியாக்கம் செய்தார். பிறகு பேச வந்த ஹிந்தியறிந்த எழுத்தாளர்கள் ‘பரபாஷையில் பேசுவதற்கு மன்னிக்கவும் ‘ என்று குறும்பாய்ச் சிரித்தபடியே ஆங்கிலத்தில் பேச்சைத் துவக்கினார்கள். இந்த அமர்வின் தலைப்பு ‘இந்திய இலக்கியம்–ஒற்றுமை, வேறுபாடு, சரித்திரம் ‘ என்பது மீண்டும் நினைவுக்கு வந்தது 🙂
304: Bala (Tamil), Chandrasekar Kambhar (Kannada), Vaidehi
(Kannada),
K.Satchidandan (Malayalam), Kanchana
கே.சச்சிதானந்தன் (மலையாளம்), பாலா என்கிற ஆர். பாலச்சந்திரன் (தமிழ்), நிர்மல் பட்டாச்சார்ஜி (பெங்காலி), சுத்திந்தர் சிங் நூர் (பஞ்சாபி), பிரத்தீபா ரே (ஒரியா), இந்திரா நாத் செளத்ரி (ஹிந்தி), ரகுவீர் செளத்ரி (குஜராத்தி), ஜி.வி.சுப்ரமணியம் (தெலுங்கு), குன்வந்த் ஷா (குஜராத்தி), மனோகர் ஷ்யாம் ஜோஷி (ஹிந்தி) ஆகியோர் கொண்ட இந்த அமர்வில் பகிரப்பட்ட சில எண்ணங்கள்:
இந்திய இலக்கியம் என்பது ஒருமை அல்ல; பன்மை.
ஐன்ஸ்டானோ, நியூட்டனோ அவர்களது அறிவியல் கருத்தாக்கங்களை சொல்லியிருக்காவிட்டால் அதனால் பெரிய இழப்பு இருந்திருக்காது; சில ஆண்டுகளிலேயே வேறு ஒரு விஞ்ஞானி அக்கருத்துகளைச் சொல்லியிருப்பார்; ஆனால், வால்மீகியோ, காளிதாசரோ அவர்களது காவியங்களை எழுதாமல் இருந்திருந்தால் வேறு எவராலும் அதைச் செய்திருக்க முடியாது.
பெரும் கலாச்சார மோதல்கள் மூலம் இந்தியச் சரித்திரம் முன்னேறவில்லை; தொடர்ச்சியான மறுகட்டமைப்புகள் மூலமே.
இந்திய இலக்கிய ஆக்கம் என்பது ஒரு பொதுவான கலாச்சார வெளியின் உருவாக்கம்.
எதையும் இருமுனைப் பிரச்சினையாகக் குறுக்குவது மேற்கத்தியப் பார்வை; பன்மையை எதிர்கொள்வதே இந்தியப் பார்வை.
இந்திய இலக்கியத்தின் உயிர்த்துடிப்பை அதன் பன்முகக் கலாச்சாரப் பின்னணியில் வைத்துப் புரிந்து கொள்வதே சிறப்பு.
பலராலும் கொண்டாடப்படும் பக்தி இயக்கம் எல்லாருக்கும் பொதுவானது அல்ல; அது மண்சார்ந்த பிற மரபுகளை நசுக்கிப் போனது வரலாற்று நிகழ்வு; பன்மை மீண்டு கொண்டிருக்கும் இக்காலத்தில்தான் உண்மையான ஒற்றுமை துவங்கும் சாத்தியமுள்ளது.
நம் சரித்திரம் வலிகள் நிறைந்தது; அதன் இனிய பக்கங்களை மட்டுமே மரபாக ஒப்புக் கொள்ள முடியும்; பன்முகத் தன்மையே முக்கியம்.
