நினைவுகளின் தடத்தில் – (40)

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

வெங்கட் சாமிநாதன்


விடுதலை பத்திரிகை அந்நாட்களில் அடிக்கடி வெளியிடும் ஒரு நீண்ட பட்டியல், அது கால் பக்கத்திற்கும் அரைப்பக்கத்திற்கும் இடையிலான அளவினதாக இருக்கும், அந்தப் பட்டியலும் அது பற்றிய விவரங்களும். தமிழ் நாடு அரசின் ஏதோ ஒரு துறையில், இருக்கும் ஊழியர்களில் பிராம்மணர் எத்தனை பேர் என்று அவர்கள் பெயர், அவர்கள் வகிக்கும் பதவி போன்ற விவரங்கள் அந்தப் பட்டியலில் தரப்பட்டிருக்கும். விடுதலையின் கவனம் பிராம்மணர் மீது மாத்திரமே குவிந்திருக்கும். வேறு பத்திரிகைகள் எதுவும் இந்த மாதிரியான கவனிப்பில் ஈடுபட்டதில்லை. எனக்கு அந்தக் காலங்களில், இது வேடிக்கையாக இருக்கும். விடுதலையின் பிராமணர் மீதான அதீத கவனிப்பு நியாயமானதாகவே அப்போது தோன்றிற்று.. பிராம்மணர் குடும்பங்களில் தான் தம் பிள்ளைகள் எவ்வளவு கஷ்டங்களுக்கிடையேயும் படிக்க வேண்டும், வேலைக்குப் போகவேண்டும் என்ற அக்கறை முன்னிற்பதாக இருக்கும். நிலக்கோட்டையில் படித்துக் கொண்டிருந்த போது, “உங்க பசங்க ஒழுங்கா ஸ்கூலுக்கு வர்ரதில்லை, படிக்கிறதில்லை” என்று மாமா (தலைமை ஆசிரியராக) புகார் செய்தால், “ஏதோ படிக்கற வரைக்கும் படிக்கட்டுங்க, அவன் படிச்சு என்ன கலெக்டர் வேலை செய்யப் போறான். இங்கே கல்லாவிலே உக்கார்ரவன் தானே” என்று பதில் வரும். அனேகமாக எல்லோரும் கடை வியாபாரிகள். பள்ளிக்கூடத்தை நடத்தி வந்த ஊரிலேயே பெரிய பணக்காரரான சௌராஷ்டிர குடும்பத்தின் பிள்ளையே அந்தப் பள்ளியில் கிடைக்கும் எட்டாவதுக்கு மேல் படிக்கவில்லை. ஆனால் பின் வருடங்களில் அவன் நிலக்கோட்டை பஞ்சாயத்து சேர்மன் ஆக ஊரில் பெரிய புள்ளியாக உயர முடிந்திருக்கிறது, தன் அப்பாவைப் போலவே. ஆக இதெல்லாம் ஒரு கால கட்ட நிலை என்பது அப்போது யாருக்கும் புரிந்ததில்லை.

