நான் கண்ட சிஷெல்ஸ் – 7

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

வே.சபாநாயகம்


7. அத்யாவசியத் தேவைகளும் அரசும்.

சிஷெல்ஸில் மக்களின் அத்யாவசியத் தேவைகளை அரசு மிகுந்த அக்கறையுடன் பேணுகிறது. மிக அத்யாவசியத் தேவைகளான குடிநீர், மின்சாரம் போன்றவற்றிற்கு இங்கு நாம் படும் அவஸ்தைகள் நினைவுக்கு வந்தன. அங்குள்ளவர்களுக்கு நம் பிரச்சினைகள் இல்லை.

அங்கு தண்ணீருக்குப் பஞ்சமே இல்லை. மலைப் பிரதேசம் என்பதால் மலையருவி நீர் எப்போதும் குறைவின்றிக் கிடைக்கிறது. முன்பே சொன்னது போல் நீங்கள் எங்கு சென்றாலும் பக்கவாட்டில் ஒர் மலையருவி சிலுசிலுத்தபடி உடன் ஓடி வருவதைப் பார்க்கலாம். என் மகள் வீட்டின் பின்புறத்தில், மயிலாடுதுறையில் அவர்கள் வீட்டின் கொல்லைப்புறம் ஓடும் சிற்றோடை போல இங்கும் ஒரு சிறு அருவி சலசலத்தபடி ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப் பயன் படுத்தவேண்டிய அவசியமில்லாமல் அரசு குடிந்ீர் வழங்குதுறையால் இடையறாமல் அபரிமிதமாய் குழாய்மூலம் நீர் வழங்கப் படுகிறது. குடிநீருக்குத் தனியாகவும், மற்ற உபயோகங்களுக்குத் தனியாகவும் வேறு வேறு குழாய்களில் தண்ணீர் வருகிறது. குடிநீர் சுத்திகரிக்கபட்டு அனுப்பப்படுகிறது. நம்மூர் நெய்வேலி போல 24 மணி நேரமும் தண்ணீர் வருவதால் குடிநீர் லாரிக்காக சென்னைவாசிகள் போலக் கண்விழித்துக் காத்திருக்கிற அவலம் இல்லை. அருவிநீர் மிகச் சுவையானது. ‘கோவை சிறுவாணித் தண்ணீீர் போலச் சுவையாக இருக்கும். சிங்கப்பூர்போல் சாக்கடை நீரை மறுசுழற்சி செய்தளிக்கும் அவசியம் இங்கு இல்லை. சிங்கப்பூர்க்காரன் என்னதான் குபேரபுரி என்று பீற்றிக் கொண்டாலும் சாக்கடைக் கழிவுநீரைத்தானே குடிக்கிறான் ? அந்த அவலம் எங்களுக்கு இல்லை ‘ என்றார் டாக்டர் ஜவஹர்.

மின்சாரத்துறையும் இங்கே சிறப்பாகச் செயல்படுகிறது. இங்கு மின்தடை ஒரு நாளும் இல்லை என்று என் மாப்பிள்ளை சொன்னார். அது உண்மை என்பதை அனுபவத்தில் பார்த்தேன். அங்கிருந்த 70 நாட்களில் ஒரு நாள் கூட மின்சாரம் நிற்காதது எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் ஒரு நாள் இரவு நான் அங்கு ஒரு இலக்கியக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது சுவாரஸ்யமான கட்டத்தில் திடாரென்று மின்சாரம் நின்று, பேச்சு தடைப் பட்டது. என்னைவிட அங்கு கூடி இருந்தவர்கள் மிகவும் பதற்றமடைந்தார்கள். அங்கும் இங்கும் ஓடி ஏதோ செய்தார்கள். 10 நிமிஷம் கூட இல்லை- மின்சாரம் திரும்ப வந்துவிட்டது. நான்