கே.சச்சிதானந்தன், பாலச்சந்திரன், பட்டாச்சார்ஜி போன்ற சிலர் தவிரப் பிறர் பழங்காலத்துடன் மட்டுமே நின்று, முன்னோக்கி நகர முயற்சிக்காததை இங்கு பதிவு செய்ய வேண்டும். அமர்வின் போது கால இயந்திரத்தில் ஏறிச் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிப் போன உணர்வு ஏற்பட்டதாய்ச் சாமினாதன் கிண்டலாய்ச் சொன்னார். இங்கு ஏதும் புதிதாய்க் கற்றுக் கொண்டோமா என்று அடுத்த அமர்வை நோக்கி நடக்கையில் மனதுள் அலசிப் பார்த்தேன். பன்மை, பன்மொழி, பன்முகக் கலாச்சாரம், பன்முக இலக்கியம் என்பவற்றை மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டிய தேவை இன்றும் இருப்பதை மறுக்க இயலாது. இந்தியச் சமூகத்தின் மீது இந்திய எழுத்தாளர்களின் தாக்கம் எத்தகையது, எவ்வளவு என்பது எனக்குத் தெரியாது; ஒரு சில விதிவிலக்குகள் தவிர, எழுத்தாளர்களும் மனிதர்கள்தான், எழுதுகிறார்கள் என்கிற ஒரே காரணத்தினால் அவர்களிடம் மேலதிகம் எதிர்பார்ப்பது தவறு என்பதும் நன்கு புரிந்ததே. ஆனால், ஆக்கபூர்வமான பார்வையும் புரிதலும் செயல்திறனும் பொருந்திய மனிதர்கள் — எழுதுபவர்களும் எழுதாதவர்களும் — தம் சிந்தனையைத் தமக்கு உகந்த வடிவத்தில் செயல்படுத்துவது எப்போதையும் விட இப்போது அவசியமாய்த் தெரிகிறது.
307: The Prime Minister delivering his poem
அடுத்து, தமிழ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் ‘இலக்கியத்தில் தற்காலப் போக்குகள் ‘ என்ற தலைப்பில் தனி அமர்வுகள் நடந்தன. தமிழ் அமர்வில் பாலாவும் வைரமுத்துவும் சிறப்புப் பேச்சாளர்கள். மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ராம் மகாலிங்கம், கணிஞர்கள் பி.கே.சிவகுமார், சாமினாதன், கற்பகம், ஷரத் கார்த்திக் பாலச்சந்திரன், தொழிலதிபர் பரசுராம், மருத்துவர் பஞ்சாட்சரம் (நியூயார்க் தமிழ் மையத் திட்டக்காரர்), கலிஃபோர்னியா இந்தியா வெஸ்ட் இதழாளர் குளோரியா, நியூயார்க் திராவிடன் தொலைக்காட்சியின் லக்ஷ்மி சுபா முதலானோர் பார்வையாளர் குழுவில் அடக்கம். தற்காலத் தமிழிலக்கியம் வளமான திசையில் பயணிப்பதாய்ச் சொன்னார் வைரமுத்து. காவியகாலம் போல் அல்லாமல், ‘anti-hero ‘வை மையமாக்கும் நவீன இலக்கியப் போக்கு பற்றிக் குறிப்பிட்டார். உலகமயமாதல் என்பது மொழி, கலாச்சாரம் இரண்டையும் விழுங்க ஆரம்பித்திருப்பதாய்க் கவலை தெரிவித்தார். தமிழின் எழுத்துரு/லிபி மாறக்கூடுமோ என்ற கேள்வியை எழுப்பி, இப்போதே சென்னையில் தமிழை ஆங்கிலத்தில் எழுதும் போக்கு வந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். நிகழ்கால இலக்கியத்தை அக்காலத்திய தொழில்நுட்பம் உள்படப் பல சக்திகள் தீர்மானிக்கின்றன என்றார் ஆர்.பாலச்சந்திரன்; திரைக்கவிதைகளை அந்த ஊடகத்தின் தன்மை தீர்மானிப்பதை உதாரணமாகக் காட்டினார். தன் காலத்துக்கான இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் சமூகம் தானாகவே தேர்ந்தெடுக்கிறது என்றார். நேரமின்மையால் அதிகம் பேச இயலவில்லை.
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா ‘ என்று ஆரம்பித்த சிவகுமார், உலகமயமாதல் தமிழ்மொழியை அழிக்கத்தான் வேண்டுமென்ற அவசியமில்லை என்று குறிப்பிட்டார். மேலும், புதுக்கவிதையா மரபுக்கவிதையா என்கிற கேள்விக்கு ‘வாழும் கவிதை வடிவத்தில் இல்லை ‘ என்று வைரமுத்து சொல்லியிருப்பது போல், உலகமயமாக்கல் கொண்டுவருகிற வடிவ மாற்றங்களால் தமிழின் அடையாளம் அழிந்துவிடாது என்று தாம் நம்புவதாகக் குறிப்பிட்டார். ஆனால், நேரமின்மையால் இது குறித்த ஒரு விரிவான விவாதம் தேவை என்பதுடன் முடித்துக் கொண்டார். உலகமயமாதல் பற்றிய என் கருத்துகளும் இந்தக் கட்டுரைக்குள் அடங்கப் போவதில்லை; பின்னொரு நாள் அது பற்றி விரிவாக எழுதி விவாதிக்க வேண்டும்.