எனக்கு என்னவோ, பத்திரிகை படிப்பதும், சுற்றி நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்வதும் திராவிட கழகம் ஒவ்வொரு ஊரிலும், ஊரின் ஒவ்வொரு மூலையிலும் நடத்திய இந்த மாதிரியான படிப்பகங்களிலிருந்து தான் முதன் முதலில் பழக்கமானது. வேறு எந்த கட்சியும் இந்த மாதிரி தீவிர பிரசார அக்கறை காட்டவில்லை. நிலக்கோட்டையில் இருந்த போது சிறு வயதிலேயே படிக்கத் தொடங்கிய பத்திரிகைகளும், புத்தகங்களும், கதையும் நாவலும் படிப்பதற்காகத் தான். அந்தக் காலத்தில் செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்த இரண்டாம் உலக யுத்தம் மற்றிய புகைப்படங்கள் நிறைய வரும். அவற்றைப் பார்ப்பதில் ஆர்வம் இருந்தது. ஆனால் கும்பகோணம் வந்த பிறகு தான் கதைகள் மீறிய அரசியல் செய்திகள் படிப்பதன் ஆர்வம் என்னில் ஏற்பட்டது. அது வேடிக்கையாக விடுதலை பத்திரிகையுடன் தான் தொடங்கியது. அந்தப் பழக்கம் நான் ஒரிஸ்ஸா சென்று ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த பின்னும் தொடர்ந்தது. ஹிராகுட்டில் சந்தா கட்டி விடுதலை பத்திரிகை வாங்கிய ஒரே ஆள் நான் தான். அங்கு என் அறைக்கு வரும் நண்பர்கள் அங்கு கிடக்கும் விடுதலைப் பத்திரிகையயும் அதன் பிராமணர்களை மாத்திரமே குறிவைத்து செய்யப்படும் துவேஷப் பிரசார செய்திகள் கட்டுரைகளையும் கண்டு, “என்ன சாமிநாதா, இதையெல்லாமா படிக்கிறாய்?” என்று கேட்பார்கள். அது கொஞ்ச காலம் தான் தொடர்ந்தது. பின்னர் அங்கு வேறு பத்திரிகைகள் கிடைக்கவே விடுதலையிலிருந்து நானும் விடுதலை பெற்றேன். ஒரிஸ்ஸா போகும் முன் நான் ஆறு மாத காலம் தங்கியிருந்த ஜெம்ஷெட்பூரில் தங்கியிருந்த வீட்டின் சதுக்கத்தின் ஒரு மூலையில் ஜெம்ஷெட்பூர் நகர நிர்வாகம் நடத்திய ஒரு ரெக்ரியேஷன் க்ளப் கட்டிடத்தின் நடுவில் ஒரு பெரிய ஹாலில் பத்திரிகைகள் எல்லாம் போடப்பட்டிருக்கும். சாயந்திர நேரங்கள் எனக்கு அங்கு தான் கழியும். அங்கு தான் அமுத சுரபி பத்திரிகையும் அதில் சாண்டில்யன் எழுதிவந்த ஜீவபூமி (என்று தான் நினைவு. ராஜபுதன அரசர்களைப் பற்றிய சரித்திர நாவல்)யும் எனக்கு முதல் தடவையாக அறிமுகமாயினர். அதை அடுத்து நான் ஹிராகுட்/புர்லா போனதும், அங்கும் நான் அமுத சுரபி வாசகனாகத் தொடர்ந்தேன். அதில் லா.சா.ராமாமிருதம் என்ற பெயரைப் பார்த்தேன். என் நினைவு சரியென்றால், பஞ்ச பூதக் கதைகள் என்று அவர் எழுதி வந்தார். தமிழ் நடையும் கதை சொல்லும் பாணியும் பெரும் மயக்கத்தைத் தரக்கூடும் என்று முதன் முதலாக எனக்குச் சொன்னது லா.ச.ரா. 1951-ல் நான் பெற்ற அறிமுகம் அது.

