நினைத்தேன். சொல்கிறேன். இந்தியும். நந்திகளும்.

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

PS நரேந்திரன்


தமிழ்நாட்டு முதல் மந்திரியிடமிருந்தது எப்போதாவது அபூர்வமாக ஒரு நல்ல செய்தி வரும். கீழ்கண்ட செய்தியும் அவ்வகையான ஒன்று,

‘இந்தியை விருப்பப் பாடமாக பள்ளிகளில் அனுமதிக்க பரிசீலனை செய்யப்படும் ‘ என்பதுதான் அது.

இதைக் கேட்டவுடன் நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

‘ஆஹா…நல்ல காலம் பிறந்து விட்டது தமிழ்நாட்டிற்கு!!! தமிழர்கள் பிழைத்துக் கொள்வார்கள் இனி!!! ‘ என்று ஆனந்தக் கூத்தாடினேன். அந்த சந்தோஷம் நாற்பத்தெட்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை. நமது தமிழக அரசியல்வாதிகள், அவர்களின் ‘டிரேட் ‘ மார்க்கான ‘கும்மாங் குத்து ‘ குத்தி என் சந்தோஷத்தை படுக்கப் போட்டு விட்டார்கள்.

‘இந்தியை எதிர்த்து இறுதிவரை போராடுவோம்! ‘ எதிர்க் கட்சித் தலைவர் கருணைத் தம்பிரான் அறைகூவல்.

‘இந்தியை நுழைய விட மாட்டோம்! ‘ சாதித் தலைவர் ‘சல்லிக் காசு ‘ சங்கநாதம்.

மேற்படி செய்திகளைப் படித்தவுடன், உங்களுக்கு எப்படி இருந்திருக்குமோ தெரியாது. என்னைப் பொறுத்தவரை மிகவும் வருத்தமாக, வேதனையாக இருந்தது. தமிழர்களை முன்னேற விடுவதில்லை என்று கங்கணமல்லவா கட்டிக் கொண்டு திரிகிறார்கள் தமிழக அரசியல்வாதிகள்!.

இனி, நமது ‘வெண்ணை வெட்டிச் சிப்பாய்கள் ‘ இத்தனை நாள் சுருட்டி வைத்திருந்த, ‘இந்தி எதிர்ப்பு ‘ என்னும் நமத்துப் போன அட்டைக் கத்திகளை வெளியெடுத்துச் சுழற்ற ஆரம்பித்து விடுவார்கள். இந்த விவகாரத்தில் தமிழ் நாட்டு முதல் மந்திரியின் அசைவிற்கேற்ப, நாளொரு போராட்டமும் பொழுதொரு கைதுகளும் அரங்கேறும். இதனால் யாருக்கும் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. தமிழ்மக்கள் வேடிக்கை பார்க்க இலவசமாக, இன்னொரு ‘நாடகம் ‘ அரங்கேறும். அவ்வளவே.

சாதித் தலைவர் ‘சல்லிக் காசு ‘ பற்றிக் கவலை இல்லை. ‘வெள்ளிக் காசு ‘ கிடைக்குமென்றால் வேகமாக அணி மாறி, ‘பிளேட்டை ‘ திருப்பி போட்டு விடுவார். ஆனால், இவ்வளவு பழுத்த அனுபவமும், முதிர்ந்த வயதும், நல்லது கெட்டது நாலும் தெரிந்த, எல்லாம் தெரிந்த ‘ஏகாம்பரமாக ‘ தன்னைக் காட்டிக் கொள்ளும் தமிழ்நாட்டின் பெரிய எதிர்க் கட்சித்தலைவரும் ஏன் இவ்வாறு பேசுகிறார் என்றுதான் எனக்குப் புரியவில்லை.

தான் சொல்வது தவறு என்பது அவர் மனசாட்சிக்கே தெரியும்.

என்ன செய்வது ? ‘கொள்கை ‘தானே பெரியது அவருக்கு. தமிழர்கள் எப்படிப் போனால் அவருக்கென்ன ?

நல்லது. தமிழ்நாட்டில் ‘இந்தி எதிர்ப்பு ‘ என்பது மிகப் பெரிய இயக்கமாக, திராவிடத்தின் (மழுங்கிப்போன) போர்வாளாக இருந்தது. இருக்கிறது. எத்தனையோ தமிழ்நாட்டு மாணவர்கள் ‘இந்தித் திணிப்பை ‘ எதிர்த்து மரணமடைந்து இருக்கிறார்கள். தமிழக திராவிடக் கட்சிகள் ஆட்சி பீடம் ஏறியதுதும், இந்தி எதிர்ப்பு என்ற அலையால்தான். இவையெல்லாம் எனக்குத் தெரியும். அதை நான் மறுக்கவில்லை.