308: Vairamuththu delivering his poem
வருங்காலத் தமிழ் லிபி ரோமன் எழுத்துருவுக்கு மாறுமோ என்ற வைரமுத்து கேள்வியின் அடியிலுள்ள சமூக யதார்த்தம் எனக்குப் புரிகிறது. தமிழ்நாட்டு மத்தியவர்க்க/உயர்வர்க்க இளையதலைமுறையின் குறிப்பிடத்தக்க விழுக்காட்டுக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது, ஆனால் பேசிப் புரிந்து கொள்ள முடியும். என் போன்ற கணினித் தமிழர்களுக்குத் தமிழை ரோமன் எழுத்துரு மூலம் தட்டச்சு செய்யும் பழக்கமுள்ளது. இதனால் வருங்காலத்தில் லிபி மாற்றம் வருமென்ற எதிர்பார்ப்பு இருக்கக் கூடும். தமிழைத் தாமாகவே கைகழுவி விட்ட தமிழக மேல்/மத்திய வர்க்க ஆங்கிலத் தமிழர்களோ, கணினி வசதியுள்ள இருமொழி/பன்மொழித் தமிழர்களோ தமிழ்மொழியின் லிபியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஏன் இருக்க வேண்டும் ? பணப்புழக்கமுள்ள இந்தச் சந்தைக்கூறுகள் சந்தைரீதியாக முக்கியமானவை, மறுக்கவில்லை. ஆனால், இவர்களையும் சந்தைச் சக்திகளையும் விடச் சமூகம் பெரிது. ஆங்கில எழுத்துரு அறியாத, இன்னும் பள்ளிசார்க் கல்விக்கும் வழியில்லாத, தினத்தந்தி-தினமலர்-தினமணியை எழுத்துக் கூட்டி வாசிக்கும் தமிழர்களுக்கு வாய்த்திருக்கும் ஒரே மொழி வடிவம் இன்றுள்ள தமிழ் வடிவம். இவர்கள் அனைவருக்கும் கல்வியும் வசதியும் கிடைத்து, தமிழ்க் கணினியும் வெகுவாகப் பரவலான வருங்காலச் சூழலில், நிலைமை மாறக் கூடும்; எழுத்துரு பற்றிய கேள்வியே வேறு உருவெடுக்கக் கூடும். (வைரமுத்து சுட்டிய இன்றைய யதார்த்தத்தையும், அதன் சமூகவியல்-உளவியல் காரணிகளையும் மறுப்பதற்கில்லை.)
நேரமின்மையால் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் பல கேட்காமல் போயின.
கூட்டம் முடிந்ததும் அனைவரையும் சந்தித்துப் பேசி விட்டு, நண்பர் பரசுராமனுடன் வைரமுத்து வெளியே சென்று விட்டார். பாலா, அவரது மகன் ஷரத் கார்த்திக், ராம் மகாலிங்கம், சாமினாதன், கற்பகம், பி.கே.சிவகுமார், நான், எல்லாரும் சேர்ந்து சாப்பிடப் போனோம். முந்தைய நாள் கவியரங்கத்துக்குப் பின், வைரமுத்து, பாலசந்திரன், கார்த்திக், வைரமுத்துவின் ஆல்பனி நண்பர், அவர் மனைவி, நான் எல்லாரும் நியூயார்க் பாணி பிட்ஸாவகத்துக்குப் போனதால், இன்று ‘லிட்டில் இந்தியா ‘ பகுதிக்குப் போகலாமென்று முடிவாயிற்று. இந்த உரையாடலும், நான் வந்திறங்கிய அன்று ராம், சாமினாதன், பத்மனாபன் கணேசன், சிவகுமார் எல்லாரோடும் உரையாடியதுமாய்ச் சேர்ந்து பல விஷயங்கள் பேசினோம்.