இதெல்லாம் கொசுரு செய்திகள். சொல்ல வந்த விஷயம் திராவிட கழகம் நடத்தி வந்த படிப்பகங்கள் வழியாகத் தான் நான் தினசரி பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் பெற்றேன் என்பது முதல் செய்தி. இரண்டாம் செய்தி, கும்பகோணத்தில் எனக்கு அதிகம் பரிச்சயமானது திராவிட கழகக் கூட்டங்கள், பின் அதன் பல தலைவர்கள் வெளியிட்டு வந்த வார பத்திரிகைகள் வழி அரசியல் நடப்புகளில் அதிக ருசி ஏற்பட்டது. அதில் எனக்கு மிகவும் பிடித்துப் போனது, அண்ணாத்துரையின் பேச்சுக்களும், எழுத்துக்களும். அப்போது தான் வ.ரா. எழுதிய ஒரு சின்ன புத்தகம், பெரியாரைப் புகழ்ந்து எழுதியது வெளிவந்திருந்தது. தமிழ் நாட்டுப் பெரியார்கள் என்ற புத்தகத்திலும் பெரியார் ஈ.வே.ரா. என்ற கட்டுரை. இதற்கெல்லாம் திராவிட கழகத்திலிருந்து அண்ணாதுரையைத் தவிர வேறு யாரும் எதிர்வினை காட்டியதாக எனக்குத் தெரியவில்லை. முக்கியமாக விடுதலையில் ஏதும் இல்லை. பெரியாரும் வ.ரா.வைப் பற்றி ஏதும் எழுதியதாக எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்ற தலைப்பில் ஒரு சிறிய புத்தகம் அண்ணாத்துரை பெயரில் வெளிவந்தது. அதில் வ.ரா.வை புகழ்ந்து எழுதியிருந்தார். வேறு யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஒரு வேளை என் கண்களில் படவில்லையோ என்னவோ. ஆனால் வ.ரா.வைப் பற்றி விடுதலையில் யாரோ ஒருவர் எழுதும் சந்தர்ப்பம் நேரிட்டது. வ.ரா.வின் அறுபதாண்டு நிறைவை ஒட்டி, அவர் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டினையும் நினைவு கூர்ந்து, ஒரு பாராட்டுக் கூட்டமும், ஒரு பணமுடிப்பு வழங்கலும் நடந்தது பற்றி செய்திகள் படித்தேன். அப்போது தான், அந்த விழாவைக் குறித்துத்தான் விடுதலை வ.ரா. பற்றிப் பேசியது. யாரோ ஒருவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். குத்தூசி எழுதுவது போல ஒரு பத்தி. குத்தூசி தானா என்பது நிச்சயமாக நினைவில் இல்லைஅதில் என்ன எழுதியிருந்தது என்பதெல்லாம் நினைவில் இல்லை. அக் கட்டுரையின் கடைசி வரி, “வீடு போய்ச் சேர்ந்ததும், வ.ரா. விழாக் கூட்டத்தில் சொன்ன பணமுடிப்புத் தொகை சரியாக இருக்கிறதா என்று கட்டாயம் எண்ணிப் பார்த்திருப்பார்” என்ற வரி நினைவில் இருக்கிறது. வ.ரா. பூணூல் அணியாதவர், பிராமண சடங்குகள், பழக்க வழக்கங்கள் எதிலும் நம்பிக்கை இல்லாதவர். எதிர்ப்படும் பூணூல் அணிந்த எழுத்தாளரிடம் ‘இது எதற்கு/” என்று கேட்பவர் என்பதெல்லாம் நான் பின்னால் படித்தறிந்து கொண்டது. அந்த சமயத்தில் நான் அறிந்தது, அவர் பெரியாரையும் அவர் கொள்கைகளையும் பாராட்டியவர் என்பது தான். வ.ரா.வின் சிந்தனைகளும், எண்ணமும் எழுத்தும் எதாக இருந்தாலும், வ.ரா ஒரு பிராமணர். கடைசியில் அவர் சாதிதான் திராவிட கழகத்தவரின் விருப்பையும் ஏற்பையும் தீர்மானிக்கும் விஷயமாக இருந்திருக்கிறது. ‘நாங்கள் பார்ப்பனீயத்திற்குத்தான் எதிரிகளே அல்லாது, பார்ப்பனர்களுக்கு அல்ல” என்றெல்லாம் அவர்கள் சொல்லிக்கொண்டார்கள் தான். இருந்தாலும், பிராம்மண துவேஷம் என்பதை அவர்கள் என்றும் எக்காரணத்துக்கும் கைவிடமாட்டார்கள் என்பதெல்லாம் பின் வருடங்களில் தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் அன்று, இப்படிப்பட்ட விருப்பும் ஏற்பும் அண்ணாத்துரையிடம் இருந்திருக்கவில்லை என்பது தெரிந்தது. அதுவும் அண்ணாத்துரையிடம் எனக்கு பிடிப்பு ஏற்படும் காரணங்களில் ஒன்றாயிற்று.

