நான் கேட்ட வரம்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

கோமதி நடராஜன்


————

தமிழ் அன்னை எதிரே வந்தாள்.
கண் இமைக்கும்முன்,என்
நீண்ட நாள் ஆசை ஒன்றை
வரமாகக் கேட்டேன்.
ஆ ?தருகிறேன்,ஆனால்
சில நிபந்தனைகளென்று
மெளனித்தாள்.
என் வரம் கிட்டுமென்றால்
எந்த நிபந்தனையும் எனக்குத்
துச்சமென்றேன்.
அன்னையவள் அடுக்கினாள்
நிபந்தனைகளை.
‘முறுக்கிய மீசை,
முகத்தில் முளைக்கும்
ஆட்சேபணை இல்லையே ?
இல்லையென்றேன்.
‘தும்பைப் பூ போல்
கேசம் நரைத்தால்
ஏற்றுக் கொள்வாயா ? ‘
‘ஏற்பேன் தாயே! ‘
‘இரண்டடி நீளம் தாடி
வளர்ந்தால் ? ‘
‘வளர்ந்தால் வளரட்டும் ‘
பாரதி போல்
ஒளவைக் கிழவி போல்
வான் புகழ் வள்ளுவன் போல்
நற்றமிழில் நாலு வரி எழுதி
உன் நெற்றியில் திலகமிட வேண்டும்,
என்று நான் கேட்ட வரத்தை
நீ தருவது உறுதியென்றால்
உன் நிபந்தனைகள் அனைத்தையும்
உள்ளன்போடு ஏற்றுக் கொள்கிறேன்.
என் எண்ணத்தில் ஊற்றை
உருவாக்க, வா!
என் நாவில் நடம் புரிய, வா!
என் விரலிடுக்கில் கோலாய்
அமர, வா!
வா தாயே வா!
நான் இடும் தமிழ் திலகத்தை
உன் நெற்றியில் ஏற்க ,
வா தாயே வா!
———————————————————————-
மார்பு மறைய,
கழுத்தளவு தண்இரில்
நின்று கொண்டு,சேலை கேட்டு,
கிருஷ்ணா!கிருஷ்ணா!என்று
கதறினர்
கோபியர்.
கணுக்கால் மட்டுமே
காணும் ஓடையில்
நின்று கொண்டு,
கை நிறைய சேலைகளோடு
கிருஷ்ணா!கிருஷ்ணா!என்று
தண்ணீர் கேட்டு
இன்றும் கதறுகின்றனர்
கலிகாலக் கோபியர்.
———-
சிங்காரச் சென்னை
வந்து இறங்கினேன்
மீட்டருக்கு மேலே
போட்டுக் கொடு என்றார்
ஆட்டோ ஓட்டுனர்.
மேஜைக்குக் கீழே
குனிந்து கொடு என்றார்
அலுவலகத்து அதிகாரி.
——————–
ngomathi@rediffmail.com

Series Navigation