நாங்கள் எல்லாரும் முதன்முறையாக நேருக்கு நேர் சந்திக்கிறோம், மின்னஞ்சல் போக்குவரத்துகள் கிடையாது, ‘திண்ணை ‘யில் அவ்வப்போது எழுதி/ வாசிக்கும் நவீன இலக்கிய ஆர்வலர்கள் என்றறிந்த பாலா ஆச்சரியப்பட்டுப் போனார். சந்தித்த கதை சொன்னோம். 2000-இல் முருகானந்தம் தம்பதியினர் அழைப்பை ஏற்று ஜெயகாந்தன் இங்கே வந்த போது நான் அவரைப் பேட்டி கண்டு அது ‘கணையாழி ‘யில் வெளியானது; அந்தப் பேட்டியைத் தான் நடத்தும் ஜெயகாந்தன் இணையதளத்தில் போட அனுமதி கேட்டு சிவகுமார் எனக்கு எழுதினார்; அதற்குப் பின் இப்போதுதான் பேசிக் கொள்கிறோம். 2000-இல் இரா.முருகனின் இலக்கிய நண்பராகச் சாமினாதனின் மின்-அறிமுகம். 1998-இல் தமிழ்த் திரையிசை மற்றும் இலக்கியம் மூலம் பத்மனாபன் கணேசனின் அறிமுகம். ராம் மகாலிங்கத்தின் அறிமுகமே இப்போதுதான். எல்லாராலும் எளிதாகப் பேச முடிந்தது. சகஜமாய். திறந்த மனதுடன். நம்பிக்கையுடன். மதிப்புடன். சிரிப்புடன்.
பாலா தற்போது நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர். தமிழகச் சாகித்ய அகாதெமியின் ஒருங்கிணைப்பாளர். வானம்பாடிக் கவிஞர். ‘புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை ‘ உள்படத் தமிழிலும் ஆங்கிலத்திலும் சுமார் பன்னிரெண்டு புத்தகங்கள். இவருடன் எங்கள் எல்லாருக்கும் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. முதலில் வானம்பாடி இயக்கம் பற்றி. முல்லை ஆதவனின் கீழ் முதல் இதழ் வெளியாகிப் பின் அவர் விலகவும், புவியரசும் சிற்பியும் வந்து நடத்திய கதை. தனது முதல் கவிதையை மு.மேத்தா பாலாவிடம் கொடுத்து இது எப்படி இருக்கிறது என்று கேட்ட கதை. ஜனவரியில் சென்னைக் கூட்டத்தில், அகாதெமி விருதாளர் சிற்பியை எனக்கு முன்பாக வாழ்த்திப் பேசிய அப்துல் ரஹ்மான் சிற்பியின் சகவானம்பாடி என்றுதான் நான் நினைத்திருந்தேன்; பிற நண்பர்களும் அப்படியே நினைத்ததாய்ச் சொன்னார்கள். அவர் வானம்பாடி அல்ல என்று தெளிவித்தார் பாலா. தற்போது தான் நடத்தும் ஆங்கில இலக்கிய வகுப்பில் தமிழிலக்கியம் பற்றிப் படிப்பது பற்றிப் பேசினார்.
ராம் தற்போது மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியர். இவரது ஆய்வுகள் வித்தியாசமானவை. இந்தியக் குழந்தைகள் சாதீயத்தை எப்படிக் கற்றுக் கொள்கின்றன, எதிர்கொள்ளுகின்றன. தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை: வரலாறும் வகைப்படுத்துதலும். இப்படி இன்னும் பல. சமீபத்தில் இங்கிருந்து சில கறுப்பின மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்துப் போய் அங்குள்ள தலித் எழுத்தாளர்களைச் சந்தித்த அனுபவம் பற்றிச் சுருக்கமாகச் சொன்னார். ராமும் பாலாவும் பல்கலைக்கழக விதிமுறைகள் பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்கள். ராமின் மனைவி வீட்டுக்குள் பெண்களின் மீதான வன்முறை பற்றிச் செய்த ஆய்வு இப்போதுதான் பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது; அது பற்றியும் பேசினோம். தமிழிலும் மண்ணுக்கேற்ற சமூகவியல், உளவியல், வரலாறு ரீதியான, அறிவியல்பூர்வமான (ஆனால் பண்டிதத்தனமற்ற, எல்லாருக்கும் புரியும்) எழுத்துகள் வருவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.