தொடர்ந்து பேசும்போது குறிப்பிட்டேன். ‘நான் வந்தபோது என் மாப்பிள்ளை சொன்னார்கள் ‘இங்கு நம் ஊர் போல இல்லை. தண்ணீர் போல 24 மணி நேரமும் மின்சாரமும் தடைப்படாது கிடைக்கிறது ‘ என்று. நான் அதை என் குறிப்பேட்டில் எங்கள் ஊரில் போய்ச் சொல்லக் குறித்துக் கொண்டேன். இப்போது அதை மாற்றி எழுத வேண்டும் ‘. இதைக்கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். என் மாப்பிள்ளை எழுந்து, ‘மன்னிக்கவேண்டும். மின்சாரம் போனது இந்தக் கட்டடத்தில் மட்டும்தான். வெளியே போகவில்லை. புதிதாக இன்று இந்த அறையில் அமைக்கப் பட்டுள்ள ஏ.சி எந்திரத்தில்

ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாய் இங்கு மட்டும் ப்யூஸ் போயிருக்கிறது. மற்றபடி நாட்டில் எப்போதும் மின்சாரம் தடைப்பட்டதில்லை ‘ என்று விளக்கம் சொன்னார். நம்மூரில் மின்சாரம் எப்போது போகும் எப்போது திரும்ப வரும் என்று நிச்சயமற்று நாம் அவஸ்தைப்படுகிற நிலையில் இது அதிசயமாக இருந்தது. அதற்குக் காரணம் இங்கு மின்சாரம் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர் மின்நிலையமோ, அனல் மின்நிலையமோ இங்கு இல்லை. மொத்த நாட்டுக்கும், தலைநகர் விக்டோரியாவில் அமைந்துள்ள சக்திவாய்ந்த ஜெனரேட்டர்கள் மூலமே மின்சாரம் பெறப்பட்டு வினியோகிக்கப் படுகிறது. மிக விழிப்புடன் மின்தடை ஏற்படாதபடி பராமரிக்கிறார்கள்.

அது மட்டுமல்ல. நான் நடைப் பயிற்சிக்கு வெளியே செல்லும் போதெல்லாம் நம்மூரைவிட இங்கே என்ன வித்யாசமாய் இருக்கிறது என்று கவனிப்பேன். அப்படி, சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பங்களைப் பார்த்தேன். மேலே செல்லும் மின் கம்பிகள் முழுதும் நெடுக்க உறையிடப்பட்டதாய் (insulated) இருந்தன. நகரத்தின் பல இடங்களுக்கும் சென்றபோது எங்கும் அவ்வாறே மின்கம்பிகள் உறையிடப்பெற்றே இருந்ததைப் பார்த்தேன். நம்மூரில் உறையிடப்படாத மின் கம்பிகளில் சாலையை ஒட்டியுள்ள மரங்கள் உரசியும், தாழ்வாக உள்ள மின்கம்பிகளில் உயரமாய் கரும்பு ஏற்றிவரும் லாரி, டிராக்டர்கள் இடித்து விபத்து நேர்வதும் நினைவுக்கு வந்தது. இதை நம் நாட்டிலும் அமுல் படுத்தினால் நிறைய விபத்துக்களைத் தடுக்க முடியுமே என்று எண்ணினேன்.

அடுத்து பாராட்டவேண்டியது போக்குவரத்து ஏற்பாடு. இங்கு தனியார் பேருந்து

சேவை செய்ய முடியாது. அரசு போக்குவரத்துத் துறை நடத்தும் SPTC என்கிற Sechelles Public Transport Corporation பேருந்துகள் நிறைய நாடு முழுதும் ஓடுகின்றன. அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. 10 நிமிஷத்துக்கு ஒரு பேருந்து, தொடராக வந்து கொண்டிருக்கிறது. எல்லாப் பேருந்துகளும் குளிர்சாதனம் பொருத்தப் பட்டவை.