இதே போல இன்னொரு சந்தர்ப்பமும் அண்ணாத்துரை தவிர மற்ற கழகத்தவரின் கறாரான நிலைப்பாடுகளுக்கு உதாரணமாக இருந்தது. திருவண்ணாமலையில் ரமணமகரிஷி வெகு நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவர், மரணமடைந்த செய்தி வந்தது. அதற்கு முன்னர் சென்னை மாகாண முதன் மந்திரியாக ஒரு குறுகிய காலத்திற்கு இருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார், மிக எளியவர், அவர் வந்ததும் தெரியாது, போனது தெரியாது என்று தான் அவர் பதவி வகித்த காலம் இருந்தது. அவர் ஒரு ரமண பக்தர் என்பது, அவர் ரமணாஸ்ரமம் சென்று ரமணரைத் தரிசித்து வந்தது பற்றிய செய்தி ஏதோ வாரப்பத்திரிகையில், கல்கி என்று தான் எனக்கு நினைவு, படங்களோடு வெளிவந்தது. ஐந்தாறு பேர், வரிசையாக நிற்க, நடுவில் ரமணர் அவரது வழக்கமான தோற்றத்தில், அவருக்கு அடுத்து ஓ.பி.ராமசாமி ரெட்டியார். அப்போதே ரமணர், பகவான் ரமண மகரிஷி என்று தான் அழைக்கப்பட்டார். அவருடைய மகத்துவம் பற்றி, பின்னர் தான் நான் பேராசிரியர் கே.சுவாமிநாதன் மூலமும், பால் ப்ரண்டன் புத்தகங்கள் மூலமும் தெரியவிருந்தேன். விடுதலையில் அவர் மரணம் பற்றிய செய்தி வெளியாகி இருந்தது. “அவாளுடைய பகவான் புழுத்துச் செத்தார்” என்று. எந்த அரசியலிலும், வெளிவிவகாரங்களிலும் சம்பந்தப் படாது, திருவண்ணாமலையில் தானுண்டு, தன் ஆசிரமம் உண்டு என்று ஒதுங்கி வாழ்ந்த ஒரு பெரியவர், ஒரு துறவி, இறந்த பின்னரும் ஏன் இப்படி எழுதுகிறார்கள்? என்று நான் நினைத்ததுண்டு. ஆனாலும் இதெல்லாம் தலைவர்கள் செய்யும் காரியமல்ல, கீழே இருப்பவர்கள் செய்யும் காரியங்களுக்கு கழகமோ தலைவர்களோ எப்படி பொறுப்பாவார்கள்? என்றும் நான் நினைத்ததுண்டு.

அண்ணாத்துரையின் பெயரை நான் நிலக்கோட்டையில் இருந்த போதே கேள்விப்பட்டிருந்தாலும், அவரை திராவிட கழகத்தின் ஒரு தலைவர், தளபதி என்று அறியப்படுபவர், அந்தக் கட்சியின் மற்ற எந்தத் தலைவரையும் விட நிறைய படித்தவர், எம்.ஏ. பட்டம் பெற்றிருந்த ஒரே தலைவர் என்ற அந்த அளவிலேயே தான் தெரியுமே தவிர, அவர் எழுத்துக்களைப் படிக்க ஆரம்பித்ததும், அவர் மேடைப் பேச்சைக் கேட்டதும், கும்பகோணம் வந்த பிறகு தான். அவைதான் அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பை வளர்த்திருந்தன. இதற்கெல்லாம் மேலாக, கும்பகோணத்தில் நான் படித்துக்கொண்டிருந்த இரண்டு வருடங்களில் பல பரபரப்பும், புதுமையுமான சம்பவங்கள் பல நடந்தன. அவற்றில் அண்ணாத்துரை சம்பந்தப்பட்ட விஷயம், அவருடைய கதை வசனத்தில் வெளிவந்த ஓர் இரவு, வேலைக்காரி என்ற இரண்டு படங்கள். அவை பெற்ற வெற்றிகள். காங்கிரஸ் அனுதாபி என்று நினைக்கப்பட்டிருந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியாரையே அன்ணாத்துரையின் பேச்சும் எழுத்தும் கவர்ந்து அவர் எழுத்தை சினிமாவாக்க பண முதலீடு செய்ய வைத்ததென்றால், அது ஒரு பெரிய மாற்றம் தான். சாதாரணமாக எதிர்பார்க்க இயலாத மாற்றம். இவை இரண்டும் பெரும் புரட்சியையே விளைவித்தன. கழகத்தவர் மத்தியில் பெரியாருக்கு அடுத்தபடியில் மிகப் பெரிய அளவில் இருந்த அவரது செல்வாக்கு, இப்போது கட்சி எல்லைகளையும் மீறி பொதுமக்களிடையேயும் கூட பரவியது கல்கி அவரை தமிழ் நாட்டின் பெர்னாட் ஷா என்று வர்ணித்துப் பாராட்டினார்.