ராமைச் சந்தித்த இரு முறைகளும் மெளனி பற்றி நிறையச் சொன்னார்; மெளனி அவரது ஆசிரியராயும் அதற்கு மேலான நண்பராயும் இருந்தவர். சாமினாதன் மெளனிக்குப் பழந்தமிழிலக்கியத்தில் பரிச்சயம் உண்டா என்று ராமிடம் கேட்டார். எம்.வி.வெங்கட்ராம் தன் மறைவுக்கு முன்பு ஆறாம்திணைக்குக் கொடுத்த பேட்டியில் மெளனிக்குத் தமிழே தெரியாது என்றும், தான் பல நேரங்களில் அடித்துத் திருத்தியதாயும் சொல்லியிருந்ததை நான் ராமிடம் சுட்டிக் காட்டினேன். மெளனிக்குப் பழந்தமிழிலக்கியமும் தெரியும், தற்காலத் தமிழும் தெரியும் என்று சொன்னார் ராம். ‘திண்ணை ‘யில் மெளனி உள்பட மூத்த எழுத்தாளர்கள் பற்றி ஜெயமோகன் எழுதியிருந்த விமரிசனக் கட்டுரைகள் பற்றிப் பத்மனாபன் கணேசன் பேசினார். ஜெயகாந்தன் பற்றிய கட்டுரையைப் பிரதி மேம்படுத்துநர் கொஞ்சம் இறுக்கிச் சுருக்க வேண்டியிருக்குமோ என்றதற்கு, இல்லை எனக்கு அவ்வளவு விரிவாக இருந்தால்தான் வசதியென்றார்.
மெளனியின் நல்ல அம்சங்கள் பற்றியும், அவர் அனுசரித்த சமூக முறைகள் நடைமுறையில் ஏற்படுத்திய சில வினோதமான முரண்கள் பற்றியும் ராம் இன்னும் நிறையச் சொன்னதை நான் அறவியல் காரணங்களுக்காக இங்கு எழுதப் போவதில்லை. ராம் விரும்பினால் தன் சொந்த எழுத்தில் செய்ய வேண்டிய நடுநிலையான, அறிவுபூர்வமான பதிவு அது.
அருந்ததி ராய் சில நாட்களுக்கு முன் லண்டனில் ஆற்றிய உரை பற்றி விரிவாகப் பேசினார் சிவகுமார். அருந்ததி ராய் தேர்ந்த எழுத்தாளர் என்பது அவரது நாவலை வாசிக்கும் போது புரிந்து விடும்; அயல்மொழியைத் தன் மொழியாக வளைத்து மண்மணம் தெளித்துத் தன் சமூகத்தின் ஓட்டைகள் சோகங்கள் பற்றிய இருண்ட அங்கதத்துடன் எழுதுவது எளிதல்ல. சமூகச் செயல்பாட்டுக்கான அமெரிக்க விருது பெறுவதற்காக ராய் இங்கு வந்திருக்கையில் அவரது உரையைக் கேட்டிருக்கிறேன். அமெரிக்கத் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியான ‘நைட்லைன் ‘ டெட் காப்பெலின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த விதத்தையும் பார்த்து மதித்திருக்கிறேன். பேராசிரியர் நோம் சாம்ஸ்கியின் ‘For Reasons of State ‘ மறுபதிப்பு ராயின் முன்னுரையுடன் சில மாதங்களுக்கு முன் வெளிவந்ததும் தெரியும்; இன்னும் வாசிக்கவில்லை. கார்டியனில் ராய் எழுதிய முதல் சில கட்டுரைகளை விட, சமீபத்தியப் பேச்சில் உணர்ச்சிக் கொந்தளிப்பு குறைந்து தர்க்கபூர்வமான கேள்விகள் அதிகரித்திருக்கின்றன. விருதாகக் கிடைத்த தொகை அனைத்தையும் அவர் சேர்ந்திருக்கும் மேதா பட்கர் இயக்கத்துக்கே கொடுத்ததாய்க் கேள்விப்பட்டேன். ராயின் அரசியல் பற்றிக் கேள்வி கேட்கும் உரிமை எல்லார்க்கும் உண்டு; ஆனால், தன் சொல்லையும் செயலையும் பொருத்திப் போகும் நேர்மையைக் கேள்வி கேட்க அதிக இடமில்லையென்று தோன்றுகிறது. செயல், சிந்தனை, பேச்சுத் திறன், அறிவு, தோற்றம் எல்லாமுமாய்ச் சேர்ந்து ஓர் உலக ஆளுமையாக ராய் உருவாகி வருகிறார்.
