நியதி

This entry is part [part not set] of 16 in the series 20011029_Issue

வ.ந.கிரிதரன்


கோடையின் வெம்மையில் உலகம் பொசுங்கிக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாக அந்தக் காகமும் பறந்து

கொண்டுதானிருந்தது. கண்ட மிச்சம்..ஒரு இரையாவது தென்பட்டதாகவில்லை.பசியால் அதன் கண்கள் கூட சோர்ந்து வாடி விட்டன. எந்த நேரமும் அவை மூடி விடலாம். பறப்பதற்குக் கூட சக்தியற்று இறக்கைகள் தளர்ந்து விட்டன. இந்தச் சமயத்தில் தான் அதன் கண்களில் அந்தக் குளம் தென்பட்டது.இன்னும் வற்றாமலிருக்கும் நீர்நிலை. பாலையில் வசந்தத்தைக் கண்டது போல் காகத்திற்கோ மகிழ்ச்சி பரவியது.

அப்பொழுது தான் அதன் கண்களில் அந்த மீனவன் தென்பட்டான். அந்தக் குளத்தில் மீன்கள் சிலவற்றைப் பிடித்துக் கூடையில் போட்டவண்ணம் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தான் அவன். கூடையிலிருந்த மீன்களிலொன்று மிகவும் முயற்சி செய்துலெப்படியும் தப்பி விடவேண்டுமென்று துள்ளியது. துள்ளிய துள்ளலிற்குரிய பலன் உடனடியாகவே கிடைத்தது. அந்த மீனவனோ செல்லும் வழியிலேயே குறியாகவிருந்தான். விரைவாகவே வீடு சேரவேண்டுமென்ற அவசரம் அவனுக்கு. அந்த அவசரத்தில் கூடையிலிருந்து துள்ளித் தப்பிவிட்ட மீனை அவன் கவனிக்கவேயில்லை. மீனிற்கோ அளவில்லாத ஆனந்தம். உடலை உந்தி உந்திக் குளத்தை நோக்கித் தவழ்ந்து கொண்டிருந்தது.இன்னும் கொஞ்சத் தூரம் தான். அதன் கவலையெல்லாம் தீர்ந்து விடும். குளத்திற்குள் இறங்கி விட்டாலோ அதனை யாராலுமே ஒன்றும் செய்ய முடியாது. ஒருமுறை படித்த பாடம் போதும். இனி ஒருபோதும் இதே தவறினை விடக் கூடாது.ஆசைப் பட்டதன் பலனை அனுபவித்தாயிற்று. இவ்விதமாக எண்ணியபடியே விரைவாகத் தவழத் தொடங்கியது. ஆ..ஒரே எட்டுத் தான். அப்பாடா!கவலையெல்லாம் தீர்ந்ததே.

இவ்விதம் அந்த அப்பாவி மீன் எண்ணியபடியே குளத்திற்குள் குதிக்க ஆயத்தமான போது தான் பசியால் வாடி வதங்கி பறந்து வந்து கொண்டிருந்த அந்த அண்டங்காகத்தின் பார்வையில் அது தென்பட்டது. அதன் கண்கள் ஆனந்ததால் விரிந்தன. காணாமல் கண்ட இரையை அவ்வளவு இலேசாக விட்டு விடுவதா ?ஒரே பாய்ச்சலில் பறந்து வந்த காகம் அந்த அதிருஷ்ட்டம் கெட்ட அந்த மீனை ஒரே ‘கவ்வா ‘கக் கவ்வியபடி பறக்கத் தொடங்கியது. மீனிற்கோ மரண பயம் சூழத் தொடங்கியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தப் பொல்லாத காகம் அதனைக் கொத்திச் சுவைக்கத் தொடங்கி விடும். அதற்குள் ஏதாவது செய்தால்தானுண்டு. இல்லாவிட்டால் அதன் கதி அதோகதிதான்.இன்றைக்கு யார் முகத்தில்,விழித்தேனோ என அது வருந்திக் கொண்டது. மிகவும் முயற்சியுடைய மீன் அது. துரும்பும் பல் குற்ற உதவும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மீன் அது. இறுதியாக ஒரு முறை முயன்று பார்க்கத் தொடங்கியது.

‘ஐயா! பெரியவரே! ‘ என அது காகத்தைப் பார்த்து விழித்தது.

காகத்திற்கோ ஒரே ஆச்சர்யம். ‘என்ன ‘ என்பது போல் மீனைப் பார்த்தது. இதற்கிடையில் குளத்தின் மறுபுறத்தில் குளத்தின் மேலாகப் படர்ந்திருந்த மரக்கிளையொன்று தென்படவே அதன் மீது அமர்ந்தபடியே அந்த மீனைக் கொத்திச் சுவைக்க ஆயத்தமாகியது. மீண்டும் அந்த மீன் காகத்தை நோக்கிப் பின்வருமாறு கூறியது.