தமிழ் சினிமாவில் அண்ணாத்துரையின் பிரவேசம் ஏற்படுத்திய பரபரப்பான மாற்றம் தவிர இன்னொரு பாதைத் திருப்பத்தை எஸ்.எஸ் வாசனின் சந்திரலேகா என்ற படம் ஏற்படுத்தியது அது பலவகைகளில் பெரிதும் பேசப்பட்டது. அது வரை எந்தத் தமிழ் படமும் கண்டிராத பொருட்செலவையும் பிரும்மாண்ட தயாரிப்பையும், விளம்பரத்தையும் கொண்ட படம் அது. 50 லக்ஷம் செலவில் தயாரான பிரும்மாண்ட படம் என்றே அது விளம்பரப்படுத்தப்பட்டது. யானைகளும் சர்க்கஸ் காட்சிகளும், பெரிய முரசுகளின் மீது அமைக்கப் பட்டிருந்த நடனக்காட்சிகளும், நடனத்தின் முடிவில் அம்முரசுகளைத் திறந்து வெளிப்பட்ட படைவீரர்கள் சண்டையிடும் காட்சியும், எல்லாமே அந்நாளைய ரசிகர்களை மலைக்க வைத்தன. தமிழ் நாட்டில் மட்டுமல்ல அது ஹிந்தியில் டப் செய்யப்பட்டு இந்தியா முழுதும் திரையிடப்பட்ட போது, ஹிந்தி பட ரசிகர்களையும் அது பிரமிப்பும் அதிர்ச்சியுமடைய வைத்தது. ஹிந்தி பட தயாரிப்பாளர்களின் பொறாமையையும் வாசன் அந்த படத்தின் மூலம் சம்பாதித்துக் கொண்டார். ஒரே நாளில் தமிழ் நாடு முழுதும் திரையிடும் சாதனையை வாசன் தான் முதலில் தொடங்கி வைத்தார். அந்நாட்களில் சந்திரலேகா சம்பந்தப்பட்ட எல்லாமே பிரமிக்க வைத்தன. தமிழ் பத்திரிகைகளில், “ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது போன்று காட்சிகள் அமைந்துள்ளதாக” மதிப்புரைகள் சந்திரலேகாவைப் பாராட்டின. அதிலிருந்து தமிழ் படங்கள் வட இந்திய மார்க்கெட்டையும் தம் கைவசப்படுத்த தமிழில் தயாரிக்கப்பட்ட படங்களை ஹிந்தியில் டப் செய்ய ஆரம்பித்தன. இந்த புதிய பாதைதான் வைஜயந்தி மாலாவை ஹிந்தி நடிகையாக்கியது இதற்கெல்லாம் வழி அமைத்தது வாசன் தான்.

எனக்கு இப்போது சந்திரலேகா பற்றி இரண்டு நினைவுகள் இன்னமும் மறையாது உள்ளன. ஒன்று டி.ஆர்.ராஜகுமாரி பாடுவதாக வரும் ஒரு பாட்டு. அப்போதிலிருந்து இன்றைய நினைவு வரை மிகவும் பிடித்த பாட்டு. “செந்தாமரை மலர்தனை நீ கண்டதுண்டோடி, அதற்கும் என்னைப் போல் சிரிக்கத் தெரியுமோ, அதற்கும் என்னைப் போல் நடக்கத் தெரியுமோ” என்று நீளும் அந்த பாட்டு. இரண்டாவது, படத்தின் கடைசிக் காட்சியில் முரசு நடனம் முடிந்து முரசுகளிலிருந்து படை வீரர்கள் வெளிப்படுவார்கள். அதைப் பார்த்ததும் எதிர்பாராத இந்த விளைவைக் கண்டு அவர் திகைக்க வேண்டும். ஆனால் எதிரி படைகள் முரசிலிருந்து வெளிப்படும் முன்பே அவர் முகம் திகிலடையும். அதன் பின் தான் முரசுகளிலிருந்து வீரர்கள் வெளிப்படும் காட்சி வரும். சில வருடங்களுக்கு முன் இதை சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு பார்த்த போதும் வேடிக்கையாகத் தான் இருந்தது.

