நான் கடவுள் – உலகப் பார்வையில்

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

கே ராமப்ரசாத்



நல்ல படம் , கெட்ட படம் என்ற விமர்சனங்களுக்கு மீறிய புதிய விமர்சனமாக ஆபத்தான படம் என்ற ஒரு விமர்சனத்தைப் படித்தபோது, இந்தப் படத்தைப் பார்க்க விரும்பினேன்.பார்த்த பின்புதான் இந்தப் படத்தை உள்வாங்கிக் கொள்வது, சராசரி தமிழ் சினிமா பார்த்துப் பழகினவர்களுக்குச் சிரமமான ஒன்று என புரிந்தது. இந்த படம் ஏற்படுத்தும் அதிர்ச்சி அலைகள் அழகானவை.

ஒருவரின் மரணத்திற்கு இறுதிமரியாதை செய்யப் போகும்போது சீனர்கள் வெள்ளையுடை அணிவர். அமெரிக்கர்கள் கறுப்பு உடை.
இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் கைக்கடிகாரம் “ஓடுகிறது” என்பார்கள், ஸ்பானிஷில் “நடக்கிறது” என்பர், அதுவே ஜெர்மனியில்,
“இயங்குகிறது” என்பார்கள்.
மின் விளக்குகளை ஆஸ்திரேலியாவில் ஆன் செய்வதற்கு சுவிட்சைக் “கீழே” தள்ளுவார்கள், வட அமெரிக்காவில் “மேலே” தள்ளுவார்கள்.
ஆஸ்திரேலிய, இங்கிலாந்து மற்றும் ஜப்பானிய வாகனங்கள் அந்த ஊர்களில் சாலைகளில் “இடப்புறம்” ஓடும்போது, அமெரிக்காவில் “வலப்புறம்” ஓடும்.
அமெரிக்காவில் மக்கள் உலவும் பொது இடங்களில் முத்தம் கொடுக்க அனுமதி உண்டு. சீனாவில் அப்படி கிடையாது.
அந்த வகையில் நீரோட்டத்தின் போக்கில் மிதந்து போகும் மரத்தண்டு நீருக்கு வெளியே அதிகம் தெரியாது. அதனைத் தவறாகப்
புரிந்துகொள்ளவும் வாய்ப்பு அதிகம்.அது போல,முரண்பாடுகள் பற்றிய விதி, மாறுதலுக்கான அடைப்படை ஆகிய இரண்டும் இப்படத்தின்
அடிநாதமாக விளங்குகிறது. எதிர்மறைகளின் ஒற்றுமையும், போராட்டமும் எவ்வாறு செயல்படுகின்றன ? எதிர்மறைகளின் ஒற்றுமையில் – இரண்டும் வெவ்வேறாயினும் ஒன்றின் பாதிப்பு மற்றொன்றின் மீது செல்கிறது.ஆதரவற்றவர்கள், விளிம்பு நிலை மனிதர்கள் இவர்களைப் பற்றி பேசுபவர்கள் “பொது” வைப் புறக்கணிக்காமல் எப்படிப் பேச முடியும் என்று இப்படம் சொல்லித் தருகிறது.

சமூக இருப்பு சமூக உணர்வைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில் தத்துவ போராட்டமாக நான் கடவுள், கடவுளையும் அதன் தத்துவத்தையும் முன் வைத்து விவாதிக்கின்றது.இப்படத்தின் தத்துவ அடையாளமாக “அக நிலைக் கருத்து முதல்வாதம்” பேசப்படுகிறது. ஆனால், படம் நெடுக “புறநிலைக் கருத்து முதல்வாதம்” விரிவாக பேசப்படுகிறது. இதனைத் “தனிமனித மன உணர்வு, சமுதாய மன உணர்வு” என்ற இரு தளங்களில் காண முடியும்.

உத்தரபிரதேசத்தில் காட்டில் மரம் வெட்டச் சென்ற தம்பதியர், தன் குழந்தையை ஒரு மரத்தினடியில் விட்டுவிட்டு, தம் வேலைக்குச் சென்றனர். அங்கு வந்த ஒரு கரடிக் கூட்டம் அக்குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டது.பல ஆண்டுகளுக்குப் பின் அக்க்குழந்தை மீட்கப்பட்டது. அது மனித இயல்புகளை இழந்து கரடி போலவே நடந்து கொண்டது. இந்த உதாரணச் சம்பவம் சுட்டிக் காட்டுவது என்ன ? மனிதனுடைய பிரதிபலிப்பு முதலில் புலனுணர்வு, மொழி வடிவம், சிந்தனை, கருத்து, அனுமானம் இறுதியாக தீர்ப்பு என உயர்வடிவங்களை எட்டும் என்பதாகும். குழந்தை ஒன்றும் அறியாத நிலையில் இருந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டு வளர்ந்த ஒரு முழு மனிதனாக மாறுவதை “சமூகமயமாதல்” எனலாம். இந்த வகையில் தனி மனிதர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்க குடும்பம், நண்பர்கள், பள்ளி, அரசு மற்றும் மதம் போன்ற செயலிகள் மிக முக்கியமானவை. மதக் கோட்பாடுகளையும், மதப் பணிகளையும் குழந்தையிலிருந்து உள்வாங்கிய “அகோரி” யை அந்த வகையில் இப்படம் அறிமுகப்படுத்தும்போது நாம் அந்தத் “தனி நபரை” புரிந்து கொள்ள முடியும்.