(ராயின் நாவல் பற்றி எனது பதிப்பகத்தினரிடம் பேசிக் கொண்டிருக்கையில் அவர்கள் இன்னொரு இந்திய ஆங்கில நாவலாசிரியர் பற்றிக் குறிப்பிட்டார்கள். ‘The House of Blue Mangoes ‘ என்கிற நாவலை எழுதிய டேவிட் டேவிதர் உங்கள் தமிழர்தானே என்றார்கள். நியூயார்க் டைம்ஸ், லண்டன் டைம்ஸ், சான் ஃப்ரான்ஸிகோ க்ரோனிக்கிள், லைப்ரரி ஜர்னல், டைம்ஸ் புக் ரிவ்யூ, புக்லிஸ்ட், வாஷிங்டன் போஸ்ட் புக் வோர்ல்ட் என்று பல பத்திரிகைகளில் வந்த விமரிசனங்களை அனுப்பியிருக்கிறார்கள். திருவிதாங்கூர் துவங்கித் தாமிரபரணியின் ஒரு கற்பனைக் கிளைநதியின் கரை வரை, 1899 துவங்கி 1947 வரை, பல தலைமுறைகளைப் பற்றிய நாவல்; ஒரு கிறிஸ்தவத் தென்னிந்தியக் குடும்பத்தின் கதையையும் காலனீயச் சரித்திர நிகழ்வுகளையும் பின்னும் நாவல் என்கிறது ஒரு விமரிசனம். டேவிட் டேவிதர் தமிழர்தான் எனில், அமெரிக்கர்கள் மூலமாக அவரை நான் அறிந்து கொள்ள வேண்டியிருப்பது சோகமானது! உலகமய உலகில் இதுதான் இயல்போ என்னவோ.)
ராய் பற்றிப் பேசிய பின் எங்கள் பேச்சு பெண்ணியம், பெண்மொழி பற்றி இயல்பாகத் திரும்பியது. அமெரிக்கப் பெண்ணிய இயக்கம் 150 வருடத்தியது. கல்வி, வாக்களிப்பு என்று அடிப்படை உரிமைகளையே இவர்கள் சண்டை போட்டு வாங்க வேண்டியிருந்தது; சட்டங்களை மாற்ற வேண்டியிருந்தது (புதுச் சட்டங்களை இயற்றினார்களா, பழையதை மாற்றினார்களா ?) பெண் என்ற பாலின அடையாளம் இனம், வர்க்கம் போன்ற பிறவற்றுடன் இணைந்திருந்ததால், எல்லா உரிமைகளும் எல்லாப் பெண்களுக்கும் ஒரே நேரத்தில் சமமாகக் கிடைக்கவில்லை. அமெரிக்கப் பெண்ணிய இயக்கம் காலத்தோடு மாறிக் கொண்டே வந்திருப்பது. அறுபதுகளில் வெடித்த ‘கடும் பெண்ணியத்தை ‘ அந்தக் காலகட்டத்தில் பரவலாக அமெரிக்கச் சமூகத்தில் நடந்த மாற்றங்களுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்: கர்ப்பத்தடை மாத்திரை அறிமுகம், வியட்நாம் போர் எதிர்ப்பு, அதன் விளைவாக எல்லாச் சமூக அதிகார மையங்களின் எதிர்ப்பு இத்யாதி. பெண்கள் பரவலாக வேலை பார்க்க ஆரம்பித்தது, பெரும்பான்மையோர் பல்கலைக்கழகப் படிப்பை ஆரம்பித்தது எல்லாம் அந்தக் காலகட்டத்தில்தான். நான் இங்கு படித்து வேலை பார்த்த இருபத்திமூன்று வருடங்களிலும் கண்டது ‘மெல்லிய பெண்ணியம் ‘ என்றே நினைக்கிறேன். வேலை பார்க்குமிடத்தில் பாலியல் தொந்தரவுகள், பெண்களின் வித்தியாசமான பேச்சு/தொடர்பு முறையைப் பெரும்பான்மை ஆண்கள் புரிந்து கொள்ளுதல், அதே வேலை பார்க்கும் பெண்ணுக்கு ஆணை விடச் சம்பளம் குறைதல், இந்தக் கலாச்சாரத்திலும் முக்கியக் குழந்தைப் பராமரிப்பாளரான பெண் தன் குடும்பத்தையும் வேலையையும் சமநிலையில் நடத்திச் செல்ல வழி செய்தல், ஆண்களே பெரும்பான்மையாக இருந்து பெண்களையும் பிற