சிங்கப்பூரைப்போலவே கண்டக்டர் என்று தனியாக யாரும் இல்லை. ஓட்டுனர்தான் பயணச்சீட்டையும் வழங்குகிறார். பேருந்து, நிறுத்தத்தில் நின்றதும் முன் பக்கத்துக் கதவு தானாகவே திறக்கிறது. பேருந்து நிறுத்தங்கள் பேருந்தின் படிக்குச் சமமாய் இருப்பதால் பயணிகள் நம்மூர்போல மலையேறுவதுபோலச் சிரமப்படவோ, இறங்கும்போது உயரத்தி லிருந்து குதிக்கவோ தேவை இல்லை. முதியவர்கள் சிரமமின்றி ஏறவோ இறங்கவோ எளிதாக இருக்கிறது. பயணிகள் ஏறியதும் கட்டணத்தை ஓட்டுனரிடம் தருகிறார்கள். எங்கு செல்லவும் ஒரே கட்டணம்தான். மூன்று ரூபாய்தான். கட்டணம் தெரிந்திருப்பதால் சரியான சில்லறையே தருகிறார்கள். ஓட்டுனர் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் முன்னே உள்ள ஒரு பொத்தானை அழுத்துகிறார். பயணச்சீட்டு வெளியே வருகிறது. பயணிகள் எடுத்துக் கொள்கிறார்கள். எல்லோரும் ஏறியதும் கதவு தானாகவே மூடிக் கொள்கிறது. ஒலிப்பானின் ஓலத்தை எங்குமே – குண்டூசி வளைவுகளிலும் கூடக் கேட்க முடிவதில்லை. NO HORN அறிவிப்பை எங்குமே காண முடியவில்லை. அங்கு நான் பார்த்த பேருந்துகள் எல்லாமே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டனவாக இருந்தன. அவற்றின் பின்புறம், TATA, ASOK LEYLEND சின்னங்கள் தென்பட்டன.

டாக்சிகள் நிறைய உள்ளன. ஏனெனில் சாலைகளிலிருந்து உள்ளே இருக்கும் பகுதிகளில் உள்ளவர்கள் சொந்தக் கார் இருந்தால்தான் அங்கிருந்து வெளியே செல்ல முடியும். அதனால் கால் டாக்ச்ிகளை செல்பேசியில் அழைக்கிறார்கள். அடுத்த சில நிமிஷங்களில் டாக்ஸி வந்து விடுகிறது. இங்கு எங்குமே ஆட்டோக்கள் இல்லை. சைக்கிள்கூட அரிதாக ஒன்றிரண்டுதான் தென்படுகிறது. மாட்டு வண்டிகளைப் பார்க்கவே முடியாது. சில தீவுகளில் ஒற்றை எருது பூட்டிய சிறு பார வண்டிகள், சுமை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப் படுகின்றன. எல்லோருமே அனேகமாய் கார் வைத்திருக்கிறார்கள். கார் இல்லாவிட்டால் காலை ஏழுமணிக்குக் கிளம்பி அலுவகத்துக்குச் செல்ல முடியாது. மாலை ஆறரை மணியுடன் பேருந்து ஓட்டம் நின்று விடும். அலுவலகங்கள் 4 மணிக்கே முடிந்தாலும் கடைக்கோ, கோயிலுக்கோ, களியாட்டங்களுக்கோ சென்று இரவு திரும்ப, சொந்தக் கார் இருந்தால்தான் முடியும். கார் இல்லாதவர்கள் சாலையில் செல்லும் திறந்த மினி லாரிகளைக் கைகாட்டி ஏறிக் கொள்கிறார்கள். தனியார் கார்களிலும் இடமிருந்தால் யார் என்று பாராமல் முகம் சுளிக்காமல் ஏற்றிச் செல்கிறார்கள். ஸ்கூட்டர்கள் கூட ஒன்றிரண்டையே அரிதாகப் பார்த்தேன்.

50 ஆண்டுகளுக்கு முன் விமானப் போக்குவரத்து இல்லை. கப்பல்தான். இந்தியா

விலிருந்து இங்கு வர ஆறு மாதங்கள் பிடிக்கும். இப்போது விமானப் பயணம் 8 மணி நேரந்தான். தினமும் துபாய்க்கு விமானங்கள் பறக்கின்றன. சிங்கப்பூருக்கு செவ்வாய் தோறும் வாரம் ஒருமுறைதான் விமான சேவை. அங்கிருந்து வியாழக்கிழமையன்று விமானம் வருகிறது. அதனால் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பூர் சென்று ஒரே நாளில் தங்களது வர்த்தகங்கைளை முடித்துக் கொண்டு வியாழன் திரும்பி விடுகிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் செளகர்யமாக இருக்கிறது.

– தொடரும்.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்