இயற்கை விதிகளை யார் அனுசரிக்கிறார்களோ அவர்கள் நீடித்திருக்கிறார்கள். அனுசரிக்கத் தவறியவர்கள் கொல்லப்படுகின்றார்கள். இந்த நியதியை சர்வைவல் ஆப் தெ பிட்டஸ்ட்(Survival of the fittest) என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். லாயட் மூர்கான் என்ற அறிஞர்,
“நாகரீகம் வளர வளர மனிதனின் இயற்கையை கட்டுப்படுத்துகின்ற விதம் அதிகரிக்கும்.” என்று சொல்கிறார்.

இந்த நியதியின்படி சமூகத்தில் பலம் நிறைந்த சிறந்த மனிதர்கள் நிறைந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் குறைபாடுள்ள மனிதர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இதனால் சமூகம் எல்லா நிலைகளிலும் முன்னேற்றம் அடைகிறது. இந்த இயற்கையான விதியை ஒருவன் கையிலெடுக்கும்போது என்னாகும் ? என்ற கேள்விக்கான விடையை இப்படம் தருகிறது.

வானில் ஒரு குறிப்பிட்ட நட்கத்திரத்தைக் காண்பதற்கு படிப்படியான வழியைக் கையாள்கிறோம். முதலில் ஒரு மரம், மரத்தின் கிளை, கிளை வழியே தெரிகின்ற பிரகாசமான நட்சத்திரம் என்று படிப்படியாகக் காணும்போது விரைவில் அந்தக் குறிப்பிட்ட நட்சத்திரத்தைக் காண முடிகிறது. அதுபோலவே எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைச் சட்டென்று அகத்தில் காண வேண்டும் என்றால் அது அவ்வளவு சுலபம் அல்ல. ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீனுடைய “என்னுடைய பார்வையில் உலகம் (The World I See it)” என்ற புத்தகத்தில் சொன்ன ஒரு விளக்கம் எனக்கு இப்படம் பார்த்தபோது நினைவுக்கு வந்தது. அந்த விளக்கம் உயிரினங்களை ஆதரிப்பதும், தண்டிப்பதும் நாம் புரிந்துணரும் ஓர் இச்சா சக்தியுடன் கூடியதுமான ஒரு தெய்வத்தை உருவகப்படுத்த என்னால் முடியாது என்று இருக்கும். இந்தப் படத்தைப் பார்த்தால் அவருக்கு ஒரு தெய்வத்தை உருவகப்படுத்த முடிந்திருக்கும்.

உபநிடதங்களிலும், மகாபாரதத்திலும், குறிப்பாக கீதையிலும், வேதங்களிலும், புராணங்களிலும் பிரதானமாகக் காணப்படும் ஒரு பாவனை தான் சரீர ரதத்தில் பயணம் செய்யும் ஆன்மாவின் ஓவியம். இந்த ஓவியத்தைக் கண்டவர்களுக்கு “நான் கடவுள்” என்பது ஆன்மீக அருள் பொங்கும் சாகசக் கதை அது என்பது புரியும்.மகாபாரதம், தர்மம் மற்றும் அதர்மத்தை விளக்கும் ஒரு பழங்கதை. இன்றைய காலத்தில் தர்மம் மற்றும் அதர்மத்தை மீண்டும் பேசி,மறுபரிசீலனை செய்ய ஒரு புதிய கதையாக நான் கடவுள் ஒரு விவாத மேடையை அமைத்துக் கொடுத்துள்ளது.

நான் கடவுள் என்று சொற்களால் கூறுவது பிரயோகிக்கத் தக்கதாக இல்லாததாயிருக்கும் இடங்கள் இப்படத்தில் அநேகம். “அச்சமின்மையே
பிரம்மம்” என்ற மஹாவாக்யத்திற்கு இணையான வசனமாக “நான் கடவுள்” இருக்கிறது. அஹம் ப்ரஹ்மாஸ்மி என்பது யாரும் யாரிடமும்
பிரகடனப்படுத்துவதல்ல. அது ஒரு சுயப் பிரகாசம்.அது மிகவும் செறிவான ஒரு மெளனம். அதிக உயர்வான ஒரு வசனம் அது.

தாண்டவன் அண்டு கோ (?!) நிறுவனத்தின் முதலாளி, அவரின் மேனேஜர் முருகன், முருகனின் உதவியாளர் (திருநங்கை)மற்றும் முருகனின் குழு அங்கத்தினர்களான பணியாளர்கள் (ஆதரவற்ற ஊனமுற்றோர்கள்) என்று ஒரு நிர்வாக அமைப்பு இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஒரு எம்பியே
(MBA) பட்டபடிப்பு படித்தவர்களால் கையாளப்படும் நிர்வாகவியல் நுணுக்கங்கள் இவர்கள் அனைவரும் வந்து போகும் காட்சிகளில் நிறைந்துள்ளன.