‘ஐயா பெரியவரே! நானோ அற்ப ஐந்து. நீங்களோ அறிவில் பெரியவர். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். உங்களிற்குக் கோடி புண்ணியமுண்டு ‘

‘உன்னை விடுவதா ?..எவ்வளவு நேரமாக இந்த வெயிலில் அலைந்திருப்பேன் தெரியுமா ? கடவுளே பார்த்துக் கருணை கொண்டு அனுப்பி வைத்த விருந்தல்லவா நீ. உன்னை விடுவதா ? எனக்கென்ன பைத்தியமா ? ‘ இவ்விதம் காகம் கேட்டது.

மீனோ முயற்சியினைக் கைவிடுவதாகவில்லை. ‘ஐயா! பெரியவரே! என்னை நம்பி ஐந்து குழந்தைகள் பசியுடன் காத்திருப்பார்கள். உணவு தேடி வந்தவிடத்தில் இவ்விதம் என் நிலைமை ஆகிப் போனதே! கருணை கொண்டு என்னைக் காத்தருள்வீர்கள் பெரியவரே! ‘

காகத்திற்கு மீனை நினைக்கப் பரிதாபமாகவும் சிரிப்பாகவுமிருந்தது. மீனாவது குஞ்சுகளிற்கு உணவு ஊட்டுவதாவது. மிருகங்கள் தங்களது குட்டிகளிற்காக உணவு தேடிச் செல்வது வழக்கம். பறவைகள் கூட அவ்விதம் செய்வது வழக்கம். ஆனால் மீன்கள் அவ்விதம் செய்வதாக காகம் கேள்விப்பட்டதேயில்லை. எனவே அது மீனைப் பார்த்துப் பின்வருமாறு கூறியது.

‘ஏ! மீனே! என்ன பசப்புகிறாய் ? நானென்ன இளிச்சவாய்க் காகமென்று நினைப்பா ? என்னை நீயொன்றும் ஏமாற்ற முடியாது ? என்றாலும் உன்னைப் பார்க்க எனக்குப் பாவமாயிருக்கிறது. உனது விடாமுயற்சி என்னைக் கவர்ந்து விட்டது. அதனால்.. ‘

‘அதனால்.. ‘ மீனிற்கோ ஆர்வமும் களிப்பும் கரைபுரண்டோடின.

‘அவசரப்பட்டு ஆனந்தம் கொள்ளாதே! நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்பேன். அதற்குச் சரியான நம்பக் கூடிய பதிலை நீ கூறுவாயென்றால் நான் உன்னை விட்டு விடுகின்றேன். கூறாவிட்டாலோ உன்னை இரையாக்கி விடுவேன். சம்மதமா ? ‘

‘சம்மதமே ‘ என்று மீன் மகிழ்ச்சியுடன் கூறியது. முயன்று பார்ப்பதிலென்ன தவறிருக்கிறது.காகம் குரலினைச் சுதாரித்துக் கொண்டு தனது கேள்வியினைக் கேட்டது.

‘நீ எவ்விதம் அந்த மீனவனிடம் அகப்பட்டுக் கொண்டாய் ? இதற்கு நீ உண்மையைக் கூற வேண்டும் ‘

‘அதுவா..அவன் போட்டிருந்த தூண்டிலில் அகப்பட்டுக் கொண்டேன். ‘

‘ஏன்..தூண்டிலில் போய் அகப்பட்டுக் கொண்டாய் ? ‘

‘எல்லாம் அந்தப் பாழாய்ப்போன புழுவால் வந்த வினை தான். அழகாக நெளிந்து கொண்டிருந்த அந்தப் புழு என்னை ஏமாற்றி விட்டது. புழுவைக் கொண்டு அந்த பாழாய்ப்போன மனிதன் என்னை ஏமாற்றி விட்டான். ‘

காகத்திற்கோ மீனின் பதில் அதிக சந்தோஷத்தினைக் கொடுத்து விட்டது. அந்தச் சந்தோஷம் குரலில் தெரிய அது கூறியது. ‘ஆக, உனக்கேற்பட்ட இந்த நிலைக்குக் காரணம் நீ அந்தப் புழுவை உணவிற்காகக் கொல்ல நினைத்தது தான். இல்லையா ? நிலமை இப்படி இருக்கும் போது நீ எப்படி எனக்கு உயிர்களைக் கொல்லாமிருக்க உபதேசம் செய்யலாம். ‘ஊருக்குத் தான் உபதேசம். உனக்கல்ல ‘ என்னும் கதைதானோ ? ‘

மீனிற்கு இப்பொழுது மீண்டும் மரணபயம் சூழ்ந்து கொண்டு விட்டது. பொல்லாத அண்டங் காகம் இப்படி மடக்கி விட்டதே!நல்லாயிருக்குமா ?

‘ஐயா! நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் நானோ அறிவில் உங்களை விடக் குறைந்த ஐந்து. அறிவில் குறைந்ததினால் நான் விட்ட பிழையினை நீங்களும் விடலாமா ? ‘

‘நல்லாயிருக்கு கதை. உனக்கொரு நீதி! எனக்கொரு நீதியா! ‘ இவ்விதம் கூறிய அந்த அண்டங்காகம் அந்த மீனைக் கொத்திச் சுவைக்க ஆரம்பித்தது.

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்