சிறுபான்மையினரையும் மேலே வரவிடாமல் செய்த glass ceiling-ஐ உடைத்து முன்னேறுதல், வீட்டுக்குள் வன்முறை, பாலியல் வன்முறை போன்ற பிரச்சினைகள் மேலோங்கி நின்றன/நிற்கின்றன. இங்கு பெண்களது சில அடிப்படைத் தேர்வுகளைச் சட்டரீதியாக வெட்டுவதற்கு அலையும் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டியுள்ளது. பெண்களைக் குறிவைத்தும் பயன்படுத்தியும் பணம் பண்ணும் வர்த்தக அமைப்புகள் மீதும் இன்னொரு கண் வைத்திருக்க வேண்டியுள்ளது. சரித்திரபூர்வமாக ஒடுக்குமுறை செய்த வெள்ளைக்கார ஆணினத்துக்கு reverse discrimination நேராமல் காக்க வேண்டியிருக்கிறது. எந்த ‘இஸத் ‘தைப் போலவும், பெண்ணியமும் அந்தந்த மண்ணின், அந்தந்தச் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப வளர வேண்டியது; அதிகார மைய தளத்தில் சட்டங்களும், சமூக தளத்தில் விழிப்புணர்வும் அறிதலும், தனிமனித அளவில் நேர்மையான செயல்பாடும் என்றிருக்க வேண்டியது; பரந்த குறிக்கோள்களை எட்டியதும் மையநீரோட்டத்துடன் கலந்து விட வேண்டியது. என் தனிப்பட்ட பார்வையில், பெண்ணியம் பெண்களையும் ஆண்களையும் கொண்டு சேர்க்க வேண்டிய இடம் மனிதமே.
நண்பர்களுடன் பேசுவதற்குப் பல விஷயங்கள் இருந்தன. இன்னும் பலவற்றைப் பேசி முடிக்கவில்லை. மீண்டும் சந்தித்து உரையாட வேண்டும். செய்யும் நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
அடுத்த நாளைய இந்திய இலக்கியக் கூட்டத்தில் பல அமர்வுகள் நிகழ்வதாய்த் திட்டம். எம்.டி.வாசுதேவன் நாயர் (மலையாளம்), ஷஷி தரூர் (மலையாளம்-ஆங்கிலம்/ஐ.நா. உயர் அதிகாரி) ஆகியோர் பேசுவதைக் கேட்க வேண்டுமென்ற ஆசை. ஆனால் வேலையிருந்ததால் எல்லாரிடமும் வழியனுப்பி விட்டுக் கிளம்பினேன்.
இங்கு ஒரு தனிப்பட்ட குறிப்பு: வைரமுத்துவின் தம்பி ஒரு சாலை விபத்தில் காலமான மூன்றே நாட்களில் அவர் இங்கு கிளம்பி வர வேண்டிய நிலைமை. பொது இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் தொழில்முறை முகத்தை மாட்டிக் கொண்டு செய்ய வேண்டியதைச் செய்தார். அவரை மின்னஞ்சல் மூலம் வரவேற்று, தொலைபேசியில் பேச விரும்பிய ‘உயிரெழுத்து ‘ கவிதைக்குழு கற்பகம் போன்ற ரசிகர்களுடன் சரளமாகப் பேசினார். வந்து சேர்ந்த முதல் நாள் நானும் அவர் நண்பரும் அவரைச் சந்தித்த போது, ‘இவ்வுலகில் நான் கண்ட யாரும் இனி என் முன்னால் போக வேண்டாம் ‘ என்று வேதனைப்பட்டிருந்தார். முப்பத்துநான்கு வயதுத் தம்பியைச் சாலைவிபத்தில் இழந்த நானும், இன்னும் பெரிய இழப்புகளை வாழ்வில் சந்தித்த பலரும் புரிந்து கொள்ளக் கூடிய அதிர்வு இது. கவிதை மொழியாக்கத் திருத்தம், வாசிப்பு ஆகிய அத்தியாவசியக் காரியங்களுக்காக அன்றி, எவ்விதக் கேள்வியுடனும் நேர்காணலுக்காகவும் நான் அவரை அணுகவில்லை.