Characteristics of Leadership எனப்படும் தலைமைப் பண்புக்கான இயல்புகள் மற்றும் தேவைகள் காட்சியமைப்பில் அழகாக வெளிவந்துள்ளது.

1.Co-existence with fellowship
தலைமைப் பண்பு என்பது முடிசூட்டுவதால் வருவதல்ல. கேட்டும் கொடுப்பதல்ல. காட்டுக்கு ராஜாவானாலும் சிங்கத்தின் வாயில் இரை வந்து விழாது. அதே போல தலைமைப் பண்பு மிக்கவராக ஒருவர் இருந்தாலும், அவரது கீழ் உள்ள அங்கத்தினர்களிடமிருந்து மதிப்பு, மரியாதை, விசுவாசம் என்பது அதிகாரத்தின் மூலமே வரவழைத்துக் கொள்ள முடியும்.(தாண்டவன் சம்பந்தப்பட்ட காட்சிகள்)

2.Responsibility
மொத்த குழு நடவடிக்கைக்கும் தலைவரே பொறுப்பு.
(முருகன் சம்பந்தப்பட்ட காட்சிகள்)

3.Understanding Nature
மொத்த குழு அங்கத்தினர்களின் மனநிலையையும், தேவையையும், பிரச்சினைகளையும் முக்கியமாக உணர்வுகளையும் தலைவர்
புரிந்துவைத்திருக்க வேண்டும்.(முருகன் சம்பந்தப்பட்ட காட்சிகள்)

4.Precedence
தலைவர் தன் குழு அங்கத்தினர்களை தனது நடவடிக்கைகள் மூலம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ கவர வேண்டும்.
( ஒரு ஊனமுற்ற சிறுவன் தானும் முதலாளியாக வேண்டும் என்று பேசும் நையாண்டிக் காட்சி)

5.Situation
சூழ்நிலைக்குத் தக்கவாறு தன் செயல்முறைகளை மாற்றிக் கொள்வது (கேரள வியாபாரி வரும் காட்சிகள்)

அடுத்ததாக, Functions of Leadership எனப்படும் தலைமைப் பண்புக்கான பகுதிகள் தாண்டவன், முருகனிடம் துல்லியமாக இருப்பது அழகாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

1.Motivate and Guide
முருகன் குடித்துவிட்டு வந்து புலம்பும் காட்சியும் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாடல் காட்சியும்

2.Assists social system
அதிகமான பிச்சைக்காசு கலெக்ஷன் குறைந்த எண்ணிக்கையில் ஆதரவற்ற ஊனமுற்றோர்கள் வைத்து என வரும் விவாதக் காட்சி

3.Enlists co-operation
அம்சவல்லியை முருகனும், திருநங்கையும் காப்பாற்ற முனையும் காட்சி

4.Performance
கடவுள் வேஷமிட்டு வரும் ஆதரவற்ற ஊனமுற்றோர்கள் காட்சிகள்

முக்கியமாக, REDDINS THREE DIAMENSIONAL MODEL OF LEDERSHIP இப்படத்தில் முழுமையாகக் கையாளப்பட்டுள்ளது எனக்கு வியப்பு. Ineffective styles, Basic Styles and Effective styles என மூன்று வடிவங்களும் இப்படத்தில் உண்டு.

சொல் மெளனத்தை நோக்கித் திரும்பாத போது கானத்தை நோக்கித் திரும்புகிறது. பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் பாடல் அந்த ரகம்.

“வரலாற்றில் தனி நபர் வகிக்கும் பங்கு” என்ற நூலில், ரஷ்ய மார்க்ஸீய அறிஞர் பிளக்கனோவ், ” உயரிய மனிதன் தொடங்கி வைப்பவனாகவே விளங்குகிறான். ஏனெனில், அவன் மற்றவர்களை விட அதிக தொலைநோக்கு உள்ளவாரக இருக்கிறான். மற்றவர்களை விட அதிக தீவிரமாக விழைந்து செயல்படுகிறான். சமூக அறிவு வளர்ச்சி முன்பே ஒரு கட்டத்தை எட்டியுள்ளபோது, அதன் தொடர்ச்சியாகப் பல விஞ்ஞானரீதியான கேள்விகளும், பிரச்சனைகளும் பதில் இல்லாமல் போகும். அந்த வகையில் அதுபோன்ற தொடர்ச்சிகளுக்கு அவன் தீர்வு சொல்கிறான். சமுதாய உறவுகள் வளர்ச்சி பெற்றுள்ள காரணத்தால் ஏற்படும் புதிய தேவைகளை அவன் சுட்டிக் காட்டுகிறான். அத் தேவைகளை நிறைவேற்றும் முன் முயற்சிகளை அவனே மேற்கொள்கிறான்” என்று விளக்குகிறார். இந்த விளக்கம் இயக்குனர் பாலா மற்றும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குப் பொறுந்தும்.

Series Navigation