தமிழ் சினிமா படங்களின் போக்கே முற்றிலுமாக மாறிவிட்டதன் அடையாளமாகத்தான், 1945-க்கு முன் சுமார் 10 வருடங்களில் 12-ஓ என்னவோ படங்களில் நடித்து தமிழ் நாட்டையே கவர்ந்த நக்ஷத்திரமாக விளங்கிய தியாகராஜ பாகவதர், சிறையிலிருந்து திரும்பி தன்னை மீண்டும் தமிழ் சினிமாவில் ஸ்தாபித்துக்கொள்ள நினைத்துச் செய்த முயற்சிகள் படு பயங்கரமாக தோல்வி அடைந்தன. அதே பாகவதர் தான், பக்திக் கதைகள் தான், அதே மனதை மயக்கும், சொக்க வைக்கும் குரல் தான். இருப்பினும் காலம் மாறி விட்டது. தமிழ் சினிமாவின் ரசனை மாறிவிட்டது.

இன்னொரு புதிய திருப்பம் தான். தமிழ் சினிமாவுக்கு அது புதிது. ஆனால் அண்ணாத்துரையும் வாசனும் சாதித்துக் காட்டியது போல தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிக் காட்டிய திருப்பம் இல்லைதான். ராமராஜ்யம் என்ற ஒரு ஹிந்தி படத்தை ஏ.வி.எம். தமிழில் டப் செய்து வெளியிட்டது. அதையும் நான் கும்பகோணத்தில் விஜயலக்ஷமி டாக்கீஸில் தான் பார்த்தேன். ராமாயணத்தின் உத்திர காண்ட நிகழ்வுகளைச் சொல்லும் கதை அது. அது எனக்கு மிகவும் வித்தியாசமான படமாகப் பட்டது. எந்த தமிழ் படத்தையும் விட அது வித்தியாசமானது. மிக அமைதியாக, குரல் எழுப்பாது, நேராக கதையைச் சொல்லும், கதையை மாத்திரம் சொல்லும் பாணியில் அது இருந்தது. என் நினைவுகள் சரியெனில் அதில் ராமனாக நடித்திருந்தது ரஹ்மான் என்ற ஒரு முஸ்லீம் ஹிந்தி நடிகர். ஷோப்னா சம்ரத் என்னும் மிக அழகான மராத்தி நடிகை சீதையாக நடித்திருந்தார்.(இப்போது அவரது பெண்கள் பேத்திகள் எல்லாம் ஹிந்தி சினிமாவின் நக்ஷத்திர நடிகைகள்) பாட்டுக்களும் மிக இனிமையாக இருந்தன. ஒரு பாட்டுத் தான் இப்போதும் என் நினைவில் இருக்கிறது. “வீணா, மதுர் மதுர் குச் போல்”. அது தமிழில்’ “வீணா மதுர மதுர நயம் போல்” என்று பாடப்பட்டது என்று நினைவு. ஆனால் அது தமிழ் சினிமாவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

உடையாளூரிலிருந்து கும்பகோணத்துக்குப் படிக்கச் சென்ற இரண்டு வருடங்களில் என் முன் விரிந்த இந்த பரபரப்பு நிறைந்த, ஒரு புதிய உலகம், அப்போது எனக்கு மிக இயல்பாக வாழ்ந்த ஆனால் அவ்வப்போது சுவாரஸ்யம் தரும் உலகமாகத் தான் இருந்தது. இந்த நினைவுகளைப் படிக்கிறவர்களுக்கு நான் பள்ளிக்கூடம் செல்வதையும் படிப்பதையும் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்ததாகத் தான் தோன்றும். அதுவும் உண்மையல்ல. வெளி உலகத்தில் இவ்வளவெல்லாம் நடக்கும் போது புஸ்தகத்திலேயே ஆழ்ந்திருப்பது, கிராமத்திலிருந்து ஒரு சிறு நகரத்திற்கு வந்த ஒரு பதினாலு வயது பையனுக்கு எப்படி சாத்தியம்? வெளி உலகம் தான் மிகுந்த சுவாரஸ்யம் கொண்டதாக இருந்தது.

(தொடரும்)

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்