வீடு திரும்பும் வழியில்தான் கடந்த இரண்டரை நாள்களில் செய்தவற்றைக் கோர்வையாய் நினைத்துப் பார்க்க முடிந்தது. தாயகத்தின் பிரதமர் பங்கேற்ற விழா; விடுதியின் முப்பத்தெட்டாம் தளத்தில் ஹட்ஸனின் குளிர்ச்சியை அள்ளி வந்த மொட்டைமாடிக் காற்றினூடே பல கவிஞர்களுடன் பேசியது; எம்.டி.வாசுதேவன் நாயரிடம் அவரது ‘காலம் ‘ மற்றும் ‘இரண்டாம் இடம் ‘ பற்றிய உரையாடல்; கே.சச்சிதானந்தனிடம் மலையாள இலக்கிய வரலாறு பற்றியும், ஒரு கவிஞரென்ற முறையில் அவர் தாண்டி வந்த பாதைகள் பற்றியும், அவரது தற்சமயத் தேடல் பற்றியும் ஆழமாகப் பேசிய பதிவு; வானம்பாடிக் கவிஞரான பாலாவிடம் சமகாலத் தமிழிலக்கியம் பற்றியும் சாகித்திய அகாதெமி பற்றியும் பேசிய பதிவு; குல்ஸாரிடம் அவரது மொழியின் தன்மை பற்றியும் அவர் கவிதைகளின் ஒலிநயம் பற்றியும் பேசியது; சந்திரசேகர் கம்பார், பத்மா சச்தேவ், பி.வி.நரசிம்ம ராவ், வைதேகி, பஷீர் பாதர், நிர்மல் பாட்டாச்சார்ஜி, இந்திரா கோஸ்வாமி, ஜெயப்ரபா இன்னும் பலருடனும் பேசியது; ஒருவரை ஒருவர் நன்றாய் அறிந்திருந்த பெண் இலக்கியவாதிகள் என்னையும் அவர்கள் வட்டத்துக்குள் இழுத்துப் பேசிய இனிமை; சிறுபெண் போல் சிரித்துப் பேசுகிறீர்களே என்று வைதேகி மென்மையான புன்னகையால் அணைத்துக் கொண்டது; தற்செயலாய் ஒரே நிறத்துச் சேலை கட்டிய நாளில் நாமிருவரும் இரட்டையர்கள் என்று ஜெயப்ரபா என்னைத் தோளோடு அணைத்துக் கொள்ள, கைத்தறிச் சேலைகள் மற்றும் சேலை முன்றானைகளின் அழகை நான் ரசித்துச் சொல்ல, பெண்ணியவாதக் கவிஞரான ஜெயப்ரபா சேலை முன்றானை பற்றித் தான் எழுதிய தெலுங்குக் கவிதை சொன்னது; அமெரிக்காவில் (ஆங்கிலக்) கவிதை காணாமலே போனதற்காக எல்லாரும் என்னிடம் போலி வருத்தம் தெரிவித்துச் சிரித்தது; இந்தியக் கவிதையின் பன்மை ஒலிகள் காதில் சிலம்ப, தமிழ் நண்பர்களுடன் தமிழில் பேசிக் கொண்டே சேலையும் பொட்டுமாய் மன்ஹாட்டனில் நடந்தது…….
மறக்க முடியாத அனுபவங்கள் பல வகையானவை.
October 1, 2003
Kanchanat@aol.com
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]
- சில சீனத் திறமைகள்
- பஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)
- நியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்
- தேவை இன்னும் கொஞ்சம் தாகம்
- அடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)
- மனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)
- சூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]
- மெளனம் பற்றி ஏறி
- இணையக் காவடிச் சிந்து
- மாயமான்.
- ‘யார் ? ‘என்றா கேட்கின்றாய் ?
- வலை
- வைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4
- பட்டாபிஷேகம் நடக்கிறது…
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு
- குறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக
- கருத்தும். சுதந்திரமும்.
- வாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி
- நூல் வெளியீட்டுவிழா
- குமரிஉலா 5
- தமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்
- கல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)
- கடிதங்கள்
- பயணம் – ஒரு மைக்ரோ கதை
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி
- இன்னுமொரு உலகம்…….
- கனடாவில் நாகம்மா
- வடிகால்
- விடியும்! நாவல் – (16)