இந்தி மட்டுமல்ல, வேறு எந்த மொழியை நம் மீது திணித்தாலும் அதை முழு மூச்சாக எதிர்க்க வேண்டும். போராட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. திணிக்கப் படுபவற்றை எதிர்த்துப் போராடுதல் மனித இயல்பு. இந்தி திணிப்பு என்பதும் அதற்கு விலக்கல்ல.

‘இந்தி ‘ ஏதோ தேவலோகத்திலிருந்து குதித்து வந்த மொழி. அதைப் படித்தால் எல்லோருக்கும் ‘சொர்க்க லோக ‘ப் பதவி கிட்டும். இந்தி பேசினாலேயே வாயிலிருந்து ‘முத்து ‘க்கள் கொட்டும் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. அது என் வேலையும் இல்லை. நான் சொல்ல வருவதும் அதுவல்ல.

இந்தி படிப்பதை, தெரிந்து கொள்ளுதலை, நாம் ஏன் ஒரு ‘உபரி அறிவாக ‘ (extra qualification) வைத்துக் கொள்ளக் கூடாது ? அதுதான் நான் சொல்ல வருவது.

கணிப்பொறி இயக்கக் கற்றுக் கொள்வதும், டைப்ரைட்டிங் பழகுவதும், ஷார்ட்ஹேண்ட் தெரிந்து கொள்வதும், போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், நமது வேலை வாய்ப்பை அதிகரிக்கக் கூடிய உபரி அறிவுகள். அதனால்தான் அவற்றை மிக ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறோம். இல்லையா ?

அதுபோல, இந்தி படிப்பதால், தெரிந்து கொள்வதால் நமது வேலை வாய்ப்பு பெருகுமென்றால் அதை படிப்பதில் என்ன தவறு ?

தமிழ்நாடு ஒரு பின் தங்கிய மாநிலம். தொழில் வளம் மிகக் குறைவு. தமிழ்நாட்டில், இன்றைய தேதியில், படித்துப் பட்டம் பெற்ற பல இலட்சக் கணக்கான இளைஞர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேர்களூக்கும் அரசாங்க வேலை கிடைப்பது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். மற்ற சில இந்திய மாநிலங்களைப் பார்க்கையில், தனியார் துறை முதலீடுகளும் தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த முப்பது ஆண்டுகளில் மிகவும் குறைவானதே.

இத்தனை இளம் வயதினர் வேலையின்றி இருப்பது சட்டம், ஒழுங்கை பாதிக்கும். தீவிரவாதச் சிந்தனைகளை உருவாக்கும் என்பது விஷயமறிந்தோருக்குத் தெரியும். வட மாநிலமான பஞ்சாபில் தீவிரவாதம் வளர்ந்தது இங்ஙனம் படித்து, வேலை வெட்டியின்றி இருந்த இளைஞர்களால்தான் என்பது வரலாறு கூறும் உண்மை.

இந்தி தெரிந்து வைத்திருந்தால், தமிழக இளைஞர்கள் வெளிமாநில வேலைகளைப் பெறுவது எளிதாக இருந்திருக்கும். அந்தச் சாளரம் அவர்களுக்கு அடைத்து வைக்கப் பட்டிருக்கிறது. கண்மூடித்தனமான ‘இந்தி எதிர்ப்பு ‘ என்கின்ற மாய வலையால். இந்த விஷயத்தில், கேரளத்து மக்களிடமிருந்து, இளைஞர்களிடமிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது.

எங்கே இந்தி எதிர்ப்பைக் கைவிட்டால், தமிழக மக்கள் ‘தேசிய நீரோட்டத்தில் ‘ கலந்து தங்களுக்கு ‘டாட்டா ‘ காட்டி விட்டுப் போய்விடுவார்களோ ? என்று தமிழக அரசியல்வாதிகள் அஞ்சுகிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழக மக்களை ஒரு குறுகிய வட்டத்தில் அடைத்து, அவர்களின் அறியாமையால் பயன் பெறுபவர்களல்லவா நமது அரசியல் தலைவர்கள் ?

தமிழ் மக்கள் இதையெல்லாம் எப்போது உணருவார்கள் ? தெளிவடைவார்கள் ? என எண்ணும் போது, உண்மையில் மிக depressingஆக இருக்கிறது. தெளிவதற்கு முன் காலம் கடந்து விடுமோ என்ற அச்சமும் கூடவே வருவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

இந்தி படித்தால் வேலை கிடைத்து விடுமா ? என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான்.

இந்த கட்டுரையைப் படிக்கும் உங்களில் பலர் என்னைப் போல கணிப் பொறி வல்லுனர்களாக இருக்கக் கூடும். உங்கள் பாணியிலேயே உங்களுக்கு பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.

ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னால், COBOL மிகவும் பிரபலமாக இருந்தது. உங்களுக்கு COBOL தெரிந்திருந்தால் உடனடியாக வேலை கிடைக்கும். வெளிநாட்டில் கூட. எனவே எல்லோரும் விழுந்து, விழுந்து COBOL படித்தார்கள்.

எனக்கு COBOL மட்டுமே பிடிக்கும். வேறு கணிப்பொறி மொழி எதுவும் கற்றுக் கொள்ள மாட்டேன் என்று நீங்கள் இருந்தால் என்னவாகும் ? தலையில் முக்காடு போட்டுக் கொண்டு போக வேண்டியதுதான். Java, C++, Oracle, Linux, SAP என்று புதிது புதிதாக நீங்கள் கற்றுக் கொள்ளும் போது உங்களின் எல்லை விரிவடைகிறது. வேலை வாய்ப்புகளும் பெருகுகிறது. சரிதானே ?

அதே ‘தியரி ‘ இந்தி படிப்பதற்கும் பொருந்தும்.

இந்தி மட்டுமில்லை. French படித்தால் வேலை கிடைக்கும் என்றால் French படியுங்கள். Japanese படித்தால் வேலை கிடைக்கும் என்றால் Japanese படியுங்கள்.

இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. எதையும் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதை விட்டு விடுங்கள். மொழி என்பது மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு வைத்துக் கொள்வதற்காக மனிதர்களால் கண்டு பிடிக்கப் பட்ட ஒன்று. அதில் எந்த விஷேஷமும் இல்லை. நம்மை விட அதிக மக்கள் பேசும் மொழியைக் கற்றுக் கொண்டு பேசுவதால், நம் மொழி அழிந்து விடாது. அது வீண் கற்பனை.

இந்தியால், தமிழ் அழியும் என்பதெல்லாம் ‘சும்மாப் பேச்சு ‘. திராவிடக் கட்சிகள், தமிழ்நாட்டை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டு வருகின்றன. தலைநகரான சென்னையில் ஜனங்கள் இன்னும் ‘ரோட்டோரத்துல குந்திகினு, நாஷ்தா துன்னுகினு ‘தான் இருக்கிறார்கள். சென்னைவாசிகள் பேசும் தமிழையே திருத்த முடியவில்லை இத்தனை காலம் ஆண்ட இவர்களால்! வெட்கமில்லாமல், வாய் கிழிய பேசுகிறார்கள்.

தமிழை அழிக்க இந்திதான் வரவேண்டும் என்பதில்லை. இவர்களை இன்னும் கொஞ்சகாலம் ஆள விட்டால் அதுவே தானாக அழிந்து போகும்.

முக்கிய எதிர்கட்சித் தலைவருக்கு சொந்தமான தொலைக் காட்சி நிறுவனத்தில், நிகழ்ச்சித் தொகுப்பாளினிகள் பேசும் ‘கொஞ்சும் டமில் ‘ இருகிறதே, அது இன்னும் வேடிக்கை. அதைக் கேட்கும்போதே காதில் ‘இன்ப ஈயம் ‘ (பழுக்கக் காய்ச்சிய) வந்து பாய்கிறது. அதை திருத்தலாமே அவர் ? செய்ய மாட்டார். அதே நேரத்தில் அவர் பேசும் மேடைத் தமிழ் இருக்கிறதே…அடா…அடா…தருமி கெட்டார் போங்கள்.

நான் வேலை வெட்டியில்லாமல் இருந்து அழிந்து போனாலும் போவேனே ஒழிய, இந்தி படிக்க மாட்டேன் என்று சொல்வது, நினைப்பது பைத்தியக்காரத்தனம் என்பது என் கருத்து. ‘பழம் பெருச்சாளிகளின் ‘ வீணான வார்த்தை ஜாலங்களைக் கேட்டு நம்மை நாமே ஏன் அழித்துக் கொள்ள வேண்டும் ?

நமது பெற்றோர்கள் இந்தியை எதிர்ப்பதை முக்கியமாகக் கருதினார்கள். அதை எதிர்த்து பெரும் போராட்டங்களில் எல்லாம் இறங்கினார்கள். அன்றைய சூழலில் அவர்களுக்கு அது முக்கியமாகப் பட்டது. இந்தி படித்தால் கேடு வரும் என்று அவர்கள் நம்ப வைக்கப் பட்டார்கள். அதை நாம் அப்படியே தொடரவேண்டும் என்பது கட்டாயமில்லை. மாறும் காலங்களுக்கு, மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும். இல்லாவிட்டால் சரித்திரம் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்.

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் சொன்னது போல், ‘எங்கப்பன் வெட்டிய கிணறு ‘ என்பதற்காக, ‘உப்புத் தண்ணீரை ‘ நாம் குடிக்க வேண்டியதில்லை. கூடவே, ‘தேங்கிய குட்டை நாற்றமெடுத்து விடும் ‘ என்று அடிக்கடி மேற்கோள் காட்டிச் சொல்வார்.

நாம் ஏன் தேங்கிய குட்டையாக இருந்து நாற்றமெடுத்துச் சாக வேண்டும் ?

சிந்தித்துப் பாருங்கள்.

***

psnarendran@hotmail.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்